Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

November 01, 2014

இன்றைக்கான கவிதைகள் !




இன்றைக்கான கவிதைகள்




1. அதன் கண்களில்
ஒரு கெஞ்சல் இருந்தது..
சிறிது நேரம்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்
என்ன செய்வதென்று புலப்படாமல்..
என் தயக்கம் பார்த்து
வினாடி நேரத்தில்..
ஆம்.. வினாடி நேரத்தில்
அதன் கண்களில்
மின்னி மறைந்த கேலி..
என்னைக் குறித்த
அதன் விமர்சனமாய்..
நிராகரித்து நகர்ந்தபோது
எனக்குத்தான்
அதிகமாய் வலித்தது..
அந்த புறக்கணிப்பு !


2. ஒரு நேரத்தில்
ஒரு கவலை
என்றுதான்
வகைப்படுத்திக் கொண்டேன்..
எனக்கும் அதுவே
வசதியாய் இருந்தது..
இப்போதெல்லாம்
ஓடி வந்து
மடியில் விழுகிற
அத்தனை மகிழ்ச்சிகளையும்
அப்படித் தள்ள முடியவில்லை !


3. வாயைத் திற..
பல்லைக் கடி இறுக்கமாய்
விட்டு விடாதே..
ம்ம்..
சூழ் நிலையை வாயில் திணித்து
அடிக்க ஆரம்பித்து விடுகிறது
வாழ்க்கை விளையாட்டு..

May 08, 2014

கவிதைகள்

சொற்களைக்
கவிதைக்காக
அளவுக்கதிகமாய்ப்
பிசைந்து விட்டேனோ..
குழைந்து கிடக்கிறது
இப்போது !



மறுபடி
நீ பேசக் கூடும்
என்பதால்
இந்த நிமிடக் கோபத்தை
இரு கை நீட்டி
ஏந்திக் கொள்கிறே
ன் !


இரவு முழுக்க
கொட்டக் கொட்ட
விழித்திருந்து
பார்த்தேன்..
அந்த மீதிக் கனவு
திரும்ப வரவேயில்லை !

September 08, 2013

கொஞ்சம் கவிதைகள்

என்னைச் சிலுவையில் 
அறைந்தால்
உயிர்க்கத் தெரியாது..
விட்டு விடு !



அவர்களாக அறைக்குள்
வருகிறார்கள்..
வெளியேறுகிறார்கள்..
வாசம் சுமந்த
சுவர்கள்
ததும்புகின்றன
விம்மல்களில்..
நுழைவதற்கு முன்
இருந்த
சுயம் தொலைத்த
அறை
இப்போது ஏங்குகிறது
வரவிற்காக!


உன் மழை பற்றி நீயும்
என் மழை பற்றி நானும்
கவிதைகள் எழுதி
கை மாற்றிக் கொண்டோம்..
சேர்ந்து
வாசிக்கும் போது
அது நமக்கான மழையாய்
இருந்தது !



அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் !





August 25, 2013

ஜ்வல்யா

ஊசி போட
எதிரே டாக்டர்..
‘அழமாட்டா தானப்பா
ஜ்வல்யா’
அவளாகவே சொல்லிக் கொள்கிறாள்..
‘ஊசி வேண்டாமே’
அழுகிறேன் நான் !



நட்சத்திரங்களை
எண்ணும்போது
என் விரலகளையும்
சேர்த்துக் கொள்கிறாள்
ஜ்வல்யா..
‘கையை நீட்டுப்பா’ என்று !



என்னைத் தூங்க
வைத்ததும்
அம்மாவிடம்
போய் விடுகிறாள்
ஜ்வல்யா..
ஒவ்வொரு இரவும் !



’இரு..
அப்பாகிட்ட
பேசிட்டு வரேன்’
என்கிறாள்
சினேகிதியிடம்
ஜ்வல்யா..
இரு பெரிய மனுஷிகளின்
தனிமையில்
குறுக்கிட்ட எனக்குத்தான்
நெருடல் !



தவறவிட்ட
கூட்டத்தில்..
கைப்பற்றிய
குழந்தை
’நான் ஜ்வல்யா இல்லை’
என்கிறது..
சிரிப்புடன்!








ஜ்வல்யாவைத்
தேடிக் கொண்டே
இருக்கிறது
மனசு..
எதிர்ப்படும் எந்தக் 
குழந்தையைக் கண்டாலும் !




December 14, 2011

நான்


உன் இதயப் பாத்திரத்தில்
ஊறும் அமிழ்தை
உன் கூட்டுப் பறவைகளுக்கு
பகிர்ந்தளித்தாய்..
நிராகரிப்பின் வலியோடு
காலித் தட்டுடன்
தெருவில் நடக்கும் நான் !


எல்லையற்ற பால்வெளியில்
இன்னொரு கிரகம்
கண்டுபிடிக்கப்பட்டது..
மனிதர்கள் இருப்பதாய்த்
தகவலுடன்..
இங்கிருந்து அங்கே
பயணத்திற்கும்
ஏற்பாடுகள்..
நீயிருக்கும்
இந்த பூமியை விட்டு
அகலாமல் நான் !


உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..
மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !






April 04, 2011

கவிதைகள்


எந்த அகராதியும்

வார்த்தைகளின் தொகுப்புதான்..

என் கவிதைகளுக்கான வார்த்தைகள்

நிரம்பியே இருக்கின்றன..

சேகரித்து தொகுக்கும்

வேளையும் புத்தியும்

வாய்த்து விட்டால்

என் கவிதை உருப் பெற்று விடும்..

அதுவரைஅகராதியை

எத்தனை முறை புரட்டினாலும்

கண்ணில் படும் வார்த்தைகள்

வெற்று சொற்களே..


தெருமுனை வரை

விரட்டிக் கொண்டு வந்தன

நாய்கள்.

எல்லை முடிந்து விட்டதாய்

அப்படியே நின்று

குலைத்துப் போயின..

வீடு திரும்பிய பின்னும்

விடாமல் ஒலிக்கிறது

மனசுக்குள் குரைப்பொலி.


'நீ அவன் தானே’ என்று

ஆர்வமாய்க்கேட்டார் அவர்.

கேட்டபோது

அவர் கண்களைப் பார்த்தேன்.

'இல்லை' என்று சொல்ல

மனதில்லை..

'ஆமாம்' என்று சொல்லவழியில்லை..

அவர் கையின்

ஜில்லிட்ட ஸ்பரிசம்

எனக்கு ஏன்

அவரைத்தெரியாமல் போனது என்று

உள்ளூர புலம்பத்

தோன்றியதுஎனக்கு.


அவள் கண்களில்தெரிந்த

காதலைஎன் வார்த்தைகளால்

அங்கீகரித்தபோது

என் வாழ்வில்

ஒரு புது அத்தியாயம்தெரிந்தது.

மணமான மறு வருடம்பிறந்த

மழலை

அதையே பழைய

புத்தகமாக்கி விட்டதுஇப்போது..

இன்னொரு புது அத்தியாயம்துவங்கி.