May 16, 2021

காதல் வரம் 4

 

#காதல்_வரம் - 4

ரிஷபன்

புவனி இரண்டு நாட்களில் வந்து விட்டாள். முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ரூமுக்குள் நுழைந்ததும் டிராவலிங் பேக்கை விசிறினாள். ரஞ்சனி எழுந்து ஓடிப் போய் அவளைக் கட்டிக் கொண்டாள்.

"என்னடி... குட் நியூஸ்தானே..."

"ம்..."

நந்தா நிதானமாய் எழுந்து புவனியிடம் வந்தாள். கைபற்றிக் குலுக்கினாள்.

“வாழ்த்துக்கள்..."

"எப்படி செலிபரேஷன்..."

"எப்ப வேணா...'

"இங்கே வா... உட்கார்... டீடெய்லா சொல்லு.. வுட் பி ஃபோட்டோ இருக்கா."

புவனி குதூகலமாய்த் தெரிந்தாள். ஹேண்ட் பாகினுள் கவரில் இருந்த போட்டோவை எடுத்துக் கொடுத்தாள். தடியான வாலிபன்தான். கரேல் என்று
நிறம். அடர்த்தியான மீசை. என்ஜினீயராம். பெயர் அஷோக்.

ரஞ்சனி நுணுக்கமாக விசாரித்துக் கொண்டிருந்தாள். நந்தா மனசு சட்டென்று அதில் பதிய மறுத்தது. எதிர்ச் சுவரில் நீர்வீழ்ச்சி வெறும் புகைப்படமாய்த் தெரிந்தது.

"டிரான்ஸ்பருக்கு டிரை பண்ணணும்... கிடைக்கு மாடி... "

"நிச்சயமா... ஆமா... உங்க வீட்டுல என்ன
சொன்னாங்க..."

நந்தா எழுந்து நின்றாள். கால்கள் இரண்டுமே தொய்ந்து போனது போல் பிரமை தட்டியது. ரஞ்சனி தான் ஓடி வந்து தாங்கியிருக்க வேண்டும்.

"என்னடி ஆச்சு..."

நந்தாவுக்கு விழிப்பு வந்தது.

"ஒண்ணுமில்லே... லேசாத் தலைவலி...

"டாய்லட் போகணுமா..."

"ம்ஹும்...சரியாப் போயிரும்... ஸாரி._"

புவனிக்குத் தனது கனவுகளைக் கலைத்து நந்தாவைக் கவனிக்கச் சில வினாடிகளாயின.

"ஆர் யூ ஆல்ரைட்.." என்றாள்.

 "ஸாரி..." என்றாள் நந்தா மீண்டும்.

"ஓகே... ஓகே... நீ ரெஸ்ட் எடு நந்தா. அப்புறம் பேசலாம்"

படுத்துக் கொண்டாள் நந்தா. கண்களை மூடி அமைதி கொள்ள முயன்றாள்.

"புவனி... வுட் பீக்கு லெட்டர் எழுதப் போறியா.." என்றாள் ரஞ்சனி.

சூழ்நிலையை மீண்டும் கலகலப்பாக்க முயல்கிறாள்.

"ஃபோனே பேசிட்டேன். டெய்லி... பேசலாம்னு ஐடியா..."

ஓங்கி முதுகில் அறைந்திருப்பாள் போலும்.

"ஸ்ஸ்... என்னடி இது..."

"வலிக்குதா...”

“பின்னே...”

"பரவாயில்லே... சகிக்சுக்கோ... பழகிக்க... இனிமே எல்லா வலியும் வரும்..."

நந்தா ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். எண்ணங்கள் தூங்கினாளோ. அலை பாய்ந்ததில் எப்போது தூங்கினாளோ.

அது பகல் கனவு ரகம்தான். பின்னே மாலை ஐந்து மணிக்குத் தூங்கிக் காணும் கனவு இரவில் வருவதோடு சேர்த்தி இல்லையே.

யாரது என்று தெரியவில்லை. ரொம்ப பழகிய நபர் போலத்தான் முகம் தெரிந்தது. அருகில் வந்து கன்னத்தைத் தொட்டான்.

'ஏன் இவ்வளவு லேட்..'

'இல்லியே... சொன்ன டயத்துக்கு வந்துட்டேனே.'

'எப்படி பதறிட்டேன்... தெரியுமா?'

கனவில் ஆச்சர்யம் காத்திருந்தது. நன்றாக நடந்தாள். கூடவே நினைப்பும். எப்படி நடக்க முடிகிறது... இது நான் இல்லையா... இல்லை... அவளேதான். உடை... உணர்தல்... எல்லாம்... அவளே...

"எதுக்குப் பதறணும்..."

"பிகாஸ்... ஐ...லவ்...யூ' என்றான் நிறுத்தி அழுத்தந்திருத்தமாக.

'என்னையா...'

உன்னைத்தான்... என் நந்தாவைத்தான்'

மேலும் வலுப்படுகிற தோரணையில் அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்.

விழிப்பு வந்து விட்டது.

சூழ்நிலை உணர சில வினாடிகளாயின. அறையில் எவருமில்லை. வெட்கமும் பதற்றமும் புரிந்து கேலி செய்ய ஆளில்லை. அப்படியே கனவை மனதில் மறுபடி ரீப்ளே செய்தாள்.

“யாரது. அந்த மனிதன் யார்.  நன்றாகப் பழகிய முகம் போல. நிறைவேறாத அடி மனசு ஆசையா. நந்தா யோசித்துக் கொண்டிருந்தாள்.


(தொடரும்)

No comments: