
நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
December 29, 2010
ஒத்திகை

December 27, 2010
தேவதைகள்

அத்தை பையன், அவன் மனைவி, குழந்தை என்று வீட்டில் ஜேஜே ..
நான் கஷ்டப் பட்டு எழுதி .. (படிக்கிறவர்களும் கஷ்டப்பட்டு ) அச்சில் வந்த கதைக்கு புத்தகம் தபாலில் வரும். இவன் அலட்டிக் கொள்ளாமல் வாசகர் கடிதம், ஆசிரியருக்குக் கேள்வி எழுதி வாரா வாரம் காம்ப்ளிமென்டரி காப்பி வாங்கி விடுவான்.
'கதைக்கு வரைந்த ஓவியம் சூப்பர் '
'எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மேட்டர் கிடைச்சிதோ '
கேள்வியில் 'நீங்க ரசிச்ச புத்தகம்.. ' 'உங்க மனசு கஷ்டப்பட்டது எப்போது' ரகத்தில்.
சொல்லி வைத்த மாதிரி பத்து விமர்சனம், பத்து கேள்விகளை மாற்றி மாற்றி கார்டில் எழுதி வந்த பிரதியை ஜம்பமாய் காட்டிக் கொண்டு போகும் போது திரும்பி வந்த கதையை நான் மறைக்க படாத பாடு படுவேன்.
இதையெல்லாம் பேசி சிரித்தோம். அதே தெருவில் குடியிருந்த ஒரு அழகான பெண்ணும் அவள் தம்பி பற்றியும் பேச்சு திசை மாறியது.
'அவளை கவர் பண்ண அவன் தம்பிக்கு பேட்டிங் சான்ஸ் கொடுப்போம். அவுட் ஆனாக் கூட இல்லைன்னு சொல்லிருவேன். எதிர் வீட்டு கண்ணாடியை அவன் உடைச்சப்ப நாங்க காசு கொடுத்து மாத்தினோம். ரன் எடுக்க நடந்து போவான் .. எதுவுமே சொல்ல மாட்டோம்..'
'அவ வீட்டுக்கு பிரசாதம் கொடுக்க போனேன்.. கொஞ்சம் பந்தாவா இருக்கட்டும் .. வேட்டி கட்டிக்கிட்டு போனா அவ கூலா யாரோ மாமா வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு போயிட்டா' - இது என் பங்கிற்கு நான் சொன்னது.
சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதி விட்டார். எழுதாத நிறைய கதைகள் இன்னமும் இருக்கு.
கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் ஜாலி.. கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம் என்று
சித்திரை வீதிகளில் தடம் பதித்த சம்பவங்களில் ஒரு மீள் பயணம் செய்யும் போது இந்த நாளின் அழுத்தம் எல்லாம் மறந்து என்னமாய் ஒரு உல்லாசம்.
December 20, 2010
உரிய நேரம் - ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

எதற்கும் உரிய நேரம் வர வேண்டும் என்பார்கள். கவிதைத் தொகுப்பிற்கும் அதே விதி நேர்ந்திருக்கிறது.
'சௌரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான் ' என்று திரு. வ. நாராயண நம்பி , தமிழ் துறை , பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி எழுதியது போல அவரின் கவிதைகள் பல எளிமையாய் இருந்தாலும் முன்னுரையில் படைப்பாளியே 'சில இடங்களில் நான் அதை மீறியிருக்கிறேன் ' என்று சுட்டி இருக்கிறார் .
தீபம், கணையாழி , அமுதசுரபி , யுகமாயினி , திண்ணை. காம் , ராகம், அரும்பு , இன்று , கவிதை உறவு , நற்றிணை , வெளிச்சம், மும்பை தூரிகை - பிரசுரம்
கண்ட பெருமைக்கு உரியவர்.
86 கவிதைகள் அடங்கிய 'உரிய நேரம் ' தொகுப்பில் இருந்து..
தாய்மை என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை இதோ..
கொட்டும் மழையில்
கோழியின் வயிறே கூரையாக
சிறகுகள் சுவர்களாக
நனையாத அந்த அந்தச் சிறு இடத்தில்
தெரிந்தன ஐந்தாறு ஜோடி
சிறிய ஈர்க்குச்சி கால்கள்!
(தீபம்)
ஆளில்லாக் கிரகம் ஒன்றைக்
கொக்கி போட்டு
நிலாவில் தொங்க விட்டு
நாம் ஊஞ்சல் ஆடிப் பார்த்தால் என்ன? என்று "என்னவள்" கவிதையை முடிக்கும்போது அவர் கவிதை விண்ணை முட்டுகிறது.
தீயே கேள் கவிதையில் சொல்கிறார்.
'ஏழை, குழந்தைகள் வயிற்றில்
பசியாகும்போது
சாந்தம் கொள்.
நியாய வான்கள்
நெஞ்சில் நிலை கொள்' எனும்போது 'ஆம்' என்றே தலை அசைக்கத் தோன்றுகிறது.
'ஒரே நேரத்தில்
தன் ஆயிரமாயிரம் கரங்களால்
தாவரக் குழந்தைகளுக்கு
அமுதூட்டுகிறாள்
மேகத்தாய்' என்று மழை குறித்த அவர் பார்வை வித்தியாசமாய் பதிவாகிறது.
அழகியல் அவர் பார்வையில் 'ஓரவஞ்சனை'யாய்..
"கண்ணாடிக் குழல்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல்
அழகான விரல்கள்"
பின் செல்லும் மனம் எனும் தலைப்பில் என்ன அழகாய் பாசத்தைப் படம் பிடித்திருக்கிறார்..
"இருபது வயதில் ஒரு நாள்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது
என் அடர்ந்த தலைமுடியை
அருகில் இருந்த என் அப்பா
கோதிப் பார்த்தபோது
புரியாத ஒன்று
இப்போது புரிகிறது..'
இவர் கவிதைகள் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறது. சிலாகித்திருக்கிறது. கோபித்திருக்கிறது. வர்ணித்து இருக்கிறது. ஒரு பார்வையாளனாய் படம் பிடித்திருக்கிறது.
கவிதை அனுபவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்களில் சிலரே வடிவ நேர்த்தியில் சிறந்திருக்கிறார்கள்.
தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் நம் அனுபவத்தையும் பிரதிபலிப்பதால் ரசனை எனும் நேர்கோட்டில் அவரைச் சந்தித்து விடுகிறோம்.
வெளியீடு. சித்திரா நிலையம், 7/40 கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை-600 016
December 16, 2010
தோழிக்கு
மன விகாரங்களைந்து உயர் நிலையடைய
மதி விதி யாவும் தன்வசமாக
தினமொரு கணமும் தூய நற்பொழுதாய்
திருவருள் குருவருள் இணைந்து பெறவே
மீனென கண்கள் சுழன்று வலை வீச
மீளா என் மனம் நன்னிலை அடைய
தானென வந்து தரணியில் இன்று
துணையாய் நின்ற தூய நற்கொடியே.
பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்
பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்
வீசும் கதிர்களில் பெருந் தீயாகும்
விந்தையில் மனமே ஞான மயமாகும்
கூசும் உணர்வுகள் விலகிப் போகும்
கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்
பேசும் என் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடி தானே .
இக்கவிதைகள் என்னை முதன் முதலில் நேசித்த என் சிநேகிதிக்கு - இராமகிருஷ்ண , சாரதா, விவேகானந்தரை எனக்கு அறிமுகம் செய்து மடத்தின் வெளியீடுகளை வாசிக்கக் கொடுத்து , தியானம் பற்றிய தெளிவை சொன்ன - பேரன்பிற்கு எழுதியவை.
வருடங்கள் பல ஒடி விட்டன. அவர் இப்போது எங்கேயோ..
ஆனால் அப்போது எழுதிய கவிதை இன்னமும் மனசுக்குள்..
வாழ்க்கை நடுவே அவ்வப்போது யாரேனும் வெளிச்சம் காட்டிப் போகிறார்கள்.
இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.
December 08, 2010
ஜ்வல்யா

ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால் என் மீது பட்டது. துணி மாற்றிய போது. என் அருகில் இருந்த அத்தனை பேரும் வாங்கிக் கொஞ்சி விட்டார்கள். என்னைத் தவிர.
எனக்கொன்றும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளக் கூடாதென்றில்லை.
முதலில் ஏதோ ஒரு வித தயக்கம். பிறகு நானே விரும்பிய போது அது என் பக்கம் திரும்பவே மறுத்தது.
'வாடா செல்லம்.'
அடுத்த நபரிடம் போனது. பூக்குவியல். அவர் கைகளில். என்ன ஒரு பிரகாசம் அவர் முகத்தில்.
"என்ன பேர் "
"ஜ்வல்யா"
"அழகான பேர் "
ஜ்வல்யா. நானும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்று புறப்பட்டபோது .. புது நபர்கள் வந்தபோது.. அதுவரை பயணித்தவர்கள் இறங்கிப் போனபோது.. ஜ்வல்யாவை விட்டுப் பிரிகிற .. சேர்கிற நபர்களின் உணர்வுகள் அப்பட்டமாய் தெரிந்தது.
"ஏதாச்சும் சாப்பிடறியா "
அவர்தான் கேட்டார். அவரிடமும் ஜ்வல்யா கொஞ்ச நேரம் இருந்தாள்.
"வேணாம் .. "
"நீ வச்சுக்கிறியா.. ஜ்வல்யாவை"
அவரையே பார்த்தேன். கண்ணில் ஜலம் தளும்பி நின்றது.
"ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. " என்றார் கிசுகிசுப்பாய்.
சட்டென்று ஜ்வல்யாவை கை நீட்டி வாங்கிக் கொண்டார் . என் மடியில் விட்டார்.
முழுமை பெறாத என் இடது கையும் சற்றே துவண்ட என் வலது கையும் அந்த நிமிடம் முழுமையாய் ஜ்வல்யாவை ஸ்பர்சித்து..
என்ன அழகான சிரிப்புடன் கால்களை உதைத்துக் கொண்டு.. பாதுகாப்பாய் அவர் பிடித்துக் கொள்ள..
என் மடி நனைந்து போனது அப்போது..
December 06, 2010
ஒரு வார்த்தை
தாண்டி இருக்கும்
உலகம் பற்றி
சின்ன வயதில்
கதைகளும் பிரமிப்பும்..
ஊர் விட்டு ஊர் வந்து
வேலை பார்க்கும் போது
மறந்து போகின்றன
சாகசங்கள்..
வார இறுதி நாட்களில்
கிடைத்த இருக்கையில்
பயணமும்
அல்லது தொங்கிக் கொண்டோ..
கதவைத் தட்டி
(அம்மாதான் வந்து கதவைத்
திறக்கணும்.. கடவுளே )
'சாப்டியா '
இந்த ஒரு வார்த்தைக்குத்தான்
நானூறு மைல் பயணம்.. !
December 01, 2010
சிநேகிதி
November 25, 2010
எனக்காக

பொருத்திப் பார்த்ததில்
ஒரு முகம் மட்டும்
எனக்கானதாய் ....
அது
இப்போதைய
என் முகமே!
ஒவ்வொருவராய்
நிராகரித்துப் போனதும்
தனித்து விடப் பட்டேன்..
என் நினைவுகளுடன்.
பாதங்களின் மீதான
கவனம்
வெடிக்கும் போதுதான்
நேர்கிறது ...
உணர்வுகளிலும் அப்படியே ..
ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது.
November 23, 2010
பின் தொடர..

November 19, 2010
ஈரம்
மனிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது.- மார்க்ஸ் அரேலியன்
"கிழம் கடைசியில் என்னதான் சொல்லிச்சி?" என்றார் தட்டிலேயே கை கழுவியபடி.
பேசாமலிருந்தேன். இவர் எதிர்பார்க்கிற பதில் என்னிடம் இல்லை.
"கிழவிக்கு என்னைத் தவிர மத்தவங்க எல்லோர் மேலயும் அன்பு பொங்கி வழியுது. கேட்காமலே பணம் தருது" என்றார் மறுபடி
மூலையில் கட்டிலில் படுத்திருந்த மாமியாரிடம் அசைவில்லை. மகன் பேசுவதைக் கவனித்துக் கொண்டு இருக்கிறாரா... அல்லது தூங்கி விட்டாரா என்று புரியவில்லை,
இப்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது.இப்போதெல்லாம் தாமதமாகத்தான் இரவில் வீடு திரும்புகிறார், ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் மூன்று மணிக்கு மேலும்!
இதர தினங்களில் இரவு ஒன்பது மணிக்குள் கடை அடைந்து விடுவார் முன்பெல்லாம். சரியாக ஒன்பது பதினைந்துக்கு வீட்டில் இருப்பார். வாசலில் மொபெட்டின் சத்தம் கேட்கும்.இப்போது சைக்கிள் தான். மொபெட்டையும் விற்றாகி விட்டது. கடையைப் பூட்டிவிட்டாலும் திரும்புவது லேட்டாகத்தான், கேட்டால், 'சரக்கு எடுக்கப் போனேன். அது... இது... என்று எதேதோ காரணங்கள்.
கடை அப்படியொன்றும் இப்போது பிரமாதமாக நடக்கவில்லை. அருகிலேயே இருபது அடியில் இன்னொரு கடை... அழகான கண்ணாடி போட்டு இருக்கிறது.
பின்னே... எந்தச் சாமானைக் கேட்டாலும் ' இல்லை' என்று பதில் வந்தால் யார்தான் விரும்புவார்கள் கடைக்கு வர?சொன்னால் இவருக்குக் கோபம் வரும்.
"என்னையே குறை சொல்லு... நான்தான் தலைதலையா அடிச்சுகிறேனே... கையிலே பணம் இல்லே... சரக்கு வாங்கிப் போடணும்னு... கிழவி வச்சுக்கிட்டே தரமாட்டேங்குது."
தராமல் இல்லை. முன்பெல்லாம் கொடுத்தவர்தான். ஆனால், பண விஷயத்தில் கிழவி கெட்டி. கேட்ட பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு, பேங்க் வட்டி கொடுக்க வேண்டும் என்று கறாராகச் சொல்லி விடும்.
இவரும் நாலைந்து முறை ஐந்து ஐந்தாகப் பணம் வாங்கிவிட்டு, இன்றுவரை வட்டியில் பாதிதான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதைத் தவிர வெளியிலும் கடன். கேட்டால் என்னென்னமோ பதில்கள்.
நல்லவேளை, குழந்தை ஒன்றோடு நின்றது. பிறந்ததும் பெண். அபிராமியை வளர்த்து ஆளாக்கினால் அதுவே பெரிய காரியம் என்று பெரூமூச்சு விடத் தோன்றும்.
படுக்கையில் முன்பு போல் படுத்ததும் தூக்கம் வருவதில்லை. இப்போது என்னென்னவோ நினைவுகள். மனசு அலை பாய்கிறது. கணவனும் முன்புபோல் இல்லை. ஆதரவான தொடுதல்களும், சீண்டல்களும் அற்று, தேவைக்கு மட்டும் வாரத்தில் ஒருநாள் இயந்திரத்தனமாய் இயக்கங்கள். மனசு ஒட்டாமல் காரியங்கள். எதிர்பார்க்கிற ஆசையும் அற்றுப்போய் எதிர்பார்க்க வைக்கிற தூண்டுதல்களும் இல்லாமல் போனது.
"தூங்கிட்டியா...?"
எப்படித் தூக்கம் வருமா...? இந்த மனிதர் ஏதோ கடை கண்ணி வைத்தும் நல்ல பிள்ளையாக இருக்கிறார் என்று தான் கட்டிக் கொடுத்தார்கள். முதலிரவன்றே நாலு பவுனில் செயினை அன்புப் பரிசு என்று போட்டவர்தாம்.
அது பழங்கதை. நான் போட்டுக் கொண்டு வந்ததும் சேர்த்து இப்போது போய் விட்டது. கேட்டால் எவர் தான் நம்புகிறார்கள்?
"உம் புருஷனுக்கு எதாச்சும் கெட்ட பழக்கமா இந்த மாதிரி செலவாகுதே...?" என்றுதான் சொல்கிறார்கள்.எனக்குத் தெரிந்து வேறு பழக்கங்கள் இல்லை. என்ன... கொஞ்சம் செலவாளி!
கையில் பணம் இருந்தால் கண் மண் தெரியாது. செலவாகிற வரை தூக்கம் வராது. அபிராமிக்கே செயின், வளையல் என்று வாங்கித் தந்து அசத்தியவர்தான். இப்போது அதுவும் இல்லை.
"அபிக்குட்டி அதுக்குள்ளாற தூங்கிருச்சா?" என்றார் மறுபடி.
"இப்ப மணி என்ன தெரியுமில்லே?"
"என்ன பொழைப்பு போ... கடையைக் கொஞ்சம் நல்லா பண்ணிறலாம்னுதான் பார்க்கிறேன், ரெண்டு மூணுபேர்கிட்டே பணத்துக்கு அலைஞ்சு பார்த்தேன். ஒண்ணும் தேறலே..."
கால்களை நன்றாக நீட்டிக் கொண்டேன். காலையிலிருந்து ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலை. இரவு படுத்தால் இடுப்பு நோகிறது.
"இந்தக் கிழவி கூட இப்படிச் சதி பண்ணுதே...!"
"அவங்களைக் குறை சொல்லாதீங்க...முன்னால கேட்டப்ப எல்லாம் கொடுத்தவங்கதானே? " என்றேன் உணரச்சியை அடக்க இயலாமல்.
"அதையே சொல்லு. இப்ப தரதுதானே?"
"என்ன... வேணும்னா கேட்கறேன். தேவை வந்திருச்சு...!"
"அப்படி என்ன தேவை? முன்னால எல்லாம் நீங்களே சமாளிச்சீங்களே...?"
"அதெல்லாம் உனக்குப் புரியாது. நானும் மனுஷந்தான்... உனக்கே தெரியும். அப்படி இப்படி போகற வழக்கம் இல்லே. எதோ... இரண்டு ஒண்ணு தப்பா முடிவு எடுத்து... பணம் நஷ்டமாயிருச்சு... சரி... இப்ப ஈடு கட்டிரலாம்னு பார்த்தா ஒத்து வர மாட்டேன்னா..."
சுருண்டு கிடக்கிற கணவன் மீது அனுதாபம் சுரந்தது. ஆனாலும், என்னால் ஏதும் செய்ய இயலாது. இனி கழற்றிக் கொடுக்க கட்டிய சேலை மட்டும்தான் மிச்சம். ஒரிஜினல் இருந்த இடங்களில் இப்போது கவரிங் மட்டுமே!
"இவகிட்டே தொங்கக் கூடாதுன்னுதான் பர்ர்க்கறேன். சனியன் பிடிச்ச விதி... வெளியே நமக்கு தோதுபட மாட்டேங்குது...!"
கிழவியின் சாதாரன இருமல்கள் இவ்வளவு பெரிய ஜுரத்திற்கு அஸ்திவாரம் என்று முதலில் புரிபுடவில்லை.சோதனையாய் கிழவியின் உயிர் பிரிகிற நேரம் இவர் வீட்டில் இல்லை.
அபிராமியைத்தான் அனுப்பினேன் கூட்டிவரச் சொல்லி.
"கொஞ்சம் பொறுத்துக்குங்க. இதோ வந்திருவாரு..." என்றேன், மாமியாரின் நெஞ்சை நீவி விட்டு.
"எனக்கு தாங்காது... போதும் போ! இனிமே இருந்து என்ன செய்யப்போறேன்? "என்றார் மூச்சுத் திணறல்களுடன்
வென்னீரை டம்பளரில் ஊற்றிக் கொடுத்தேன் மறுபடி சொன்னார். டம்ளரைக் கீழே வைத்தேன்.
"இங்கே பாரு... நீ எனக்கு ஒரு சத்தியம் செய்யணும்..."
"எ... ன்னம்மா?"
"தலையணைக்குக் கீழே ஆயிரம் ரூபா இருக்குது... புரியுதா ...? ஆயிரம்!"
தொண்டை உலர, மாமியாரையே வெறித்தேன்.
"அவன்கிட்டே காட்டிறாதே... எல்லாம் என் பேத்திக்குத்தான். புரியுதா? அப்புறமா பேங்க்ல் போட்டிரு... அவ பேர்ல. இது இருக்குதுன்னு தெரிஞ்சா இதையும் காலி பண்ணிருவான்..."
அந்த நிலைமையிலும் எனக்கு ரோஷம் வந்தது.
"அவரு ஒண்ணும் மோசமான ஆளில்லே..."
"புரியுதுடி... ஆனா... பிடிவாதக்காரன். எது நமக்கு ஒத்துவரும் , ஒத்துவராதுன்னு விவேகம் வேணும். பிசுனஸ்ல லாபநஷ்டம் வரலாம்... ஆனா... இப்படிப் பணத்தை அழிச்சுக்கிட்டே இருக்கிறது புத்திசாலித்தனமில்லை... அதனாலத்தான் கடைசியா இந்தப் பணத்தையாவது சேர்த்து வச்சிரணும்னு பார்த்தேன். போ...! இதைப் பத்திரமா வச்சிட்டு வா. அவன்கிட்ட காட்டாதே!"
உள்ளூற உறுத்தியது. கிழவியின் பேச்சில் தெரிந்த நியாயத்தையும் மீறி தாலி கட்டிய கணவனுக்குத் தெரியாமல் ஒரு காரியம் செய்வதா என்ற தடுமாற்றம்.
"எதாச்சும் அப்புறம் கேட்டா நான்தான் சத்தியம் வாங்கிட்டேன்னு சொல்லிக்க... அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்... புத்தியா நடந்துக்க... அவனை மட்டும் நம்பி புண்ணியமில்லே. நீயும் சமயத்துல உஷாரா இருந்தாதான் குடும்பம் ஓடும். போ... போ!"
கிழவி மனசு அப்படி ஒன்றும் கல் இல்லை. உள்ளூர குடும்பம் நலனுக்காக உருகுகிற ஈரம் இருந்திருக்கிறது என்று எனக்கு மட்டும் புலப்பட்டு என்ன பயன்...?
இதை மறைக்காமல் அவருக்கும் வெளிப்படுத்தினால் ஒரு வேளை அவரும் மாறுவாரோ...?
"சமயம் வரப்ப... பேசிக்க... இப்ப வேணாம்..." என்றார் என் மனசு புரிந்தவர் போல.
எழுந்து போனேன். பணத்தைப் பத்திரப்படுத்தி விட்டுத் திரும்பியபோது, வாசல் கதவு திறந்து அவரும் அபிராமியும் உள்ளே வந்தார்கள்.
கிழவியின் தலை தொங்கியிருந்தது.
(சாவி - பொன்மொழிக் கதைப் போட்டியில் பிரசுரம்)
November 17, 2010
கூடும் சில பறவைகளும்

கலைத்துப் போட்டிருந்த
கூடு பார்த்தும்
தளராமல் ,
இன்னொரு கிளையில்
கட்டத் துவங்கியது
அதற்கான கூட்டை ..
என் மனப் பறவை!
வனத்தினூடே
எவ்வித ஒலியுமற்று
நகர்ந்தன கால்கள்
சற்றே தொய்வாய்..
எங்கோ ஒரு பறவையின்
கீச்சொலிக்கு
பதில் தந்தது
இன்னொரு பறவை..
கானகம் முழுவதும்
பல பறவைகளின்
சம்பாஷணைகள்..
வாழ்வின் தூரம்
சுலபமாய்க் கடந்தன
என் கால்கள் ..
November 14, 2010
November 10, 2010
கடிதம்
பஸ்ஸை விட்டு இறங்கியதுமே மழைத் தூறல். நிமிர்ந்தால் எதிரே உச்சியில் வானவில். சில நேரங்களில் மனசுக்குள் ஒரு குதூகலம் தானாகவே வந்து விடும். இன்றைய மன நிலையும்அப்படியே.
வீட்டுக்குள் வந்தால் எனக்கு ஒரு தபால் !
எத்தனை நாளாச்சு.. கடிதம் பார்த்து. கடிதமே அதைப் பற்றிதான்.
'செல்லரிக்கும் வாழ்க்கையில் நாம் கடிதம் எழுதுதல் எனும் வாய்ப்பைப் புதைக்கத் தொடங்கியிருக்கிறோம். அது கூடாது இனி என்று இக்கடிதம்.'
ஹரணி .. அவரது முத்தான கையெழுத்தில் எழுதியது பார்த்து எனக்குள்ளும் அதே படபடப்பு. கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் கை நிறைய இன்லண்டும் கார்டும் வாங்கி வந்தேன் மீண்டும் கடிதம் எழுதுவதை ஆரம்பித்து விட வேண்டுமென்று.
கடிதங்கள் அற்ற வாழ்க்கை எத்தனை அலுப்பு.. முன்பெல்லாம் மாலை வீடு திரும்பும் போது 'தபால் இருக்கா' என்று பார்வை துழாவிய எதிர்பார்ப்பு.. இருந்தால் கிடைத்த மகிழ்ச்சி.. பதில் போடும் போது கிட்டும் ஆனந்தம்.. சில நபர்களின் கடிதங்களை எடுத்து பத்திரப் படுத்தி வைத்து மறுபடி மறுபடி படித்த உற்சாகம்..
உடனே உட்கார்ந்து அவருக்கும் பதில் எழுதி.. கூடவே இன்னொரு நண்பருக்கும் கடிதம் எழுதி.. அந்த பத்து பதினைந்து நிமிடங்கள் .. அப்படியே டைம் மெஷினில் பழைய பொற்காலத்திற்கு போன மகிழ்ச்சி ..
நன்றி ஹரணி.. மீட்டெடுத்தது கடிதங்களை மட்டுமல்ல.. நம்மையும்.
November 06, 2010
நள்ளிரவு
சூரியனைத் தேடினேன்
அது நள்ளிரவு என்று
புரியாமல்.
என் வீட்டிலும்
அக்கம் பக்கத்திலும்
அனைவருமே
ஆழ்ந்த உறக்கத்தில்.
கனவுகளற்ற தூக்கம்
இனி வராதென்று
ஓசை எழுப்பாமல்
வெளியே வந்தேன்..
கழுத்து சலங்கை மணி குலுங்க
எதிர் வீட்டு பசு
மெல்ல அசை போட்டுக்
கொண்டிருந்தது..
எங்கள் தெரு வழியே
அன்றைய இரவு
போய்க் கொண்டிருந்ததைப்
பார்த்தோம்
நானும் ,
அந்த காராம் பசுவும்!
October 31, 2010
மணமகள் அவசரத் தேவை 4
சங்கர் என் உணர்வுகளைப் படித்திருக்க வேண்டும்.
"உனக்குக் கோபம் வரும் சிவா. அது நியாயம்தான். ஒண்ணு சொல்றேன். நாம எல்லோருமே எப்பவாவது ஒரு தடவை நம்ம லைஃப்ல காதலை ஃபீல் பண்றோம். மனசளவுல காதலை ஆதரிக்கிறோம். நம்மை யாராச்சும் லவ் பண்ண மாட்டாங்களான்னு ஏங்கறோம். உன்னால இல்லேன்னு மறுக்க முடியுமா சிவா?" என்றான் சுட்டு விரலை நீட்டி.
"எப்படி முடியும்?"
"அதனால்தான் சிவா, உன் மனசுலயும் காதலுக்கு ஆதரவு இருக்கும்னு நம்பினேன். விஷயம் வெளிப்படும் போது நீ மனப்பூர்வமா இதை ஏத்துப்பேன்னு நினைச்சேன். முழுசா ஆரம்பத்துலேயே சொல்ல அவகாசமும் இல்லே. சூழ்நிலையும் ஒத்து வரலே."
தேர்ந்த இயக்குநர் போல காட்சிகளை நடத்தியவனாய்த் தெரிந்தான்.
"எனக்குக் கொஞ்சம் த்ரில். கொஞ்சம் சஸ்பென்ஸ் பிடிக்கும் சிவா. உனக்குக் காப்பி சர்ப்ரைசா அனுப்பினேனே... அடுத்த சர்ப்ரைசா இவளையும் அனுப்பினேன்" என்று சிரித்தான்.
"ஜனவாசக் காரோட எல்லோரும் போயாச்சு. நாலஞ்சு லேடீஸ்தான் என் கூட. பாத்ரூம் போறேன்னு தப்பிச்சு வந்தேன். என்னோட அதிர்ஷ்டம் யாரும் கவனிக்கலே. இவர் ஸ்டூலை வச்சிண்டு காத்திருந்தார்."
"இப்ப நினைச்சா ஜோக்கா இருக்கு சிவா. அந்த நிமிஷம் யாராவது கவனிச்சிருந்தா..."
என்னால் நம்ப முடியவில்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் இத்தனை அலட்சியமாகவா விட்டுப் போவார்கள்?
"சிவா, கணேஷ்கிட்டே பேசிட்டேன். இன்னைக்கு நைட் வேனோட இங்கே வருவான். இவளை எப்படியாவது அதுல ஏத்திவிட்டுரணும். வசந்தி... இந்தா நீ கேட்ட சுரிதார். எத்தனை நேரம் பட்டுப் புடைவையில் இருப்பே?"
பொட்டலத்தை நீட்டினான்.
"கசகசன்னு ஆயிருச்சு. குளிக்கணும். ரூம்ல வேர்த்துக் கொட்டிருச்சு" என்றாள்.
"சிவா - இவளை உன்னோட ரிலேட்டிவ்னு சொல்லிக்க முடியுமா? வசந்தி... நீ டிரஸ் சேஞ்ஜ் பண்ணிக்க. ரெட்டை ஜடையா போட்டுக்க. ஏமாத்த முடியுமான்னு பார்க்கலாம்."
"என்ன உளர்றே? அவங்க கண்ணுல இவ பட்டுட்டா.."
"யார் இருக்கா? மேக்சிமம் கிளம்பிப் போயாச்சு. வழியனுப்பிட்டுத்தான் வரேன்."
ஆச்சர்யமாய்ப் பார்த்தேன்.
"நிஜம்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு ஆனதும் கிளம்பிப் போயிட்டாங்க. அவங்க குலதெய்வம் கோவிலுக்குப் போகணுமாம். மண்டபத்துல இவ சொந்தக்காரங்க யாரும் இல்லே..."
வசந்தி சுரிதாரில், ரெட்டை ஜடையில் சற்று வித்தியாசப்பட்டுத் தெரிந்தாள். தூரப் பார்வையில் ஆறு வித்தியாசங்கள்.
"போம்மா. சிவா, நீயும் கூடப் போ. பாத்ரூம்ல விட்டுட்டு வந்திரு."
இரவு எட்டரை மணிக்கு வேன் வந்தது.
கணேஷ் முரட்டு மீசையுடன், வசந்தியின் மீது ஏகக் காதலுடன் வந்தான்.
"வசந்தி..."
"கணேஷ்..."
நானும் சங்கரனும் நாசூக்காய்ப் பார்வை விலக்கிக் கொண்டோம்.
"கிளம்பிரலாம். கணேஷ் இனிமேல் வசந்தி உங்க பொறுப்பு. உங்கப்பா.. அம்மா முழு மனசா இவளை மருமகளா ஏத்துக்கிறதா சொன்னதாலதான் இந்தத் திருட்டுத்தனத்துக்கு நான் சம்மதிச்சேன்" என்றான் சங்கரன்.
"நிச்சயமா..."
கணேஷ் சங்கரனின் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.
"இவரை மறந்துடாதீங்க"
சங்கரன் என்னைக் காட்டினான்.
"சிவா... ரொம்ப... ரொம்ப தேங்க்ஸ்!"
கணேஷுடன் வசந்தியும் சேர்ந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
கடைசி ஸ்பரிசம்.
"கிளம்புங்க."
வேனை சமீபித்தோம்.
மண்டப வாசலில் அமைத்த பந்தல் மறைக்க, எங்கள் வீட்டு வாசலில் இருட்டு கவிழ்ந்திருந்தது.
வேனுக்குள் ஏற முயன்ற போது வசந்தியை யாரோ ஓடி வந்து பிடித்துக் கொண்டார்.
"யா... யாரு?"
நாங்கள் திடுக்கிட்டு முகம் பார்த்தோம்.
"அ...ண்ணா..."
வசந்தி கூவினாள்.
"உங்க அண்ணனா?"
எங்கள் பங்கிற்கு திகைத்தோம்.
கணேஷ் தடுமாறி நின்றான்.
"என்னம்மா... என்னையும் உதறிட்டுப் போறியா?"
"அ...ண்ணா"
"கணேஷ்... இவளை நல்லா வச்சுப்பீங்கன்னு நம்பறேன். அதனாலதான் எங்க பெற்றோர் விருப்பத்தை மீறி இங்கே காத்திருந்தேன்."
நான் சங்கரனைப் பார்த்தேன்.அவன் விரும்பும் த்ரில்... சஸ்பென்ஸ்.
"நல்லா இருங்க."
இருவரின் கைகளையும் சேர்த்து வாழ்த்தினார்.சப்தமின்றி தானும் இவர்கள் காதலுக்கு வெற்றி பெற உதவியிருக்கிறார் என்பது புரிய நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.
வேன் கிளம்பிப் போனது.
(ஹப்பாடா !)
கல்கி - நாலு வாரத் தொடர்.
முதல் பகுதி இங்கே
இரண்டாம் பகுதி இங்கே
மூன்றாம் பகுதி இங்கே
மணமகள் அவசரத் தேவை 3
ஒரு விஷயம் இங்கே உங்களுக்கு நான் சொல்லியே ஆக வேண்டும்.
சில நேரங்களில் நிஜம் வினோதம்தான்.மணப் பெண்ணைக் காணோம் என்றதும் இத்தனை சுலபமாக அடுத்தவளைத் தேர்வு செய்து மணவிழா தொடர்வதும், ஓடிப் போனவளைத் தேடாமல் விடுவதும்... அதுவும் மண்டபத்துக்குப் பக்கத்திலேயே அடுத்த வீட்டில் அவள் ஒளிந்திருப்பதும் கற்பனைக்கும் எட்டாதவை.
நிகழ்ந்தது எனக்கே பற்றிக் கொண்டு வந்தது.
'யோவ், பொண்ணு இங்கேதான் இருக்கா' என்று கத்தத் தோன்றியது.
காப்பி வந்தது. டிபன் வரும் என்று உறுதி செய்து விட்டுப் போனான்.
கதவைத் தட்டினேன். கூடுதல் எச்சரிக்கையுடன் சிறிது நேரம் பொறுத்துத் திறந்தாள்.
"காப்பி..."
"கொஞ்சம் தண்ணி வேணும்."
வேடிக்கையான நிகழ்வுகள். காலி பக்கட்டும், வேறொன்றில் நீரும் தந்தேன்.
"இதுலயே கொப்பளிச்சுரு."
"ச்சே வேணாம்."
"பரவாயில்லே" என்றேன் பெருந்தன்மையாய்.
பிறகுதான் கவனித்தோம். அடுத்த அறையில் ஜலத் துவாரம் இருந்தது. அதில் இன்னொரு சங்கடமும் இருந்து ஆளில்லாத அறைக்குள் இருந்து நீர் எப்படி வெளிப்படும் என்று யாராவது ஆராய்ந்தால்...
சிக்கலான நேரங்களில் மூளை தனது குயுக்தித் திறனைக் காட்டுகிறது.
வசந்தி அறைக்குள் கொப்பளிக்க, நான் எங்கள் இரு அறை வாசல்களுக்குமாய் சேர்த்து நீரைக் கழுவி விட்ட மாதிரி வீசினேன்.
காப்பிக்கு நன்றி சொன்னாள்.
"உங்க வீட்டு காப்பிதான்" என்றேன் மறுபடி.
"ப்ச். என் தங்கை கல்யாணம். என்னால கலந்துக்க முடியலே..." என்றாள் வருத்தமாய்.
"ஒரு ஆட்சேபணையும் இல்லே. இப்பவே போகலாம்" என்றேன் என் பங்கிற்கு.
"கெட்டிமேளம் கேட்டது, மானசீகமா இங்கேர்ந்து வாழ்த்துச் சொல்லிடறேன்" என்றாள் சளைக்காமல்.
"நாளைக்கு நான் ஆபீஸ் போகணும்."
"நோ ப்ராப்ளம்."
"நீ என்ன பண்ணப் போறே?"
"இதோ... இங்கேயே... ஹாப்பியா"
"இந்த ரூம்காரர் எப்ப வேணா வரலாம்."
"உடனே உங்க ரூம் பக்கம் வந்துருவேன்."
"விளையாடாதே. எனக்கு பி.பி. ஏறிக்கிட்டே போகுது."
"இதுவரைக்கும் உதவின அதிர்ஷ்டம் வேற வழி காட்டாமலா போகும்" என்றாள் முழு நம்பிக்கையாய்.
அதே சமயம் என் அறைக் கதவு தட்டப்பட்டது.
"சிவராமன்..."
போச்சு... என்னோட ஓனர்.
வசந்தி கதவை மூடிக்கொள்ள, நான் கதவைத் திறந்தேன்.
"என்ன... ஜன்னலை எல்லாம் அடைச்சுட்டு" என்றார் திகைப்புடன்.
"கொசு ஜாஸ்தி..."
"ஓ... பக்கத்து ரூம்ல அவர் இன்னும் வரலீல்ல..."
அடுத்த வெடிகுண்டை வீசினார்.பக்கத்து ரூமா...
"இ... இல்லே."
"ஃபேனை ஆஃப் பண்ணாம போயிட்டார்னு நினைக்கிறேன். நைட் சத்தம் கேட்டுது."
"அப்படியா... இருக்காதே..."
"என் வைஃப் சொன்னா. சரி செக்கப் பண்ணிரலாம்னு வந்தேன்."
"இல்லையே. ஃபேன் ஓடற மாதிரி தெரியலியே" என்றேன் சப்தமாய்.
என்னை வினோதமாய்ப் பார்த்தார்.இருவருமாய் அடுத்த அறை வாசலுக்குப் போனோம்.
காதை கதவில் வைத்துக் கேட்டார். எனக்குள் இதயத் துடிப்பு பலத்துக் கேட்டது.
"இல்லே" என்றார் நிம்மதியாய்.
"நாதான் அப்பவே சொன்னேனே. அவர் பக்காவா எல்லாம் பண்ணிட்டுப் போவார்" என்றேன் படபடப்பு அடங்காமல்.
"இன்னிக்கு லீவா..."
"ம்..."
"சாப்பாடு எங்கே... லோக்கலா... டவுனா?"
"இங்கேயேதான்."
"இந்த கவர்ன்மெண்ட் என்ன ஆகும்னு நினைக்கிறீங்க?"
நான் என்ன ஆவேன் என்றே தெரியாத நிலை. அரசைப் பற்றி எனக்கென்ன?
"எப்படியும் சர்வைவ் பண்ணுவாங்க."
"அப்படியா சொல்றீங்க?"
இதே ரீதியில் அரைமணி அறுத்து விட்டுப் போனார்.
"என்ன ஃபேன் சத்தம் கேட்டுதா?" என்றாள் வசந்தி.
"புத்திசாலிதான். நான் கத்தினதைப் புரிஞ்சுக்கிட்டு நிறுத்திட்டியே?"
"ம்ஹீம். என்னோட மேரேஜுக்கு என் புத்திசாலித்தனம் உதவலியே. எவ்வளவோ சொல்லியும் எங்கப்பா சம்மதிக்கலே."
"உன்னோட மேரேஜ் கேன்சலாகும்னு உன் லவ்வருக்கு தெரியுமா?" என்றேன்.
"நான் எப்படியும் அவருக்குத்தான்னு தெரியும்."
"அவரும் இங்கே வந்திருக்காரா?"
வசந்தி பதில் சொல்வதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது.
மறுபடியும் வசந்தி மறைந்து கொள்ள, நான் கதவு திறக்க
இம்முறை சங்கரன்.
"சிவா. எனக்கு அர்ஜெண்டா ஒரு வேலை. வெளியே போகணும். நீ கவலைப்படாதே டிபன் வரும். சாப்பாடு வரும். எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்."
"சரி."
திரும்பியவன் நின்று என்னைப் பார்த்தான்.
"சிவா"
"என்ன சங்கர்?"
"உன் ரூம்ல வேற யார் குரலோ கேட்ட மாதிரி..."
"அ... அப்படியா. இல்லியே. நான் மட்டும்தானே இருக்கேன்."
எனக்கு வியர்த்து விட்டது.
"சரி. நான் வரேன்."
பாம்புச் செவி. அடைக்கப்பட்ட ஜன்னல் கதவு மீறி சப்தம் கேட்கிறவன்.
என் அறைக் கதவை உட்புறம் தாளிட்டதும் சத்தம் உணர்ந்து வசந்தி உடனே கதவைத் திறந்தாள்.
"ஒண்ணும் பிரச்னை இல்லியே?"
"அவனுக்கு சந்தேகம் வந்தாச்சு."
"சமாளிச்சீங்களா?"
தலையாட்டினேன்.நேற்று இருந்த படபடப்பு இன்று அவளிடம் இல்லை. சகஜமாய்ப் பேச ஆரம்பித்து விட்டாள்.
"இங்கே பார். இன்னும் டேஞ்ஜர் சிக்னல் இருக்கு. நீ கொஞ்சங்கூட பயமே இல்லாம அடிக்கடி கதவைத் திறந்து பேச ஆரம்பிக்கிறே" என்றேன் சற்று கோபமாகவே.
வசந்தி சிணுங்கினாள்.
"அங்கே தனியா இருக்க எனக்கு போரடிக்குது."
"சர்தான். எனக்கு விலங்கு மாட்ட ஆசையா?"
"சரி. இனிமேல் நீங்க கதவைத் தட்டினாத்தான் திறப்பேன். அது என்னா... வார கல்கியா?"
ஜாலி டிரிப் வந்தவள் போல வார இதழுடன் அறைக்குள் மறைந்தாள்.
டிபன், காப்பி வந்தது.பக்கத்துக் கல்யாண மண்டபம் தனக்கு நிகழ்ந்த நேற்றைய சங்கடம் மறந்து குதூகலம் அப்பிக் கொண்ட பிரமை.
இத்தனை சுலபமாகவா விட்டு விட்டார்கள்.எனக்குத்தான் தலைவெடித்து விடும் போலிருந்தது.
வாசலுக்குப் போய் நின்று சூழலை ஆராயலாம் என்றால் உள்ளே ஒளிந்து இருப்பவளை நினைத்துக் கலவரம்.
திடீரென கதவைத் திறந்து என்னைத் தேடினால்...
மதிய சாப்பாடும் வந்தது.
"வேற ஏதாவது வேணுமா?"
"இதுவே போதும். ரொம்ப தேங்க்ஸ்."
"உங்களை நன்னா கவனிச்சுக்க சொல்லிட்டுப் போனார்."
"எப்ப வருவார்?"
"வரணும். வந்திருவார்."
சங்கரன் வந்தபோது மணி ஒன்று.உடனே என்னைப் பார்க்க வரவில்லை.அவன் என்னைத் தேடி வந்தபோது மணி மூன்று.
இம்முறை ஒரு வித்தியாசம்.காம்பவுண்ட் சுவர் தடுப்பில் நின்று பேசவில்லை. என் வீட்டு வாசல் வழியே உள்ளே வந்து விட்டான்.
கதவைத் தட்டியதும் திறந்தேன்.
"சாப்பாடு எல்லாம் கிடைச்சுதா?"
"ம்."
"உள்ளே வரட்டுமா?"
"வா. வா."
நகர்ந்து வழி விட்டேன்.அறைக்குள் வந்து சுற்றிப் பார்த்தான்.என்ன தேடுகிறான்?
"புறாக்கூண்டு மாதிரி இருக்கு"
"இதுக்கே வாடகை ஐநூறு ரூபா" என்றேன்.
"அப்பவே வந்துட்டேன். நல்லா டிரெய்னிங் கொடுத்திருக்கேன். இருந்தாலும் காண்ட்ராக்ட் எடுத்தவங்கிற முறையில் சின்னத் தப்பு கூட வந்திரக் கூடாது பாரு. எல்லாம் சரியா நடக்குதான்னு விசாரிச்சுட்டு... ஒரு வாய் மோர் சாதம் சாப்பிட்டுட்டு வரேன்."
நான் இயல்பாக இல்லை என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும்.பேச்சை நிறுத்தி என்னை உற்றுப் பார்த்தான்.
"என்னவோ மாதிரி நெளியறே?" என்றான் சந்தேகமாய்.
"ஒண்ணும் இல்லியே?"
"பொய் சொல்லாதே. காலையிலேயே கவனிச்சேன். ஏதோ தப்பு பண்ண மாதிரி உன் முகம் இருக்கு."
"நான் எந்தத் தப்பும் பண்ணலே."
அந்த வினாடி அடுத்த அறைக் கதவு திறந்து வசந்தி தெரிந்தாள்.
(தொடரும்)
கல்கி - நாலு வாரத் தொடர்
மணமகள் அவசரத் தேவை - 2
ஒரு தடவை அரசுப் பேருந்தில் திருச்சி டூ சென்னை வருகையில் இட நெரிசலை முன்னிட்டு எனக்கருகே காலியான இருக்கையில் அந்தப் பெயர் தெரியாத பெண் அமர்ந்து வந்தாள்.
அன்னிய ஸ்த்ரீயுடன் விவரம் புரிந்த முதல் ஸ்பரிசம்.
காலை நகர்த்தவே இடமற்ற வசதிக்குறைவான பேருந்து விரும்பியோ, விரும்பாமலோ இடித்துக் கொண்டே தீர வேண்டும்.
கண்டக்டருக்கும் முழு ஒப்புதல் இல்லை.வேறிடம் பார்க்க முயன்றவனை அந்தப் பெண் தடுத்து விட்டது.இது போதும்! அவன் என்னைப் பொறாமையாய்ப் பார்த்து விட்டுப் போக, பயணம் முழுக்க பேசாமலேயே வந்தாள்.
நான்தான் விழுப்புரத்தில் காப்பி வேண்டுமா என்று கேட்டு, பதில் பெறாமல் இறங்கி, குடித்தேன். அழுத்தமான தலையசைப்பு. வேண்டாம் பேச்சே இல்லை. குரோம்பேட்டையில் இறங்கியவளை மறுபடி சந்திக்கிற பாக்கியமே கிட்டவில்லை.
இதைத் தவிர சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு ஸ்பரிசங்கள் என் வாழ்க்கையில் இல்லை இதுவரை, நல்லா இருக்கியாடா என்று கன்னம் வழித்த அம்பது, அறுபது வயசு உறவு மூதாட்டிகளைக் கணக்கில் எடுக்காமல் விட்டால்.
என் அறையில் அந்த கல்யாணப் பெண் மறுபடியும் என் கையைப் பற்றி கெஞ்சுதலாக அழுத்தியது. ப்ளீஸ். காட்டிக் கொடுக்காதே.
அறைக்குள் சுவரை ஒட்டி மறைந்தாற் போல அமர்ந்து கொண்டது.
வெளியே வந்தேன். சங்கரன்தான். கையில் டிபன் கேரியர்.
"என்ன ஆச்சு, லைட் எரிஞ்சுது. அப்புறம் அணைஞ்சு... ஆளையும் காணோம். ஏறிக் குதிக்கலாமான்னு பார்த்தேன் "என்றான்.
நல்லவேளை. செய்யவில்லை.
" சரி. சாப்பிடு... கேரியரை நீயே வச்சிரு. அப்புறம் வாங்கிக்கறேன். "
எடுத்துக் கொண்டேன். கனத்தது.
"நிறைய வச்சிருப்பே போல இருக்கே. "
"பரவாயில்லே. முடிஞ்சவரைக்கும் சாப்பிடு. "
உள்ளே மணமகள். என்ன செய்யப் போகிறேன்!
"சிவா, நீ எப்ப தூங்குவே."
" ஏன்... எதுக்கு கேட்கறே. "
"இங்கே கஷ்டமா இருந்தா... உன்னோட ரூமுக்குப் படுக்க வரலாமான்னுதான். "
"அ... அப்படியா"
"ஆனா உனக்குத்தான் சிரமம். தூக்கம் கெடும். பன்னண்டு மணிக்கு எழுந்துப்பேன். பரவாயில்லையா. "
எப்படி வர வேண்டாம் என்று சொல்வது. சோறு போட்ட புண்ணியவான்.
"வாயேன்."
" நெஜம்மாவா. உனக்கு கஷ்டம் இல்லியே?" என்றான். அப்பாவியாய்.
"நிச்சயமா வா. நான் முழிச்சுக்கிட்டு இருக்கேன். நாம பேசி எவ்வளவு நாளாச்சு. நாளைக்கு ஸண்டேதான். எனக்கு லீவு. "
கோர்வையாய்ப் பேசினேன். ஒரு வேளை சங்கரன் பார்வையில் பட்டிருந்தால் அல்லது எங்கள் பேச்சு கேட்டிருந்தால்... எழுந்த துளி சந்தேகமும் அற்றுப் போகட்டும்.
சங்கரன் முகத்தில் உற்சாகம் தெரிந்தது.
"நிச்சயமா வரேன். அரட்டை அடிக்கலாம். "
கேரியருடன் உள்ளே வந்து கதவை மூடி உட்புறம் தாளிட்டேன். ஜன்னல் கதவையும் மூடினேன். விளக்கைப் போட்டேன்.
இப்போதுதான் அவளை நன்றாகப் பார்க்கிறேன். மணப் பெண்ணின் அழகு அலங்காரத்தால் சிதைக்கப் படுகிறது என்பதில் முழு உடன்பாடு எனக்கு.
இவளுக்கு அதையும் மீறி ரசனை கூட்டியது. அதற்காக உலக அழகிப் பட்டம் தரவில்லை. நிச்சயம் இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கத் தூண்டுகிற அழகுதான்.
முகம் தெரியாத அவளது காதலன் மீது பொறாமை பீறிட்டது.
"சாப்பிட்டாச்சா" என்றேன்.
"இல்லே"
" உன் பேரென்ன."
" வசந்தி."
" உங்க வீட்டுச் சாப்பாடுதான் " என்றேன் அசட்டுச் சிரிப்புடன்.
கேரியரைப் பிரித்து பகிர்ந்தேன். சாப்பிட்டதும் அடுத்து என்ன செய்வது என்ற கவலை முழுமையாய்ப் பற்றிக் கொண்டது.
"பேசினதைக் கேட்டீல்ல. "
"ம்... உங்க நண்பர் இங்கே வரப்போறார்... படுக்க. "
"அவன் உன்னை இங்கே பார்த்தா...வேற வினையே வேணாம்."
" இப்ப என்ன செய்யப் போறீங்க " அலட்டிக் கொள்ளாமல்.
அடிப்பாவி. இது என் பிரச்னை மாதிரி திசை திருப்பி விட்டாயே. சட்டென்று பளிச்சிட்டது ஐடியா.
என் அறையிலிருந்து அடுத்த அறைக்குச் செல்ல இடையே ஒரு கதவு உண்டு. ஆனால் எங்கள் வீட்டு சொந்தக்காரர் அதை மூடிவிட்டு, இரு போர்ஷன்களாய்ப் பிரித்து வாடகைக்கு விட்டிருக்கிறார்.
அடுத்த அறைக்காரரோ டூர் போய் விட்டார். எங்களுக்குள் கதவைத் திறந்து வைக்க எந்த அவசியமும் நேரிடாததால் தாளிட்டே வைத்திருந்தேன்.
ஒரு வேளை அவரும் அவருடைய பக்கத்தில் பூட்டி வைத்திருந்தால்.. சிரமம்தான்.
இதயம் படபடக்க தாழ்ப்பாளைத் திறந்தேன். லேசான கிரீச்சுடன் கதவு திறந்தது.
அடுத்த அறை தெரிந்ததும் மனசாட்சி உறுத்தியது.மணப்பெண்ணை மறைத்தல்.. அடுத்தவர் அறையில் அனுமதியின்றி பிரவேசித்தல்.. இன்னும் என்னென்ன தப்புகள் பண்ணப் போகிறேனோ.
திரும்பி வசந்தியைப் பார்த்தேன். அதற்குள் அவளும் யூகித்துவிட, சிரித்துக் கொண்டிருந்தாள்.
"நல்ல ஐடியா. நான் அந்தப் பக்கம் போயிடறேன். அந்தப் பக்கம் பூட்டிக்கிறேன். சரியா."
" எனக்கு நேரம் சரியில்லை " என்றேன் பொருமலாக.
"பிளீஸ்" என்றாள் மீண்டும்.
இந்த ஒரு வார்த்தையை அடிக்கடி உபயோகித்து என்னை அசைத்து விடுகிறாள்.
"சரி. பத்திரம். சொதப்பிடாதே. திடீர்னு கதவைத் திறந்துக்கிட்டு இங்கே வராதே. அங்கே லைட்டும் போட்டுராதே. "
எத்தனை உதவிகள் செய்கிறேன் என்கிற பெருமிதம் என்னுள் பூக்கத் தொடங்கியது.
வசந்தியைப் பார்த்தேன். மனசு மாறி என்னையே தேர்ந்தெடுத்து விடுவாளோ என்ற நப்பாசையுடன்.
"குட்நைட் "என்றாள் புன்னகையுடன்.
அடுத்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.
நான் ஜன்னலைத் திறந்தேன். புழுக்கம் மறைந்து வெளிக்காற்று உள்ளே வந்தது. கதவையும் திறந்தேன்.
மண்டபத்தினுள் ஏகப்பட்ட இரைச்சல்.எப்படி இதுவரை எனக்குக் கேட்கவில்லை? என் பிரச்னையில் இருந்ததாலா.
என்ன நிகழப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், நானும் உடந்தை என்ற குறுகுறுப்பும் சேர்ந்து தாக்க இன்னது செய்வது என்று புரியாத மனநிலை.
சங்கரன் தெரிந்தான். சங்கர். காம்பவுண்டு சுவர் அருகே வந்தான். படபடப்பில் இருந்தான்.
"என்ன.. பிரச்னை " என்றேன் கூடிய வரை அப்பாவியாய்.
"பொண்ணைக் காணோமாம். "
"எ..ன்ன! "
"அவ விரும்பாத கல்யாணமாம். அதட்டி மிரட்டி அழைச்சுக்கிட்டு வந்துட்டாங்க. எப்படித் தப்பிச்சான்னு தெரியலே. ஆளைக் காணோம். இப்ப.. "
"என்ன செய்யப் போறாங்க."
" போலீசுக்குப் போன்னு ஒரு கூட்டம் விரட்டிக்கிட்டு இருக்கு."
கைவிலங்குடன் நடுத்தெருவில் என்னை இழுத்துப் போகிற பிரமையில் ஆழ்ந்தேன்.
"சனியன்.. குடும்பப் பெயரைக்கெடுக்க வந்தவளை.. உதறிட்டு வேற யோசனை பண்ணுங்கன்னு அவ அண்ணன் சொல்றான்."
" அ..ப்படியா? "
"நான் போறேன். யாரும் சாப்பிட வரமாதிரி தெரியலே. கார்த்தால டிபனுக்கு, சாப்பாட்டுக்கு காய் அரிஞ்சு வச்சாச்சு. வடைக்கு நனைச்சாச்சு. கல்யாணம் உண்டா.. இல்லியான்னு புரியலே. பணத்தை செட்டில் பண்ணுவாங்களோ.. அம்போன்னு விட்டுருவாங்களோ.."
சங்கரன் அவன் தவிப்பில் புலம்பி விட்டுப் போய் விட்டான்.
படுக்க வர மாட்டானோ.. என்று இவ்வளவு கவலையிலும் ஓர் அபத்த யோசனை.சிவராத்திரிதான்.
அறைக்குள் நுழைந்து அடுத்த அறைக் கதவைப் பார்த்தேன்.
உள்ளே எந்த சத்தமும் இல்லை. கொடுத்து வைத்தவள். நிம்மதியாய்த் தூங்குகிறாள், பிரளயத்தையே உண்டாக்கி விட்டு.
ஒரு மணிக்கு சங்கரன் கதவைத் தட்டுனான். திடுக்கிட்டு விழித்தேன்.
"யா.. யாரு."
" நான் தான் சங்கரன்."
கதவைத் திறந்தேன். "
"ஸாரிடா" என்றான்.
"ஸாரி. நானும் தூங்கிட்டேன்."
சட்டென்று புத்தி விழித்துக் கொண்டது.
"என்ன ஆச்சு. பொண்ணு கிடைச்சாச்சா. "
"அவ எங்கே போனாளோ... ஆனா பிரச்னை தீர்ந்தாச்சு. அவ தங்கை சம்மதிச்சுட்டா. அதே முகூர்த்தம். அதே மணமகன். பெண் மட்டும் வேற. என்னோட காண்டராக்டும் பிழைச்சுது "என்றான் நிம்மதி தெரிகிற குரலில்.
"என்ன இருந்தாலும் அவ பண்ணது சரியில்லே "என்றேன்.
" நமக்கென்ன அவளைப் பத்தி வா தூங்கலாம். வேலைக்கு ஓடணும் "என்றான் கொட்டாவியுடன்.
படுத்துக்கொண்டோம்.
திடுக்கிட்டு விழித்தபோது மணி ஐந்து.
வாசற்கதவு திறந்து கிடந்தது.
எனக்குள் பகீரென்றது.
(தொடரும்)
-கல்கி நாலு வாரத் தொடர்
October 29, 2010
மணமகள் அவசரத் தேவை
மேளச்சத்தம் கேட்டது. முகூர்த்த தினங்கள் ஆரம்பித்து விட்டன. ஒருவித எரிச்சலுடன் புரண்டு படுத்தேன்.
கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்து வீட்டில் குடி வந்தது தப்பு என்று மனசு முனகியது.முதல் கேசட் நாதஸ்வரம் அப்புறம் 'என்னைத் தாலாட்ட வருவாளா' என்று விடியற்காலையில் ஸ்பீக்கர் அலறும். காலையின் சொகுசுத் தூக்கம் அவுட்.
அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். என் உயரத்திற்கும் குறைவான காம்பவுண்டு சுவர். அந்தப் பக்கம் கல்யாண மண்டபம். சிரமமின்றி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.சமையலறை துல்லியமாகத் தெரியும். எல்லா வித வாசனைகளும் வீசும்.
சுவரை ஒட்டிய இறுதி மூலையில் வரிசையாய் பாத்ரூம்கள். வரிசையாய் அவஸ்தை மனிதர்கள் தெரிவார்கள். 'இந்த மாதம் இன்னும் எத்தனை முகூர்த்தங்கள்' என்று அலுப்புடன் பிரஷ்ஷைக் கையிலெடுத்த அந்த வினாடியில் என் வாழ்வையே திசை திருப்பும் சம்பவம் நிகழ்ந்தது.
காம்பவுண்டு சுவரை மீறித் தெரிந்த முகம் எனக்குப் பரிச்சயம் இல்லாதது.
"ஸார்."
முதலில் எவரையோ என்று நினைத்தவன் குரலின் அழுத்தம் ஸ்பீக்கர் இரைச்சலை மீறிக் கேட்க, திரும்பினேன்.
"இந்தாங்க காப்பி."
பில்டர் காப்பியின் மணம்.
"எனக்கா!"
"பிடிங்க ஸார். என்க்கு நிறைய வேலை இருக்கு. ஆங்... அப்புறம்... டிபன் ரெடியானதும் கொண்டு வரேன். நீங்க எட்டு மணிக்குத் தானே கிளம்பணும்?"
அடக்கடவுளே. இது என்ன புதுக் குழப்பம்.
"ஸார். நீங்க தப்பா... நான் இங்கே குடியிருக்கிறவன்"
மறுக்க முயன்றேன்.
"உங்க பேர் சிவராமகிருஷ்ணன்தானே."
"ஆமா."
"அப்ப காபியைப் பிடிங்க. டிபன் தர வரும்போது டபரா செட்டை வாங்கிக்கறேன்."
போய்விட்டான்.அதிர்ஷ்டம் காம்பவுண்டு சுவரை மீறி அடிக்கிறதா? எடுத்துக் குடிக்கலாமா? வேறு பிரச்சினைகள் வருமா?ஊசலாடும் மனதை காபி ஆசை வென்றது.
வாய் கொப்பளித்து காபி குடித்ததும் உடம்பு முழுக்க புத்துணர்ச்சி பரவியது.
இங்கே ஒரு தகவல் சொல்ல வேண்டும்.
பக்கத்துக் கல்யாண மண்டப நீளத்துக்கு நான் குடியிருக்கிற வீடும் அமைந்திருக்கிறது. மெயின் வாசலில் சொந்தக்காரர் குடியிருக்க, வீட்டின் வலது பக்க நடை பாதை வழியாய் வந்தால் எனக்கு அமைந்த வாடகை போர்ஷன்.
என்னைத் தவிர இன்னொரு நபரும் அடுத்த போர்ஷனில் குடியிருக்கிறார், பாதி நாட்கள் டூரில் இருப்பார். மீதி நாட்களில் பாதி சொந்த ஊருக்குப் போய் விடுவார். எதற்காக இந்த அறைக்கு மாசம் ஐநூறு தருகிறார் என்று எனக்கே புரியாத புதிர்.
குளித்துவிட்டு வந்தேன்.நன்றாக விடிந்து விட்டது. நாளை கல்யாணம். இன்று மாப்பிள்ளை அழைப்பு என்று பக்கத்து மண்டபம் நிகழ்ச்சி நிரல் மனத்தில் ஓடியது.
பெண் வீட்டார் வந்து விட்டார்கள். பெண்ணின் மாமாவோ... யாரோ ஒருத்தர் 'இந்தக் கல்யாணமே அவர் நடத்தி வைப்பது' என்கிற பொறுப்புணர்வுடன் அலைந்து கொண்டிருந்தார்.
மணி ஏழு எட்டு மணிக்குக் கிளம்பினால் போதும். வாசற்படியில் நின்று இவ்வளவும் அவதானித்துக் கொண்டிருந்தேன்.
விடியலில் தெரிந்த அதே முகம் மீண்டும் முகம் காட்டியது.
"காபி நன்னா இருந்துதா?"
"ம்."
டபரா செட்டை நீட்டினேன்.
"இந்தாங்கோ டிபன், இன்னொரு டோஸ் காபி கொண்டு வரேன்."
என்னால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
"ஸார். நீங்க யார்னே எனக்குத் தெரியலே. தப்பா... எனக்கு உபசாரம்... ப்ளீஸ்... வேண்டாமே. யாராவது பார்த்து...உங்க மேல... பிரச்சினை."
துண்டு துண்டாய் வார்த்தைகளை உதிர்த்தேன்.
"டிபனைப் பிடிங்கோ. இன்னும் அஞ்சே நிமிஷத்துல உங்க குழப்பம் தீரும்!" போய்விட்டார்.
இட்லி, பொங்கல், வடை, கேசரி. தனியே தம்ளரில் சட்னி, சாம்பார். இன்று என்ன ஆச்சு, என் கிரகங்களுக்கு?
டிபனைச் சாப்பிட்டு கை கழுவியபோது, காபி தம்ளர் நீண்டது. இந்தத் தடவை வேறு முகம்.
"என்னைத் தெரியறதா...சிவா."
புன்னகை மின்னிய பார்வை.
"நீ... நீங்க."
"சங்கரன்."
என்னுடைய கிளாஸ்மேட். ஸ்கூல் பைனல் வரை ஒன்றாய்ப் படித்தோம். பின்னர் நான் கல்லூரி வாசலைத் தொட்ட போது சங்கரன் 'சரஸ்வதி வந்தனம்' செய்து விட்டு படிப்பிலிருந்து விலகிக் கொண்டான்.
"நான் இப்போ கல்யாண காண்ட்ராக்ட் எடுக்கறேன்."
விசிட்டிங் கார்டை நீட்டினான் ஃபோன் நம்பருடன் விலாசம்.
என்னுடைய டிஸ்டிங்ஷன். இன்றைய ஒற்றை அறை வாசம். காமன் பாத்ரும் டாய்லட். மாதச் சம்பளத்திற்கு நாயாய் உழைத்து, பெருமூச்சு வெளிப்பட்டது.
"நேத்தே பார்த்துட்டேன். நீ இங்கே குடியிருக்கேன்னு புரிஞ்சுது. ஒரு சர்ப்ரைஸ் தரலாம்னு காத்திருந்து, மார்னிங் காபில ஆரம்பிச்சேன்" என்றான் சிரிப்புடன்.
"தேங்க்ஸ் சங்கர்."
"அதுக்குள்ளே சொல்லாதே. நைட் டின்னர். அப்புறம் நாளைக்கு எல்லாம் முடியட்டும்."
"எதுக்கு வீண் சிரமம்."
"பேசாதே. என்னோட சமையல் பிடிக்கலியா."
"சேச்சே."
"சித்ரா இப்ப எப்படி இருக்கா?"
"அவளை இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா?"
சங்கரன் வெட்கமாய்த் தலையசைத்தான்.
"ரெண்டு குழந்தைகள். இங்கே இல்லே. சிங்கப்பூர் போயிட்டா."
"நல்லா இருந்தா சரி" என்றான் முழு மனசாய்.
அவனை வினோதமாய்ப் பார்த்தேன். காதலித்தவளைக் கைப்பிடிக்க முடியாமல் போனாலும், 'எங்கிருந்தாலும் வாழ்க' மனப்பான்மை சற்று அதிசயிக்க வைத்தது.
"சாயங்காலம் எப்ப வருவே.. ஃபர்ஸ்ட் கிளாஸ் டிபன் இருக்கு."
"வேணாம் சங்கர். நான் வர எட்டு மணியாகும்."
"சரி. சாப்பாடு இங்கேதான். புரிஞ்சுதா"
தம்ளரை வாங்கிக் கொண்டு போனான்.இன்னொரு தடவை பெருமூச்சு விட்டேன்.
இரவு எட்டரை மணிக்கு வீடு திரும்பியபோது ஜானவாசக் கார் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்தது. கூட்டம் அதிகரித்திருந்தது. பட்டுப் புடைவைகள், நகைகள் என்று சூழலே ஜாஜ்வல்யமாகிக் கொண்டிருந்தது.
சங்கரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.எனக்குள் தடுமாற்றம். அவனை நம்பிச் சாப்பிடாமல் வந்து விட்டேன்.
மண்டபத்திலிருந்து சாப்பாடு அனுப்புவது என்ன இருந்தாலும் அத்தனை சுலபம் இல்லை.அரை மணி நேரம் கழிந்திருக்கும்.
கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அதுவும் அலுப்புத் தர, எழுந்து கதவை வெறுமனே மூடிவிட்டு வாசலுக்கு வந்தேன். ஜானவாச கார் இல்லை. கூட்டமும் குறைந்திருந்தது. ஏதாவது கோவிலிலிருந்து அழைப்பு இருக்கும். அங்கே போயிருப்பார்கள்.
பத்து நிமிஷம் நின்றேன். இனி காத்திருப்பது வீண். கடை வீதிக்குப் போனால் இட்லிக் கடை ஆரம்பித்திருக்கும். பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்ப எண்ணி அறைக்குத் திரும்பினேன்.
கதவைத் திறந்தால்... விளக்கு அணைந்திருந்தது. போட்டு விட்டுத்தானே போனேன்.
ஸ்விட்சைப் போட முயன்றபோது ஒரு பெண்ணின் கரம் என்னைத் தடுத்தது.இருட்டிலும் புலப்பட்ட பெண்ணின் ஸ்பரிசம்.
அலறியிருப்பேன். உள்ளுணர்வு தடுத்து விட்டது.
"யா... யாரு?"
"ப்ளீஸ். லைட்டைப் போடாதீங்க."
மண்டப வெளிச்சம் லேசாய் ஜன்னல் வழியே கசிந்தது. இதற்குள் அந்த அரையிருட்டிற்கு விழிகள் பழகி அவளைப் பார்த்தேன்.பட்டுப் புடவையில் இருந்தாள். அலங்கரிக்கப் பட்டவள்.
"நீ..."
"கல்யாணப் பெண்தான். எனக்குத்தான் நாளைக்கு மேரேஜ்."
"இங்கே... எதுக்கு?" என்றேன் புரியாமல்.
"எனக்கு இஷ்டமில்லே. எங்கப்பா அம்மா என் பேச்சைக் கேட்கலே. மிரட்டி இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க. இத்தனை நாளா... வீட்டுல அடைச்சு வச்சிருந்தாங்க,"
அடிப்பாவி. என்னை சிக்கலில் மாட்டி விடத் தீர்மானித்தாயா?
"உன்னைத் தேட மாட்டாங்களா?"
"தேடட்டும். நல்லாத் தேடட்டும்."
"நீ இங்கே இருக்குறதை..."
"நிச்சயமா. நான் இங்கே இருப்பேன்னு நினைக்க மாட்டாங்க. நீங்க மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணா."
மிக மெல்லிய குரலில்தான் பேசிக் கொண்டிருந்தாள்.அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்குள் பிரளயம் தந்தன.
"எனக்கு பயம்மா இருக்கு" என்றேன் கவலையுடன்.
"ப்ளீஸ். ஹெல்ப் பண்ணுங்க. அவங்க டென்ஷன் ஆகி... ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்துருவாங்க. ஒரு வேளை என் தங்கையைக் கூட கல்யாணம் பண்ணிக் கொடுத்துரலாம். நீங்க மட்டும் உதவினா எனக்கு நான் விருப்பப்பட்ட வாழ்க்கை கிடைக்கும். ப்ளீஸ்..."
குழந்தைத்தனமாய்ப் பேசுவது போலிருந்தது.பெண்ணைக் காணோம் என்றதும் அப்படியே விட்டு விடுவார்களா?
பக்கத்தில் தேட முயன்றால்...
என் அறையில் அவளைக் கண்டு பிடித்தால்...
போலீஸ் வரை புகார் போய் விட்டால்.
"சிவராமகிருஷ்ணா!"
அதே சமயம் குரல் வெளியிலிருந்து சத்தமாய்க் கேட்டது.
(தொடரும்)
- கல்கியில் நாலு வாரத் தொடர்.
October 22, 2010
வானம் பார்த்து..
சில தடைகள்..
உடைத்தெறிய அவ்வப்போது
சில பழக்கங்கள் ..
கைவசம் கொஞ்சம் புன்னகைகள்
ஆளற்ற தனிமையிலும்
உதட்டில்
அணிந்து கொள்ள ..
நினைத்துப் பார்க்க
நட்பு வட்டம்..
நிழலாய் கூடவே
சின்ன சின்ன கவலைகள் ..
எனக்கான பாதையில்
இடறாமல் பயணிக்கும் போது
அடி மனசில் ஒரு தவிப்பு..
'இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
எல்லோருக்கும் தா .. '
கை உயர்த்தி
விண்ணைப் பார்க்க
கீழே விழுகிறது
ஒரு நட்சத்திரம்.
October 17, 2010
நான் ஒரு மாதிரி
என்னோட ரசனைகளைச் சொன்னா எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க.
எனக்குப் பவழமல்லிப்பூ பிடிக்கும்.
லேசான தூறல்ல நடக்க பிடிக்கும்.
பிடிச்ச முகங்களோட தயக்கமில்லாம அறிமுகப்படுத்திக்கிட்டு பேசப் பிடிக்கும்.
அழகை ரசிக்கப் பிடிக்கும்.
தாவணி போட்ட பெண்கள் ரொம்பப் பிடிக்கும்.
பஸ்ஸில், டிரெயினில் தொலைதூரம் போகணும்னா பயணத்தை அலுப்பில்லாம கழிக்க என்னோட வழியே தனி. பக்கத்து ஸீட்டுகளில் ரசனையான ஒரு பெண் நபரைத் தேர்ந்தெடுத்துப் பயணம் முழுக்க மானசீகமாகப் பேசிக்கிட்டு வருவேன்.- இப்படி இன்னும் எத்தனையோ!
ஆனா, மொத்தமா பார்த்தா என்னால யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது.
பாருங்க.... அன்னிக்கு அந்த பஸ்ஸில நாகர்கோவில் போனேன்.
எனக்கு முன் ஸீட்டுல ஒரு தம்பதி, ரெண்டு குழந்தைகளோடு. பெரியவனுக்கு நாலரை வயசிருக்கும். சின்னவளுக்கு மூணு வயசிருக்கலாம். அந்தப் பெண்ணைப் பார்த்தா ரெண்டு குழந்தைகளுக்கு அம்மான்னே சொல்ல முடியாது.
புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?பஸ்ஸில் இருந்தவர்களில், இவங்கதான் முதல் மார்க் வாங்கற அளவுக்கு அழகு!
ஆனா இன்னொருத்தனோட மனைவியாச்சே... மனசாட்சி உறுத்த, கண்களை வெளியே வேடிக்கை பார்க்கவிட்டேன்.
பஸ்ஸின் எதிர்க் காற்று, வெளியே பறந்த புழுதி பொட்டல்வெளி எல்லாம் அலுப்புத் தர,... தூங்கக்கூட முயற்சித்தேன், முடியலை.
ஏதோ ஓர் இடத்துல பஸ் நின்னுச்சு."பத்து நிமிஷம் பஸ் இங்கே நிக்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்." என்ற அறிவிப்பு கேட்டுது.
நானும், முன் ஸீட் கணவனும், குழந்தைகளும் இறங்கினோம். அவள் மட்டும் ஸீட்டிலேயே இருந்தாள்.ஒரு கூல் டிரிங்கை வாங்கி ஸ்டிராவினால் உறிஞ்ச ஆரம்பித்தேன்.
மூன்று இளநீர்களுடன் வந்தான் முன் ஸீட்டுக்காரன். தனக்கு ஒன்றும், குழந்தைகளுக்கு இரண்டுமாக.
"அப்பா, அம்மாவுக்கு..."என்றது பெண்.
"உனக்குக் கொடுத்ததைக் குடி...' என்றான் கடுப்பாக.
"அம்மா பாவம்ப்பா..." என்றான் பையன்.
"ஏய், பேசாம குடிக்கறியா... இல்லே!" என்று மிரட்டினான்.
நான் யூகித்தது சரிதான். கணவன் - மனைவிக்குள் ஏதோ பிணக்கு போலிருக்கு.
மனசே இல்லாமல் இளநீரைக் குடித்துவிட்டுத் தயங்கித் தயங்கி பஸ் ஏறின குழந்தைகள் இரண்டும்... பின்னாலேயே அவனும்.
பஸ் கிளம்பும்போது நானும் தொற்றிக்கொண்டேன்.புத்துணர்ச்சியுடன் முன் ஸீட்டைக் கவனிக்க ஆரம்பிச்சேன். அரை மணி நேரம் போனது.
முதலில் பையன்தான் கவனிச்சான்.அவனைத் தொடர்ந்து அந்தப் பெண் குழந்தை.அவர்களின் கசமுசாவில் அந்தக் கணவன் திரும்பினான்.
"என்னடா...?" என்றான் பையனிடம்.
"அந்த மாமா இங்கேயே பார்த்துக்கிட்டிருக்கார்..." என்றான் கிசுகிசுப்பாக!
"உஸ்ஸ்... பேசாம இரு!"
முன் ஸீட்டுக்காரனுக்குக் குறுகுறுப்புத் தோன்றிவிட்டது.தற்செயலாகத் திரும்புவது போல் அடிக்கடி என்னைப் பார்த்தான்.ஸீட்டில் நெளிந்தான். மனைவியைத் திரும்பத் திரும்பப் பார்த்தான்.
"வந்து... அம்மாவை..." என்று ஏதோ சொல்ல நினைத்துத் தயங்கினான்.
நான் அசையாமல் அமர்ந்திருந்தேன்.கடைசியில் அவன் பொறுமையிழந்து அவளிடம் பேசியேவிட்டான்.
" நீ இந்தப் பக்கம் வாயேன்..."
"ஏங்க... இதுவே நல்லாத்தானே இருக்கு" என்றாள் ஒன்றும் புரியாமல்.
கணவன் தன்னிடம் பேசியதில் உள்ளூரக் குதூகலம் தெரிந்தது.
"வான்னா வா..."
இடம் மாறிக் கொண்டனர்.
"இதுவும் நல்லாத்தான் இருக்கு.." என்றாள் மகிழ்ச்சியாக.
"பசிக்குதா ... அடுத்த தடவை நிறுத்தும்போது ஏதாவது வாங்கிக்கிட்டு வரேன்..." என்றான் அவனாகவே.
அவன் பார்வை என்னைத் திரும்பவும் அலசியது.
எந்தவித முக மாறுதலுமின்றி அவனை உற்றுப் பார்த்தேன். பார்வையைத் திருப்பிக் கொண்டான். பயணம் முடியும் வரை குழந்தைகளுடனும் மனைவியுடனும் பேசினான்.இறங்கும்போது என்னை முறைத்தான்.
' நான் ஒரு மாதிரியாம்!'
அவன் பார்வையில் தெரிந்தது.
இப்போ சொல்லுங்க... நான் ஒரு மாதிரியா?
(ஆனந்த விகடன்)
October 11, 2010
நேசம் மறப்பதில்லை நெஞ்சம்
பூமா உபரியாய் ஒரு தடவை கணேசனை இறுக்கிக் கொண்டாள்.(ஒன்ஸ் மோர்!)
தனிக் குடித்தனம். அருமையான வீடு. சொன்ன உடன் ஏற்பாடு செய்து விட்டான். அருமைக் கணவன்.
"கீழே நம்மை மாதிரியே ஒரு ஜோடி. கூட ஒரு அம்மா... ஃ ப்ரெண்டு புடிச்சுக்க, ஃபோன் இருக்கு. ஓனர் வேற. பின்னால உதவும்..." என்றான், ஆபீஸ் கிளம்பிப் போகுமுன்.
வீட்டைப் பார்க்க வரும் போது பக்கவாட்டு வழியில், மாடிப்படி ஏறிப் போயிப் பார்த்தார்கள். இதே போர்ஷனுக்கு வீட்டுக்குள் இருந்ததும் மேலே வர படிகள் இருந்தன. இரு வழியாகவும் இறங்க வசதியாக ஒரு கதவு.
காலிங்பெல்லை அழுத்துவதா? என்று யோசிப்பதற்குள் அந்த வயதான பெண்மணி வெளியே வந்தாள்.
இருவரின் முகத்திலும் அதிர்ச்சி.
"நீ... ங்களா?"
"நீ...யா?"
மேலே என்ன பேசுவதென்று புரியவில்லை.
"எ... ன்ன வேணும்?" என்றாள் பாகீரதி.
"மாடி போர்ஷனில் குடி வந்திருக்கேன். நீங்க...?" என்றாள் பூமா.
"என் பையன் வீடுதான்."
"ஓ சித்ரா உங்க மருமகதானா? வீடு பார்க்க வந்த போது அவங்கதான் இடத்தைக் காட்டினது."
"வாடகைக்கு விடணும்தான் மேலே கட்டினது. அவ ஏற்பாடுதான். அவ ஆபீஸ்ல லோன் வாங்கி..." -இதை ஏன் இவளிடம் சொல்ல வேண்டும் என்று பாதியிலே நிறுத்தி விட்டாள்.
"வரேன்."
பூமா மேலே வந்த பிறகும் திகைப்பு அடங்கவில்லை.என்ன விசித்திரம். இந்த வீட்டுக்கா குடி வந்திருக்கிறாள்.
ஒரு வருஷம் இருக்குமா. இதே பாகீரதி தன் மகன் சுரேஷுடன் இவளைப் பெண் பார்க்க வந்ததும் , நிச்ச்யதார்த்தம் ஏற்பாடு செய்த பிறகு, காரணமே சொல்லாமல், நிராகரித்ததும்...
அப்பா ஆடிப் போய் விட்டார்.மறுநாள் காலை நிச்சயதார்த்தம். எல்லாம் தயார். உறவினர் கூட்டம் வேறு. ஃபோனில் தகவல்.
கேன்சல் பண்ணிருங்க. நாங்க வரலே.
ஏனென்று கேட்டால் பதிலே இல்லை.
அண்ணன் சற்று முன்கோபி.
'எல்லாம் ஏற்பாடு செஞ்சப்புறம் வேணாம்னா என்ன அர்த்தம்?
'இங்கே பாருங்க. நாளைக்கு நாங்க வரலேன்னு நீங்க ஃபீல் பண்ணக் கூடாது. முன்னாலேயே தகவல் சொல்லிட்டோம் விட்டுருங்க'.
நேராகப் போய்க் கேட்கலாமா என்று கூட யோசித்தார்கள். கடைசியில் அவர்களை மனதார சபித்தோடு சரி. அன்று சட்டென ஒரு வேடிக்கைப் பொருளாக்கியவர்கள் வீட்டிற்கா குடி வந்திருப்பது!
"ஏன் டல்லா இருக்கே?"
கணேசனின் கேள்விக்கு மழுப்பினாள்.
"வீடு பிடிச்சிருக்கில்லே..."
"ம்..."
"அப்பா ஞாபகமா?"
"ம்..."
"இந்த ஸண்டே போய்ப் பார்த்து விட்டு வரலாமா?".
எப்படியாவது அவள் முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு வரத் துடிப்பது புரிய, சிரித்தாள்..
"வேணாம். இப்பதானே வந்துட்டு போனாரு"...
மறுநாள் இன்னொரு அதிர்ச்சியும்- அதை அதிர்ச்சி என்பதை விட, மகிழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்
மாடி போர்ஷனுக்கே கேட்கிற அளவு இரைச்சல். சித்ராவின் குரல்தான்,
"இந்த வீட்டுல ஒண்ணு உங்கம்மா இருக்கணும்...இல்லே நான் இருக்கணும், முடிவு பண்ணுங்க..."
வேறு குரல்கள் கேட்கவில்லை.காய்கறி வண்டியைக் கூப்பிடுகிற சாக்கில் பூமா கீழே வந்தாள்.பாகீரதியின் இருண்ட, கண்ணீர் ததும்பிய முகம் பார்த்து உள் மனசு குதூகலித்தது.
"வேணும். நல்லா வேணும்!"
காய்கறி வண்டியைச சுற்றி எதிர், பக்கத்து வீட்டுப் பெண்கள்.
"புதுசா குடி வந்தீங்களா?"
பூமா தலையசைத்தாள்.வம்பு!
"இந்த வீட்டுக்கா"
"என்... போர்ஷன் நல்லாத்தானே இருக்கு."
பூமாவின் குரலில் பொய்யான ஆச்சர்யம்.
"வீட்டுக்காரிதான் ராட்சசி! மாமியாரை இவ படுத்தறதைப் பார்த்தா... ரத்தக் கண்ணீர்தான். தலைகீழ் நிலைமை இங்கே..."
"அவங்க புருஷன் எதுவும் சொல்ல மாட்டாரா"
பூமா இயல்பாய் வம்பு வளர்த்தாள்.
"அரைக் கிலோ போடுப்பா. அவன் ஏன் வாயைத் திறக்கறான்! மனைவி சொல்லே மந்திரம்"
பெண்கள் சிரித்தார்கள். பூமா படியேறிய போது பாகீரதி வாசல் வராந்தாவில் ஒடுங்கியிருந்தாள்.மறுபடியும் பூமாவிடம் இறுக்கம்"வேணும்... நல்லா வேணும்."
அதன்பின் நிறைய கூச்சல் நிறைய அழுகை. எப்படியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை.பூமா மனசு இறுக்கம் தளர ஆரம்பித்தது.
அப்பா, அம்மா வளர்ப்பு இப்படியில்லை. நேசம் மட்டுமே சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவள். சுலபமாய் மறந்து விடுகிற மனசு அப்பா, அம்மாவுக்கு.
பூமாவின் உள்ளம் இரக்கம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
"எ... ன்ன?"
சுருண்டு படுத்திருந்தவளின் கண்கள் இடுக்கியிருந்தன.
பூமாவைப் பார்த்ததும் மிரண்டு போயிருந்தாள்.
"என்ன மாமி... உடம்பு சரியில்லையா?"
பாகீரதியிடமிருந்து பதில் இல்லை. தொட்டதில் உடம்பு சுட்டது.
"டாக்டர் கிட்டே போகலியா?"
பதறிக் கேட்டதில் இன்னமும் மிரண்டாள்.
"வாங்கோ... போயிட்டு வந்திரலாம்..."
"இ...ல்லே... வே...ணாம்."
வற்புறுத்தி இழுத்துப் போனாள். ஊசி போட்டு, மருந்து வாங்கியதில் சற்று நிம்மதி வந்தது. ரிக்க்ஷாவில் வீடு திரும்பினார்கள்.
"நீங்க படுத்துக்கங்க. என்ன சமைக்கணும் சொல்லுங்க."
"நீ... எதுக்கு?"
"ஸ்ஸ். பேசாம படுங்க."
பரபரவென்று சுழன்றாள்.மிளகு ரசத்தில் சாதம் கரைத்துக் கொடுத்ததும் பாகீரதிக்கு அழுகை பீறிட்டது. தன்னிரக்க நிலை.
"வேணாம். நீங்க அலட்டிக்காதீங்க. படுங்க."
சின்னச் சின்னதாய் வெளியே தெரியாத உதவிகள். பாகீரதிக்கு உறுத்தல் குறைந்து பழக்கம் இயல்பானது.
சித்ரா எப்போது வேலைக்குப் போவாள் பூமா கீழிறங்கி வருவாள் என்று ஏங்கும் அளவு நெருக்கமானது.
பூமாவால் மனத்தோடு வைத்துக் கொள்ள முடியவில்லை. கணவனிடம் சொல்லி விட்டாள்.
"பாவமா இருக்குங்க. அப்படிப் படுத்தறா! இவ பொம்பளையான்னே சந்தேகமா இருக்கு."
"சரி. சரி. நீ எதாவது வம்புல மாட்டிக்கப் போறே."
"சேச்சே, அவ இல்லாதப்பதான் எங்க ராஜ்யம்."
"நினைச்சுகிட்டு இரு. வம்பு எந்த உருவத்துல வேணா வரும். யார் கண்டது..?இப்பவே அவளுக்குத் தெரிஞ்சிருக்குமோ... என்னவோ! காலி பண்ணச் சொல்லிடப் போறா..."
"இதுல என்னங்க தப்பு இருக்கு. எனக்கும் போரடிக்குது. சும்மாத்தானே இருக்கேன். கூடமாட ஒத்தாசை செய்யறதுலபொழுது போவது."
"ஓக்கே.. இட்ஸ் யுவர் ஹெட் ஏக்..."
ஊரிலிருந்து அப்பா, அம்மா இருவருமே வந்திருந்தார்கள். குடித்தனம் நடத்துகிற அழகைப் பார்க்க வேண்டுமாம்.அவர்களுடன் பேச்சு கொடுத்தபடி இருந்தவளுக்குப் பதற்றம் வந்து விட்டது. கீழே போய்ப் பார்க்க வேண்டும். மாமி என்ன செய்கிறாரோ!
"என்னடி... எங்கே போறே?"
"கீழே வீட்டுக்குத்தான்."
தகவல் சொன்னாள். எல்லாவற்றையும்.அப்பா சட்டென்று சீறினார்.
"நீ ஏன் அவங்களுக்கு ஹெல்ப் பண்றே?"
"பாவம்ப்பா!"
"நல்லா அனுபவிக்கட்டும்."
அம்மா நிதானமாய் இருந்தாள்.
"தொலையறது விடுங்க. நமக்கு என்ன... அதைவிட நல்ல வரன் அமைஞ்சாச்சு."
பாகீரதிக்குக் கேட்டிருக்க வேண்டும்.
"நீ எதுக்கு சிரமப்படறே. உங்கப்பா, அம்மா வந்திருக்காங்களே.." என்றாள் சங்கடமாய்.
பூமா சிரித்தாள்.
"உறவை விட சிநேகம் ரொம்ப தித்திப்பா இருக்கே மாமி.." என்றாள் - பதிலில் மனசு உண்மையாகவே இழைய.
October 06, 2010
எனக்கு நீ வேணும்
கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் .
பத்மா எட்டிப் பார்த்தாள். மாடிப் போர்ஷனில் குடியிருக்கிறாள். ஒரே மகன்; ஷாம்.
"உங்களுக்கு ஃபோன்..."
"தேங்கஸ்... இதோ வரேன்..."
ஃபோனில் பேசும் போது பத்மாவின் குரல் திடீரென உரத்துக் கேட்டது.
"அதெல்லாம் முடியாது...."
"வேணாம்... எனக்குப் பிடிக்கல..."
மறுபடி தணிந்து போனது யாராக இருக்கும், பத்மாவிற்கு தொலைபேசி அழைப்பு வருவது மிக அபூர்வம்.பேசி முடித்திருக்க வேண்டும். அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
"ஸாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.."
"சேச்சே... அதெல்லாம் இல்லே..."
மேஜை மீது வெள்ளைத் தாள்களும். பேனாவும்.இரண்டு வாரங்களாய் எதுவுமே எழுதாமல் பொழுதைக் கழித்தாகிவிட்டது. வாசிப்பும் இல்லை. என்னுள்ளே ஒரு குற்ற உணர்வு.
'வான் நிலா' வார இதழைப் பார்த்தவள் அதை எடுத்தாள்.
"உங்க கதை வந்திருக்கா..."
"ம்..."
"படிச்சுட்டுத் தரவா..."
தலையாட்டினேன். நகரப் போனவளிடம் கேட்டேன்.
"எதாச்சும் பிரச்னையா..."
"என்ன..." என்றாள் திகைப்புடன்.
"ஃ போன்ல... குரல் பலமாக் கேட்டது... அதான்"
பத்மா சிரித்தாள்.
"எழுத்தாளருக்குக் கற்பனை பிச்சுக்கிட்டு பறக்குதா... சந்திரா எங்கே...?"
"அவ அம்மாவைப் பார்த்துட்டு வரேன்னு போனா... அடுத்த தெருவுல மாமியார் இருந்தா...இது தான் ஒரு வசதி... ரெண்டு மணி நேரமாகும். நானும் கதை ஒண்ணு எழுதிருவேன்."
"ஆல் தி பேஸ்ட்"
போய்விட்டாள். பதில் சொல்லாமல்.திடமான மனசு, காதல் கல்யாணம். கணவன் திடீரென மனம் மாறி விரட்ட ஆரம்பித்தான். ஒரே அலுவலகம் என்பதால் ஏற்பட்ட அறிமுகம், பழக்கமாகி காதலாகி இன்று பிரிந்து வாழ்கிறார்கள்.
சந்திராவுக்கு முதலில் பத்மாவைப் பிடிக்க வில்லை. கணவனை உதறியவள் என்கிற பார்வை. பிறகு பழகப்பழக கோபம் இடம் மாறியது.
"இவளை ஒருத்தன் வேணாம்னு சொன்னா.. அவனைத்தான் செருப்பால அடிக்கணும்."
எந்தத் தொந்தரவும் இல்லை அவர்களால்.. டி.வி.இல்லை. ரேடியோவில் காலை விவித்பாரதியில் எதாவது ஸ்லோகம். ஷ்யாம் காம்பவுண்ட்டிற்குள் பந்தை உதைத்து ஒருவனாய் விளையாடுவான். சில நேரம் நானும் அவனுக்குக் கம்பெனி கொடுப்பேன்.
எழுத்து ஓடவில்லை. சில நேரங்களில் கற்பனைக் குதிரை சண்டித்தனம் செய்துவிடுகிறது.
மறுபடி தொலைபேசி மணி பிடிவாதமாய் ஒலித்தது அலுப்புடன் எழுந்து போனேன்.
"ஹலோ..."பத்மா இருக்காங்களா..."
அதே குரல் கீழே வைத்தேன். மறுபடி காலிங் பெல்லை அழுத்தினேன்.பத்மா எட்டிப் பார்த்தாள்.
"ஃபோன்..."
பத்மா முகம் சுளித்தது தெரிந்தது.
"ஸாரி... நான் இல்லேன்னு கட் பண்ணிருங்க..."
சட்டென்று மனசு மாறி வேகமாய் இறங்கி வந்தாள்.
"ஹலோ..."
எதிர் முனையில் என்ன சொன்னாரோ... பத்மாவின் முகம் மாறுதல் அடைந்து கொண்டே போனது.
"வேணாம்... வராதீங்க...""...
"ஒரு தடவை சொன்னா..."
அப்படியே திகைப்புடன் ரிசீவரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள். எதிர் முனையில் அவர் வைத்து விட்டிருக்க வேண்டும்.என்னைப் பார்த்தாள். எவரிடமாவது பகிர வேண்டும் என்கிற தவிப்பும் 'சொல்லாதே' என்கிற சுய கட்டுப் பாடும் அவள் கண்களில் நடத்திய போராட்டம் புரிந்தது.
"என்னை நீங்க நம்பினா.. அதாவது.. என் மூலம் தெளிவு கிடைக்கும்னு தோணினா.. ப்ளீஸ்... என்ன பிராபளம்னு சொல்லுங்க" என்றேன்.
வற்புறுத்தாத ஆனால் தூண்டுகிற தொனி.
"அவர்தான்.. இங்கே வரணு மாம்.. ரொம்ப அர்ஜண்ட் மேட்டர்.. என்னைப் பார்க்கணும்னு. வராதீங்கன்னு சொன்னா.. கேட்கலே.. எனக்கு அவர் இங்கே வர்றது பிடிக்கலே.. இப்பதான் கொஞ்சநாளா நாங்க மனசு விட்டு சிரிக்கிறோம்... நிம்மதியா இருக்கோம்..."
நிதானமாய் சொன்னேன்:
"வரட்டுமே. என்ன விஷயம்னு கேளுங்க. நத்திங் ஸ்பெஷல்னா.. டீசண்டா திருப்பி அனுப்பிடலாம்.உங்களுக்கு மறுப்பு இல்லேன்னா நானும் சொல்றேன்... வெளியே போயிருங்கன்னு. வீட்டு ஓனர்ங்கிறதால அவருக்கும் ஒரு பயம் இருக்கும்."
பத்மாவிடம் ஒருவித அமைதி வந்தது.
"தேங்க்ஸ்..."
அறைக்குள் நுழைந்தேன்.எழுதப்படாத தாள்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. வசப்படாத கருவை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது என்கிற தவிப்பும், எழுத இயலாத பட படப்பும் என்னைச் சங்கடப்படுத்தின.
காலிங் பெல் ஒலித்தது. சந்திராவா அதற்குள் திரும்பி விட்டாளா... எழுந்து போனேன்.எனக்கு அறிமுகமில்லாத ஆனால் மனசு உணர்த்திய மனிதர் நின்றிருந்தார்.
"பத்மாவைப் பார்க்கணும்"
"மாடி போர்ஷன்.. இதோ காலிங் பெல்..."
அவர் கவலைப்படவில்லை. விறு விறுவென்று படியேறினார். நான் ஏன் அதைச் செய்தேன் என்று புரியவில்லை. அவசரமாய் மாடி போர்ஷன் காலிங் பெல்லை அழுத்தினேன்.
பத்மா எட்டிப் பார்க்கவும் அவள் கணவர் மேலேறிச் செல்லவும் சரியாக இருந்தது.பத்மா பேசாமல் நின்றாள். என்னை உதவிக்கு அழைத்தால் உடனே படியேறிப் போகும் அவசரத்தில் அவளைப் பார்த்தேன்.
ஊஹும் பத்மா அவரை உள்ளே அழைத்துக் கொண்டு மறக்காமல் கதவை மூடினாள்.எதிர்பாராத திருப்பம். எனக்குள் அந்த நிமிஷம் என்னவோ நிகழ்ந்தது.
சரிதான் அவளும் பொம்பளை தானே. சராசரி மனுஷி. தாலி கட்டிய கணவன். ஒரு வருடப் பிரிவு. அவனே திரும்பி வந்து நிற்கும் போது எதற்கு வீம்பு என்று உள்ளே அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.
சரசரவென்று மனக் குதிரை பாய்ச்சல் காட்டியது. பதினைந்து பக்கங்களுக்குத் தடைப் படாத வேகம். அப்படியே பத்மாவின் கதை. பிரிந்து வந்து இருப்பவளைத் தேடி வருகிறான் கணவன்.
'என்னால என்னோட உணர்வுகளை அடக்க முடியலே. நீ வேணும்'என்கிறான். அவளுக்கும் அதே நிலை. வேறு வடிகால் தேடிப் போகாத நேர்மைக்குப் பரிசாக வீம்பைக் கைவிட்டு தன்னைத் தருகிறாள். ஆனால் மறுநாள் காலையயே அவனை அனுப்பி விடுகிறாள்.
திரும்பிப் படித்துப் பார்க்கும் போது வார்த்தைகள் அழுத்தமாய் விழுந்து விறு விறுப்பு குறையாமல் கதை வளர்ந்திருந்தது புரிய, பெருமிதம் வந்தது.
அடுத்த மாதம் கதை பிரசுரமானது. தபாலில் வந்த வார இதழைப் பிரித்து சந்திரா படித்திருக்க வேண்டும்.
"சகிக்கலே... கட்டின பொண்டாட்டியே கணவனை... ப்ச்.. அபத்தம்.." என்றாள்.
"அவ்வளவும் நெஜம்... ஹண்ட்ரெட் பர்சண்ட்..."
"என்ன உளர்றீங்க... யாரு அது?"
சட்டென்று சுதாரித்தேன். உளறிக் கொட்டி வேறு பிரச்னையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
பத்மாவின் குரல் கேட்டது.
"என்ன... எதோ... கதைன்னு..."
வாங்கிக் கொண்டு போனாள். சந்திரா எங்கோ வெளியே போயிருந்த நேரம் பத்மா வந்தாள்.
"இந்தாங்க..."
ஆர்வமாய்க் கேட்டேன்.
"கதை படிச்சீங்களா?"
"ம்"
"எப்படி...?"
பத்மா நிதானமாய் என்னைப் பார்த்தாள்..
"ஸாரி... சுந்தர்... நீங்களும் சராசரி ஆம்பளைன்னு நிரூபிச்சுட்டீங்க. ஒரு எழுத்தாளன்னா அடுத்தவங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்கற, மதிக்கிற ஆளாத்தான் இருப்பான்னு ரொம்ப பேர் தப்புக் கணக்கு போடறோம் ... இல்லே.. நீங்களும் விதிவிலக்கு இல்லே..."
"எ.. ன்ன" என்று குழறினேன்.
"அவர் அன்னிக்கு வந்தது.. ஆபீஸ்ல கையாடல் பண்ணி... பிரச்னையில் மாட்டிக்கிட்டதால.. எனக்கு... என்னைத் தேடி வந்தது... பண உதவிக்கு.. அரை மணியிலே திரும்பிப் போயிட்டார்.. உங்க கற்பனை கொஞ்சம் ஓவர்தான். ஆனா நெஜத்துல.. மனசு வெறுத்துப் போனப்புறம் வடிகாலுக்குக் கணவன்தான் வேணும்னு காத்திருக்கிற மாதிரி.. சுய மதிப்புள்ள எந்தப் பொண்ணும் இருக்க மாட்டா.. அதுவும் என்னப் போல வாழ்க்கையோட ரெண்டு பக்கமும் பார்த்தவங்க மனசுல.. நல்லாவே தெளிவு இருக்கும்... புரிஞ்சுக்கிற... கெளரவிக்கிற ஆண் துணைதான் அவசியம். தன் விருப்பம் தீர்த்துக்கிற சுயநலவாதியை இல்லே..."
நிறுத்தினாள் மெல்ல. ஆனால் அழுத்தமாய்ச் சொன்னாள்:
"முந்நூறு ரூபா வருமா... இந்தக் கதைக்குச் சன்மானம்? எத்தனை நாள்... எந்தெந்த தேவைக்கு அந்தப் பணம் உங்களுக்கு உதவும்.. சொல்லுங்க...இதுக்குப் பதிலா... பிறரோட அந்தரங்கம் துழாவறதை விட்டுட்டு.. உங்க எழுத்துல ஏன் மாற்றத்தை தேடிப் போகக் கூடாது..."
வார்த்தைகளை வீசி விட்டுப் போனாள்.
எனக்குத்தான் யாரோ என்னைக் கன்னத்தில் மாறி மாறி அறைந்த உணர்வு அப்போது.
(குமுதம்)