
பல வருடங்களுக்கு முன் அந்த மூன்று நாட்கள் கழித்து வீட்டுப் பெண்கள் கொள்ளிடம்தான் குளிக்கப் போவார்கள். அதுவும் விடியற்காலை நாலரை.. ஐந்து மணி நேரத்தில்.
80.. 90 என்று வயதானவர்கள் கூட இன்னமும் காவிரி, கொள்ளிடம் என்றுதான் ரெகுலராகக் குளிக்கப் போகிறார்கள். அவர்கள் திடமாய் இருக்கிறார்கள் இப்போதும்.
நாச்சியார் பாட்டி 90 வயதிலும் கொள்ளிடம் போனார். தெருப் பெண்கள் பாட்டியிடம் தான் துணை தேடுவார்கள்.
இரவில் படுக்கப் போகுமுன் மறுநாள் புரொகிராம் சொல்லக் கூடாது என்று ஒரு நம்பிக்கை. 'பிழைத்துக் கிடந்தால்' (அ) 'பிச்சைக்காரம்' என்பார்கள்.
பிச்சைக்கும் மறுநாளுக்கும் என்ன சம்பந்தம் என்று முதலில் (இப்போதும்) புரியவில்லை. மறுநாள் உயிருடன் இருப்பதே அவன் போட்ட பிச்சை என்பதாலா?
இந்த சம்பவம் பிறர் சொல்லிக் கேட்டதுதான். இதை நிரூபிக்க நாச்சியார் பாட்டியும் இல்லை.
ஒரு முறை அடுத்த வீட்டுப் பெண் நாச்சியார் பாட்டியிடம் முதல் நாள் இரவு சொன்னாளாம்.
'பாட்டி.. நாளைக்கு என்னையும் கூட்டிண்டு போங்கோ'
பாட்டி சம்மதித்து இருக்கிறார். மறுநாள் விடியற்காலை பாட்டி எழுப்பியிருக்கிறார்.
"வரியா"
இவளும் பின்னாலேயே போனாள். கொள்ளிடம் வந்தாச்சு.
போகிற வழியில் வழக்கமாய்ப் பார்க்கிற பால்காரர், இதர இம்மாதிரி குளியல் பெண்கள் யாருமில்லை.
வெறிச்சோடிய கொள்ளிடம். துணிகளை அலசி குளிரில் முக்கி எழுந்து 'பாட்டி.. போலாமா'
ஹா. நாச்சியார் பாட்டியைக் காணோம்.
சொல்லாமல் போயிட்டாளா..
வேகம் வேகமாய் நடந்து வந்தால் வடக்கு வாசல்.. சித்திரை வீதி.. இதோ வீடு.. பாட்டியைக் காணோம்.
இவள் சரியாக வீட்டு வாசலில் வந்து ஈரத் துணிகளுடன் நிற்க.. நாச்சியார் பாட்டி மெதுவாய் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து " என்னடி.. என்னை அழச்சிண்டு போச்சொல்லிட்டு நீ போய் குளிச்சுட்டு வந்துட்ட' என்றார் நிதானமாய்.
பா..பாட்டி.. அப்ப அது நீங்க இல்லியா.. தொப்பென்று கீழே விழுந்தவளை அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் போனார்கள். ஒருவாரம் காய்ச்சலில் கிடந்து பிழைத்தாளாம்.
த்ரில்லர் கதைகள் இப்படித்தான் எங்களுக்கு அறிமுகமானது. நாளைக்கு என்று சொல்லாமல் இப்போதே என்று மறைமுகமாய் சில விஷயங்களை செய்ய பழக்கி விட்டார்கள்.
இப்போது கொள்ளிடம் போக வெளிச்சம் வரவேண்டும்.
அந்த நாள் பெண்கள் என்ன துணிச்சலாய் இருட்டில் போய் வந்திருக்கிறார்கள்.. பிரமிப்பாய்த்தான் இருக்கிறது.