December 12, 2015

அம்மு 11

அம்முவிடம் என் காதலைச்  சொல்லத்  தேர்ந்தெடுத்த இடம்  கிணற்றடி..  அதுவும்  வீட்டில் அத்தனை பேரும்  நம்பெருமாள் வருகிறார் என்று வீட்டு வாசலில்  நிற்கிற நேரம்.
“குடத்துல ஜலம் இல்லைடா “ என்று அம்மா சொல்லியிருந்தாள்.
வாசலில் கொட்டு சத்தம் கேட்டது.   பெருமாள் வருகிறார்.  ‘யானை வந்தாச்சு ‘ என்கிற அலறல் கேட்டது.  ஆச்சு..  இனி பிரபந்த கோஷ்டி .. பின்னாலேயே பெருமாள் வந்து விடுவார்.   ஆறரை மணிக்கு வேட்டு சத்தம் கேட்டாலே புறப்பாடு ஆயிருச்சு என்று மொத்த ஸ்ரீரங்கமும் உற்சாக  தீப்பற்றிக் கொள்ளும்.
“நீ போம்மா .. ஜலம் எடுத்து வச்சுட்டு பின்னாலேயே ஓடி வரேன் “ என்றேன்.
படிப்பு வரவில்லை.  கணக்கு போர்டில் எழுதியிருப்பது எத்தனை தடவை பார்த்தாலும் புரியவில்லை.
குரல் மட்டும் கொஞ்சம் இனிமையாய் அமைந்ததால் பிரேயரில் உபயோகிக்கிறார்கள்.  இன்னமும் டிசி கொடுக்காததற்கும்  வருடாவருடம் பாஸ் போடுவதற்கும் அதுதான் காரணம்.  சர்வமத பாடல்கள் அத்துப்படி என்பதால் எல்லோருக்கும் மனதுக்கினியவன் ஆகிவிட்டேன்.
கிணற்றில் நீர் இழுக்கும் போதும் என் வாயில் ஹம்மிங்..  அம்மு  ‘கண்ணா’ என்று கூப்பிட்டதும் சட்டென்று தூக்கி வாரிப் போட்டது.
எனக்குப் பிடித்த நீலக் கலர் தாவணி.  சைடில் வகிடு எடுத்திருப்பாள் எப்போதும்.  கன்னத்தில் நிரந்தரமாய் ஒரு குழி.  தெற்றுப்பல்.  நேராய்ப்  பார்த்துத் தொலைப்பதால்  ஒரு ஜுரம் பற்றிக் கொள்ளும்.
“என்ன.. அம்மு.. “ என்றேன் திணறலாய்.
“ பெருமாள் சேவிக்கப் போகலியா “
“ஜலம் எடுத்து வச்சுட்டு போகச் சொன்னா அம்மா”
“ம்..”
“எனக்குத்தான்  கொடுத்து வைக்கல  “  என்றாள் .
புரிந்தது .  வெளியே  வர  முடியாது.
“அம்மு .. “
“என்னடா “
அவள் கண்களில் ஒரு சோர்வு  தெரிந்தது.  இந்த நேரத்தில் போய் சொல்லணுமா  என்று தயங்கினேன்.
“சொல்லுடா “ என்றாள்  கனிவாய்.
“உன்னைப் பிடிச்சிருக்கு “
“ப்ச் .. அதான் தெரியுமே “
“நான் சொல்ல வந்தது .. “
“போடா.. பெருமாள்  ஆத்தைத் தாண்டிப் போயாச்சு .. ஓடு “
குடத்தை வைத்து விட்டு ஓடினேன். .  பட்டா வீட்டைத் தாண்டிப் போய் விட்டார்.  பின்னாலேயே  ஓடிச் சேவிக்க வேண்டியதாச்சு.   திரும்பி வந்தபோது அம்மு  கொல்லைப்புற படியேறி மொட்டை மாடி ரூமுக்குப் போய்விட்டாள்.
எப்படியோ சொல்லியாச்சு.  அவளுக்குப் புரிந்திருக்கும்.  என்னை விட மூன்று வயசு மூத்தவளாச்சே.. அந்த அளவுக்குக் கூடவா புரியாது..
அம்முவின் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.  அவள் அப்பா சமையல் வேலை. ஒரு காண்ட்ராக்டில் இருந்தவரை நிரந்தரமாய்  வருமானம் வந்து கொண்டிருந்தது.  நெளிவு சுளிவு புரிந்ததாய் நினைத்துக் கொண்டதும் தனியே ஆரம்பித்தார்.  அதிலிருந்து பிரிந்து வந்தவர்கள் சிலருடன்.  அவர்கள் கெட்டிக்காரர்கள். பார்ட்னராய் இல்லாமல் சம்பளமாய் பேசிக் கொண்டார்கள். இவர் முழு லாபமும் தனக்கு என்று தப்புக் கணக்கு போட்டதில் முதல் காண்ட்ராக்டிலேயே சரியான அடி.
‘அண்ணா.. இந்தத் தொழில்ல ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப் போக  பாருங்கோ.. நம்ம வரதனும் அப்படித்தான் ஜெயிச்சு வந்தார்..’
நன்றாக ஏற்றி விட்டார்கள்.   மூன்று நாள் உழைப்பின் பின் அவர்கள் காசும் சாமானுமாக திரும்பிப் போக இவர் கைக் காசு நஷ்டத்துடன் வீட்டுக்கு வந்தார்.  மாமி வாயில்லாப் பூச்சி.  அம்முவிற்குப் பின் இரண்டு பெண்கள்.. ஒரு பையன் கடைக்குட்டி.  குடும்பம் அல்லாடிக் கொண்டிருந்ததை யாரிடமும் சொல்ல முடியாமல் உடையவர் சன்னிதிக்குப் போய் அழுது விட்டு வருவாள்.
அந்த நேரம் சாம்பு வந்தான்.  முரட்டு உருவம். எப்போதும் பான் பராக் வாயில்.  தூரத்தில் வரும் போதே ஒரு நாற்றம் அடிக்கும். அவன் உபயோகப் படுத்தும் ஸ்பெஷல் செண்ட்..  அம்முவின் அப்பாவிற்கு ஊக்கம் கொடுத்தான்.
‘உங்களை  நன்னா மொளகா அரைச்சிட்டா..  இனிமே நான் சொல்றபடின்னு சொல்லிருங்கோ.. ‘
அம்முவின் அப்பா மறுபடி ஏமாறப் போகிறார் என்று புரிந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
போதாக் குறைக்கு என் அம்மாவையும் கரைத்து விட்டான்.
‘கண்ணன் சும்மாதானே இருக்கான்.. என் கூட அனுப்புங்கோ.. தொழிலைக் கத்துத் தரேன்.. பின்னால அவனும் தனியா காண்ட்ராக்ட் எடுக்கலாம் ‘
அம்மாவுக்கு அப்போதே  பரணிலிருந்து பணம் கொட்டியது மனக் கண்ணில்.  போடா என்றாள்.  மாதுர் வாக்ய பரிபாலனம்.   போனேன்.
5000 அவன் ஒதுக்கிக் கொண்டு அம்முவின் அப்பாவிடம் 2000 கொடுத்தான்.  எனக்கு 500.
அம்முவின் அப்பா கண்களில் நீர்.  கை நஷ்டம் இல்லாமல் ஒரு வரவு. அம்முவின் அம்மா உடையவருக்கு 12 பிரதட்சிணம்  செய்தாள் அன்று.
என் முதல் சம்பாத்தியம்.   பள்ளிக்கு சிக்கல் இல்லாமல் இந்த வேலை ஓடிக் கொண்டிருந்தது.   நடுவில்  எப்போதாவது பள்ளி நாளில் வந்தால்  பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன்.  பிரேயருக்கு இன்னொரு மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வருடம் முதல் முறையாக  பெயில் போட்டார்கள்;
அம்முவைப் பெண் கேட்டு சாம்பு பேசி இருந்தான்.  அம்முவின் அப்பாவிற்கும் வேறு வழி தெரியவில்லை.
அம்முவை ஆண்டாள் வேஷத்தில் பார்த்தேன்.  கல்யாணப் பெண்ணாய்.  அரக்குக் கூறைப் புடவை.. ஜெகஜ் ஜோதியாய் இருந்தாள்.
‘அவளுக்குப் பசிக்கப் போறது..  இந்தா .. ஒரு வாய்  காப்பியாவது கொடுத்துட்டு வா ‘ என்று என்னை அனுப்பினார்கள்.  போனேன்.   அவள் மட்டும் தனியே.  மணப் பெண்ணின்  சினேகிதி என்று யாரும் கூட இல்லை.
“அம்மு.. இந்தா “
கண்ணில் மை இட்டிருந்தார்கள்.  அம்மு நல்ல நிறம்.  அரக்கில் இன்னும் ஜ்வாலையாய்.
“அம்மு “
காபியை சீந்தவில்லை.
“அழகா இருக்கே “
பதில் சொல்லவில்லை.
“உனக்குப் பிடிச்சிருக்கு தானே “
மௌனம்.
“யாரையாச்சும் வரச் சொல்லட்டுமா .. தனியா இருக்கியே”
ஊஹூம்.  அசைவே இல்லை.
“அம்மு  ..  என்னம்மா “
எப்போதும் தெளிவாய் நேருக்கு நேராய்ப் பார்த்து பேசுகிறவள்..  இன்று  எங்கோ வெறித்தாள்.
“ஏண்டா..  எனக்கு  முன்னாலேயே   பொறக்கல.. “
மணப்பெண் அறை வாசலில் ஆட்கள் வருகிற சத்தம் கேட்டது அப்போது.


November 29, 2015

அம்மு 10அம்மு
இதைப் பிரிக்குமுன் மாடிக்கு வந்து விடு. ஞாபகமாய் உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டு விடு. ஏன் 20 பக்கம் என்று யோசிக்கிறாய்.. இதற்கு மேலும் எழுதணும். ஆனால் ஸார் எப்போ முடிப்பீங்க கட்டு எடுக்கணும் என்று தலைமாட்டில் போஸ்ட்மென் ரெண்டு செகண்டிற்கு ஒரு முறை குரல் கொடுக்கிறார்..
அம்மு.. இந்தக் கடிதத்தை உன்னை ரெயிலேற்றி விட்டு வந்த மறு நிமிடமே மனசுக்குள் எழுத ஆரம்பித்து விட்டேன். நானும் கூட வரேனே என்று எத்தனை முறை கெஞ்சியிருப்பேன்.. சம்பிரதாயம் அது இது என்று ஏதோ சொல்லி என்னை வர விடாமல் செய்து விட்டீர்கள். சீட்டின் கீழ் ஒரு பெட்டி உன் காலை இடிக்கிற மாதிரி வைத்திருந்ததே.. அதை அப்புறம் உள்ளே நகர்த்தி வைத்தீர்களா..  ப்ளாஸ்க் காபி சூடா இருந்ததா..
பொதுவாய் பெண்கள்தான் நிறையப் பேசுவார்கள்.. ஆண்கள் அப்படி இல்லை என்பார்கள். நம் வீட்டில் அதற்கு விதிவிலக்கு. என்ன கேட்டாலும் உன்னிடம் ஒரு புன்முறுவல் மட்டும். நானோ காலையில் ஆபிஸ் கிளம்பியதிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும் வரை நிமிடம் பிசகாமல் பட்டியலிடுவேன். ஏன் இப்படி இருக்கிறேன்.. எனக்கே புரியவில்லை..
எதுவாக இருந்தாலும் உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும்.. உனக்குத் தெரியாமல் என் வாழ்க்கையில் ஒரு குந்துமணி ரகசியம் கூட இருக்கக் கூடாது… என்கிற தவிப்பு எப்போதும் எனக்குள் கனன்று கொண்டே இருக்கிறது.
இந்த வீட்டில் குடித்தனம் வந்தபோது நமக்கு மாடி போர்ஷன். மொட்டை மாடியில் குருவி..காக்கா..கிளி.. பார்த்து நீ சந்தோஷப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது.  கீழ் வீட்டு மாமிதான் ஆரத்தி எடுத்தது. தட்டில் பத்து ரூபாய் போடப் போனேன்.  நூறு ரூபாய் இல்லியான்னு நீ எனக்கு மட்டும் கேட்கிற குரலில் சொன்னாய். முதல் ஆச்சர்யம் அது.
நீ சிக்கனக்காரி இல்லை. உன் மனசு ஒரு பிரபஞ்சத்தையே உள்ளடக்கியது. ஹிண்டு போடுகிற பையன் நம் வீட்டுக்கு வருவதற்கு முன் மழை நீரில் சறுக்கி விழுந்து சிராய்த்திருந்ததை உன் பார்வை கவனித்து விட்டது. டெட்டால் போட்டுத் துடைத்து ஆயின்மெண்ட் போட்டு அனுப்பினாய். சூடாக டீயும் கொடுத்து. ‘கொஞ்சம் இருங்கோ.. வேற டீ போட்டு எடுத்து வரேன்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு.
காய்கறிக்காரி.. வீட்டு வேலைக்காரி.. பூக்காரி.. அயர்ன்காரி.. யாருமே உனக்கு விதிவிலக்கு இல்லை. உனக்குப் பிடிக்குமே என்று நான் வாங்கி வருவதை அவர்களுடன் நீ பகிரும் போதெல்லாம் ..  அம்முக்குட்டி.. சிரிக்காதே.. எனக்குக் கொஞ்சம் பொறாமையே வரும்.
அன்னிக்கு நீ மருதாணி அரைத்துக் கொண்டிருந்தாய்.  நான் ஆபிசிலிருந்து வர லேட் ஆகிவிட்டது. கடைசி விழுதை அள்ளிப் போட்டு கையலம்பிக் கொண்டு நீ வருவதற்குள் பசி ருசி அறியாது.. ஏதோ தொகையல் என்கிற நினைப்பில் கொஞ்சம் அள்ளி விழுங்கப் போனேன். சிரித்தாய்.
“என்னமா பத்திக்கிறது பாருங்கோ’ என்றாய்.
‘எதுக்கு இவ்வளவு அரைச்சு வச்சிருக்கே’ என்றேன் வியப்புடன்.
‘எல்லாருக்கும் கொடுக்கத்தான்’
உன் கையை மடக்கி உன்னிடமே காட்டினேன்.
‘பார்.. உன் கை முழுக்க அரைத்ததின் சுவடு.. இதுல நீ எப்படி வச்சுப்ப’
‘இந்த முறை எல்லாருக்கும் நான் வச்சு விடப் போறேன்.. அப்புறம் ஒரு நாள் அவா எனக்கு வச்சு விடுவா’
அம்மு.. உன் காதல் இத்தனை பவித்திரமா.. என் சுயநலக் காதலை நினைத்து எனக்கே வெட்கம் வந்தது அப்போது.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஃபேன் காற்றில் உன் தலைமுடி அறை மூலையில் சுற்றிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தேன். ‘என்ன பெருக்கறா.. இவ’ என்று எத்தனை தடவை உன்னிடமே சொல்லி இருக்கிறேன். இன்றைக்கு அவள் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. என்ன அழகாய்ச் சுற்றுகிறது..
உன் வார்ட்ரோப்பில் நீட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உன் உடைகள்.. அதிலும் கவனம் எடுத்து உன் உள்ளாடைகள் வெளியே தெரியாமல்.. புடவைகள் மட்டும் புலப்படுகிற மாதிரி.. ஒரு புடவையை எடுத்தால் செட்டாய் அதற்கான பிற துணிகளுடன்.. ஒரு ஒழுங்கு.. ஒரு நேர்த்தி..
என் தங்கை ஆச்சர்யமாய்க் கேட்டதாய் நீ சொன்னாய்.. முன்பொரு முறை.. கண்ணனா இதெல்லாம் கவனிச்சு கேட்கிறான்..
அம்மு நீ என் வாழ்வில் வந்தபிறகு என்னை வெகுவாக மாற்றி விட்டாய். கோவில் வாசலில் அந்தச் சிறுமி.. அண்ணே.. இதன் கடைசிண்ணே.. இருபது ரூவாதான்.. என்றதும் முதலில் நான் எதுவும் சொல்லாமல் மேலே நடந்ததும் அவள் பின்னாலேயே வந்ததும்..
 ‘பூ இருக்கும்மா’
“வாங்கிக்கங்கண்ணே.. அக்கா சொல்லுக்கா”
“பூ வேணாம்னு சொல்லக் கூடாது.. போ வேற யார்ட்டயாவது கேளு”
‘ப்ளீஸ்ணே.. நோட்டு வாங்கணும்ணே”
அந்தச் சிறுமியை அருகில் இருந்த கடைக்கு அழைத்துப் போய் பாட நோட்டுகளை வாங்கிக் கொடுத்து.. அந்தப் பூவை பாதி கிள்ளி நீ அவள் தலைக்கு வைத்து விட்டு மீதியை நீயும் வைத்துக் கொண்டு..
இந்த உலகம் அழகானது.  உன் கண்ணாடியை நீ எனக்கு அணிவித்தபிறகு.. எல்லோரையும் நேசப் பர்வை பார்க்க ஆரம்பித்தேன். சில நேரங்களில் என்னைக் கேலி செய்யும் விமர்சனங்களைக் கூட அலட்சியம் செய்து நகரவும் நீதான் கற்றுக் கொடுத்தாய்.
இதென்ன.. பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு ஒரே புகழாரம்னு நீ செல்லமாய் சலித்துக் கொள்வது புரிகிறது. இனி நீ இங்கே திரும்ப இன்னும் எத்தனை நாட்களாகுமோ.. மாதம் ஒரு முறை உன்னை வந்து பார்ப்பதும்.. தினசரி இரவு உன்னோடு பேசுவதும்.. எப்போதும் எந்த நிமிடமும் நீ என்னோடு இருப்பதற்கு சமமாகாது இல்லையா..
அம்மு.. நான் உன்னை இழக்கப் போகிறேன்.. அதனால்தான் இத்தனை விஸ்தாரமாய்.. இந்த நிமிஷம் என் அம்முவாய் நீ இருக்கும்போதே இதையெல்லாம் சொல்லிவிடுகிறேன்.
இரு ஷாக் ஆகாதே.. உனக்குப் புரிந்திருக்கும். நீ லேசுப்பட்டவளா.. உன் நமுட்டுச் சிரிப்பு எனக்குத் தெரிகிறது.  ஒரு குட்டி அம்முவோ.. ஒரு குட்டிக் கண்ணனோ வரப் போகிறது.. அதன் பின் எனக்கே எனக்கான அம்மு.. இருக்க மாட்டாள். அவளை என் ஞாபகப் பேழையிலிருந்து எடுத்துத் தான் நான் பார்க்கவேண்டும். பேச வேண்டும்.
அக்கம் பக்கம்.. யார் அறிமுகமானாலும் அன்பைச் சொரிகிற இந்த அம்மு.. வீட்டின் நாலு சுவர்களுக்குள் எனக்கே எனக்காய் பூத்து வைத்திருந்த பவழமல்லி வாசனை.. இனிப் பங்கிடப்படும். என் பங்கு குறைவாய்..
தப்பில்லை. உலக நியாயம் தான். குறையும் இல்லை. ஆனால் அம்மு.. இந்த சீண்டல்.. இந்த கொஞ்சல்.. உன் மடி.. உன் முத்தங்கள்.. எனக்கு மட்டுமில்லை இனி.. அம்மு எனக்கு அழுகை வருகிறது.. தள்ளிப் போட்டிருக்கலாமோ என்று கூட லூசுத்தனமாய் யோசிக்கிறேன்..
போகட்டும். இந்த இடைவெளி எனக்கு இன்னொரு ஞானத்தைக் கொண்டு வரட்டும். என் இரு கைகளில் நீயும் பாப்பாவும். ஆளுக்கொரு பக்கமாய். வாழ்க்கையெனும் நதி இரு கரைகளுக்குள் தானே ஓட வேண்டும்.
அம்மு.. படிச்சுட்டு கிழிச்சுரு. என் அசட்டுத்தனங்கள் என்றும் உனக்கு மட்டுமே பகிரப்பட்டு.
உன்.. 

கண்ணன்

November 22, 2015

அம்மு 9


“ I is loving you “
அம்முவுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித் தருவது எனக்குத் திணிக்கப்பட்டது. நான் எவ்வளவு மறுத்தும். அவளின் நோக்கம் பாடம் அல்ல என்பதும் ஏதோ ஒரு வழியைக் கண்டுபிடித்து என்னுடன் இருப்பது மட்டுமே என்பதாலும்.
அசால்ட் என்கிற தவறாகப் பயன்படுத்துகிற வார்த்தையை முதன் முதலில் எனக்கு அறிமுகம் செய்தவள் அவள்தான். படிக்க வந்தவள் மாதிரியா இருப்பாள். தாவணி. ரெட்டை ஜடை. கண்ணில் மை. சாந்துப் பொட்டு தினம் ஒரு கோணத்தில். கண்கள் எப்போதும் ஒரு திசையில் நிற்காமல் சுழலும். என்னை மாதிரி திட சித்தனுக்கே வேட்டு வைக்கிற அத்தனை ஆயுதங்களும் பிரயோக நிலையில் அவளிடம்.
”தப்பு அம்மு”
“லவ் பண்ணா என்ன தப்பு”
“ப்ச்.. இங்க்லீஷ் தப்பு..”
“அப்போ தமிழ் ஓக்கேவா”
ஹைய்யோ. அம்மா நீ லூசா.. இவதான் கேட்டான்னு என்னைப் பிடிச்சு இவ கையில் கொடுத்துட்டு வேடிக்கை பார்க்கிறே.
”நீ டீ குடிப்பியோ”
அம்மாவின் குரல் கேட்டது.
“அவனுக்குக் கலக்கப் போறேன்.. அதான் கேட்டேன்”
வேண்டாம் என்று சொல்லப் போனவள் ‘தாங்கோ’ என்று கத்தினாள்.
கருணாஸ் காமெடி மாதிரி அரை டம்ளரை அரை மணி நேரம் சீப்பிக் குடித்தாள்.
“வச்சிடு. நான் அலம்பிக்கிறேன்”
“இல்லம்மா. நானே அலம்பித் தரேன்”
புழக்கடைப் பக்கம் போனவள் என்ன சொல்லித் தொலைத்தாளோ அம்மாவின் சிரிப்பு கூடம் வரையில் கேட்டது. அம்மாவின் சிரிப்பு அழகு. தினசரி வாழ்க்கையில் அதற்கு எப்போதாவதுதான் நேரம் கிடைக்கும்.
“இந்தப் பொண்ணைப் பாரேன்.. வேடிக்கையா பேசறது”
“என்ன சொன்னா”
“அது ஏன் கஷாயம் மாதிரி டீயை மளக்குன்னு முழுங்கறான் கண்ணன்.. ரசிச்சு சாப்பிடத் தெரியாதான்னு கேட்கிறா. சாப்பாட்டையே அப்படித்தான் ஒரே வாயில் அள்ளிப் போட்டுண்டு ஓடுவான்னேன். கபந்த வம்சம் போல இருக்குன்னு கேலி”
உனக்கு அவ்வளவு கொழுப்பா.. முனகினேன்.
வசந்திக்கும் ஆச்சர்யம். என் தங்கை.
‘ஏண்டா அவ ஸ்கூல்ல கிராமர்ல ஃப்ர்ஸ்ட் ஆச்சே.. எங்க இங்க்லீஷ் டீச்சர் வராதப்ப அவளைத்தானே கிளாஸ் எடுக்கச் சொல்வா ஹெச் எம்’
நீரை விட காதல் சாமர்த்தியமானது. அதற்கான வழியைக் கண்டுபிடித்து பாய்ந்து விடுகிறது. உயரங்களையும் அனாயசமாகத் தொட்டு விடுகிறது.
என்னமாய் யோசிக்கிறது.. 


“டேய்.. அம்மா எங்களை சினிமாக்கு கூட்டிண்டு போகச் சொன்னா”
“என்ன சினிமா.. யாரைக் கூட்டிண்டு”
எங்கே ஒளிந்திருந்தாளோ.. சரியாக அந்த நேரம் வெளிப்பட்டாள்.
“சொல்லுடி வசந்தி.. அம்மாவே சொல்லிட்டாளே”
ஆட்டோவில் அந்த லூசு வசந்தி முதலில் ஏறிக் கொள்ள.. அல்லது அது அம்முவின் சாமர்த்தியமா.. அந்த நிமிஷம் பர்ஸைக் கீழே போட்டது.. ஆட்டோக்காரர் அவசரப்படுத்த.. வசந்தி.. அம்மு.. அவள் அருகில் நான்.
அது எப்படித்தான் ஆட்டோ குலுங்குவதற்கு முன்பே யூகித்து என் பக்கம் சரிவாளோ.. நிறுத்தச் சொல்லி டிரைவர் பக்கம் உட்காரலாம் என்று பார்த்தால் ‘ட்ராபிக் போலிஸ் நிக்கிறார்’ என்று மிரட்டல்.
தியேட்டரில் நான் சுதாரித்து வசந்தியை என் பக்கம் அமர்த்தினேன். அம்முவா கொக்கா.. ஐந்து நிமிஷத்திற்குள் ‘மறைக்கிறதுடி..நீ இந்தப் பக்கம் வாயேன் என்னை விட நீ ஹைட்’ என்று கெஞ்ச.. நான் எதுவும் சொல்வதற்குள் வசந்தி இடம் மாறிக் கொண்டாள். அம்மு என்னருகில் வந்ததுமே இருட்டில் என் கையைப் பிடித்து வலிக்காமல் கிள்ளினாள்.
இண்டர்வெல்லில் மட்டும் சாதுவாய். மற்ற நேரம் முழுக்க என் கையோடு அவள் கையைப் பிணைத்துக் கொண்டு. ஒரு பாதுகாப்பு போல.. ஒரு தன்னம்பிக்கை போல.. உலகம் தோன்றிய முதல் நாள் தொட்டு மனிதன் பிறப்பதற்கு முன்பே ஜனித்த அச்சு அசலான நேசம் போல.
ஆட்டோவில் திரும்பினோம். அம்முவின் வீட்டு வாசலில் முதலில் நிறுத்தி அவளை இறக்கி விட்டோம். ‘தேங்க்ஸ்’ என்று முனகினாள். வசந்தியை ஏனோ கட்டிக் கொண்டாள். தெரு விளக்கின் ஒளியில் அவள் கண்கள் பளபளத்ததைப் பார்த்தேன். என்னைப் பார்க்காத மாதிரி உள்ளே போய் விட்டாள்.


ஜாதகம் பொருந்தலடா.. அம்மு மாதிரி ஒருத்தி நம்மாத்துக்கு வந்தா எவ்வளவு நன்னா இருக்கும். எப்படி சொல்றதுன்னே புரியல. அதுவும் அவங்களே கேட்டு வரும்போது”
அம்மா புலம்பித் தீர்த்து விட்டாள்.
 நான் எதுவும் பேசவில்லை. வசந்திக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்ததைப் பார்த்தபோது ஆச்சர்யமாய் இருந்தது.
“இதுவரைக்கும் ஜாதகம் பார்த்து பண்ணதெல்லாம் ரொம்ப சௌக்கியமா இருக்காளா”
வரிசையாய் லிஸ்ட் வைத்திருந்தாள். அம்மா தவிப்பது தெரிந்தது.
“ஏம்மா தாயார்ட்ட பூக்கட்டிப் பார்க்கலாம்னு சொல்வியே”
அப்பாவி போலக் கேட்டேன். வசந்திக்கு முகத்தில் பளிச்சென்று ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
“கையைக் கொண்டாடா. உருப்படியா உன் வாழ்க்கைல ஒரு யோசனை சொல்லியிருக்கே”
அம்மா.. வசந்தி.. நான்.. போனோம். சேர்த்தி மண்டபம் யாருமற்று காலியாய் இருந்தது.
“நானே கட்டிண்டு வந்திருக்கேன்.. சேப்பு வந்தா கல்யாணம்.. வெள்ளை வந்தா வேணாம்.. சரிதானாம்மா” என்றாள் வசந்தி.
என் அடி வயிற்றில் பிரளயம். என்ன வரும்..
“நீயே எடும்மா”
அம்மா நமஸ்கரித்தாள். அவளைப் பெண் பார்க்க வந்தபோது கூட இப்படி பதற்றப்பட்டிருக்க மாட்டாள். வாய் ஏதோ ஸ்லோகத்தை முனகியது.
குனிந்து ஒரு பொட்டலத்தை எடுத்தாள். வசந்தி லபக்கென்று அதைப் பறித்துப் பிரித்தாள்.
சிகப்பரளி ! வசந்தி அம்மாவைத் தூக்கிக் கொண்டு தட்டாமாலை சுற்றினாள்.
நான் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தேன்.
“வாடா.. நமஸ்காரம் பண்ணிக்கோ..”
விழுந்து சேவித்தோம். படியிறங்கி பிராகாரம் வலம் வரும் போது சட்டென்று எனக்குத் தோன்றியது. அந்த இன்னொரு பொட்டலம் ?  ஓடிப்போய் சேர்த்தி மண்டபம் மேலே ஏறித் தேடினால் காணோம்.


ம்மு ஜாடையில் ஒரு பெண். செம்ம வாலு.. என் அம்மா ஜாடையில் ஒரு பையன். கொஞ்சம் அமுக்கு. என்னை மாதிரி. அம்மு கொஞ்சம் வெயிட் போட்டு இன்னமும் அதே வசீகரத்துடன். சமையல் உள்ளில் என்னைச் சீண்டுவதும்.. என் தட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடுவதும்.. நான் தூங்கி விட்டதாய் நினைத்து முத்தமிடுவதும்.. ஜோடி சிம் போட்டுக் கொடுத்ததில் அவ்வப்போது மிஸ்டு கால் கொடுப்பதும்.. குறுஞ்செய்தியில் லவ் யூ.. டேங்க் யூ சொல்வதும்..

அன்று கோவிலிலிருந்து வெளியே வந்தபோது வசந்தி எதையோ எங்களுக்குத் தெரியாமல் தூக்கி எறிந்ததை நான் மட்டும் பார்த்துத் தொலைத்து விட்டேன். இன்று வரை அது என்ன என்று அவளிடம் நான் கேட்கவேயில்லை.

November 16, 2015

அம்மு 8


இண்டர்காமில் பெயர் தெரியும் அழைப்பு வரும்போதே. அம்முவின் ஆபிஸ் பெயர் தெரியும் போது கொஞ்சம் எனக்கு கை நடுங்கும்.
“சொல்லுங்க”
இன்னமும் வாங்க போங்க தான். அதென்னவோ எனக்கு அத்தனை சுலபமாய் நீ.. வா.. போ.. சொல்ல வருவதில்லை. அப்பாவிடம் கற்றுக் கொண்டது. வயதில் எத்தனை சிறியவர்களானாலும் வாங்க தான்.
“முடிஞ்சப்ப சீட்டுக்கு வாங்க.. ஒரு டவுட்”
அம்முவை முதன் முதலில் பார்த்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வேலை நிமித்தம் அவள் இருக்கும் செக்‌ஷனுக்குப் போக வேண்டியிருந்தது. அவள் அங்குதான் இருக்கிறாள் என்றும் அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்றும் தெரியாமலே போனேன்.
“என்னோட ட்டீஏ கிளெய்ம்ல கட்  பண்ணி பாஸ் பண்ணியிருக்காங்க. யார்கிட்ட கேட்கணும்”
இத்தனைக்கும் வெறும் டிக்கட் சார்ஜஸ் மட்டும். அதற்கும் ட்ரெய்ன் டிக்கட் வைத்திருக்கிறேன். ஐநூறு ரூபாய் கட். சம்பள பில்லைப் பார்த்ததும் சுர்ரென்று வந்தது. ஃபோன் செய்தால் நேரா வாங்க என்று பதில்.
“ஏன் கட் பண்ணியிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா”
அம்மு தலை நிமிர்ந்து என்னைப் பார்த்த நொடி இந்த நிமிஷமும் பளிச்சென்று நினைவில்.
”உங்க க்ளெய்மை எடுத்துப் பார்க்கணும். “
யாரிடமோ சொன்னாள். சொல்லப்பட்டவர் ஃபோனில் பேசிக் கொண்டு இவளுக்குத் தலையசைத்தார். பத்து நிமிஷம் பேசி விட்டு அருகில் வந்தார்.
“என்ன சொன்னீங்க மேடம்”
“இவர் க்ளெய்ம்ல கட் பண்ணியிருக்கு. டீடெய்ல் வேணுமாம்”
“டிக்கட் வச்சிருக்க மாட்டார்”
“வச்சிருந்தேன்”
“எடுக்கணும் மேடம். ரிகார்ட்ஸ் ரூம் போகணும். உங்க ஸ்டாப் நம்பர் சொல்லுங்க. தேடி எடுத்து வைக்கிறேன்”
என் பொறுமை அதன் எல்லையைக் கடந்தது.
“ஒரு தடவை டூர் போயிட்டு வாங்க. அப்ப புரியும் “
“ஸார் அனாவசியமா பேச வேண்டாம்”
“பின்னே. போன் பண்ணா நேரா வாங்கன்னு பதில். வந்தா இப்ப முடியாது அப்புறம்னு.. என்ன ஸார் இது”
அம்மு எழுந்தாள் அந்த நிமிடம். கொஞ்சம் தடுமாறினாள். பிறகு சுதாரித்து வலது காலை ஊன்றி.. அப்புறம் இடது கால். உட்கார்ந்திருந்தவரை புலப்படாத விஷயம்.
“ரெகார்ட் ரூம் போயிட்டு வரேன்.. வெயிட் பண்ணுங்க”
“இல்ல.. பரவாயில்ல. நான் அப்புறம் வரேன்”
“வெயிட்”
இதுதான் அம்மு. அவளிடம் பழக ஆரம்பித்தபின் எப்போது எதிர்பாராத ஆச்சர்யங்களுக்குக் குறைவே இல்லை. மயிற்பீலி கேஸட் அவள்தான் எனக்கு அன்பளித்தாள். தாஸேட்டனின் குரலில் சொக்கி ஒரு கடிதம் எழுதிக் கையில் கொடுத்தேன். என் பழக்கம் அது. எல்லோரும் தூங்கும் நள்ளிரவில் எனக்கு விழிப்பு வரும். நன்றி சொல்ல.. மனம் பகிர.. அந்த நேரம் தான் எனக்கு வசதியாகிப் போனது. பேசுவதை விட எனக்கு எழுத்து ரொம்ப சுலபம். என் நட்புகளுக்குக் கடிதம் எழுதுவதில் சளைப்பதே இல்லை. அவர்களிடம் இருந்து வரும் கடிதங்களைத் தேதி வாரியாக.. நட்பு வாரியாக ஃபைல் செய்து வைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
அவளின் உலகம் தனி. அதன் நியாயத் தீர்வைகளும். பெரும்பான்மை யோசிக்கிற விஷயங்களில் சட்டென்று வித்தியாசப் படுவாள். அதற்கு ஒரு நியாயம் வைத்திருப்பாள். அந்த மாதிரி நேரங்களில் நான் மௌனம் அல்லது புன்னகை. அவளிடம் வாதம் செய்ய முடியாது.
மொழி படம் சேர்ந்து போனோம். நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்கன்னு கேட்டபோது வசந்தி என் கையைக் கிள்ளினாள். இன்னொரு அலுவலர். எனக்குப் புரியவில்லை முதலில்.
அம்மு சம்மதித்த பின் நானும் வசந்தியும் பேசினோம்.
”அதுல ஜோதிகா கேரக்டர்..”
“ஓ.. ப்ச்.. அதான் வரேன்னு சொல்லிட்டாளே”
“ம்ம்”
படம் முடிந்து வரும் போது எங்களுக்குள் ஒரு இனிய மௌனம். கடைசிக் காட்சியில் ஜோவின் பிங்க் கலர் ஸாரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அதைச் சொன்னதும் வசந்தி ‘அதே மாதிரி வாங்கணும்’ என்றாள். அம்முவின் முகம் திரும்பியிருந்தது.
வசந்தி மறுநாள் சொன்னாள். அம்முவுக்கும் படம் ரொம்பப் பிடித்திருந்ததாய்.
நாங்கள் பேசும்போது அம்முவின் பேச்சுக்கிடையில் குறுக்கிடுவதில்லை. முக்கியமாய் நான். வசந்தி சில சமயம் எதிர் வாதாடுவாள். எனக்கு அம்மு பேசி கேட்டாலே போதும். பேசப்படும் எந்தத் தீவிர நிகழ்வுக்கும் நான் போய் தீர்வு சொல்ல முடியப் போவதில்லை. சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை. இதற்கு எதற்கு வீண்வம்பு..
இந்த முடிவும் ஆரம்ப நாளில் அம்முவுடன் ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தால் வந்தது. எதையோ பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாய் எனக்குக் கருத்து சொல்லும் ஆசை எப்போதும் இருந்ததில்லை. ஆனால் என கருத்து என்னவென்று கேட்டால்.. கேட்டவர் எவ்வளவு பிரியத்திற்குரியவரானாலும்.. எவ்வளவு பெரியவராய் இருந்தாலும் பட்டென்று மனதில் பட்டதைச் சொல்லி விடுவேன். இதுதான் என்னிடமுள்ள மிகப் பெரிய குறை.
ஒரு ஆன்மீக மடத்தில் பெரிய குருஜி – என் மீது பிரியம் உள்ளவர் – வரச் சொல்லி இருந்ததால் போயிருந்தேன். அவர்கள் வெளியிடும் ஆன்மீக இதழின் சமீபத்திய மாற்றங்கள் பற்றி பேச்சு வந்தது. அதன் எடிட்டர் ஸ்வமிஜியும் உடனிருந்தார்.
“எப்படி இருக்கு இப்பல்லாம்”
“ம்ம்”
“உங்க கருத்தைச் சொல்லுங்க”
“ எனக்கு முன்பிருந்த அமைப்புதான் பிடிச்சிருக்கு. இப்போ ஏதோ கமர்சியல் மேகசின் படிக்கிற உணர்வு”
அவ்வளவுதான். எடிட்டர் எழுந்து போய் விட்டார். குருஜியிடம் மன்னிப்பு கேட்டேன். ‘விடு.. அவர் உன் கருத்தைக் கேட்டார். நீ உன் மனசுல பட்டதைச் சொன்னாய்’
இதே சங்கடம் அம்முவிடமும் நேர்ந்தது. ’நீ என்ன நினைக்கிறே’ என்று கேட்டதுமே சுதாரித்திருக்க வேண்டும். சரி.. இதிலென்ன தப்பு என்று என் மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன். அது அம்முவின் கருத்திற்கு எதிரானது. அவ்வளவுதான். அடுத்த நிமிடம் நாங்கள் எதிரில் இருப்பதை லட்சியம் செய்யாத மாதிரி ஏதோ ஒரு ஃபைலைத் திறந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். வசந்தி என்னைப் பார்க்க.. நான் அவளைப் பார்க்க.. ஙே என்று விழித்ததை மறக்கவே முடியாது.
ஒரு வாரம் பேசவேயில்லை.  மதியம் கூட சாப்பிடுவதுமில்லை. பிறகு எப்படியோ சமாதானம் ஆனது. இதுதான் அம்மு. இப்போது என் சங்கடம் இதை வாசிக்கும் உங்களுக்குப் புரிந்திருக்கும். அவளிடம் போய் எப்படி என் காதலை.. அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவிருக்கும் என் விருப்பத்தைச் சொல்வது.. ஏதாவது முரண்டு பிடித்து விட்டால்..
வசந்தி தீர்மானமாய்ச் சொல்லி விட்டாள். அம்முவை சம்மதிக்க வைப்பது.. முழுக்க முழுக்க என்பாடு என்று. ’என்னை விட்டுருங்க.. அவ என் கூடவே ஒரு மாசமா பேசாம இருந்தா.. ஒரு பிரச்னையில.. அவ சம்மதம் மட்டும் கேட்டுருங்க. அப்புறம் நடக்க வேண்டியது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.’
அது ஒரு மழை நாள். பிய்த்து உதறியது. ஒரு மீட்டிங் முடிந்து வெளியே வந்தபோது அலுவலக நேரம் முடிந்து விட்டது. மணி ஏழு. வெளியே இருட்டு. பெரும்பான்மை அலுவலர்கள் போயாச்சு. வசந்திக்கு இதில் தொடர்பில்லை என்பதால் அவள் போய் விட்டாள். நான் என் கணினியை ஷட் டவுன் செய்து விட்டு வந்தபோது அம்முவின் அறையில் விளக்கெரிந்தது.
எட்டிப் பார்த்தேன். அம்மு.
“என்ன.. போகலியா”
“பில் நிறைய இருக்கு.. மாதக் கடைசி”
“மழை”
“ம்ம்”
எதிரில் உட்கார்ந்தேன். “நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாமா”
“வேண்டாம்”
ராதை தன் பிரேமத்துடனானோ கிருஷ்ணா யான் பாடும் கீதத்தோடனானோ.. பரையும் நினக்கேத்தன் இஷ்டம்.. என் ரிங்டோன் ஒலித்தது.
அம்மு என்னைப் பார்த்தாள். எழுந்து வெளியே போய்ப் பேசி விட்டு வந்தேன்.
“கார் கேட்டிருந்தேன் ட்ராவல்ஸ்ல.. எப்ப வரட்டும்னு கேட்டார். சொல்றேன்னு சொல்லியிருக்கேன்”
“….”
“உங்களை வீட்டுல விட்டுட்டு போகலாம்னு.. போகிற வழிதானே”
“வேணாம்.. நீங்க கிளம்பிப் போங்க. ஏன் என்னால லேட் ஆகணும்”
“பரவாயில்ல. எனக்கு ஒண்ணும் வேலை இல்லை.. போய் ஒரு உப்புமா கிண்டினாப் போதும்.. “
அரை மணி கழித்துத்தான் கிளம்பினாள். நான் வால்காவிலிருந்து கங்கை வரை படித்துக் கொண்டிருந்தேன். காரில் முன் சீட்டில் டிரைவருடன் நான். பின்னிருக்கையில் அம்மு. இறங்கும் போது ‘தேங்க்ஸ்’ என்றாள்.
தெருவிளக்கு சற்று தொலைவில். அம்முவின் மேல் லேசான வெளிச்சம். காத்திருந்த நேரத்தில் நான் எழுதியிருந்த கடிதத்தை நீட்டினேன்.
“பொறுமையாப் படிங்க. நாளைக்கு பதில் கேட்டுக்கிறேன். குட் நைட்”
கார் கிளம்பி விட்டது. மறுநாள் அம்மு சொல்கிற குட் மார்னிங் கிடைக்கவில்லை. வசந்தி ஏனோ லீவு. நான் தற்செயலாய்ப் போவதைப் போல் அம்முவின் அறைக்குப் போனால் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. ஃபோன் செய்தால் எடுக்கவே இல்லை.  அடுத்த நாள் வசந்தி வந்தாள். வழக்கம் போல சாப்பாட்டிற்கு என்னை அழைக்கவில்லை. வசந்தியும் ஃபோனில் தான் சொன்னாள்.
‘உங்க லட்டரைக் கிழிச்சுட்டாளாம். நீங்க இனிமேல் அவளை இது பற்றி கேட்கக் கூடாதாம். “
“அதான் ஏன்..”
“விட்டுருங்க”
எனக்கு இப்போது 45 வயதாகிறது. அம்முவுக்கு 42. அதே ஆபிஸ்தான். ஒரு மாத இடைவெளிக்குப் பின் அலுவலக நிமித்தமாய்ப் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். இருவருமே இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
“நீ ஏண்டா பண்ணிக்கல”
மெல்லிய சிரிப்புடன் என் பதில் இப்போதும்
“தோணல”


November 13, 2015

அம்மு. 7

அம்மு    7

அம்மு கொஞ்சம் இங்கே வாயேன்\
என் எதிர்ல உட்கார்.  ஒரு பத்து நிமிஷம். போதும். அதுக்கப்புறம் நான் உன்னைத் தொல்லை பண்ணல.. சரியா
எதுக்குன்னு கேட்கிறியா..  நாம கண்ணைப் பார்த்து  பேசியே ரொம்ப நாளாச்சு செல்லம்..  ஒருத்தருக்கொருத்தர்..  என்னமோ ஒரே வீட்டுலதான்  இருக்கோம்னு பேர்.  மெஷின் மாதிரி வாழ்க்கை.  ஒரு நாள் லீவு விட்டாக்கூட .. சாப்ட்டு.  தூங்கி..ப்ச  ஓடிப் போயிருது.
என்னது புதுசா இருக்கு இன்னிக்கு உங்க பேச்சு.. நடவடிக்கை எல்லாம்னு நீ யோசிக்கிறது தெரியறது.  நானும் மனுஷன் தான் .  எனக்குள்ளேயும் ஆசாபாசம் இருக்கு.  லவ் இருக்கு.  அதுவும் எல்லை இல்லாம உன் மேல என் அம்முக் குட்டி.
நான் உன்னைக் கொஞ்சி எவ்ளோ நாள் இருக்கும்..  கணக்கு  ஞாபகம் இல்லன்னு நீ சொல்லவே வேணாம்.  என் மேலதான் தப்பு.  
நீ எழுந்துக்கிறப்ப மணி அஞ்சு இருக்குமா டெய்லி.  அப்போ முழிச்சுண்டு ராத்திரி பதினொரு மணிக்கு என் பக்கத்துல படுக்க வருவ.  அப்போ நான் கொறட்டை விட்டுண்டு இருப்பேன்.  இந்த கூத்துதானே  தெனமும்னு பார்க்கிறே.
நினைப்பு அதன் போக்குல அலைபாயுது..  ஒரு கோர்வையா வரல.  சொல்லிண்டே போறேன்.  என்னைச் சகிச்சுக்கிற மாதிரி அதையும் பொறுத்துக்கோ..
தட்டுல பரிமாறுவ,  என் முகத்தை நீ பார்க்கிறது எனக்குத்  தெரியாதுன்னு நீயும் .. உனக்குத் தெரியாதுன்னு நானும் ஆடற விளையாட்டு எப்போதுமே சூப்பர்.
தட்டை வேகமா வழிச்சு காலி பண்ற ஸ்பீட்ல உன் கைப்பக்குவம் உனக்கே புரிஞ்சிருக்கும். இருந்தாலும் என்னைக் கேட்பே.
‘நன்னா இருந்ததா’
‘ம்’
‘அந்த கூட்டு’
‘ம்’
‘ரசவாங்கி ‘
‘இன்னொரு கரண்டி போடேன்’
வாய் திறந்து சொல்லாத என் ஜாலக்கு உனக்குப் பழகிப் போனது.    உனக்கு போதுமா என்று கேட்கத் தோன்றாது.  அப்புறம் எப்போதாவது கேட்பேன். பதில் சொல்லாமல் சிரித்து கொள்வாய்.
தெருவில் நடக்கும்போது எனக்கு வேகமாய் நடந்து பழக்கம். உனக்கோ வழியில் ரசிக்கணும்.  பூக்கார அம்மா வாடிக்கைப் பூவுடன் பைசா கேட்காமல் தாராளமாய்த் தருகிற ஜாதிப்பூ .. ‘இது உனக்கு.. தலைக்கு வச்சுக்கோ இப்பவே’ என்று  கொஞ்சி விட்டு போவாள். இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கொண்டு போய் நீ பூ வைத்துக் கொள்ளும் அழகை மாருதி சார்தான் வரையணும்.
பிஞ்சும்மா என்று காய்க்காரி சொல்லும்போது என்னை நகர்த்தி விட்டு நீ எடுத்துப் போடுவாய் தராசுத் தட்டில் .  ஏன் நல்லாத் தானே இருந்தது என்றால் கேலியாக சிரிப்பாய். என்னை ஏமாற்ற உன்னால் மட்டுமே முடியணும் என்கிற நினைப்பா.
துர்க்கையின் முன் கண் மூடி நீ நிற்கும்போது எனக்கு உன்னைத் தான் கும்பிட தோன்றும்.  ச்சீய் தப்பு என்று சொல்லாதே. என்னவோ அப்படி ஒரு யோசனை.  அந்த நிமிஷம் நீயும் அவளும் வேறல்ல  என்கிற மாதிரி.
குளித்து முடித்து உன் ஈரப் புடவையை பாத் ரூமில் வைத்து விட்டு வந்து விடுவாய்.  உனக்காய் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது போய் உலர்த்துவாய்.  உனக்குப் பின்னால்  நான்  குளிக்கப் போவேன். அதை எடுத்து கோணாமாணா என்று உலர்த்தி விட்டு வருவேன்.  என்னை அதற்கே ஒரு காதல் பார்வை பார்ப்பாய்..  லவ் யூ அம்மு.
விளக்கணைக்க மறப்பது உன் சுபாவம்.  சொன்னால் ‘ஏன் நீங்க அணைக்க மாட்டீங்களா ‘ என்று கேட்பாய் .  எனக்கும்  தோணும்.  அணைச்சுட்டு வந்தா என்ன கொறையப்போகுது.
படுத்ததும் விளக்கணைத்து இருட்டில் என் கண்களைப் பார்ப்பாய்.  எனக்குத் தூக்கம் வரும். விடேன்.. என்றால் ஒரு நிமிஷம் என்பாய்.  சொக்கும்.  கஷ்டப்பட்டு விழித்துப் பார்ப்பேன்.  ‘கல்யாணம் ஆனப்ப இருந்த அந்த பார்வை இல்ல இப்போ ‘ என்பாய்.
என்கிட்டே உனக்குப் பிடிச்சது என்று லிஸ்ட் போட்டால் அதில் அந்தப் பார்வையும் அடங்கும் .  எனக்கு உன் கழுத்தில் அந்த வாசனை.  ச்சே  அது வேர்வை.  என்று செல்லமாய் சிணுங்குவாய். அதென்னவோ. பவுடர் வாசனையோ உன் வாசனையோ  கிறங்கடிக்கும் எப்பவும்.
ஒரு குழந்தை இருந்திருந்தால் .. ஸாரி அம்மு.  இதைச் சொல்லியிருக்கவேண்டாமோ
அம்மு.. அம்மு.   ப்ளீஸ்  நில்லேன்..  போகாதே.. ச்சே நான் ஒரு மடையன் சந்தோஷமாய் பேச அழைச்சுட்டு..

பின்னாலேயே ஓடுகிறேன்.

November 10, 2015

அம்மு - 6

அம்மு – 6
சித்திரை வீதிகளில் வீடுகளின் அமைப்பு (இப்போது இல்லை).. ஒரு வீட்டின் மாடிப்பக்கம் போனால்.. கொஞ்சம் வளையும் உடம்பு இருந்தால்.. வீதியின் கடைசி வீடு வரை மாடியிலேயே ட்ராவல் பண்ணி விடலாம்.
அம்முவைப் பார்க்கத் தோன்றினால் இந்த உபாயம். அதுவும் சித்திரைத் தேர் நாளைக்கு என்றால் முதல்நாள் வையாளி. குதிரை வாகனத்தில் நம்பெருமாள் கொஞ்சம் ஆஸ்வாசமாய் நடந்து வந்து தேர் கிட்டே வந்ததும் இரு பக்கமும் ஜனங்கள் கூச்சலுக்கிடையே வித்தை காட்டுவார்.
அந்த நாளைய கட்டிடங்கள் என்பதால் கொஞ்சம் கோக்குமாக்காகத்தான் அமைப்பு. இதில் மழை பெய்து பாசி பிடித்திருக்கும். கரும்பாசி. சுவரில் கை வைத்து எக்கி தெருவைப் பார்த்தால் முழுத் தெருவும் புலனாகும். கீழே நின்று பார்ப்பதை விட தேர்ப்பக்கமிருந்து நூறடிக்கு குதிரை வந்து விட்டுப் போவதை.. டிவியில் மேட்ச் பார்க்கிற மாதிரி அழகாய்ப் பார்த்து விடலாம்.
அம்மு குட்டை இல்லை. உயரம்தான். குண்டும் இல்லை. ஆனால் லேசாய் சலித்துக் கொள்வாள். அது அவள் மேனரிசம் என்று பழக ஆரம்பித்தபின் புரிந்தது.
ஆங்.. ஒரு முக்கிய கேரக்டரை விட்டு விட்டேன். அம்முவின் தம்பி வெங்கடேஷ். பார்த்தால் சோனிப்பயல். ஆனால் சரியான விவரம். எங்களை மிஸ்யூஸ் பண்ணுவதில் கெட்டி.
கோலிக்குண்டு விளையாட்டில் சிகரட் அட்டைகளுக்கு படு கிராக்கி. சிஸர்ஸ்.. பெர்க்லி.. கோல்ட்ப்ளேக்.. இதைப் பொறுக்கத் தெருதெருவாய் அலைவோம். அதை அப்பாவுக்குத் தெரியாமல் ஒளித்து வைக்க பாடுபடுவோம். ‘என்னடா கையெல்லாம் நார்றது’ என்று அம்மா மோப்பசக்தியால் கண்டுபிடிக்கக் கூடாதென்று என்ன தேய்த்தாலும் நுரை வராத சோப்புக் கட்டியால் கழுவி விட்டு வருவோம்.
வெங்கடேஷுக்கு வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம். அதனால் அவனுக்கும் சேர்த்து சிகரட் அட்டை பொறுக்கி வருவதில் எனக்கும் அவனுக்கும் ஒரு பந்தம் ஏற்பட்டது. தெரியாத்தனமாய் அவன் வீட்டுக்குள் போய் அன்று திரட்டிய வசூலைப் பெருமையாய்க் காட்டப்போக.. அவன் அம்மா வந்து விட்டாள். அப்படியே அம்மு.. வயசான தோற்றத்தில்.
“என்னடா இது சனியன்” என்றாள்.
என்னைச் சொன்னாளா.. அட்டையையா என்று நான் தெளிவாக்கிக் கொள்ள இப்போதும் விரும்பவில்லை.
“இல்லம்மா.. ஸ்கூல்ல ஒரு காம்பெடிஷன்.. அதுக்கு” என்று மழுப்பினான்.
“தூக்கிப் போடு.. என்ன கர்மாந்திரமோ”
போய்விட்டாள். வெங்கடேஷ் என்னை இனி வீட்டுப் பக்கம் வந்தால் இதை எல்லாம் கொண்டு வராதே என்று சொல்லி அனுப்ப முயன்றபோதுதான் அம்முவின் முதல் தரிசனம்.
பெண்களை நீங்கள் வெளியே.. கோவிலில்.. கடைத்தெருவில்.. இன்ன பிற பிரதேசங்களில் பார்ப்பது ஒரு தனி ரகம். வீட்டில் இயல்பில் பார்க்கும்போது ஒரு அசாதாரண காட்சி கிடைக்கும். அவர்களின் உண்மையான அழகு.
அம்மு ஒரு அசாத்திய அழகி. எந்தப் பெண்ணையும் கொஞ்ச நேரம் கிட்டக்க சேர்ந்தாற்போல பத்து நிமிஷம் பார்க்கமுடியாது. இருக்கும் மைனஸ் பாய்ண்ட்ஸ் தெரிய ஆரம்பித்து விடும். மூக்கு சப்பை.. கண்ணு டோரி.. உதடு பிதுக்கல்.. இதெல்லாம் தாண்டி அவள் அழகாய்த் தெரிவது வாத்யார் சொல்வதைப் போல ஆண்ட்ரோஜன்.. ஹார்மோன்களின் வேலை.
அம்முவுக்கு அப்போ மைனஸ் இல்லியா.. இருக்கு. அந்த முதல் காட்சியில் அதெல்லாம் பதிவாகவில்லை. அ..ம்..மு.. தேர்ந்த வல்லுனர் புகைப்படம் போல விழிவழி நுழைந்து மனசுக்குள் பச்சக்கென்று பதிந்து விட்டாள்.
அதன்பின் காட்டுத்தீ போல பரவி ரெயில்வே ஸ்டேஷனில் அவரவர் ரயிலுக்குக் காத்திருப்பதைப் போல அம்முவுக்குக் காத்திருக்கும் பசங்கள்.. எதிர் வீட்டுத் திண்ணையில்.. தெரு முக்கில்.. அண்ணாச்சி கடை வாசலில்.. சக்கரத்தாழ்வார் சன்னிதியில்.. அவள் அம்மா ‘ஏண்டி அம்மு பெருங்காயம் வாங்கிண்டு வரியா’ என்று சமையல்கட்டில் குரல் கொடுத்தால் ஆறு டப்பா எல்ஜி பெருங்காயம் வீட்டு வாசலில் வைக்கப் பட்டிருக்கும்.. அம்மு வெளியே வருவதற்குள்.
பைத்தியமாய் அலைந்தோம் என்று  சொல்ல.. இப்போதும் பெருமையாகத்தான் இருக்கிறது. அதுதான் அம்மு.
குயுக்தியான யோசனை எனக்குத் தோன்றியதே சித்திரைத்திருநாள் வந்த போதுதான். அம்மு வீட்டிலிருந்து வையாளி முழுமையாகப் பார்க்க முடியாது. வெங்கடேஷுக்கு எதிரே ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தபோது அம்மு கேட்டாள்.
“வையாளி நன்னா இருக்குமாமே”
எனக்குக் கதை சொல்ல சொல்லித் தரணுமா என்ன.
“நம்பெருமாள் கிளம்பும் போது குதிரை கேஸுவலா வரும்.. சும்மா அப்படியே ஜாலி வாக் போறாப்ல. தேர் கிட்ட வந்ததும் அப்பவும் முதல்ல சாதாரணமா.. அப்புறம் இன்ஸ்பெக்‌ஷன்.. குதிரை வையாளி,, குறுக்கும் நெடுக்கும் சும்மா அதிரும்.. அப்படிப் போகும்.  ஓடி முடிச்சு நிக்கும் போது அதோட நாக்கு மூச்சிரைச்சு வெளியே வந்துட்டு போகும் பாரு.. ஆஹா”
ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்து ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தபோது நான் எதிர்பார்த்த நெருப்பு பற்ற வைக்கப் பட்டிருந்தது அவள் கண்களில்.
”எங்காத்துல இருந்து தெரியுமா”
“ம்ஹூம்.. எங்காத்து மாடிதான் கரெக்ட்”
நான் அவளை இன்வைட் பண்ணுவேன் என்று எதிர்பார்த்தாள்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா வாங்கோ” என்றேன் வெங்கடேஷிடம்.
அம்முவைப் பார்க்காத மாதிரி பேசியதற்கு இரு காரணங்கள். சும்மா ஒரு பாவ்லா. அப்புறம் அவளைப் பார்த்தால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு பேச்சிழக்கும் அபாயம்.
ஒரு வசதி.. இருட்டியபிறகுதான் வையாளி. அதுவும் எட்டு மணி ரேஞ்சில். மாடிப்பக்கம் லைட் கிடையாது. தெருவிளக்கின் மங்கல் ஒளி. சுற்றி 30 பேரை வைத்துக் கொண்டு வேறு அல்ப யோசனைகளுக்கு வழியில்லை. இத்தனை இடைஞ்சல்களிலும் அம்முவுக்கு ஸ்பெஷல் சீட் ஏற்பாடு பண்ணியிருந்தேன்.
அவள் வந்ததும் ஒளித்து வைத்திருந்த திடகாத்திரமான ஸ்டூலைக் கொண்டு வந்து போட்டேன்.
“இது மேல ஏறி நில்லு.. நல்லாத் தெரியும்”
என் சகோதரிகள் இருவரும் இருட்டில் என்னை எரித்தது யாருக்கும் தெரிந்திருக்காது. ‘பாவம் டி அவ.. பார்க்கணும்னு ஆசைப்பட்டா’
‘நாங்க மட்டும் பாவம் இல்லியா’
ஹோவென்ற இரைச்சல்.. குதிரை ஓடியது. நம்பெருமாள் அழகன். ஜனத் திரள். மாடி இருட்டு. மங்கல் ஒளி. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அழியாச் சித்திரமாய்.. கண் மூடி யோசித்தால்.
குதிரை வாகனம் போய் விட்டது. தெருவில் மறுநாள் தேர் பார்க்க வந்திருந்த சுற்றுக் கிராமக் கூட்டம். ஒவ்வொருவராய் மரப் படியில் இறங்கி.. குனிஞ்சு.. குனிஞ்சு.. பார்த்து.. உட்கார்ந்து.. மெல்ல இறங்கி கூட்டம் கலைய ஆரம்பித்தது.
அம்மு.. வெங்கடேஷ்.. நான் மூவர் மட்டுமே இப்போது.
“இருட்டா இருக்கு” என்றாள். குரலில் லேசாய் பயம்.
“என் பின்னாடி வா” என்றான் வெங்கடேஷ்.
முதலில் வெங்கடேஷ்.. பிறகு அம்மு.. அப்புறம் நான்.
அவன் இறங்கத் தடுமாறிக் கொண்டிருந்த அந்த இரண்டு நிமிடங்களில் அம்மு என் கையைப் பற்றிக் கொண்டாள். குட்டிக்கூரா பவுடர் வாசனை அடித்தது. தாவணி உரசியது.
பறவை உதிர்த்த இறகு காற்றில் அலைபாய்ந்து தரையில் அடங்குவதைப் போல படிக்கட்டில் இறங்கினேன் மிக லேசாக.
அம்மு கல்லூரிப் படிப்பிற்கு சென்னை போய் விட்டாள். கல்யாணமாகி இரண்டு பெண்கள். ட்வின்ஸ். வெங்கடேஷை பல்லவனில் ஒரு சமயம் பார்த்தேன். பூசியிருந்தான். கன்னம் பப்பென்று. சிகரெட் அட்டை பற்றி பேசிச் சிரித்தோம். அம்முவின் பாமிலி போட்டோ காட்டினான். அவன் குடும்பப் படமும்.
நான் ஸ்ரீரங்கத்தில் இறங்க.. அவன் ஜங்ஷனில்.
“வரேன்” என்றேன் இறங்க எழுந்த போது.
“கண்ணா”
“ம்ம்”
“அம்மு உன்னை விசாரிச்சா ஒரு தடவை.. “
“…..”
”பார்த்ததா சொல்றேன் “ என்றான். என்னை நேராகப் பார்த்து.

அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க முடிந்தது அதற்குள் ரெயில் ஸ்ரீரங்கம் சமீபித்து ப்ளாட்பார்மில் நின்று விட்டதாலும் என்னைத் தள்ளிக் கொண்டு இறங்க ஆரம்பித்தவர்களாலும்.

November 08, 2015

அம்மு 5

அம்மு 5

மானுஷ்யம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதைகளைச் சொல்லியிருப்பார்கள். சொன்னவர்கள் ரொம்ப வேண்டியவர்களாயிருந்தால் தீவிர முகத்துடன் கேட்டு ஆறுதல் தந்திருப்பீர்கள். உள்ளுக்குள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன்.
என் அம்மு கதையையும் கேட்டு வையுங்கள்.
அந்த நாளில் யாரோ ஒரு பெரியவர் தங்கி இருந்ததாய்ச் சொல்லப்பட்ட மண்டபம். பின்னாளில் மானாவாரியாய் சுவர் எழுப்பி 6 ஒண்டுக் குடித்தனங்கள் குடியிருக்க ஆரம்பித்தன. எத்தனை வருடங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததோ.. தெரியாது. நாங்கள் குடியிருந்த வீட்டைக் காலி செய்யச் சொன்னதும் டக்கென்று அமைந்த வீடு இது. ஒரு போர்ஷனில் நாங்களும் குடி போனோம்.
எனக்கு முதலில் மனசே இல்லை. முன்பிருந்த வீடு பெருசு. அதுவும் எங்கள் குடும்பம் மட்டுமே – அதாவது என் சித்தப்பா, அத்தைகள் இருவர் என நான்கு குடும்பங்களின் கூட்டணி. அவரவர் சமையற்கட்டு தனி. கொல்லைப்பக்க கிணறு. தோட்டம் போடுமளவு பின்பக்கம் பெரிய வெளி.
இப்போது கிடைத்ததோ அதில் பாதி அளவு கூட இல்லை. அதிலும் 6 குடித்தனம். பெரிய கூடம். அதில்தான் எல்லாக் குடும்ப நபர்களும் எல்லை பிரித்து தூக்கம். அழுது வடிகிற குண்டு பல்பு. இரவில் அதையும் அணைத்து கிரசின் சிம்னி. அது முணுக் முணுக்கென்று எரிந்து நள்ளிரவில் உயிரை விட்டு விடும். படுத்தால் அடித்துப் போட்ட மாதிரி தூக்கம் என்பதால் இருட்டு கவ்விய கூடம் ரொம்ப நாளைக்குத் தெரியவில்லை.
இந்த புது வீடு பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்கள். தெருவுக்குள் வந்து விட்டோம். ரெங்கன் ஆன்னா ஊன்னா வாசலோட போவார். ரெண்டு தேர்கள் ஓடும் சித்திரை.. பங்குனி. முன்பு புறப்பாடு ஆனது தெரிந்து ஓடி வருவதற்குள் எங்கள் தெரு முக்கைத் தாண்டி விடுவார். பின்னால் ஓடணும். இப்போ அந்தத் தொல்லை இல்லை.
இரண்டாவது அம்மு.
ஆறு குடித்தனங்கள் போக எக்ஸ்ட்ராவாய் வாசல் பக்கம் ஒரு அறை இருந்தது. சாதாரணமாய் என்னோடு பேசிக் கொண்டிருக்கிற மாமியை திடீரென ஒரு நாள் அந்த அறைக்குக் கூட்டிப் போவார்கள். ‘நீ போடா ஸ்கூலுக்கு என்று என்னை விரட்டி விடுவார்கள். பியூன் கூட வந்திருக்க மாட்டான் அப்போது. பழைய சாதம் டப்பாவில் போட்டு என்னைத் தள்ளி விட்டதும் மாலை நான் வீடு திரும்புவதற்குள் என்ன அதிசயமோ.. மாயமோ.. ஒரு புது ஜனனம் நிகழ்ந்திருக்கும்.
அம்மு மூத்தவள். என்னை விடச் சின்னவள் என்று நினைத்திருந்தேன் மாதக் கணக்கில்தான் என்று பின்னால் தெரிந்தது. அம்முவின் அம்மா தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்ரமாதித்தி. ஆறாவது குழந்தையை அந்த அறையில் தான் பெற்றெடுத்தாள்.
அம்மு ஒரு வகையில் இரண்டாவது அம்மா ஆகி விட்டாள்.. தன் தம்பி தங்கைகளுக்கு. எட்டாவதோடு படிப்பை நிறுத்தினார்கள். கொஞ்சம் பூசின உடல்வாகு, கிணற்றடியில் துண்டைக் கட்டி குளிக்கிற ஆண்களும் இருக்கிற ஒரே ஒரு பாத் ரூமில் குளிக்கிற பெண்களுமான பிரதேசம் அது. அம்மு 5 மணிக்குள் குளித்து விட்டு வந்து விடுவாள்.
புத்தகங்களோடு திரிகிற என்னிடம் அவள் படிக்க ஏதாவது இருக்கா என்று கேட்டதும் ஜெயகாந்தனையும் லா.ச.ராவையும் காட்டினேன். முகம் சுளித்தாள். வாண்டுமாமாவும் முத்து காமிக்ஸும் பிடித்திருந்தது. ஆளப்பிறந்தவன்.. சிலையைத்தேடி.. பலே பாலுவும் பாட்டில் பூதமும்.. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..
பதின்ம வயதில் பெண் என்றால் பத்து தப்படி தள்ளிப் போய்க் கொண்டிருந்த என்னுடன் அம்முதான் முதலில் பேச ஆரம்பித்தது,. என் தங்கைகள் பெண்களில் சேர்த்தியில்லை.
அமானுஷ்யம் பற்றி பேச ஆரம்பித்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்.
எனக்கு கூடத்தில் படுக்கப் பிடிக்கவில்லை. வாசல் திண்ணையில் தான் படுக்கை. அந்தப் பக்கம் படுக்கிற குழந்தை இல்லாத இன்னொரு ஜாகை மாமா, மாமி தனிக்கதை.
பத்து மணி ஷோவிற்குப் போவது என் அத்திம்பேருக்குப் பிடிக்கும். அவர் நள்ளிரவு ஒரு மணிக்குத் திரும்பியபோது நான் ரோட்டில் எங்கள் வீட்டு வாசலில் படுத்திருந்தேனாம். காற்றுக்காகப் படுத்திருக்கிறேன் என்று எழுப்பாமல் போய்விட்டாராம். இது முதல் அனுபவம். திண்ணையில் இருந்தவன் எப்படி முழுப்படுக்கையுடன் வாசலுக்குப் போனேன் என்பதற்கு எவ்வித சப்பைக் கட்டுகளும் இதுவரை இல்லை.
இன்னொரு இரவில்.. அதே திண்ணை.. எனக்கு விழிப்பா இல்லை மயக்கமா புரியவில்லை. ரோட்டில் போகிற ஏதோ ஒன்று சட்டெனத் தாவி என் கையைப் பற்றி அப்படியே ஒரு சக்கரவட்டம் என் உடம்பைச் சுழற்றி கையை முழங்கால் அருகே சொருகி விட்டு நகர்ந்த பிரமை. நான் ராமா ராமா என்று கத்தியிருக்கிறேன். உடலெங்கும் வியர்த்து கண் திறந்து பார்த்தால் திண்ணையில்தான் படுத்திருக்கிறேன். கை மட்டும் முழங்கால்களுக்கிடையில்.
பிரசவ அறைக்குள் ஒரு முறை விளையாட்டாய் ஒளிவதற்காய்ப் போய் யாரும் தேடாமல் தூங்கிப் போய் விட்டிருக்கிறேன். என் மேல் யாரோ ஏறி அமர்ந்து என்னை நசுக்க முயல என்ன முயன்றும் உதற முடியவில்லை. அப்போதுதான் ‘எங்கே கண்ணனைக் காணோம் ரொம்ப நாழியா’ என்று குரலும் கதவு திறக்கும் சத்தமும். அந்த உருவம் என்னை விட்டு விலகி விட்டது.
போதுமென்று நினைக்கிறேன். இந்த வீட்டின் அசாதாரணம் குறித்து எல்லோருமே அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இருவர் பேசுவது மற்ற இருவருக்குத் தெரியாது என்கிற பாவனையில்.
ந்த சமயத்தில்தான் அம்முவுக்கு வரன் பார்த்தார்கள். சமையல் வேலை. ஆளும் அவனும். வெற்றிலை போட்டு காவி ஏறிய பற்கள். எப்போதும் துப்பிக் கொண்டிருந்தான். பாக்குத் துகள்கள் தெரித்தன. ‘இந்தா சாப்பிடு’ என்று அவன் நீட்டிய ஜாங்கிரியைக் கையில் வாங்கிய போது மிச்ச விரலை நக்கினான். உவ்வே. அவனுக்குத் தெரியாமல் தூக்கிப் போட்டு விட்டேன். கூடத்திலேயே அம்முவின் கல்யாணம். புகை வெளியே போகாமல் சுழன்று கொண்டிருந்தது. தயிர்வடை எனக்குப் போடவில்லை. எத்தனை முறை கேட்டும். சமையல் செய்தது போதவில்லை. நல்ல கூட்டம்.
அம்முவின் பர்ஸ்ட் நைட் பிரசவ அறையில்தான். அன்று கூடத்தில் யாரும் படுக்கவில்லை. அவரவர் போர்ஷன் சமையலறையில் ஒடுங்கிக் கொண்டார்கள். பிரசவ அறையின் வாசல் பக்க ஜன்னலின் கீழ் என் படுக்கை. நள்ளிரவில் ஏதோ மேலே தெறித்தது. வெற்றிலைச் சாறு.
மறுநாள் மாலையில்தான் அம்முவைப் பார்க்க முடிந்தது. கண்களில் சிவப்பு. அழுதாளா. அவனைக் காணவில்லை. ஏதோ கல்யாண காண்ட்ராக்டாம். போய் விட்டான். எப்போ வருவான் எப்போ போவான் என்று தெரியாது. அம்மு ‘பிள்ளையாண்டிருப்பதாய்’ச் சொன்னதும் பிரசவ அறைக்கு வேளை வந்து விட்டதாய் நினைத்துக் கொண்டேன்.
நாட்கள்தான் என்ன வேகமாய் ஓடுகின்றன.. அம்மு வெளிறி.. நடக்க முடியாமல் வயிற்றைச் சாய்த்துத் திணறி.. ‘ஏண்டி.. ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடறாளா.. இப்படி சோகை பூத்திருக்கு’ என்கிற விசாரணைக்கு ‘பையன் தான் பிறக்கப் போறானாம்.. அதான் இப்படிக் காட்டுது’ என்று ஏதோ சால்ஜாப்பு சொல்லப்பட்டு..
அம்மு அறைக்குள் போனாள் நடந்து. பெண் குழந்தை சுபஜனனம். அம்மு உறையும் போது முகத்தில் ஒரு அலாதி சிரிப்பு. அவ்வளவு பெரிய அழுகையை அதுவரை வீதி கேட்டிருக்கவில்லை.
ங்கள் குடித்தனம் அதன் சோபையை இழந்து விட்டது. அம்மு குடும்பத்தார் அந்த கைக் குழந்தையுடன் காலி செய்து போய்விட்டார்கள். வேறு ஆள் குடி வந்தாகி விட்டது. பிரசவ அறைக்கும் ஒரு குடி வைக்கப் போவதாய் சொன்னார்கள். அது வைப்பதற்கு முன் அந்த அறைக்கு வெள்ளை அடித்தார்கள். ஒரு வாரம் சும்மா கிடந்தது. ஒரு பகல் வேளை. விடுமுறை. ஏதோ அலுப்பு. தொந்திரவு இல்லாமல் கொஞ்ச நேரம் தூங்க நினைத்தேன். அந்த அறைக்குள் போய்விட்டேன்.
கண்ணசந்திருக்க வேண்டும். என் மேல் ஏறி அமர்ந்து அது என்னை நசுக்க ஆரம்பித்தது. யாழு.. நீ.. என்னை விடு.. கத்த முடியவில்லை. அம்மா.. அம்மா.. அப்போதுதான் ஏதோ சொன்னது.
‘அம்மு டா..ஏன் சத்தம் போடறே..’
அம்மு.. இன்னும் பீதியானது. அறைக் கதவை உட்பக்கம் தாளிட்டது தப்பாப் போச்சு. எழவும் முடியவில்லை. அம்மு அப்படியே என் மீது அமர்ந்திருந்தாள். என் கன்னத்தை வருடினாள். ‘ஏண்டா சீக்கிரமா பொறந்திருக்கக் கூடாதா முன்னாடியே.. ‘ என்றாள். செயலற்று பிரமிப்பில் படுத்திருந்தேன். எத்தனை நேரமென்று தெரியவில்லை. அவளாக விலகிப் போனாள். போகுமுன் என் கன்னத்தில் ஒரு முத்தம்.
வெளியே வந்ததும் அம்மாவிடம் கேட்டேன்.
“ஏம்மா அந்த ரூமை நாமே வாடகைக்கு எடுத்துக்கலாமே.. நமக்கும் இடம் வேண்டியிருக்கே.. கேட்டுப் பாரேன்”
”என்னடா சொல்றே”
அப்பாவுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது.
“அவன் சரியாத்தான் சொல்றான்.. கேப்போம்” என்றார்.

ப்போது சொல்லுங்கள்..  அமானுஷ்யம் உண்டா இல்லையா ?

November 05, 2015

அம்மு - 4


ம்முவை முதன் முதலில் என் இருக்கையில்தான் பார்த்தேன்.
குழப்பமாக இருக்கிறதா.. அலுவலகத்தில் என் இருக்கையில். எங்களுக்கு ஆபிஸ் எட்டு மணிக்கு ஆரம்பம். நான் கேண்டின் போய் முக்கால் மணி நேர அலுப்பான பயணத்தின்  (அது அலுப்பில்லை.. பக்கத்து இருக்கை நண்பருடன் அரட்டை.. அல்லது ஜன்னல் வழி வெளியுலக தரிசனங்கள்) களைப்பைப் போக்க சூடான தேநீர்.
இருக்கைக்கு வரும் போது என் சீட்டில் யாரோ அமர்ந்திருப்பது போலத் தெரிந்தது. என்னால் எந்த பயனுமில்லை என்று வேறு ஆள் போட்டு விட்டார்களா.. உள்ளே சின்னதாய் ஒரு உதைப்பு. கிட்டே வந்தால் குறு குறு விழிகளுடன் அம்மு.
”நீ..ங்க”
“அலமேலு.. வீட்டுல அம்மு” சிரித்தாள்.
என் வீக் பாயிண்ட்டை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறாள். சிரிக்கிற மனிதரிடம் என்னைத் தொலைத்து விடுவேன் சுலபமாய்.
பொதுவாய் ஒருவர் இருக்கையில் இன்னொருவர் அமர மாட்டார்கள். அலுவலக நியதி. விதிவிலக்கு நண்பர்கள். உரிமையாய் அமர்வார்கள். என்னைப் பொறுத்தவரை சிக்கலில்லை. பெரிய அதிகாரிகள் முறைப்பார்கள்.
கேஸுவலாய் எழுந்தாள். பக்கத்து சீட்டில் அமர்ந்தாள்.
“இதான் உங்க சீட்னு சொன்னாங்க. ஆனா நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. கண்டுபிடிக்கத்தான் உங்க சீட்டிலேயே உட்கார்ந்தேன்”
இந்த சிரிப்பு ஒன்று பிறவியிலேயே வாய்த்திருக்க வேண்டும் அவளுக்கு. அல்லது நன்றாகப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் இயல்பு போல.
”ட்ரெய்னி.. ரிப்போர்டிங் டூ யூ.. “
அலுவலக உத்திரவைக் காட்டினாள். படிக்கவில்லை. அதிலென்ன சந்தேகம். நேற்றே தகவல் வந்து விட்டது.
“அம்மு.. ப்ச்.. அலமேலு”
“நீங்க என்னை அம்முன்னே கூப்பிடலாம்” சிரிப்பு.
“ஆபிசில் அம்மு பொம்முலாம் செல்லாது” என் சிரிப்பு அத்தனை இயல்பாயில்லை என்று எனக்கே புரிந்தது.
முகத்தில் விளக்கணைந்து எரிந்தது உடனேயே.
பக்கத்து சீட்டில் கணினி.. இவள் வரவிற்காகவே. ஷேர்பாயிண்ட்டில் இருவரும் பயன்படுத்துகிற ஃபைல்கள்.
ஒரு ஃபோல்டர் பெயரைச் சொன்னேன். ஷுக்லா புத்தக சைசில் ஒரு ஃபைலைக் கொடுத்தேன்.
“ஓப்பன் பண்ணி பில் அப் பண்ணு”
எனக்கே உறைத்தது, நியூ கமர். அவளிடம் இன்னும் கொஞ்சம் பதவிசாய்ச் சொல்லி இருக்கலாம். ஆனால் என் கெத்தைக் காட்ட வேண்டும். கொஞ்சம் அழ அடிக்க வேண்டும். இந்த வேலை வேண்டாம்.. அல்லது வேறு சீட் மாற்றிக் கொடு என்று கெஞ்ச வேண்டும்.
கார்பரேட்டுக்கு அனுப்பவேண்டிய தினசரி சடங்குகளை முடித்து விட்டு டைரியை எடுத்துக் கொண்டு இருக்கையை வேகமாய்ப் பின்னால் தள்ளி..
“ஜிஎம்மைப் பார்த்துட்டு வரேன்” என்று முனகலாய்ச் சொல்லி விட்டு கிளம்பி விட்டேன். ஜிஎம் மூன்று நாள் லீவு.
அரை மணி சுற்றி விட்டு சீட்டுக்கு வந்தபோது அவள் வேறேதோ எக்சல்லில் மூழ்கி இருந்தாள்.
“ஏய்.. அதை ஏன் ஓப்பன் பண்ண.. ஃபார்முலாஸ்ல இருக்கு..”
“டிஸ்டர்ப் பண்ணல. ஜஸ்ட் பார்த்தேன்”
“கொடுத்த வேலை ??”
சிரித்தாள். கான்பிடன்ஸ்.
முடித்திருந்தாள். ஒன்றிரண்டு சந்தேகங்கள் வைத்திருந்தாள். யாருக்கும் வரக் கூடிய பொதுவான சந்தேகங்கள்.
“ஒவ்வொரு வாரமும் இதை அப்டேட் பண்றீங்க போல”
அவள் ஓப்பன் செய்திருந்த வொர்க் ஷீட்டைக் காட்டினாள்.
“ஆமா. அதுக்கென்ன”
“லாஸ்ட் வீக் க்ளோசிங் ஃபிகர் கேரி அவுட் ஆகல..”
ப்ச்.. தப்பு. கவனப் பிசகு.
“இந்த வாரம் அனுப்பும் போது செக் பண்ணிருவேன்” என்றேன் மீசையில் மண் ஒட்டாமல்.
“கிரேட்”
“எ..ன்ன”
“பட்ஜெட் ஃபுல்லா நீங்கதானா.. யப்பா.. எவ்ளோ வொர்க்கிங்ஸ்.. சத்தியமா கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு”
“இதுக்கு முன்னாடி நீ..”
“கார்பரேட்ல தான் செலக்ட் ஆனேன்.. இப்போ எல்லா யூனிட்லயும் ஒவ்வொரு மாசம் ட்ரெயினிங்”
ஓ.. அதான் இத்தனை சுலபமாய் வேலையா.
“பை த வே.. எனக்கு நேட்டிவ் திருச்சி”
“திருச்சில..??”
“ஸ்ரீரங்கம்”
என் ஐஸ்கட்டி உடைந்தது. காபி குடிப்பதில்லை அவளும் என்னைப் போலவே. சாப்பாடு கேண்டினில் ஆண்கள் பகுதியிலேயே ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டோம். வெளியே போய் இளநீர் குடித்தோம். இளநீர் விற்கிற பெண்மணி என் சிநேகிதி. அரிவாளை வைத்து லாவகமாய் சீவுகிற நேர்த்தி எனக்குப் பிடிக்கும். அதற்காகவே குடிப்பேன். தண்ணியா.. இல்லாட்டி வழுவலா.. என்று நான் சொன்னதையே அம்முவும்.
செக்யூரிட்டி அவளை பாஸ் கேட்டபோது பர்ஸைத் துழாவி எடுத்துக் காட்டினாள். ஒட்டியிருந்த போட்டோ நிஜத்தைப் போல அத்தனை அழகாயில்லை.
மாலை அலுவலக நேரம் முடிந்து கிளம்பும்போது பேருந்தின் இந்தப் பக்கம் அவள். அந்தப் பக்கம் நான். தற்செயலாய்த் திரும்பிப் பார்த்தபோது அவளும் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ம்மா என்னைப் பார்த்ததும்என்னப்பனேஎன்று வழக்கம் போல முனகினாள். நம்பெருமாள் முன் நாலு மூலையும் மஞ்சள் தடவிய பெண் ஜாதகம் இருந்தது.
“அவா இன்னிக்கும் வந்து என்ன சொல்றேள்னு கேட்டுட்டு போயிட்டா”
“சொல்ல வேண்டியதுதானே.. எம்புள்ளை என் பேச்சைக் கேட்க மாட்டான்னு”
அம்மாவின் அழுகை கொஞ்சம் கவிதை.. கொஞ்சம் ரசனை.. நிறைய உறுத்தல்.
“ஏண்டா என்னை இப்படி சோதிக்கிறே”
“யாரு நானா”
“நான் அவனைச் சொன்னேன்”
அன்றிரவு வேப்பம்பூ ரசம். சுட்ட அப்பளம். அதுவும் தேவார்மிதமாகத்தான் இருந்தது.
டுவில் வருகிற ஞாயிறுகள் விடுமுறை நாட்கள் எனக்குப் பிடிக்கவில்லை.
அம்மு சுவாரசியமாய்த் தெரிய ஆரம்பித்தாள். டெய்லி ஷீட்டைக் கிழிக்கும் போது உள்ளே ஒரு மளுக் கேட்டது.
கடைசி நாள். அம்முவின் வேலையைப் பாராட்டி ஜிஎம்மிடம் சொன்னபோது என் குரலில் கூடுதல் அழுத்தம். அதை அவரும் கவனித்திருக்கவேண்டும். பிறகு தனியே அழைத்து கேலி செய்யலாம்.
லா.ச.ரா தொகுப்பு ஒன்றை என் ஞாபகமாய்ப் பரிசளித்தேன்.
“படிப்பியோன்னோ”
”ஜனனி.. அபிதா.. ” என்று ஆரம்பித்தாள்.
வேடிக்கையாய்க் கை கூப்பினேன். “தெரியாம கேட்டுட்டேன்”
டாக்ஸி புக் செய்தேன். பஸ்ஸில் போக வில்லை இன்று. என்னோடு வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தாள். அம்மாவைப் பார்க்கணுமாம்.
முன்னே அமரப் போனவனைப் பின்னிருக்கைக்கு அழைத்தாள். இடைவெளி விட்டு அமர்ந்தேன். இந்த ஜன்னல் வழி நான்.. அந்த ஜன்னல் வழி அவள்.
காவிரிப் பாலம் கடக்கும் போது ஒரு மணல் திட்டில் கூட்டமாய் அமர்ந்திருந்த பறவைகளை ஒரே நேரத்தில் இருவரும் பார்த்து ‘ஹை’ என்றோம்.
அம்மா அம்முவைப் பார்த்ததும் சிரித்தாள். நெடுநாளைக்குப் பின் இதயச் சிரிப்பு. “வாடிம்மா.. உன்னைப் பத்தி நிறைய சொல்லி இருக்கான்”
அம்மு என்னைத் திரும்பிப் பார்த்தபோது நான் நகர்ந்திருந்தேன்.
கீழே சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள். அம்மா வற்புறுத்தியும் கேட்கவில்லையாம். டீ டம்ளர் ஆறிக் கொண்டிருந்தது.
“உன்னோடதான் சாப்பிடுவாளாம்”
இந்த நிமிடத் தேநீர் இதுவரை குடித்திராத சுவையில் இருந்தது.
“குளிச்சுட்டு வரேன்” எழுந்து போய் விட்டேன்.
ஒரு மணிநேரம் கழித்து அம்மு விடை பெற்றுக் கிளம்பியபோது அம்மா பிளவுஸ் பிட்.. மஞ்சள் துண்டு வைத்துக் கொடுத்தாள். நமஸ்கரித்து வாங்கிக் கொண்டாள். வாசலில் காத்திருந்த காரில் ஏறிக் கொண்டபோது அம்மா அவள் கையைப் பற்றி அழுத்தி விடை கொடுத்தாள். அன்றிரவு அம்மா ஏனோ என்னிடம் எதுவும் பேசவில்லை. மௌனமாய் சாப்பாடு.. மௌனமாய் படுக்கை.
மூன்றாவது நாள் எனக்கு மெயில் வந்திருந்தது அம்முவிடமிருந்து.
நீங்கள் நினைப்பது சரிதான். அவசியம் எங்க கல்யாணத்திற்கு வாங்க. பத்திரிக்கை அனுப்பறேன்.. இன்பாக்ஸில் அட்ரஸ் கொடுத்தால். இல்லாவிட்டால் இதையே அழைப்பாய் ஏற்கவும்.November 02, 2015

அம்மு 3

அம்முவுக்கு என் நம்பர் எப்படிக் கிடைத்தது என்று தெரியவில்லை.  அவள் அழைக்கும் போது நான் முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். ஒரு எண்ணிலிருந்து அழைப்பு என்றதும் துண்டித்து விட்டேன்.
பின்பு இருக்கைக்கு வந்ததும் பூக்கள் பூக்கும் தருணம் ஒலித்தது.
“சொல்லும்மா”
“அம்முன்னு உங்க ரிலேஷனாமே.. ஃபோன் பண்ணியிருந்தா.. உங்களுக்கு கால் பண்ணாளாம். எடுக்கலியாமே.. யார் அவ”
அம்மு.. அம்முவா..
“இரும்மா.. கூப்பிடறேன்”
கால் ஹிஸ்டரியில் துழாவி அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன்.
” கண்ணா.. சௌக்கியமா”
என் வீட்டுப் பெயர் தெரிந்தவர்களில்.. மிகக் குறைந்தவர்களில்.. ஒருத்தி.
“ஸாரி.. மீட்டிங்ல..”
“பரவாயில்ல.. நீ மறுபடி கூப்பிடுவன்னு தெரியும்”
“எங்கே இருக்கே”
சிரித்தாள். “அதே கண்ணன்.. அதே படபடப்பு”
விலாசம் சொன்னாள்.
“கிளம்பிட்டேன்”
கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் தான் வீட்டுக்குப் போகும் நான்.. ஆபிஸ் முடிய நாலு மணி நேரம் இருக்கும்போதே கிளம்பியது சகலருக்கும் ஆச்சர்யம்.
“எதுவும் சிக்கலா.. உதவி வேணுமா” என்று விசாரிப்பும்.
நாசூக்காய் மறுத்து விட்டு கிளம்பினேன். சொந்த சாரத்தியம் என்றதால் வேறு தொல்லைகள் இல்லை.

அம்முவின் கண்களில் கரு வட்டம். இளைத்திருந்தாள். சற்றே வதங்கின தோற்றம்.
மூன்று குழந்தைகளாம். முதலிரண்டும் பெண்கள். கடைசி பையன். ‘அவருக்கு  ஒரு புள்ளை வேணும்னு ஆசை’
என் கையிலிருந்த ஸ்வீட் பாக்கட்டை நீட்டினேன். வாங்கி அந்தப் பக்கமாய் வைத்தாள். கொஞ்சம் நெருடியது.
“ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து”
“ம்ம்.. உன்னைப் பார்க்கணும்னு திடீர்னு தோணிச்சு. “
பார்வை வீட்டைச் சுற்றி வந்தது. அது வீடு என்று சொல்ல நாலு சுவர்கள்.. ஒரு கதவு இருந்தது. தரையில் காயாத ஈரம். இரு கைகளைத் தலைக்கு உயர்த்தி கும்பிட்ட மாதிரி மங்களூர் ஓடுகள் அடுக்கிய கூரை. கை உயர்த்தினால் விரலை நறுக்குகிற கிட்டத்தில் தேமே என்று சுற்றுகிற மின் விசிறி.
சமையலறை டல்லடித்தது. பிளாஸ்டிக் குடங்கள். அலுமினிய பாத்திரங்கள். அம்மு.. நீ.. நீயா.. இதில்..
“அம்மு.. வாயேன் என்னோட”
“எங்கே”
“சொல்றேன் வா”
கதவைப் பூட்டவில்லை. ஸ்டோர் போல வரிசையாய் வீடுகள். ஒரு கால் செருப்பு தைக்கப் பட்டிருந்தது.
காரில் உட்காரச் சொன்னேன். ஏசியில் ஒரு முறை சிலிர்த்துக் கொண்டாள்.
மெயின் தெருவில் மளிகைக் கடை வாசலில் காரை நிறுத்தினேன். அரிசி.. பருப்பு.. புளி.. எண்ணை.. சீரகம்..
“அம்மு வேறென்ன..”
“ஸாண்டல் பவுடர்”
அவளை வெறித்தேன். அதையும் வாங்கியாச்சு. காரில் ஏற்றிக் கொண்டு மறுபடி வீடு. உள்ளே இறக்கி வைக்க வந்தபோது அவன்..
“யாழு நீங்க”
அம்மு அவனை அமர வைத்தாள். கண்களில் ரெட் லைட் தெரிந்தது அவனுக்கு.
“வைதேஹியோட அண்ணா.. நம்மைப் பார்க்க வந்திருக்கார்”
அசட்டுத்தனமாய் கை கூப்பினான்.
“அதானே பார்த்தேன். தெரிஞ்ச முகமா இருக்கேன்னு.. எப்படிடா இருக்கே” என்றான் தோளைத் தட்டி.
“குழந்தைங்க எங்கே”
“வருவாங்க”
“சரி.. நான் வரேன்”
இதற்குள் அவன் கட்டிலில் படுத்துத் தூங்கி விட்டான்.
“அம்மு..”
“பார்க்கணும்னு தோணிச்சு.. பார்த்துட்டேன்” என்றாள்.
கார்க் கதவை அவள்தான் மூடினாள்.
“இது போதும் கண்ணா.. நீ வாங்கித் தந்ததை நான் மறுக்கல.. இனிமே எதுவும் வேணாம்.. இந்த வாரம் நாங்க வீடு காலி பண்ணிருவோம்.. வேற எடம் போயிருவோம்.”
நன்றாக இருட்டி விட்டது. அவள் வீட்டு வாசலில் விளக்கில்லை. தெருமுனையில் ஆள் நடமாட்டமில்லா ஒதுக்குப் புறம்.
கதவை மூடுமுன் என் நெற்றியில் முத்தமிட்டாள். அந்த நாளில் ஏங்கிய..  கிடைக்காத  முத்தம்.
“போயிட்டு வா கண்ணா”
பக்கவாட்டு கண்ணாடியில் அவள் தெரிகிற தூரம் வரை எனக்கு சாலையைப் பார்க்கத் தோன்றவில்லை.

October 28, 2015

அம்மு 2

சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் எந்த நிமிஷத்திலும் அம்முவை எதிர்பார்க்கலாம்.  ஏதாவது ஒரு திசையில் இருந்து வந்து நிற்பாள்.
‘அம்மா பூ வாங்கிண்டு வரச் சொன்னா’
‘என்னிக்கு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம்னு அம்மா கேட்டுண்டு வரச் சொன்னா’
‘இன்னிக்கு மாமுனிகள் திருநட்சத்திரம்.. அம்மா இந்த பிரசாதம் கொண்டு போய் கொடுன்னா’
ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு ரெட்டை ஜடை இரு திசைகளில் அலைய அவள் வரும் போது என் கணக்கு நோட்டில் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.
‘இந்தக் கணக்கு புரியலைடா’
‘போடி என்னை டிஸ்டர்ப் பண்ணாத’
‘மாமி.. கொஞ்சம் சொல்லுங்களேன்.. பிகு பண்ணிக்கிறான்’
‘சொல்லிக் குடேண்டா’
ஏம்மா நீ லூசா..
‘என்ன புரியல..’
‘இதுதான்’
எனக்குப் புரிந்தது. அம்முவின் கவனம் கணக்கில் இல்லை. விருவிருவென்று ஸ்டெப்ஸ் எழுதி விடை வரவழைத்து நோட்டை மூடி வீசினேன்.
‘போய் பொறுமையா பாரு.. புரியும்’
கன்னத்தில் கிள்ளி விட்டு போவாள்.
ஒரே பெண். செல்லம். அப்பா கிராமக் கணக்குப் பிள்ளை. வெற்றிலை போட்டால் அவர் பேசுவது புரியாது. போடாவிட்டாலும். வாசலின் ஒரு பக்கம் நிரந்தர ஆரத்திக் கறை.
தெருவில் யாரும் போய் விட முடியாது.
‘இங்கே வா’ என்பார் அதட்டலாய். காதில் விழாதபடி போய் விட்டால் அந்த நிமிடம் தப்பிக்கலாம். தவறி கிட்டே போனால்..
‘டவுனுக்குப் போறியா’
‘ஆமா’
‘ஏய்.. அந்த ரோக்காவை எடுத்துண்டு வா’
உள்ளிருந்து ஒரு பட்டியல் வரும்
‘இதை வாங்கிண்டு வந்துரு’
’பணம்’
‘அடுத்த வாரம் வரச்ச தரேன்னு சொல்லுடா’
கடையில் திட்டு விழும்.
‘வேற வேலை இல்ல.. ஏற்கெனவே பாக்கி நிக்கிது’
‘சரி.. போய் சொல்லிடறேன்’
‘யோவ் இருய்யா.. இதுல பாதி சாமானைக் கட்டு.. மீதி சரக்கு இல்லேன்னு சொல்லிரு’
கடைக்காரருக்கும் என்ன பயமோ.
இதே சவடால் பெண்ணிடமும். என்னிடம் பயப்படு என்று சொல்லாமல் சொல்கிற அலட்டல். நானா இதற்கெல்லாம் மசிகிறவன்.. போடி சர்த்தான்.

பட்டணத்தில் மேற்படிப்பு என்று கிராமத்தை விட்டு தப்பித்தாகி விட்டது. மூன்று வருடங்கள். நடு நடுவே மண்டகப்படி.. பிரம்மோற்சவம்.. தேர் என்று ஊருக்குப் போன நாட்களில் அம்முவின் கண்ணில் படாமல்.. பட்டாலும் கைக்கு அகப்படாமல் தப்பித்தாகி விட்டது.
கிறுக்கி எழுதியிருந்த ஒரு இன்லண்ட் (யாரிடம் அட்ரஸ் வாங்கினாளோ) மஹா கசங்கலில் என் ஹாஸ்டல் ரூமுக்கு வந்து சேர்ந்தது.
ஒரே வரி.. பெயர் கூட இல்லை.
‘என்னைப் பிடிக்கலியா’
ஆங்கில ஆசிரியர் அ தமிழாசிரியர் காதல் பற்றி ஆச்சாரமாய் வகுப்பு எடுத்த நாட்கள் அவை. ரொம்ப் டீப்பாக போக மாட்டார்கள். இலக்கிய அளவோடு நிறுத்திக் கொள்வார்கள். அந்த நாள் திரைப்படம் போல. பூங்காவில் ரெண்டு பூக்கள் உரசிக் கொள்ளும் முத்தக் காட்சிகளில். அது போல.. அண்ணலும் நோக்கினாள்.. அவளும் நோக்கினாள் என்றால்.. அவ்வளவுதான். வேறு வியாக்கியானங்கள் கிடையாது. அநியாயத்துக்கு நாசுக்கு பார்க்கிற அந்த ஆசிரியர்களுக்கு நாலைந்து குழந்தைகள் !

என்னைப் பிடிக்கலியா..
ஒரு வரி.. இரு வார்த்தைகள்.. அம்மு எதிரில் நின்று ரெட்டை ஜடை காற்றில் ஆட ஒரு விரலால் சுட்டி கேட்கிற பிரமை.
என்ன பதில் சொல்ல.. எனக்கென்று வேறு சில இலக்குகள்.. இந்த நிமிடம் லவ் பண்ண பொறுமை இல்லை. கிழித்துப் போட நினைத்து.. அப்புறம் மனசு மாறி மடித்து என் தகரப் பெட்டியின் அடியில் சொருகினேன்.

முதல் வகுப்பில் தேர்ச்சி. உதவித் தொகை கிடைத்ததால் அப்பாவுக்கு சிரமம் இல்லை. அம்மா மட்டும் துரும்பா இளைச்சிட்ட என்று 9 கஜம் புடவையை கண்ணீரால் நனைத்தாள்.
கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்து நகரின் பிரதான கம்பெனியில் எனக்கு வேலை தரத் தயாராய் இருப்பதைச் சொன்னார். அதை அம்மாவிடம் சொன்னபோது ‘போடா.. போய் நமஸ்காரம் பண்ணு’ என்றாள் பெருமாள் உள்ளைத் திறந்து காட்டி. பட்டண வாசத்தில் கட் அடித்து சினிமா பார்த்த எபக்டில் படக்கென்று அம்மா காலில் விழுந்தேன்.

அம்மா இல்லாத நேரம் எப்படித்தான் தெரிந்து வந்தாளோ.. அம்மு.
‘வேலைக்கு போகப் போறியாமே’
‘ஆமா’
‘கிடைச்சிதா’
‘என்ன லட்டர்.. இ..ல்ல.. என்ன கேட்கிற’
ஒரு தாவணிப் பெண்ணின் கண்களில் எத்தனை சக்தி. அந்தராத்மாவை ஊடுருவிக் கிழித்து பொய்களை வீச வைத்து மண்டியிட வைத்து விடுகிறது.
‘அவ்வளவுதானே’ அம்மு இதைக் கேட்கவில்லை. பார்த்தாள். எதுவுமே பேசாமல்.. போய்விட்டாள்.
’என்னடா உம்முனு கிளம்பற.. வேலைக்குப் போகணும்னு நீதானே துடியாத் துடிச்சிண்டிருந்த’
எல்லோருக்குமே ஆச்சர்யம்.
‘உன்னை விட்டுட்டு போறானோல்லியோ.. அதான்’
அம்மாவை எல்லோரும் கொஞ்சினார்கள்.
ரெயிலில் புகை கண்ணில் விழுந்தது பயணம் முழுக்க. ஜன்னல் பக்கம் உட்காராமலே.
முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு அனுப்பினேன்.
‘நம்மூர் பெருமாளுக்கு எடுத்து தனியா வச்சியோ’
கார்டில் அம்மா கேட்டிருந்தாள். அம்பது ரூபாய் அம்முவுக்கு எடுத்து வைத்திருந்தேன்.
அம்முவின் கல்யாணப் பத்திரிகை வந்தது அப்போதுதான்.
போகவில்லை. லீவு கிடைக்கவில்லை என்று பொய்.
ஒரு வருடம் ஊருக்கே போகவில்லை. அம்மாவுக்கே உடம்பு சரியில்லை.. பின்னால் சரியானது எல்லாத் தகவலும் கடிதங்களில்.
அப்புறம் போனபோது..
”ஸாரிம்மா.. நீ உடம்பு சரியில்லாதப்போ நான் வரல’
‘பரவாயில்லடா’
‘மத்தபடி எல்லாரும் சௌக்கியம்தானே’
‘ம்ம்.. நீ சாப்பிடு.. வா’
கலத்துப் பருப்பில் நெய்.. சாதம் கலந்து பொரித்த வடாம்.. அம்மாவின் கை வாசனை.
இத்தனை இடை வெளிக்குப்பின் வயிறும் மனமும் நிறைந்த அந்த தருணத்தில் அம்மா சொன்னாள்.
‘அம்முவைத் தள்ளி வச்சுட்டா அவ புக்காத்துல’
சாதம் சிதறியது வாயிலிருந்து.
‘ஏம்மா’
‘ப்ச்.. என்னவோ சொல்றா.. எது நிஜம் எது பொய் தெரியல..’
‘என்னம்மா இது அநியாயம்’
‘கொழந்தை பொறக்காதாம்.. ஏதோ டெஸ்ட் அது இதுன்னு பண்ணி.. ‘

தகரப் பெட்டியின் அடியில் ஒளித்து வைத்திருந்த இன்லண்ட் அதன் அளவைப் பெரிதாக்கிக் கொண்டு.. அந்த ஒற்றை வரியை.. இரு வார்த்தைகளைப் பிரம்மாண்டமாய்க் காட்டிக் கொண்டு கூடம் முழுக்க வியாபித்து நின்ற பிரமை அப்போது.