February 24, 2013

ஜ்வல்யா



’என்னடா கண்ணா’
என் கவிழ்ந்த தலை
நிமிர்த்தி
மழலைக் குரலில்
கேட்கிறாள் ஜ்வல்யா..
என் அம்மா
உயிர்த்து விட்டாள் அப்போது.



என்னை எவ்வளவு பிடிக்கும்’
என்றேன்..
இரு கை விரித்து
‘இவ்ளோ’
என்கிறாள்
ஜ்வல்யா..
அவள் கைகளின் விரிப்பில்
அடங்குது
என் ஆகாயம்...

February 10, 2013

ஸம்மோஹன கிருஷ்ணன்

நாமக்கல்லில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள மோகனூரில் ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணன் அருள் பாலிக்கிறார்.

அலுவலக நண்பரிடம் இந்தப் படத்தைப் பார்த்து அதிசயித்தேன்.

தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க வழிபட வேண்டிய தலமாம்.



தாமரையின் இதழன்ன கண்களும் உருவிலே

சரிபாதி பெண்ணுமாய்

தக்கவர் பாணங்களைச் சூடி வில் போல்

சற்றுடல் வளைந்தும் அழகில்

காமனையும் மிஞ்சியே வாசனை மிகுந்துள்ள

கவலைகள் உடம்பில் பூசி

கரங்களில் வனைக்கிளறி அங்குசங் குமுதம்

கருப்புலில் புட்பபாணம்

தேமதுரக் கானவிசை யாவரும் ஓவாது

செவிகளில் கேட்டு மகிழ

திருக்கரமிரண்டில் வேய்ங்குழலெடுத்துதியெண்

திசைகள் மெய்சிலிர்க்கவைத்து

சேமங்கள் இல்லாத வறியவருக்கழியாத

திரளான செல்வங்களீந்து

திகழ்கின்ற மோகனைக் கோபாலக் கிருஷ்ணனின்

திருவடி தியானிக்கிறேன்.











February 04, 2013

நிலாவை உடைத்த கல் - கவிதைத் தொகுப்பு




நிலாவை உடைத்த கல் - கவிதைத் தொகுப்பு



கடவுளின் நிழல் தரையில் படர
வருகிறாள் அம்மா !

சட்டென்று பக்கம் பிரித்ததும் கண்ணில் பட்ட முதல் கவிதை.

ஒற்றை வரியில் சொல்ல முடிகிற வித்தை வைகறைக்கு வாய்த்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியுடன் 'நிலாவை உடைத்த கல்'  தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன்.

ஏதோவொரு கவிதையினை
வாசிக்காத அவசரத்தில்
புரட்டும்போது கேட்கும்
காகிதத்தின் சரசரப்பினூடே
விசுப்பிக் கொண்டிருக்கிறது
அக்கவிதை !

நிஜமாகவே கவிதையின் விசும்பல் கேட்ட பிரமை.  (அது "விசும்பிக்" இல்லையோ .. )

காக்கையின் கூட்டில்
கிடக்கும் இலைகள்
யார் எழுதிய கடிதம் ?

இனி கூட்டில் பார்க்கும் இலைகள் கடிதமாய்த் தெரியும் நமக்கும்.

ஏதோவொரு
மௌனத்தின் குரலுக்கு நான் காது கொடுக்கிறேன்..
அது எழுதப்படுவதற்கு கரம் கொடுக்கிறேன்..
அவ்வளவுதான்!

என்கிறார் வைகறை..

நாம் அவரை  வாழ்த்த கை கொடுக்கலாம்..

www.nanthalaalaa.com

(தகிதா  பதிப்பகம். கோவை.  விலை ரூ 60. )