March 29, 2011

என் மேல் விழுந்த மழைத்துளியே 3

"உங்க மாமனார் நம்பர் இருக்காடா" என்றான் ஒரு நாள்.

நானும் யதார்த்தமாய்க் கொடுத்துத் தொலைத்து விட்டேன்.

புவனி அப்புறம் சொன்னாள்.

"உங்க ஃப்ரெண்ட் சரியில்லீங்க"

"ஏன்.. என்ன ஆச்சு"

"எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி விஜயாகிட்டே பேசணும்கிறார்"

"யார் விஜயா"

"அதான் எங்க பக்கத்து வீடு.. அவர் தொந்திரவு தாங்காம அவங்க வீட்டு நம்பரைக் கொடுத்துட்டோம்.. நேரங் கெட்ட நேரத்துல எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணதால"

தலையில் அடித்த்துக் கொண்டேன்.

"ஏம்மா அப்படி பண்ணே.. "

"நீங்க வேற.. நான் கொடுக்காட்டியும் விஜியே கொடுத்திருப்பா"

அப்புறம் விஜயாவின் கதையைச் சொன்னாள்.

அவளுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். இரண்டும் எப்போதும் ஏதாவது உடல் நலக் குறைவால் அவதிப்படும் ஜீவன்கள்.

விஜயாவின் கணவனுக்கு நல்ல வேலை இல்லை. குடிப் பழக்கம் வேறு. எந்தக் கம்பெனியிலும் பொருந்தி இருக்க மாட்டான்.

இத்தனைக்கும் விஜயாவும் அவனும் காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள்.

விஜயா அவனை இப்போதும் குறை சொல்வதில்லை.

'அவர் நல்லவர்தான்.. பாரேன்.. ஒருநா இல்லாட்டி ஒருநா எங்க கஷ்டம் விடிஞ்சுரும்' என்பாளாம் புவனியிடம்.

'இப்ப கணேசன் அவங்க வாழ்க்கையில நுழைஞ்சிருக்கார்.. என்ன ஆவப் போவுதோ' என்றாள் புவனி கவலையாய்.

என்னிடம் பொறுப்பு கட்டினாள்.

"பேசுங்க உங்க ஃப்ரெண்டுகிட்டே.."

கணேசனைப் பிடிப்பதுதான் பெரும்பாடாய் இருந்தது. அலுவலகம் போனால் ஆள் இல்லை. அவன் வேலைப்படி அடிக்கடி வெளியே போகலாம். கஸ்டமர் விசிட், ஃபாலோ அப்.. இத்யாதி.

எந்த கஸ்டமரையும் பார்த்த மாதிரி தெரியவில்லை.

புவனி எப்போது பேசினாலும் 'உங்க ஃப்ரெண்ட் வந்திருந்தார்..பக்கத்து வீட்டுக்கு' என்பாள்.

ஒரு வழியாய் அவனைப் பிடித்து விட்டேன்.

"உன்னோட பேசணும். ரொம்ப அர்ஜெண்ட்"

"இப்ப எனக்கு நேரம் இல்ல"

"கணேஷ்.. பி சீரியஸ்.. நான் உன்னோட பேசியே ஆகணும்" அரைமனதாய் சம்மதித்தான்.

ரெஸ்டாரண்ட் மூலையில் அமர்ந்தோம்.

"கணேஷ் நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா"

"எது"

"நடிக்காதே.. விஜயா பத்தி கேட்கறேன். அவங்க வீட்டுக்கு நீ அடிக்கடி போறே.. அவ கல்யாணமானவ.. ரெண்டு பெண் குழந்தை இருக்கு" கணேசனிடம் எந்த பதற்றமும் இல்லை.

சிரித்தான்.

"நீ என்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கே.. நான் எப்ப போனாலும் அவங்க புருஷன் இருக்கறப்பதான் போறேன். இன் பாக்ட் இப்ப என்னோட ஃப்ரெண்ட் அவங்க புருஷந்தான்"

விஜயாவை அவன் 'அவங்க' என்றே சொன்னது திகைப்பாய் இருந்தது.

"எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.. ஆனா அவங்க வாழ்க்கையில எந்தப் பிரச்னையும் வர அளவு மோசமா நடந்துக்குவேன்னு சொன்னேனா.. அவங்க புருஷன்கிட்டே பேசி இப்ப அவரை டிரீட்மெண்ட்டுக்கு அழைச்சுகிட்டு போறேன். அது மட்டுமில்லே.. அவர் ஓரளவு கண்ட்ரோலுக்கு வந்ததும் நல்ல வேலை பார்த்துத் தரப் போறேன்.. அப்புறம் அவங்க குழந்தைகள் படிப்பு செலவு என்னோடதுன்னு சொல்லிட்டேன்.. வருமானம் இல்லாம நல்ல சாப்பாடு இல்லாம இளைச்சுப் போச்சுங்க.. கடனா வச்சுக்குங்கன்னு வீட்டு சாமான் வாங்கிப் போட்டிருக்கேன்.."

நான் திறந்த வாய் மூடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன் வியப்புடன்.

"நான் நேசிச்சவ எனக்கே கிடைக்கணும்கிறது நல்ல ஆசைதான். ஆனா அதுக்கு சான்ஸ் இல்லாதப்ப, அவங்க நல்லா வாழணும்னு நினைக்கறேன்.. நிஜமாப் பார்த்தா, இப்ப என்மேல எனக்கே ஒரு மதிப்பு வந்திருக்கு.. என்னால தலை நிமிர்ந்து நிற்க முடியும்.. ஒரு நல்ல மனுஷனா.."

என் கண்களில் நீர் தன்னிச்சையாய் வழிந்தது.

நான் கேலி செய்தவன் இன்று என் முன் விசுவரூபம் எடுத்து நிற்கிறான்.

"அவங்க வீட்டுக்கு நான் போகறப்ப அவங்க புருஷன் இல்லேன்னா, அப்புறம் வரேன்னு சொல்லிட்டு வந்திருவேன்.. மறுபடி சொல்றேன்.. எனக்கு உருவமில்லாத அந்த அன்பு பிடிச்சிருக்கு.. வேற எந்த உள்நோக்கமும் இல்ல.. என் மனசுக்குள்ள"

எனக்கு பேச்சு மறந்து போனது.

கணேசன் கைகளைப் பற்றி அழுத்தமாய்க் குலுக்கினேன். (ஹப்பாடா .. முடிச்சாச்சு !)



March 27, 2011

என் மேல் விழுந்த மழைத்துளியே 2

கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்க ஆரம்பித்தன. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும்!

இப்படி மொட்டையாய் சொன்னால் யாருக்குத்தான் புரியும்?

அன்று நடந்த சம்பவங்கள் திடுக்கிடும் திருப்பங்களுடன் இருந்தன. உள்ளே அலறல் கேட்டதும் ஓடினோம்.

அம்மா என்னிடம் சொன்னதற்கு நேர்மாறாக கணேசனை சம்மதிக்க வைக்க வழி இல்லாமல் பண்ணி விட்டான்.

"எனக்கு இந்தப் பொண்ணு வேணாம்."

பெண்ணின் அப்பாவுக்கு ஷுகர், பிபி எல்லாம் உண்டு என்று யாரோ உரக்கக் கிசுகிசுத்தார்கள்.

"வேணாம்.. அமைதியா இரு.." என்று திரும்பத் திரும்ப சொல்லி அவர் பிபியை அதிகப் படுத்தினார்கள். சொம்புத் தண்ணீருடன் ஒருவர் வந்து நின்றார், மயக்கம் போட்டால் அடித்து எழுப்புவதற்காக.

இந்த முஸ்தீபுகளைப் பார்த்து கணேசன் அம்மா மயக்கம் போட, சொம்பை அவர் மேல் ஊற்றினோம்.

"நான் இந்தப் பொண்ணுன்னு நினைச்சிட்டேன். இப்ப என்னால வேற ஒருத்திக்கு சம்மதம் சொல்ல முடியாது" என்று கீறல் விழுந்த ரிகார்டாய் கணேசன் சொல்லிக் கொண்டிருந்தான்.

வந்த பெண் முகத்தில் அசாதாரண நிம்மதி தெரிந்தது.

'தப்பிச்சோம்டா சாமி' என்று குல தெய்வ பிரார்த்தனை மனசுக்குள் ஓடுவது தொண்டை நரம்பு அசைவில் புலப்பட்டது.

கணேசன் அப்பா பெண்ணின் அப்பா காலைப் பிடிக்கிற பாவனையில் நின்று மன்னிப்பு கேட்டார்.

"ஊர் முழுக்க சொல்லிட்டோம். இன்னிக்கு நிச்சயம் ஆவுதுன்னு.. இப்ப எந்த மூஞ்சியை வச்சுகிட்டு நான் வெளியே போவேன்"

பெண்ணின் அப்பா சகிக்காத மூஞ்சியுடன் கேட்டார். பெண்ணின்

மாமா தோற்றத்தில் டிடயர்ட் போலீஸ் மாதிரி பலசாலியாய், பெரிய தொப்பையாய் ஒருவர் ஹூங்காரம் செய்தார்.

டிபன் காப்பி உண்டா இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவர் செய்த உறுமல் கணேசன் அப்பாவை மிரட்டிவிட்டது.

"தம்பி கொஞ்சம் வெளியே வா" என்றார் என்னிடம்.

நான் எதற்கு என்று புரியாமல் வெளியே போனேன்.

"தம்பி.. இந்த நிமிஷம் எங்க மானம் உன் கையில இருக்குப்பா.."

"வந்து.. நான்"

"இந்தப் பெண்ணை நீ கட்டிக்க சம்மதம் சொல்லு.. நான் வந்து உங்கப்பா, அம்மா கால்ல விழுந்து பர்மிஷன் வாங்கறேன்.."

அடப் பாவி மனுஷா.. நானா.. என்று மிரள்வதற்குள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே என்று மனப் பிசாசு சொன்னது.

"நான்.. நான்.." என்றேன் குழறலாக.

"நீ வா.. மத்ததை நான் பார்த்துக்கறேன்"

அடுத்த நிமிடம் சீன் மாறி விட்டது.

கணேசன் ஓரம் தள்ளப்பட்டு நான் நடுநாயகமானேன்.

கேசரி பஜ்ஜி சுடச் சுட என் முன் வைக்கப் பட்டது.

"அவளை வரச் சொல்லுப்பா"

என் கனவுக் கன்னி வந்தாள்.

"அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேளுங்க" என்றேன் பெரிய மனிதத் தோரணையுடன்.

காப்பி டம்ளரைத் தரும் போது விரலால் கிள்ளி விட்டுப் போனாள். ஒரு சிறுமி ஓடி வந்து ரகசியமாய் வீட்டு ஃபோன் நம்பரை துண்டு சீட்டில் எழுதித் தந்துவிட்டுப் போனது.

"அப்புறம் என்ன.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சே.. "

யாரோ உரக்கச் சிரித்தார்கள். பெண்ணின் அப்பா (ஷுகர்?) கேசரியை இன்னொரு தடவை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். பஜ்ஜி பொன்முறுவலாய் ஒரு ஃபுல் பிளேட்டைக் காலி செய்து சர்க்கரை தூக்கலாய் ஸ்ட்ராங்க் காப்பியும் இறங்கியது.

"புவனி கல்யாணம் முடிஞ்சாச்சு. இனிமே எனக்கு என்ன ஆனாலும் சரி" என்று கத்தினார் மகிழ்ச்சியாய்.

கணேசன் தான் பாவம். அவன் ரசித்த பெண்ணை மறுபடி பார்க்கத் தவித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு அவன் பக்கம் திரும்ப நேரமில்லை. புவனி.. புவனேஸ்வரி.. என்று ஜபித்தபடி குத்து மதிப்பாய் அவள் வரக் கூடிய திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கிளம்புமுன் ஒரு தடவை தரிசனம் கிடைத்தது.

காரில் வரும் போதுதான் பயம் பீரிட்டுக் கிளம்பியது. என் வீட்டில் என்னை வெட்டிப் போடப் போகிறார்கள்.

'அந்தாள்தான் சொன்னா உனக்கு அறிவு எங்கே போச்சு..'

சரமாரியாய் சாடப் போகிறார்கள். பயந்து கொண்டே போனால் ஊரில் எதிர்பாராத திருப்பம்.

'நம்ம வீட்டுக்கு ஒருத்தி வர வேளை.. உந்தங்கச்சிக்கு உடனே முடிஞ்சிருமாம்.. பூசாரி சொன்னார்டா'

வாழ்க பூசாரி.

"என்னால எதுவும் பேச முடியலம்மா"

"போவுதுரா.. எப்படியோ நல்லது நடந்தா சரி"

அப்புறம் நான் இல்லாத நேரம் அப்பாவிடம் சொன்னார்களாம்.

'இவன் சரியான திருடன்.. லேட் ஆவும்னு இப்படி ஏற்பாடு செஞ்சிருப்பான்.. உங்க புள்ளை அப்படியே குணத்துல உங்க சில்மிஷத்தோட பொறந்திருக்கான்'

அப்பா பாவம் எதுவும் பேச முடியாமல் எனக்காக வாங்கிக் கட்டிக் கொண்டாராம்.

இங்கே ஒரு பக்கம் என் கல்யாண வேலைகள் நடக்க, இன்னொரு பக்கம் கணேசனின் போராட்டம்.


(அடுத்த பதிவுல நிச்சயமா முடிச்சிருவேன் !)


என் மேல் விழுந்த மழைத்துளியே

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஞாயிறு காலை பத்து மணிக்கு கைபேசி சிணுங்கியது. அலாரம் என்று நினைத்து அணைத்து விட்டு திரும்பிப் படுத்தேன். மறுபடியும் அழைப்பு.



"யா..ழு"


"டேய்.. எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்"


கணேசனின் குரல் பயங்கர டெசிபலில் கேட்டது. அவ்வளவுதான். தூக்கம் கலைந்து விட்டது.


"டேய்.. வேணாம்டா" என்று சொல்ல முயற்சிப்பதற்குள் கணேசன் மறுபடி அலறினான்.


"ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" வைத்து விட்டான். போச்சு. ஒரு லீவு நாள் அவுட். அதை விடவும் கொடுமை அவனுடன் பெண் பார்க்கப் போவது. விஷம், துப்பாக்கி, தூக்குக் கயிறு, கணேசனுடன் பெண் பார்க்கப் போவது இதில் எது கொடுமை என்றால் கணேசன்!

ஒவ்வொரு தரமும் என்னை ஏண்டா கூப்பிடறே என்று கேட்டதற்கு சிரிக்காமல் சொன்னான்.

'என்னை விட சுமாரா ஒருத்தன் பக்கத்துல இருந்தாத்தான் நான் அழகாத் தெரிவேன்'

மாடிப் போர்ஷனை என்னை மாதிரி நாலு பிரம்மச்சாரிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் எங்கள் ஹவுஸ் ஓனர் பாட்டி.

கணேசன் என்னிடம் எங்கே குடியிருக்கே, யார் ஓனர் என்கிற விசாரணையை நடத்தியபோது ஓனர் பெயர் 'சந்திரா' என்றதும் 'அழகா இருப்பாங்களா' என்றான் அவசரமாய்.

'இருந்திருப்பாங்க'

'புரியலியே'

'இப்ப 77 வயசு. பையன் ஸ்டேட்ஸ்ல.'

அவனுக்குக் கல்யாணம் ஆகாத வருத்தத்தை விட அவனைச் சேர்ந்த நண்பர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது அவனைச் சங்கடப் படுத்தியது. கொஞ்ச நாட்கள் கிரகங்களின் பெயரிலும், பிறகு வீட்டார் பேரிலும் அப்புறம் அவன் பெண் பார்த்த வீட்டார் பேரிலும் பழியைப் போட்டான்.

ஒரு முறை நானும் அவனும் மட்டும் இருந்தபோது கண் கலங்கிப் பேசினான்.

'என்னன்னே தெரியலடா. எனக்கு எதுவுமே அமைய மாட்டேங்குது. போராட வேண்டியிருக்கு.. பாரேன். பொண்ணு பார்க்கப் போனாக் கூட தகராறு.. ஏதோ காரணம் சொல்லி தட்டிக் கழிக்கறாங்க'

நான் சொன்ன சமாதானங்கள் அவனுக்கு திருப்தி தரவில்லை. என் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

'பிளீஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா.. மாட்டேன்னு சொல்லிராதே' எதைக் கேட்டு தொலைக்கப் போகிறான் என்று புரியாமல் பதற்றமாய் இருந்தேன் அப்போது.

'எனக்கு செட்டில் ஆகறவரை நான் பொண்ணு பார்க்கப் போகும்போது எனக்கு கம்பெனி கொடுக்கறியா.

.' ஹப்பாடா. எனக்கு பெருமூச்சு வந்தது.

'ச்சீ.. அசடு மாதிரி பேசாதே. சீக்கிரமே பாரு.. குட் நியூஸ் சொல்லப் போறே' என்று சொல்லி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

அப்போது கொடுத்த வாக்குறுதி மீறாமல் கூடவே போக வேண்டி இருக்கிறது. கணேசனுடன் கூடப் போனதில் எனக்கே கல்யாண ஆசை வந்து விட்டது. அப்புறம் என் தங்கைகள் ஞாபகம் வந்து மனதைக் கட்ட வேண்டியிருந்தது. இந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது அம்மா கேட்டார்கள்.

'அப்படி இப்படி மனசு போகாம பார்த்துக்கடா தம்பி.. புவனியும் செல்வியும் எப்பவும் மனசுல இருக்கட்டும்'

எதிரில் தங்கைகள் இருவரும் பவ்யமாய் நின்றார்கள். அவனவன் த்ரிஷா, நயன் தாரா, நமீதா என்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் 'புவனேஸ்வரி, செல்வி' என்றால் 'எந்தப் படத்துல வராங்க' என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.


நேரம் ஓடியதே தெரியவில்லை. கணேசன் வந்து கதவைத் தட்டும்போது எனக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

"ரெடியா"

"ரெண்டே நிமிஷம்"

அவனுக்குத்தான் அழகு பற்றி கவலை. எனக்கென்ன. ஏதோ ஒரு பேண்ட், ஷர்ட். கூடப் போய் மையமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தால் போதும். ஓசியில் டிபன் காப்பி கிடைத்து விடும்.

போனதடவை சாப்பிட்ட உருளைக் கிழங்கு போண்டாவின் டேஸ்ட் இப்போது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறுகிறது.

கால் டாக்சியில் வந்திருந்தான்.

"பர்ப்யூம் வேணுமா" என்றான்.

காருக்குள் அந்த வாசனைதான். டிரைவருக்கு அருகில் முன்னால் நான் உட்கார பின்னால் வசதியாய் கணேசன்.

"அவங்களை நேரா வரச் சொல்லிட்டேன்." என்றான் வீட்டாரைக் குறித்து. "போட்டோ இருக்கா" என்றேன் என்ன பேசுவது என்று புரியாமல்.

கொட்டாவி வந்தது பேசும்போதே. கவருக்குள் பத்திரப் படுத்தி வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். குரூப் போட்டோ.

"இதுல யாரு"

விரல் நீட்டி அவன் காட்டிய பெண் சுமாராய் இருந்தாள். அவளுக்கு அருகில் 'வாவ்' என்று சொல்ல வைத்த ஒரு பெண்.

"இ..து யாரு" என்றேன் திக்கலாக.

"சொந்தமா.. ஃப்ரெண்டா தெரியல" என்றான் அலட்சியமாக.

"நம்ம செலக்ஷன் எப்படி" என்றான் ஆர்வமாய்.

"நல்லா இருக்காங்க"

இன்னொரு தடவை ஃபோட்டோவை வாங்கி பக்கத்து பெண்ணைப் பார்க்க ஆவல். ஆனால் கணேசனிடம் கேட்க கூச்சம்.

பெண் வீடு வந்து விட்டது. புறநகர்ப் பகுதியில் வீடு. கணேசனின் அப்பா, அம்மா இன்னும் வரவில்லை. பெண்ணின் அப்பா சொன்னார்.

'அந்த நாள்ல வாங்கிப் போட்டேன்.. இப்ப கிரவுண்ட் விலை எக்கச்சக்கம்.. நான் வாங்கினப்ப என்ன விலை இருந்திருக்கும்னு நினைக்கிறீங்க"

புதிர் போட்டார்.

கணேசன் 'பெண்' தெரிகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்க, பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு வந்து விட்டது.

"ரெண்டு லட்சம் இருக்குமா"

பெண்ணின் அப்பா மிகப் பெரிய ஜோக்கைக் கேட்ட மாதிரி சிரித்தார்.

"வெறும் இருபதாயிரம்.. நம்புவீங்களா"

தனி வீடு. மூலையில் கிணறு. கணேசனைப் பார்த்தபின் பெண் நேராக ஓடி வந்து குதித்து விடலாம். வேறிடம் தேடிப் போகும் சிரமம் இல்லை என்று குதர்க்கமாய் மனசில் தோன்றியது

மனசுக்குள் 'தப்பு' போட்டுக் கொண்டேன். வாசலில் கார் சத்தம் கேட்டது. கணேசனின் அப்பா, அம்மா வந்தாச்சு. கணேசன் அவசரமாய் சீப்பு எடுத்து சீவிக் கொண்டான்.

"எப்படிரா இருக்கேன்" என்றான் கிசுகிசுப்பாய்.

விரல் உயர்த்தி 'ஓக்கே' சொன்னேன். ஹாலுக்குள் சென்று அமர்ந்தோம். எனக்கு தொண்டைக் குழியில் ஏதோ அடைத்த உணர்வு. ஒவ்வொரு முறையும் இவனுக்காக வந்து, ஏதோ நானே நிராகரிக்கப் படுகிற மாதிரி சோகம், நடுக்கம் உடம்பில்.

சம்பிரதாயமாய் விசாரணைகள் முடிந்து பெண் வரும் நேரம். வந்தாள். கணேசன் ஃபோட்டோவில் சுட்டிக் காட்டியவள் இல்லை. நான் ரசித்த பக்கத்து பெண். பட்டுப் புடவையில் ஜொலிப்போடு வந்து நின்றாள்.

ஹா.. இவளா.. கணேசனுக்கா.. நான் தடுமாறித் திகைப்பதற்குள் கணேசன் குமுறினான் உரக்க.

"என்ன இது அநியாயம்.. வேற பொண்ணுல்ல இப்ப வராங்க"

அவனை அமைதிப் படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்

வந்த பெண் மிரண்டு உள்ளே ஓடி விட்டது. பெண்ணின் அப்பா சொன்னார். "தரகர்ட்ட போட்டோ கொடுக்கும் போதே சொன்னோம். சொதப்பிராதே. இவதான் பொண்ணு. இவ பக்கத்து வீடுன்னு. மாத்தி சொல்லிட்டான் படுபாவி" நான் கணேசனை வெளியே அழைத்துப் போனேன்.

"இப்ப என்னடா.. அவ இல்லேன்னா.. இவ.. பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்கா.. அதைச் சொல்லு"

கணேசன் முகத்தில் இறுக்கம்.

"எப்படிரா.. நான் அந்தப் பொண்ணுன்னு நினைச்சு என் மனசுல ஆசை வளர்த்துட்டேன்.. இப்ப அவ இல்ல.. இவன்னா என்னால எப்படி தாங்கிக்க முடியும்"

'ஏண்டா லூசு.. முப்பது பொண்ணு பார்த்தாச்சு.. அப்ப ஒவ்வொரு தரமும் இதே மாதிரி நினைச்சிருந்தா?' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு சொன்னேன். "சரிடா.. ஏதோ கம்யூனிகேஷன் கேப். இப்ப என்ன.. உனக்கு இந்தப் பொண்ணு ஓக்கேதானே"

கணேசன் முகம் இறுக்கமானது.

"முடியாதுரா.. இவ எனக்கு வேண்டாம்"

"அவங்களுக்கு என்ன பதில் சொல்றது.."

"என் மனசுல விழுந்த பொண்ணு.. கிடைச்சா"

எனக்கு பதற்றம் அதிகமானது. "அது எப்படிரா முடியும்.. அவ புருஷன் ஒத்துக்க மாட்டானே"

உளர ஆரம்பித்தது புரிய உதட்டைக் கடித்துக் கொண்டேன். கணேசன் அம்மா வெளியே வந்தார்கள்.

"என்ன சம்மதிச்சுட்டானா"

"இல்லம்மா.. என்ன சொன்னாலும் அடங்க மாட்டேங்கிறான்"

அம்மாவின் கண்களில் நீர்.

"அப்பவே பூசாரி சொன்னாரு.. கிரகம் சரியில்ல.. இவன் புத்தி தறி கெட்டு போவும்னு. இந்த வரன் பார்க்கலாம்னு முடிவு ஆனதும் சந்தோஷமா இருந்தேன்.. பாவி மண்ணள்ளி போட்டுட்டான்"

பெண்ணுடைய அப்பா பதறிப் போய் வந்தார்.

"உங்க கண்ணுல மண்ணு விழுந்திருச்சா.."

அவரை சமாளித்து உள்ளே அனுப்புவதற்குள் திண்டாட்டமாகி விட்டது. கணேசனையும் சேர்த்து அனுப்பினோம்.

கணேசன் அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டார்.

"எப்படியாச்சும் அவனை சம்மதிக்க வச்சுருப்பா.. உனக்குக் கோடி புண்ணியம்"

நான் தயங்கினேன்

"உள்ளே வாங்க"

அதற்குள் உள்ளிருந்து அலறல் கேட்டது. பதறிக் கொண்டு ஹாலுக்கு ஓடினோம்.


... தொடரும்

March 23, 2011

பூக்கும்


பொதுவாய் எரிந்து விழுகிற நடத்துனர்களைத் தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் வேலை அப்படி.. நாள் முழுவதும் அதுவும் எரிச்சலூட்டுகிற உடை.. வெய்யில்.. யாருக்குமே பொறுமை பறிபோகும்.

இன்று மாலை வீடு திரும்பும்போது பஸ்ஸில் கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டை கொடுத்த டீன் ஏஜ் பையனிடம் திருப்பிக் கொடுத்து விட்டு 'வேற கொடு' என்றார்.

அவனிடம் வேறு சில்லறை இல்லை. டிக்கட்டும் தந்தாகிவிட்டது.

அவன் டிக்கட்டை திருப்பிக் கொடுக்க பார்த்தான்.

'வச்சுக்க'

அவ்வளவுதான். எதுவுமே நடக்காதது மாதிரி போய் விட்டார். செக்கரிடம் அவன் மாட்டக் கூடாது என்பதற்காக டிக்கட் !

நிலைமையை மிக அழகாய் அவர் கையாண்ட விதம் எனக்கு பிடித்துப் போனது.

இரைச்சலே நமது தேசிய கீதமாய் மாறிப் போன சூழலில் சிரிப்பும் நிதானமும் எவர் வசம் உள்ளதோ அங்கு இயல்பாய் மனம் லயித்துப் போகிறது.

தினசரி யாராவது ஏதாவது ஒன்றை கற்று கொடுத்து விடுகிறார்கள். அல்லது நினைவு படுத்துகிறார்கள்.

உதிர்ந்த மலர்கள்

இருந்த இடமாய்

அந்த பூச்செடி!

காற்றில் மிதக்கும் வாசம்..

மறுபடி பூக்கும் என

மனசுள் நம்பிக்கை பூக்கும்..

எதுவும் வீணாவதில்லை..

பூவும்

நம்பிக்கையும்..

March 20, 2011

சிவக்குமார்

" திருப்பதி போலாம்னு இருக்கேன்.. வரியா”
சிவா என்கிற சிவக்குமாரின் கேள்வி. என்னைப் பார்த்து.
வெறுமையாய் இருந்த சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்து தலையசைத்தேன்.
வற்புறுத்தி அழைத்துப் போனான்.
கீழிருந்து மேலே நடந்து போய் தரிசனம் செய்தோம். திரும்பும்போது அவன் ஊருக்கு அழைத்துப் போனான். பெற்றோர் அங்கே. இவன் மட்டும் மாமா வீட்டில் தங்கி படிப்பு. சிவா என் பள்ளி/கல்லூரி சினேகிதன்.
குளிக்கப் போய் விட்டு திரும்பியபோது கூடத்தில் ஆணியில் தொங்கிய என் சட்டைப் பையில் கைவிட்டு அவன் நின்றதைப் பார்த்து விட்டேன்.
‘பணம் இல்லை’ என்று சொன்னதை நம்பவில்லையா..
கவனிக்காதது போல வந்தேன். உணவருந்தி விட்டு கிளம்பினேன். பஸ் ஸ்டாண்டில் கொண்டு வந்து விட்டான்.
“லீவு முடிஞ்சு ஊருக்கு வரேன்”
பஸ் கிளம்பியதும் சட்டைப் பையை பார்த்தேன். ஐம்பது ரூபாய்த் தாள். என் பஸ் செலவுக்கு அவன் எனக்குத் தெரியாமல் வைத்தது.
அவனுக்கு ஒரு கால் சற்றே கோணல். மாமா ஜவுளிக் கடை. அவர் வீட்டில் தங்கிப் படிப்பு என்பதால் மாமாவின் அதிகாரம் அவன் மீது.
அவன் அவரை டபாய்ப்பது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதம்.
சினிமா என்றால் உயிரை விடுவான். தேவி தியேட்டரில் அவன் படம் பார்ப்பது தனி ஸ்டைல்.
முதல் நாள் டிக்கட் வாங்கி இண்டர்வெல் வரை படம் பார்த்து விட்டு வந்து விடுவான். மறு நாள் மறுபடி டிக்கட் வாங்கிக் கொண்டு வந்து விட்டு இடை வேளைக்குப் பின் போவான். தியேட்டர் வாசலில் நிற்பவரைக் ‘கவனித்து’ விடுவான்.
சில நேரங்களில் முழு படமும்! அதாவது இரவுக் காட்சியில். திண்ணையில் படுப்பதாக சொல்லி விட்டு தலையணையை போர்வையால் போர்த்தி விட்டு போய் விடுவான்.
ஒரு நாள் பயங்கர மழை அடித்து அவன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி விட்டது. திண்ணையில் சாரல் அடிக்கப் போகிறது என்று தாத்தா வந்து அவனை எழுப்பினால்.. உள்ளே ஆள் இல்லை.
ஒரு மணிக்கு சினிமா முடிந்து வந்தவனுக்கு அடுத்த ஷோ காத்திருந்தது!
வருடம் முழுக்க இப்படி படிப்பை கோட்டை விட்டு இறுதி நாட்களில் தேர்வுக்கு முதல் நாள் படிப்பான். கூடவே நாங்களும்.
தூக்கம் விழிக்க மாத்திரை இருக்கு என்று அவன் தான் சொல்லி வாங்கிக் கொண்டு வந்திருந்தான். இவன் என்ன சொன்னானோ.. கடைக்காரர் என்ன புரிந்து கொண்டாரோ.. மாத்திரையைப் போட்டதும் சுகமாய் ஒரு தூக்கம் சுழற்றி அடித்து, முதல் நாள் இரவு பதினொரு மணி வரை படித்தது போக, அன்று ஒன்பது மணிக்கே கட்டையை நீட்டியாகி விட்டது.
சவுக் - பழைய புத்தகங்களின் வாசஸ்தலம். தில்லானா மோகனாம்பாள் தொடராய் வந்தது.. கோபுலுவின் படங்களோடு.. இரண்டு வால்யூமையும் பார்த்து நான் சட்டைப்பயை தடவ.. உடனே பணத்தை எடுத்துக் கொடுத்து வாங்கச் சொன்னவன்.
நேஷனல் காலேஜின் வாசலில் கூட்டம் நின்றால் அன்று காலை ஏதோ ஸ்ட்ரைக் என்று அர்த்தம். அவ்வளவுதான். பதினொரு மணி ஷோவுக்கு பிளாசா போய்விடுவோம். பட் ஸ்பென்ஸர்.. டெர்ரன்ஸ் ஹில், சார்லஸ் பிரான்சன்.. என்று பெயர்கள் அப்போதுதான் அறிமுகம். ஒரு படம் விட்டதில்லை.
இப்படி ஒரு முறை ‘நிஜம் செப்பிதே நம்மரு’ (உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்) ஒரு மாதிரி தெலுங்குப் படம் பார்க்க அழைத்துப் போனான்.
‘வேணாம்டா’ என்று மறுத்துக் கொண்டே, அங்கங்கே கறுப்பு பெயிண்ட் அடித்த போஸ்டர் பார்த்து உடம்புக்குள் அநேக திரவங்கள் சுரக்க கொஞ்சம் பயம் கொஞ்சம் ஆர்வமாய் போனோம் அவனுடன்.
டிக்கட் வாங்கிக் கொண்டு விளக்கணைத்ததும் உள்ளே அழைத்துப் போனான்.
‘யாரும் பார்க்காமல் இருக்க முன்னேற்பாடு’
இடைவேளையில் அந்த குண்டைத் தூக்கிப் போட்டான்.
‘முன் சீட்டுல எங்க மாமா’ என்றான்.
‘அய்யோ.. ஓடிரலாமா’
‘சும்மா இரு.. இதுவரைக்கும் எந்த சீனும் வரல’
’பயம்மா இருக்குடா இதுக்குதான் நான் அப்பவே வரலைன்னேன்’
‘இதே பயம் அவருக்கும் இருக்கும்டா..’ சிரித்தான்.
‘நான் வீட்டுல சொல்லிருவேன்னு. கடையை விட்டுட்டு அவர் ஏன் இங்கே வந்தார்’
மாமா இவனைப் பார்த்த அதிர்ச்சியில் இடைவேளையுடன் ஓடிப் போக.. நாங்கள் முழுப் படமும் பார்த்தோம். பாவி.. போஸ்டரில் மட்டும் பீதி கிளப்பி.. தியேட்டரில் கடைசி வரை எதுவுமே காட்டவில்லை! படத்தை ஓட்ட அது ஒரு டெக்னிக் என்று பின்னால் புரிந்தது.
கல்லூரிப் படிப்பு முடிந்து (அவன் பிஏ.. நாங்கள் பிகாம்) அவரவர் திசையில் போனோம். அவனுக்கு படிப்பு ஒரு அடையாளத்திற்கு மட்டும். ஊருக்குப் போய் ஜவுளிக்கடையைப் பார்த்துக் கொண்டான். திருமணத்திற்குப் போனோம்.
எனக்கும் வேலை கிடைத்து மாற்றலாகி திரும்ப யதாஸ்தானம் வந்து.. எனக்கும் அவனுக்குமான கடிதப் போக்குவரத்தும் நின்று.. இடைவெளி இரண்டு வருடங்கள்!
அவன் மாமா வீட்டைக் கடந்துதான் நான் எப்போதும் போக வேண்டும். அவர் வீட்டில் மற்றவர்கள் எல்லாம் ‘தம்பி’ என்று பிரியமாகப் பேசுவார்கள். இவரைப் பார்த்தால் மட்டும் தலை குனிந்து ஸ்தலத்தை விட்டு வேகமாய் ஓடி விடுவேன்.
அவன் அக்கா, அவர் மகள் நின்றிருந்தார்கள். சிரித்தார்கள்.
“நல்லா இருக்கியாப்பா”
“ம்.. எங்கே சிவாவைக் காணோம்.. ரொம்ப நாளாச்சு”
“தெரியாதாப்பா”
என்ன சொல்றாங்க..
“அவன் போயி ரெண்டு வருஷமாச்சு”
பவர் கட் நேரத்தில் இவன் டிவி பின்னால் போய் பிளக்கை எடுத்து ஏதோ செய்ய முயலும்போது திடீரென கரண்ட் வந்துவிட..
“உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன்பா.. எப்படியோ விட்டுப் போச்சு..”
இரண்டு வருஷமாய் அவன் போனது கூடத் தெரியாமல்..
அவர்களிடம் எதுவும் பேசக் கூடத் தோன்றாமல் அப்படியே நான் வந்த வேலை மறந்து வீட்டுக்குத் திரும்பிப் போய்..
‘என்ன ஆச்சுடா..’
அந்த அழுகை இன்றும் கூட நிற்கவில்லை எனக்கு.

March 14, 2011

யோசித்தால்..

"தாத்தா காலை வலிக்கிறது.. "

"கோவிலுக்கு வந்துட்டு கால் வலின்னு சொல்லலாமாடா “

"ஆனா வலிக்குதே "

"சரி.. ராமா ராமா ன்னு சொல்லு.. வலி போயிடும்.."

"தாத்தா .."

"என்னடா.."

"அம்மாவும் எப்பவும் ராமா ராமா ன்னு தான சொல்லுவா "

"..."

"அப்புறம் ஏன் செத்துப் போனா .. அதுவும் வலி தாங்க முடியாம.."

தாத்தா ஏன் பேசாமல் நிற்கிறார்.. பேரனுக்குப் புரியவில்லை..

========

அலுவலக வாசலில் உள்ளே நுழையும் போது அவனைப் பார்த்தேன் .. கூட வந்த

நண்பர்களுக்கு வேடிக்கை காட்ட .. சுவரில் தேமேன்னு இருந்த பட்டாம்பூச்சியை

கையில் பிடித்தான்.

'இதோ பாருங்கடா .. '

அதே நேரம் அவன் பார்வை என் மீதும்..

'விட்டுருப்பா..'

அவ்வளவுதான் சொன்னேன்.. அது மறுபடி சிறகடித்து போனது..

======

எனக்கு ஜோசியங்களில் நம்பிக்கை இல்லை.. கடவுள் உழைப்பவனுக்குத்தான் உதவுகிறார் என்று யோசிக்கிற ரகம்.

திருமணம் தடைப்பட்டு போனது என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த அலுவலக சிநேகிதியின் ஜாதகத்தை நான்கு மாதங்களுக்கு முன் வாங்கிப் போனேன் .

என் தெருவுக்கு அடுத்த தெருவில் அவர் இருக்கிறார்.

ஜாதகம் பார்த்து மார்ச் நாலாம் தேதிக்குள் வரன் செட்டிலாகும் என்றார். எழுதியும் கொடுத்தார்.

ஐந்தாம் தேதி அந்த சிநேகிதி சொன்னார்.. நேற்று அவரைப் பெண் பார்த்ததாகவும் வந்தவர்கள் விரைவில் நிச்சய தேதி சொல்வதாகவும்..

காக்கை உட்கார பனம் பழமா.. இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த திருமணம் சொன்ன தேதிக்கு செட்டிலானதில் எனக்கும் மகிழ்ச்சிதான்..

======

எனக்கு வண்ணக் கனவுகள்

வேண்டியதில்லை..

வரம் தரும் கடவுள்

அவர் வேலையைப் பார்க்கட்டும்..

சாகா நிலை கூட

சாத்தியமில்லை என்றே புரிகிறது..

ஆனாலும்

வாழ்வே போராட்டமாய் சிலரும்..

வழிப்பறிக்காரராய் சிலரும்..

தீர்க்காயுசு கொடுத்த இயற்கை ,

என்ன யோசித்தது

நல்ல ஆத்மாக்களை மட்டும்

சீக்கிரமாய்

அழைத்துப் போகும் போது..?

‘விட்டு வைத்தால்

துன்பப்படுவார்கள் என்றா?!’

March 10, 2011

பெயர்

ஒரு முறை கூட
நீ என் பெயரை
உச்சரித்ததில்லை..
'ஏய் ' தான் எப்போதும்.
பள்ளி நாட்களில்
'மூக்கொழுகி' என்று
கொஞ்ச காலமும்
வேப்பெண்ணை என்று
சில நாட்களும்..
'டி இவளே '
என்று சிநேகிதிகளும்..
ஏதோ ஒரு தேவதையின்
ஆசிர்வதிக்கப் பட்ட
நேரத்தில்
'ஹை ஸ்வீட்டி '
என்று ஒரு அற்ப நாள் காதலனும்..
இப்போது சொல்..
'புவனேஸ்வரி '
அல்லது 'புவனா '
என்கிற என் பெயரை
மறக்கடித்த
உங்களை எல்லாம்
எந்த சுண்ணாம்பு காளவாயில்
போடலாம்?

உபதேசம்


அண்ணாமலை கண்ணுக்கு தெரிந்தது. இங்கேதான் 'விசிறி சாமியார்' இருக்கிறார்.

'அவர்ட்ட போ.. உன் குழப்பத்துக்கு பதில் கிடைக்கும்'

வந்து விட்டான். 'வாசல் கதவைத் தட்டு மெதுவா.. அவருக்கு உன்னைப் பார்க்கணும்னு தோணினா எழுந்து வந்து கதவைத் திறப்பார் '

நாதாங்கியை மிக மெலிதாக தனக்கே கேட்காத நிதானத்தில் ஆட்டினான்.

அந்த சில வினாடிகள் ..



முன்பு இராமகிருஷ்ண மடம் போய் ஒரு இரவு தங்கி விட்டு பிறகு திரும்பி வந்தது நினைவில் வந்தது. மடத்தில் சாமியார் பரிவாகத்தான் பேசினார்.

'லெட்டர் எழுதி வச்சுட்டு வந்துட்டேன்.. எனக்கு துறவறம் பிடிச்சிருக்கு'

புன்னகைத்தார்.

'தங்குப்பா .. காலைல பேசிக்கலாம்.. என்ன சாப்பிடுற.. '

'சாப்பாடு ஆயிருச்சு'

அவனுக்கு ஒதுக்கிய அறையில் ஒரு அயல் நாட்டினரும்.

'எங்கிருந்து வருகிறாய்'

ஊர் பெயரை சொன்னான். குட் நைட் சொல்லி தூங்கி போனார்.

விடியலில் ஒரு கனவு. அவனை நெருப்பு சூழ்ந்து கொள்வதாக. அதிலேயே மாட்டிக் கொண்டு விலக முடியாமல்.

ஆரத்தி நேரம் .. மற்ற பிரமச்சாரிகளுடன் அவனும் பூஜையில் கலந்து கொண்டான்.

'நல்லா தூங்கினியா '

'ம்.'

'ஏதாச்சும் நடந்துதா'

'ஒரு கனவு சுவாமி'

சொன்னான்.

'ஊருக்கு போ .. வீட்டில் சொல்லி விட்டு வா.. '

திரும்பி வந்தவனை பிடித்துக் கொண்டு உறவினர் அழுகை. கொஞ்ச நாட்கள் அப்படியே இருந்தான். இதோ மீண்டும் திருவண்ணாமலை..



அழகான சிரிப்பு.. அவர் புகைத்தபோது சிகரட் நெடி தெரியவில்லை.

'உனக்கு என்ன பிடிக்கும்..' என்று அன்பாய் விசாரித்தார்.

'என் தந்தை உன்னை ஆசீர்வதிக்கிறார்' என்றார்.

அவருடைய படம் கொடுத்தார். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை.

'எங்கே போகப் போகிறாய்'

'திருக்கோவிலூர்.. தபோவனம்..'

அனுப்பிவைத்தார்.

ஞானானந்தர் தபோவனம் சென்ற போது இருட்டி விட்டது. உணவுக் கூடத்தில் படுக்கச் சொன்னார்கள். காலை நான்கு மணிக்கு எழுந்து அதிஷ்டானத்தை நூற்றியெட்டு பிரதட்சிணம் செய்ய நினைத்திருந்தான். பயண அலுப்பு அவனை அப்படியே அசத்தி விட்டது. விடியலில் ஒரு கனவு. ஞானானந்தர் அவர் அறையில் இருந்து வெளியே வருகிறார். அவன் தலைப் பக்கம் வந்து கையைத் தட்டி ‘எழுந்திருக்கலாமே.. மணி நாலு ஆகிவிட்டது’ என்கிறார்.
திடுக்கிட்டு விழித்தால்.. ஹால் கடிகாரம் நாலு மணி அடித்தது!
நூற்றியெட்டு சுற்றி பிறகு ஊர் வந்து சேர்ந்தான்.

‘என்ன இன்னும் உன் அலைச்சல் விடலியா’
நண்பனின் கேலி.
‘ம்’
‘என்னதான் உன் முடிவு’
‘விசிறி சாமியார் சொன்னார்.. கல்யாணம் பண்ணிக்கோன்னு’
“ஓ”
‘இன்னிக்கு ஒரு கனவு..’
‘போச்சுரா.. என்னது’
‘கனவுல ஒரு சாமியார் எனக்கு உபதேசம் பண்ணார்..’
‘என்ன..’

“தாயை அறிந்து காண்
தந்தையை சொல்படி
தக்க குரு ஆத்ம நிவேதனம்
இஷ்ட தெய்வம் பூர்த்தி செய்யும்..”

நண்பன் பாதி புரிந்து பாதி புரியாமல் விழித்தான். இவனுக்கோ தனது ஆன்மத் தேடல் இன்னமும் தொடர்கிறது..





March 08, 2011

லைப்ரரி


ஸ்ரீரங்கம் முனிசிபல் அலுவலகம் அருகில் லைப்ரரி .. பூங்காவின் உள்ளே கடைசியாய் கட்டிடம்.

கல்லூரி நாட்களில் வாரந்தவறாமல் போய் புத்தகம் எடுப்பேன். அப்போது தெரியவில்லை .. பின்னொரு நாளில் என் புத்தகமும் அங்கிருக்கப் போகிறது என்று.

பூங்கா ஓய்வுபெற்றவர்களின் சுக வாசஸ்தலமும் கூட. குடை போல் கவிழ்ந்திருந்த இடத்தில் அடியில் சிமென்ட் பெஞ்சுகள். பெரும்பாலும் அரசியல் பேச்சு. அதை எந்த அரசியல்வாதியாவது கேட்டால் மானஸ்தனாய் இருந்தால் தொங்கி விடுவான் முழம் கயிற்றில். ஆனால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நமக்கு இல்லை.

அறுபது பிளஸ் இத்தனை ஆங்காரத்துடன் இருக்கலாமா .. என்கிற படபடப்பு வந்து விடும். பொறி பறக்க அவர்கள் பேசும்போது. பேசுகிற இருவரை மற்றவர்கள் வந்து விலக்கும் போது திமிறுகிற காட்சி கண்கொள்ளாதது.

'என்ன அப்பு .. இவ்வளோ கோபம்.. '

'பின்ன என்ன மசிருக்கு அவன் பேசுறான் '

'விடுங்க.. நாம பேசி என்ன ஆகப் போவுது'

'பேசுனா ஒரு நியாயம் இருக்கணும்'

மெல்ல இருட்டுத் திரை இறங்கும். எட்டு மணிக்கு மேல் அங்கிருக்க இயலாது. ஒவ்வொருவராய் எழுந்திருக்க மனதின்றி ஊர்ந்து போவார்கள்.

வீடு திரும்பியதும் அவர்களை ஒரு வெறுமை தாக்கப் போகிறது.. மறுநாளின் விடியலுக்காய் காத்திருக்கவேண்டும்.

மற்றவர்கள் நகர்ந்ததும் சண்டையிட்ட இருவரும் கடைசியாய் போவார்கள்.

கீழே மஞ்சள் சரக்கொன்றை சிதறி நடைபாவாடை விரித்திருக்கும். அதன் மணம் சற்று காட்டமாகவே மூக்கில் இறங்கும்.

ஒருத்தர் தடுமாற அடுத்தவர் கை பிடிப்பார்.

'ஏலே .. பார்த்து..'

'ம்..'

'கணேசனும் போயிட்டான்.. ஒரு வருஷம் பெரியவனா ? '

'ஆமா'

'போன வருஷம் ஆறு பேர் இருந்தோம்.. மார்கழி மாசம் கோபால் போனான்..'

'ம்'

கண்கள் மறைத்த அந்த அரை வெளிச்ச மயக்கத்தில் ஒருவர் இன்னொருவரை பார்த்து கசிந்தது அவரவர் மனசுக்கு மட்டுமே புரிந்திருக்கும்.

'போடா.. எதுக்கு நாம சந்திச்சு பழகினோம்.. இப்படி பொசுக்குனு பிரிஞ்சு போகவா'

வாசல் கேட்டு மூடி இருக்கும். சுழல் கதவில் நுழைந்து வெளியே வரும்போது கொஞ்சம் குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கும்.

'பென்ஷன் வாங்க என்னிக்கு போற '

'சொல்றேன்.. உன்னை விட்டு போக மாட்டேன்..'

இரு திசைகளில் பிரிந்து அவர்கள் போகும் போது ஆண் பெண் காதல் எல்லாம் சற்றே அலட்சியமாய் தெரியும்.. அப்போது!











March 06, 2011

கணினி மொழி

எனக்கான வார்த்தைகளை
தேடித் தேடி
புதுப் புது அனுபவங்களில்
எலியும் பூனையுமாய்
என் கணினியும் நானும்..
திருத்த முடியாத
தருணங்களில்
விட்டு விடுகிற
வார்த்தைகள்
நான் சொல்லாத அர்த்தம் காட்டி
பாராட்டும், விமர்சனமும்
வாங்கி தருகின்றன..
என்றைக்கேனும் ஒரு நாள்
என் மனசும்
எழுதுகிற கவிதையும்
ஒரே அலை வரிசையில்
வரக்கூடும்..
அன்று தான்
கவிதை குறித்த திருப்தி
எனக்குள்
கொடியேற்றி நிற்கும்.
அதுவரை
தேடலும் தவிப்புமாய்
என் கவிதைப் பயணம்..