May 16, 2021

காதல் வரம் 1

 #காதல்_வரம் - 1


ரிஷபன்


நந்தாவின் காலைப் பொழுது ஆரம்பித்து விட்டது. கண்களை மூடியபடியே எழுந்து கட்டிலில் அமர்ந்த நிலையிலேயே தரையில் கால்களை ஊன்றினாள். 


கண் விழித்தாள். எதிர்ச் சுவரில் பெரிய அளவில் நீர்வீழ்ச்சி புளோ அப். திவலைகள் மேலே தெளித்து விடலாம் என்று உற்சாகப்படுத்துகிற அளவு துல்லியம்.


தினசரி வழக்கம். குறைந்தது ஐந்து  நிமிடங்களாவது மனசு இதில் தோயும்.


'அப்படி என்னதான் தோணும், உன் மனசுக்குள்ளே’ என்றாள் ரஞ்சனி ஒருநாள். 


நந்தாவிற்கு விழிகள் பெரிது. அதில் பரவசம் கலக்கும்போது தனி கம்பீரம் தட்டும்.


'நாமே அந்த நீர்வீழ்ச்சிக்குள்ளே இருக்கிற மாதிரி தோணுது'


சொல்லி முடிப்பதற்குள் உடம்பு சிலிர்த்து விடும். ரஞ்சனி அலட்சியமாய் தோளைக் குலுக்குவாள்.


சிநேகிதியின் மனசு நோகக் கூடாது என்றில்லை. அவளுக்கு நிறைய விஷயங்களில் அபிப்பிராயம் மாறும். அந்தந்த நேர மனநிலையைப் பொறுத்துத்தான் வெளிப்படுத்துவதும், சொல்லாமல் புரிய வைப்பதும்.


எதிரே மேஜையில் இவள் பார்வையில் பட வேண்டும் என்று ஒரு காகிதம் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.


அதில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியும். நேற்றிரவே முடிவான விஷயம்.


"என்ன நந்தா... உன் பிளான் என்ன?”


"ஸ்டேயிங் ஹியர்..."


"ஓகே. உன்னோட சாய்ஸ்... நானும்... புவனியும் காலையில் கிளம்பிப் போறோம்."


"இந்தக் குழந்தை... வழக்கம் போல... எட்டு மணி வரை தூங்கட்டும்” என்று புவனி நந்தாவின் மூக்கைச் செல்லமாகத் திருகினாள்.


"சாயங்காலம்தான் வருவோம்."


"ஹும்... சுத்த போர். இப்பதான் போன வாரம் ஊருக்குப் போனது. ஒவ்வொரு ஸண்டேயும் ஏன் வருதோன்னு இருக்கு..."


"இவ எப்படித்தான் ரூம்லயே அடைஞ்சு கிடக்கறாளோ..."


"எப்பப் பார் ரூம்லயே இருக்கற மாதிரியே பேசறே... போனவாரம் நானும் ரஞ்சனியும் ஊர் சுத்தினோம். இந்த வாரம் அந்த மாதிரி நேர்ந்து போச்சு..."


'ஓகே... அக்செப்டட்.”


ரஞ்சனிக்கு 'ஓகே' கலக்காமல் வார்த்தை வராது. காலையில் எழுந்து போகும்போது... இவளுக்கு 'குட் மார்னிங்' எழுதி வைத்து விட்டு போயிருப்பார்கள்.


நிதானித்துக் கொண்டு எழுந்தாள். சின்ன வயதிலிருந்தே பழக்கம். பதற்றம் வராது. இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று மனதில் பதிந்து போன விஷயம்.


நந்தா எழுந்திருக்கும்முன் அவளைப் பார்த்தால் குறை தெரியாது. நடக்கும்போதுதான் புரியும்... இவளா... இவளுக்கா...


வலது கால் அழுத்தமாய்த் தரையில் பதிய இடது கால் ஊசலாடிப் பதிந்தது. மறுபடி மெல்ல வலது காலைப் பெயர்த்து... இடது காலுக்கு முழு கனமும் தராமல் அடுத்த அடி. இத்தனை வருஷப் பழக்கத்தில் இதை இயல்பாகச் செய்வதால்... அவ்வளவாகத் தடுமாற்றமில்லாத நடை.


'குட் மார்னிங்' கூடவே குறும்பாக ஒரு படம். குச்சி மாதிரி கை... கால்கள்... யானை சைசுக்கு உடம்பு. பெரிதாய் விழிக்கிற முகம்.


சிரித்து விட்டு டிக்சனரியில் பேப்பரைச் சொருகினாள். மெல்ல நடந்து பாத்ரூமிற்குள் போனாள்.


(தொடரும்)


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கேயும் பதிவிட்டதில் மகிழ்ச்சி. வலைப்பூவில் படிப்பது தான் பிடித்திருக்கிறது.

முகநூலில் அனைத்து பாகங்களையும் படித்தாலும், இங்கே படிப்பதில் ஆனந்தம்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள் - இங்கேயும் ஒரு சேமிப்பாக.