#காதல் வரம் - 2
ரிஷபன்
மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வருகிற வழியில்தான் சந்திரிகா எதிரில் வந்தாள்.
“...புவனி எங்கே... அவளைத் தேடிக்கிட்டு அவ அண்ணனாம்... வந்திருக்காரு..."
"அவ வெளியே போயிருக்காளே..."
"எப்ப வருவா... ஏதோ அர்ஜெண்டாப் பேசணும்னு சொன்னாரு..."
"நான் போறேன்..."
செருப்பு போட முடியாது. ஆனால் பழகி விட்டது. பரபரக்கிற வெயிலில் கூட அடி பதித்து நடப்பாள்.
"சுடாதா..."
ஊஹும்..."
“கஷ்டமா இல்லே.."
சிரிப்பாள். எங்கும் அனுதாபப் பார்வைகள். மெஸ்ஸில் கூட ஆரம்பத்தில் இவளைப் பார்த்ததும் முன் வரிசையில் உடனே இடம் கொடுப்பார்கள். வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள்.
"எனக்கு நெஜம்மாவே கஷ்டமா இல்லே..."
"...பரவாயில்லே..."
ஊனத்தைக் காட்டிலும் இதுதான் உறுத்தியது. என்னால் முடியும் என்று மனசுக்குள் வளர்த்து வைத்திருக்கும் பிம்பம் ஆடும். ஆனால் ஊனத்தைப் போலவே இந்த மரியாதைகளும் இப்போது பழகிப் போய் விட்டது.
சாயம் போன மாதிரி ஜீன்ஸ்... ஃப்ரீசைசில் ஷர்ட்... கண்ணாடியை மீறி விழிக்கிற பார்வை. ஷூக்கள்...
“நீங்க புவனியோட பிரதரா..." என்றாள் நந்தா. இவளைப் பார்த்ததும் அவன் முகத்தில் எந்த
மாற்றமும் இல்லை. முதலில் அதுவே அவளுக்குப் பிடித்திருந்தது. 'பாவம்... ச்சி...' என்று பார்வையில் எடுத்த உடன் தொனிக்கும் 'பாவம்' இல்லாத மனிதன்.
"ம்... அவ இல்லையா..."
'...ஈவ்னிங்தான் வருவா. ஏதாவது
சொல்லணுமா..."
"...எங்கே போயிருக்கா?”
"இன்னைக்கு லீவு தானே...”
இவனிடம் சொல்லலாமா... வேண்டாமா என்று யோசிப்பது புரிந்தது.
“லீவுதான்... இன்னொருத்தியும் அவளுமா. கலீக் ஒருத்தி வீட்டுக்கு போயிருக்காங்க..."
“அவங்க வீட்டுல ஃபோன் இருக்குமா..."
"தெரியலையே... இல்லேன்னுதான் நினைக்கிறேன்..."
அவன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
“நான் நாளைக்கு ஆபீசுக்கு ஃபோன் பண்றேன்.. நாளைக்கு ஈவ்னிங் ஊருக்குக் கிளம்பற மாதிரி இருக்கும். அதை மட்டும் அவகிட்டே சொல்லிருங்க."
நிதானமாக நடந்து போனான். நந்தாவை மறுபடி திரும்பிப் பார்க்கவே இல்லை. அது மட்டும் இல்லை. வெளி கேட் போகிற வரை... இது பெண்கள் ஹாஸ்டல்.... என்கிற பிரக்ஞை இல்லாதவன் போல... இயல்பாக நடந்து போனான்.
"ஹாய் நந்தா...நீ எங்கேயும் போகலையா.." குரல் கேட்டுத் திரும்பினால், வனிதா, அவளும் வெளியில் போகிறாள் என்று தெரிந்தது.
"இல்லே..."
"யாரது? உன் பாய் ஃப்ரண்டா..."
"ச்சீ... புவனியோட அண்ணா..."
"ச்சே... மிஸ் பண்ணிட்டேன்... டிராப் பண்ணச் சொல்லியிருக்கலாம்" என்றாள் வனிதா, வாசலில் அவன் ஸ்கூட்டரில் ஏறிப் போவதைப் பார்த்து.
நந்தா சிரித்தாள். இதே வனிதா... என்ன
சொன்னாள் தெரியுமா...
"இந்த மாதிரி குறை இருக்கறவங்க... ரொம்ப குசும்பு பிடிச்சவங்களா இருப்பாங்க... தெரியுமா...”
"அப்படீன்னா..."
“கர்வமா.. எடுத்தெறிஞ்சு பேசற டைப்பா..."
“நந்தா அந்த மாதிரி இல்லே..."
*சொல்லாதே... போன வாரம்... அவ பாவம் விந்தி...விந்தி நடக்கணுமேன்னு... நானே காபியைக் கொண்டு வந்து கொடுத்தேன்... வேணாம். எனக்கு கை இருக்கு. நானே வாங்கிப்பேன்னு சொல்லிட்டா..."
"அதுல என்ன தப்பு..."
“திமிர்தானே அது.. ஹெல்ப் பண்ணா... ஏத்துக்கற புத்தி ஏன் இல்லே..."
'உன் ஹெல்ப் அவளுக்கு அவசியம்னு படலே..'
“அதைத்தான் குசும்புன்னேன்.”
புவனிதான் வந்து சொன்னாள்.
"அவளைச் சும்மா விடலே... பளிச் பளிச்சுன்னு கேட்டுட்டேன்.''
நந்தா பேசாமல் சிரித்தாள். பழகிப் போய் விட்டது. சாதாரணமாக அவளே இம்மாதிரி அனுசரணைகளை ஏற்றுக்கொண்டு விடுகிறாள். அவசியமில்லை என்றாலும், அதையும் மீறி சில நேரங்கள்... இந்த மாதிரி... வனிதா மாதிரி நபர்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment