April 25, 2012

ஸ்பரிசம்






குழந்தை அழகாய் இல்லை

என்று அவள் சொல்லிக்

கொண்டிருந்தாள்.

பயணம் நெடுக

அதன் வாய் எச்சில்

என் மேல் தெறித்துக்

கொண்டிருந்தது.

இடம் மாற்றி அமர வேண்டும்

என்று அவளும்

குழந்தை அதன் இடம்

மாறக் கூடாது என்று நானும்

முணுமுணுத்துக் கொண்டிருந்தோம்.

அவ்வப்போது என் மேல்

விழுந்த அதன் பார்வை

எனக்கானது என்றே

நம்பினேன் ..

என் சுட்டு விரலை

தற்செயலாய் பிடித்தபோது

நான் குழந்தையானேன் ..

இறங்குமிடத்தில்

என்னைப் பற்றிய

எந்த சிந்தனையுமின்றி

திரும்பிக் கூடப் பார்க்காமல்

போக முடிந்தது குழந்தையால்.

அடுத்த நாள்.. அடுத்த மாதம் என்று

நினைவில் வரும் போதெல்லாம்

என் சுட்டு விரலில் உணர்கிறேன்

இன்றும் அதன் ஸ்பரிசம்.





April 22, 2012

ஜீவிதம்





பாதைகளைச் செப்பனிட்டு
பல காலம் ஆகிவிட்டது..
முட்களும் புதர்களுமாய் வழி நெடுக
போகும் வழி அடைத்து..
எவரும் கண்டறிந்து
வரக் கூடுமென

எதிர்பார்க்க முடியவில்லை..

இப்போதேல்லாம்

கண்ணில் படுவதைக் கூட

நிராகரித்துச் செல்லும்

மனிதர்களே அதிகம்.

என்றோ ஒரு நாள்

யாரேனும் வரக் கூடுமென

தனக்குள் முனகலுடன்

புற்றெழுப்பிக் காத்திருக்கிறது

என் அன்பெனும்

ஜீவிதம் !

April 18, 2012

சிலகா






சட்டென்று

மனதில் வரும் பெயரை

சொல்லச் சொன்னாய்..
'சிலகா' என்றேன் உடனே..

'எப்போதும் என் பெயர்தானா '

என்கிற உன் செல்ல சிணுங்கலை
ரசித்தபடி !



கண் மூடி சப்தங்கள் பற்றி


யோசித்துக் கொண்டிருந்தேன்


சப்தமே இல்லாமல்


வந்து விட்டு போனது


ஒரு கவிதை


எனக்கு வெளியே !



.
நள்ளிரவில் கண் விழித்து
சட்டென்று வெளியே வந்தால்
மரங்களுடன் பேசுவதை நிறுத்தி
மௌனமாகிறது காற்று !


















April 13, 2012

ஜில்லு

காதலிப்பதை விட ரொம்ப கஷ்டமான காரியம் எது தெரியுமா. காதலிக்கு ஒரு செல்லப் பெயர் வைப்பது. இதுவரை யாரும் அழைத்திராத பெயரைக் கண்டு பிடித்து அவளுக்கு மெசேஜ் பண்ண வேண்டும். அதுவும் அர்த்த ராத்திரியாய் இருந்தால் உசிதம்.
அனுப்பினேன். மணி நள்ளிரவைத் தொட்டு அந்தப் பக்கம் நகர்ந்தது. தெருவில் அதன் அமைதியைக் குலைத்துக் கொண்டு ஒரு தெரு நாயும் ஒரு பைக்கும் போனது. பைக்கின் வெளிச்சம் பால்கனி வழியே அறைச்சுவரைத் தொட்டு பிரகாசமாக்கி இருண்டது.
"
ஹாய் ஜில்லு"
அவள் எப்படி பதில் அனுப்புகிறாள் என்று காத்திருக்கும் நிமிடங்கள் மிக நீண்டவை.
போர்வைக்குள் ஒளிந்துதான் மெசேஜ் டைப் பண்ணுவதாய் சொல்லி இருக்கிறாள்.
எப்படி சாத்தியம் என்று புரிபடவே இல்லை. குப்புறப் படுத்துக் கொண்டு தலையணை மீது முழங்கை பதித்துக் கொண்டு செல்லில் விரல்கள் விளையாடும் போதே அத்தனை சுலபமாய் இல்லை. போர்வைக்குள்..
"
எப்படிரா.."
பேசுமுன்.. பேசியபின் இரு விதமாய் கண் சிமிட்டல்கள் காதலிக்கே உரித்தானவை.
"
எனக்கு போர்வைக்குள்ள செய்யற ஒரே வேலை.."
"
ச்சீய்"
தமிழின் மிக அழகிய வார்த்தைகளில் இதுவும் ஒன்று. அதுவும் குறிப்பாய் காதலியிடமிருந்து.
பூஸ்டர் போட்டு பேசியது போக.. குறுஞ்செய்திகள் அடித்தது போக.. இன்னமும் பேச விஷயங்கள் பாக்கி வைத்துத்தான் ஒவ்வொரு தினமும் நகர்கிறது.
"
எனக்கு புதுசா ஒரு பேர் வை.. செல்லமா.. யாரும் வைக்காத பெயரா"
"
கிருத்திகான்னு உனக்கு வச்ச பேர் பிடிக்கலியா"
"
இந்த நக்கல் வேணாம்..நீ சொன்ன பிறகுதான் பேசுவேன்"
"
இங்க பாரு.. அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதே”
“.....”
அது எப்படி சாத்தியமாகிறது.. சட்டென்று ஸ்விட்ச் ஆஃப் செய்ய.
'
நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்...'
செல்லப் பெயர்கள்..
கூகிள் இம்மாதிரி விஷயங்களில் 'பே' என்று விழிக்கிறது. 'இதைத்தான் நீங்கள் தேடுகிறீர்களா' என்று தேடவே ஆசைப்படாததைக் காட்டி அலுத்துப் போய் சில பெண்களின் படங்களைக் காட்டிச் சிரித்தது.
கிருத்திகாவிடம் பேச முடிந்தால் சொல்லலாம்.
'
அவங்க உன்னைக் காட்டிலும் அழகாவே இருந்தாங்க' என்று.

ஒரு கவியரங்கத்தில் தான் எங்கள் முதல் சந்திப்பு. எனது சுமாரான கவிதைக்கு ஒரே ஒரு கைத்தட்டல் தனித்துக் கேட்டது. படியிறங்கி வரும் போதே அவளின் பக்கத்து இருக்கை காலி என்பதைக் கண்டு பிடித்து விட்டேன்.
என் கையை அவளே பற்றி 'சூப்பர்' என்றாள்.
எனக்கே பிடிக்கல.. இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாம்னு தோணிச்சு”
ம்.. அது புரிஞ்சுது.. எப்போ உங்க கவிதை சரியில்லன்னு உங்களுக்கே தெரிஞ்சுருச்சோ.. அப்பவே நல்ல கவிதை எழுத முயற்சி பண்ணுவீங்கன்னு தான் கை தட்டினேன்” என்றாள் சிரிக்காமல்.
அடுத்து அவள் கவிதை வாசித்தாள்.
அந்தியில் அடையும்
பறவைகளின் சலசலப்பு,
தாலாட்டுகிறது..
எச்சத்தில் முளைத்த
விருட்சங்களுக்கு! (நன்றி : கவிதாயினி தனலட்சுமி பாஸ்கரன்)

பல கைத்தட்டல்களில் என்னுடையதும் கரைந்து போனது.
அதன் பின் எங்கே கவியரங்கம் என்று காத்திருந்தேன். எதையெல்லாம் தவிர்ப்பேனோ அங்கெல்லாம் போனேன். ஆறு மணி என்று சொல்லி விட்டு ஏழரைக்கு வந்திருந்த பத்து பேருடன் பத்து மணி வரை சண்டை போடும் கவிதை நிகழ்ச்சிகளுக்கு ஐந்தரை மணிக்கே ஆஜரானேன்.
ஒரு கூட்டத்தில் அவளைத்தான் இறைவணக்கம் பாடச் சொன்னார்கள்.
'
நீ பாடுவியா'
அவளுக்கு பாடவும் தெரிந்திருந்தது.
'
வீணை கத்துகிட்டேன்.. நாலு மொழிகள் தெரியும். சில கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கேன்..'
கூட்டம் முடிந்து கிளம்பும்போது ஹெல்மட் மாட்டி ஸ்கூட்டியில் சீறிப் போனபோதுதான் அவள் செல் நம்பர் வாங்கத் தவறியது ஞாபகம் வந்தது.
ஆனால் அன்றிரவு எனக்கு மெசேஜ் வந்தது.
'
இந்த ஸண்டே ப்ரீயா..'
'
எதுக்கு'
ஒரு விதவைப் பெண்மணி அதுவும் மாற்றுத் திறனாளி, தம் நாலு குழந்தைகளை போராடி வளர்க்கிறாராம். இவளும் இன்னும் சிலரும் அவரைப் பார்த்து ஏதோ உதவப் போகிறார்கள்.
'
வரேன்..'
போன வாரம் அனாதை இல்லம். அந்தக் குழந்தைகளுக்கு சாப்பாடு.. இனிப்பு. ஒவ்வொரு மாதமும் இப்படி ஏதாவது ஓரிடம்.
'
என் நமபர் எப்படி..'
அவள் பதில் சொல்லவில்லை. அடுத்த கூட்டத்தில் கண்டு பிடித்தேன். இல்லை .. அவளே சுட்டிக் காட்டினாள். வந்தவர்களிடம் ஒரு நோட்டில் கையெழுத்து, விலாசம், போன் நம்பர் வாங்கினார்கள்.
'
எப்படி கிடைச்சுதுன்னு இப்ப புரியுதா'
தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தால் வழிமுறைகளைச் சுலபமாய்க் கண்டு பிடித்து விடுகிற சமர்த்துக்கு பாராட்டு சொல்ல 'யூ ஆர் கிரேட்' என்று அனுப்பினேன்.
'
கவிதைத் தொகுப்புக்கு பெஸ்ட்னு நினைக்கிற 50 கவிதைகளைக் கொண்டு வரச் சொன்னேனே.. என்ன ஆச்சு'
'
இன்னும் 50 தேறல'
'500, 600
எழுதிட்டதா சொன்னீங்க'
'
எதுவுமே பிடிக்கல'
'
கொண்டாங்க.. பார்க்கலாம்'
அடுத்த கூட்டத்தில் என் ஆறு டயரிகளைக் கொண்டு வந்து கொடுத்தேன்.
அடுத்த நாளே 'தேறிச்சா' என்று கேட்டேன்.
பதில் இல்லை.
அதற்கு பதிலாக கவிதை உலா பதிப்பகத்திலிருந்து அழைப்பு வந்தது.
'
ப்ரூப் பார்த்து தரீங்களா'
ஒரு சிட்டுக் குருவியின் அழகான அட்டைப்படம். 'பிரியத்தின் சிறகுகள்' தலைப்பு. கீழே என் புனைப் பெயர்!
அணிந்துரை கொடுத்தது நகரின் பிரபல கவிதை விமர்சகர்.
'
அணிந்துரை என்பது ஒரு நூலின் விமர்சனமல்ல. எல்லா கவிதைகளையும் சலித்து.. புடைத்து 'ருசிக்க' சவுகர்யமாக தருவதுமல்ல. கவிதை வாசித்தல் என்பது ஒரு 'கலைடாஸ்கோப்' மாதிரி. உங்கள் கைக்கு வரும்போது கண்ணாடித் துண்டுகள் இடம் மாறி வேறொரு பரவசத்தை, வர்ண ஜாலத்தை தரக் கூடும். (நன்றி : நெய்வேலி பாரதிக்குமார் - “அம்மா உன் உலகம்” கவிதைத்தொகுப்பிலிருந்து)
எனக்கும் நாசூக்காய் குட்டியிருந்தார். 'இதையும் தாண்டி நல்ல கவிதைகள் தரக் கூடும்.. அதற்கான அக்னிக் குஞ்சுகளை அடையாளம் காண முடிகிறது இத்தொகுப்பில்'
அதுவரை அவளிடம் நான் போனில் பேசியதே இல்லை. அன்று முதல் தடவையாய் பேசினேன்.
'
என்னப்பா இது..'
என் குரல் என் இயல்பை மீறி தழுதழுத்தது.
'
உங்களுக்கு இரண்டு நாள் தான் அவகாசம். சீக்கிரம் ப்ரூப் பார்த்து அனுப்புங்க. நானும் பார்த்துட்டேன். பட் நீங்க ஓக்கே சொன்னாத்தான் பைனல் பிரிண்ட்'
'
வந்து..'
'
சீக்கிரம்.. புதன் ஈவ்னிங் மீட் பண்ணலாம்.. பதிப்பகத்துல'
500
பிரதிகளுக்கு ஆர்டர். சின்னதாய் ஒரு வெளியீட்டு விழா. அதே விமர்சகர் தலைமை. தேர்ந்தெடுத்த கவிதை ஆர்வலர்கள் விலாசம் என்னிடம் கொடுத்தாள்.
'
நீங்களே அனுப்பிருங்க.. வெளியீட்டு விழா அழைப்பை'
கையில் முதல் பிரதி ஏந்தி நிற்கிற தருணம். சிலிர்ப்பை மீறி தலையில் குட்டிக் கொண்டேன்.
சமர்ப்பணம்னு உன் பெயரைப் போட்டிருக்கணும்.. விட்டுட்டேன்”
புக்கை வாங்கிப் பிரித்து முதல் பக்கம் காட்டினாள்.
எழுதிக் கொடுங்க.. அதுதான் ஆத்மார்த்தமா இருக்கும்..
எழுதிக் கொடுத்தேன்.
அந்த நிமிடம்தான் என் மனக் கதவு திறந்து கொண்டது.
சொல்லிடலாமா.. நன்றிக்குப் பதிலாய் காதலைச் சொன்ன மாதிரி ஆகிவிடுமா.. இது சரியான நேரம்தானா..
ஆணை விட பெண்ணுக்குக் கண்ணைப் படிப்பது சுலபம்.
மேடையில் உணர்வின் கலவையில் அமர்ந்திருந்தேன். யார் என்ன பேசினார்கள் என்று எனக்குக் கேட்கவில்லை. கூட்டத்தில் கலந்து பார்வையாளராய் அமர்ந்திருந்தாள். அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீ வாழ்த்துரை தர மாட்டியா”
வேணாம்பா
அது எனக்கு மனக் குறையா என்று புரியவில்லை. அவள் செய்வதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கக் கூடும் என்றே நம்பினேன்.
அடுத்த ஏதோ ஒரு கூட்டத்திற்கு அவள் வரவில்லை. அவள் வருவாள் என்று நான் போயிருந்தேன். கடைசி வரை அவள் வரவே இல்லை. பஸ் ஸ்டாப்பில் நான் நிற்பது தெரியாமலோ, அல்லது தெரிந்தோ. சற்று தள்ளி நின்று அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
'
பாருடா.. நீயும்தான் கவிதை எழுதற.. உனக்கு அந்த பாக்கியம் இருக்கா. உனக்கு புக் போட முடியல..'
'
கவிதை எழுதறது எல்லாம் அப்புறம்டா.. முதல்ல கணக்கு பண்ணனும்'
எனக்குக் கோபம் வரவில்லை. இவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் கவிதை வரவே வராது. மனக் கோணல்களுக்கு நடுவே கவிதை விதை முளைக்க வாய்ப்பே இல்லை.
அவளுக்கும் அந்த மாதிரி பேச்சுக்கள் கேட்டிருக்கிறது. என்னைப் பற்றி என்ன நினைத்தாளோ.. அவளிடம் கேட்க எனக்குத் தயக்கம். ஆனால் அவள் எதுவும் நிகழாதது போல மெசேஜ் அனுப்பினாள். சென்ட் ரல் பஸ் ஸ்டாண்ட் வந்திருங்க.. அந்தக் கிராமத்துக்கு போயிட்டு வந்திரலாம்.
பஸ்ஸில்தான் போனோம். ஐந்து பேர். கிராமத்தினுள் நுழைந்ததும் அந்த வீட்டைத் தேடுகிறோம் என்றதும் ஆர்வமாய் கொண்டு போய் விட்டார்கள்.
அந்த விதவைப் பெண்மணி மிக யதார்த்தமாய் இருந்தாள்.
'
உடைசல் பானையை விதி கையில கொடுத்திருச்சு.. கிணறு ஆழம்.. தண்ணி அவசியம்.. முயற்சி பண்ணா ஒரு வா(ய்)த் தண்ணி.. இல்லன்னா.. நாக்கு வறண்டு போகும்.. வாழணும்னா அது சிரமம்னு மிரள்றது ஒரு வகை. போராடி முடியும்னு நிரூபிக்கிறது இன்னொரு வகை.. நான் போராளிங்க'
நாங்கள் கொண்டு போனது மிக அற்பம். அதையும் மிக அன்பாய் வாங்கிக் கொண்டாள். பால் போதாத அந்தத் தேனீர் வெகுவாய் சுவைத்தது.
திரும்பும் போது எனக்கு கிருத்திகாவின் அருகே இருக்கை கிடைத்தது.
ஐ லவ் யூ' என்றேன்.
அதைச் சொல்ல ஏன் இவ்வளவு டிலே' என்றாள்.
எங்கள் கல்யாணத்தை அந்த பஸ்ஸில் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அப்போது. என்னை இடித்துக் கொண்டிருந்த நெரிசல் அந்த நிமிடம் உறைக்கவில்லை. அப்படியே காலம், தூரம் கடந்த ஒரு பயணம் போக மனசு ஆசைப்பட்டது.
'
பூமிக்கு இறங்கலாமா' என்றாள் புன்னகையுடன்.
பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு காணாமல் போனாள். வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு பாட்டி என் அருகே சுவாதீனமாய் இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
மாவட்டத்தின் சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு என் கவிதை நூலுக்குக் கிடைத்து அமைச்சரிடம் பரிசு வாங்கியபோது செக்கை அவளிடம் கொடுத்தேன்.
அந்தப் பெண்மணிக்குக் கொடுத்துரலாமா'
நீ என்ன செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்'

இதோ இன்று அவளுக்கு ஒரு செல்லப் பெயர் வைப்பதில் வந்து நிற்கிறது.
ஒரு கவிதை எழுதுவதை விட மிக கஷ்டம் செல்லப் பெயர் வைப்பது. அதுவும் இதுவரை யாரும் வைக்காத பெயர்.
அவள் ஸ்விட்ச் ஆஃப் செய்ததில் மிரண்டு 'ஜில்லு' என்று அனுப்பினேன். அதுவும் நள்ளிரவைத்தாண்டி.
சைலண்ட் மோடில் வைத்திருந்த செல் ஒளிர்ந்தது. அவள் அழைப்பு.
கிருத்தி.. என்னால முடியல.. என்ன யோசிச்சாலும். பிளீஸ்டா.. கொஞ்சம் டைம் கொடு.. ஆனா அதுவரை பேசாம மட்டும் இருக்காதடா
சிரித்தாள் இசையும், நான்கு மொழிகளும் கலந்து.
தூண்டுதல் இல்லாம எந்தப் படைப்பும் வராது, கவிஞருக்கு இது புரியாதா..
அட..
அன்னிக்கு என் பறவை கவிதையை ரசிச்சீங்களே.. அதையே இப்படியும் எழுதிப் பார்த்தேன்பா..
மறுநாளைக்கான திட்டங்களின்
மறுபரிசீலனையோ..
கூடடையும்
பறவை மொழி ? (நன்றி : கவிதாயினி தனலட்சுமி பாஸ்கரன்)


எங்கள் கல்யாணப் பத்திரிக்கையை எப்படி வித்தியாசமாய் அச்சடிப்பது.. முதல் நாள் மாலை கவியரங்கம் வைக்கலாமா.. இன்னொரு தொகுப்பு கூட்டாய் வெளியிடலாமா..
யோசனைகளின் அணிவகுப்பில் என் தூக்கம் தொலைந்து போனது இன்று.

(நன்றி : கல்கி - 15.04.12 சித்திரைச் சிறப்பிதழ்)

April 03, 2012

ஆண்டாள்



நேற்று உறையூரில் சேர்த்தி உத்ஸவம். தாயார் கமலவல்லி. சோழ அரசனின் மகளாய்ப் பிறந்து அரங்கனை மணந்தார்.

வந்த சேவார்த்திகள் அனைவரும் அத்தனை ஒழுங்கு. ஒருவரும் அமளி இல்லை. பேச்சு இல்லை. வரிசை பிசகாமல் வந்து தரிசித்த அழகை பார்த்து கூடுதல் ஆனந்தம்.


(இது முன்பு எடுத்த சேர்த்தி போட்டோ. )


இன்று உபயநாச்சிமாருடன் அரங்கன் வீதி உலா. 7ஆம் திருநாள். சித்திரை வீதியில் அவரைத் தரிசிக்க போனபோது ஒரு சுவாரசியம்.

பெரிய அடுக்கு நிறைய டீ தயாரித்து வைத்திருந்தார்கள்.

“யாருக்கு இவ்வளவு டீ” என்றேன்.

“ஆண்டாளுக்கு”

“அவ்வளவு டீ குடிக்கிற மாமி யார்”

பெரிதான சிரிப்புடன் “யானைக்கு.. ஆண்டாளை யானைன்னு சொல்ல மாட்டேன்” என்று பதில் வந்தது.

சுக்கு, ஏலம், வெல்லம் போட்டு டீ. சூடாய் இருந்தால் சாப்பிடாதாம்.

மின்விசிறி காற்றில் ஆற வைத்திருந்தார்கள்.



சின்ன சொம்பில் ஊற்றி அதன் வாயைத் திறக்கச் சொல்லி மெல்ல பாகன் ஊற்றுகிறார். ஆங்.. சொல்ல மறந்துட்டேனே..

டீ குடிக்க முதலில் யானையிடம் பர்மிஷன் வாங்கிக் கொள்ள வேண்டும். (ஒரு முறை வேறு நபர் கொடுத்த சொம்பு டீயை நிராகரித்து விட்டது)

முழுக்கக் குடித்ததும் ஆண்டாளிடம் “டீ எப்படி” என்று கேட்டால் ஜோராய் ரசனையுடன் தலையாட்டுகிறது !