
”வீட்டுக்கு போலாமா..”
“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”
“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”
“பிளீஸ் தாத்தா”
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.
மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி
விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்
வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.
”தாத்தா..”
“என்னடா”
“அங்கே பாருங்க”
“நில்லு.. ஓடாதே”
அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..
கண்களில் ஒரு மிரட்சி..
“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”
‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.
“ம்” தலையாட்டினார்.
“அது என்ன சாப்பிடும்”
“நீ என்ன சாப்பிடுவே”
“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”
“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”
”எங்கே படுக்கும்”
“தனியா பெட் போடலாம்..”
“ஸ்வீட் தாத்தா”
இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.
இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.
மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.
லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.
சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.
கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.
குரலில் அதட்டல் இல்லை.
“போலாமா.. இருட்டப் போறது”
“ம்..”
“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”
‘ம்ம்’
யோசித்து சொன்னான்.
“விட்டுட்டு போயிரலாம்.”
“ஏண்டா.. ஆசைப்பட்டியே”
“அதோட அம்மா தேடுவாங்க”
தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..
ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.
“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”
தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்
காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.
“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”
பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.
பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.
திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.
வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.