June 23, 2013

காணாமல் போனவன் - 4

எழுத்தாளர் 'சிகரன்', ரமேஷின் வீட்டிற்குள் நுழைந்தபோது புயலடித்து ஓய்ந்த அமைதி.

மஞ்சரியின் முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை. ராகவியும் பாபுவும் கூட 'அங்கிள்' என்று பிரியமாக ஓடிவருபவர்கள், இன்று அமைதியாய்.

"என்னம்மா ஆச்சு? உடனே கிளம்பி வாங்கண்ணான்னு சொன்னதும் எனக்கு எதுவும் புரியல."

"உங்க நண்பர் அடிச்ச கூத்தை நீங்களே கேளுங்க!"
மஞ்சரியின் முகத்தில் கோப அலை.

"என்னடா பண்ணித் தொலைச்ச?"
சிகரன் கேட்டதும் ரமேஷின் முகம் இறுக்கமாய்.

"சொல்லித் தொலைடா!"
நட்பின் உரிமையில் சிகரன் அதட்டலாய்க் கேட்டான்.

"எப்படி சொல்லுவார்... மனசாட்சியே இல்லாம ஒரு காரியத்தைப் பண்ணிட்டு?"
மஞ்சரி குமுறினாள்.

"ஒண்ணு நீயாச்சும் சொல்லும்மா... இல்ல, அவனை சொல்ல விடு!"
சிகரனுக்கு என்ன நடந்ததென்று புரியாத குழப்பம்.

மஞ்சரியே சொல்லிவிட்டாள். அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவள் சொல்லிக் கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த சிகரனுக்கும் அவள் கோபம் நியாயமாய்த்தான் பட்டது.

"என்னடா?... ஏண்டா இப்படிப் பண்ண?"
ரமேஷ் அருகில் அமர்ந்து நிதானமாய்த்தான் கேட்டான்.

"நான் செஞ்ச முறை வேணா அதிரடியா இருக்கலாம். ஆனா, நான் செஞ்சது ஒரு காரணத்தோட..."

ரமேஷ் முதல் முறையாய்ப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"என்ன காரணமாம் அண்ணா... இப்படி நடுக்காட்டுல தவிக்க விட்டுப் போனதுக்கு?"

"அதுக்கு முன்னால நான் சொல்றதக் கொஞ்சம் கேளு! போன வாரம் எங்க ஆபீஸுக்கு ரெண்டு பேர் வந்தாங்க. அவங்க கூடவே எங்க அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜரும் செக்யுரிட்டியும்."

அவன் என்ன சொல்ல வருகிறான்?... புரியாமல் பார்த்தார்கள்.

"வந்தவங்க ரெண்டு பெரும் வேற யாரும் இல்ல... எங்க ஆபீசுல வேலை பார்த்து... போன மாசம் ஹார்ட் அட்டாக்ல காலமாயிட்ட சங்கர்ராமனோட மனைவியும் மகனும்தான்."

"அதுக்கு?..."

"நான் சொல்ல வரதை முழுசாக் கேளுங்க! அவன் மனைவிக்கு அவனைப் பத்தி எதுவுமே தெரியல. அவனோட சேமிப்பு... சம்பளம்... வங்கிக் கணக்கு... டிபாசிட்ஸ்... இப்படி எதுவுமே தெரியல. எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம்! ரெண்டு பேர் அப்போ, சங்கர்ராமன் அவங்ககிட்ட கடன் வாங்கினதா சொல்லவும்... அதுவும் பெரிய தொகை... அவன் மனைவி அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவனுக்கு பைனல் செட்டில்மெண்ட் வர பணமே இந்த மாதிரி கடன் செட்டில் பண்ண சரியாப் போயிடுமோன்னு."

ராகவியும் பாபுவும் கூட வந்து அமர்ந்து விட்டார்கள்.

"எங்க ஆபீஸ்ல அப்புறம் நாங்க பேசும்போது, எங்க வீட்டுலயும் எங்களைப் பத்தி எவ்வளவு தூரம் தெரியும்னு சந்தேகம். மஞ்சரிகிட்ட இதைப் பத்தி நான் பேச ஆரம்பிச்சப்ப அவ சரியா காதுல வாங்கல. வாயை மூடிட்டுப் போங்க... நீங்க எல்லாம் பார்த்துக்குவீங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டா. எனக்கு அப்பதான் இந்த ஐடியா வந்திச்சு. திடீர்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா என்ன பண்றான்னு பார்க்கலாம்னு..."

"என்னடா இது?..."

"இப்பவும் சொல்றேன்... நான் செஞ்சது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா, எனக்கு வேற வழி தெரியல. மஞ்சரி கொஞ்சமாச்சும் அவளைச் சுத்தி போட்டிருக்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து... இந்த விவரமும் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ஆசை. காரை விட்டு இறங்கி காணாம போன மாதிரி நடிச்சேனே தவிர, பின்னாலேயே இன்னொரு கார்ல வந்தேன். கோவிலுக்கும் போனேன். மாமா வீட்டுக்கும் போய் சமாளிச்சு, ஒரு கதை சொல்லி அவங்களையும் கன்வின்ஸ் பண்ணிட்டேன். பின்னாலேயே வந்து அதே இடத்துல ஜாயின் பண்ணிட்டேன்."

சிகரன் அவனையே வெறித்தான். என்ன வேடிக்கை இது!...

"மஞ்சரி! இப்போ சொல்லு... இந்த மாதிரி திடீர்னு எதுவும் நடந்தா அப்போ உனக்கு என்ன செய்யணும்னு ஒரு தெளிவு வந்திருக்கா? இல்லே, அழுகைதான் உன்னால முடியுமா?"

மஞ்சரி திணறினாள்.

"எப்படியும், அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டா யாரா இருந்தாலும் சமாளிச்சு வந்திருவாங்கன்னு நீங்க சொல்லலாம். அதுக்குள்ள அவங்க எவ்வளவு நஷ்டப்படுவாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா? வீடு... சமையல்... டி.வி-ன்னு ஒரு குறுகிய வட்டத்துல இல்லாம கொஞ்சம் இப்படியும் கவனம் திருப்பினா, இடிஞ்சு போகாம எழுந்து நிற்கிற தைரியம் வரும்னு எனக்குத் தோணிச்சு. நான் செஞ்சது தப்புன்னா ஸாரி! என் நோக்கம் நாம எப்பவும் நல்லா இருக்கணும்! வாழ்க்கைங்கிறது என்னோட... இல்லாட்டி உன்னோட முடியப் போகறதில்ல. நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கணும்!"

சிகரன் ரமேஷையே பார்த்தான்.

"நீ செஞ்சது சரியா தப்பான்னு நான் தீர்ப்பு சொல்லப் போறதில்ல. மஞ்சரிக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்ட. அதை உன் பாணில சொல்லிட்ட. கதை எழுதற எனக்கு இது ஒரு சுவாரசியமான தீம். மஞ்சரிக்கு சமாதானம் சொல்ல வேண்டியது நீதான். ஒரு சின்ன அட்வைஸ்... இந்த மாதிரி அடுத்த தடவை மடத்தனம் பண்ணாத! பாவம் மஞ்சரி, புள்ளைங்க!"

சிகரன் எழுந்து நின்று கை குலுக்கி விடைபெற்றுப் போனான். தற்செயலாய்த் திரும்பிப் பார்த்தபோது மஞ்சரியை ரமேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது!

(முடிந்தது)

June 22, 2013

காணாமல் போனவன் - 3

மஞ்சரிக்குத் தாகம். எழுந்து வீட்டுக்குள் போனாள். சமையலறைக்குள் நுழையப் போனபோது இவள் பெயர் கேட்டது.

"சும்மா ஒரு ஆம்பளை இப்படி விட்டுட்டுப் போவானா? இவ என்ன ராவடி பண்ணாளோ!"

"இருக்காதும்மா! நம்ம மஞ்சு அப்படிப்பட்ட பொண்ணு இல்ல."

"உனக்கு எல்லாம் தெரியுமா?"

"எனக்கென்னவோ அத்தை சொல்றது சரின்னுதான் தோணுது."

"நம்ம மூலத்தெரு பரிமளம் புருஷன் ஏன் ஓடிப் போனான்... நினைப்பிருக்கா?"

"ஐயோ அவ கொடுமைக்காரியாச்சே! அவ தொல்லை தாங்காம இல்ல அவன் போனான்?"

"சில பேர் வெளியே நல்ல பேர் வாங்கறாப்ல நடிச்சுகிட்டு உள்ளே அவ்வளவும் குசும்புத்தனம் பண்ணுவாங்க."

மஞ்சரிக்குத் தண்ணீர் குடிக்கிற ஆசையே போய்விட்டது. இப்படியெல்லாமா பேசுவார்கள்!

சதாசிவம் முகத்தில் சுரத்தே இல்லை. அவருக்கும் இப்போது லேசாய்க் கவலை. எந்தத் தகவலும் இல்லாமல் எங்கே போய்த் தேடுவது!

"இப்படி உட்காரும்மா!"

மஞ்சரி அவரையே பார்த்தாள். இப்போது அழுகை வரவில்லை. இனி என்ன செய்வது என்கிற யோசனை. இருட்டில் துழாவுகிற பூனை போல. ஏதேனும் ஒரு சிறு வெளிச்சம் கிடைத்தாலும் போதும்.

"அவன் பேங்க் அக்கௌண்ட் பத்தி தெரியுமா?"

"தெரியாது மாமா!" சொல்லும்போதே மஞ்சரிக்குச் சங்கடம் செய்தது மனசுக்குள்.

இப்ப எதுக்கு அதெல்லாம்?...

"உன்னால புள்ளைங்களை வச்சு சமாளிக்க முடியுமா?"

"என்ன மாமா இப்படி கேட்கறீங்க!"

"இல்லம்மா... நாம இப்ப எதுக்கும் ஒரு யோசனை செஞ்சு வச்சிரணும். அவனைத் தேடுறது தனி... அதுக்காவ தினசரி வாழ்க்கையும் பாக்கணுமில்ல?"

மஞ்சரிக்கு இப்போது கண்ணீர் முட்டியது.

"இங்கே பாரும்மா... என்ன நடந்திச்சுன்னு புரியல. அடுத்த யோசனை என்னன்னு..."

"எனக்கு எதுவுமே தெரியாது மாமா! எல்லாம் அவர் பார்த்துக்குவார்னு..."

"என்னம்மா... படிச்ச புள்ளை... நீயா இப்படிக் கலங்கறது?"

மஞ்சரி பதில் சொல்லவில்லை. ராகவியும் பாபுவும் வந்துவிட்டார்கள்.

"அப்பா ஏம்மா பேசல?"

"பேசுவார்மா!" என்றார் சதாசிவம்.

"நாங்க கிளம்பறோம் மாமா" என்றாள் மஞ்சரி.

"என்னம்மா... இப்பவேவா?!"

"ஆமா... எப்படியும் அங்கேதானே போகணும்?"

அவளுக்குள் ஒரு தீர்மானம். இனி இங்கிருக்க வேண்டாம்.

"நானும் வரேம்மா!"

"வேணாம் மாமா! நான் பார்த்துக்கறேன்."

பிடிவாதமாய் மாமாவைத் தவிர்த்துவிட்டுக் கிளம்பினார்கள். அத்தை "பாவம் நீயி" என்று சொன்னதற்கு வெறுமையாய் ஒரு சிரிப்பு.

கோவில் வாசலில் காரை நிறுத்தி, பூட்டிய கதவின் முன் கை கூப்பி நின்றாள்.

"நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. என்னைக் கை விடாம காப்பாத்தறது உன் பொறுப்பு!"

மனசுக்குள் பிரார்த்தனை ஓடியது.

"அம்மா! அப்பாக்கு நம்ம மேல கோவமா?"

"ஏம்மா இப்படி செஞ்சார்?"

மாற்றி மாற்றிக் கேட்டதற்கு மஞ்சரியால் பதில் சொல்ல முடியவில்லை. 

"அம்மா! அப்பா திரும்பி வருவார்ல?"

இந்தக் கேள்விக்குத்தானே விடை தெரியாமல் அவளும் தவிக்கிறாள்.

****

கார் போய்க் கொண்டிருந்தது. டிரைவர் நாசூக்கு தெரிந்து எதுவும் பேசாமல் ஓட்டிக் கொண்டிருந்தார்.

"அம்மா! இங்கேதானே அப்பா காணாம போனார்?"

திடீரென ராகவி கத்தினாள்.

"ஆமாம்! இதே இடம்தான்."

"காரை நிறுத்துப்பா!"

இறங்கி நின்றனர் மூவரும். விளையாட்டு போல ஆகிவிட்டது. கிளம்ப மாட்டேன் என்றவர்களை வற்புறுத்தி இழுத்து வந்து... கடைசியில் ரமேஷைக் காணாமல் போக்கியாகி விட்டது.

மஞ்சரி கண் மூடி விம்மினாள்.

எனக்கேன் இந்தச் சோதனை?...

"அம்மா!"

ராகவியின் பதற்றமான குரல்.

கூடவே பாபுவின் குரலும்.

"அம்மா!"

மஞ்சரி தலை கவிழ்ந்து குமுறிக் கொண்டிருந்தபோது யாரோ தோள் தொட்ட பிரமை.

"மஞ்சு!..."

ரமேஷின் குரல்.

திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தாள்.

எதிரே ரமேஷ்!
--தொடரும்...

June 21, 2013

காணாமல் போனவன் - 2

"என்னம்மா சொல்ற!" சதாசிவம் மாமா கேட்டது ஏறக்குறைய அலறல் போலவே இருந்தது.


மஞ்சரி அழுதாள். "எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல மாமா!"

"இப்ப எங்கே இருக்கீங்க?"

டிரைவரிடம் கேட்டு இடம் சொன்னாள்.

"ரமேஷ்ட்ட செல் இருக்கா?... அதை ட்ரை பண்ணியா?"

"பண்ணேன் மாமா! ஆனா ஸ்விட்சுடு ஆஃப்னு வருது."

"சரி பயப்படாத... கவலைப்படாத... கிளம்பி வா!"

"அவருக்கு என்ன ஆச்சுன்னு..."

"இங்கே பாரும்மா!... எதுக்கும் கவலைப்படாத... அவனுக்கு ஒண்ணும் ஆகாது. நீ புள்ளைங்களோட எப்படி தனியா அங்கே இருப்ப? வாம்மா!"

மஞ்சரியின் அழுகைதான் கேட்டது.

"டிரைவர்ட்ட போனைக் கொடும்மா!"

சதாசிவ மாமா ரொம்பப் பொறுமையாய்ப் பேசினார்.

"அவங்களைப் பத்திரமா கூட்டிகிட்டு வாங்க!"

அதைவிட முக்கியமாய், மாமா தனது காரில் டிபன் எடுத்துக் கொண்டு எதிரே வந்து விட்டார். இவர்கள் கார் இன்னும் 50 கி.மீ போனால்தான் அவர் ஊர். மாமாவைப் பார்த்ததும் மஞ்சரிக்கு ஒருபுறம் தைரியம், இன்னொருபுறம் அழுகை.

"சாப்பிடும்மா... புள்ளைங்க உன்னால இன்னும் அரண்டு போகும்."

வற்புறுத்திச் சாப்பிட வைத்தார். மூன்று பேருமே திணறிப் போயிருந்தது தெரிந்தது.

"நீ எங்கப்பா போன... அந்த இடத்துல காரை நிறுத்திட்டு?" டிரைவரை விசாரித்தார்.

"வாமிட் வர மாதிரி இருந்திச்சு..."

"அதுக்கேன் அவ்வளவு நேரம்? ஸார் போனது உனக்குத் தெரியுமா?"

"தெரியாதுங்க! அவர் கீழே இறங்கி நின்னாரு... அப்புறம் எப்படி திடீர்னு..."

என்ன செய்யலாம்... சதாசிவத்திற்குக் குழப்பமாய் இருந்தது.

"சரிம்மா... சாமி கும்பிடன்னு வந்துட்ட. முதல்ல அதைப் பார்ப்போம். அதுக்குள்ள ரமேஷே ஏதாச்சும் பேசறானான்னு பார்க்கலாம்."

"இப்ப இருக்கற மன நிலையில என்னால சாமி கும்பிட வர முடியாது மாமா!"

"என்னம்மா இது சின்னப் புள்ளையாட்டம்? இப்பதான் சாமிகிட்ட போகணும். திக்குத் தெரியாம நிக்கிறப்ப அவன்தான் வழிகாட்டணும்."

மாமா பேசிப் பேசிக் கரைத்தார். குளித்து முடித்து கோவிலுக்குப் போனார்கள். மஞ்சரி முகத்தில் சுரத்தே இல்லை. கோவிலுக்குப் போய் விட்டு வந்ததும் சாப்பாடு. அதற்கும் மஞ்சரியுடன் போராட்டம்.

"பசிக்கல மாமா!"

வீட்டில் எல்லோரும் மஞ்சரியைச் சுற்றி அமர்ந்து சாப்பிட வைத்தார்கள். பாபு, ராகவிக்கு அந்த வீட்டுக் குழந்தைகளுடன் அரட்டை, விளையாட்டில் கவனம் திரும்பியது. அப்பாவுக்கு எதுவும் ஆகாது... மாமா பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை.

"அம்மா... மஞ்சரி... இப்படி வா!" சதாசிவம் அருகில் அமர வைத்தார்.

"அவனுக்கு ஏதாச்சும் பிரச்னையா?"

"எதுக்கு கேட்கறீங்க?"

"இல்ல... இப்படி திடீர்னு காணாப் போறான்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்னு..."

"ஆபீஸ்ல ஏதோ சொன்னார். ஆனா அதுக்காக இப்படிப் பண்ண மாட்டார் மாமா!"

"சரி, அவனோட ஆபிஸ் விவரம்... எதுவும் தெரியுமா..."

"விவரம்னா?..."

"அவனோட ப்ரெண்ட்ஸ்... அவன் சம்பளம்... அவனோட சேவிங்ஸ்... இப்படி"

"யார்கிட்ட பேசறார்னு தெரியாது."

"உன்கிட்ட சொல்ல மாட்டானா?"

"சொல்லுவார்... ஆனா எனக்குத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறேன்னு..."

"ம்ம்... யார்கிட்ட விசாரிச்சா அவனைப் பத்தி தெரியும்?"

"தெரியல மாமா!"

"அடிக்கடி யார் பேரையாவது சொல்வானா?"

"குமார்னு ஒருத்தர் பேர் சொல்வார்."

"அவர் நம்பர் இருக்கா?"

"இல்ல மாமா... ஸ்ஸ்... ம்ம் முந்தா நாள் அவர் என் நம்பருக்கு கால் பண்ணி ரமேஷ் இல்லியான்னு கேட்டார்... இருக்காரேன்னேன். பின்னே ஏன் போனை எடுக்கல ரிங் போவுதேன்னார்..."

"உன் நம்பர் எப்படி அவருக்குக் கிடைச்சுதாம்?"

"அது தெரியல மாமா!"

"சரி, உன் செல்லைக் கொடு!"

மாமா இன்கமிங் அழைப்புகளைப் பார்த்து வெறும் நம்பர் இருந்ததை எடுத்தார்.

"இதுவா?"

"தெரியல மாமா... இதுவாத்தான் இருக்கும்."

அந்த எண்ணை அழைத்தார்.

"குமார் இருக்காரா?"

"........"

"ரமேஷோட மாமா பேசறேன்..."

"......"

"ஓ அப்படியா! சரி... அப்புறம் பேசறேன்."

மஞ்சரியிடம் போனைக் கொடுத்தார்.

"அவர் ஆபிஸ் வேலையா டெல்லில இருக்காராம்... ரமேஷ் எப்படி இருக்கார்னு கேட்டார்... நான் ஒண்ணும் சொல்லல."

மஞ்சரி முகத்தில் குழப்பம். 'அப்போ அவர் எங்கேதான் போனார்?...'



(தொடரும்...)



June 20, 2013

காணாமல் போனவன் -1

மஞ்சரியின் குரல் காலை நாலு மணியிலிருந்தே கேட்க ஆரம்பித்துவிட்டது.

"எழுந்திருங்க... வேன்ல தூங்கிக்கலாம். இப்பவே மணி ஆயிருச்சு!"

"அம்மா... விடும்மா! நான் வரல" என்று சிணுங்கினாள் ராகவி.

"நானும் வரல" என்றான் பாபு.

'நானும் வரல" என்றான் கணவன் ரமேஷ்.

"அவங்கதான் குழந்தைன்னா உங்களுக்கென்ன? எழுந்திருங்க!" 

போர்வையைப் பிடுங்கினாள். 

"ஐயோ குளுருது!" என்று பாபுவின் போர்வைக்குள் ஒளிந்தான் ரமேஷ். 

பாபு அலறினான். "போப்பா... எங்கிட்டே வராதே! புசு புசுன்னு காதுல மூச்சு விடறே."

"அப்பாதானடா... ஏண்டா விரட்டற?" என்று ராகவி போர்வையை இறுக்கிக் கொண்டு கத்தினாள்.

"அப்போ உன் போர்வைக்குள்ள நீ வச்சுக்கோ!"

"அய்யய்ய... இதென்ன இப்ப எல்லாரும் எழுந்துக்கறீங்களா இல்லியா?"

வாசலில் வேன் ஹார்ன் சத்தம் கேட்டது.

"ஏய்... வேன் வந்தாச்சு!" மஞ்சரிக்குள் பதற்றம் அப்பிக் கொண்டது.

ரமேஷ் "கூல்... கூல்!" என்றான்.

"நான் வேணாம்னேன்... நீங்கதான் எல்லாரும் இன்னிக்குப் போகலாம்னு பிடிவாதம் பிடிச்சு வேன் புக் பண்ணீங்க. இப்ப நான் ரெடி ஆயிட்டேன்... நீங்க பிடிவாதம் பிடிக்கறீங்க!" மஞ்சரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். மூன்றுபேரும் அவள் அருகில் வந்து நின்றார்கள்.

"அம்மா... சும்மா கலாட்டாம்மா. நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்க. நாங்க அப்பவே ரெடி. உங்களை டிஸ்டர்ப் பண்ணாம போய் ரெடி ஆகிட்டு திருப்பி வந்து படுத்துட்டோம். சும்மா ஜாலிக்கு."

"இது உங்க வேலையா?" ரமேஷைப் பார்த்து முறைத்தாள்.

"ஐயோ நான் இல்ல... அவன்தான்" என்று பாபுவைக் காட்டினான்.

"நான் இல்லம்மா அவதான்" என்று அவன் ராகவியைக் காட்டினான்.

எல்லோரும் சிரிப்பில் மூழ்க, மஞ்சரிக்கு இனம் புரியாத ஆனந்தம்.

'கடவுளே! எங்களை எப்பவும் இதே போல சந்தோஷமா வை!' என்று மனதில் பிரார்த்தித்துக்கொண்டே ஒவ்வொரு பேக்கேஜாக வேனில் ஏற்ற, ரமேஷ் முன்னால் அமர... மஞ்சரியும் பிள்ளைகளும் பின்னால் அமர்ந்தார்கள்.

"ரொம்ப வருஷம் ஆன மாதிரி இருக்கு, இப்படி டூர் போய்!"

"ஏய்! இப்பதான் கொடைக்கானல் போயிட்டு வந்தோம்."

"அதுக்கு முன்னால பங்களூர் போனோமே... சித்தப்பா கல்யாணத்துக்கு?"

"ம்ம்... அதெல்லாம் நினைப்பிருக்கு. ஆனாலும், என்னவோ வீட்டுலயே அடைஞ்சு கிடக்கற மாதிரி ஒரு அவஸ்தை மனசுல."

"உனக்கு எப்பப் பாரு வெளியே சுத்தணும், அதானே?"

"டிபன் எங்கே சாப்பிடலாம்?"

"அதுக்குள்ள சாப்பிட அவசரம்!"

"மாமாக்கு போன் பண்ணியாச்சா... நாம கிளம்பிட்டோம்னு?"

"இப்ப மணி நாலரை. தூக்கத்துல இருப்பார்."

"ஜில்லுன்னு காத்து!"

சாலை... அவ்வப்போது விர்ரென்று கிராஸ் செய்த லாரி... கார் சத்தங்களினால் அதிர்ந்து அடங்கியது. ரமேஷ் டிரைவரிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான். ராகவி டேப்லட்டில் கேம் விளையாட, பாபு மஞ்சரி மேல் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான். ஹ்ம்ம்... மூணு மணி நேரம் போகணும். மஞ்சரிக்கும் லேசாய்த் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.

இந்தப் பயணமே திடீர் ஏற்பாடுதான். அதுவும் ஒரு சின்னக் குழப்பத்தில். ரமேஷை விட ஜூனியர் ஒருவருக்குப் பதவி உயர்வு. அது அவன் மனதை உறுத்த... அதேபோல மஞ்சரிக்கும் ஏதாவது உடல் உபாதைகள்.

ஜோசிய நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். இவர்கள் புலம்பியது கேட்டு ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார்.

"உங்க குல தெய்வம் யாரு?"

சொன்னார்கள்.

"எப்ப கடைசியா போனீங்க?"

"ம்ம்... நாலு வருஷம் இருக்குமா?" ரமேஷ் மஞ்சரியைக் கேட்டான்.

"பானு கல்யாணத்தப்ப போனோமா?"

நண்பர் சொன்னார். "பரவாயில்ல ஞாபகம் வராட்டி. இப்ப போயிட்டு வாங்க! அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அப்போ."

அவர் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போக, இவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அடுத்த வாரம் இரண்டு நாட்கள் லீவு வருதே அப்ப போலாமா என்று பேசி, இதோ இன்று கிளம்பியாச்சு.

கார் குலுங்கி நின்றது. மஞ்சரி திடுக்கிட்டு விழித்தாள்.

"என்ன ஆச்சு?"

ரமேஷ் 'ஒன்றுமில்லை' என்பது போலக் கை காட்டினான். டிரைவர் இறங்கிப் போனார். கார் சாலையின் ஓரத்தில் நின்றது. ரமேஷ் இறங்கிச் சோம்பல் முறித்தான். இன்னும் வெளிச்சம் வரவில்லை. சாலை வெறிச்சோடிக் கிடந்தது. ரமேஷ் கொஞ்ச தூரம் நடந்தான். மஞ்சரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் தூக்கம் கண்ணைச் சுழற்றியது மஞ்சரிக்கு. ஒரு நிமிடமோ இரு நிமிடமோதான் கண்ணை மூடியிருப்பாள். மறுபடி கண்களைத் திறந்தால்... எதிரே ரமேஷ் இல்லை!...

(தொடரும்)

June 07, 2013

ரசவாதம்

தன்யா அப்படிச் சொல்வாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

"ஆர் யூ ஃப்ரி நௌ..." என்றாள் இண்டர்காமில்.
"ம்..."
"ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்....அங்கே வரேன்...."
நேரே என் சீட்டுக்கு வந்தாள். புன்முறுவலித்தாள்.
"வீட்டுக்கு வந்திருந்தேன். சாரு சொன்னாளா..."
தலையசைத்தேன். எதிரில் அமர்ந்தாள்.
"படிப்பு எல்லாம் எப்படி இருக்கு."
"ப்ச்.."
"ஏதோ பெயிண்டிங் பண்றேன்....முடிஞ்சப்புறம் காண்பிக்கறேன்னீங்களே, முடிஞ்சுடுச்சா..."
"ஊஹூம்...."
என் குரலில் அலுப்பு. பதில்களில் வெறுமை. முக இறுக்கம். எதுவோ அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
"சங்கர்....உங்ககிட்டே மனசு விட்டுப் பேசணும்னு வந்திருக்கேன். என்னோட பர்சனல் விஷயம்" என்றாள் கண்களில் கெஞ்சலுடன்.
கொஞ்சம் நிமிர்ந்தேன்.
"என்னது" என்றேன்.
"வந்து....எப்படி சொல்றது...ஓக்கே...நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்....அதனாலதான் தைரியமா பேசறேன்.....எனக்கு....எனக்கு...."
ஆர்வமாய் அவளைக் கவனித்தேன்.
போகிற இடமெல்லாம் புத்துணர்ச்சி பரப்பும் உற்சாகப் பந்து அவள். எப்போதும் புன்சிரிப்பும், 'ஏதாவது உதவி தேவையா' என்ற உதவிக் கரமும் அவளை நேசத்துக்கு உரியவளாகச் செய்திருந்தன. மற்றவர்களின் ஆர்வம் உணர்ந்து பேசுகிற தன்மை அவளுக்கே உரியது.
அவளுக்குள்ளும் ரகசியமா....அதுவும் என்னிடம் பகிரும் விதமாய்...என்னவாக இருக்கும்?
"சங்கர்...இதை நான் சொல்லலேன்னா ஏதோ என்னைக் கண்டே பயப்படறேன்னு தோணிரும்...ஐயாம் நாட் எ ஹிபோகிரைட்..
யெஸ்....உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...ஐ அட்மிட் இட்..." என்றாள் பட்டென்று.
பார்வை விலகாமல் ....கண் சிமிட்டாமல் என்னைப் பார்த்தாள். முகத்தின் குழந்தைத்தனம் மாறவில்லை.
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இயக்கங்கள் அற்றவன் போல அமர்ந்திருந்தேன்.
"ஆனா.....இப்ப கொஞ்ச நாளா....உங்களை பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு...சங்கர்.....என் மனசுல துடிப்புள்ள ஒரு உருவம்தான் சங்கரா நிக்கிது...என் கண்ணெதிரில் இருக்கிற நிஜ மனுஷன்....எதோ பிரமை பிடிச்சாப்பல...மனசுக்குள்ளே பேசி....எங்கேயோ வெறிச்சு...நோ....திஸ் ஈஸ் நாட் மை சங்கர்...ஹி இஸ் ஸம்திங் எக்ஸலெண்ட்...."
பேசிக்கொண்டே போனாள்.
என்னுள் ஏதோ உடைந்தது. என்னவென்று சொல்வேன். எனக்குள் உதயமாகும் புதுப்புது துடிப்புகள் எல்லாம் உணர்வாரும், தூண்டுவாரும் இன்றி ஜீவனற்றுப் போகிற அவலம். எனக்கும் என்னை ரசிக்கிற மனிதர்கள் தேவை என்பதை எப்படிச் சொல்வேன்?
அழலாம் போலிருந்தது. என் மனசு பார்வையில் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை கைகளில் உருட்டியபடி வேடிக்கை பார்த்தேன்.
"என்னால நம்பவே முடியலே சங்கர்...எவ்வளவு ஆக்டிவா இருக்கிறவரு நீங்க...இது ஏதோ டெம்பரரி ஸெட் பேக்...ஜஸ்ட் ஏதோ ஒரு மயக்கம்...நிச்சயமா உங்களால இதிலேர்ந்து விடுபட முடியும். என்னால அந்த பெயிண்டிங்கை மறக்கவே முடியாது சங்கர்...அந்த குட்டிப் பையன் வீட்டு வாசல்ல அவன் அம்மாவுக்காக காத்திருக்கிறது...நீங்க எனக்கு வொரி ஃபர்ஸ்ட் காண்பிச்ச ஓவியம்... ஞாபகமிருக்கா..." என்றாள் முகமெல்லாம் பரவசமாய்.
எனக்கும் அது தொற்றிக் கொள்ள பழைய நினைவுகளில் இனிமையாய் அமிழ்ந்தேன்.
"அந்த சங்கரை மறுபடி நான் பார்க்கணும்...எனக்கு ஆசையா இருக்கு!" என்றாள்.
எனக்குள் என்னென்னவோ எண்ணங்கள்.
'இல்லை....என்னால் முடியாது' என்கிற பதில் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழந்தது.
எதிரில் முழுமையாய் .....என்னை மனப்பூர்வமாய் நேசிக்கிற ஒரு ஜீவன் அமர்ந்து....என் ரசனைகளைப் பகிர்ந்து...தூண்டி விட்டு...
'ஏதாவது செய்யணும்' என்கிற வேகம்தான் வந்தது.
மெலிதாகச் சிரித்தேன்...கண்களில் பழைய தன்னம்பிக்கை சுடர்விட.
அவளுக்கும் அது புரிந்தது.
"சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எங்கே போனாலும்...எப்படி இருந்தாலும்...என்னால உங்களை மறக்கவே முடியாது...."
"தேங்க்ஸ்" என்றேன் முனகலாக.
"சாருவை மறுபடி பார்க்கணும்" என்றாள்.
"இந்த ஸண்டே வாயேன்....வேற கமிட்மெண்ட்ஸ் இல்லேன்னா...."
"ம்...ம்..." யோசித்தாள்.
"உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கும். என்னோட பெயிண்டிங்" என்றேன் குதூகலமாய்.
"ஹை.....அப்படின்னா வரேன்."
எழுந்து நின்றாள்.
"இந்த நிமிஷ சங்கர்தான் நிஜம்....இவரைத்தான் நான் அடிக்கடி பார்க்கணும்....சரியா..."
போய் விட்டாள்.
வீடு திரும்பும்போது கூட ஊதுபத்தி தொட்ட கைவிரலாய்...மனசுக்குள் மணம்.
சாரு என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.
"என்ன...ஆபிஸ் விட்டுருச்சா...உங்களை.." என்றாள்.
"நான் விட்டுட்டேன்..." என்றேன்.
பிஸ்கட், டீ வந்தது. திடீரென்று நினைத்துக் கொண்டவளாய்ச் சொன்னாள்.
"நேத்திக்கு தன்யா வந்திருந்தா..."
"அப்படியா?"
"நான் இதுல சேரட்டுமா... எனக்கும் மாறுதலா இருக்கும்" என்றாள் ஏதோ ஒரு ஃபார்மை நீட்டி.
வாங்கிப் பார்த்தேன். லயன்ஸ் கிளப்.
"சேரேன்..."
சிரித்தாள்.
"இதுல பார்த்தீங்களா...ஒரு கேள்வி..."
'இஸ் யுவர் ஹஸ்பெண்ட் எ லயன்?' என்ற வரியைக் காட்டினாள்.
"என்ன எழுதட்டும்...'யெஸ்'னா....எப்ப பார் கர்....புர்...னு இருக்கீங்களே" என்றாள் விளையாட்டாய்.
எனக்கும் சிரிப்பு வந்தது.
மனசுக்குள் காலையிலிருந்து திமிறிக் கொண்டிருந்த உற்சாகம்....என்னை மாடிக்கு விரட்டிக் கொண்டிருந்தது.
என்னுடைய பெயிண்ட்டிங் ரூம்.
படியேறினேன். பின் தொடர்ந்தாள். இவள் எதற்கு வருகிறாள். புது வழக்கமாய்....
மாடி அறையில் இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.
அரைகுறையாக முடித்திருந்த பெயிண்டிங் ஸ்டாண்டில் பொருந்தப்பட்டு...தயார் நிலையில் .....பிரஷ்....கலர்கள்...
"உங்களுக்காகத்தான்..." என்றாள் திரும்பிப் பார்த்ததும்.
புரிந்தது. இவளிடம் தன்யா பேசியிருக்கிறாள்.
"என்ன பெண் அவள்....நினைக்க நினைக்க மனசுக்குள் நெகிழ்ந்து போனேன்.
'ஐயோ பாவம்....உங்களைப் புரிஞ்சுக்காத மனைவி' என்கிற ரிதியில் பேசியிருந்தால் என் தன்னிரக்கம் அதிகமாகியிருக்கும்.
'அவளும் மனுஷிதானே....நீங்க அவளைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்களா' என்று கேட்டிருந்தால் பதிலுக்கு வாதம் பண்ணியிருப்பேன், சீண்டப்பட்டவனாய்...
ஊஹூம்....எதுவுமில்லை.
என்னை மட்டும் தனியாளாய் அளவிட்டு...எனக்கும் உணர்த்தி...'இதுதான் நீ...இப்படி இரேன்' என்கிற பாவனையில் பேசி...ரசவாதம் நிகழ்த்தி விட்டாள்.
நிச்சயம் இதே போலத்தான் சாருவிடமும் பேசியிருப்பாள்.
மனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது. அப்படியிருந்தாலும் பாசிட்டிவாய் தூண்டுகிற நேசமும் இணைந்து விடாது. இரண்டும் சேர்ந்தவளாய் தன்யா....

என் கை பிரஷ்ஷில் வண்ணங்கள் புது ராகம் இசைக்க ஆரம்பித்தன.


(ராஜம் மாதர் மலரில் பிரசுரம்)