February 05, 2011

லவர்ஸ் டே

கல்யாண மண்டபத்தில் கவனித்தேன். பாட்டி இலையில் போட வந்த ஜாங்கிரியை கையில் வாங்கிக் கொண்டார்.

'தாத்தாக்கு ரொம்பப் பிடிக்குமாம்'

அவரால முன்ன மாதிரி நடக்க முடியல. இவங்க ரொம்ப வற்புறுத்தி அழைச்சா .. என்னை மட்டும் போயிட்டு வரச் சொன்னார். செத்த ஆட்டோ பிடிச்சு தரியாடா..

என் டூ வீலர்ல ஒக்கார்ந்து வரேளா..

விழுந்துருவேண்டா

மாட்டிங்க .. நா மெதுவா போறேன்.. ஆட்டோ பிடிக்க அரை பர்லாங் போகணும்.

பாட்டியிடம் கஸ்தூரி மஞ்சள் வாசனை. வாலிபத்தில் நிச்சயம் தெருப் பையன்களை கலக்கி இருந்திருப்பார்.

தயங்கினாரே ஒழிய சகஜமாய் உட்கார்ந்திருந்தார். துளி ஆட்டம் இல்லை. பதவிசாய் பல நாள் போன ஜோரில் வந்தார்.

வீட்டு வாசலில் இறக்கி விட்டதும் உள்ளே வரச் சொன்னார். தாத்தா பார்க்கணுமாம்.

'பட்டுப் பொடவையை அப்புறம் எப்ப கட்டறது அவ.. ' என்று கிண்டலடித்தார் தாத்தா.

ஜாங்கிரியை கொடுத்ததும் அவர் முகத்தில் ஒரு பளீர்.

'உன்னை பக்கின்னு நினைச்சிருப்பா ' என்றார் அப்பாவும் விடாமல்.

எனக்கு டம்ளர் நீர் . அதுவும் ஜில்லுன்னு தரலாமா என்று கேட்டு.

சற்றே பெரிய வீடு. இவர்களைத் தவிர யாரும் இல்லை. தாத்தா உயரம் . பருமன். பாட்டி குள்ளம். தாத்தா தளர்ந்திருந்தார். எழுந்து நடக்க பிரயத்தனம் . பாட்டி விசுக் விசுக்கென்று நடை.

அந்த நாளைய புகைப்படங்கள். கருப்பு வெள்ளை. கோவில் யானை முன் பெரிய கூட்டமாய் மனிதர்கள். ஒருத்தரைக் காட்டி தாத்தாவோட அப்பா என்றார் பாட்டி.

தாத்தாக்கு சாப்பாடு ? என்றேன்.

கஞ்சி தான்..

நீ ஒரு டம்ளர் சாப்பிடறியா .. தேவாமிர்தமா இருக்கும்..

தாத்தா எது சொன்னாலும் ஒரு நையாண்டி. அதற்கு பாட்டி அலட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு புன்சிரிப்பு மட்டும்.

புழுங்கரிசிக் கஞ்சி தான். நார்த்தங்காயை லேசாக கரைத்திருந்தார். நாக்கு இனித்தது.

மீண்டும் தண்ணீர் டம்ளர். 'எது சாப்ட்டாலும் வாயை கொப்பளிச்சிடு' என்று இதமாய் ஒரு அட்வைஸ்.

'வரேன்' என்றேன்.

பாட்டி வாசல் வரை வந்தார் தடுத்தும் கேட்காமல்.

'பசங்க வெளியூரா'

'இல்லடா .. இங்கதான்'

இவர்களைத் தனியாக விட்டா.. என் புருவம் ஏறி இறங்கியது.

'நீயும் ஒருத்தன்டா '

என் கன்னத்தை செல்லமாக வழித்தார். நான் அழுதிருக்க வேண்டும். திரும்பும் போது பாதை மறைத்தது.

'என்ன லவர்ஸ் டே கொண்டாடிட்டு வரீங்களா.. '

வீட்டு வாசலில் நின்று வழி மறைத்து பாதி கோபமாய் மனைவி கேட்டாள்.

'ஆமாம் ' என்று தலையசைத்தபோது அதில் உண்மை இருந்தது.