September 24, 2010

நந்தினி என்றொரு தேவதை

ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில் வந்து நின்றான்.
ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொங்குகிற வாசல் திரைச் சீலை பற்றாக்குறையாய் காற்றில் ஆடியது.
"ஸா... ர்"
வாய் 'ஸாரை' அழைத்தாலும் மனசு நந்தினிக்காக ஏங்கியது.
"யா... ரு?"
ஆண் குரல் கேட்டது. நடராஜன், நந்தினியின் அண்ணன்.மெஸ்ஸுக்குச் சொந்தக்காரன் ..
"நான்தான்..."
"நான்தான்னா யாரு... ஏய் நந்தினி.. போய்ப் பாருடி..."
நடராஜனின் இரைச்சல் வாசலுக்குக் கேட்டது.
"ஹாய்...!"
கிசுகிசுப்பாய் கையாட்டினான்.
"என்ன...?"
"இன்னிக்கு ஊருக்குப் போகலே. மீல்ஸ் வேணும்."
நந்தினி திரும்பி உள்ளே போனாள்.. மறுபடி வந்தாள்.
"பத்தரை மணிக்கு வாங்க.."
"வரேன்..." என்றான் மலர்ச்சியாய்.
ஊஹும். நந்தினி பேசாமல் திரும்பிப் போய் விட்டாள்..தன்னுடைய சைகைகள். பார்வை, தவிப்பு... இது எதுவுமே அவளுக்குப் புரியவில்லையா!சங்கர் வேலை கிடைத்தது வந்ததும் முதல் கவலை, தங்குமிடம்.
நண்பன் கைகொடுத்தான்.
"கவலைப்படாதீங்க . பேச்சிலருக்கு உதவும் ஓனர் இருக்காரு. எங்க கூட ரூம்ல தங்கிக்கலாம்..."
"சாப்பாடு?" என்றான் இரண்டாவது கவலையாய்.
"நம்ம மீனாட்சி..."
"மீனாட்சி...!"
"ம்... மீனாட்சி மெஸ். வாரம் ஆறு நாளும் காலை, இரவு டிபன், மதியம் மீல்ஸ்... மொத்தமா பணம் கட்டி... ஒரு டிபன் கேரியரும் வாங்கிக் கொடுத்தா போதும். மீல்ஸ் ஆபிசுக்கு வந்துரும் .."
"ஓஹோ..." என்றான் நிம்மதியாய்.
"ஆனா ஒண்ணு. சண்டே எதுவும் கிடையாது. அவங்களுக்கு ரெஸ்ட், ஒரு வேளை, நீங்க ஊருக்குப் போகலேன்னா... போய் அட்வான்சா சொன்னா.. மதியம் சாப்பாடு மட்டும் கிடைக்கும். அதுவும் நாலஞ்சு பேருக்குத்தான்... ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி... இப்பதான் ரெண்டு மாசமாத்தான் இந்த சலுகை..."
"நான் பெரும்பாலும் திருச்சி போயிருவேன்... சனி, ஞாயிறு ரெண்டு நாளும்" என்றான் சங்கர்.
"திருச்சில எங்கே...?"
"வயலூர் ரோடு... குமரன் நகர்... நீங்க...?"
மணியும் அவனும் 'நீ... வா... போ' லெவலுக்குப் பிறகு நெருங்கி விட்டார்கள்.
நந்தினியை முதல் தடவை பார்த்த நினைவு பசுமையாய் நிற்கிறது. பரிமாறுவதற்குப் பெரும்பாலும் நடராஜனும், வேலைக்கு வைத்திருந்த ஒரு சிறுவனும் தான் வருவார்கள்
ஒரு நாள் சிறுவனைக் காணோம். காலில் அடி பட்டு விட்டதாய் தகவல் சொன்னார்கள்.ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தான் மெஸ் நடத்திக் கொண்டிருந்தான் நடராஜன். ஹாலில் தரையில் அமர்ந்து தான் சாப்பாடு.
நந்தினி வந்து சட்னி, சாம்பார் ஊற்றி விட்டு போனாள்.தோசை விள்ளல் அப்படியே கையில் நின்றது.
மணி அவனை கிள்ளினான்.
"எ... ன்ன?"
"ஸ்ஸ்... சாப்பிடு..."
வெளியே வந்ததும் மணி எச்சரிக்கை விடுத்தான்.
"உங்க ஊர்ல பொண்ணே இல்லியா...? காலேஜ் வாசல்ல நின்னிருப்பியே...?"
"இல்லே மணி... இவ... சம்திங்.ஸ்பெஷல்.!"
"இங்கே . பாரு இப்பவே வார்ன் பண்றேன். நடராஜன் ருத்ர தாண்டவம் ஆடிவருவான். போன மாசம் ஒருத்தன் செம அடி வாங்கினான்... அப்புறம் இங்கே வர்றதே இல்லை... இந்த பொட்டைக் காட்டுல... தோல் நாத்தத்துக்கு நடுவுல... டீசன்ட்டா சாப்பாடு கிடைக்கிற ஒரே இடம் இது தான்.. கெடுத்துக்காதே... ஹோட்டல்ல மசால அரைச்சுக் குளிப்பாட்டி இருப்பான்... ரெண்டு நாள் சாப்டா போதும்... ஆஸ்பிடல் தான்..."
சங்கர் தலையாட்டினான். ஆனாலும் மனசு ஒத்துழைக்கவில்லை. மணியைத் தவிர்த்து தனியே சாப்பிடப் போனான். பொய்க் காரணங்கள். சனி, ஞாயிறு ஊருக்குப் போகாமல் தவிர்த்தான்.எப்படியாவது புரியவைத்து விட வேண்டும். நந்தினி ... நந்து...ஞாயிறு மாலை ராஜேஸ்வரி தியேட்டரில் நடராஜன் அன்ட் கோவைப் பார்த்ததும் சிலிர்த்தது அருகில் போனான். சிரித்தான்.
"என்ன.. சினிமாவுக்கா...?"
நடராஜன் அத்தனை சுலபமாய் இவனிடம் பேசிடவில்லை. நந்தினி குனிந்த தலை நிமிராமல் நின்றாள்.
தியேட்டரில் முன் வரிசையில் அவர்கள். பின்னால் அமர்ந்து மெலிதான வெளிச்சத்தில் திரையைத் தவிர்த்து உத்தேசமாய் நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவனுக்குப் பின் வரிசைக்காரர் அடிக்கடி உறுமி இவன் தலை மறைத்ததை அதிருப்தியுடன் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். கடைசி வரை 'எந்தப் படம்' என்று புரியாமல் பார்த்துவிட்டு வந்தான். இடை வேளையில் பழியாய்க் கிடந்ததில் நந்தினி தரிசனம். படம் விட்டதும் ஆட்டோ பிடித்து உடன் மறைந்து விட்டார்கள். காய்ந்த சாப்பாத்தியும் மட்டமான குருமாவும் சாப்பிட்டபோதும் மணியின் நினைவு வந்தது.
நிஜமாகவே மீனாட்சி மெஸ் சொர்க்கம்!
மணி நேரடியாய் ஆபீசுக்கு வந்து விட்டான்.
"எப்படி பொழுது போச்சு...?"
"காலை லேட்டா எழுந்தேன். மெஸ்ல சாப்பாடு. அப்புறம் மறுபடி தூக்கம். சாயங்காலம் ராஜேஸ்வரி..."
நேரடியாய் பார்க்காமல் பதில் சொன்னான்.
"சர்த்தான். அடுத்த அடி உனக்குத்தான்..."
"ஏய்..."
" வந்த புதுசுல... திருச்சி சொர்க்கம்... ஊருக்கு கட்டாயம் போயிருவேன்னு சொன்னே...!"
" செலவுப்பா... எதுக்கு... வீணா... அலைச்சல்... ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை போனாப் போதும்... எங்க வீட்டுலயும் அடிக்கடி வர வேணாம்னு சொல்லிவிட்டாங்க ."
"ஹை... எப்படி எல்லாம் கற்பனை சிறகடிக்குது.நானும் லவ் பண்றவங்களைப் பார்த்திருக்கேன்.. எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும்..." மணியின் சீண்டல் பிடித்திருந்தது. தன்னை நந்தினியுடன் தொடர்பு படுத்திய கேலி.
மணி மீண்டும் எச்சரித்தான்.
"வேணாம்... நடராஜன் ரொம்ப பொல்லாதவன். ஸ்மெல் பண்ணாக் கூட போச்சு. சாப்பாட்டுல மண்ணு. ப்ளீஸ், உடம்பு முழுக்க பிளாஸ்திரிதான்!"
'சரி' தலையாட்டினான் வழக்கம் போல.
பலமுறை யோசித்து - வார்த்தைகளுக்காவும், அந்தச் செயலுக்காகவும், - பிறகு நிறுத்தி, நிதானமாய், அழகாய் அந்தக் கடிதத்தை எழுதினான்!'.உள்ளூற உதைப்புத்தான். கடிதம் எப்போதும் டேஞ்சர். 'இல்லை' யேன்று தப்பித்துக் கொள்ள முடியாத எவிடென்ஸ்.
ஆசை வென்றது. தன் படிப்பு, உதவி, சம்பளம், சுயமாய் முடிவெடுக்கிற சக்தி, கடைசி வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றக்கூடிய திடம். பார்த்த முதல் வினாடி தொட்டு இந்த நிமிடம் வரை தழைத்து வளர்ந்திருக்கிற காதல் எல்லாம் தேனில் தோய்த்து போனாவால் எழுதி அழகான அச்சிட்ட கவரில் வைத்து ஓட்டினான்.
கொடுக்க வேண்டும். எப்படி... எப்போது...நேரம் வாய்த்தது. அன்றிரவு கூட்டம் இல்லை. சனிக்கிழமை. பெரும்பாலானவர்கள் ஊருக்குச் சென்று விடுகிற தினம். சனி அரை நாள் மட்டும் அலுவலகம் இருப்பவர்கள் அப்படியே பஸ் ஏறிப்போய் விடுவார்கள்.சங்கர் போன போது ஒரு நபர் மட்டும்.
உட்கார்ந்ததும் இலை போட்டு தோசை, சட்னி பரிமாறப்பட்டது.பார்வை அலை பாய்ந்தது. சிறுவன் தான் வந்தான். நடராஜனைக் காணோம்.கூட அமர்ந்திருந்தவனுக்கு அகோரப் பசி போலும். 'இன்னொரு தோசை' என்று கேட்டு விட்டுக் காத்திருந்தான்.
சங்கர் கை கழுவி விட்டு வந்தான்.
வாடிக்கையானதால் சாப்பிட்ட கணக்கு தெரியும். சிறுவனுக்குப் பணம் பெறும் உரிமை இல்லை
"அக்கா..."என்றான்.
நந்தினி வெளியே வந்தாள்.
"அக்காகிட்டே கொடுத்துருங்க..."
சமையல் கட்டுக்குள் ஓடினான்.ரூபாய் நோட்டை நீட்டி மீதிக்காகக் காத்திருந்தான். அதற்குள் அடுத்தவனும் கை கழுவிவிட்டு வந்தான்.
"இந்தாங்க..."
கொடுத்த சில்லறையை வேண்டுமென்றே தவறவிட்டு கீழே குனிந்து தேடினான்.அடுத்தவன் வெளியேற சங்கர் நிமிர்ந்து கடிதக் கவரை மேஜை மீது வைத்தான். நந்தினி பார்க்காத போது.
வழக்கமற்ற செயல் என்பதாலோ என்னவோ உடம்பு அநியாயத்திற்கு நடுங்கியது.
"இது உங்களுதா..?"
கையில் அதே கவர்.
"இ... இல்லே..."
ஏன் சட்டென்று அந்த பதில் வந்தது... புரியவில்லை. வேகமாய் நடந்து வந்துவிட்டான்.
அறைக்குள் நுழைந்து பத்து நிமிடங்களில் மூச்சு நிலைப்பட்டது ‘சே... என்ன பதில் சொல்லிவிட்டேன். எத்தனை அருமையான சான்ஸ். மனம் விட்டுப் பேச. மனதில் உள்ளதைக் கொட்ட. தவற விட்டாச்சு. இனிதுபோல் அமையப் போவதில்லை.’தலையை வேகமாய் உதறிக் கொண்டான். மடையன். முட்டாள் என்று தன்னையே திட்டிக் கொண்டான்.
நள்ளிரவில் ஒரு தடவை திடுக்கிட்டு எழுந்து மீண்டும் திட்டிக் கொண்டான். ஞாயிறு மெஸ்ஸூக்கு செல்ல மனம் இல்லை. பஸ் பிடித்து திருத்தணி போனான். மலை மீது அப்படியே அமர்ந்திருந்து விட்டு பசித்ததும் பிரசாதம் சாப்பிட்டான். மாலையில் அறைக்குத் திரும்பினான்.
திங்கள்காலை ஹோட்டல் ஒன்றில் டிபன். மெஸ் போல வாய்க்கு ருசிக்கவில்லை.
மணி ஆபீசில் இவனைப் பார்த்ததும் பரபரப்பாய் ஓடிவந்தான்.
"நேத்து என்ன பண்ணே... எங்கே இருந்தே...?"
"என்ன விஷயம்...?"
சங்கருக்குப் புரியவில்லை.
"நீ முதல்ல சொல்லு...?"
"நேத்து முழுக்க நான் திருத்தணியில இருந்தேன். மனசு ரொம்ப அமைதியா... சந்தோஷமா... நல்ல தரிசனம்..."
"ஹப்பா... நீதானோன்னு கலங்கிப் போயிட்டேன்..."
மணி நிம்மதியாய் பெருமூச்சு விட்டான்.
"நேத்து மெஸ்ஸுல கலாட்டா.! நடராஜன் யாரோ ஒரு சங்கரைப் போட்டு நிமித்திட்டானாம்.. ஒரு வேளை அது நீதானோன்னு..."
"எ... எதுக்கு...?"
சங்கர் தடுமாறியது மணிக்குத் தெரியவில்லை.
"எல்லாம பாழாய்ப் போன லவ் லெட்டர் விவகாரம். எவனோ நந்தினிக்கு லெட்டர் கொடுத்திருக்கான்.. சனிக்கிழமை ராத்திரி... மறுபடி அவனே நேத்தும் சாப்பாட்டுக்கு வந்திருக்கான்... உள்ளே வந்ததும்... நடராஜன் பேரைக் கேட்டு.... அடுத்த நிமிஷம்... அடி... உதைத்தான்.."
"ஏன்... அவன் எதுவும் சொல்லலியா... நான் எழுதலேன்னு மறுத்திர வேண்டியது தானே..."
படபடப்பை அடக்கிக் கொண்டு சங்கர் சொன்னான்.
"எப்படிச் சொல்லுவான்... அவனே எழுதிட்டு... வாய் தவறி உண்மையைச் சொல்லிவிட்டான்..."
சங்கருக்கு அதற்குமேல் அதை எப்படி விசாரிப்பது என்று புரியவில்லை. இல்லை நான் தான் எழுதினேன் என்றால் மணி 'உடனே அறையைக் காலி பண்ணு' என்று நிச்சயம் வெளியேற்றி விடுவான். அவனுக்கு இதில் துளிக்கூட உடன்பாடு இல்லை என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் வலியுறுத்தி இருக்கிறான்.
அடி வாங்கிய இன்னொரு நபரும் சங்கர்... சங்கர் ராமன். ஆனால் அவன், ஏன் உளறினான், 'தான் எழுதியதாய்!
அன்று மாலை டிபன் சாப்பிடப் போனபோது நந்தனி இல்லை. ஊருக்கு அனுப்பிவிட்டதாய்ப் பிறகு தெரிய வந்தது. குறிப்பிட்ட 'சங்கர் ராமன்' வேறு இடம் பார்த்துக் கொண்டு போய்விட்டதாக அறைவாசி தகவல் தந்தான்.
மனசுக்குள் குறுகுறுப்பு. தான் எழுதிய கடிதத்திற்கு எவனோ அடி வாங்கியது உறுத்தியது.
மூன்றாவது நாள் மாலை, மணி இல்லாமல் சங்கர் மட்டும் கடைத் தெருவில் நடந்து போனபோது யாரோ பின்னாலிருந்து அவன் கையைப் பிடித்திழுக்க நின்றான்.
மீனாட்சி மெஸ்ஸில் வேலை பார்க்கிற சிறுவன்.
"என்னடா....?"சிரித்தான் சிநேகிதமாய்.
"அண்ணே... ஒங்ககிட்டே பேசணும்..." என்றான் அழுத்தமாய்.
"எ... ன்ன?"
"உங்க லெட்டர் தானே ... அக்காவுக்கு நீங்கதானே எழுதினீங்க..."
குரல் தணிந்து தீவிரமாய் ஒலித்தது.
"செச்சே..."
"நான் பார்த்துட்டேன் - பொய் சொல்லாதீங்க அண்ணே..."
இப்போது குரல் உண்மைக்காக இரைஞ்சியது.
"ஆமாம்டா..."சங்கர் வெட்கினான்.
"ஆனா... உங்க லெட்டரை அக்கா பிரிச்சுக் கூட பார்க்கலே. அக்காவுக்கு நீங்க எழுதினீங்கன்னு தெரியாது... கிழிச்சு போட்டுருச்சு..."
என்ன...? திடுக்கிட்டுப் பார்த்தான்.
"அன்னைக்கு உங்க கூட இன்னொருத்தர் சாப்பிட்டாரில்லே. அவருதான் அடி வாங்கினது. மறுநாளும் அவர் சாப்பாட்டுக்கு வந்தாரு... அக்கா பார்க்கிறாப்ல லெட்டரை மேஜை மேல வச்சு சிரிச்சாரு.அப்ப... வெளியே போன பெரியண்ணன் வந்திட்டாரு... பிய்ச்சு உதறிட்டாரு..."
அடப்பாவி. அவனும் லெட்டர் கொடுத்தானா?
"அக்கா பாவம்ணே... இங்கே இருந்தப்ப சாப்பாடு நிச்சயமா கிடைச்சுது... இப்ப ஊர்ல அவங்க சின்னாம்மா வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டாரு... அங்கே எப்பவும் அடி. திட்டு தாண்ணே... எங்கிட்ட சொல்லி அழும்."
சிறுவன் குரல் தேம்பியது.
சங்கர் என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் நின்றான்.
"அண்ணே. நம்மால உதவி செய்ய முடியாட்டியும் தொந்தரவு தராம இருக்காலாம்ல. பாவம் அக்கா. தப்பு செய்யாம தண்டனையை அனுபவிக்குது. வேணாம்ணே. இனிமேல இந்த மாதிரி எதுவும் செஞ்சிராதீங்க."
விருட்டென்று திரும்பிப் போய் விட்டான்.
சங்கருக்குத்தான் அசையக் கூட முடியவில்லை அந்த இடத்திலிருந்து.

(மாலைமதி)

September 18, 2010

ரிக்க்ஷா நண்பர்

சித்திரை வீதி வங்கி வாசலில் ரிக்க்ஷா சத்தம் கேட்டால் இரண்டு அர்த்தம். ஒன்று, இன்று பென்ஷன் தினம். அடுத்தது கிழவர் பாட்டியுடன் ஆஜர்.கணக்கு பிசகாத நியதி.

பாட்டி வாசலில் காத்திருப்பாள். ரிக்க்ஷாவில்தான் அமர்ந்திருப்பாள்.

"அவங்களை ஏன் சிரமப்படுத்தணும்."

கிழவர் மெலிதாகச் சிரிப்பார்.

"பென்ஷன் பணத்துக்குச் சொந்தக்காரி அவதான். நான் ஜஸ்ட் பேரர்..."

இந்த வயசிலும் ப்ளீஸ்...

பாக்கெட் ரெடியாக எடுத்து வைத்திருப்பேன்.

"தேங்க்ஸ்!"

நிதானமாய் எண்ணி, தொகை சரி என்று உணர்ந்ததும் இன்னொரு "தாங்கஸ்."

வியாட்நாம் வீடு சிவாஜி போல, வேறு வம்பு எதுவுமின்றி ஸ்டைலாய் திரும்பிப்போவார்.எழுபத்தைந்து வயது. ரிடையரான மறு மாதம் முதல் அதே ரிக்க்ஷா. ரிக்க்ஷாக்காரனும் கிழம். இன்னும் ரிடையர் ஆகாத கிழம்.

"பத்து ரூபா அவனுக்கு..."

"உங்க வயசு எழுபத்தைந்தா?"

"இதே ஜாஸ்தி. போதும். ஐயாம் ஹேப்பி. எப்ப வேணா ரெடி" என்பார் அலட்டாமல்.

பணம் தருவதற்குள் அந்த ஐந்து நிமிட இடைவெளியில் ஒவ்வொரு மாதமும் நிகழ்கிற உணர்வின்றி விட்டுப் போன இடத்திலிருந்து தொடரும்.

"என்ன பண்ணுவீங்க. இரண்டாயிரத்துல?"

"மருமகள் கையில ஆயிரம்... அப்புறம் எங்க மெடிசின்ஸ் ஐந்நூறு... பர்த்டே... மேரேஜ் டே... தீபாவளி, பொங்கல், கார்த்திகை.. இப்படி ஃபங்ஷனுக்கு ஆசீர்வாதம்..."

பட்பட்டென்று பதில் வரும்.

"ஒரு ரூபா சில்லறை."

"வாசல்ல கீரைக்காரி... கட்டு மூணு ரூபாய். தினமும் பாட்டிக்குக் கீரை வேணும்."

கேலியாய்க் கண் சிமிட்டுவார்.மடிப்புக் கலையாத லாண்டரி டிரஸ். தற் செயலாக ஒரு தரம் கோவில் மணல் வெளியில் பார்க்க, அப்போதும் அதே பளீர் ட்ரஸ்.

"ரிக்க்ஷாதான் சகிக்கவில்லை. ஆணி துருத்திண்டு. எப்ப டிரஸ்ஸைக் கிழிக்குமோ. ஆட்டோல வரலாமே...'

என்னை நேராகப் பார்த்தார்.

"ஸாரி... ஜென்டில்மேன்... பத்துப் பதினைஞ்சு வருஷமா வரான் . பொறுமையா வந்து நிதானமா கொண்டு விடறான். அவனை நிறுத்தறதுங்கிறது ' பைனலாத்தான்'. அப்புறம் நோமோர் பேஷன் விசிட்!"

"யூ வில் லிவ் லாங்."

இதற்குண்டான பதில். எழுபத்தைந்து என்பது அதிகம் ."எப்ப வேணா ரெடி."

எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. பிற வாடிக்கையாளர்களை மீறி, அவர் வரும் தினம் சற்று முன்னுரிமை தருவேன்.ஒரு ரூபாய் நாணயங்கள் நூறு எடுத்து வைப்பேன். அவர் திருப்தியுற்று நகரும் வரை லட்ச ரூபாய் டிபாசிட்காரன் கூட எனக்குப் பொருட்டில்லை.

"என் மருமகளுக்கு பென்சன் பணம்னா ஒரு அலட்சியம்" என்று ஒரே ஒரு தரம் வாய்தவறிச் சொல் விட்டதிலிருந்து அவர் மீது கூடுதலாய்க் கரிசனம்.

"நான் உன்னை ரொம்பவும் தொந்தரவு செய்கிறேனா?" என்றார் ஒரு தரம்.

தலை அப்படியே இலவம்பஞ்சு போல. நீண்ட மூக்கு. உதடுகளில் பிடிவாதம். தங்க ஃ பிரேமில் கண்ணாடி.

"நோ... நோ... ஏன் கேட்கறீங்க?"

"சும்மா ஜஸ்ட் லைக் தட்,"

பெஞ்சில் அமர்ந்திருப்பார். எதையும் கவனிக்காத மாதிரி அலட்சியத் தோற்றம். ஆனால் உள்ளுர நிமிடக் கணக்கு. அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். பணத்துடன் வெளியேறிவிட வேண்டும்.

"ரிக்க்ஷால உட்காரருத்துக்கு முன்னால அவ கையில கொடுத்துருவேன். அவ இஷ்டப்பட்டாதான் எனக்கே ரிக்க்ஷா சவாரி."

எத்தனை வயசானால் என்ன. மனைவியைக் கேலி செய்வது ஆண்களின் சுபாவம்.

"பீரோ நிறையப் பட்டுப்புடவை. எப்பா கட்டிக்கன்னு வைச்சிருக்காளோ... வாரத்துக்கு ஒரு தடவை எடுத்து வாசனை பார்ப்பா. பைத்தியம்... என் டிரஸ்... ரெண்டே செட். பனியன். ஷர்ட், வேஷ்டி... கிழிஞ்சாதான் அடுத்தடுத்து."

நான் அவரருகில் வந்து நிற்பது உள்ளூர அவரைச் சந்தோஷப் படுத்தியிருக்க வேண்டும். அதே நிமிஷம் நான் கடமையிலிருந்து தவறி விடவும் கூடாது.

"நீ ஏன் இங்கே நிக்கறே?.."

"இன்னிக்கு எனக்கு வேற டூட்டி... கொஞ்சம் ஃ ப்ரீ... கேஷ் வந்ததும் உங்களை அனுப்பிட்டு..."

"நான் பார்த்துக்கறேன்...போ..."

என் நண்பர் என்ற அடையாளம் வங்கியில் அவருக்கு. சற்றே வினோதம். இரண்டொரு வார்த்தைகள் பேசியதால். நானும் அவரும் நண்பர்கள் என்றாகிவிட முடியாது. ஆனாலும் இந்த விசித்திரப் பிணைப்பு அதன் போக்கில் தொடர்ந்தது.

அந்த மாதம் கிழவர் வரவில்லை. ரிக்க்ஷா சப்தம் கேட்ட பிரமையில் நான் ஓடியது சற்று அதிகம்.

இல்லை.. ஊருக்குப் போயிருக்கலாம். அடுத்த மாதம் சேர்ந்து எடுக்கலாம். பிற அலுவல்கள் என்னை சுவீகரிக்க கிழவரின் நினைவு பின்னுக்குப் போனது. இரண்டு மாதங்களாக வராதது மனத்தில் உறுத்தியது.

எடுத்து வைத்த ஒற்றை ரூபாய் நாணய பாக்கெட் பத்திரமாய் இருந்தது. 'வேண்டும்' என்று கேட்ட சகாவிடம் மறுத்து விட்டேன்.கிழவர் நாளையே வரக்கூடும். தர இயலாமல் சங்கடப்பட முடியாது.அவர்தான் வரவே இல்லை.

என்னால் பொறுக்க முடியவில்லை. லெட்ஜரில் அட்ரெஸ் பார்த்து, வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். தெரு முனையில் திரும்பிவிட்டேன்.

கோடியில் வடம் போக்கித் தெருவுக்குள் கடைசி வீடு. மதிலை ஒட்டிய வீடு.

"வயசானவன்னு இரக்கப்பட்டுத்தான் நீ என்னை அட்டெண்ட் பண்றிய?" என்றார் ஒரு தரம்.

"சேச்சே. எனக்கு எல்லாரும் காமன்... வயசானது.. லேடீஸ்... முடியாதது... இப்படி பேதம் இல்லே... ஈக்வல் ரைட்ஸ் ... ஃபர்ஸ்ட் கம்... ஃ பர்ஸ்ட் ஸர்வ்டு... பாலிசி... நீங்க டாண்ணு ஃபர்ஸ்ட் கஸ்டமரா வரீங்க ஒவ்வொரு தரமும்... ஸோ... முதல் கவனம்...!'

"அதானே..."

கிழவர். முகத்தில் தெரிந்த நிம்மதி... ஞாபகம் வந்தது.

அவர் வீட்டுக்குள் போகவில்லை. திரும்பி விட்டேன். அதுவாக விபரம் தெரிகிறவரை நான் வாசலில் ரிக்க்ஷா எதிர்பார்த்தே காத்திருக்கப் போகிறேன்.

(கல்கி)

September 15, 2010

ராதே ஷ்யாம்


கோகுலாஷ்டமி கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணன் பிறந்த நாள்.

ராதாஷ்டமி தெரியுமா? இன்று தான் ராதையின் பிறந்த நாள். கண்ணன் பிறந்த பதினைந்தாம் நாள் வரும் அஷ்டமி ராதாஷ்டமி.

பிரேமைக்கு மறு உருவமே ராதைதான். அவளுக்கு கண்ணன் கூட வேண்டாம். அவன் மீதான காதல் போதும்.

பிருந்தாவனத்தை விட்டு கண்ணன் வெளியேறிப் போனதும் மீண்டும் ராதையைப் பார்த்ததாகத் தெரியவில்லை. இருவரும் சந்திக்கவில்லை மறுபடி.

ஆனால் ராதைக்கு எல்லாமே கண்ணன்தான். அவன் மீதான நேசம் போதும்.

பிருந்தாவன் அருமையான ஊர். பார்க்கத்திகட்டாத கோவில்களும் மக்களும்.

எதற்கெடுத்தாலும் ராதே ராதே தான். 'நகர்ந்து கொள் ' என்று சொல்லக் கூட 'ராதே ராதே ' தான்.

மனிதருக்குள் அன்பு .. எதுவும் எதிர்பார்க்காத அன்பு பிரவகித்து விட்டால்.. ராதையைப் போல நேசிக்க தெரிந்து விட்டால்.. இன்றைய பல சிக்கல்களுக்கு சுலபமாய் தீர்வு கிடைத்து விடும்.

நாம் பல நல்ல விஷயங்களை தொலைத்து விட்டு சடங்குகளை மட்டும் வைத்துக் கொண்டதால் தான் இன்று கேலியும் விமர்சனங்களும் வரும்போது பதில் தரத் தெரியாமல் அவநம்பிக்கையில் ஆட்பட்டு விடுகிறோம்.

பிரியம் .. அதுவே ராதை தத்துவம்!

ராதே ஷ்யாம் !

September 11, 2010

காற்று

என் முதல் மூச்சுக் காற்று

எப்போது துவங்கியது?

கர்ப்பத்தில் சுவாசித்த நாட்கள்...

வெளிப்பட்டு வெளியுலகின்

பிரபஞ்சக் காற்றின் ஸ்பரிசம்...

வாழ்வின் புரிபடாத

பல ரகசியங்களில்மூச்சுக் காற்றும்..

தெரியாமலே சுவாசிக்கிற என்னை

தெரியாமலே நேசிக்கிற ஜீவனாய்

என் மூச்சுக் காற்று...

எந்த கனமான வஸ்துவையும்

நகர்த்துமுன்

காற்றைப் பற்றியே யோசிக்கிறேன்.

'பார்த்து.. பார்த்து' என்று

மற்றவர்கள் என்னைப் பற்றியே

கவலை கொள்கிறார்கள்.

தவழும் குழந்தையாய்

என்னைச் சுற்றும் காற்று

எந்தப் பக்கம் வருகிறது

என்றே புரிபடாமல்

எல்லாப் பக்கமும் அதன் சிணுங்கல்.

'காற்று என் குழந்தையா'எனில்

அதன் முக அடையாளம் சொல்

என்று கேட்பவர்கள்

ஒரே ஒரு நிமிஷம்

அதன் குரலைக் கேட்கட்டும்.

வசப் படுகிறார்களா.. இல்லையா

என்று பார்த்து விடலாம்!

September 03, 2010

கத்திக் கப்பல்

கடல் மாதிரி வீடு. மூன்று கட்டு. மூன்றாம் கட்டில் நாங்கள் இருந்தால் யாருக்கும் தெரியாது. வீட்டின் நடுவே வானம் பார்க்க வசதியாய் முற்றம். இரும்புக் கம்பியால் சதுரம் சதுரமாய் அடைத்திருந்தார்கள். எத்தனை அறைகள் என்று விரல் விட வேண்டும். கொல்லைப்பக்கம் பசு மாடுகளின் மணியோசை.
மாட்டுப் பொங்கல் வந்து விட்டாலே குஷிதான். கொம்புகளுக்கு காலையிலிருந்து வர்ணம் பூசிக் கொண்டிருப்பார்கள். பொறுமையாய்க் காட்டிக் கொண்டிருக்கும். அதன் கொம்புகளில் புதுத் துண்டில் பணம் வைத்துக் கட்டி விரட்டி விடுவார்கள். பின்னாலேயே 'ஹோ'வென்று கத்திக் கொண்டு ஓடுவோம்.
தாமரைக் குளத்தில்தான் தினசரிக் குளியல். 'கொடி சுத்திக்கும்டா.. பார்த்து' என்று எச்சரிக்கப்பட்டு அனுப்பப்படுவோம். இதனாலேயே தாமரைக் குளத்தில் குளிக்க அத்தனை சுதந்திரம் இல்லை. கோவில் வாசல் பக்கம் ஒரு குளம். அங்கே மாடுகள்தான் வழக்கமாய் குளிக்கும். அதன்மேல் மொய்க்கும் உண்ணிகள், பெரிய ஈக்கள் குளிக்கப் போகும் எங்களையும் பிடுங்கும். அப்போது கற்றுக் கொண்டதுதான் உள் நீச்சல். குளத்தின் இக்கரையிலிருந்து அக்கரை வரை நீச்சல் அடித்து சாதனை புரிந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாய் இருக்கிறது.
ஏறக்குறைய ஜில்லிட்டு வீடு திரும்பும்போது பசி அதன் உச்சத்தில் இருக்கும். முதல் நாள் கோவிலில் கிடைத்த புளியோதரை பிரசாதமும் கெட்டித் தயிரும் தாமரை இலையில் வைத்துத் தருவார்கள். இப்போது நினைத்தாலும் அதன் சுவை நாக்கில் நிற்கிறது. மழை நீர் தேங்கியதாகவோ, கொசுக்கள் பிடுங்கியதாகவோ சரித்திரமே இல்லை. கல்யாணமோ, துக்கமோ ஊரே ஒன்று கூடி விடும்.
அலமுவின் சிநேகம் கிடைத்தது அந்த மாதிரி ஒரு சமயத்தில்தான். கோவில் தீட்சதரின் மகன் கல்யாணம். தாலி கட்டி முடிந்த அரை மணியில் அதுவரை உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி இறுதி மூச்சை விட்டாள்.'அலமு.. இனிமேல உனக்கு யார் இருக்கா' என்கிற அலறல் கேட்டது. ஒரு வாரம் முன்பே கல்யாணத்திற்கு வந்திருந்த பாட்டியும், பேத்தியும் அவ்வளவாய் எங்கள் கவனத்தை அதுவரை ஈர்க்கவில்லை. இப்போது அலறல் கேட்டு அலமுவை முதல் முறையாக உற்றுப் பார்த்தோம்.
ரெட்டை ஜடையில் ஒரு தேவதை என்று வயசான பின் சொல்லத் தோன்றியது. அப்போது ஒரு ஈர்ப்பு இருந்தது மட்டும் நிஜம். 'நீங்கள்ளாம் வரக் கூடாது' என்று மிரட்டிவிட்டு பா(ட்)டியைக் கொண்டு போனார்கள். குளத்தில் குளிக்க அன்று கூடுதலாய் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சுடச் சுட குழம்பு சாதம், கூட்டு சாப்பிடக் கொடுத்தார்கள்.
பாட்டி செத்தது கல்யாண சாவு என்று சொல்லி தினசரி ஒரு ஸ்வீட் கிடைத்தது. லட்டு, அப்பம், அதிரசம், மைசூர் பாகு.. எங்கள் கெட்ட புத்தியில் ஊரில் உள்ள மற்ற பாட்டிகள் எல்லாம் எப்ப போவார்கள் என்று சித்ரகுப்தனாய் மாறி ஏடாகூடமாய் யோசிக்க ஆரம்பித்தோம்.
இத்தனை நேரம் 'நாங்கள்' என்றே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த நாங்கள் யார், யார் என்று உங்களுக்குச் சொல்லவில்லை. நான், கிச்சா என்கிற கிருஷ்ணசாமி, பட்டா என்கிற பார்த்தசாரதி, கோவாலு என்கிற கோபால்.
பத்து நாட்கள் முடிகிறவரை ஊருக்குப் போக வேண்டாம் என்று அலமுவை நிறுத்திவிட்டாரகள். கோவிலுக்கு பெரும்பகுதி போக முடியாமல் தீட்டு. சுற்றி வளைத்து எல்லோரும் சொந்தம் என்கிற லாஜிக்கில்.
தீட்சதர் மட்டும் துக்கத்துடன் போனார். மற்ற நாட்களில் ஒத்தாசைக்கு ஆட்கள் இருப்பார்கள். இப்போது அவரே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. கோவிலை பத்து நாட்கள் மூடி விடலாமா என்கிற அபத்தமான யோசனை ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது.
எங்கள் நால்வரில் நான் தான் வயதில் சின்னவன். மற்ற மூவரும் ஏறக் குறைய ஒரே வயது. அதனால் எந்த வேலைக்கும் என்னைத் தான் ஏவி விடுவார்கள் முன்பு. இப்போது சீன் மாறி விட்டது.
'டேய் அலமுக்குக் காபி கொடுத்துட்டு வாடா..' என்று குரல் கேட்டால் எனக்கு முன் மற்ற மூவரும் ஓடிப் போய் நிற்பார்கள். 'அலமு தனியா குளிக்க போக வேண்டாம்.. நீ போ கூட' ஒருத்தன் சோப்.. அடுத்தவன் டவல்.. என்று பூனைப் படை ரெடியாகி விடும். வெளியில் வர முடியாத அலமுவின் பொழுதுபோக்கிற்கு கேரம் விளையாட நாங்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்தோம்.
கிச்சா ஃபாலோ வேண்டுமென்றெ போடாமல் விட்டு விடுவான். இந்த யுக்தி புரியாத கோவாலு (ஆட்டமென்று வந்து விட்டால் கொலை வெறியுடன் இருப்பான்) ஃபாலோ காயினைப் போட்டு விட கிச்சா முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு 'ஏண்டா தப்பாட்டம் ஆடற' என்று கேட்பான். கோவாலு சண்டை போட்டுக் கொண்டு வெளி நடப்பு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கிச்சாவின் மனசைப் படிக்க முடிந்ததால் சில நேரங்களில் நானே கோவாலுவின் வெறியைத் தூண்டி விட்டிருக்கிறேன். அலமுவுக்கோ எங்கள் சண்டை அவளின் சுவாரசியத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தது. கோவாலு எழுந்து போனதும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு 'என்னாலதானே உங்களுக்குள்ள சண்டை' என்று கேட்பாள்.
'நீ பேசாம இரு. அவன் போனா என்ன.. நாங்க இருக்கோம்ல'
கிச்சா உணர்ச்சி பூர்வமாய் குமுறுவான். பட்டாவின் கண்கள் சட்டென்று கலங்கி விடும். எனக்கோ மையமாய் முகம். அதிலிருந்து யாருக்கும் எதுவும் புரியாது.
அலமுவின் கண்கள் சில சமயம் பாட்டியை நினைத்து கலங்கும். அல்லது அவள் எதிர்காலம் நினைத்தோ? கிச்சா தன் சேமிப்பு மூன்றரை ரூபாயைக் கண்ணில் காட்டாமல் (வீட்டில் சுட்டது பிளஸ் கடைகண்ணிகளுக்குப் போன கூலி) 'நான் உன்னைக் காப்பாத்தறேன்' என்பான்.
தனிமையில் அவனிடம் கேட்டேன்.
'என் ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்..ஹெல்ப் பண்றியா '
கிச்சா எப்போதும் இல்லையென்று சொன்னதில்லை.
'பார்க்கலாம்டா'
அப்பாவே ஸ்கூல் ஃபீஸைக் கட்டி விடுவதால் கிச்சாவை நான் சோதிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
அலமுவைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த நாங்கள் இது வெகு காலம் நீடிக்காது என்பதை மறந்து விட்டிருந்தோம்.
கிரேக்கியம் முடிந்து அலமு புதுப் பாவாடை தாவணியில் ஜொலித்தபோது கோவிலுக்குள் எல்லோரும் போனோம். தீட்சதருக்கு சந்தோஷத்தில் அழுகையே வந்து விட்டது. இனி அவருக்கு ஹெல்ப்பர் வந்து விடும்.
பிராகாரத்தில் புறாக்களின் ஹுக்கும்.. ஹுக்கும்.. வவ்வால் வாசனை (!) மடப் பள்ளி நெடி..
அலமு ஊஞ்சல் மண்டபத்தில் உட்கார்ந்தாள். பவழமல்லி செடி அருகே பட்டா. கோவாலு சமீபத்திய கோபத்தில் சற்று தள்ளி நின்று வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தான். கிச்சா கீழ்ப்படியில் அலமுவின் முகம் பார்த்து அமர்ந்து அடுத்த உத்திரவு என்ன என்கிற பாவனையில் இருந்தான்.
'நாளைக்கு ஊருக்குப் போகணுமாம்'
அலமு சொல்லும்போதே பட்டா அழுது விட்டான்.கிச்சா படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு (மூன்றாம் வகுப்பில் இரண்டாம் வருடம்) அலமுவைக் காப்பாற்ற என்னென்ன யுக்திகளைக் கையாளலாம் என்று மூக்கை விடைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.
'உங்க சித்தப்பா வீட்டுக்குத்தானே போகப் போறே' என்றேன் அப்பாவியாய்.
கிச்சா படக்கென்று எழுந்து வந்தான்.
'அந்த வீட்டுக்கு எப்படிப் போக முடியும்'
'ஏன்.. பஸ்ஸுலதான்'
'உளராதே.. சொந்த அம்மாவை (அலமுவின் செத்துப்போன பாட்டி) வச்சுக்காத மனுசன் அலமுவை வச்சுக் காப்பாத்துவார்னு என்ன நிச்சயம்?'
பட்டா இதை உடனே ஆமோதித்தான். கோவாலு கூட இணக்கமாய் முகம் வைத்துக் கொண்டான்.
'நாம என்ன பண்ண முடியும்' என்றேன் குழப்பமாய்.
'எங்கம்மா கிட்ட பேசி இங்கேயே அவளை இருக்கச் சொல்லிட்டா'
'நீதான் இப்ப உளர்றே.. சான்ஸே இல்ல'
கிச்சா உணர்வின் உச்சத்தில் இருந்தான்.
'அப்ப நானும் அவகூட போறேன்'
'சித்தப்பா அலமுவையே வச்சுக்க மாட்டார். உன்னை எப்படி வச்சுப்பார்'
கிச்சா என் பார்வையை அந்த மங்கிய ஒளியிலும் படித்து விட்டான்.
அலமு எங்கள் சண்டையைப் பற்றி கவனம் இல்லாமல் கையில் இருந்த காகிதத்தை மடித்து ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
அலமுவுக்கு கை வேலைகளில் ஆர்வம். இந்த பத்து நாட்களில் கவனித்திருக்கிறேன். கையில் எது கிடைத்தாலும் அதை ஏதோ ஒரு அழகுப் பொருளாக உரு மாற்றி விடுவாள். 'தூக்கிப் போடாதே கொண்டா' என்பதுதான் அவள் தாரக மந்திரம்.
தென்னை ஓலையில் அவள் செய்த கிளியை நான் வீட்டுக் கொண்டு போனபோது அம்மா உள்ளே அனுமதிக்கவில்லை.
'சீச்சீ.. கருமாந்திரம்.. இதை ஏன் உள்ளே கொண்டு வரே'
'அம்மா.. கிளிம்மா'
'இது அதுக்காகக் கொண்டு வந்த ஓலைடா'
பார்வைகள் எப்படி மாறுகின்றன!
'என்னடா பண்றீங்க.. வாங்கடா..'
அதட்டல் கேட்டது.அலமு எழுந்தாள். கடைசி நிமிடங்கள் இந்த ஊரில். இனி திரும்ப வருவாளோ.. மாட்டாளோ..
மூலஸ்தான கலசத்தைப் பார்த்தாள். மதிலை.. ஊஞ்சல் மண்டபத்தை.. வாகனங்களை.. கடைசியாய் எங்களை.
என் கையில் உரு மாற்றியிருந்த காகிதத்தைத் திணித்தாள்.
கத்திக் கப்பல்!
அவளிடம் பழக ஆரம்பித்தபோது கேட்டது. பேச்சு வாக்கில் சொன்னாள். கத்திக் கப்பல் என்று. கப்பல் தெரியும். அது என்ன கத்திக் கப்பல்?அடிப்பாகத்தில் ஒரு நீட்டல். கீறிக் கொண்டு போகுமாம். சண்டைக் கப்பல். 'என் பிரஸண்ட்' என்றாள் லேசாய் சிரித்துக் கொண்டு.
கோவாலு அருகில் வந்து எட்டிப் பார்த்தான். பிறகு என்னிடம் கை நீட்டினான். வாங்கிப் பார்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விட்டான்.
'அலமு.'
அலமு மட்டுமல்ல.. நாங்களுமே திடுக்கிட்டு திரும்பினோம்.
கோவாலு!
'அலமு.. நீ சாதாரணப் பொண்ணு இல்ல.. உங்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. ஒரு திறமை.. உங்க சித்தப்பா வீட்டுல நீ ஒரு சுமை இல்ல.. சொத்துன்னு புரிய வைக்கிற மாதிரி நடந்துக்க. அப்புறம் அவங்க உன்னைக் கொண்டாடுவாங்க.. ஒரு பொண்ணு தனியா இருக்கறத விட சொந்தங்களோட இருந்தாத்தான் நல்லது.. நீ ரொம்ப நல்லா வருவ'
ஆவேசம் வந்த மாதிரி பேசினான். கிச்சா ஆடிப் போய் விட்டான். பட்டாவுக்குக் கண்கள் கலங்கவில்லை. கோவில் பின்னணியில் கோவாலுவின் குரல்!
அலமு கோவாலுவைக் கட்டிக் கொண்டபோது அந்தப் பரிசு அவனுக்குத் தகும் என்று நாங்கள் அமைதி காத்தோம்.
கிராமத்திலிருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் நடந்து போய் பஸ் ஏற்றி விட்டுத் திரும்பினோம்.
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு அலமுவைப் பார்த்தபோது டவுனில் அழகுவினைப் பொருட்கள் மற்றும் ட்ரெஸ் மெடீரியல்ஸ் ஓனராக (அலமுஸ்) சந்தித்த போது கோவாலு (சரியாகப் படிக்காமல் உதவி தீட்சதராக கோவில் பணி)வின் கணிப்பு வீண் போகவில்லை என்பது புரிந்தது

(கல்கி - 05.09.2010 )

September 02, 2010

ஸ்ரீ சந்திக்கு காசு

ஸ்ரீ சந்திக்கு காசு..
கோகுலாஷ்டமி சமயத்தில் இப்படி பல குரல்கள் வாசலில் கேட்கும்.
சின்ன வயசில் அதன்அர்த்தம் புரியவில்லை.
வீட்டில் பெரியவர்களும் அதையே திருப்பி சொல்லி காசு கொடுத்து அனுப்புவார்கள்.
கண்ணன் பிறந்த நாளே 'ஸ்ரீ ஜெயந்தி '
ஸ்ரீ ஜெயந்திக்கு காசு தான் 'ஸ்ரீ சந்திக்கு காசு' ஆகிவிட்டது..
இன்றும் ஸ்ரீரங்கம் தெருக்களில் ஏதோ ஒரு டப்பாவை அடித்து கொண்டு தெருவில் போவார்கள். அவரவர் கற்பனை.. சக்திக்கு ஏற்ப அட்டை டப்பாவில் கிருஷ்ணர் படம்.. அல்லது நடைவண்டியில் கிருஷ்ணர் பொம்மை.. சிலர் பல்லக்கு போல சுமந்து ..
உற்சாகம்.. குதூகலம் .. மகிழ்ச்சி ..
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் இத்தனை வருடங்கள் ஆனாலும் அதன் தாக்கம் கொஞ்சங்கூட குறையவில்லை. தொலைக் காட்சி பாதிப்பிலிருந்து விடுபட்டு தெருவில் மனிதர்கள்.. அவர்களின் பரவசம்.. கலை.. ஆட்டம் பாட்டம்..
தமிழ்ப் பாசுரங்கள்..

பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய். (பெரியாழ்வார்)

என்ன ஒரு அழகான தமிழ்!