
இந்தக் கேள்வியை பாபு கேட்டபோது அவன் ஸ்கூல் வாசலில் நின்று கொண்டிருந்தோம். பின்னால் இருந்து குதித்தவனிடம் ஏய் என்று அதட்டிவிட்டு பைக்கின் முன்னால் மாட்டியிருந்த அவன் பையை எடுத்துக் கொடுத்தேன்.
வாங்கிக் கொண்டு ஓடியவன் திரும்பி வந்து கேட்ட கேள்வி..
'லவ்வுன்னா என்னப்பா?'
"எதுக்குடா"
"நீ பதில் சொல்லு முதல்லே"
"லவ்வுன்னா பிரியம்"
"ம்.. சரி ஈவ்னிங் பேசிக்கலாம்.."
மறுபடி ஓடிப் போய் விட்டான்.
எனக்கு அன்று அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. புவனாவுக்கு லஞ்ச் நேரத்தில் ஃபோன் செய்தேன்.
"என்ன உன் பிள்ளை ரொம்ப விவரமாகிட்டு இருக்கான்"
"புதிர் போடாதீங்க. விஷயத்தைச் சொல்லுங்க"
காலையில் நடந்ததைச் சொன்னேன்.
"உங்க லவ் மேட்டர் எல்லாம் எடுத்து விட்டுராதீங்க.. என்னை மாதிரி பொறுமையா கேட்டுக்க மாட்டான்."
அடிப்பாவி. கல்யாணமான புதிதில் எல்லாவற்றையும் மனசு விட்டு பகிரும் எண்ணத்தில் சொன்னதை ஞாபகம் வைத்து போட்டுக் காட்டுகிறாளே..
"இப்ப அவனுக்கு என்ன பதில் சொல்றது.."
"அதெல்லாம் அவன் நினைப்புல இருக்காது.. ஏதோ உளறிட்டு போயிருப்பான்.. நீங்க அவனுக்குப் பதில் சொல்லணும்னு உங்க பழைய ஃபிளாஷ் பேக்கை மனசுல ஓட்டி ஆபீஸ் வேலையை கோட்டை விட்டுராதீங்க"
வைத்து விட்டாள்.
ஃபிளாஷ் பேக்! அம்சவல்லி! எனக்குள்ளும் ஒரு காதல் கதை!
படித்து முடித்ததும் டைப்பிங் சேரச் சொல்லி அப்பா விரட்டிவிட அரைமனதாய் இன்ஸ்டிடியூட் போனபோது பார்த்த ரெட்டைப் பின்னல் தேவதை. வரிக்கு நாலு தப்போடு நான் அடித்தால், ஒரு தப்பும் இல்லாமல் முழுப் பக்கம் அடித்து எல்லோருக்கும் முன்னால் ஸ்பீடை முடித்து 'வெரி குட்' வாங்குவாள்.
pack my box with five dozen liquor jugs என்று அடிப்பதற்குள் விழி பிதுங்கி விடும். அனாயாசமாய் அம்சவல்லி அடிப்பதை மாஸ்டர் வருவதற்குள் ரவுண்டு கட்டி வேடிக்கை பார்ப்போம்.
"ஒரு பொண்ணு அடிக்குது.. வெட்கமா இல்ல உங்களுக்கு" என்று அவர் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்கும்போது அம்சவல்லி மீதே கோபம் வரும். ஏன் இப்படி ஒருத்தி அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறாள்..
அதையும் மீறி என் மனசுக்குள் காதல் அரும்பியதை உணர்ந்தபோது திகைத்துப் போனேன். அம்சவல்லி ஐ லவ் யூ என்று என் ஸ்பீட் பயிற்சி மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. எக்ஸாம் முடிவதற்குள் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று தவித்தபோதுதான் அம்சவல்லி ஒரு வாரமாய் இன்ஸ்டிடியூட்டே வரவில்லை. எப்படி டைப்பிங் எக்ஸாம் போவாள்.. அதுவும் கடைசி நிமிட பயிற்சி இல்லாமல்..
பிறகுதான் தெரிந்தது.. அவளுக்கு அம்மை போட்டிருந்தது.. அதுவும் தலைக்கு தண்ணீர் விட்ட உடனே மீண்டும் அம்மை திருப்பிக் கொள்ள சீரியஸாகி.. இன்ஸ்டிடியூட்டிற்கு அன்று விடுமுறை..அவள் வீட்டிற்கு எல்லோரும் போயிருந்தோம். அம்சவல்லியின் கடைசிப் பயணத்திற்கு.
என் காதலைச் சொல்லவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இதை மணமான முதல் இரவன்றே புவனாவிடம் சொல்லிவிட்டேன். அப்போது எதுவும் பேசவில்லை. பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் காதலைச் சொல்லி கேலி செய்வாள்.
மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் பாபு ஓடி வந்தான்.
"அப்பா.."
"என்னடா"
"யோசிச்சு வச்சிட்டியா.."
"எ..தை.."
"ப்ச்.. லவ்வுன்னா"
புவனாவைப் பரிதாபமாகப் பார்த்தேன். 'அது உங்க பிரச்னை' என்பது போல மையமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
பார்வையைத் திருப்பினால்.. எதிரே அப்பாவின் ஃபோட்டோ. என்னுள்ளும் ஒரு ஐடியா!
"பாபு.. தாத்தாவை உனக்கு நினைவிருக்கா?"
"எப்படிப்பா மறக்க முடியும்.. எம்மேல எவ்வளவு பிரியம்.. அவர் மட்டும் இருந்திருந்தா.."
பாபுவின் கண்களில் கற்பனை மின்னியது.
"அதேதான்.. ஒருத்தர் இருந்தாலும் இல்லாட்டாலும்.. அவரைப் பத்தி நினைச்சா.. உள்ளே ஒரு ஜில்லுன்னு ஃபீலிங் வருதே.. அதான் லவ்"
"போப்பா.. என் பர்த் டேக்கு ஒரு டெடி பேர் பொம்மை கொடுத்தாங்களே.. அது மேல லவ்வுனு போட்டிருக்கே.. கரடிக்கும் லவ்வுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டா.. என்னவோ சொல்றே"
வெளியே விளையாடப் போய் விட்டான். நான் தான் கரடி போல புவனா முன் விழித்துக் கொண்டிருந்தேன்.