அந்த நாட்கள் இனித் திரும்பி வருமோ..
வராதுதான்..
ஒவ்வொரு ஜனவரி முதல் நாளிலும்.. சரஸ்வதி பூஜை முடித்து எழுதத் தொடங்கும் போதும்.. ஒரு சிறுகதை எழுதியே தீர வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி.
இது தவிர ஒவ்வொரு திங்கட்கிழமையும் அலுவலகம் வரும் போது ஒரு கதையுடன் வர வேண்டும் என்றும்.
செய்தோம்.. சந்தோஷமாய். மதியம் உணவு இடைவேளையில் அவரவர் கொண்டு வந்த கதையைப் படிப்போம். திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றினால் சொல்வோம். எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்கிற ஆலோசனையும்.
தொடர் பிரசுரங்கள் இதனால் சாத்தியமானது !
என் சிறுகதை.. குறுநாவல்.. தொடர்ந்து மங்கையர்மலர்-ஆண்டு மலரில் பிரசுரம் பெற்றது. பிற இதழ்களிலும் கூட.
கதை எழுதுவது என்று மட்டுமில்லை.. எந்த செயலானாலும் அது குறித்த பேச்சும்.. ஒரு செயல் திட்ட அட்டவணையும்.. கூடவே கவனிக்க.. ஊக்குவிக்க ஒரு குழுவும் இருந்தால் பெரும்பாலான நமது அபிலாஷைகள் வெற்றி பெறும் என்பதை இதில் நாங்கள் உணர்ந்தோம்.
எங்களை எங்கள் அலுவலகத்தில் கொஞ்சம் பெருமையாகவே உற்றுப் பார்ப்பார்கள்.. ‘இந்த வாரம் யார் கதை வந்திருக்கு’ என்றோ அல்லது ‘கல்கியில் உங்க கதை படிச்சேன்’ என்றோ விசாரிப்பார்கள்/சொல்வார்கள்.
நண்பர் ஹரணி மீண்டும் அந்த பொற்காலத்தை மீட்டெடுத்திருக்கிறார் இந்த வருடம்.. கல்கி.. வாரமலர் என்று.
1000 கதைகளுக்கு மேல் அச்சில் பார்த்த சாதனை என் நட்பு வட்டத்தால்.. என் எழுத்தை நேசித்த/சிலாகித்த அன்பு உள்ளங்களால் சாத்தியமானது.
இதனாலேயே 22 நட்பு-எழுத்தாள வட்டத்தின் சிறுகதைகளைத் தொகுத்து பிரியத்தின் சிறகுகள் என்கிற தலைப்பில் ஒரு தொகுப்பு கொண்டு வர முடிந்தது.
சரஸ்வதியைத் தெய்வமாகப் பார்க்கிறதை விட.. எழுத்தாய்த் தான் பார்க்க முடிகிறது என்னால். சஹ்ருதயர்களின் படைப்புகளைப் படிக்கும் போது மனம் உணர்கிற மகிழ்ச்சியை நேரிலோ தொலைபேசியிலோ மானசீகக் கை நீட்டி வாழ்த்த முடிந்தது.. முடிகிறது..
உங்களை.. என்னை.. எழுதத் தூண்டுகிற.. எழுத வைக்கிற.. நம் சிநேகிதிக்கு
வெறும் வாழ்த்துகள் திருப்தி தராது.. முழுமையாய் ஒப்படைத்து இன்னும் இன்னும் நவ நவ படைப்புகளை நம் மூலம் வெளிப்படுத்த அர்ப்பணிக்கிற மனதைத் தர வேண்டுவோம்..
எனக்கு அறிமுகமான / நான் வாசித்த / வாசித்துக் கொண்டிருக்கிற அத்தனை படைப்பாளிகளுக்கும் அன்பு நல்வாழ்த்துகளுடன்..
ரிஷபன்.
