February 23, 2015

நட்பின் சந்திப்பு...




பதிவர்கள் என்பது ஒரு அடையாளம் தான்..
அந்த விசிட்டிங் கார்டை கையில் வைத்துக் கொண்டு எந்த வீட்டுக்கும் போக முடியும்.. என்கிற ஆனந்தம் இந்த ஞாயிறு அன்று கிட்டியது.
வை.கோ. ஸார் என்கிற இளைஞர் திருச்சியில் இருக்கும் வரை இரண்டு பெருமைகள் திருச்சிக்கு உண்டு..
ஒன்று மலைக் கோட்டை.. இன்னொன்று அவர் !
சுறுசுறுப்பில் அவரை விஞ்ச ஆளில்லை !
4.59 க்குள் குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து விடுங்கள் என்று அன்புக் கட்டளை கொஞ்சம் மிரட்டலாக மெயிலில் அனுப்பி இருந்தார்.
அப்படியா சங்கதி என்று 4.30 க்கே போய் விட்டேன்.
அந்த குடியிருப்பு வாசலில் ஒருவர் விடாப்பிடியாய் என்னைப் பிடித்துக் கொண்டு ‘ஆட்டோகிராப் போட்டால்தான் ஆச்சு என்று அடம் பிடித்தார்.
அப்படியே உங்க மொபைல் நம்பரும் என்றார் இன்னும் பிடிவாதமாய்.
கடைசியாய் ஒரு கேள்வி,, ‘யாரைப் பார்க்க.. இப்ப என்ன நேரம்.. எப்ப போவீங்க.. எல்லாம் எழுதுங்க’ என்றார்.
ஹி..ஹி.. அன்னியர் வருகையைப் பதிவேட்டில் குறித்து தீவிர பரிசோதனைக்குப் பின் உள்ளே அனுப்பினார். ஏர்போர்ட்டில் கூட சுலபமாய்ப் போக முடிந்தது.
கொஞ்சம் பயபக்தியாய் படியேறினேன்.
இதே வீடுதான்.. ரெண்டாவது மாடி.. எல்லாம் சரி.. ஆனா உள்ளே ஆள் இருக்கிற சுவடே காணோமே.. தப்பா வந்தாச்சா..
நல்ல வேளையாய் செல் நம்பர் இருந்தது.
அந்த வீட்டு வாசலில் நின்று .. கண்ணுக்குத் தெரிகிற ஹாலுக்கு.. போன் செய்த சூப்பர்மேன் நானாகத்தான் இருக்கும்..
ரிங் போனது எனக்கே கேட்டது.. உள்ளிருந்து ஒரு பெண்மணி வந்து அந்த மொபைலை எடுத்து..
கதவைத் தட்டினேன்.  ‘நான் தான்’ என்று சைகை செய்தேன் அழைப்பைத் துண்டித்து விட்டு.
ஏற்பாடுகள் பலமாய் இருந்தன, முன்பே தகவல் கிடைத்திருந்ததால் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து ‘சாப்பாடு உண்டு’ என்று உறுதி செய்து கொண்டேன். பக்கத்திலேயே பெரிய சைஸ் பாக்கு மட்டைத் தட்டுகள்.
ருக்மிணி சேஷசாயி மேடம் மெல்ல வந்தார்.
வணக்கம் சொல்லிவிட்டு ரொம்ப சகஜமாய்.. ரொம்ப நாளாய்ப் பழகுகிற தோரணையில்.. ‘எதுக்கு சிரமம்.. சும்மா பேசிண்டு இருக்கலாமே.. டிபனெல்லாம் எதுக்கு’ என்று பேச்சை ஆரம்பித்தேன்.
‘இருக்கட்டுமே அது பாட்டுக்கு அது.. பேச்சு பாட்டுக்கு பேச்சு’ என்று பெருந்தன்மையாய்ச் சொல்லி என் வயிற்றில் பாலை வார்த்தார்.
(நிஜமாகவே பால் தான் கடைசியில் எனக்கு.. காப்பி வேண்டாம் என்றதும்)
அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையைச் சொன்னதும்
என் காலர் தானாகவே மடங்கிக் கொண்டது.
மேன்மக்கள் மேன்மக்களே..
ஹால் கண்ணாடி ஷெல்பில் உரத்த சிந்தனை ஷீல்ட்களைப் பார்த்ததும்
கப்சிப் ஆனேன்.
இதற்குள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்..
ஆதி வெங்கட்.. குட்டி தேவதை ரோஷிணி சகிதம்..
வைகோ ஸார்.. தமிழ் இளங்கோ அவர்கள்..  கீதா சாம்பசிவம் மேடம்.. ராதா பாலு மேடம்..
கொஞ்ச நேரத்தில் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஸார்.. பிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)
அப்புறம் விழா நாயகி.. இந்த சந்திப்பின் காரணகர்த்தா.. ரஞ்சனி மேடம்..அவர் கணவர் திரு. நாராயணன் வருகை தந்தனர்..
முதலில் போட்டோசெஷன்..  வைகோ ஸாரின் கேமிராவுக்கு சரியான வேட்டை..  தமிழ் இளங்கோ ‘நான் ஒரு புரபஷனல் போட்டோகிராபராக்கும்’ என்று இன்னொரு பக்கம் பிளாஷ் அடித்துக் கொண்டிருந்தார்.
நடுவே புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது போல ரோஷ்ணியின் அட்டகாச போட்டோ ஷாட்கள்..
‘அப்பாகிட்ட கத்துகிட்டியாம்மா’என்று தெரியாத்தனமாய் என் துடுக்கு வாயை வைத்துக் கொண்டு அவளிடம் கேட்கப் போக.. ரோஷ்ணி அடித்தாள் ஒரு சிக்ஸர்.. ‘அவருக்கே நான் சொல்லிக் கொடுப்பேனாக்கும்’
இந்த அமர்க்களம் ஓய்ந்ததும்.. வைகோ ஸாரின் பரிசளிப்பு.. புத்தக அன்பளிப்புகள்.. அரட்டைக் கச்சேரி..
ஒன்று சொல்ல வேண்டும்.. அப்போதுதான் அறிமுகமான உணர்வே இல்லை எவரிடமும். பல நாட்கள் பழகிய நெருக்கம்.. சகஜமாய்.. இயல்பாய் சம்பாஷணை..
பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்க.. எனர்ஜிக்கு உடன் டிபன்.. ஸ்வீட்டுடன்.. அப்புறம் காபி.. பால் (எனக்கு) !
விடை பெற்றுக் கிளம்பும்போது.. என் சொந்தக் காரர்கள் லிஸ்ட்டில் இன்னும் சிலர் சேர்ந்த ஆனந்தம் என்னிடம்..
அப்படித்தான் மற்றவர்களும் உணர்ந்திருப்பார்கள் !
தேங்க்ஸ் ரஞ்சனி மேடம்.. உங்களால் தான் இது சாத்தியமானது..
தேங்க்ஸ் ருக்மணி சேஷசாயி மேடம்.. உங்கள் இல்லம் தந்த உபசரிப்பை மறக்க முடியாது !
வைகோ ஸார்.. அடுத்த சந்திப்பு எப்போ.. எங்கே  ??? !!!

(படம் : நன்றி  திருமதி ஆதி வெங்கட்)

February 14, 2015

வைரஸ் படலம் - முக நூலில் !



                             வைரஸ் படலம் - முக நூலில் !


இப்போது நினைத்தால் சிரிப்பு பீரிட்டுக்கொண்டு வருகிறது..காரணம் இதை வைத்து என் நண்பர்கள் என்னை ஓட்டியது.. ஆனால் அந்த பயங்கர நிமிடம்.. இப்போது நினைத்தாலும் தூக்கி வாரிப் போடுகிறது.
ஓட்டு போட்டு ஜனநாயகக் கடமையை முடித்த திருப்தியுடன்.. அதையும் பதிவு செய்யும் ஆவலில் மையிட்ட விரலை அழகாய்ப் படமெடுத்துப் போட்டு விட்டு பிறர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன் .  நமுட்டு சிரிப்புடன் வைரஸ் வில்லன் காத்திருந்தது தெரியாமல்.
நண்பர் ஒருவர் பதிவில் அவசியம் பார்த்தே தீரவேண்டிய வீடியோ என்ற குறிப்புடன் சாதுவான லிங்க் போடப்பட்டிருந்தது. வீடியோ பார்த்து ரொம்ப நாளாச்சு என்கிற அசால்ட்டான ஆசையில் கிளிக்கினேன்..அவ்வளவுதான்..
 பயங்கர பின்புலத்துடன் ஒரு அன்னிய அம்மையார்.. என்பக்கத்தில் வந்து ' கண்ணுக்குள் பொத்தி வைத்த என் செல்லக் கண்ணனே..' என்று பீட்டில்ஸ் பீட்டில் பாட ஆரம்பித்தார்.
 மௌஸ் அந்த நிமிஷம் கைக்கு அகப்படாமல் துள்ளிக் குதித்து கீழே விழுந்தது.
'
இன்னொரு டோஸ் காப்பி வேணுமா.. சாப்பாடு லேட் ஆகும்' சமையற்கட்டிலிருந்து குரல் கேட்டது.
அய்யோ .. வந்துரப் போறா..இந்த கண்ராவியை பார்த்துட்டு 'ஓ.. இதான் எப்ப பார் பேஸ்புக்ல இருக்கற ரகசியமான்னு'  சண்டை ஆரம்பிக்கப் போகிறதுன்னு பயத்துடன் அந்த 'அம்மணி'யை விரட்டப் பார்த்தேன்..போவேனா என்று அப்படியே நின்றாள். டிலீட் ஆப்ஷனே காணோம். மௌஸ் தானும் திக்பிரமித்து அசைய மறுத்துவிட்டது.
கடவுளே.. கடவுளே.. என்ன செய்வேன்..
இதற்குள் என் பெயர் போட்டு 20 பேருக்கு (உடனே அனுப்பாவிட்டால் கெடுதல் நிகழும்னு யாரோ சொன்ன மாதிரி) வைரஸ் விடியோ போய்விட்டது. அவர்கள் எல்லாம் (பாவம்..அப்பிராணிகள்.. ஒருத்தரைத் தவிர) என்ன ஸார் அனுப்பி இருக்கீங்க.. ஓப்பனே ஆகமாட்டிங்குது என்று விகல்பமே இல்லாமல் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
'உங்களுக்கு ஓப்பன் ஆகல.. எனக்கு மூட மாட்டிங்குது' என்கிற அவஸ்தையில் என்னென்னவோ வகையில் போராடிக் கொண்டிருந்தேன். 'ஹே கோவிந்தா.. என்னை ரட்சி' என்று அபயக் குரல் எழுப்பி (அஞ்சாறு பேருக்கு தொலை பேசி) இதிலிருந்து என்னை எப்படி மீட்டெடுப்பது என்று விசாரித்தேன்
அவர்கள் சொன்ன எந்த ஐடியாவும் வொர்க் அவுட் ஆகவில்லை முதலில். என் கம்ப்யூட்டர் சட்டென அன்னிய செலாவணிக்குப் போய்விட்டது.. களவாணித்தனம் செய்து !
3 முறை ஷட் டவுன் செய்தேன்.. ஒவ்வொரு முறையும் அவிங்க மட்டும் மாறாமல்..
இதற்குள் என் கெஞ்சலை ஏற்று பெரும்பாலான நண்பர்கள்  'சரி ஸார் விடுங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'  என்று விலகிப் போக.. ஒருத்தர் மட்டும் இன்பாக்ஸில் சொன்னார்.
'
ஸார்.. இதெல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது. ப்ளீஸ் இந்த மாதிரி எனக்கு அனுப்பாதீங்க இனிமேல்.. உங்களை அன்ப்ரெண்ட் பண்ணப் போறேன்' என்றார் சீரியசாய்.
அய்யா.. சாமி.. நான் வேணும்னா அனுப்பறேன்..என் பேரை போட்டு எவனொ சித்து விளையாட்டு விளையாடறான்னு சொல்லப் பார்த்தேன்..அவர் கோவிச்சுட்டு போயிட்டார்.
'உங்களை நம்பி வந்தவளைக் கை விடாதீங்கன்னு' நண்பர் ஒருவர் கிண்டல்..
அவளை இப்படியே கூட்டிண்டு தாயார்.. பெருமாள்சன்னிதிக்குப் போக முடியுமா என்ன !
'வாலண்டைன்ஸ் டே கிப்ட் உங்களுக்கு'  இது இன்னொருத்தர் !
இடுக்கண் வருங்கால் நகுக.. சரி.. அதுக்காக இப்படியா கலாய்க்கறது..
சுத்தமாய் வியர்த்துவிட்டேன்.. டியாக்டிவேட் பண்ணுங்க என்கிற அட்வைஸ் என்னால் போராடித்தான் செயல்படுத்த முடிந்தது.
பாஸ்வேர்ட் மாற்றினேன்.  பிறகு டியாக்டிவேட்..
இந்த பதற்றம் அடங்க லாரல் ஹார்டி மூவிஸ் அஞ்சாறு வரிசையாய்ப் பார்த்து மனம் விட்டு சிரித்தேன்.
மாலையில் உள்ளூர பயத்துடன் பேஸ்புக் ஓப்பன் செய்தேன். ஓப்பன் ஆகிவிட்டது. அந்த பதற்றத்தில் எனக்குக் குழப்பம் வேறு. எப்படி ஆகும்.. நான் தான் டியாக்டிவேட் செய்திருக்கிறேனே.. அப்புறம் நண்பர் சொன்னார்.. 'நீங்க பாஸ்வேர்ட் போட்டா ஓப்பன் ஆகிரும்'
ஒரு விதத்தில் நிம்மதி..செல்வி சங்கர் மேடம் என் சார்பில் என் கஷ்டத்தைப் போட்டிருந்தாலும் நானும் சொல்லிவிடலாம் என்று பதிவிட்டேன். உடன் சிலர் கமெண்ட்ஸ் பார்த்து ஆஸ்வாசம்.

யப்பா..பேர் தெரியாத புண்ணியவானே.. உன் அறிவு சாமர்த்தியத்தை வேற வழியில் காட்டக் கூடாதா..இப்படி எல்லாமா விளையாடறது..
ஏதோ வசனமா எழுதுவேன்.. என்னையும் புலவன்னு ஒத்துகிட்டிருக்காங்க.. இப்போ யாரோ துரத்தற மாதிரியே இருக்கு.. இனிமே நான் அனுப்பாட்டியும்.. இது நீங்க அனுப்பினதான்னு கேட்கமாட்டாங்களா..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா.. போதும் டா சாமி !

அந்த நேரத்தில் வந்து எட்டிப் பார்க்காத என் அப்பாவுக்கும், துணைவிக்கும் கோடானுகோடி நன்றிகள் !