October 31, 2012

நீங்களும் நானும்

கை குலுக்கிக் கொள்ளலாம்..

இருக்கை பற்றிய அவஸ்தை இல்லை..

கிடைத்த இடம் போதும்

தரையோ..  ஒரு திண்ணையோ..

எடுத்தவுடன் பேசவேண்டும் என்கிற

கட்டாயம் இல்லை.

நீங்கள் என்னையோ.. நான் உங்களையோ

பார்க்க வேண்டிய அவசியம் இல்லை முதலில்..

சுற்றுப் புறம் வேடிக்கை பார்க்கலாம்.

குருவி,, காக்கா.. தெருவில் நடப்பவர்..

குழந்தை தூக்கிப் போகும் பெண்மணி..

பழ வியாபாரி..  சைக்கிள் பழகும் சிறுமி..

எவரானாலும் எதுவானாலும் ரசிப்போம்..

அப்புறம் நாம் நிதானமாய் பேச ஆரம்பிக்கலாம்..

பிடித்ததைத்தான் பேச வேண்டும் என்றில்லை..

நம் நட்பில் .. எவ்வித நிர்ப்பந்தங்களுமற்ற

கை குலுக்கல்கள் தினமும் இருக்கட்டும்..

கை குலுக்கல் என்றால் மனதின் இழைதல்..

முரண்பாடற்று..

நாளை இன்னொரு இடம்.. இன்னொரு கவனிப்பு..

வாழ்க்கையை அதன் போக்கில் 

ரசிப்பதை..

யார் தடுத்தார்கள் இப்போது ?



October 20, 2012

தூய அன்பிற்கு சமர்ப்பணம்

மனவிகாரங் களைந்துயர் நிலையடைய
மதிவிதியாவுமே தன் வசமாக
தினமொரு கணமும் தூய நற்பொழுதாய்
திருவருள் குருவருள் இணைந்து பெறவே
மீனெனக் கண்கள் சுன்று வலை வீச
மீளா என் மனம் நன்னிலை அடைய
தானென வந்து தரணியில் இன்று
துணையாய் நின்ற தூய நற்கொடியே

பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்
பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்
வீசும் கதிர்களில் பெருந்தீயாகும்
விந்தையில் மனமே ஞானமயமாகும்
கூசும் உணர்வுகள் விலகிப் போகும்
கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்
பேசுமென் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடிதானே

October 15, 2012

மழை








வருமென்றுதான் நினைத்தேன்..

வானம் இருட்டிக் காட்டியது..

இடி மின்னலும் கூட பதில் சொன்னது..

தொலை பேசி அழைப்புகளில் சொன்னார்கள்..

வானிலை அறிக்கையுங்கூட..

மண்வாசனை என்னைத் தொட்டுப் போனது.

தன்னிச்சையாய் உடம்பு சிலிர்த்து அடங்கியது..

உபரியாய் ஒரு முறை பவர் கட் ஆனது.

மொட்டைமாடியில் நின்று

எத்தனை நேரம் காத்திருந்தும்..

வரவேயில்லை..

என்னை நனைக்குமென எதிர்பார்த்த

அந்த மழை !





October 06, 2012

வாழ்வெனும் அற்புதம்



படுத்தால் தூக்கம் வருகிறது.. அடுத்த நிமிடமே.

பகலில் வருகிற கோப தாபங்கள் கூட மறந்து நன்றி சொல்லி தூங்கிப் போகிற  மனதைக்  கொடுத்த இறைவனுக்கு அவன் கொடுத்த மனதாலேயே நன்றியும்.

இன்னமும் கடக்க வேண்டிய தூரம் பாக்கி நிற்கிறது..

துணைக்கு எங்கெங்கோ இருக்கிற நட்பின் வாழ்த்துகளும்..

வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது.. அதன் போக்கில்.