May 16, 2021

காதல் வரம் 5

 

#காதல்_வரம் - 5

ரிஷபன்

இந்த ஞாயிறு மீண்டும் ஹாஸ்டல் வாசம். புவனி. ரஞ்சனி இரண்டு பேருமே ஊருக்குப் போய் விட்டனர். நந்தா புதன், வியாழன் இரண்டு நாட்கள் லீவில் ஊருக்குப் போயிருந்தாள். மதுரையில் பெரியப்பா பெண்ணுக்குக் கல்யாணம். மறுபடி பயணம் செய்ய மனசில்லை.

அடுத்த வாரம் மெட்ராஸ் போக வேண்டியிருந்தது. எக்சிகியூடிவ் பதவிக்கான தேர்வில் ரஞ்சனி, நந்தா இருவருமே வெற்றி பெற்றிருந்தனர். நேர்முகத் தேர்வு சென்னையில்.' என்ன கேட்பார்களோ... பெரும்பாலும் பார்க்கிற வேலை... படிப்பில் சில கேள்விகள்... இப்படித்தான் இருக்கும். இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம்.

கையில் பிடித்திருந்த புத்தகத்தில் மனசு பதிய மறுத்தது. பிளாஸ்க்கில் காபி தீர்ந்து போயிருந்தது. எழுந்து போக சோம்பலாகவும் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை.

எழுந்தாள். இன்று அறை வாசம்தானே என்று நைட்டிதான் உடை. தலைமுடிக்கு ரப்பர் வளையம். எதிர்க் கண்ணாடியில் முகம் பார்த்து வெளியில் வந்தாள்.

ஹாஸ்டல் பெரும்பாலும் வெறிச்சோடியிருந்தது. இருந்த ஓரிரு நபர்களும் அறைக்குள் முடங்கி யிருந்தனர்.

ஹாஸ்டல் வாசலுக்கான வராண்டாவில் இடது புறம் திரும்பித்தான் சமையலறைக்குப் போக வேண்டும். திரும்பியபோது மிக மெலிதாக ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தாள்.

இன்று வேறு கலரில் அதே மாதிரி சாயம் போன ஜீன்ஸ். தொள... தொள ஷர்ட். நந்தாவைப் பார்த்து சிரித்தானா... இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாதபடி கண்ணாடிக்குள் விழிகள்.

"புவனி இல்லையே..."

எதிரில் நின்று சிரித்தான்.

"உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்..."

"என்னையா..."

"ம்..."

சட்டென்று என்ன சொல்வதென்று புரியவில்லை. தன்னிடம் அவனுக்கென்ன பேச்சு. திடீரென அணிந்திருந்த உடை உறுத்தியது. எத்தனை கசங்கல். அழுக்காய் இருக்குமோ.

"அப்படி உட்காரலாமா? இல்லை... வெளியில் போகலாமா..."

"எதுக்கு?”

"உங்ககிட்டே பேசணும்..."

என் பர்மிஷன் தேவையில்லையா... என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன். சொன்ன உடன் கிளம்பிவிடுவாள் என்றா.

அவள் முகம் சிணுங்கியதை உணர்ந்திருக்க வேண்டும். நேராகப் பார்த்தான்.

"உங்ககிட்டே பேசணும்... நீங்க தப்பா எடுத்துக்கிற டைப் இல்லைன்னு என் நம்பிக்கை. அதே போல என்னையும் நீங்க ஜென்டில்மேன்னு நினைச்சா என் கூட வாங்க..."

யோசித்து விட்டுச் சொன்னாள்.

"டிரஸ் சேஞ்ஜ் பண்ணிக்கிட்டு வரேன்."

அவன் முகம் மலர்ந்து விட்டது. விசிட்டர்களுக்கான சோபாவில் அமர்ந்தான். நந்தா திரும்பி தன்அறையை நோக்கி நடந்தாள். தன் நடையை அவன் கவனிக்கக் கூடும் என்ற உணர்வெழத் திரும்பிப் பார்த்தாள். இல்லை. இயல்பாக எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த படத்தை ரசித்தான் போலும். பார்வை மேல் நோக்கியிருந்தது.

அவளுக்குப் பிடித்த மஜந்தா கலர் புடைவையை தேடி எடுத்தாள். பத்து நிமிடங்களுக்குப் பின் அவன் எதிரில் வந்து நின்றபோது மோகன் கண்களில் ரசனை மின்னியது.

வாட்ச்மேன் மோகனைப் பார்த்துச் சிரித்தான்.

இதற்கு முன் வந்ததில் பழகியிருக்க வேண்டும். வார்டன் கண்களில் பட்டானா தெரியவில்லை. பார்த்திருந்தாலும் என்று நிச்சயம்

சமாளித்திருப்பான்.

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான்.

"பின்னால உட்காரதுல ஆட்சேபணை இல்லையே..."

இன்று இந்த அனுபவத்திற்காக மனசு ஏதோ காத்திருந்தது போல உணர்ந்தாள். ஏனோ மறுப்பு சொல்லத் தோன்றவில்லை. சற்றுமுன் கோபம் வந்த மாதிரி உணர்ந்தது கூட பிரமையாகத்தான் இருக்க வேண்டும்.

அவள் ஏறி அமர்ந்ததும் சிரித்தான்.

"வெயிட்டே இல்லையே..."

அவன் மேல் படாமலேயே அமர முடிந்தது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஐஸ்கிரீம் பார்லரும் இருந்தது. கூட்டமில்லை. இவர்கள் உள்ளே போய் எதிரெதிரே அமர்ந்து கொண்டனர்.

“எனக்கு டூட்டி ஃப்ரூட்டி. உனக்கு..." என்றான். சொன்னாள். ஜில்லென்ற நீர் தொண்டையில் இறங்கியது.

"புவனி எதுவும் சொன்னாளா..." என்றான்.

"இல்லையே... என்னது...”

"அப்படியா..."

"அவ கல்யாண விஷயமாவா...'

"ம்ஹும்... வேற விஷயம்..."

“என்னது...”

"நீங்க... வந்து... உங்களுக்கு பிரதர்... சிஸ்டர்... உண்டா.."

"நான் மட்டும்தான்... தனி..."

"மதுரைக்குப் பக்கத்துல இல்லே உங்க சொந்த ஊர்..."

"ம்... எப்படித் தெரியும்... புவனி சொன்னாளா.." 

"இல்லே... உங்க ஆபீசுக்கு ஃபோன் பண்ணேன். லீவுன்னாங்க... அப்பதான் தெரிஞ்சது... மதுரை உங்க நேட்டிவ்னு..."

"எனக்கு எதற்கு ஃபோன் பண்ணீங்க...”

“இந்த ஸண்டே  மீட் பண்ணலாமான்னு 
கேட்கத்தான்"

ஐஸ்கிரீம் வந்தது. பேச்சு நின்றது. கொண்டு வந்த பையன் விலகி உள்பக்கம் போனான்.

"நானும் தனிதான். ஒரு விதத்துல.  ஒரே சிஸ்டர். கல்யாணம் ஆயிருச்சு. எப்பவும் டூர்தான். படிக்கிறப்ப ஹாஸ்டல். அப்பா... அம்மா எல்லாம் ஊருக்குப் போகிற சமயத்துலதான்.”

நந்தா ஸ்பூனால் மெல்ல கிளறிக் கொண்டிருந்தாள். செர்ரி உருகிய ஐஸ்கிரீமில் சிவப்பாய் அழகாய் மிதந்தது.

"எனக்கு எப்படிச் சொல்றதுன்னு முதல்லே புரியலே... உங்க ஃபோட்டோவை... புவனி ஒரு தடவை கொண்டு வந்தா... நீங்க எல்லாம் டூர் போனப்ப எடுத்ததாம். அப்பவே விசாரிச்சேன்... புவனி கூட கிண்டல் பண்ணா. என்னடா... அவளைப் பத்தியே கேட்கறேன்னு..."

மனசு என்ன சொல்ல வருகிறான். ஜிலீரென்று அவன் வார்த்தைகளைக் கேட்க தயாராகிக் கொண்டிருந்தது.

“அதனாலதான் கேட்டேன்... புவனி எதுவும் சொல்லலியான்னு... என் மனசைப் புரிஞ்சுகிட்டு இருப்பான்னு நினைச்சேன். அல்லது இதை நானே உங்ககிட்டே கேட்கணும்னு விட்டுட்டாளோ..."

சொல்லேன்... சீக்கிரம்...

"நந்தா..." என்றான். தன் பெயரை அவன் 
முதன் முறையாக சொல்ல பரவசம் உணர்ந்தாள். "என்ன...” நிமிர்ந்து அவனைப் பார்க்க எதுவோ தடுத்தது.

'ஐ லவ் யூ..." 

சட்டென்று காதடைத்தது. என்ன சொன்னான்! அதைத்தான் சொன்னானா! கேட்டது சரிதானா!

"நிஜம்மாவே உன்னை மனப்பூர்வமா நேசிக்கறேன். எங்க வீட்டுல கூட சொல்லி வச்சுட்டேன். உன்னோட விருப்பம் புரியாமே இதுல எதுவும் செய்ய முடியாதுன்னு தோணிச்சு... உடனே உன்னைப் பார்க்கணும், கேட்கணும்னு தோணிச்சு... என்னால உன்னைப் பார்க்காமே இருக்க முடியலே நந்தா..."

அத்தனை அழுத்தமானவன் போலத் தோன்றியவனா இப்படிப் படபடவென்று
பேசுகிறான்.

“ஏன் நந்தா... என்னை உனக்குப் பிடிக்குமா..."

கெஞ்சலான தொனியில் கேட்டான்.

நந்தாவுக்கு சட்டென்று சூழ்நிலை உறைத்தது. நல்ல வேளை பார்லரில் வேறு எவரும் இல்லை. கல்லாவில் இருந்தவரும் சற்று தள்ளி இவர்கள் பேச்சு கேட்காத தொலைவில் இருந்தார்.

"வேணாம்... இந்தப் பேச்சை விடுங்க..."

“ஏன்..."

“என்னை... என்னோட உடம்பு... குறை..." பேச்சு திணறிது. மனசுக்குள் அழுகை ததும்பியது.

"நந்தா... பிளீஸ். என்னைப் புரிஞ்சுக்க... ஐ நோ எவ்ரிதிங் அபவுட் யூ... எனக்கு நீ வேணும்... ஐ லவ் யூ... ஐ நீட் யூ..."

பாதி ஐஸ்கிரீம் உருகி ஜில்லிப்பு இழந்து விட்டது. மோகன் துளிக்கூட சாப்பிடவில்லை. இவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவள் தவிப்பு முகத்தில் தெரிந்தது. கை விரல்களை மூடித் திறந்தான்.


(தொடரும்)

No comments: