December 29, 2010

ஒத்திகை


'இல்லை' என்று மறுக்கவும்

'உண்டு' என்று ஏற்கவும்

அநேக விஷயங்களுடன்

வாழ்க்கை..

அவரவர்க்கான முரண்களை

மூட்டை கட்டி

காலடியில் வைத்துக் கொண்டு

கை குலுக்கிக் கொண்டிருக்கிறோம்.

எந்த நிமிடம் பிரிவு என்பது

தெரியாத புதிரில்

இன்றைய தினம்

குறைந்த பட்சம்

மலர்க் கொத்து ..

இல்லாவிட்டாலும்

ஒற்றை பூ வை

ஏந்திய விரல்களுடன்

எதிரில் வரட்டும்..

சிணுங்கல்கள் அற்ற புன்னகை

சுலபமாய்த் தொற்றிக் கொள்ளும் ..

கண்ணாடி முன் சிரித்துப் பழகிய

ஒத்திகை

வரட்டும் வாழ்நாள் முழுவதும்.


December 27, 2010

தேவதைகள்அத்தை பையன், அவன் மனைவி, குழந்தை என்று வீட்டில் ஜேஜே ..

நான் கஷ்டப் பட்டு எழுதி .. (படிக்கிறவர்களும் கஷ்டப்பட்டு ) அச்சில் வந்த கதைக்கு புத்தகம் தபாலில் வரும். இவன் அலட்டிக் கொள்ளாமல் வாசகர் கடிதம், ஆசிரியருக்குக் கேள்வி எழுதி வாரா வாரம் காம்ப்ளிமென்டரி காப்பி வாங்கி விடுவான்.

'கதைக்கு வரைந்த ஓவியம் சூப்பர் '

'எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மேட்டர் கிடைச்சிதோ '

கேள்வியில் 'நீங்க ரசிச்ச புத்தகம்.. ' 'உங்க மனசு கஷ்டப்பட்டது எப்போது' ரகத்தில்.

சொல்லி வைத்த மாதிரி பத்து விமர்சனம், பத்து கேள்விகளை மாற்றி மாற்றி கார்டில் எழுதி வந்த பிரதியை ஜம்பமாய் காட்டிக் கொண்டு போகும் போது திரும்பி வந்த கதையை நான் மறைக்க படாத பாடு படுவேன்.

இதையெல்லாம் பேசி சிரித்தோம். அதே தெருவில் குடியிருந்த ஒரு அழகான பெண்ணும் அவள் தம்பி பற்றியும் பேச்சு திசை மாறியது.

'அவளை கவர் பண்ண அவன் தம்பிக்கு பேட்டிங் சான்ஸ் கொடுப்போம். அவுட் ஆனாக் கூட இல்லைன்னு சொல்லிருவேன். எதிர் வீட்டு கண்ணாடியை அவன் உடைச்சப்ப நாங்க காசு கொடுத்து மாத்தினோம். ரன் எடுக்க நடந்து போவான் .. எதுவுமே சொல்ல மாட்டோம்..'

'அவ வீட்டுக்கு பிரசாதம் கொடுக்க போனேன்.. கொஞ்சம் பந்தாவா இருக்கட்டும் .. வேட்டி கட்டிக்கிட்டு போனா அவ கூலா யாரோ மாமா வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு போயிட்டா' - இது என் பங்கிற்கு நான் சொன்னது.

சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதி விட்டார். எழுதாத நிறைய கதைகள் இன்னமும் இருக்கு.

கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் ஜாலி.. கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம் என்று

சித்திரை வீதிகளில் தடம் பதித்த சம்பவங்களில் ஒரு மீள் பயணம் செய்யும் போது இந்த நாளின் அழுத்தம் எல்லாம் மறந்து என்னமாய் ஒரு உல்லாசம்.December 20, 2010

உரிய நேரம் - ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

'பழமென நினைத்து நான் விழுங்கிய பிறகுதான் அது தீயெனத் தெரிந்தது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் அதைப் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறேன். அத்தீ நாவுகள் என்னைச் சுவைக்கிற போதெல்லாம் நான் பரவசப்பட்டு சிலிர்த்துப் போய் கவிதை எழுதுகிறேன். '

எதற்கும் உரிய நேரம் வர வேண்டும் என்பார்கள். கவிதைத் தொகுப்பிற்கும் அதே விதி நேர்ந்திருக்கிறது.

'சௌரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான் ' என்று திரு. வ. நாராயண நம்பி , தமிழ் துறை , பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி எழுதியது போல அவரின் கவிதைகள் பல எளிமையாய் இருந்தாலும் முன்னுரையில் படைப்பாளியே 'சில இடங்களில் நான் அதை மீறியிருக்கிறேன் ' என்று சுட்டி இருக்கிறார் .

தீபம், கணையாழி , அமுதசுரபி , யுகமாயினி , திண்ணை. காம் , ராகம், அரும்பு , இன்று , கவிதை உறவு , நற்றிணை , வெளிச்சம், மும்பை தூரிகை - பிரசுரம்
கண்ட பெருமைக்கு உரியவர்.
86 கவிதைகள் அடங்கிய 'உரிய நேரம் ' தொகுப்பில் இருந்து..

தாய்மை என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை இதோ..

கொட்டும் மழையில்
கோழியின் வயிறே கூரையாக
சிறகுகள் சுவர்களாக
நனையாத அந்த அந்தச் சிறு இடத்தில்
தெரிந்தன ஐந்தாறு ஜோடி
சிறிய ஈர்க்குச்சி கால்கள்!

(தீபம்)

ஆளில்லாக் கிரகம் ஒன்றைக்
கொக்கி போட்டு
நிலாவில் தொங்க விட்டு
நாம் ஊஞ்சல் ஆடிப் பார்த்தால் என்ன
? என்று "என்னவள்" கவிதையை முடிக்கும்போது அவர் கவிதை விண்ணை முட்டுகிறது.

தீயே கேள் கவிதையில் சொல்கிறார்.

'ஏழை, குழந்தைகள் வயிற்றில்
பசியாகும்போது
சாந்தம் கொள்.
நியாய வான்கள்
நெஞ்சில் நிலை கொள்'
எனும்போது 'ஆம்' என்றே தலை அசைக்கத் தோன்றுகிறது.

'ஒரே நேரத்தில்
தன் ஆயிரமாயிரம் கரங்களால்
தாவரக் குழந்தைகளுக்கு
அமுதூட்டுகிறாள்
மேகத்தாய்'
என்று மழை குறித்த அவர் பார்வை வித்தியாசமாய் பதிவாகிறது.

அழகியல் அவர் பார்வையில் 'ஓரவஞ்சனை'யாய்..

"கண்ணாடிக் குழல்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல்
அழகான விரல்கள்"

பின் செல்லும் மனம் எனும் தலைப்பில் என்ன அழகாய் பாசத்தைப் படம் பிடித்திருக்கிறார்..

"இருபது வயதில் ஒரு நாள்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது
என் அடர்ந்த தலைமுடியை
அருகில் இருந்த என் அப்பா
கோதிப் பார்த்தபோது
புரியாத ஒன்று
இப்போது புரிகிறது..'

இவர் கவிதைகள் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறது. சிலாகித்திருக்கிறது. கோபித்திருக்கிறது. வர்ணித்து இருக்கிறது. ஒரு பார்வையாளனாய் படம் பிடித்திருக்கிறது.

கவிதை அனுபவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்களில் சிலரே வடிவ நேர்த்தியில் சிறந்திருக்கிறார்கள்.

தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் நம் அனுபவத்தையும் பிரதிபலிப்பதால் ரசனை எனும் நேர்கோட்டில் அவரைச் சந்தித்து விடுகிறோம்.

வெளியீடு. சித்திரா நிலையம், 7/40 கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை-600 016

December 16, 2010

தோழிக்கு


மன விகாரங்களைந்து உயர் நிலையடைய

மதி விதி யாவும் தன்வசமாக

தினமொரு கணமும் தூய நற்பொழுதாய்

திருவருள் குருவருள் இணைந்து பெறவே

மீனென கண்கள் சுழன்று வலை வீச

மீளா என் மனம் நன்னிலை அடைய

தானென வந்து தரணியில் இன்று

துணையாய் நின்ற தூய நற்கொடியே.

பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்

பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்

வீசும் கதிர்களில் பெருந் தீயாகும்

விந்தையில் மனமே ஞான மயமாகும்

கூசும் உணர்வுகள் விலகிப் போகும்

கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்

பேசும் என் உணர்வுகள் இரு கவிதையானால்

பேசா உணர்வுகள் ஒரு கோடி தானே .

இக்கவிதைகள் என்னை முதன் முதலில் நேசித்த என் சிநேகிதிக்கு - இராமகிருஷ்ண , சாரதா, விவேகானந்தரை எனக்கு அறிமுகம் செய்து மடத்தின் வெளியீடுகளை வாசிக்கக் கொடுத்து , தியானம் பற்றிய தெளிவை சொன்ன - பேரன்பிற்கு எழுதியவை.

வருடங்கள் பல ஒடி விட்டன. அவர் இப்போது எங்கேயோ..

ஆனால் அப்போது எழுதிய கவிதை இன்னமும் மனசுக்குள்..

வாழ்க்கை நடுவே அவ்வப்போது யாரேனும் வெளிச்சம் காட்டிப் போகிறார்கள்.

இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.

December 08, 2010

ஜ்வல்யா

அந்த பயணம் நெடுக என் எதிரில்தான் அந்த குழந்தை .. கைக்கெட்டும் தூரம்.
ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால் என் மீது பட்டது. துணி மாற்றிய போது. என் அருகில் இருந்த அத்தனை பேரும் வாங்கிக் கொஞ்சி விட்டார்கள். என்னைத் தவிர.
எனக்கொன்றும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளக் கூடாதென்றில்லை.
முதலில் ஏதோ ஒரு வித தயக்கம். பிறகு நானே விரும்பிய போது அது என் பக்கம் திரும்பவே மறுத்தது.
'வாடா செல்லம்.'
அடுத்த நபரிடம் போனது. பூக்குவியல். அவர் கைகளில். என்ன ஒரு பிரகாசம் அவர் முகத்தில்.
"என்ன பேர் "
"ஜ்வல்யா"
"அழகான பேர் "
ஜ்வல்யா. நானும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்று புறப்பட்டபோது .. புது நபர்கள் வந்தபோது.. அதுவரை பயணித்தவர்கள் இறங்கிப் போனபோது.. ஜ்வல்யாவை விட்டுப் பிரிகிற .. சேர்கிற நபர்களின் உணர்வுகள் அப்பட்டமாய் தெரிந்தது.
"ஏதாச்சும் சாப்பிடறியா "
அவர்தான் கேட்டார். அவரிடமும் ஜ்வல்யா கொஞ்ச நேரம் இருந்தாள்.
"வேணாம் .. "
"நீ வச்சுக்கிறியா.. ஜ்வல்யாவை"
அவரையே பார்த்தேன். கண்ணில் ஜலம் தளும்பி நின்றது.
"ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. " என்றார் கிசுகிசுப்பாய்.
சட்டென்று ஜ்வல்யாவை கை நீட்டி வாங்கிக் கொண்டார் . என் மடியில் விட்டார்.

முழுமை பெறாத என் இடது கையும் சற்றே துவண்ட என் வலது கையும் அந்த நிமிடம் முழுமையாய் ஜ்வல்யாவை ஸ்பர்சித்து..
என்ன அழகான சிரிப்புடன் கால்களை உதைத்துக் கொண்டு.. பாதுகாப்பாய் அவர் பிடித்துக் கொள்ள..
என் மடி நனைந்து போனது அப்போது..

December 06, 2010

ஒரு வார்த்தை

ஏழுகடல் ஏழு மலைகள்
தாண்டி இருக்கும்
உலகம் பற்றி
சின்ன வயதில்
கதைகளும் பிரமிப்பும்..
ஊர் விட்டு ஊர் வந்து
வேலை பார்க்கும் போது
மறந்து போகின்றன
சாகசங்கள்..
வார இறுதி நாட்களில்
கிடைத்த இருக்கையில்
பயணமும்
அல்லது தொங்கிக் கொண்டோ..
கதவைத் தட்டி
(அம்மாதான் வந்து கதவைத்
திறக்கணும்.. கடவுளே )
'சாப்டியா '

இந்த ஒரு வார்த்தைக்குத்தான்
நானூறு மைல் பயணம்.. !

December 01, 2010

சிநேகிதி

இப்போதெல்லாம் சீக்கிரமே இருட்டி விடுகிறது. தெருவில் வருவோர், போவோர் குரல்களை வைத்தே அடையாளம் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. பேசாமல் வந்து நிற்பவர்களை இனம் காண முடிவதில்லை.
சாலாவும் அதைத்தான் சொன்னாள். அவளுக்கும் இதே சிக்கல்தானாம்.
போன மாதம் ஒரு திருடன் வந்து சத்தம் போடாமல் அவள் அருகே நின்றிருக்கிறான்.
'என்ன வேணும்' என்றிருக்கிறாள்.
கரகரத்த குரலில் 'செயினைக் கழட்டு' என்றதும் 'என் செயின் உனக்கு எதுக்கு' என்று விரல்களை உயர்த்தி அண்டக் கொடுத்து பார்த்திருக்கிறாள்.
வியர்வை நாற்றம். பீடிப் புகை. கைலி மசமசவென்று கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது.
'யாருடா நீயி..'
செயினைப் பிடித்து இழுத்தவனோடு போராடியபடி சத்தம் போட்டிருக்கிறாள். ஆட்கள் வரவும் ஓடிவிட்டானாம். சாலாவின் கழுத்தில் கீறல்கள்.
'ரெட்டை வடம்டி.. ஏழு பவுனாக்கும். செயின் போறதுன்னு விட்டிருப்பேன். மிச்சம் இருக்கிறதே எனக்கு அது ஒண்ணுதான். (செத்துப்) போனா தூக்கிப் போட மனசு வருமே.. செயினைப் பார்த்து'
சாலாவின் வார்த்தைகள் யதார்த்தத்தில் அக்னிக் குழம்பு.
'இருந்தாலும் உனக்கு அசாத்திய துணிச்சல்டி'
சிலாகிப்பில் மயங்குபவளல்ல சாலா. வயசும் அந்த போதையைத் தாண்டி விட்டது.
கணவர் தவறிப் போனபோது சிறுவயசுதான் அவளுக்கு. கைக்குழந்தையோடு அவள்.
'கார்த்தால சமைக்க ஆரம்பிச்சா நாள் பூரா சமையக் கட்டுதான். அப்புறம் அம்பாரம் துணி.. இவன் அழுதாக் கவனிக்க ஓடணும். பாதிக் குழம்பு கொதிக்கும். இலையைப் போடுன்னு குரல் கேட்கும். எப்பவும் பத்து பேர் சாப்பிடத் தயாரா இருப்பா. நான் சாப்பிடறப்ப மிச்சம் மீதிதான்'
சாலாவின் பேச்சில் விரக்தி தொனிக்காது. நேர்முக வர்ணனை மாதிரி சரளமாய் வார்த்தைகள் கொட்டும். யாருக்கோ நிகழ்ந்ததை சொல்லும் த்வனி.
அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்த காலம் போய் இப்போதெல்லாம் சாலாவால் நடக்க முடியவில்லை என்று வருவதில்லை. கடைசியாய் அவளைப் பார்த்தபோது சொன்னாள்.
'இப்பல்லாம் ரொம்பவே முடியலை. மூச்சு வாங்கறது. இன்னிக்கு வந்துட்டேன். நாளைக்கு வருவேனா தெரியாது. மரகதம்.. என்னை வழியனுப்ப நீ வர முடியுமோ.. தெரியலை. என் கையைப் பிடிச்சுக்கோயேன்.."
''என்ன சாலா..'
அடிவயிறு லேசாய்க் கலங்கிப் போனது. ஆனாலும் சாலாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். அத்தனை வேலை பார்த்த கை மெத்தென்று இருந்தது. நிமிஷங்கள் மெல்லக் கரைந்து ஒரு சொட்டு கண்ணீர்.. யாருடையது என்று தெரியவில்லை.. இருவர் கைகளிலும் பட்டுத் தெறித்தது.
'வரேன்'
அடுத்தடுத்த நாட்களில் சாலா வரவில்லை. விசாரித்ததில் அவளுக்கு காய்ச்சல் என்றார்கள். திண்ணையில் படுக்கை என்றார்கள். சாப்பாடு வாசலுக்கே வருகிறதாம். அதே இடத்திலேயே மலஜலமாம்.
'கிடக்காம போயிட்டா பரவாயில்லை' என்று பையன் சொன்னானாம்.
'எப்படிம்மா மனசு வருது' என்று மரகதத்தின் பையன் கேட்டான்.
சாலாவை நாம கொண்டு வந்து வச்சுக்கலாமா என்கிற கேள்வி உதடு வரை வந்து செத்துப் போனது. சாத்தியமில்லை.
இத்தனைக்கும் சாலாவின் நட்பு கிடைத்து பத்தாண்டுகள்தான் ஆகிறது. இந்த ஊருக்கு மாற்றலாகி வந்ததும் கிடைத்த அறிமுகம்.
அப்போதெல்லாம் கோவிலுக்கு, கடைத்தெருவுக்கு என்று நடமாட்டம் இருந்த நேரம்.
சைக்கிளில் வந்தவன் இடித்துவிட்டு வேகமாய்ப் போய்விட மரகதத்தின் கையில் சிராய்ப்பு.
'ரத்தம் வருதே'
பார்த்த சாலாவிடம்தான் எத்தனை பதற்றம்.
பக்கத்திலேயே ஒரு டாக்டரிடம் அழைத்துப் போனாள்.
மரகதம் 'தனக்கு ஒன்றுமில்லை' என்று மறுத்தும் கேட்காமல்.
'வீடு வரைக்கும் வரேன்' என்றாள் சாலா.
'அய்யோ.. எனக்கு ஒண்ணுமில்லே.. நான் நல்லாதான் இருக்கேன்'
வீட்டுக்கு வந்து சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.
'என்ன மனசு.. என்ன மனசு'
அந்த மனசுதான் இருவரையும் நட்பாக்கி விட்டது.அதன்பின் இருவர் வீட்டில் எதுவானாலும் பரஸ்பரம் அழைப்பு. சந்திப்பு.
நேரங்கிடைக்கும்போதெல்லாம் சாலா இங்கே வந்து விடுவாள். பேசிக் கொண்டிருந்துவிட்டு போவாள்.
'பாட்டி உன் ஃப்ரெண்டு வந்தாச்சு'
பேரன் இருந்தால் கத்துவான்.இப்போதும் அவன் தான் வந்து நின்றான்.
'பாட்டி.. உன் ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லையாம்..'
சொல்லிவிட்டு அவளையே பார்த்தான்.
'ஆமாண்டா செல்லம்'
'நீ போய் பார்க்கலியா'
'எனக்கும் முடியலைடா'
'பாவம் அந்தப் பாட்டி.. வாசத் திண்ணைல படுத்திருக்கா'
'ம்'
'நாத்தமா இருக்கு..'
சாலா. ஏண்டி கஷ்டப்படறே.. இன்னும் எதற்காக இந்த பூமியின் ஸ்பரிசம்? நீராடி நெருப்பில் குளித்து காற்றில் கலக்க நேரம் வரவில்லையா?
'பாட்டி தூங்கிட்டியா'
'இல்லைடா'
'நான் வரேன் பாட்டி. ஹோம் வொர்க் இருக்கு'
உள்ளே போனான் பேரன். தொலைக் காட்சியில் கார்ட்டூன் அலறல் கேட்டது.
மரகதத்தின் அறைக்குள் லேசான வெளிச்சம்தான். முனகினால் வெளியே கேட்குமோ என்கிற சந்தேகம் எப்போதும் உண்டு. இரண்டு முறை சோதித்தும் பார்த்தாகி விட்டது.
இருமியதும் 'வெந்நீர் வேணுமா' என்கிற பரிவுக் குரல் கேட்டதும் மனசுக்குள் அமைதி.
'பாட்டி..'
அருகில் பேரன் வந்து இரண்டு முறை அழைத்து விட்டான்.
'அம்மா சாப்பிட கொண்டு வரலாமான்னு கேட்கறா'
'ம்ம்'
'சாப்பிட..'
பசிக்கல.. என்று சொன்னதாய் உணர்வு. ஆனால் வார்த்தை வெளிப்படவில்லை என்று தோன்றியது. தொண்டைக்குள் ஈரமற்றுப் போன மாதிரி.
'அம்மா.. பாட்டி ஒரு மாதிரி முழிக்கறா'
பேரன் கத்திக் கொண்டே ஓடியது புரிந்தது.கட்டிலைச் சுற்றி மனிதர்கள். எனக்கு ஒண்ணும் இல்லை.. மரகதம் கத்திப் பார்த்தாள்.
ஊஹூம். யாரும் கேட்பதாக இல்லை. ஏன் பேசாமல் என்னைச் சுற்றி நிற்கிறார்கள்.. ஏதாவது கேட்கலாமே.. இப்போ பசிக்கற மாதிரி இருக்கே.. டேய் வருண் சொல்லேன்.. பாட்டிக்கு பசிக்கிறதுன்னு.
படு அமைதி. இத்தனை பேர் இருக்கிறபோது எப்படி சாத்தியம். வலி எதுவும் புரியாமல் உடலெங்கும் பரவிய நிம்மதி.
ஹப்பாடா.. என் வேதனைகள் எல்லாம் எப்படி மறைஞ்சு போச்சு.. சாலா கேட்டா சந்தோஷப்படுவா.. சாலா உனக்கும் இதே போல விடிவு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?
மரகதத்தின் முகத்தில் அசாதாரண தெளிவு வந்து விட்டது.
திண்ணையில் படுத்திருந்த சாலாவுக்கு தெருவில் போன மரகதத்தின் இறுதி ஊர்வலம் புரியவில்லை. புரிந்திருந்தால் சிநேகிதி தன்னை வழியனுப்ப வந்து விட்டது தெரிந்திருக்கும்.