May 16, 2021

காதல் வரம் 3

 

#காதல்_வரம் - 3

ரிஷபன்

பெரிய தொழிற்சாலை. டவுன்ஷிப்பில்
ஹாஸ்டல். கம்பெனியே கட்டிக் கொடுத்திருக்கிறது.

ஒன்பது மணி ஆபீசுக்கு எட்டு ஐம்பதுக்குக் கிளம்பினால் போதும். புவனி டி.வி.எஸ். 50 வைத்திருக்கிறாள். இல்லா விட்டாலும் பிரச்னை இல்லை. ஆபீஸ் ஷட்டில் வரும். 

"நீ ஒரே பொண்ணுன்னு சொன்ன மாதிரி
ஞாபகம்..." என்றாள் ரஞ்சனி.

 "ஆமா... யார் இல்லேன்னா... இப்ப..."

"உன் பிரதர் நேத்திக்கு தேடி வந்ததா..."

 “எனக்கு பெரியப்பா இருக்கக் கூடாதா...'

ரஞ்சனிக்கு அடர்த்தியான தலைமுடி. ஒல்லிதான். டிரஸ் லெக்ஷனில் நேர்த்தி இருக்கும். காட்டன் ஸாரியை அழகாகக் கட்டியிருந்தாள். பூக்களும் புள்ளிகளுமாய் க்ரீம் கலரில் ஸாரி.

"அசத்தறே...” என்றாள் புவனி.

தான் கலர் மட்டு என்ற குறை ரஞ்சனிக்கு உண்டு. "ப்ச்.. என்ன பண்றது.. கலரா இல்லையே..."

“ஆனா... அழகா இருக்கியே..."

"ராஜி என்ன கலர்... கடிச்சுத் திங்கலாம். ஒவ்வொரு ஸாரியும் நெஜம்மாவே தூள்...”

"ப்ச்... ஸாரி கட்டிக்கவே தெரியாது... சும்மா சுத்திக்கிட்டு வருவா..."

"அப்பவும் அழகாகத்தான் இருப்பா..."

'ஓகே... ஓகே... எல்லோருமே அழகுதான்..." என்றாள் நந்தா இடைமறித்து.

"என்னடி கிண்டலா பண்றே..."

"சீக்கிரம் கிளம்பணும்... மணி இப்பவே எட்டே முக்கால்..."

அறையைப் பூட்டிக் கொண்டு வெளியேறும் போது... எதிர் அறைப் பெண்களுக்கு 'மார்னிங்' சொல்லி... வாசலுக்கு வந்து... இவ்வளவு அவசரத்திலும் இரு பக்க பூச்செடிகளை ரசனையோடு பார்த்து...

ரஞ்சனி டாட்டா காட்டிவிட்டு நடந்தாள்.

புவனி கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டாள். வண்டியை ஸ்டார்ட் செய்து நந்தா அமர்ந்ததும் கிளம்பினாள். கையாட்டினாள். வழியில் மீண்டும் ரஞ்சனி

"என்னடி விஷயம்... இப்ப என்ன அவசரமா... ஊருக்கு..."

பாதி வார்த்தைகள்தான் புவனிக்குக் கேட்டன.

"அப்புறம் சொல்றேன்” என்று கத்தினாள்.

நந்தா சரியென்றாள். இவர்களை மற்ற நபர்கள் வேகமாய்க் கடந்து போனார்கள். மெயின் ரோட்டிற்கு வந்ததும் இதர வாகனங்களும் கூட விரைந்தன. மறுபடி தொழிற்சாலை ரோட்டில் திரும்பி வண்டி விரைந்தது.

மதியம் உணவு இடைவேளையின் போதுதான் புவனி அவளைத் தேடிக் கொண்டு வந்தாள்.

"ஈவ்னிங் நீ ஷட்டில் பஸ்லதான் போகணும்."

"ஏன்...” என்றாள் நந்தா ஃபைல்களை ஒதுக்கியபடி.

அலுப்பாக இருந்தது. காலை வந்தது முதல் எத்தனை பில்கள்... சரிபார்த்து... கையெழுத்திட்டு... கை வலித்தது.

"நான் இப்பவே ரூமுக்குப் போறேன்... மோகன் வந்திருவான்..."

"மோகனா... யாரது..."

"நேத்திக்கு வந்தானே... அவன்தான்..."

"என்ன விஷயம். அர்ஜெண்டா கிளம்பறே..."

"தெரியலே... வந்து சொல்றேன். ரஞ்சனிகிட்டே சொல்லிடறியா..."

"சாப்பாடு..."

"..வேணாம். வெளியே பார்த்துக்கிறேன்...'

பனிரெண்டே காலுக்கு ரஞ்சனி வந்தாள்.

"வரியா..."

இருவரும் கேன்டீனை நோக்கி நடந்தனர். "புவனி கிளம்பிப் போயிட்டா..."

"ம்..."

"என்ன விஷயம்னு தெரியலே" என்றாள் நந்தா.

ரஞ்சனி நந்தாவைப் பார்த்தாள். இந்த முகத்தில் குழந்தைத் தன்மைதான் தெரிகிறது. விழிகளில்தான் எவ்வளவு கருணை. தன் குறையில் மனம் நொந்து வெறுப்பைப் பிரதிபலிக்காத விழிகள்.

"என்னடி... அப்படிப் பார்க்கறே..."

"...ம்... நான் ஆம்பளையா பொறந்திருந்தா... உன்னைத்தான் கட்டியிருப்பேன்..."

"ச்சீ... பொய் சொல்லாதே..."

"நெஜம்மாதான் சொல்றேன்... ஏண்டி... இவ்வளவு அழகாய் பொறந்தே."

"நான் அழகா! இப்ப சொல்லதே. நடக்கும் போது சொல்லு..."

தட்டுகளை வாங்கிக் கொண்டு... சாப்பிடும் இடத்தில் அமர்ந்தனர்.

"அதுதாண்டி எனக்கும் புரியலே. கடவுள் நம்பிக்கையே எனக்கு சில நேரங்களில் இல்லாம போயிரும்... அதுவும்... உன்னைப் பார்க்கும் போது... நிச்சயமா... கடவுள் மேல எரிச்சலே வரும்..."

நந்தா தலை குனிந்திருந்தாள். கை தன்னிச்சையாய் கவளம் விழுங்கியது. ரேடியோ இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தொழிலாளர் நிகழ்ச்சி ஏதோ ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பெண்களுக்காக இடம் ஒதுக்கி குறுக்கே பிளைவுட் தடுப்பு. வெளியே போகும் இடத்தில் மட்டும் தடுப்பு இல்லை. அந்த வழியாகப் போகும் சக சக ஆண் அலுவலர்களின் பார்வை சாப்பிடும் பெண்களின் மீது தற்செயலாகவும் வேண்டுமென்றும் பதிந்து போயின.

"இந்தத் தடுப்பு அனாவசியம் இல்லே" என்றாள் நந்தா திடீரென.

ரஞ்சனி நிமிர்ந்து பார்த்தாள். இவள் பார்வையைச் சந்தித்து ஒருவன் அசடு வழிந்து விட்டு நகர்ந்தான்.

"என்னமோ... அதிசயப் பொருளைப் பார்க்கிற மாதிரி வெறிச்சு பார்க்கிறாங்க. அதனாலதான் இந்த ஏற்பாடு..."

"என்னோட ஃபீலிங். இந்தத் தடுப்பு இல்லேன்னா இவங்க நடவடிக்கை மாறிடும்னு."

"இல்லே நந்தா. நீ நினைக்கறது தப்பு. அவ்வளவு சுலபமா ஆண் மனசு மாறாது. இது அடிப்படை குணம். இயல்பு..."

நந்தா பேசவில்லை. ரஞ்சனி சுபாவம் தெரியும். "புவனி எதுக்காக ஊருக்குப் போறா..."

"மேரேஜ் செட்டில் ஆகலாம்னு தோணுது.'

உள்ளூர என்னவோ உறுத்தியது. அதை ஏன் தன்னிடம் சொல்லியிருக்கக் கூடாது?

"தப்பா நினைக்காதே. என்கிட்டேயும் அதைச் சொல்லியிருக்க மாட்டா. நேத்து நாங்க வெளியே போனபோது தற்செயலா பேச்சுவாக்குல விஷயம் வந்திருச்சு. ஃபைனலா ஒரு முடிவு தெரிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தாளாம்"

"ஓ..."

"பெண் பார்த்துட்டு போனாங்களாம். ஒருவேளை அதற்காகத்தான் போயிருப்பான்னு நினைக்கறேன். இந்த வாரம் முடிவை சொல்லி அனுப்பறேன்னு சொன்னாங்களாம்.அப்படின்னா நிச்சயம் செஞ்சுக்குவாங்கன்னு நினைக்கறேன்..."

கை கழுவிக் கொண்டு வெளியில் வந்தனர். எதிர்ப்படுகிற நபர்களுக்கு வழிவிட்டு வழிவிட்டு நீண்ட காரிடாரில் நடந்தபோது புது மனிதர்களின் பரிதாபம் கலந்த பார்வையைச் சந்திக்க நேர்ந்தது.

"என்ன நந்தா..."

"ஒண்ணுமில்லே. என்னைப் போய் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னியே. கேலியா பரிதாபமா..."

"இரண்டும் இல்லே. ப்யூர் லவ்..."

"பொய் சொல்லாதே..."

"நம்பலேன்னா போ..."

நந்தாவை அவள் சீட்டில் விட்டு விட்டு ரஞ்சனி போய் விட்டாள். ஃபைலில் மனசு பதிய மறுத்தது. ப்யூர் லவ்... நிஜமான நேசம்... இருக்கிறதா... எப்படி சாத்தியம்... அதுவும் என் மீது.

முதல் தடவையாக அழுகை வந்தது. என்னை மட்டும் ஏன் இப்படி படைத்தாய்? எழுந்து டாய்லட்டிற்குள் போனாள்.

(தொடரும்)



No comments: