September 22, 2012

பரிசு

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது என்னென்ன உணர்வுகள் வருமோ, சந்தோஷமும் சில சங்கடங்களும் சந்திராவைப் பார்த்தபோது.

உண்மையில், சந்திராதான் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.
"பாலா... நீதானே?... ஸ்ஸ்... நீங்க...?"
என் கணிசமான தொந்தி, மூக்குக் கண்ணாடி, முன் வழுக்கை, காதோரம் மட்டுமின்றி பரவலாய்த் தெரிந்த நரை, இவை மீறிய கண்டிப்பு.
"சந்... சந்திரா..." என்றேன் ஒரு திடுக்கிடலுடன். பெண்கள் வயதானதை ஒப்புக் கொள்வதில்லை. ஜோடனைகள் தவிர்த்து, ஒப்பனையின்றி நின்ற சந்திராவிடம் இன்னமும் பழைய வசீகரச் சிரிப்பு மிச்சமிருந்தது.
“பாலா...!” என்றாள் மீண்டும் உரிமையாய். குரல் நெகிழ்ந்திருந்தது. கண்களில் சட்டென்று ஈரம் பூத்துக்கொண்டது. கூட்டத்தில் தொலைந்த சிறுமி, உரியவர்களில் ஒருவனை இனங்கண்ட பரவசம், நிம்மதி போல் முகத்தெளிவு!
"எதாவது சாப்பிடலாமா?" என்றாள்.
"எனக்குப் பசிக்கலே" என்றவன், சுதாரித்தேன். அழைப்பு பசிக்காக இல்லை. அமர்ந்து பேச ஓரிடம்.
"வா போகலாம்!" என்றேன். கை தன்னிச்சையாய் உயர்ந்து சட்டைப் பையைத் தொட்டுக்கொண்டது. அவசியம் இல்லைதான். கூடுதலான தொகைதான் உள் பாக்கெட்டில். மூவாயிரம். அதை மீறியா சாப்பிட்டுவிடப் போகிறோம்!
"என்ன வேணும்?..."
"கூல்ட்ரிங் எதாச்சும்..." சர்வர் நகர்ந்து போக, என்னைப் பார்த்தாள். அவள் அளவு என்னுள் பரவச அலைகள் இல்லை. புரிந்திருக்க வேண்டும்.
"பாலா! நீ மாறிட்டே!"
"நீயும்தான். கொஞ்சம் பருமன்... முகங்கூட லேசா..."
"பச்... நான் அதை சொல்லலே. மனசுல..."
"பாலா! உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?"
"ம்..." என்றேன் தலை கவிழ்ந்து.
"ஓ!..."
என்னவோ நினைவுகள் அவளுக்குள் ஓடியிருக்க வேண்டும். மிகப் பெரிய விஷயத்தை ஜீரணித்தவள் போலப் பெருமூச்சு விட்டாள்.
"எத்தனை பசங்க?"
"ஒரு பையன். சந்திரன்னு பேரு."
சர்வர் கொண்டு வைத்த பாட்டில்களை வெறித்தாள்.
"பாலா! நான் இப்ப டில்லியில் இல்லை. திரும்ப வந்துட்டேன். பெரியப்பாவும் தவறிட்டாரு."
"அடடா!..."
"கணேசன் என்னை விரட்டிவிட்டான். ப்ச்... போன்னு ரொம்ப நாகரீகமா..."
கூல்ட்ரிங்க் குடிக்க மனமின்றி ஸ்ட்ராவை உருட்டினேன்.
"உன் ஞாபகம்தான் வந்தது பாலா..."
'சந்திரா! என்னைக் கொல்லாதே' என்று கூவ வேண்டும் போலிருந்தது.
"எம் பேர்லதானே தப்பு பாலா?" குரல் பிசிறியது. தன்னிரக்கம் வழிந்தோடக் கேட்டாள்.
"இல்லை சந்திரா. எனக்கு அதிர்ஷ்டம் இல்லே."
"பச்! பொய் சொல்லாதே பாலா! நீ இப்ப வெல் ஸெட்டில்டு."
அவள் என்னை உற்றுப் பார்த்தது உறுத்தியது. குற்றம் சாட்டும் பார்வை. இதற்கு முன், சரியாகப் பத்து வருடங்களுக்கு முன், அவள் பார்வையில் என் மீது காதல்தான் வழிந்திருக்கும்.
******
"வேண்டாம் பாலா! ப்ளீஸ்!"
"ஊஹும்... வேணும்! இன்னைக்கே... இப்பவே..."
"பாலா...!"
"சரி! அவ்வளவுதானே?... உன்னை நான் வற்புறுத்தவே இல்லை."
"கோபமா?"
"இல்லே, ரொம்ப சந்தோஷம்! ஒண்ணு தெரியுமா? நீ மறுக்கிறது இதோட எட்டாவது முறை. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. உன்னைப் பொறுத்தவரை நான் கெட்டவன்... அதானே?"
"பாலா...!!"
"ப்ளீஸ், போ! எனக்குத் தனிமை வேணும்! வீட்டிலேயே யாரும் இல்லே. நிம்மதியா இருக்கேன். போ!... போயிடு!"
"அம்மணி வருவாளா?"
"அது எதுக்கு?"
"சொல்லேன்! வருவாளா?"
"வர மாட்டா. மூணு நாளைக்கு அவளுக்கு லீவு கொடுத்தாச்சு."

"சரி, வா!... என்ன பார்க்கிறே? நாந்தானே வேணும்? வா... எடுத்துக்க!"

"இப்படி இல்லே. முழு மனசா. பிச்சை போட வேணாம்!"

"முழு மனசா சொல்றேன். வா! ஐ பீலீவ் யூ!"

"வே...ணாம்...!"
என் மறுப்பு தோற்றது. ஏனெனில் அது பொய்யானது. அவளின் அன்பு நிதர்சனமாய் வென்றது.

"இப்ப சொல்லு! எனக்கா உன் மேல் நம்பிக்கை இல்லை?"

தலை கவிழ்ந்தேன். அன்றும் இன்றும்.
*********
"பாலா!... என்ன யோசிக்கறே?... என்னை ஏன் பார்த்தோம்னு இருக்கா?"

"இல்லே சந்திரா. நான் ஒரு கோழை. என்னாலே யாருக்குமே சந்தோஷம் இல்லை..." இம்முறை என் குரலில் ஒப்பனை தொலைந்து நிஜம் பீரிட்டது.

"அழகான மனைவி, மகன். அப்பறம் என்ன பாலா?" என்றாள். என் வசதிகளைவிட அவள் இழப்புகளின் கனம் குரலில் தொனித்தது.

"இப்ப எங்கே இருக்கே சந்திரா?"

"பச்... என்ன செய்யறதுன்னு புரியலே பாலா. மறுபடி டெல்லிக்குப் போயிரலாமான்னு... இங்கே விட அங்க எனக்கு உதவ யாராவது இருப்பாங்கன்னு... ஆனா..."

"என்ன சந்திரா?..."
"ஒண்ணுமில்லே பாலா. என்னவோ தெரியலை. உன்னை மறுபடி பார்த்ததும் எனக்கு பழைய திடம் மனசுல வந்த மாதிரி... சில சமயங்களில், வாழ்க்கை என்னை சந்தோஷமாகவும் வச்சிருக்கு. இன்றைய சோகம் மட்டுமே சாஸ்வதம் இல்லே..."

எழுந்து கொண்டாள்.

"இதோ வரேன் பாலா. ஒரே நிமிஷம்..."

வாஷ்பேசினுக்குப் போனாள். மேஜை மீதிருந்த கைப்பையை அவள் கவனிக்கிறாளா என்று நோட்டம் விட்டு அவசரமாய்த் திறந்தேன். உள்ளே ஒரு பத்து ரூபாயும் சில சில்லறை நாணயங்களும்.

'டெல்லிக்கே போகலாம்னு...' சந்திரா மனசுக்குள் கேவல் கேட்டது.

திரும்பி வந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டாள். பளீரெனச் சிரித்தாள்.

"நீதான் கூல்ட்ரிங்க்ஸுக்குப் பணம் தரணும். உனக்கு செலவு வைக்கிறேன்."

"என்னது சந்திரா...? ஆஃப்டர் ஆல்..."

வெளியே வந்தோம்.

"மறுபடியும் எப்ப வருவே... சந்திரா?"

"வரமாட்டேன் பாலா."

திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்.

"பயப்படாதே பாலா! நான் என் வழி போறேன். எனக்கும் எதாச்சும் ஒரு நல்ல வழி கிடைக்காமலா போயிடும்?... பாலா! மறுபடியும் நாம சந்திக்கிற வரை, என்னை ஞாபகம் வச்சிருப்பியா?" கடைசி வரியில் தேம்பிச் சுதாரித்தாள்.

"வரட்டுமா?"

திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாள்.
*****
வத்சலா என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.

"அடுத்த வாரம், நம்ம மேரேஜ் டேக்கு ஏதோ வாங்கித் தந்து அசத்தப் போறேன்னு கிளம்பிப் போனீங்க... வெறுங் கையா திரும்பி வர்றீங்க!"

"அடுத்த வாரம்தானே?... இன்னும் ஆறு நாள் இருக்கே!..." என்றேன் லேசான சிரிப்புடன்.


(எழுதி எவ்வளவோ வருடங்களாச்சு.. இப்போ உங்க கூட சேர்ந்து படிக்கிறேன்..)





September 14, 2012

நான் ஜடமில்லை

இன்றோடு பத்து நாட்களாகி விட்டன. மூன்று தடவை நேரிலும், இரண்டு முறை தொலைபேசியிலும் பேசியாகி விட்டது. தெருவிளக்கு மட்டும் எரிந்தபாடில்லை.

"ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒன்பது மணிக்கு, எதிர் வீட்டு உஷா வரும்போது, எவனோ பின்னாலேயே வந்திருக்கான். இவ பதறிப் போய் வேகமா வந்ததுல, எதுலயோ இடிச்சுக்கிட்டு, கருரத்தம் கட்டிப் போச்சு!"

புனிதா தினம் ஒரு தகவல் வைத்திருந்தாள். நேற்று, பக்கத்து வீட்டு ஐம்பது வயது சிவகாமியை, நாய் பிடுங்கியிருக்கும். இருட்டில் தெரியாமல் மிதித்து விட்டிருப்பார். யாரோ, இருட்டாய் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, விலாசம் கேட்கிற மாதிரி, கழுத்துச் சங்கிலியைப் பறிக்க முயன்றானாம். நல்லவேளை! இரைச்சலிட்டதில், பக்கத்து வீடுகளில் விளக்கெரிய, ஓடி விட்டானாம்.

"எனக்கே பயமா இருக்குங்க. சமயத்துல நீங்களே லேட்டா வரீங்க. கதவைத் தட்டினா, அது நீங்களா வேற யாராவதான்னு புரியறதுக்குள்ள படபடப்பாயிருது" கேட்டுக் கொண்டேன்.

"என்னை என்ன பண்ணச் சொல்ற? இந்த சந்துல இருக்கற இருபது வீட்டுலயும், கையெழுத்து வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தாச்சு. ஆனா லைட்டு மட்டும் எரிஞ்ச பாடில்ல."

"டென்ஷனாயிருதுங்க!"

வெளியே வந்தேன். வேறு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கலாமே. சிவராமன் வீட்டில் இருந்தார்.

"இங்கே பாருங்க! என்னால அலைய முடியாது. பணம் ஏதாவது தரணும்னா என் பங்கை சொல்லிருங்க! அவ்வளவுதான் என்னால முடிஞ்சது" என்றார் அழுத்தமாய்.

புவனேஸ்வரன் முனகினார்.

"போன தடவை, லீவு போட்டுட்டு உங்களோட வந்தேன். ஒவ்வொரு தடவையும் அலைய முடியாதுங்க! வேற எவனுமே கவலைப்படல. நீங்க ஏன் சிரமப்படறீங்க?"

இப்படி, ஒவ்வொரு விதமாய் பதில்கள். பாதி, சுவாரசியம் இன்றி.. பாதி அலட்சியமாய். எல்லோருக்குமே, பாதிப்புகள் பற்றிக் கவலை இருந்தாலும், 'நம்மால என்ன செய்ய முடியும்?' என்கிற தோரணை.

"என்ன? சொல்லுங்க!"

சோர்வான என் முகத்தைப் பார்த்தே புனிதா, பதிலைப் புரிந்து கொண்டு விட்டாள். அவளுக்கும் கோபம் வந்து விட்டது.

"சர்த்தான் விடுங்க! நமக்கு மட்டும் என்ன கவலை? எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்மை யோசிச்சாக் கூட மரியாதை இல்ல."

"இல்ல புனிதா! அவங்களுக்கு மட்டும் அக்கறை இல்லியா? எதுவும் செய்ய முடியலேன்னு, விரக்தில தளர்ந்துட்டாங்க."

"அது என்னங்க பேச்சு? முடியாததை, எப்படிச் செய்யலாம்னு யோசிக்கிறவன்தான் மனுஷன். என்னால ஆவாதுன்னு விலகிப் போறவன் ஜடம்! அவனால, அவனுக்கும் பயன் இல்ல. மத்தவங்களுக்கும் பாரம்!"

புனிதாவுக்குக் கோபம் வந்து விட்டால் வார்த்தைகள் சீறும்.

"என்ன சொன்ன?!" என்றேன் வியப்புடன்.

என் சீண்டல் புரிய, லேசாய் முகம் சிவந்தவள், முனகினாள்.

"போங்க! நாம் ஏன் அவதிப்படணும்? என்ன ஆவுதோ ஆவட்டும்."

விலகி உள்ளே போனாள். என்னுள் யோசனைப் பொறிகள் பற்றிக் கொண்டன. 'என்னால ஆவாதுன்னு விலகினா ஜடம்!'
இல்லை; நான் ஜடமில்லை! மனிதன்! என்ன செய்யப் போகிறேன்?

புனிதா என் பரபரப்பைப் பார்த்துத் திகைத்தாள்!

"என்ன ஆச்சு?"

"இங்கே வா! உன் கையால ஸ்விட்சைப் போடு!" என்றேன்.

வாசல்புறமே வெளிச்சமானது! மாடியில், புதிதாய்ப் பொருத்திய நூறு வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்தது. ஓரளவுக்குத், தெரு நிறைந்த வெளிச்சம்.

"என்னங்க இது!"

"போகட்டும்! நமக்கு இனி கரண்ட் பில் கூடும். ஆனா, இந்த சந்துல இனி, இருட்டுனால கஷ்டம் வராதில்ல. அது போதும்" என்றேன் நிறைவாக.

September 12, 2012

பூக்கள்

தேடிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு தோட்டமாக..

அறியாமல் தொலைத்த பூவை !



தொடுத்த பிறகே

தெரியும்..

எந்த மலர் தன் காம்பு இழக்குமென..




இயற்கையின் காதல்

தோட்டப் பூக்களாய்..

மனிதனின் காதல்

அவற்றைப் பறித்து..

September 08, 2012

புரிந்து கொள்ள வேண்டும்

மதிய நேரம். அவரவர் டிபன் கேரியர்கள் திறக்கப்பட்டு, கலவையான உணவு வாசனைகள்.

"வாவ்! உருளைப் பொரியலா! பார்க்கவே கண்ணைப் பறிக்குது! டப்பாவை இங்கே நகர்த்துங்க சுப்பிரமணி!"

"என்னப்பா, ஏலக்காய் வாசனை?.. பாயசமா?.. வேலு! என்ன விசேஷம்? சொல்லவே இல்லியே!"

"என்ன சபாபதி! கேரியரைத் திறக்காமல் அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க?"

சபாபதி இறுக்கிப் பிடித்திருந்த மூடியைத் தட்டித் திறக்க முயன்றான்.

"பார்த்து! கொட்டப் போவுது. உள்ளே, ஸ்பெஷல் ஐட்டம் ஏதாச்சும் இருக்கப் போவுது."

"சபாபதி வீட்டுலயா!"

பளிச்சென்று கேலி வந்து விழுந்து விட்டது. வாஸ்தவம்தான். கேரியரைத் திறந்தால் மணத்தக்காளிக் கீரை, ரசம், மோர் சாதம்.

"என்னப்பா பத்திய சமையல்!"

மற்றவர்கள் கவனம் திசை திரும்பி விட்டது. சபாபதிக்கு மட்டும் பொருமல் தணியவில்லை. மஞ்சுளா திருந்தவே மாட்டாள். ச்சே! இவளால் மானம் போகிறது. 'வழ.. வழ' சமையலைச் செய்து அனுப்பவில்லை என்று எவன் அழுதது! குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டான்.

"சபாபதி! உனக்கு ஃபோன்."

எழுந்து போனான். அப்பாதான்.

"இன்னிக்கு ரிப்போர்ட் தரேன்னு சொன்னாங்க... டாக்டரைப் பார்த்துட்டு வந்துடறியா?... ஞாபகப்படுத்தலாம்னு ஃபோன் பண்ணேன்."

"சரிப்பா!"

வைத்து விட்டு வந்தான். ரிப்போர்ட் அம்மாவுக்குத்தான். ஒரு வாரமாய், உடல் அசதி என்கிறாள். உடம்பு வேறு திடீரென்று பெருத்துக் கொண்டு போகிறது. எல்லா டெஸ்ட்டும் பண்ணிரலாம் என்று டாக்டர் அட்வைஸ்.

ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர் முகத்தில் தெளிவு. 

"ஒண்ணும் கவலைப்படாதீங்க! சர்க்கரையைக் குறைக்கச் சொல்லுங்க, போதும்!"

கூடவே மருந்துப் பட்டியலும். வீட்டுக்கு வந்தான். அம்மா சபாபதியைப் பார்த்ததும் எழுந்துகொள்ள முயன்றாள்.

"நீங்க ஏன் சிரமப்படறீங்க? அவ எங்கே ஒழிஞ்சா?" என்றான் லேசான எரிச்சலுடன்.

"டாக்டர் என்ன சொன்னார்?"

அப்பா பின்னாலேயே வந்தார்.

"ஒண்ணும் பயப்பட வேணாம்! சர்க்கரை கண்ணுலயே காட்டக் கூடாதுன்னார்."

"மாமா! உங்களுக்கும் காப்பி கொண்டு வரட்டுமா?" மஞ்சுளா முகம் துடைத்தபடி வந்தாள்.

"கொண்டு வா! ஆ.. இரு! சர்க்கரை போட வேண்டாம்!" என்றார்.

"அம்மாவுக்குத்தானே பிரச்சனை. நீங்க போட்டுக்கிட்டா என்ன?" என்றான் சபாபதி.

"பரவாயில்லைடா! நானும் பழகிக்கிறேன்."

இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர். அம்மா சொன்னாள், மஞ்சுளாவைக் காட்டி.

"பாவம்! ஒரு வாரமா வயிற்று வலியில் துடிக்கிறா. அசிடிடின்னு டாக்டர் சொன்னாராம். மணத்தக்காளிக் கீரை சாப்பிடுன்னு எதிர் வீட்டுப் பாட்டி சொல்லியிருக்காங்க. சமையல் செய்ய முடியாம துடிச்சுப் போயிட்டா வலியில."

காப்பியுடன் வந்தவளைப் பார்த்தான். வலியையும் மீறிச் சமைத்து அனுப்பி இருக்கிறாள். எனக்கும் அப்பாவுக்கும்தான் எத்தனை இடைவெளி, புரிந்து கொள்வதில்... அனுசரித்துப் போவதில்!

"வரியா? டாக்டர்கிட்டே போயிட்டு வந்திரலாம்!" என்றவனை அப்பாவும் அம்மாவும் அர்த்தத்துடன் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

September 06, 2012

அறிமுகம்

பெயர்களைத் தெரிந்து
கொள்ளாமல் தான்
நேசிக்கிறோம்
பறவைகளையும், மனிதரையும்
முதலில்.
பின்னர் கிட்டுகிறது
இயல்பான அறிமுகம்.