January 11, 2013

ஜ்வல்யா





'நா(ன்) தான் இப்போ
அப்பாவாக்கும்’
ஜ்வல்யாவால்
சுலபமாய்
அப்பாவாக முடிகிறது..
என்னால் முடியவில்லை
ஜ்வல்யாவாக.

January 02, 2013

சாரம்

வீட்டிற்குள் நுழைந்தபோது பானு குழந்தைக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்ததும் சிநேகமாய்ச் சிரித்தாள்.

ஆனால் சரவணன் முகம்தான் சோர்ந்து இருந்தது.

"என்ன சரவணா! வேலை கிடைச்ச பின்னால ஆளே மாறிட்டே?" என்று சீண்டினாள்.

சரவணன் எதுவும் பேசாமல் நின்றான். குழந்தை, வாயிலிட்ட சாதம் விழுங்காமல் உம்மென்று வைத்திருந்தது. அரை மணி நேரமாகும் ஒரு டவரா சாதம் ஊட்ட. பானு சலிக்காமல் விளையாட்டுக் காட்டிக் கொண்டே முழுவதையும் ஊட்டி விடுவாள். தினசரி, சரவணனுக்கும் இது ஒரு பொழுதுபோக்கு. இன்று அதில் கூட சுவாரசியம் காட்டவில்லை.

"உள்ளார உப்புமா வச்சிருக்கேன். கொஞ்சம் டேஸ்ட் பார்க்கறியா?" என்றாள் பானு மீண்டும்.

"வேணாம்!"

"ஏன், வர வழியிலே ஏதாவது சாப்பிட்டியா? ஆங்… முன்னே மாதிரியா… இப்ப ஐயா வேலைக்குப் போறீங்க. வீட்டு டிபன் ருசிக்குமா? அன்னபூர்ணா அடை அவியல் மாதிரி வருமான்னு கேட்கத்தானே தோணும்!"

உண்மையில் எதுவுமே சாப்பிடவில்லை. காபி கூடக் குடிக்கவில்லை. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதுமே தகவல் கேள்விப்பட்டதும் அதிர்ந்தான்.

"பானு வீட்டுல, அவருக்கு டிரான்ஸ்பர் வந்திருக்காமே உனக்குத் தெரியுமா?" என்றாள் அவன் தங்கை கவுரி.

"எப்ப…?"

"தெரியலே… உடனே கெளம்பணும் போல இருக்கு. பதவி உயர்வும், டிரான்ஸ்பரும். அவசியம் போயே ஆவணுமாம்."

"எ…ந்த ஊருக்கு?"

"தூத்துக்குடின்னு நினைக்கிறேன். என்னடா உனக்கே தெரியாதா? ஒரேயடியா அண்ணி அண்ணின்னு உருகுவே! அவங்க வீடே பழியாக் கிடப்பியே!" என்றாள் கவுரி.

வாஸ்தவம்தான். பானு அறிமுகமான பிறகுதான் சரவணனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பே எற்பட்டது. ‘தண்டச்சோறு’ என்ற நினைப்பில், வேலை கிடைக்காத அவலத்தில் மனம் குமுறிக் கொண்டு இருந்தவனை மனிதனாக உணர வைத்து, தளர்ந்து போகாமல் வார்த்தைகளால் தூக்கி நிறுத்தி, அலுக்காமல் வேலை தேட வைத்து, இதோ… இன்று ஒரு பெரிய பைனான்ஸ் 
கம்பெனியில் கணக்கு எழுதும் வேலைக்குச் சொந்தக்காரனாக்கி விட்டாள்.

நெகிழ்ந்துதான் போனான். பெற்றவர்கள் கூடத் தராத நெஞ்சுரம். சிநேகிதியாய்ப் பழகி, மருண்டு போன நேரங்களில் கலகலப்பாக்கி, குடும்பத்தில் ஒருவனாய் உணர வைத்து, செய்யும் சமையலில் கூட அவனுக்கும் ஒரு பங்கு என்று பகிர்ந்து ‘அண்ணி… அண்ணி’ என்று ஏங்கவே வைத்து விட்டாள்.

அப்படிப்பட்டவள் இதோ வெளியூர் போகிறாளா? அதுவும் சரவணன் வேலையில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளா? இனி எந்த வீட்டுக்குள் உரிமையாய்க் காலடி எடுத்து வைக்க முடியும்? எந்த முகம் இவன் தளர்ந்து போகும்போது தைரியம் தரும்?

"சரவணா…!" பானு அருகில் நின்று ஏறக்குறைய அலறியிருக்க வேண்டும்.

திடுக்கிட்டு விழித்தான்.

"நல்ல புள்ளை போ! இதோ பாரு… இவன் கூட சாப்பிட்டு முடிச்சுட்டான். சரி இந்தா டிபன்! உனக்குப் பிடிக்கும்னு வெஜிடபிள் உப்புமா செஞ்சேன். சாப்பிட்டுட்டு வா! கோவில் வரை போகணும்."

உப்புமாவின் சுவை மீறி மனசுக்குள் பிரிவின் கனம் இறங்கியது.

"ஏன் உம்முனு இருக்கே, உடம்பு சரியில்லையா?" கரிசனம் குரலில் இழைந்தது பானுவுக்கு.

"நீ…ங்…க… வெளியூர் போறீங்களா?" குரல் தழுதழுத்தது சரவணனுக்கு.

"ஓ… அதுதானா?… சர்த்தான் போ, அதுக்கா இப்படி இடிஞ்சு போயிட்டே?"

பானு பெரிதாகச் சிரித்தாள்.

"புரியாம பேசாதீங்க! நான் இனிமே…"

சரவணனுக்கு உள்ளூர எரிச்சல் வந்தது. என்ன மனுஷி இவள்? பிரியத்தைக் கேலி செய்து கொண்டு…

"சரி, வரியா வெளியே போகலாம்?"

குனிந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். பானு வீட்டைப் பூட்டிக் கொண்டு நடந்தாள். அதே வரிசையில் பழைய வீட்டை இடித்து அடுக்கு மாடிக் கட்டடம் கட்டிக் கொண்டிருந்தனர். தெருவில் செங்கற்கள் அடுக்கி… மணல் மேடு பெரிதாய் நின்றது. ஏகப்பட்ட தொழிலாளர்கள். சித்தாள்களும், வேலையாட்களுமாய்.

"ரோட்டுக்கு அந்தப் பக்கம் போயிரலாம். தூசி அடிக்குது" என்றான்.

"அதோ பார்த்தியா!" பானு சுட்டிக்காட்டிய திசையில், எழும்பிக் கொண்டிருந்த கட்டடம்.

"என்ன…?

"சாரத்தில் எத்தனை ஆளுங்க வெள்ளை அடிக்கிறாங்க பாரு!"

'அதில் என்ன ரசனை…' என்பது போலப் பார்த்தான்.

"இன்னும் ரெண்டு மாசத்துல பிளாட்ஸ் தயாரான உடனே சாரத்தை என்ன செய்வாங்க?" என்றாள் குழந்தை போல.

"எடுத்துருவாங்க… அப்புறம் அது எதுக்கு வேஸ்ட்டா?"

பானு சிரித்தாள்.

"அதே மாதிரிதான் நானும்! தளர்ந்து போன உனக்கு சாரமா என்னோட பழக்கம் உன்னைத் தூக்கி நிறுத்தி புது தெம்பு கொடுத்துப் புத்துணர்ச்சி ஊட்டியது. இப்ப உனக்கே தன்னம்பிக்கை வந்திருச்சு! உனக்கென ஒரு வேலை இருக்கு. கடமைகள் இருக்கு. தங்கை கல்யாணம் இருக்கு. இனிமே சாரம் எதுக்கு?"

வாழ்க்கையை ரொம்ப எளிமையாய் உணர்த்தி விட்டவளைப் புரிந்து கொண்ட பாவனையில் பார்த்துப் புன்னகைத்தான்.




January 01, 2013

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

அன்பால் நெய்யப்பட்ட
உலகில்
புன்னகை பூக்கள் பரப்பி
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எல்லோருக்கும்.