December 10, 2020

 பேச்சு

ரிஷபன்
ஆறு வருஷங்களாச்சு, பொன்னியை தத்து கொடுத்து. மனசே ஆறலை. அஞ்சும் பொட்டையாப் பொறந்தா குடித்தனம் எப்படி நடத்தறதாம்.
பக்கத்து வீட்டம்மா, அப்ப பக்கத்து வீட்டுலதான் குடியிருந்தாங்க. "ஏண்டி செல்லி... எனக்கோ புள்ளையே இல்லே. அஞ்சும் பொட்டையா பெத்து வச்சிருக்கியே ஒருத்தியை நான் எடுத்து வளர்க்கிறேனேன்னாங்க."
வேலுவும் ஒத்துகிச்சு. அதான் மறுத்துப் பேசும்னு நினைச்சேன்
நம்மகிட்டே சோறு, தண்ணி இல்லாம சாவுறதுக்கு எங்கனாச்சும் நல்லா இருக்கட்டும்னாரு.
மவராசி. பொன்னியை அதான் நாலாவதா பொறந்ததை எடுத்துகிட்டா.
ஒரு வயசு.
"கைக்குழந்தைக்கு தாய்ப்பால் வேணும்டி. அதனால இவளை எடுத்துக்கிறேன்"
தாய்ப்பாலா. சுரப்பு வத்திப்போன மாரை நானே பார்த்து சிரிச்சுகிட்டேன்.
"என்னடி சிரிக்கிற. வாரந்தப்பாம அரிசி பருப்பு தரேன். கூச்சப்படாம வந்து வாங்கிக்க. பக்கத்துலயே வளர்ந்தா யார் மனசு எப்படி மாறும்னு சொல்ல முடியாது"
அடுத்த டவுன்ல தான் இருக்கப் போறோம்னாங்க.
சொன்ன வாக்கு மீறலே. போவேன். தவறாம படியளந்தாங்க. ஒரு தடவை கொடுத்தா ஒரு மாசம் தாங்கறாப்ல.
ஆனா ஒண்ணு. எம்புள்ளையைப் பார்க்கணும்னு நினைக்கவே இல்லே. கண்ணுல படாம காத்து மாதிரி போய்த் திரும்பிருவேன்.
நல்லாப் பேசுதாம். வெடுக்வெடுக்குன்னு.
"இப்ப என்னடி, உன்னைய அதுக்கு அடையாளமா தெரியப்போவுது. நின்னு பார்த்துட்டு போயேன்னாங்க" பெரிய மனசா.
"வேணாம்மா. கடைசி வரை கண்ணுல படாமயே போயிடறேன். ஒரு புள்ளையைக் கொடுத்ததுக்காக. ஆறு உசுரைக் காப்பாத்தற உங்களுக்கு... எப்படி நன்றி சொல்லப்போறேன்னு" புலம்பினேன்
உள்ளார போனாங்க. வழக்கம்போல அரிசி, பருப்பு எடுத்தார. கூடவே இன்னொரு குரலும் கேட்டுச்சு இளசா...புதுசா... எம் பொன்னியா.
"ஏம்மா இப்படி யாருக்கோ அள்ளிக்
கொடுக்கறீங்க... பணத்தோடு அருமை தெரியுதா. தர்மம் பண்ணவும் ஓர் அளவு இருக்கு"
நான் பெத்த மவ பேச்சைக் கேட்டீங்களா?
- தமிழ் அரசி பிரசுரம்

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

கேட்கக் கூடாததைக் கேட்டு விட்ட உணர்வு - படிக்கும் எங்களுக்கும்!

நல்ல கதை. பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.