
கோவிலில் தன் பாட்டியை தர தரவென்று இழுத்துக் கொண்டு பதின்ம வயதுக்காரன் ஓடினான். கூடவே அவன் தங்கையும், அம்மாவும்.
அந்தப் பாட்டியின் முகத்தில் நிச்சயமாய் பரவசம். எந்த கிராமத்தில் இருந்து வருகிறார்களோ.. தெரியவில்லை.
இந்த வயதில் தன்னை பேரன் கோவிலுக்கு அழைத்து வந்ததில் பெருமகிழ்ச்சியும்..
பரந்து கிடக்கும் பெரிய கோவிலின் பிராகாரங்களின் கல் தரையில் பாதம் பதிந்தும் பதியாமலும் கிழவி நடந்து ஓடியதைப் பார்த்தேன்..
நிச்சயம் ஸ்ரீரெங்கநாதன் பாட்டியைப் பார்க்க ஆர்வமாய்த் தான் காத்திருப்பார்.
முன்னொரு நாளில் இதே போல ரெங்கனும் இருப்பிடம் விட்டு எவ்வளவோ தொலைவு சுற்றி வந்தார்..
அதற்குள் ஸ்ரீரங்கமே மாறிப் போய் விட்டது.
திரும்பி வருவதற்குள்.. இடைப்பட்ட காலத்தில் இன்னொரு உற்சவர் அவரைப் போலவே வந்து விட்டார். அவருக்கு அபிஷேக ஆராதனைகள்..
‘உண்மையான ரெங்கன் இவர்தான்’
‘அப்ப இத்தனை நாளாய் நாம் ஆராதித்த பெருமாள் ?’
யார் அசல் .. யார் புதுசாய் வந்தது சொல்லத் தெரியாமல் புதிய தலைமுறை விழித்தது.
காவிரிக் கரை ஓரம்.. கண் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) தான் தீர்வு தர முடியும் என்று பேச்சு வந்தது.
‘அந்தப் பெரியவருக்கு வயசு நூறுக்கும் மேல.. அவர் சொல்லட்டும்’
காதும் மந்தமான அவரிடம் போய்ச் சொன்னார்கள் பிரச்னையை.
‘ ரெண்டு பேருக்கும் திருமஞ்சனம் செஞ்சு தீர்த்தம் கொண்டாங்க..’
இரு வட்டில்களில் அபிஷேக தீர்த்தம் கொண்டு வந்தார்கள்.
இரண்டையும் தனித்தனியே வாங்கி ருசித்தார்.
‘இதோ.. இந்த தீர்த்தம்.. கஸ்தூரி வாசனை.. இவர்தான் நம்பெருமாள்..’
அரங்கனை அடையாளம் காட்டியது ஒரு ஈரங்கொல்லிதான். நம்பெருமாள் என்று கொண்டாடியதும் அவர்தான். அவரின் தீர்ப்பில் விட்டு அதை அப்படியே ஏற்று
எந்த பேதமும் இல்லாமல் ஒன்றாய் நின்றதும் அந்த நாள் மனிதர்கள்தான்.
மனிதரைக் கொண்டாடுவோம்!