பதிவர்கள் என்பது ஒரு அடையாளம் தான்..
அந்த விசிட்டிங் கார்டை கையில் வைத்துக் கொண்டு எந்த வீட்டுக்கும் போக முடியும்.. என்கிற ஆனந்தம் இந்த ஞாயிறு அன்று கிட்டியது.
வை.கோ. ஸார் என்கிற இளைஞர் திருச்சியில் இருக்கும் வரை இரண்டு பெருமைகள் திருச்சிக்கு உண்டு..
ஒன்று மலைக் கோட்டை.. இன்னொன்று அவர் !
சுறுசுறுப்பில் அவரை விஞ்ச ஆளில்லை !
4.59 க்குள் குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து விடுங்கள் என்று அன்புக் கட்டளை கொஞ்சம் மிரட்டலாக மெயிலில் அனுப்பி இருந்தார்.
அப்படியா சங்கதி என்று 4.30 க்கே போய் விட்டேன்.
அந்த குடியிருப்பு வாசலில் ஒருவர் விடாப்பிடியாய் என்னைப் பிடித்துக் கொண்டு ‘ஆட்டோகிராப் போட்டால்தான் ஆச்சு என்று அடம் பிடித்தார்.
அப்படியே உங்க மொபைல் நம்பரும் என்றார் இன்னும் பிடிவாதமாய்.
கடைசியாய் ஒரு கேள்வி,, ‘யாரைப் பார்க்க.. இப்ப என்ன நேரம்.. எப்ப போவீங்க.. எல்லாம் எழுதுங்க’ என்றார்.
ஹி..ஹி.. அன்னியர் வருகையைப் பதிவேட்டில் குறித்து தீவிர பரிசோதனைக்குப் பின் உள்ளே அனுப்பினார். ஏர்போர்ட்டில் கூட சுலபமாய்ப் போக முடிந்தது.
கொஞ்சம் பயபக்தியாய் படியேறினேன்.
இதே வீடுதான்.. ரெண்டாவது மாடி.. எல்லாம் சரி.. ஆனா உள்ளே ஆள் இருக்கிற சுவடே காணோமே.. தப்பா வந்தாச்சா..
நல்ல வேளையாய் செல் நம்பர் இருந்தது.
அந்த வீட்டு வாசலில் நின்று .. கண்ணுக்குத் தெரிகிற ஹாலுக்கு.. போன் செய்த சூப்பர்மேன் நானாகத்தான் இருக்கும்..
ரிங் போனது எனக்கே கேட்டது.. உள்ளிருந்து ஒரு பெண்மணி வந்து அந்த மொபைலை எடுத்து..
கதவைத் தட்டினேன். ‘நான் தான்’ என்று சைகை செய்தேன் அழைப்பைத் துண்டித்து விட்டு.
ஏற்பாடுகள் பலமாய் இருந்தன, முன்பே தகவல் கிடைத்திருந்ததால் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து ‘சாப்பாடு உண்டு’ என்று உறுதி செய்து கொண்டேன். பக்கத்திலேயே பெரிய சைஸ் பாக்கு மட்டைத் தட்டுகள்.
ருக்மிணி சேஷசாயி மேடம் மெல்ல வந்தார்.
வணக்கம் சொல்லிவிட்டு ரொம்ப சகஜமாய்.. ரொம்ப நாளாய்ப் பழகுகிற தோரணையில்.. ‘எதுக்கு சிரமம்.. சும்மா பேசிண்டு இருக்கலாமே.. டிபனெல்லாம் எதுக்கு’ என்று பேச்சை ஆரம்பித்தேன்.
‘இருக்கட்டுமே அது பாட்டுக்கு அது.. பேச்சு பாட்டுக்கு பேச்சு’ என்று பெருந்தன்மையாய்ச் சொல்லி என் வயிற்றில் பாலை வார்த்தார்.
(நிஜமாகவே பால் தான் கடைசியில் எனக்கு.. காப்பி வேண்டாம் என்றதும்)
அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையைச் சொன்னதும்
என் காலர் தானாகவே மடங்கிக் கொண்டது.
மேன்மக்கள் மேன்மக்களே..
ஹால் கண்ணாடி ஷெல்பில் உரத்த சிந்தனை ஷீல்ட்களைப் பார்த்ததும்
கப்சிப் ஆனேன்.
இதற்குள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்..
ஆதி வெங்கட்.. குட்டி தேவதை ரோஷிணி சகிதம்..
வைகோ ஸார்.. தமிழ் இளங்கோ அவர்கள்.. கீதா சாம்பசிவம் மேடம்.. ராதா பாலு மேடம்..
கொஞ்ச நேரத்தில் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஸார்.. பிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)
அப்புறம் விழா நாயகி.. இந்த சந்திப்பின் காரணகர்த்தா.. ரஞ்சனி மேடம்..அவர் கணவர் திரு. நாராயணன் வருகை தந்தனர்..
முதலில் போட்டோசெஷன்.. வைகோ ஸாரின் கேமிராவுக்கு சரியான வேட்டை.. தமிழ் இளங்கோ ‘நான் ஒரு புரபஷனல் போட்டோகிராபராக்கும்’ என்று இன்னொரு பக்கம் பிளாஷ் அடித்துக் கொண்டிருந்தார்.
நடுவே புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது போல ரோஷ்ணியின் அட்டகாச போட்டோ ஷாட்கள்..
‘அப்பாகிட்ட கத்துகிட்டியாம்மா’என்று தெரியாத்தனமாய் என் துடுக்கு வாயை வைத்துக் கொண்டு அவளிடம் கேட்கப் போக.. ரோஷ்ணி அடித்தாள் ஒரு சிக்ஸர்.. ‘அவருக்கே நான் சொல்லிக் கொடுப்பேனாக்கும்’
இந்த அமர்க்களம் ஓய்ந்ததும்.. வைகோ ஸாரின் பரிசளிப்பு.. புத்தக அன்பளிப்புகள்.. அரட்டைக் கச்சேரி..
ஒன்று சொல்ல வேண்டும்.. அப்போதுதான் அறிமுகமான உணர்வே இல்லை எவரிடமும். பல நாட்கள் பழகிய நெருக்கம்.. சகஜமாய்.. இயல்பாய் சம்பாஷணை..
பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்க.. எனர்ஜிக்கு உடன் டிபன்.. ஸ்வீட்டுடன்.. அப்புறம் காபி.. பால் (எனக்கு) !
விடை பெற்றுக் கிளம்பும்போது.. என் சொந்தக் காரர்கள் லிஸ்ட்டில் இன்னும் சிலர் சேர்ந்த ஆனந்தம் என்னிடம்..
அப்படித்தான் மற்றவர்களும் உணர்ந்திருப்பார்கள் !
தேங்க்ஸ் ரஞ்சனி மேடம்.. உங்களால் தான் இது சாத்தியமானது..
தேங்க்ஸ் ருக்மணி சேஷசாயி மேடம்.. உங்கள் இல்லம் தந்த உபசரிப்பை மறக்க முடியாது !
வைகோ ஸார்.. அடுத்த சந்திப்பு எப்போ.. எங்கே ??? !!!
(படம் : நன்றி திருமதி ஆதி வெங்கட்)