
”அப்பா” டிராயிங் மாஸ்டர். அவரிடம் நானும் ஞானப்பிரகாசமும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளப் போனோம். (இப்படி வீணை, புல்லாங்குழல் என்று சகலமும் முயற்சித்து எதுவும் வரவில்லை உருப்படியாய் என்பது வேறு விஷயம்)
ரொம்ப நாள் கழிச்சு ’அப்பா’ என் வீட்டுக்கு வந்தார். இதற்குள் நான் கீழச்சித்திரைவீதி சித்திரைத்தேர் விட்டு மேற்கே வந்தாச்சு. எப்படி அடரஸ் கண்டுபிடிச்சாரோ.. படியேறி வந்தார். பல வருஷ இடைவெளிக்குப் பின் மீட் பண்றோம்.
இளைத்திருந்தார். ஏற்கெனவே ஒல்லி தான். பையனும் இதே லைன்ல ஆர்வம்.
‘படம் வரையறான்.. இப்ப குணசீலம் பெருமாளை ஸ்கெட்ச் எடுத்துருக்கான்’ என்றார்.
அவருடன் போய்விட்டேன். கோடுகளாய் இன்னும் முழுமை பெறாமல் பிரசன்ன வெங்கடாசலபதி.
“சிருங்கேரி பெரியவா.. படம் வரைஞ்சிருக்கேன்.. “ என்றான் பையன்.
அதுதான் மேலே..
அப்பா ஜெகன்னாதன். பையன் பாலாஜி. ’அப்பா’ வரைந்த ஸ்ரீரெங்கநாதர் இப்போதும் நிறைய வீடுகளில்.
ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியார் அத்யயன உத்ஸவம் இப்போது. பெருமாளுக்கு பகல் பத்து, ராப்பத்து போல தாயாருக்கு ஐந்து, ஐந்து நாட்கள் உதசவம். இப்போது ரா-அஞ்சு.
காணக் கண்கோடி வேண்டும்.. ஸ்ரீபாதந்தாங்கிகள் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரும் நடை அழகை தரிசிக்க.
சேர்த்தி மண்டபத்தில் தாயார் .. திருவந்திகாப்பு (தீபாரத்தி) ஆனதும் திரை. கிளம்ப மனசில்லாமல் உட்கார்ந்திருந்தோம்.
பெருமாள் பிரசாதம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க ஸ்ரீபண்டாரம் (பிரசாத விற்பனை இடம்) போனேன்.
வடை சூடாக இருந்தது. வாங்கும்போது ஒருவர் -காவி சட்டை, காவி வேட்டி- கன்னட சாயல் பேச்சு - முகம் பிரகாசமாய்.. வந்தார்.
‘தோடிசி ப்ரசாதம்’ என்றார்.
‘நோ.. நோ’ என்றார் விற்பனையில் இருந்த இருவரில் ஒரு பெரியவர். அதாவது ப்ரீயா தர முடியாதென்று. (முதலில் தமிழில் தரமாட்டேன்.’ என்று சொல்லி அப்புறம் தமிழ் தெரியாது என்று புரிந்து.. நோ.. நோ..
கேட்டவரோ ‘இதுல என்ன கஷ்டம்.. ஒரு ஸ்பூன் ஜஸ்ட் பிரசாதம்’ என்கிற தொனியில் மீண்டும் வேண்டினார்.
எனக்கு மனசாகவில்லை. பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த இன்னொரு சிறு வயசுக் காரரிடம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை இரண்டும் ஒவ்வொரு கரண்டி தரச் சொல்லி ஒரு இலையில் வைத்து அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டு அதற்கும் பணம் எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.
நான் வாங்கிய வடைக்கு மட்டும் பணம் எடுத்துக் கொண்டு அந்த பிரசாதங்களுக்கு பணம் வேண்டாம் என்று ...
சைகையில் சொன்னார் அந்த இளைஞர் ! வாய் பேச முடியாதவர் என்று புரிந்தது.
இறைவன் விளையாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை!