August 31, 2010

உதவி

இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்.

"ஸார்... உங்களைத்தான்."

"சொல்லு.." என்றேன், கொஞ்சங்கூட இளகாத குரலுடன்.

"அம்மாவுக்கு ரொம்ப முடியலே ஸார். அந்த ஊசியைப் போட்டே ஆவணுமாம். என் கையில சுத்தமா பைசா இல்லே" என்று அழுதான்.

ஒரு நாள் இரவு சினிமா பார்த்துவிட்டுத் திரும்பியபோது பழக்கமான ஆட்டோ டிரைவர்தான் அவன். அடுத்த தெருவில் எங்கோ குடியிருப்பதாகச் சொன்னான்.இத்தனை வீடுகளில் என்னை எப்படித் தேடிப் பிடித்தான்.

இவன் மட்டுமல்ல, எத்தனை நபர்கள்!

"சாப்பிட்டு நாலு நாளாச்சுங்க"

"பர்ஸை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போவணும்"

"நாலு குழந்தைங்க வேலை போயிருச்சு. ஒரு வாரமா அல்லாடறோம்."

"மாரியம்மன் கோவில்ல கஞ்சி ஊத்தறோம்."

விதவிதமாய் வேண்டுகோள்கள்! ஐந்து, பத்து, இருபது, ஐம்பது என்று எப்படியாவது பேசி மனதை உருக வைத்து பணத்தைக் கறந்து கொண்டு போய் விடுகிறார்கள்.

பிரேமா ஒரு முறை சொல்லிக் காட்டிவிட்டாள்.

" நான் எதுனா கேட்டா, இந்த மாச பட்ஜெட்ல எடமில்லேன்னு சொல்லிடுவீங்க. இந்த மாதிரி ஏமாத்து தர்மம் நிறைய பண்ணுவீங்க."

நேற்றைய சண்டையின் ஹைலைட்டே அதுதான். என்னை ஏமாற்றிப் போனவனை சினிமா தியேட்டர் முதல் வகுப்பு டிக்கெட்டு முன் வரிசையில் பார்த்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தாள்.

தீர்மானித்துவிட்டேன். இனிமேல் சுத்தமாய் 'இல்லை'.

ஆட்டோ டிரைவர் சட்டென்று என் கால்களில் விழுந்தான்.

"ஸார்... எப்படியாச்சும்... இரு நூறு ரூபா கொடுங்க. ப்ளீஸ்.."

உறுதியை மீறி மனசு ஆட்டம் கண்டது.

"இரு.. நானும் உன்னோட வரேன்".

ஷர்ட்டை மாற்றிக் கொண்டேன். பர்ஸில் ஐந்நூறு ரூபாய் இருந்தது.

" நீங்க எதுக்கு ஸார். வீணா அலைச்சல்.." என்றான்.

"பரவாயில்லை. நானும் வரேன்." என்றேன் விடாமல்.

பஸ்ஸில்தான் போனோம். ஹாஸ்பிடல் வாசலில் இறங்கி நடந்தோம்.

"எந்த பெட்.."

"லேடீஸ் வார்ட்ல.. ஸார்... பணத்தைக் கொடுத்தீங்கன்னா ஊசி வாங்கிட்டுப் போயிரலாம்..."

"மெடிகல் ஷாப்புக்கு நானும் வரேன்.."

அரை மனதாய் சம்மதித்த மாதிரி தோன்றியது. ஒரு வேளை நிஜமாகவே அவன் அம்மா சீரியசாய் கிடக்கிறாளா... அல்லது மெடிகல் ஷாப்பில் என்னெதிரில் மருந்து வாங்கிக் கொண்டு பிறகு அது வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து பணத்தை ஏமாற்றி விடுவானோ...சந்தேகப் பேய் மனதைப் பிடித்து ஆட்டி அதன் உச்சத்துக்குப் போக ஆரம்பித்தது.

சங்கடமான மன நிலையில் நடந்தபோதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன்.

"ஏய்.. பாபு.. நீ எங்கேடா இங்கே.."

எங்கள் வீட்டு வேலைக்காரி அஞ்சலையின் மகன்.

"அம்மாவுக்கு இருமல் .. மருந்து வாங்க வந்தோம்..." என்றான்.

எண்ணை காணா தலை, உடம்பில் புழுதி, போட்டிருந்த சட்டை, டிராயர்.. ஓ.. நான் கொடுத்தது. போன வாரம் பழைய துணிகளை ஒழித்தபோது .. 'என் புள்ளைக்கு எதுனாச்சும் தாங்கம்மா..' என்று அஞ்சலை கேட்டு வாங்கிப் போனது.

பிரேமா கூட சொன்னாளே 'அதையும் வித்துடுவா.. அவ எங்கே பையனுக்குப் போடப் போறா.. அதுக்கு பேசாம நானாவது ரெண்டு பாத்திரம் வாங்குவேன்' என்று.

நான்தான் வற்புறுத்தி இரண்டு செட் டிராயர், ஷர்ட்டை கொடுத்து அனுப்பினேன். இதோ எதிரில் நல்ல துணி அணிந்த பெருமிதத்தில் பாபு.

உள்ளூர ஏதோ உறுத்தியது.

இது வரை நான் செய்த உதவிகள் எல்லாம் என்னால் செய்ய முடிந்தவைதான். என் சக்தியை மீறி எதுவும் செய்யவில்லை. கொடுத்தபோது இருந்த சந்தோஷம்.. இம்மாதிரி நேரில் பார்க்கும் போது இன்னும் இரட்டிப்பாகிறது.

அதைவிட்டு சந்தேகத்துடன் துரத்திப் போனால் மனசு அலைபாய்ந்து உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?

அவன் தோளைத் தட்டி நிறுத்தினேன்.

"இந்தா.. மருந்து வாங்கிட்டு வா.."

ஹாஸ்பிடலுக்கு எதிர் திசையில் என் கால்கள் நடந்தன.

August 25, 2010

என்னுலகம்


அத்தனை தெளிவாக இல்லை

என்று விமர்சிக்கப்பட்ட

அறை வாசலில் நிற்கிறேன் ..

வழிதப்பிய நண்பன் எவரேனும்

வரக் கூடுமென ..

இறைக்கப்பட்டவை ..

எதற்கும் பயனில்லை ..

அவசரத்திற்கு கிடைக்காதவை ..

என விமர்சிக்கப்பட்ட

பொக்கிஷங்களின் மத்தியில்

என் இருப்பு.

சகித்துக் கொள்பவர்களும்

முகத்திற்கு நேரே

குறை சொல்லிப் போகிறவர்களும்

விலகிப் போனதும்

நான் சேகரித்த

என் செல்லங்களிடம்

சொல்கிறேன்..

'நாம் நமக்காகவே தான்

வாழ்கிறோம் '

அப்போது அவற்றின்

புன்னகையின் தரிசனம்

பிரத்தியேகமாய்

எனக்கு மட்டுமே!


August 23, 2010

எதற்கும் ஒரு நேரம்

இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. . பம்பரம் போல் சுழல வேண்டியிருந்தது. இறக்கை கட்டிக் கொள்ளாத குறை. அதுவும் வாக்களித்தபடி இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து விட்டனர், மச்சினி கல்யாணத்திற்கு.

பிருந்தாதான் கேலி செய்தாள்.

"என்னங்க. . எங்க வீட்டுக் கல்யாணமா.. இல்லே, உங்க வீட்டு கல்யாணமான்னே புரியலையே"

மனோகர் பேசாமல் சிரித்தான். சம்பந்தம்தான் உதவிக்கு வந்தார்.

"பாவம் மாப்பிள்ளை. . கொஞ்சம் கூட ரெஸ்டே இல்லாமே அலையறார். நெஜம்மாவே இந்த வீட்டுப் பிள்ளை மாதிரியே ஆயிட்டாரு. " என்றார் நெகிழ்ச்சியாக.

பிருந்தா கனத்திருந்த தன் வயிற்றைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.

"என்னாலதான் எதுவும் செய்ய முடியலே. ஒதுங்கி உட்கார வேண்டியதாப் போச்சு".

"நீ பேசாம இரு. உன்னை யார் வேலை செய்யலேன்ன குறை சொன்னாங்க. பாவம் இவரையே வேலை வாங்கறமேன்னுநான் ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டிருக்கேன்."

"எனக்கு ஒரு சிரமமும் இல்லே" என்றான் மனோகர்.

ஆனால் உள்ளூர மனசு பொருமியது. ஒரே ஓரு சிகரெட்... மனசு அந்தப் புகைக்கு ஏங்கியது.

பிருந்தா முதன்முதலில் இவன் கையில் சிகரெட்டைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.

"என்னாங்க. . நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?”

“வேணாங்க. . ப்ளீஸ். எங்க வீட்டுல யாருக்குமே இந்தப் பழக்கம் கிடையாது. உங்களுக்கு இந்தப் பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சா எங்கப்பா அரண்டு போயிருவார்" என்றாள் படபடப்புடன்.

புது மனைவி. எடுத்தவுடன் முகத்தில் அறைகிற மாதிரி பதில் வரவில்லை.

"இங்கே பாரு.. இதுல என்ன தப்பு? நான் என்ன செயின் ஸ்மோக்கரா. . எப்பவோ ஒரு தடவை ஒரு ரெப்ரெஷ்மெண்ட் மாதிரி. என்னவோ பழகிப் போச்சு. . விட முடியலே. இப்ப ரொம்ப குறைச்சுட்டேன் தெரியுமா. . காலையில ஒரு தரம். . நைட்ல ஒரு தரம். . அவ்வளவுதான்"

"ஐயோ ஒரு நாளைக்கு ரெண்டா"

"ஸ் ஸ் பேசாம இரு . சத்தம் போடாதே"

அன்று ஏதோ சமாதானம் சொல்லி அவளை வாயடைத்து விட்டான். ஆனாலும் அடிக்கடி கெஞ்சிக்கொண்டிருப்பாள். 'நிறுத்திடுங்க. . பிளீஸ். .'

இன்று இத்தனை அலைச்சல்களுக்கு நடுவில் ஒரே ஒரு சிகரெட்டிற்காக மூன்று நாட்களாகத் தவித்தது. இத்தனைக்கும் மார்க்கெட். . பழக்கடை. . மளிகை என்று மாறி மாறி அலைகிறான். கூடவே யாராவது ஒருத்தர். . பிருந்தாவின் தம்பி. . அவள் மாமா என்று மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று. தனியாய்ப் போக சந்தர்ப்பமும் வரவில்லை.

"என்ன மாப்பிள்ளை டல்லா இருக்கீங்க. . முடியலையா?"

"ஹி ஹி. . அதெல்லாம் இல்லை"

"இன்னொரு டோஸ் ஸ்ட்ராங்கா காபி வேணுமா. . ஃப்ரெஷ்ஷா ஆயிரும் அப்படியே. ." என்று சிரித்தார் வந்தவர். காபி பிரியர்!

"கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. மறுபடி ஈவினிங் மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு பண்ணணுமே"

விலகி வேறெங்காவது போனால் போதும் என்றிருந்தது. மாடிக்குப் போனான். கதவைத் திறந்தால் ஜில்லென்ற காற்று. தானிருப்பது தெரிய வேண்டாம் என்ற நினைப்புடன் கதவை மூடினான். வெளிச்சுவற்றில் கை வைத்து நின்றான்.

முகத்தில் காற்று அறைந்தது. இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்ததே அதிகம். இந்த நிமிஷம் அந்தப் புகை வேண்டும். யார் என்ன நினைத்தால் என்ன. முடிவு செய்து விட்டான். கிளம்பி வெளியே போய் ஆசை தீர இழுத்து விட்டு வரவேண்டும்.

வேகமாய்த் திரும்பியதில் ஏறக்குறைய அவள் மீது மோதியிருப்பான். நல்லவேளை.

"என்ன" என்றான் அதட்டலாக.

படியேறி வந்ததில் பிருந்தாவுக்கு மூச்சிறைத்தது. நெற்றியில் பொடிப்பொடியாய் வியர்வை பூத்திருந்தது.

"உங்களைப் பார்க்கத்தான்"

எரிச்சலாக ஏதோ சொல்லத் தோன்றியது. வேண்டாம். ரொம்ப சென்சிடிவ். கல்யாணத்திற்கு வந்த இடத்தில். . அழுது கொண்டிருந்தால். . அவ்வளவு நன்றாக இராது.. அதிலும் பிள்ளைத்தாய்ச்சி.

"சொல்லு"

"இந்தாங்க. . உங்களால எப்படியும் சும்மா இருக்க முடியாது. தவிச்சுப் போயிருவீங்கன்னு தெரியும். அதனால நானே போய் வாங்கி வந்திட்டேன். . மறைச்சி கொண்டு வரதுக்குள்ள.. அப்பப்பா. . என்ன கஷ்டம்."

சிரித்தாள். எதிரே பிரித்திருந்த உள்ளங்கையில் பாதி நைந்து ஒரு சிகரெட் !

"ரெண்டு வாங்கினேன். ஒண்ணு ஒளிச்சு வச்சிட்டேன். அப்புறம் தரேன்" என்றாள் குழந்தை போல.

எதுவும் பேசாமல் அவள் முகத்தைப் பார்த்தான்.

இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. . நெஞ்சுப் புகைச்சல் தணிந்து இதமாய் ஏதோ ஒரு உணர்வு பரவியது.

வாங்கி கசக்கி மூலையில் வீசினான்.

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம். . அனுபவிக்க. . உதறித்தள்ள. .

"விட்டுட்டேன்" என்றான் சிரிப்புடன்.

(ராஜம் மாதர் மலர் - பிரசுரம்)

August 20, 2010

வெள்ளை சிங்கம்




நிறம் முக்கியமா

சிங்கமாய் இருப்பதா..

பதில் தெரிந்து விட்டால்

வாழ்வின் அர்த்தம் புரிந்து விடும்..

கவிதை வந்து விட்டால்

நல்ல காகிதம் கூட

அவசியமில்லை..

எழுதிப் பழகும் மனசுக்கு !

எதையும் தள்ளிப் போட்டே

காலம் தள்ளுவதில்

ஒரே ஒரு நன்மைதான்..

எவரும் நம்மை

விமர்சிக்கப் போவதில்லை ..

கர்ஜனைக்கு முயற்சிக்கலாம்

முடியாவிட்டால்

முனகல் கேட்டால்கூட

போதும் ..

ஜடமாய் மரிப்பதை விட.



August 15, 2010

அம்மா என்றொரு மனுஷி

அம்மாவின் ஆசை எதையும் நான் இதுவரை நிறைவேற்றியதில்லை. பள்ளி நாட்களில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில் எனக்கு இலக்கு விதித்திருந்தாள்.

தமிழாசிரியர் குமரேசன் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் ஒவ்வொரு வருடமும் நான் அடுத்த வகுப்பு வருவதில் பிரச்சினை எழவில்லை. ரிசல்ட் ஒட்டுகிற தினத்துக்கு முதல் நாள் வீட்டிற்கு வருவார்.

"இந்த தடவையும்…." என்பார்.

அம்மாவின் கண்கள் நீரில் அசைவது தனி அழகு! மூலையாய் ஒடுங்கி நிற்கிற என்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்.

"உம்மேல இப்பவும் நம்பிக்கை வச்சிருக்கேன்" என்றார் தமிழாசிரியர், போகுமுன்.

"அந்த வரி எனக்கானது இல்லை"

என்னைப் பார்த்துச் சொல்லப்பட்டாலும். அம்மாவிடம் "நன்றி" முனகலே இராது. கடமைப்பட்டவர் என்கிற ரீதியில் குமரேசன் ஸாரை அழுகை அலம்பிய கண்களால் பார்ப்பாள்.

குமரேசன் ஸார் கிளம்பிப் போய்விடுவார். போகுமுன் அந்தப் பார்வை நிறைய சொல்லிவிட்டுப் போகும்.

அப்பாவும் அவரும் நண்பர்கள். மூன்றே நாட்கள்தான் வயது வித்தியாசம். திருமண வயதில், தேடி வருகிற வரன்களில், முதல் வரன் அவருக்கு, இரண்டாவது அப்பாவுக்கு என்று (அசட்டுத்தனமாய்) நிர்ணயம் செய்து கொண்டார்களாம்.

முதலாவதாக "அம்மா" வந்திருக்கிறாள். குமரேசன் ஸாரின் தாத்தா தனது எண்பது வயதுகளில் இறையடி சேர்ந்து வீட்டில் "கல்யாணச் சாவு" உண்டாக்கி விட்டார்.

அப்பாவும் ரொம்ப மறுத்தாராம்.

"நாம பேசியது என்ன? மொத வரன் உனக்கு.. பொண்ணு வீட்டுல காத்திருக்கச் சொல்லுவோம்..."

"வேணாம். எடுத்த உடனே தடங்கல் மாதிரி எதுக்கு? உனக்குப் பார்த்ததா சொல்லிப் பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுரு. அடுத்த வரன் எனக்கு!"

இப்படித்தான் அம்மா அப்பாவுக்கு அமைந்தாள்.

பாவம் குமரேசன் ஸார்!

ஒரு வருஷம் தட்டிப் போய், சிவகாமி அவருக்கு வலுக்கட்டாயமாய் மனைவியானதும், எதிரெதிர் பொருத்தங்களுடன் ஸார் இன்று வரை தம் பெயர் சொல்ல மகவின்றி குடித்தனம் நடத்தி வருவது கிளைக் கதை.

பள்ளியிலேயே முடிந்தவரை தங்கி விடுகிறார். டியூஷன் எடுப்பது அங்கேதான். பணம் வற்புறுத்த மாட்டார்.அம்மாவிடம் அவர் ஏதோ கடன்பட்ட மாதிரி உணர்ந்திருக்க வேண்டும். அவளே மனைவியாக வாய்த்திருந்தால்... அவள் பேச்சைக் கேட்டுத்தானே ஆக வேண்டும். இந்த மன விதி அவரை ஆட்டிப் படைத்து எனக்கு "பாஸ்" போட்டுக் கொண்டிருந்தது.

இன்னொன்றாகவும் இருக்கலாம். ஏதாவது ஒரு பெண்ணின் ஆளுமையில் ஆண், வாழ்நாளைக் கழித்தாக வேண்டும். சிவகாமி பேச்சோ ரசிக்கவில்லை. அம்மாவின் கண்ணீர் சொல்கிற வேண்டுதலை நிறைவேற்றிப் பெறுகிற ஆனந்தம் விலை மதிப்பின்றி உணர முடிந்தது ஸாரால்.

பொதுத்தேர்வில் குமரேசன் ஸார் போல் நல்லவர்கள் நினைப்பதைச் செயல்படுத்த முடிவதில்லை. ஏதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படுகிற மாதிரி வெண்மையாய் என் அறிவுத் திறனை பறை சாற்றிக் கொண்டு நின்றால், என்னதான் மதிப்பெண் போடுவது? பூஜ்யத்திற்குக் குறைவாகத் தர, கல்வி நிர்வாகமும் அனுமதிப்பதில்லை.

அம்மாவை விடவும் குமரேசன் ஸார்தான் மிகவும் சங்கடப் பட்டார். எனக்கான முயற்சிகளில் இறங்கி விட்டார். அதுதான்.. பட்டறை வேலை!

"நமக்குத் தெரிஞ்சவரு. இவனைப் பத்தி நல்லாச் சொல்லியிருக்கேன். படிப்பு வரலேன்னா என்ன, பத்துப் பேருக்கு வேலையே போட்டுத் தர மாதிரி... பின்னால் பெரிய ஆளா வருவான்.."

பட்டறை மேலாளர் இரண்டே நிமிடத்தில் சொல்லிவிட்டார்.

"இவன் எதுக்கும் லாயக்கில்லே"

முதலாளி என்னை விலகி நிற்கச் சொன்னார். மேலாளரிடம் தனிமையில் கிசுகிசுப்பாய் அவர் சொன்னதில் குமரேசன் ஸார் பெயரும் இருந்தது.என்னை அனுசரிப்பதும் அவரது கடமைகளில் ஒன்று என்று புரிந்ததும் மேலாளர் குழப்பத்திலிருந்து விடுபட்டார்.

"போ! ரெண்டு ஸ்பெஷல் டீ வாங்கியா."

"இந்த பாக்கெட்டில தண்ணி கொண்டா."

"கேரேஜைக் கூட்டு."

எனக்கும் விசேஷ பயிற்சி தேவைப்படாத அலுவல்கள். ஆறே மாதத்தில் நல்ல தேர்ச்சி. இனி எந்த கேரேஜிலும் இதே பணிகளை என்னால் செவ்வனே செய்ய இயலும்.

குமரேசன் ஸார் நடுவே எட்டிப் பார்த்து விசாரித்தார்.

"எப்படி இருக்கான்?"

"புத்திசாலிப்பய! சொன்ன வேலையைச் சரியா செய்யறான்."

"பார்த்தியா, நீ நிச்சயம் முன்னுக்கு வருவே" என்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டுப் போவார்.

அம்மாவிடமும் சொல்லியிருப்பார் போலும். என் உணவு வகைகளில் அம்மாவின் கவனம் கூடியது.

"பாவம் ஒழைச்சுட்டு வர பையன்!"

முதல் மூன்று மாதம் சம்பளம் எதிர்பார்க்கக் கூடாது என்ற ஓனர் , குமரேசன் ஸாரிடமும் சொல்லியிருந்திருக்கிறார்.ஆனால், அவர் அம்மாவிடம், என் சம்பளப் பணத்தைத் தன்னிடமே தரச் சொல்லியிருப்பதாகக் கூறிப் பணம் கொடுத்து வந்திருக்கிறார்.

குட்டு உடைந்தது என்னால்தான்.

நான்காம் மாதம் நுறு ரூபாயைக் கொண்டுபோய் அம்மாவிடம் கொடுக்க, "இது என்னடா?" என்றாள்.

"சம்பளம்"

"அப்ப ஸார் கொடுத்தது?"

குமரேசன் தெளிவாக்கி விட்டார்.

"பையன் துடியா இருக்கான்னு எக்ஸ்ட்ராவா பணம் கொடுத்திருக்காரு. அதான் இது."

"அப்ப, நீங்க கொடுத்தது?"

"அது மாசா மாசம் தர்ற சம்பளம்"

அவருடைய டியூஷன் பணம் குறைவதால் எந்த ஆபத்தும் இல்லாததால், குமரேசன் ஸாரின் பொய்கள் நிஜமாகிக் கொண்டிருந்தன.

பட்டறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்து தானே முழுப் பெறுப்பும் எடுத்துக் கொள்கிற இன்னொரு பையனிடம் பேச்சுவாக்கில் பகிர்ந்த போதுதான் என் சம்பள ரகசியம் விடுபட்டது.

"உனக்கு அண்ணன் எவ்வளவு தராரு?"

சொன்னான். என்னையும் கேட்டான்.

"சம்பளத்தைத் தவிர நுறு ரூபா தனியாவும் தருவாரு."

"ஒனக்கா?"

அவன் கண்களில் அவநம்பிக்கை மின்னியது.

என் பெருமை புரியாதவன்.மேலாளரிடம் போய் விசாரித்திருக்கிறான்.

"அடப் போடா! அவஞ் சம்பளமே நூறு ரூபாதான்."

"நெசம்மாவா?"

"பின்னே? குப்பை அள்ற பயலுக்கு எத்தினி தருவாங்க?"

எனக்குக் கண்ணீர் எப்போதும் வந்ததில்லை. எதற்கு அழ வேண்டும். என் பிறவி ரகசியம் நான் அறியாதது. நான் “இந்த ரோல்” என்று நிர்ணயித்து மேடை ஏற்றியிருக்கிறார்கள். “மாட்டேன்” என்று ஓவர் ஆக்டிங் கொடுத்தால் சீனை விட்டுக் கீழிறக்கி விடுவார்கள்.

ஆனால் அம்மாவிடம் பகிர்ந்தேன்.

"என் சம்பளமே நூறு ரூபாதானாம்."

அம்மாவிற்குப் புரிந்து விட்டது. குமரேசன் ஸார் அந்த மாதச் சம்பளத்துடன் வந்த நின்ற போது மென்மையாய் மறுத்தாள்.

"வே..ணாம். அவர் பென்ஷன் பணம் எங்க ரெண்டு பேருக்கும் போதும்."

"ஏன்.. எ.. ன்ன சொல்றீங்க?" என்றார் தடுமாறி.

அம்மா அசையவில்லை. பாவம் குமரேசன் ஸார். தன் குட்டு வெளிப்பட்டு விட்டதில் நிதானம் தொலைந்து நின்றார். குரல் ஒத்துழைக்காமல் மழுப்ப முயன்றார்.

"இல்லே, அவன் ஏதோ தப்பாப் புரிஞ்சுக் கிட்டு..."

நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்டிருந்தது. அதை எந்த விமர்சனமுமின்றி ஏற்றுக் கொண்டிருந்த மனநிலை.

"அவனே தனியா பட்டறை வைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணலாம்னு... அதுக்கு முன்னால ஒரு அனுபவத்துக்காக..." என்றார் மீண்டும்.

"இது போதும்" என்றாள் அம்மா.

முதன் முறையாக குமரேசன் ஸார் தொய்ந்து போனார்.அம்மாவைப் பார்த்தேன். அப்பாவை இழந்த தினத்தன்று இழப்பு மீறி கண்களில் ஒரு வைராக்கியம் புலப்படுத்தி நின்றிருந்த அம்மா... என்னைக் கைவிடாத அம்மா.

ஓனர் முன் போய் நின்றேன்.

"என்னடா?"

"என்னை அடிச்சாவது தொழில் கத்துக் கொடுங்க."

சட்டென்று குனிந்து அவர் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதேன், பிடிவாதமாய்.

(குமுதம் பிரசுரம்)

August 09, 2010

தத்து

எஸ்ஸார் ஸபா வாசலில் வந்து சொல்லி வைத்த மாதிரி செருப்பு அறுந்தது.கையில 'பள பள' அழைப்பிதழ். இன்னும் அரை மணியில் நிகழ்ச்சி. இடம் தேடி வசதியாய் அமர வேண்டும். குரு இங்கே எனக்காகக் காத்திருப்பதாய் நேற்றே ஃபோன் செய்தான்.நிறைய நிகழ்ச்சிகளுக்காக வந்த இடம்தான்.

சபா வாசலில் சற்று தள்ளி செருப்பு தைப்பவர் இருக்கிறார். வயசானவர். என் தோஸ்த். 'இவரைப் பற்றி' என்று ஒரு முறை 'மதுரத்' தில் புகைப்படத்துடன் கட்டுரை எழுதி இருக்கிறேன்.இருந்தார். பல் டாக்டரிடம் போனால்கூடச் சொல்ல வேண்டும், 'கடவாப் பல்லில் வலி' என்று. இங்குதான் கேள்வி-பதில் இல்லாத இடம். மெளன பாஷை. தேவை சுலபமாய்ப் புரிந்துவிடும்.கழற்றிவிட்டு, தள்ளி நின்றேன்.

பெரிய பெரிய போஸ்டர்கள். சபா வாசலில் மின்னுகிற எழுத்துக்கள். எல்லாப் பிரமுகர்களும் வருகிறார்கள். சினிமா உலகமே வரப் போகிறது. சங்கீத ரிஷி வருகிறார், டைரக்டர் காண்டீபன் வருகிறார் எத்தனை கிசுகிசுக்கள் கிடைக்குமோ?.

என் அவசரம் புரிந்த மாதிரி செருப்பு நொடியில் தயார்.

' அய்யாகிட்ட கொடுரா' என்றதும் ஒரு சிறுவன் என்னருகில் கொண்டு வந்தான்,பர்ஸைத் துழாவுமுன் குரு வந்துவிட்டான்.

"உனக்காக எத்தனை நேரம் காத்துகிட்டு இருக்கிறது?"

என் நிலை அவனுக்குப் புரிபடுவதற்குள் பாதி தூரம் இழுத்துப் போய்விட்டான். சரி, திரும்பும்போது தரலாம் என்று போனேன்

"கல்யாணம் ஆகலைன்னு மறுப்பு விட்டாங்கதானே. உள்ளே வந்து பாரு. ஜோடியா உட்கார்ந்திருக்காங்க."

முதல் கிசுகிசு சுவாரசியமாய் ஆரம்பித்தது.

ஹால் நிரம்பி வழிந்தது. வெளியில் இல்லாமல் எங்களைப் பொறாமையுடன் பார்த்த நபர்களைக் கடந்து 'பிரஸ்' என்று ஒதுக்கியிருந்த இருக்கைக்களைச் சமீபித்தோம்.இதர நிருபர்கள். பலர் அறிமுக முகங்கள். சம்பிரதாயப் புன்முறுவல்கள். கையாட்டல்கள். சங்கேதப் பேச்சுகள்.

"ஃபங்க்ஷன் எப்ப ஆரம்பிக்கும்?"

"ரொம்ப அவசரப்படாதே. அங்கெ பாரு மூணாவது 'ரோ' வில் நாலாவது சீட் அஞ்சாவது சீட். அடுத்த கிசுகிசு புரியுதா?"

மிக நெருக்கமாய் இரண்டாவது விவகாரத்து செய்த நாயகனும், அவனுடன் நடித்த புதுப்பட நாயகியும்.

"கீழே மேலே படம் சக்கைப் போடு போட்டிருச்சே. ஏகப்பட்ட வசூலாமே?" என்றேன்.

"வசூலாகி என்ன புண்ணியம்? பாட்டைப் பார்த்தீல்ல? படம் பூரா வசனம் காதால கேட்க முடியாது. பேரு ரிப்பேரு ஆயிருச்சு."

"பைசா வந்தாப் போறாதா. பேரைப் பத்தி எவன் கவலைப்படறான்?"

“ஓரளவுக்கு அந்தப் பயமும் இருக்கு. இல்லாமயா இப்ப இந்த விழா?"

“ இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? இது ஒண்ணும் வெற்றிவிழா இல்லியே?"

"பொறுத்திருந்து கவனி."

மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.இரண்டாவது ஹீரோயினாய் பரிமளிக்கிற நடிகை, நிகழ்ச்சி நிரலைத் தொகுத்தார். இடையிடையே உச்சி குளிர வைக்கும் அறிமுக வசனங்கள். நிச்சயம் அடுத்த படசான்ஸை இந்த மேடையிலேயே நிர்ணயித்து விடுகிற மாதிரி.

"எத்தனையோ விழாக்களை நாம சந்திச்சு இருக்கோம். இது வெற்றிப்பட விழா இல்லே ஒரு தனிப்பட்ட மனிதன் தன் துறையில் தொடர்ந்து ஏன் வெற்றிகளையே சந்திக்கிறான்னு புரிய வைக்கிற விழா. மனசு நல்லா இருந்தா சக்ஸஸ் தானா வரும். அந்த அடையாளாமா, இதோ உங்க முன்னிலையிலே, உங்கள் இயக்குனர் காண்டீபன்."

படபட வென்று கைதட்டல்கள். ஏகப்பட்ட ஃபிளாஷ்கள். வீடியோ விளக்குகள். ஆளுரய மொத்த மாலை. ரோஜா இதழ்கள் சிதறின. டைரக்டர் புகழின் கனம் தாங்காமல் தள்ளாடினார்.வரிசையாய் பாராட்டுதல்கள் தொடர்வதற்கு முன் விழாவின் நோக்கம் தெரிவிக்கப்பட்டது .

"எத்தனை பேருக்குங்க இந்த மனசு வரும்! ஒரு அனாதைக் குழந்தைய தத்து எடுத்துக்க நீங்க முன் வருவீங்களா? பல தடவை யோசிப்போம். பின்வாங்கிருவோம். இதோ நம்ம முன்னால செயற்கரிய செயலைச் செஞ்சுட்டு சாதுவா நிக்கிறாரோ இவரைப் பார்த்து பொறாமையா இல்லே!"

டைரக்டர் மைக்கைப் பற்றி இடைமறித்தார்.

"நீங்க எல்லாரும் செய்யணும். நான் வழிகாட்டி. அவ்வளவு தான். சினிமாக்காரன்னு சொன்னாலே, ச்சீன்னு பேசறவங்க மத்தியில அவங்களும் மனுஷங்கதான். நல்ல இதயம் அவங்ககிடேயும் இருக்குன்னும் காட்டத்தான் இந்த விழா. இனி இது போல செயல்கள் தொடரணும்."

படபடவென கைத்தட்டல்கள் மீண்டும்.

"பார்த்தியா. எதுக்கு இந்தத் தத்து விழா புரியுதா?"

நான் பேசவில்லை. பரபரப்பான இந்த விழா. இந்த நேருக்கு நேர் புகழுரைகள். சரிந்து போனால் உதறவும் நிமிர்ந்து நின்றால் ஜால்ராவுமாக காக்கைக் ௬ட்டம். பணத்தை வீசினால் எதையும் நிகழ்த்திக் காட்டாலாம்.இது வரை தோன்றாத ஒரு ரிப்போர்ட்டரின் மனசுக்குள் அலுப்பு. எழ முயன்றேன்.

"என்ன?" என்றான் குரு. தொடர்ந்து,"முட்டாள் இனிமேதான் களை கட்டப் போவுது."

"சங்கீத ரிஷி கையாலே அந்தக் குழந்தையை தத்து எடுத்தத பார்த்ததே போதும்."

௬ட்டத்தில் நீந்தி வெளியே வர மிகவும் சிரமப்பட்டேன். எத்தனை எரிச்சல் குரல்கள்.வெளியில் கிழவர் இன்னமும் காத்திருந்தார் . ஏதோ பழைய செருப்பின் அறுந்த வாரைத் தைத்துக் கொண்டிருந்தவரின் பக்கத்தில் ஒரு அரை டிராயர் சிறுவன். இன்றுதான் பார்க்கிறேன்.

"ஸாரி. பணம் கொடுக்காம போயிட்டேன்" என்றேன் ரூபாய் நோட்டை நீட்டியபடி.

"ஐயாவைத்தான் தெரியுமே. இன்னைக்கு தரலேன்னா நாளைக்கு. ஏமாத்தவா போறீங்க?"

"யாரு இது? உன் பேரனா?"

சிறுவன் கையிலும் தோல் செருப்பு. ஊசி.

"இல்லீங்க. பக்கத்து வூடு அப்பன், ஆயி ரெண்டு பேருமே செத்துட்டாங்க. குடிசை தீப்பத்திக்கிச்சு. இவன் மட்டும் வெளியே இருந்தாலே பொழைச்சுக்கிட்டான் அப்படியே வுட்டா சோறு தண்ணி இல்லாம அலைவான். பிச்சை எடுப்பான், சரி, நம்ம தொழிலைக் கத்துக் கொடுக்காலாம்னு வச்சகிட்டேன், எனக்கும் வேற நாதி இல்லியே."

கிழவன் விரல்கள் துரிதமாக இயங்க. வாய் மட்டும் பேசியது.பசி தெரியாத, ஆதரவு கிடைத்துவிட்ட அனாதை முகம், மிகச்சுலபமாய் எந்த விழாவுமின்றி தத்து.

திரும்பிப் பார்த்தவன் பார்வையில் எதிர் சபா மின் விளக்குகளின் அலங்காரம்.ரிப்போர்ட்டை விட மனசுக்கு இதமாய்க் கிடைத்த விஷயத்தில் உள்ளுர நெகிழ்ந்தேன்.


(கல்கியில் பிரசுரம்)


August 06, 2010

துக்கம்

"யாராவது ஒருத்தர் வந்திருக்கலாம்" என்றாள் பூரணி, அழுகை ஒய்ந்த பிறகு.

எதிரே நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நானும் என் மகளும். பூரணியின் மடியில் என் பேரன் அசோக். கைகளில் முறுக்குத் தீனி.பால் வாங்க சண்முகம் வெளியே போனான். காலைப் பால் மிச்சம் இருந்ததில் காப்பித் தண்ணீர் கலந்ததில் தொண்டை நனைந்தது. அழுகை விட்டு இப்போது பேச்சு.

பூரணியின் தலைமுடி கோடாலி முடிச்சாய் முடியப்பட்டிருந்தது. நெற்றியில் திருநீறு. அது என்னவோ முகம் சட்டென்று அதன் வசீகரம் இழந்து அசட்டுக் களை தட்டி விடுகிறது. முன்பு பார்த்த பூரணி இல்லை.

"எந்திரிடா……. அத்தை மடியில ஒக்காந்து என்ன தொவையல்?"

வடிவு அதட்டினாள்.

"அட…… இவன் ஒக்காந்தா நான் தேய்ஞ்சுருவேன் பாரு. விடுவியா"

என் மனக் கஷ்டம் அதிகரித்துக் கொண்டே போனது. தப்புத்தான். வராமல் போனது. தகவல் என்னவோ உடனே வந்து விட்டது. ஆறு மணி நேரப் பயணம். இருந்தால் என்ன? போன் இருக்கிறது. தகவல் சொன்னால் காத்திருப்பார்கள். பத்தாம் நாள் காரியத்துக்கு மட்டும் வந்து பூரணி இப்போது குறை சொல்கிற மாதிரி நேர்ந்திருக்காது.

"எல்லாரும் வந்திட்டாங்க.. எடுக்கவே வுடாம அழுகை. சொல்லி சொல்லி அழுதாங்க".

பூரணிக்கு மீண்டும் கண்ணீர் பூத்தது.

."ஏதோ எஞ்சோகம்னு தோணலே….. அண்ணாச்சி. ஊரே கலங்கி நின்னப்ப….. நீங்க வரலியேன்னு……. ஒங்க முகம் பார்த்து தெம்பு வந்திருக்கும்….."

குறை சொல்வது போல இல்லாமல் ஒரு ஏக்கம் போலப் புலம்பினாள்.எழுந்திருந்து ஓடிப்போக வழியின்றி எனக்கு நானே போட்டுக் கொண்ட கட்டுக்குள் ஒடுங்கியிருந்தேன்.

"வடிவும் மாப்பிள்ளையும் வருவாங்கன்னு நினைச்சோம்"

இம்முறை மகள் வடிவின் மீது வார்த்தைப் பாய்ச்சல். என்போல அவள் பதறவில்லை.

"எப்ப சொந்த பிசினஸுன்னு அவரு ஆரம்பித்தாரோ…. அவரு வீட்டுக்கு வர்றப்பதான் கணக்கு.. எந்த நேரமும் அலைச்சல். அப்ப நான் மட்டுந்தான்….. இவனை இழுத்துக்கிட்டு தனியா வந்திருக்கணும்….. அவரு கொணம் ஒங்களுக்கே தெரியும். வீட்டை பூட்டிக்கிட்டு எங்கே போனேன்னு ரப்ச்சர் பண்ணுவாரு. இதுவே அவரு இருந்திருந்தா கதையே வேற. கார் வச்சுக்கிட்டு வந்திருவாரு" என்றாள் பாதிப் பெருமையுடன்.

என்னால் இதுபோல் சாமர்த்தியமாய் பேச வராது. நிச்சயம் என் மீதுதான் தப்பு என்று உள்ளுக்குள் குமைவேன்.சண்முகம் பால் செம்புடன் உள்ளே வந்தான்.

"காபியப் போடுரா… நல்ல காப்பியா குடிக்கத் தரணும்…"

"எதுக்கு… இப்பத்தானே குடிச்சோம்."

"அய்ய… காலைப் பால்… ருசி இல்லாம அதையும் ஒரு கணக்குக்கு குடிச்சாச்சு. புதுப்பால்ல நல்ல காப்பியா குடிக்கலாம்."

பூரணியின் குரலில் அழுத்தம் தெரிந்தது.அசோக் எழுந்து பூனைக் குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

"சரியான வாலு… எப்பவும் ஓடணும். கால்ல சக்கரம் கட்டி விட்டாப்பல. அப்படியே அவங்க அப்பாருதான்" என்றாள் வடிவு.

பூரணி என்னைப் பார்ப்பது புரிந்தது.

"அண்ணாச்சி… பேசாமயே இருக்கீங்க…"

வடிவு திடீரென்று எழுந்து பின்கட்டுப் பக்கம் போனாள்.

"என்ன சொல்றது… எம்மேல பிசகு. தகவல் கேட்டு ரொம்பத் துடிச்சுப் போயிட்டேன். ஆனா வரமுடியாம என்னென்னவோ பிரச்சனை."

என் குரல் பிசிறியது.

"மூர்த்தி கூடத்தானே இப்ப தங்கியிருக்கீங்க…"

"ஆமா…" என் தலை ஆடியது.

"அவனுக்கு வரன் எதுவும் பார்க்கறீங்களா…"

"ம்…"

"அவரு இருந்தப்ப… சொல்லிக்கிட்டே இருந்தாரு. மூர்த்தி அப்படியே உங்க வேலு அண்ணாச்சி போல முன்னுக்கு வரணும்னு ஒரு வெறி… திடம்… நீங்க பிடிவாதமா நம்ம ஊரை விட்டுப் போயி… நாலு காசு பார்த்ததை பெருமையா சொல்லுவாரு."

பூரணிக்கு மீண்டும் கண்ணீர் துளிர்த்தது. அவள் சொல்ல வந்தது புரிந்தது. மகள் வனஜாவை மூர்த்திக்கு சம்பந்தம் பேச முனைகிறாள்.வடிவு கிளம்பும்போதே எச்சரித்திருந்தாள்.

"அப்பா நீங்க பாட்டுக்கு வாக்கு கொடுத்துராதீங்க. அம்மா போன பிறகு ஒங்க புத்தியே தறி கெட்டுப் போச்சு. யாராச்சும் அழுதா… கூட சேர்ந்து அழுவறீங்க. மனுசங்க காரியம் ஆவணும்னா என்ன வேணா செய்வாங்க. மூர்த்திக்கு என் வீட்டுக்காரரோட தங்கச்சியப் பார்க்கலாம்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. அவனுக்கும் அவளை புடிச்சுப் போச்சு. துக்கம் கேட்கப் போனோமா… வந்தமான்னு இருக்கணும்…"

"வடிவு… புள்ளைய கூட்டிட்டு வா…"

பூரணி கூவினாள்.காப்பி மணத்தது. அசோக்கிற்கு பால். வடிவு அசோக்குடன் வந்தாள்.

"சண்முகம்…..புள்ளை கையில பணங் கொடுரா. துணி எடுத்து வச்சிருந்தா தரலாம்"

"எதுக்கு அத்தை…?"

"நீ சும்மாயிரு. மொத தடவை வருது. துக்கமும் சந்தோஷமும் பெரியவங்க கூட…..புள்ளைங்க மனசுல எப்பவும் சிரிக்கணும்."

நூறு ரூபாய்த் தாளை சட்டைப்பையில் சொருகினாள்.

"நல்ல முடிவா சொல்லுங்க அண்ணாச்சி. போனவரு ஆத்மா குளிரணும். பூமியை பார்த்துக்கிட்டு நிப்பேன்னு சொல்லுவாரு."

ஒரு சொட்டு உதிராமல் ததும்பியது பூரணிக்கு.

"சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்ற விதி." அந்தச் சமயம் நன்றாகவே உதவியது எனக்கு. தெருவில் இறங்கியபோது துக்கத்துக்கு வராததை விட மோசமாய் உணர்ந்தது மனசு.

(கல்கியில் பிரசுரம். )

August 04, 2010

கல்யாண விருந்து

"இதுதான் உன்னோட ரூம்" என்று பாலா அடையாளம் காட்டினான்.

கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி இல்லை.

"ஸ்டோர் ரூம் இன்-சார்ஜ்"

தலையில் கிரீடம் வைக்கப்பட்டது.

"டேய் பாலா..."

அவனது மாமா பின்னாலேயே வந்துவிட்டார்.

"என்னடா இது... முதல்லே அவருக்கு டிபன், காபி தருவியா, வந்த உடனே பொறுப்பைத் தலையில் கட்டிக்கிட்டு...''

குறுக்கிட்டேன் .

"நான்தான் விசாரித்தேன். ஸ்டோர் ரூம் எதுன்னு..."

"வாங்கோ. மூணு நாளும் இங்கேதானே நிக்கப் போறேள். மத்தியானம் தான் சாமான் வேன்ல வருது. ராஜப்பா வந்திருவார்... என்ன மெனுன்னு ஒரு தடவை பார்த்திரலாம்"

கல்யாணம் ஒரு பெரிய வீட்டிலும், வந்து இறங்கிய நாங்கள் இன்னொரு வீட்டிலுமாக ஏற்பாடு. எதிர்வீடு மாமாவினுடையதாம். டிபன் சாப்பிடும்போது சொன்னேன்.

"இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், வில்லேஜ்ல மேரேஜ் அட்டெண்ட் பண்றது."

"எனக்கும். தலை சுத்தறது. எது வேணும்னாலும் மூணு கி.மீ. போகணும் டவுனுக்கு. எங்கப்பாவோட பெரிய பிரச்னை. நல்ல வேளை தங்கை கல்யாணம் கிராமத்துலன்னு முடிவாச்சு. எவரெஸ்ட்ல வையின்று சொல்லாம போனார்.."

"கவலைப்படாதே..."என்றேன்.

"எனக்கென்ன... நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கே வரதாச் சொன்னாங்க. அவங்களும் வந்தாச்சுன்னா உனக்கும் ஒரு சேஞ்ஜ் கிடைக்கும்."

"ஒண்ணும் வேணாம். ஜ கேன் மானேஜ். ரெண்டு நாள் கூத்து."

பாலா தணிந்த குரலில் சொன்னான்.

"இங்கே பாரு... சட்டுனு கேட்ட உடனே எடுத்துக் கொடுத்துராதே. ஒரு கிலோ கேட்டா முக்கா கிலோ கொடு. முழுசா மாமாவையும் நம்பிர முடியாது."

இதுவரை தெளிவாய் இருந்தவன் இப்போதுதான் குழம்பினேன்.

"என்ன... சொல்றே?"

"பயந்துராதே. எப்படியும் போட்ட லிஸ்ட்படி தான் சாமான் வாங்கியிருக்கு. இருந்தாலும் கொஞ்சம் 'கெத்' தா இருந்தாத்தான் ஏமாத்தாம இருப்பாங்க. அதுக்குச் சொன்னேன்."

கை கழுவியபோது குளிர்ந்த நீர் பட்டு உடம்பு ஜிலீரென்றது. வேன் நான்கு மணிக்குத்தான் வந்தது.

"எப்ப பட்சணம் பண்றது?" என்று யாரோ பொருமிக் கொண்டிருந்தார்கள்.

இதற்காக சுமாரான வேட்டி, சட்டை கொண்டு வந்திருந்தேன். இறங்கிய பொருட்களை எடுத்து அடுக்கவே அரைமணியானது.

"காய்கறி வருமே.. அதை எங்கே வைக்கறது?"

"ஏகப்பட்ட எடம் இருக்கு. பின்கட்டுல போடுங்கோ. நறுக்கி வைக்கிறவாளுக்கும் வசதி."

பின்கட்டு, எடுத்துக் கட்டி, முற்றம், கேமரா ரூம், சம்படம் என்று தனி அகராதி தேவைப்படுகிற அளவு புதுப்புது வார்த்தைகள்.

"இதுதான் முந்திரி, திராட்சை.. சர்க்கரை மூட்டை அதோ மூலைல..."

எனக்குச் சூழல் புரிபடுவதற்குள் கல்யாணம் முடிந்துவிடுமென்று தோன்றியது.

ராஜப்பாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். தளர்ந்து போன உடம்பு. இடது கால் சற்று வீக்கம். பொடி மட்டை சொல்லி வைத்த மாதிரி கீழே விழுந்து கொண்டேயிருந்தது. மறுபடி எடுத்து ஒரு வசவுடன் இடுப்பில் சொருகிக் கொண்டார். மழமழவென்ற மரத்தூணில் சாய்ந்துக் கொண்டார்.எட்டடி நீளக் குழிதான் அடுப்பு. கிட்ட நெருங்கும் போதே அனலடித்தது . நிரந்தரமாய் இரண்டு பெரிய அடுக்குகளில் கலங்கலாய் வெந்நீர். ஒன்றில் காப்பி பாத்திரம் கூட மிதந்தது.

"எத்தனை பேர் சாப்பிட வருவா... கரெக்டா சொல்லிட்டா... எனக்கும் வசதி..."

"நம்ம உறவுக்காரா... அப்புறம் இவங்க ஆபீஸ்காரான்னு எப்படியும் இருநூறு பேர் தேறலாம். கிராமத்து டிக்கெட் இருக்கே. ஒரு பய அடுப்பு மூட்ட மாட்டான்" என்றார் மாமா.

"ப்ச்.. என்ன மாமா இது " என்றான் பாலா.

"போடா... இங்கே எவனுக்கும் சொரணையே இல்லே... திட்டினாக் கூட ஈன்னு இளிச்சுன்டு நிப்பான்..."

பாலா, மாமாவைப் பற்றி அதிருப்தி தெரிவித்ததன் காரணம் புரிந்தது. மனிதருக்கு எதிலுமே சீரியஸ்னெஸ் இல்லை.

"சொல்லுங்கோ... என்ன போடலாம்?"

ராஜப்பா மெனுவைப் பற்றி விசாரிக்க பாலா சொல்லிக் கொண்டிருந்தான். நகர்ந்தேன். கொல்லைப்புறம் விளக்கு வெளிச்சம் இல்லை. நூறடி நடந்தால்தான் டாய்லட் வசதி.

"இருட்டுல எப்படி போறது...?" என்றேன் கவலையாக.

"குச்சி நட்டு டியூப்லைட் வச்சிருவான். எல்லாம் ஏற்பாடு ஆயிடுத்து..." என்றார் மாமா.

திரும்பி வந்ததும் பாலா மீண்டும் என்னை ராஜப்பாவிடம் அறிமுகப்படுத்தினான்.

"என்ன சாமான் வேணும்னாலும்... இதோ... இவர்தான்"

"பேஷா..." என்றார் சர்ரென்று பொடியை உறிஞ்சி.

மாப்பிள்ளை அழைப்பன்று இரவு முகூர்த்தப் பை போடும் நேரம் பாலா என்னுடன் இருந்தான்.சக்தி, கண்ணனின் வாழ்த்துக் தந்திகள் வந்தன. ஏதாவது சமாதானம் சொல்லிவிடுவார்கள், திரும்பிப் போனதும்.மற்ற நேரங்களில் என் சாம்ராஜ்யம் அனலடிக்கிற சமையலறையும், கால்களைக் கீழே வைக்கக் கூசுகிற அளவு 'சொத சொத' வென்ற தரையும், கலவையான நெடிகளும், 'விட்டு எப்போது ஓடலாம்' என்கிற மனோநிலையும்தான்.
ராஜப்பா கடைசிவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவேயில்லை.

"அண்ணா... சாம்பாருக்கு..."

"ஊறுகாய்க்கு இது' போதுமா..."

"கோசுமல்லிக்கு."

அளவுகளைச் சரிபார்க்கச் சொன்னார்கள். முறத்தோடு உப்பை அள்ளிப்போய் பாத்திரத்தில் கவிழ்ந்தார்கள். மிளகாய்ப் பொடி நெடி கமறியது.

"அய்யோ... அண்ணா.. இப்பதான் நான் உப்புப் போட்டேன்... சாம்பாருக்கு..."

இரண்டாம் தடவை போட்டுவிட்டான் தவறுதலாய். ராஜப்பா நிதானமாய்ப் பொடி உறிஞ்சிவிட்டுச் சொன்னார்.

"உருளைக் கிழங்கு இருக்காடா?"

"ஆயிடுத்து..."

"போடா மடச்சாம்பிராணி... எடுரா... இந்த சைசுக்கு... சாதத்தைக் கெட்டியாப் பிடி... போடு அதை சாம்பார்ல..."

பின்பு சாப்பிட்டவர்கள் எந்தக் குறையும் சொல்லவில்லை என்றதும் எனக்கு ஆச்சர்யம் .

"ஸாரை நன்னாக் கவனிடா. நம்ம கூட வெந்துண்டு இருக்கார்..." என்றார் நடுவில் என்னையும் கவனித்து.

''ஒண்ணும் வேண்டாம், பசியே இல்லே.. எதுவுமே பிடிக்கலே" என்றேன்.

"என்னது... நீங்கதான் சர்டிபிகேட் தரணும்... போடுரா இலையை..." என்று சகாவை அதட்டினார்.

கைநீட்டி மறுத்தேன். இலையில் வைத்த சாதம் திணறியது.

"என்ன இப்படி முழிக்கிறீங்க. கோஸ்கறி போடு.."

"வேணாம்... ஒரு அப்பளம் வைங்கோ..." என்றேன்.

என்னருகில் நகர்ந்து வந்தார். பக்கத்தில்தான் இலை போடப்பட்டு இருந்தது.

"போடுரா அப்பளத்தை... " என்றவர் அவன் நகர்ந்து போனதும் சொன்னார்.

"உங்களுக்குத் தெரியாதது இல்லே. டவுன்ல இருக்கிறவா படிச்சவா... கொறிக்கிறது இப்ப நாகரிகம். நாங்க அந்தக் காலம். வேணும்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே எங்களுக்கு நிறைஞ்சுரும். எவ்வளவு மெனு பாருங்கோ. இதையெல்லாம் விட்டுட்டு கடை அப்பளத்தைக் கேட்கிறேளே... எங்களுக்கு எப்படி சார் திருப்தி வரும்?"

சுரீலென்றது. சைகை செய்ததும் ஒவ்வொன்றாய் ஒரு கரண்டி பரிமாறப்பட்டது.

"கஷ்டப்படுத்தலே... டேஸ்ட் பாருங்கோ. போதும்..."

அசிஸ்டெண்ட் எதிரில் வந்தான்.

"அண்ணா... கரைச்சாப்ல கொண்டு வரவா..."

"ம்..." என்றார்.

மோர் சாதம் கரைத்துத் தரப்பட்டது.

"போதும்டா... எதேஷ்டம்...''

கடகடவென்று குடித்தார்.

"நீங்க போங்கோ... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா... நிம்மதி. சாயங்கால காரியம் இருக்கே... டேய்... அங்க பாரு... அடுப்புல தீயறது.." என்றார் சட்டென்று திரும்பி.

கையலம்ப எழுந்து போனபோது, இந்தக் கல்யாணத்தை மறக்க மாட்டேன் என்று தோன்றியது.


(கல்கியில் பிரசுரம்)


August 02, 2010

அழகு

ஈஸ்வரிக்கு லேசாய் திக்குவாய். அதுவும் சரளமாய் அரட்டை அடிக்கிற சிநேகிதிகளோடு நிற்கையில் இன்னமும் வாய் மூடிப் போகும்.

“ஈஸ்வரி. நீ என்ன சொல்றே? அஜீத்தா.. அப்பாஸா.. யார் அழகு?"

“அ…அ…”

"அஜீத்தா"

"அப்பாஸா"

சிநேகிதிகளிடையே பரபரப்பு மிகும். யாருடைய கை வலுக்கிறது என்று. ஈஸ்வரி சொல்ல நினைத்ததே வேறு.

“அதைப் பற்றி என்னை ஏண்டி கேட்கறீங்க” என்ற வரியின் முதல் எழுத்தோடு நிற்பாள்.

“அவளை விடுங்கடி. சினிமாவுக்கே வரமாட்டா. டிவில இசைக் கச்சேரி கேட்கிறவ."

ஈஸ்வரியை ஒதுக்கி அரட்டை தொடரும். சிநேகிதிகளின் பேச்சில் அவள் லயிப்பாள்.

தனிமையில் ஈஸ்வரி துளித் தடங்கல் இன்றிப் பேசுவாள், பாடுவாள், மனசுக்குள்! ஈஸ்வரிக்கு நீள விரல்கள். வீணை வாசிக்கலாம்; அபிநயம் பிடிக்கலாம். இல்லை, ஈஸ்வரிக்கு அதில் எல்லாம் பரிச்சயம் இல்லை. மத்தியதர குடும்பத்தின் மூன்றாவது பெண் பிரஜை. எந்த செலவுமே அவசியத்தின் அடிப்படையில்.

அக்காக்கள் இருவருக்கும் மணமாகி தலா ஒரு குழந்தையுடனும் இரண்டாவது அக்கா மட்டும் சற்றே அவசரப்பட்டு இன்னொரு கர்ப்பம் தாங்கியும் நிற்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யாராவது ஒரு அக்கா தன் குழந்தையுடன் வந்து ஒரு வாரம், பத்து நாட்கள் தங்கிப்போவது வழக்கம்.

அதாவது ஒரு வருடத்துக்கு முன்பு.

இப்போது இரண்டாவது அக்கா மட்டுமே வருகிறாள்.

முதல் அக்கா மனஸ்தாபப்பட்டுக் கொண்ட கதை விசித்திரம்.

வழக்கம் போல குழந்தையுடன் முதல் அக்கா வந்த நேரம். பெட்டி நிறைய புதுப் புடவைகள். பொங்கலுக்கு வாங்கியது, தீபாவளிக்கு, திருமண நாளுக்கு, பிறந்த நாளுக்கு… கிளிப்பச்சையில் பூக்களிட்ட அந்தப் புடவை ஈஸ்வரியை கவர்ந்தது. எடுத்து மேலே போட்டு அழகு பார்த்தாள். எழுந்து போய் கண்ணாடி முன் நின்றாள். கடைசியாய் கேட்டும் விட்டாள்.

”அக்கா... நான் ஒரு தடவை கட்டிக்கவா” என்றாள் திக்கல்களின் இடையே.

”ச்சீ... பைத்தியம். இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுக்கிட்டு...”

அன்று மாலை அக்காவின் புடவையைக் கட்டிக்கொண்டு ஈஸ்வரி நின்ற நேரம் பின்பக்கமாய் வந்தவனுக்கு ஈஸ்வரி என்று தெரியவில்லை.

”ச்... ச்.. ச்சீ... வி.. வி.. விடுங்க" என்றதும்தான் அவள் தன் மனைவி இல்லை என்று புலப்பட்டு இருக்கிறது.

அதே சமயம் அங்கே வந்த அக்காவுக்கோ தவறாகத் தோன்றிவிட்டது. ஈஸ்வரியின் மீது கோபமாய்த் திரும்பியது.

“இவ ஏன் பேசமா நிக்கறா. சத்தம் போட்டிருக்கலாமிலே..”

"என்னடி உஷா... அவளுக்குத்தான் சட்டுனு வேகமா பேச வராதுன்னு உனக்குத் தெரியாதா?'

”திமிறிக்கிட்டு ஓடக் கூடவா முடியாது...”

ஈஸ்வரி வேறு யாருடைய புடவைக்கும் அதன் பின் ஆசைப்படவில்லை. அக்காவின் பேச்சு வேறேதோ சுய சோகத்தின் காரணம் என்றாலும் பலி தன் மீது என்றதில் அரண்டு போனதின் விளைவு.

இரண்டாவது அக்கா கல்பனா, இரண்டாவது டெலிவரிக்கு வந்திருக்கிறாள் இப்போது. முதல் குழந்தை சுஜி ஏற்கிற அழகு.

”அ... அப்படியே.. அ... அத்தான் ஜாடை” என்றதும் கல்பனா முகத்தில் லேசாய் இருட்டு.

ஈஸ்வரி தன் குழந்தையை கொஞ்சுவது இயல்பான 'சித்தி -மகள்' உறவு என்ற உணர்வு தொலைந்து வேறேதோ அநாவசியக் கற்பனைகள். இதற்குத் தூபமிட்டது உஷாதான்.

”நாம நினைக்கிற மாதிரி அவ ஒண்ணும் அப்பாவி இல்லைடி. சரியான... நம்ம ரெண்டு பேருக்குமே நல்ல வாழ்க்கை அமைஞ்சு போச்சு. அதுல பொறாமை. பாரேன்... ராத்திரி எத்தனை நேரம் ஆனாலும் எழுந்திருச்சு போக மாட்டா... நம்ம வீட்டுக்காரர் கூட அரட்டை... பேச்சே வராது... இதுல... ஈன்னு இளிச்சிக்கிட்டு...'

பெண்கள் அத்தனை சுலபமாய் தங்களுக்குள் சமாதானம் காண்பதில்லை. ஓர் ஆணுடனான உறவுகளில் தெளிவான தீர்வும் பழக்கமும் கொள்பவர்கள் சக மனுஷியுடன் உள்ளூர முரண்பட்டே நிற்கிறார்கள்.

ஈஸ்வரியை கல்பனாவிற்கும் பிடிக்காமல் போனது. முதல் இரு சகோதரிகளுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே ஏழு வயது வித்தியாசம். பிரசவ அலுப்புகளில் தளர்ந்து வேறு உபாதைகள் ஆக்கிரமித்த இருவரும் இளையவளின் செளந்தர்யம் காட்டிய பிரமிப்பில் உள்ளுக்குள் ஆடிப்போனார்கள்.

ஈஸ்வரிக்கு இது விநோதமாய் இருந்தது. அவளுக்குத் தெரிந்து சிநேகித குடுமபங்களில் சகோதரிகள் சிநேகிகளாகவே பழகுகிறார்கள்.

”எ... எனக்கு.. ம... மட்டும்...”

மனசுக்குள் தேம்பிய போது திக்கல் வந்தது, முதன் முறையாய். இன்னமும் அதிகமாய் கூட்டுக்குள் ஒடுங்கினாள். வீட்டில் இருப்பதைவிட வெளியில் சிநேகிதிகளின் மத்தியில் பாதுகாப்பாய் உணர்ந்தாள்.

அசோக் அவளைப் பெண் பார்க்க வந்தான். பிடித்து விட்டதாம். அவன் அம்மா ஈஸ்வரியை அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டாள்.

"ஏன் 'ஷை' யா இருக்கே.. அசோக் பெரிய வாயாடி தெரியுமா..."

ஈஸ்வரிக்கு கண்ணீர் தளும்பியது.

“கடவுளே, என்னைக் காப்பாற்று”

“என்னடா அவ கூடத் தனியா பேசணும்னு சொன்னியே...”

அசோக் நிமிர்ந்து ஈஸ்வரியின் அப்பாவைப் பார்த்தான்.

"ஸார் உங்களுக்கு ஆட்சேபணை... இல்லேன்னா..."

"என்ன ஈஸ்வரி..." என்றார் அப்பா அவளிடம். 'சம்மதம் சொல்' என்கிற தோரணையில்.

ஹாலில் பெரியவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். கதவு திறந்துதான் இருந்தது. அறைக்குள் ஜன்னலை ஒட்டிய இருக்கையில் அசோக் அமர்ந்தான். பக்கத்தில் இன்னொரு இருக்கை.

"உட்கார். ரெண்டே நிமிஷம். உன்னோட குரலைக் கேட்கணும். பிரத்யேகமாய் எனக்காக எதாவது ரெண்டு வார்த்தை. சம்பிரதாயமாய் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லாதே. நீ சொல்லாமலேயே எனக்குத் தெரியும்..." குறும்பு கண்களில் மின்னப் பேசினான்.

"வேறேதாவது சொல். அடுத்த எலெக்ஷன் சீக்கிரத்திலா... பிடிச்ச சினிமா... ரசிச்ச கவிதை... ஏதாவது சினிமா பாட்டு ரெண்டு வரி 'ஹம்' பண்ணு... ஏதாச்சும்... ப்ளீஸ்..."

ஈஸ்வரி நிமிர்ந்தாள். கண்களில் நீர் கோலிக் குண்டு போல வர்ண ஜாலம் காட்டியது.

'எனக்குத் திக்கும்' என்று அவனுக்கு எவரும் சொல்லவில்லையா.தெரிந்தால் என்ன சொல்லுவான். வேகமாய் வெளியே பொய் 'மறைச்சுட்டீங்க. ஸாரி... எவ்ரிதிங் கேன்சல்டு...' என்றா!!

"பேசேன் ஈஸ்வரி..."

அசோக் ஆர்வமாய் அவளைப் பார்த்தான்.

"எ... எனக்கு... பே... பேச... தி... திக்கும்..."

மெல்லிய உதடுகளின் இளஞ்சிவப்பு அசைவுகள் என்ன செய்ததோ... அசோக் பிரமிப்பாய் அவளைப் பார்த்தான், கண்களில் மின்னலுடன்.

"நீ பிரேக் பண்ணி பேசறது எவ்ளோ அழகா இருக்கு... ஜ லவ் யூ மோர்..."

சில நேரங்களில் எதுவுமே அழகாகி விடுகிறது.

(தமிழ் அரசியில் பிரசுரம்)