இரண்டு வருடங்கள் இருக்குமா.. இருக்கலாம். பறவைகளுடனான என் சிநேகிதம்..
‘காலை வேளைல என்ன பண்ணுற’
‘7 மணி ஆபிசுக்கு கிள்ம்புற அவ்சரத்துல இருப்பேன்..’
’மொட்டை மாடி இருக்கா’
‘ம்’
’பறவைகள் வருமா’
‘காக்கா வரும்’
‘உனக்கு அதுவே அதிகம்..’
‘கலாய்ச்சுட்ட..’
‘சரி.. கெளம்புறதுக்கு முன்னால கொஞ்சம் சாதம்.. இல்ல அரிசி.. வாயகன்ற பாத்திரத்துல தண்ணி வச்சுட்டு போயேன்..’
‘எதுக்கு’
‘சொன்னா செய்யேன்’
செய்தேன். ஓரிரு காக்கைகள் என்னை உற்றுப் பார்த்தன. என் மீதான அவநம்பிக்கை அதன் கண்களில். நான் நகர்ந்ததும் பறந்து வந்து முகர்ந்தன. கொத்தி கீழே தள்ளியது ஒன்று.
சொன்னேன் அவளிடம்.
‘நீ சொன்னேன்னு செஞ்சேன்.. எனக்கு நோஸ் கட்’
‘பரவாயில்ல.. தொடர்ந்து செய்’
இன்று.. இரு வருடங்களுக்குப் பின்.. எனக்கு எத்தனை பறவை ஸ்நேகிதங்கள்.. சிட்டுக் குருவிகள்.. புறாக்கள்.. காகங்கள்..
வெளியூருக்குப் போகும் நாட்களில் மனசு தவித்துப் போகிறது.
திரும்பி வந்ததும்.. மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது.
முகம் திருப்பி கோபமாய் அமர்ந்திருக்கும் பறவைக்கு அருகே பறந்து போய் அமர்ந்து கெஞ்சத் தோன்றுகிறது.
அவைகள் உணர்வுபூர்வமானவை.. நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்.. அந்த நேசம் அப்புறம் எந்த காரணத்தினாலும் மாறுவதேயில்லை.
இப்போதும் என்னுள் அதே கோபங்கள்.. குமுறல்கள்.. ஆனந்தம்.. எல்லா
உணர்வுகளும்தான். ஆனால் அவற்றைப் பகிர விண்வெளி சிநேகிதங்கள் உண்டு
இப்போது என்னருகே.
எனக்கு இறக்கை ஒட்டிக் கொடுத்த சிநேகிதிக்கு ... :)