
மாரி போய்க் கொண்டிருக்கிறான் என்று.
என்னை விட வயதில் பெரியவன். நிச்சயமாய் அவனை ‘அவன்’ என்று சொல்லக் கூடாது.
என் சிறு வயதில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் தெருவின் பிரதான அடையாளம் ‘செங்கமா முனீஸ்வரர் கோவில்’
செங்கண்மால் ஈஸ்வரன் தான் ‘செங்கமா’ ஆகிவிட்டது என்று என் கணிப்பு.
கோவில் முன்பு கொஞ்சம் பயம் கொஞ்சம் பக்திக்கு சொந்தமாய் இருந்தது. இரவு வேளைகளில் வீட்டின் பின் புறம் போகப் பயப்படுவோம்.
90 அடி நீளம் உள்ள வீடுகள் தான் தெருவில். அதன் பின் வீடு சைசுக்கு வெற்றிடம்.
கிணறு.. தோட்டம்.. கடைக் கோடியில் கழிப்பறை. இருட்டுவதற்குள் சுச்சா.. கக்கா வேலைகள் எல்லாம் முடித்துக் கொண்டு விட வேண்டும். பன்றிகள் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்த காலம்.
கழிப்பறைக்குப் பின்னால் ஆறடிச் சந்து என்கிற பெயரில் பொதுச் சாக்கடைப் பிரதேசம் மதிலை ஒட்டி.
ஸ்ரீரங்கம் சுற்று மதில்களால் சூழப்பட்ட பிரதேசம். சுஜாதா ஒரு கதையில் சொல்லி இருப்பார். ஏதாவது ஒரு வீட்டு மாடியில் ஏறினால் போதும். தாவித்தாவி கடைசி வீடு வரை அந்தரத்திலேயே பயணம் செய்யலாம்!
இந்த மதிலில் தான் முனீஸ்வரர் இரவு வேளையில் பவனி வருவதாய் ஒரு தகவல் எல்லா அம்மாக்களாலும் பரப்பப்பட்டு முரட்டுப் பிள்ளைகளை வழிக்குக் கொண்டு வரும் உபாயமாய் இருந்தது.
அந்த நாட்களில் அறிமுகமான இன்னொரு பயம் ‘மாரி’
வாய் கொள்ளாத பற்கள் துருத்திக் கொண்டிருந்த அவனைக் காட்டி மிரட்டுவார்கள். படிக்கிற காலத்தில் அறிமுகமான அவனைப் பல வருடங்கள் கழித்து பார்த்தபோது சொந்த வீடு வாங்கி அதே பகுதியில் வந்தபோது பெரிதாய் வளர்ந்திருந்தான். இப்போதும் பயமுறுத்துகிற மாதிரி.
அடுத்த வீட்டுப் பெண்மணியை பால் கேனுடன் சைக்கிளில் அனாயசமாய் டபுள்ஸ் அடித்துப் போகும் அழகிலாகட்டும்.. தெருப் பையன்களின் கலாட்டாவிற்கு அடி பணிந்து அவர்கள் மகிழ்ச்சியைக் கூட்டுவதிலாகட்டும்.. மாரி ஒரு சூப்பர் பிகர்.
இந்தத் தெருவில் அவதானித்தபோது தெரிய வந்த விஷயம் வீட்டிற்கு ஒருவராவது மன வளர்ச்சி குன்றியவர்களாய் இருப்பது. அதாவது மாரியைப் போலவே.
யாருடைய சாபம்.. அல்லது ஏன் இப்படி இந்தத் தெருவிற்கு மட்டும்.. புரியவில்லை.
ஸ்ரீரங்கம் நிறைய கதைகளுடன் எழுதுபவருக்காகக் காத்திருக்கிறது.. இன்னொரு சுஜாதா வந்தால்தான் பூர்த்தி ஆகும் போல!