May 16, 2021

காதல் வரம் 6

 

#காதல்_வரம் - 6

ரிஷபன்

நந்தா நடந்துதான் திரும்பினாள். மோகனுக்கு மனசாகவில்லை. 'நானே கொண்டு போய் விடுகிறேன்' என்று எவ்வளவோ கெஞ்சினான்.

"இல்லே... எனக்கு நடக்கணும் போல இருக்கு... நடந்தே போறேன்..."

"பிளீஸ்... நந்தா...'

"பிளீஸ்... மோகன்...”

திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு போனான். எப்படித்தான் நடந்தாளோ... மனசு திடீரென வெறுமையாகி ஹாவென்றிருந்தது. 

ஹாஸ்டல் வாசலில் வாட்ச்மேன் சிரித்தது பதியவில்லை. உள்ளே நடந்து அறைக்குள் நுழையும் வரை படபடப்பு இருந்தது. கட்டிலில் சாய்ந்தபோது நிதானம் வந்தது.

"இப்ப அவசரமில்லே... நந்தா... என் மனசைச் சொல்லிட்டேன். உன் பதில் எதுவானாலும் யோசிச்சு சொல்லு... யெஸ் ஆர் நோ... உன்னை நான் நேசிக்கிறது மாறாது."

இவள் பதில் சொல்லத் தயங்கியதில் மோகன் சொன்னான்.

எப்படி ஒத்து வரும்... என்னவென்று சொல்ல. அன்றிரவு சரியான தூக்கமில்லை.

மறுநாள் தற்செயலாகத்தான் அதைக் கேட்க நேரிட்டது. இவள் அறையில் இல்லை என்ற நினைப்பிலோ... என்னவோ... ரஞ்சனி உரக்கவே பேசினாள்.

"எப்படி சொல்றே... நந்தாவுக்கு நிச்சயம் செலக்ட் ஆயிரும்னு..." என்றாள் புவனி.

அவள் அறை எதிர் வரிசையில்தான் இருந்தது. ஆனால் பெரும்பாலும் நந்தாவின் அறையில்தான் மூவரும் கூடுவார்கள். அரட்டையும் இங்கேதான். தூங்குகிற..சாப்பிடுகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் நந்தாவின் அறைதான் அவர்களின் புகலிடம்.

"உனக்கே புரியும்..." என்றாள் வித்தியாசமான குரலில். "வேணா பாரேன்... ரிஸல்ட் வரும்போது...

"என்ன சொல்றே நீ... நந்தாவுக்கு தகுதி
இல்லையா"

"தகுதி இல்லேன்னு யார் சொன்னாங்க..."

"பின்னே...”

'அடிஷனலா ஒரு பிளஸ் பாயிண்ட்டும். இருக்கே. எந்தக் கேள்வியும் இல்லாம போஸ்ட் கிடைச்சுரும். எனக்கு அந்த மாதிரி எந்த காரண்டியும் இல்லையே..."

புவனியிடமிருந்து பேச்சில்லை.

"குறையா சொல்லலே. என்னோட பொஸிஷனைச் சொன்னேன்" என்றாள் ரஞ்சனி.

"நீ பேசற விதம் பிடிக்கலே... ரஞ்சனி...”

"நிஜம் எப்பவுமே உறுத்தும்... எனக்கும் அவ மேல விரோதம் இல்லே. மனசுல பட்டதைத்தான் சொன்னேன்"

புவனி மேலே எதுவும் பேசவில்லை. வினாடியும் நந்தா உள்ளே வரலாம் எந்த என்ற நினைப்போ. அல்லது இதை மேற்கொண்டு பேசப் பிடிக்க வில்லையோ.

நந்தா பின்வாங்கி திரும்பி நடந்தாள். கால் வலித்தது. வேகமாக நடந்து வராண்டாவைக் கடந்து பூச்செடிகளின் அருகில் வந்தாள்.

மனதில் எதுவுமில்லை. இனம் புரியாத கனம் மட்டும். எத்தனை நிமிடங்கள் ஆனதோ புவனி அவள் தோளைத் தொட்டதும் உணர்வு வந்தது.

"என்னடி இங்கேயே நின்னுட்டே..."

"பூ அழகா இருக்கு..."

"தினம் பார்க்கிறதுதானே..."

"எப்ப பார்த்தாலும் புதுசா இருக்கு..."

"ம்... விடிஞ்சுது போ... உன்னை ஆளைக் காணோம்னு பதறிட்டு வரேன்... நீ சாவகாசமா பூ பார்த்துகிட்டு இருக்கே. வா. போகலாம்."

எதுவும் பேச வேண்டாம். அவர்கள் பேச்சைக் கேட்டதாகக் கூட காட்டிக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்தாள்.

"நேத்து எப்படி பொழுது போச்சு..."

"ப்ச்... ரூம்லயே இருந்தேன்..." மோகன் நினைவு மேலெழும்ப கொஞ்சம் தடுமாறினாள்.

"இந்த வாரம் போகணுமா... மெட்ராசுக்கு."

"ம்... ரிஸர்வ் பண்ணியாச்சு..."

"உங்க ரெண்டு பேருக்குமே கிடைக்கணும். ஆல் த பெஸ்ட்..."

இருவரும் நந்தாவின் அறைக்குள் நுழைந்தனர். ரஞ்சனி வேறு உடை மாற்றிக் கொண்டு நின்றாள்.

 "உனக்காகத்தான் காத்திருக்கோம்... இன்னைக்கு ஐயப்பன் கோவில் போகலாம்னு சொன்னியே..."

“சீக்கிரம் டிரஸ் சேஞ்ஜ் பண்ணிக்க..."

 முகம் கழுவி ஜில்லிப்பில், உணர்வின் அழுத்தம் குறைய மனசு லேசாகி... வெளியில் வந்தாள்.

"இதுவே நல்லாத்தான் இருக்கு... போகலாமா...”

கண்ணாடியில் முகம் பார்த்து பொட்டு வைத்து திரும்பினாள்.

அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தனர்.

 "நேத்து ஏதாவது படிச்சியா..." என்றாள் ரஞ்சனி.

"ம்... அரை குறையா..."

"என்ன கேட்பாங்கன்னே புரியலே..."

"ஏதாவது ஆபீஸ் சம்பந்தமா இருக்கும்னு முன்னால அட்டெண்ட் பண்ணவங்க சொல்றாங்க.."

"டென்ஷனா இருக்கு... வீட்டுல கேட்டாங்க... ஆங்... சொல்ல மறந்துட்டேனே... உன்னைப் பத்தியும் விசாரிச்சாங்க. உனக்கும் இண்டர்வியூக்கு வந்திருக்கான்னு..."

நந்தா தன்னிச்சையாக நடந்தாள். புவனி பேச வில்லை. அஷோக் நினைவோ என்னவோ. ஏன், புவனி மோகனைப் பற்றி தன்னிடம் எதுவும் பேசவில்லை. மோகன்தான் சொன்னானே. அவளிடம் நந்தாவைப் பற்றி கேட்டதாக.. ஒருவேளை... அவளுக்கும் வேறு அபிப்பிராயமோ... நந்தாவைத் தேர்வு செய்வது சரியான முடிவில்லை... என்று வாதாடியிருப்பாளோ... நல்ல சிநேகிதி என்பது வேறு... நல்ல அண்ணி என்பது வேறு... என்ற தீர்மானமோ...

"வேற வரன் பார்க்கலாமே... மோகன்."

"ஏன்... அப்படிச் சொல்றே..."

“இல்லே... போயும் போயும் இவதானா கிடைச்சா. உன்னோட படிப்புக்கும், பதவிக்கும் வேற நல்ல வரன் கிடைக்குமே. மணவறையில் இவ சாஞ்சு சாஞ்சு நடந்தா நல்லாவா இருக்கும்?”

"அப்படியா சொல்றே...”

"நல்லா யோசிச்சு முடிவுக்கு வா... இப்ப அவசரப் பட்டு... அப்புறம் வருத்தப்படற மாதிரி ஆயிடப் போவுது..."

மனசுக்குள் கற்பனையாய் உரையாடல்கள் ஓடின. புவனி இப்படித்தான் பேசியிருக்க வேண்டும். பேசுவாள். என்ன பழகினால் என்ன... இப்போது ரஞ்சனிக்கு உள்ளூரத் தோன்றவில்லையா.. தன் ஊனம் தான் செலக்சனுக்கு பெரிய குவாலிஃபிகேஷன் என்று. தப்பில்லை. அவள் அப்படி நினைத்ததில். போட்டி, செலக்சன் என்று வரும் போது மனசு இப்படித்தான் ஆற்றாமைப்படும். தனக்குக் கிடைக்கிற வாய்ப்பு பறி போகிறதே என்று தோன்றும். அதுவும் எல்லா விதத்திலும் சமமான சிநேகிதிகளுக்கிடையே நிர்ணயிக்கிற விஷயம் பிறப்பில் குறை என்பது யாரால் சகிக்க முடியும்.

"எங்கேடி... வேகமாய் போறே... கோவில் இந்தப் பக்கம் இருக்கு..." என்று புவனி தடுத்து நிறுத்தினாள்.

ஐயப்பன் கோவில் இதர கோவில் அமைப்புகளில் இருந்து வித்தியாசப்பட்டு மலையாள வாசனை அடித்தது. அழகான தீபங்கள்... சட்டென்று மனசு ஒன்றிட நந்தா கண்மூடிப் பிரார்த்தித்தாள்.

'ரஞ்சனிக்கு நிச்சயம் கிடைக்கணும்...'

என்னவோ திடீரென மனதில் அமைதி வந்தது. மனப்பூர்வமாய் வேண்டியதில் பதற்றம் போனது. காரணமின்றி ரஞ்சனியைப் பார்த்துச் சிரித்தாள்.
வலம் வந்த பின் மூலையாய் ஒரு இடம் தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.

'அஷோக் என்ன சொன்னார். மதியம் பேசிக்கிட்டு இருந்த போலிருக்கே..."

"ஸ்பெஷலா ஒண்ணும் இல்லே."

"கொடுத்து வச்சவ... நேர்ல பார்க்க முடியாட்டியும் வாய்ஸ் கேட்டுரலாம்..."

"இவளும்தான் கொடுத்து வச்சவ..." என்றாள் புவனி நந்தாவைத் தொட்டு.

"என்ன சொல்றே..." என்றாள் ரஞ்சனி புரியாமல். நந்தாவும் விழித்தாள். ஒருவேளை... மோகன் வந்து விட்டுப் போனது தெரிந்து விட்டதா...

"சரியான அழுத்தம்டி... நீ" என்றாள் புவனி.

புரிந்து விட்டது . மோகன் சொல்லியிருக்க வேண்டும்.

 "ஸண்டே ரூம்லயே அடைஞ்சிருந்தியா... என்னைப் பார்த்துச் சொல்லு..."

"போடி..."

"ஏய் எனக்கும் புரியறாப்ல பேசுங்க..."

"உன் பதில் என்னன்னு என்னைப் போட்டு அரிக்கறான். இந்த ஸண்டே வரட்டுமான்னு கேட்கச் சொன்னான்."

"யாருடி அது..."

"மோகன்... என்னோட பெரியப்பா பையன்..."

"அவனுக்கு நந்தா வேணுமாம்" என்றாள் புவனி.

ரஞ்சனிக்கு வாயடைத்துப் போனது. பேசாமல் சிநேகிதியைப் பார்த்தாள், கையைப் பற்றி இழுத்துக் குலுக்கினாள்.

"நெஜம்மாவே சந்தோஷமா இருக்குடி.. ஐயாம் வெரி வெரி ஹேப்பி.."

புவனி நந்தாவின் முகம் பற்றித் திருப்பினாள்.

"சொல்லுடி... உன் பதில் என்ன... என்னை ஏமாத்த முடியாது. மோகன் வேணா யோசிச்சு சொல்லுன்னு போயிருவான். என்கிட்டே அது நடக்காது... அவனைப் பிடிக்குதா சொல்லேன்...”

நந்தா இறுக உதடுகளை அழுத்திக் கொண்டிருந்தாள்.

"போன வாரம் பஸ்ல... இவ புராணம்தான்... என்னமா உருகறான்... யூ டோண்ட் பிலீவ்... என்ன சொன்னான் தெரியுமா... நீ ஒரு முழுமையான பெண்ணாம்.... அவன் அப்படித்தான் உணர்றானாம்... லவ்வுல உளர்றியான்னு கூடக் கேட்டுட்டேன். இல்லவே இல்லைன்னு அடிச்சு பேசறான்."

"இவ கூடப் பேசிப் பழக்கமே இல்லையே..." என்றாள் ரஞ்சனி

‘அதுதான் எனக்கும் ஆச்சர்யம்... ஆனா அவன் என்ன சொல்றான் தெரியும்... பேசினாத்தானா, பழகினாத்தானா.. ஐ நோ ஷீ ஈஸ் மை கேர்ள்.. என்னால அப்படித்தான் நினைக்க முடியுதுங்கிறான். நான் நெஜம்மா  சொல்லிட்டேன்... இது மட்டும் சக்ஸஸ் ஆனா,    மோகன் நீதான் லக்கிஃபெல்லோ.  நந்தா உனக்குக் கிடைக்கணும்னு வேண்டிக்கன்னேன்...”


புவனி அப்படியா சொன்னாள்! மனசு அளவில் எல்லோருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறோம். ஏதோ சில நேரங்கள்... சில உணர்ச்சிகள்... எதையோ யோசிக்காமல் பேசினாலும் அடிப்படையில் பிறர் நலம் விரும்பி.

மோகன் இந்த அளவு என்னை நேசிக்கிறானா. முழுமையான பெண்ணாகவா பார்க்கிறான். அதனால் தான் என்னை இயல்பாகப் பார்த்தானா. பரிதாபம் பார்வையில் தடவாமல்.

"என்னடி யோசிக்கறே... சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்காத மாதிரி..."

"இவதான் இனிமே சாமி... பாவம் மோகன்... இவ இஷ்டத்துக்கு ஆடணும்..."

சிநேகிதிகளின் கேலி சந்தோஷமாக இருந்தது. தலை குனிந்து சிரித்தாள்.

"என்ன சொல்றது..."

"இந்த வாரம் நான் மெட்ராஸ் போகணுமே. ஸண்டே இருக்க மாட்டேனே. நாளைக்கு அவர் வருவாரா..." என்றாள் நந்தா மெல்ல.

“போச்சுரா. அர்ஜெண்ட் காதலா...”

மீண்டும் அங்கொரு சிரிப்பொலி எழுந்தது.

-முற்றும்

30 வருடங்களுக்குப் பின் உங்களோடு சேர்ந்து நானும் வாசிக்கிறேன்.

வாழ்த்திய/வாழ்த்தும் அனைவருக்கும் அன்பு நன்றி.

No comments: