October 24, 2009

இமயம் சரிந்தது

இமயம் சரிந்தது இந்த வரியை குறைந்த பட்சம் ஒரு வாரத்தில் ஒரு தடவையாவது எங்கள் ஊரில் பார்க்கலாம். அதாவது சுவரொட்டியில்! அவ்வளவாக பாபுலர் ஆகாத மனிதரின் இறப்பு என்றால் அல்லது கொஞ்சம் அடக்கி வாசிக்கிற பேர்வழிகள் என்றால் வெறும் 'கண்ணீர் அஞ்சலி' தான் சுவரொட்டியில் தலைப்பு.

மற்றபடி சகட்டு மேனிக்கு வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் இமயம் சரியும்! மாசத்தில் 15 தடவை இமயம் சரிந்தால் அதன் கதிதான் என்ன என்கிற பயம் வரும்.

பலான ஆளின் பாட்டி போனபோது 'இமயம் சரிந்தது'. இன்னொருத்தர் அப்பா காலமானதும் அதே இமயம் மறுபடி சரிந்தது. சொல்லப் போனால் நேரு, காந்தி போனால் 'இமயம் சரியலாம்'. இப்படி யார் போனாலும் அதே பாணியில் போஸ்டரா?

இன்னொரு சந்தேகமும். இது எங்கள் பகுதியில் மட்டும்தானா.. அல்லது தமிழகம் முழுவதும் இதே போஸ்டர் கலாச்சாரம்தானா?

அன்னாரின் ஏதோ ஒரு பழைய புகைப்படம் போட்டு செத்தவரின் பெயரை விட இருப்பவரின் பெயரை பெரிதாகப் போட்டு (அவரைக் காக்கா பிடிக்கும் உத்தேசத்துடன்) பஸ்ஸில் போகும்போது அவசரமாய்ப் படித்ததில் யார் செத்தது என்று பெயர்க் குழப்பத்துடன் மீண்டும் மாலை ஊர் திரும்பியதும் போஸ்டரைப் பார்த்து தெளிவு பெறும்வரை டென்ஷன் தான்.

இம்மாதிரி சுவரொட்டிகள் இப்போது அதிகமாகிப் போனதில் சுவரில் இட நெருக்கடி வேறு வந்து விட்டது. நேற்று ஒட்டியதைக் கிழித்துவிட்டு அடுத்த இமயத்தை ஒட்டும்போது முன்னாள் நபரின் உறவுகள் பார்த்து சண்டை வந்து விடக் கூடாதே என்கிற அச்சம் வருகிறது.

காலமானவர் பற்றிய இழப்பு..கவலை இதெல்லாம் விட எவ்வளவு தினுசாய் போஸ்டர் ஒட்டலாம் என்கிற போட்டா போட்டி..

தெருவெல்லாம் இறைந்து கிடக்கிற பூக்கள் கூட மரண வாசனையுடன்!

என் பள்ளி ஆசிரியர் காலமானபோது சுவரொட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். அவருக்கு ஒட்டியது பழைய மாணாக்கர்கள் மற்றும் சக ஆசிரியர்கள். எளிமையாய் மரணம் பற்றிய தகவல் மட்டுமாய் அந்த சுவரொட்டி.

இதைப் போல ஓரிரண்டு விதிவிலக்கானவை தவிர பெரும்பாலான போஸ்டர்கள் பயமுறுத்துகின்றன.

'இருந்தப்ப ஒரு வா(ய்) சோறு போடல.. வக்கத்த பய.. எப்படி காசக் கரியாக்குறான் பாரு' என்று பூம்பல்லக்கில் ஆயிரம் வாலா வெடி வெடித்து போஸ்டர் ஒட்டி பூ இறைத்துக் கொண்டு போனபோது பின்னால் சைக்கிள் தள்ளிக் கொண்டு போனவர் சொன்னது காதில் விழுந்தது.

மரணங்கள் அர்த்தமுள்ளவை. செத்துப் போனவர்களை விட பிணத்தின் பின்னால் போகிறவர்களுக்கும் வேடிக்கை பார்க்கிறவர்களுக்கும் அது சொல்லாமல் சொல்கிற சங்கதிகள் அநேகம்.

மரணம் தொடர்புடைய வேறொரு சம்பவம்..

இறப்பில் செய்யப்படுகிற செலவினங்கள் குறித்து கவலை தெரிவித்து பேசும்போது நண்பர் சொன்னது.. அவர் கேள்விப்பட்ட நிகழ்வு..

இறுதிச் சடங்கை வைதீக முறைப்படி செய்து வைக்க வைத்த டிமாண்ட் கட்டுப்படி ஆகாமல் 'போங்கப்பா..' என்று உதறி விட்டு உறவு பிளஸ் நட்பை வைத்து பிணத்தைத் தூக்கச் சொன்னாராம் வாரிசு.

'கோவிந்தா.. கோவிந்தா' என்று சுடுகாடு போகிறவரை நெருப்புச் சட்டி எடுத்துக் கொண்டு உரக்கக் கத்திக் கொண்டு போனாராம். வச்சுக் கொளுத்திவிட்டு திரும்பியவரிடம் 'என்னப்பா இப்படி பண்ணிட்டே' என்றதற்கு 'செத்தவருக்கு எதுவும் தெரியப் போவதில்லே.. எனக்கும் எதுவும் தெரியாது.. இப்ப என் மனசு பூர்வமா தெரிஞ்ச மந்திரத்தை சொல்லிட்டேன்.. போதாதா?' என்றாராம்.

முன்பு படித்த ஒரு சிறுகதை இன்னமும் பசுமையாய் நினைவில்.. அந்தச் சிறுவனுக்கு தேர்வு.. நன்றாகப் படித்து முன்னுக்கு வருவான் என்று ஆசைப்பட்ட அம்மா காலமாகிவிட்டாள். மாமா சொல்கிறார்.. 'போடா.. போய் பரிட்சை எழுதிட்டு வா.. அப்புறம் கொண்டு போவலாம்' அவனும் போய் தேர்வு எழுதிவிட்டு வருகிறான்..அதுவரை உறவுக்காரர்கள் காத்திருக்கிறார்கள். பிராக்டிகலாய் தீர்வு! அம்மா நிச்சயம் வாழ்த்தியிருப்பாள்.

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கத் தவறியவர்களால் போஸ்டரை கனப்படுத்தி விட முடியாது. ஆனாலும் நமக்கு எதற்கும் எல்லாவற்றிலும் விளம்பரம் தேவைப்படுகிறது. செத்துப் போகும்போதும்கூட!

வாழ்க சுவரொட்டி கலாச்சாரம்.

6 comments:

Rekha raghavan said...

//செத்தவரின் பெயரை விட இருப்பவரின் பெயரை பெரிதாகப் போட்டு (அவரைக் காக்கா பிடிக்கும் உத்தேசத்துடன்) பஸ்ஸில் போகும்போது அவசரமாய்ப் படித்ததில் யார் செத்தது என்று பெயர்க் குழப்பத்துடன் மீண்டும் மாலை ஊர் திரும்பியதும் போஸ்டரைப் பார்த்து தெளிவு பெறும்வரை டென்ஷன்//

பதிவை படித்துவிட்டு குலுங்கி குலுங்கி சிரித்ததில் என் வயிறே சரிந்தது.

ரேகா ராகவன்.

கே. பி. ஜனா... said...

உங்கள் 'இமயம் சரிந்தது' படித்துவிட்டு நான் சிரித்ததில் 'வீடு குலுங்கியது!' --கே.பி.ஜனா

R. Jagannathan said...

I too enjoyed the same passage quoted by Mr. Kalyan. I want to share an actual incident that happenned when I was in the Annamalai University. During our final exam a friend lost his father and rushed home. He returned the next morning to write the exam and the saddest thing was that he found his mother too had expired when he reached home. His close relative advised him to finish the course rather than waste an year. He did come out creditably and joined merchant navy. Remarkable composure. - Jagannathan

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
This comment has been removed by the author.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

யாராவது இறந்தால், இமயம் சரிந்தது
தான்! எப்போதுமே நம் மண் மீது
நமக்குப் பிடிப்பு கிடையாது...வடக்கு
வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று
புலம்பினால் மட்டும் போதுமா?.. நம்ம மண்ணின் மீது பாசம் வேணும் ஸார்..நம் மண்ணின் மைந்தர்கள் யாராவது 'மௌத்' தானால் பொதிகை சரிந்தது என்று யாரவது போஸ்டரில் போடுகிறோமா?
இல்லையே ...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இமயம் சரிந்தது மட்டுமல்ல இதயம் வெடித்தது என்றும் விளம்பரம் பார்த்துள்ளேன். தங்கள் பதிவு மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும்
உள்ளது. பாராட்டுக்கள்.

//செத்தவரின் பெயரை விட இருப்பவரின் பெயரை பெரிதாகப் போட்டு(அவரைக் காக்கா பிடிக்கும் உத்தேசத்துடன்)//

செத்தவரை எப்படி காக்கா பிடிக்க முடியும். ஒரே சிரிப்பு தான்.