February 26, 2012

கூட்டுக்குள் ஒரு வெண்புறா

சிவராமன் சாரை எனக்குப் பிடித்துப் போனதற்கு இரண்டே காரணங்கள்தான் உண்டு.

அவர் பக்கத்து வகுப்புதான் எடுத்தார். அவர் தங்கை பூமா.

எங்கள் வகுப்பின் இரைச்சல் அவரைச் சங்கடப்படுத்த, எட்டிப் பார்த்ததும் மொத்த சத்தமும் அடங்கி, ஒரு பூனை மட்டும் கத்தியது.

"ஷட்டப்" என்றார் மூக்கு நுனியில் சிவப்புடன். "யாருடா கிளாஸ் லீடர்?"

நான் எழுந்து நின்றேன். இயற்கை என்னை வஞ்சனையின்றிப் படைத்திருந்தது. வகுப்பாசிரியன் என்று சொன்னால் கூட நம்பத்தகுந்த உடம்பு. இத்தனைக்கும் என் பெற்றோர் 'ஓம்சக்தி' ரகம்!

"உன்னால் கூடவா வகுப்பில் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை?" என்கிற சந்தேகப் பார்வையை வீசினார்.

விதி எனக்குள் சதி செய்திருந்தது. மகத்தான உருவம் தந்து விட்டு மனசை மிகவும் இளகச் செய்திருந்தது. எனக்குக் குரல் கூட எழும்பாது. வகுப்பில் ஒரு முறை ஆசிரியர் ஓய்வெடுத்து, ஒரு பார்வை படிக்கச் சொன்னபோது 'பஞ்சு' என்ற உச்சரிப்பை அத்தனை லேசாக நான் உச்சரித்தும் "அழுத்திச் சொல்லுடா" என்ற மிரட்டலுக்கு ஆளானதும்தான் என் குணாதிசயத்திற்குச் சான்று.

ஒரு சின்ன சத்தம் கேட்டாலும்...என்னை பொறுப்பாக்கி முறைத்துப் போனார்.

பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள். எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத வரை.

ஹெட் மாஸ்டரே வந்து விட்டார். உ டன் சிவராமன் ஸாரும்.

"என்ன சிவராமன்! உங்க பக்கத்து செக்க்ஷன்ல சந்தைக் கடை மாதிரி சத்தம்?"

வராத கணக்கு வாத்தியாருக்கு எந்த விமர்சனமும் இல்லை.

"ஸாரி... ஸாரி..."

"டிசிப்ளின்தான் ஃபர்ஸ்ட் படிப்பு பிறகுதான்." ஹெட் மாஸ்டர் போய் விட்டார். சிவராமன் பார்வை என்னைத் தேடியது. தலை கவிந்திருந்தும் அக்னி என்னை சுட்டது.

"நீட்டு கையை"

ஸ்கேல் ஒரே அடியில் முறிந்தது. "வெளியே போய் முட்டி போடு"

என்னை வெளி நடப்புச் செய்ய வைத்ததில் குளிர்ந்து மற்ற மாணவர்கள் அந்த வினாடியில் திருந்திவிட்டனர்.

பகல் உணவு இடைவேளை வரை அதே நிலையில் அமர்ந்திருந்தேன். எனக்குள் கோபம்கூட ஸ்தம்பித்துப் போயிருந்தது.

சிவராமன் அவர் வகுப்பு முடிந்து ஆசிரியர்கள் அறைக்குப் போய்விட்டார். பின்னர் ஒரு தூதன் வந்து எனக்கு விடுதலைப் பத்திரம் தந்தான். எழுந்து பையை மாட்டிக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினேன்.

இந்த நேரம் நான் வீடு திரும்பும் நிலையில் இல்லை. வீட்டாரின் அட்டவணைப்படி விதி மீறல்.

ஏன் சிவராமன் ஸாரின் வீட்டுப் பக்கம் போனேன் என்பதும் புரியவில்லை. எனக்குள் ஒரு குரூரம் வழி நடத்திக் கொண்டிருந்தது. அதன் கட்டளைப்படி இயக்கம்.

சிவராமன் ஸாரின் வயதான தாயார் இன்னொரு மகனுடன் வசிக்க, மணம் செய்து கொள்ளாத இவர் சமையல் பொறுப்பு நிர்வகிக்க தங்கையுடன் வந்திருப்பதாய்த் தகவல்கள்.

"தங்கைக்குக் கல்யாணம் பண்ணலையா?"

"தெரியலை..."

கதவு மூடியிருந்தது என்ன செய்யலாம் என்று அபத்தமாய் நிறைய விவாதித்து முடிவில் கதவைத் தட்டினேன்.

"யாரு?"

"நான்தான்"

"நான்தானா?"

கேட்டவாறே கதவு திறந்தது. மனுஷி தெரியவில்லை. "ஸ்கூல்லேர்ந்து வரேன்."

கதவின் இடுக்குவழி என்னை அலசியிருக்க வேண்டும். பிற மாணவர்கள் அரை டவுசரில் வளம் வர, என் ஆகித வளர்ச்சி பேண்ட் ஷர்ட்டில் பொருந்தியிருந்தது. குரல் உடைந்த பருவம். பூனை மீசை, சற்றும் முடி குறையாத சலூன் விஜயம்.

"என்ன?" குரலில் லேசான அதட்டல்.

"வெத்திலை தீர்ந்து போச்சாம்... வேணுமாம்"

சில நேரங்களில்தான் மூளைப் பிரதேசத்தின் அரிய ஞாபக சக்தியை உணர முடியும். பழக்கத்திற்கு அடிமையான சிவராமன் சார் வாழ்க!

"உள்ளே வா"

சந்தேகக் கண் குளிர்ந்து க்தவு முழுவதுமாய்த் திறந்து கொண்டது. என் அந்த நிமிஷத் துக்கம், வெறி, பழிவாங்கும் உணர்வு எல்லாம் சட்டென்று வடிந்து எதிரில் நிறைவளைத் திகைப்புடன் பார்த்தேன்.

கன்னங்களில், கழுத்தில், இடுப்பில், பாதங்களில்... இப்படி பார்வைக்குப் புலப்பட்ட பிரதேசங்களில் எல்லாம் வெண்திட்டுகள். அடிவயிற்றில் என்னவோ செய்தது. நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. இதனால்தான் சார் வந்து ஆறேழு மாதங்கள் ஆகியும் சகோதரியை கடைத்தொரு, கோயில் எதிலும் பார்க்க முடியவில்லை? சுய கட்டுப்பாடா, விமர்சனப் பார்வை தவிர்க்கும் நோக்கமா? கூட்டுக்குள் வெண்புறா!

"இந்தா..." பிரமித்து நின்றவனிடம் வெற்றிலைப் பொட்டலத்தை நீட்டினாள். சிரமப்பட்டு அவளைப் பார்த்தேன். நிறைய மைனஸ்களைத் தந்த இயற்கை அவள் பார்வையில் மட்டும் குளுமையை வாரிக்கொட்டியிருந்து. "

"அது..." என் மோவாயைத் தொட்டு நிமிர்த்தினாள்.

தலை கவிழ்ந்தேன். இப்போதுதான் அவமானத்தை உணர்ந்தேன். மண்டியிட்டு வகுப்புக்கு வெளியில் நின்றபோது உணராத துக்கம்.

"என்ன நடந்தது?"

ஏன் சொன்னேன் என்று புரியவில்லை. ஆனால் ஒப்பித்தேன்.

"ப்ச்... பாவம்... ஹெட்மாஸ்டர் முன்னால பதில் சொல்ற மாதிரி ஆனதும்... உன்மேல் கோபத்தைக் காட்டிட்டாராக்கும்?"

"வரேன்..."

"இரு.. எதாவது சாப்பிடத்தரேன்"

வெளியேறி வந்து விட்டேன். வீட்டிற்கும் திரும்பி விட்டேன். அடுத்த வீட்டுக்குப் பேசப் போயிருந்த அம்மா திரும்பியபோது என் நேரம் வந்து விட்டிருந்தது.

மறுநாள் எந்தத் துணிச்சலில் பள்ளி வாசலை மிதித்தேன் என்றே புரியவில்லை.

சிவராமன் ஸாரின் பார்வையில் அகப்படாமல் அலைந்தேன். அல்லது அவர் என்னைத் தேடவில்லை.

பகல் இடைவேளைக்குப் பிறகு தமிழ் வகுப்பில் ஆழ்ந்திருந்தபோது சிவராமன் சார் குரல் கேட்டது.

"கணேசன்! ஓர் உதவி."

தமிழாசிரியர் கணேசன் நிமிர்ந்தார். "என்ன சார்?"

"அவசரமா வீடு வரை போயிட்டு வரணும். இவனை அனுப்ப முடியுமா?" என்னைக் காட்டினார்.

"போடா..."

புரிபடாமல் நான் சிவராமன் ஸாரை நெருங்கினேன்.

"வீட்டுக்குப் போய் வெத்திலை எடுத்திக்கிட்டு வர்றியா? மறந்து போச்சு..."

ஆழம் பார்க்கிறாரா? குழப்பமாய்ப் பார்த்தேன்.

"போ... சீக்கிரம் வா..." என்றார் இயல்பான குரலில் .

வீட்டில் பூமா சிரிப்புடன் என்னை வரவேற்றாள்.

"பயப் படாதே... ஸார் இனிமேல் உன்னை அனாவசியமா மிரட்ட மாட்டார்..."

வெற்றிலைப் போட்டலத்தை நீட்டினாள். என் தலையை வருடிக் கொடுத்தாள்.

சிவராமன் ஸார் ஆசிரியர்கள் அறையில் தனியே இருந்தார். வெற்றிலைப் போட்டலத்தை வாங்கிக் கொண்டார்.

"வரேன் ஸார்"

"போ, நல்லாப் படி... ஏதாச்சும் புரியலைன்னா என்னைக் கேளு. பீஸ் வேணாம்... அரை மணி, ஒரு மணி கூட சொல்லித்தரேன்..."

தலையாட்டினேன். 'சரி' என்பது போல்.

"வீட்டுக்கு வா..." என்றார் மெல்ல...

வேலு படிப்பை நிறுத்தி அப்பாவின் மளிகைக் கடையில் பொறுப்பெற்று நிற்கிறான். என் ஒரே நண்பன். எவரிடமாவது சமீப கால நிகழ்வுகளைப் புதிய வேண்டியிருந்தது. போனேன்.

"போடா... முட்டாள்... இது கூடவா புரியவில்லை?"

கை நிறைய முந்திரிப் பருப்பு அள்ளித் தந்து சின்ன பெஞ்சில் அமரச் சொன்னான். கடையில் அவன் மட்டும். அப்பா சரக்கு எடுக்க காந்தி மார்க்கெட் போயிருந்தார்.

"அவர் தங்கையை எவனும் கட்டமாட்டான். அவளும் பாவம். நீயும் வளர்ந்து பெரிய மனுசனாட்டாம் இருக்கே... வந்து போனா அவ பிரியத்தைக் காட்ட வசதின்னு...'

அவன் படிப்பு நின்று நின்று போனதன் காரணம் இதுதான். மூளையில் விபரீதக் கற்பனைகள். பாடப் புத்தகம் பிரிக்க, அதில் பிரசுரத்துக்கு ஒவ்வாத வரிகளின் பவனியால் பள்ளியை விட்டு விலகியவன்.

"ச்சீ" என்று துப்பினேன். இரண்டொரு முந்திரி தெரித்தது.

"சொன்னா நம்ப மாட்டே.. பின்னால நீயே வருவே..."

எழுந்து வந்து விட்டேன்.

ஒரு பாடத்தில் தோல்வியுற்று என் படிப்பும் அந்த வருடம் நின்று போனது. சிவராமன் ஸாரும் வேறு ஊருக்கு மாற்றல் கேட்டுப் போய் விட்டார். கடைசி வரை அவரிடம் டியூஷன் கற்க நான் போகவில்லை.

பூமாவை நான் சந்தித்தது மூன்றே முறைதான். மூன்றாவது முறை அவர்கள் ஊருக்குக் கிளம்பிய தினம்.

சிவராமன் வெளியே போயிருந்தார்.

குளுமையான பார்வை. என்னால் அந்த நிமிஷம் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. கண்களில் என்னையும் மீறி வெளிப்படுத்திய ரசனை.

பூமா என் கைகளைப் பற்றிக் கொண்டாள். "எல்லாரும்... என்னோட உடம்பைப் பார்த்து அருவருத்து சுணங்கினப்ப... நீதான்... என் கண்ணைப் பார்த்துப் பேசினவன்... என்னால உன்னை மறக்க முடியாதுடா..."

சட்டென்று என் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டாள். வெகு நாட்களுக்குப் பின்னும் நினைத்தால் அதன் ஜில்லிப்பை உணர முடிந்தது என்னால்.(அமுதசுரபி பிரசுரம்)

February 20, 2012

போபால் - ஓம்காரேஷ்வர்

12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்று - நர்மதை நதியின் மீது.. ஓம்காரேஷ்வர் ! (தென் இந்தியாவில் ஒரே ஒரு இடம் ராமேஸ்வரம்)

மேலே இருந்து ஏரியல் வியூவில் பார்த்தால் ஓம் போலத் தெரியுமாம்.

போபாலில் இருந்த 300 கிமீ பயணம். காலை ஏழு மணிக்குக் கிளம்பிப் போனோம்.

நடுவில் பாதையைத் தவறவிட்டு 30 கிமீ எக்ஸ்ட்ரா பயணம்.

டிரைவர் அந்த ஊர்க்காரர். வேறெப்படி இருக்க முடியும்.. டவேராவில் ஏழு பேர்.

எங்களில் நன்றாய் ஹிந்தி தெரிந்த ஒருத்தரை டிரைவர் பக்கத்தில் அமர வைத்து மற்றவர்கள் பின்னால்.

டிரைவர் கொண்டு வந்த கேசட்டில் திரும்பத் திரும்ப ஒரே பாடல். நாலு வரி பாடிவிட்டு ஸ்டாண்டர்டாய் ஒரே பல்லவி.

அதே பாட்டை பயணம் முழுக்கக் கேட்டு காது புளித்தே போய் விட்டது.

அதுவும் பின் இருக்கையில் ஸ்பீக்கர் அலற.. வால்யூம் குறைக்கச் சொன்னால் டிரைவருக்குக் கோபம். அவரது பேவரைட் பாட்டு போல!

காதலியிடம் காதலைச் சொன்ன காதலனிடம் அவள் வைத்த டிமாண்ட். ‘உன் அம்மாவின் இதயத்தைக் கொண்டு வா. அப்பதான் உன் லவ்வை ஏத்துப்பேன்’

அவன் ஓடிப் போய் அம்மாவிடம் சொல்கிறான்..

அம்மா தன் இதயத்தை அறுத்துத் தருகிறாள்.. அதை எடுத்துக் கொண்டு ஓடி வரும் போது தடுக்கி விழ.. இதயம் தள்ளிப் போய் விழுகிறது.. அதிலிருந்து அம்மாவின் குரல்..

‘டேய் கண்ணா.. பார்த்துப் போடா.. அடி பட்டுருச்சா’

மா கா தில் .. மா கா தில் .. மா கா தில் .. என்று ஒவ்வொரு பாரா
முடியும்போதும் கோஷ்டி கானம்.

இந்தப் பாட்டை அவரைத் தவிர வேறு யாராலும் ரசிக்க முடியாமல் போனதுதான் பிரச்னை. அவர் இஷ்டத்துக்கு வண்டியை ஓட்டினார்.

’டேய் .. அவர்ட்ட சொல்லு.. நைட் டிரைய்னைப் பிடிக்கணும்னு.. ‘

’ராத்.. காடி.. பக்கட்..’என்று தெரிந்த உடைசல் ஹிந்தியில் சொல்லப் போக.. மா கா தில் இன்னும் அதிக சப்தமாகி.. வண்டி 60 ஸ்பீடுக்கு வந்து விட்டது 100 லிருந்து.

300 கிமீ பயண அலுப்பு நிமிஷத்தில் காணாமல் போனது. நர்மதையின் எழிலில்.

பாலத்தின் மீது நின்று கீழே ஓடும் நதியைப் பார்த்ததும்.. ஆஹா.அங்கே போய்ச் சேர்ந்த போது மணி இரண்டு. இரவு 9.30க்கு ரெயில். ஒரு பக்கம் படபடப்பு.. இன்னொரு பக்கம் அந்த இடத்தின் ஈர்ப்பு.
மேலே இருப்பது கோவிலுக்குள்ளிருந்து எடுத்த போட்டோ இது. படித்துறை.

கீழே இருப்பது நதியின் இன்னொரு பக்க போட்டோ.ராஜா மாந்தாதாவின் இருக்கை என்று ஒரு கண்ணாடி அறை.

எனக்கு ஒரு ருத்ராட்சம் கிடைத்தது. உள்ளிருந்த அர்ச்சகர் கொடுத்தார். இத்தனைக்கும் கோவில் போல அல்லாமல் கடைகள்.. வியாபார பரபரப்பு.. என்று ஒரே ரகளைதான்.

அதையும் மீறி என்னவோ ஒரு அதிர்வை உணர்ந்தேன்.

ஓம்காரேஷ்வர் போனது கடைசி நாள். மறுநாள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் பயணம். 55 கரப்புகளுக்கு மத்தியில்.. ஏசி வேலை செய்யாமல்.. டாய்லட் தண்ணீர் இல்லாமல்.. சாப்பாடு வாயில் வைக்க முடியாமல்..

இந்த நாட்டை.. மக்களை ஓம்காரேஷ்வர்தான் காப்பாற்ற வேண்டும் !
February 17, 2012

போபால்-படா தாலாமுதல் நாள் அலுவலக வேலை முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பியதும் எதிரே இருந்த ஷாப்பிங் மாலுக்கு போனோம்.

திருச்சியில் பார்த்ததை விட மிகப் பெரிய அளவு. ஆறு மாடி. எஸ்கலேட்டர்தான் எல்லா மாடிக்கும். அதைத்தவிர கண்ணாடிகூண்டு லிப்ட்.

50% தள்ளுபடி.. 60%.. 70% என்று ரகவாரியாய் தள்ளுபடிகள். பார்த்ததெல்லாம் ‘தள்ளும்’படிதான் இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுற்றியும் முடியவில்லை. அவ்வளவு பெருசு..

எப்படியும் செலவு வைக்க வேண்டும் என்று தீர்மானித்து, டார்க் ஷோவுக்குள் போனோம்.

பேய் அறை என்று அதைச் சொல்லலாம். கையில் திருப்பதி போல ஒரு பேண்ட் கட்டி இருட்டறைக்குள் அனுப்புகிறார்கள்.

அதற்கு முன் எச்சரிக்கை. இதயபலவீனமுள்ளவர், குழந்தைகள், கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று.

ஆ.. ஊ.. என்று பேய் அலறல்கள். சவப்பெட்டி திறந்து வெளியே வந்த உருவம் அந்த அரை இருட்டில் கலவரப்படுத்துகிறது. குறுக்கே எலும்புக் கை நீண்டு மறிக்கிறது. பட படவென பட்டி அதிருகிறது. இத்தனைக்கும் ஐந்து நிமிடம்தான்.
அத்தனை பயமுறுத்தல்கள்.

வெளியே வரும்போது - உள்ளே வரமறுத்து வெளியே நின்ற நண்பர் கேட்டார்.

‘பேய் அனுபவம் எப்படி’

சகோதரி சொன்னார். ‘அது கூடத்தான் இருபது வருஷமா குடும்பம் நடத்தறோமே’

மறுநாள் ‘படா தாலா’ போனோம்.

மிகப் பெரிய ஏரி. போபாலுக்கு குடிநீர் சப்ளை அங்கிருந்துதான்.

ஆறு கிலோமீட்டர் நீளம். அடுத்த கரை தெரியவில்லை.
நீங்களே பாருங்க.. அடுத்த கரை தெரியுதான்னு..

ரகவாரியாய் படகு சவாரி. முதலில் ஸ்பீட் போட்டில் போனோம். அப்புறம் மனசு அடங்காமல் பெடலிங் போனோம்.

நாமே பெடல் செய்து போவதில் ஒரு த்ரில்லிங் தெரிந்தது. நம் படகை மோட்டார் போட் கிராஸ் செய்யும்போது படகில் மோதிய அலை நீரில் படகு ஆடி.. கவிழப் போகும் அபாயம்.. ஆஹா..

‘நீச்சல் தெரியுமா..’ என்று ஒவ்வொருவரைக் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் நால்வரில் இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும்.

‘கவலையே இல்லை.. நீ அவன் கையை பிடிச்சுக்க.. நான் இவர் கையைப் பிடிச்சிக்கிறேன்’ என்றேன்.

வாத்துக்கள் ‘கக்.. கக்’ என்று சப்தமிட்டு நாம் போடுகிற பாப்கார்ன் சாப்பிடும் அழகே அழகு.
இருபுறமும் நீர்.. நடுவே நாங்கள்.. மனசு குழந்தையாய் மாறி கும்மாளமிட்டது..

மறக்க முடியாத அனுபவம்.
(பயணம் தொடரும்)February 16, 2012

போபால்பத்து நாட்களாய் ஊரில் இல்லை...

‘அதான் பிளாக் அப்டேட் ஆகாததைப் பார்த்தாலே தெரியுதே’

போபால் பயணம் ! ஆபிஸ் வேலையாய்.. எல்லா யூனிட்காரார்களும் கூடி கும்மி அடித்தோம்.

அங்கே எங்கெங்கே போனோம் என்று பகிர்வதற்கு முன் ஒரு ரிவர்ஸ் கியர்..

பயணம் முடித்து சென்னை திரும்பியபோது பேஸின்பிரிட்ஜில் வழக்கமாய் அரை மணி போட்டு விடுவார்கள்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்..

கொருக்குப்பேட்டையில் கொஞ்ச நேரம்..

அப்போது அருகில் இருந்த ரயில்வே டிராக்கில்..தங்களை மறந்து .. அங்கிருந்த அசிங்கம் மறந்து.. மிக்ஸ் பண்ணி அடித்த இரண்டு குடிமகன்கள் !


(பயணம் தொடரும் )


February 04, 2012

கடிதம்

நள்ளிரவில் விழித்துக் கொண்டு கடிதம் எழுதுகிறவனைப் பார்த்திருக்கிறீர்களா? குறைந்தபட்சம் சந்தித்தது உண்டா? இருக்க முடியாது. மனிதன் ஆறறிவு படைத்த பிராணி. அன்பிற்கும் பாசத்திற்கும் சுலபமாய் வசப்படுகிற பிராணி.

எதிர் அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஹாஸ்டல் விதிப்படி இந்நேரம் விளக்கெரிந்தால் தவறு. வார்டன் தூங்கிப் போயிருந்தால் கூட அவர் கவனத்திற்குப் போய் விடும். நாளை, முதல் வேலையாக தண்டிப்புத் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வருவார். ஆனாலும் விழித்திருந்தான். சாட்சியாய்ப் பாடப் புத்தகம். நடந்தே இராத பக்கம் பிரிந்து கிடந்தது. விழித்துக் கொண்டு வந்து வார்டன் பார்த்தாலும் இந்தக் கோடை இரவில் சிலிர்த்துப் போகக் கூடும். 'அட்வான்ஸ்டு' சப்ஜெக்டில் இத்தனை அட்வான்ஸாய்ப் படிக்கிறவனைப் பெருமிதமாய்ப் பார்த்து ஸ்பெஷல் டீ கூடப் போட்டுத் தரலாம். பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் காட்டலாம்.

கலாவை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நள்ளிரவிலும் அந்த ஆராய்ச்சிதான். விரிவாக ஒரு கடிதம் எழுதி அதன் மூலமாவது அவள் புரிந்து கொள்ளக்கூடும் என்று நினைத்தான்.

மேஜையின் ஒருபுறம் எழுதிக் குவித்த நோட்டுகள். மூன்று செமஸ்டர்களில் நடத்தப்பட்ட வெவ்வேறு பாடங்கள். சரளமாய் கை வைத்த மாத்திரத்தில் அருவி போல கொட்டிய எழுத்துகள். ஆனால் கடிதம் மட்டும் நினைத்தபடி எழுத முடியவில்லை. பேனா திறந்தே கிடந்தது. எழுத எடுத்த வைத்த பேப்பரில் எந்த சுவடுமின்றி.. அவன் மனது போல வெறித்திருந்தது.

"பேச வேணாம்"
"எ.... ன்ன"
"பேச வேணாம்".

ஓர் ஆள் மட்டுமே நிற்கிற அளவு மிகச்சிறிதான டெலிபோன் கூண்டுக்குள் வெளியே காவலாய் அமர்ந்திருக்கிற பூத் கிழவரைத் தவிர வேறு ஆளரவமற்ற இடத்தில் ரிசீவரில் கேட்கிற குரலுக்கு என்ன பதில் தரலாம்?

கலா மிரட்டிப் பேசியதில்லை இதுவரை. குரலில் சிநேகம் அப்பியிருக்கும். சில நேரம் வசதியான கூண்டு கிட்டாத தருணங்களில் நடைபாதை, திறந்த டெலிபோன்களில் பேச்சின் வார்த்தைகள் துல்லியமாய்க் கேட்காமல், இன்னொரு தரம் விசாரித்தால் கூட பொறுமை இழக்காமல் சொல்லுகிறவள். இப்போதும் மிரட்டவில்லை. ஆனால் குரலில் எத்தனை சுலபமாய் தொற்றிக் கொண்டுவிட்ட அன்னியம். சிநேகமற்றுப் போன மாதிரி! எதிர் வீட்டுப் பெண்மணி வந்து கதவைத் திறந்து அவசர ஃபோனில் பதில் சொன்ன மாதிரி, "பேச வேணாம்."

சத்தியமா? என்ற யோசனையிலேயே நேரம் ஓடியது. பதில் தரவேண்டும் என்கிற அவசரத்தில் படபடப்பு கூடியது. வார்த்தைகள் வசப்படாத திணறலில் உடம்பு நடுங்கியது.

"என்ன திடீர்னு?"

"வச்சிரட்டுமா"

காத்திராமல் வைத்து விட்டாள். புத்திக்குப் பிறகுதான் புரிந்தது. அவசரமாய் இன்னொரு தரம் டயல் செய்தான். எங்கோ மணி அடித்துக் கொண்டிருந்தது. அழுகிற குழந்தையைப் போல எடுத்து ஆறுதல் படுத் த எவரும் முன்வராத நிலையில்.

கிழவரின் கவனம் வேறெங்கோ இருப்பது போல கூண்டுக்குள் இருப்பவன் மீது படர்ந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை பேரைப் பார்த்திருப்பார். அவர் நோக்கம் எல்லாம் சிவப்பில் ஒளிர்கிற மீட்டர் ரீடிங் அதிகபட அவர் வாழ்கையில் சந்தோஷம் கூடும். பேசு... ஏன் பேசுவதை நிறுத்தி விட்டாய்?- பேசு. மானசீக ஜபம்தான் அவருடையது.

இன்னொரு தரம் முயற்சி செய்யலாமா? என்று யோசித்து மனந்தளர்ந்து வெளியில் வந்தான்.

"ஒரு ருபாய் இருபத்தாறு பைசா"

இத்தனை நாட்களில் மிகக் குறைவான பில். கலா இல்லாத நேரங்களில் அவள் அப்பாவுடன் கூட இரண்டொரு வார்த்தைகள் பேசிய பிறகுதான் ஃபோனை வைத்திருக்கிறான். ஏழெட்டு ரூபாய் பில் வரும்வரை.

ஒண்ணரை ரூபாய் மனிதர்களும் பூத் கிழவருக்கு வேண்டியிருக்கிறது. லைனே கிடைக்காமல் போகிறவனைவிட இவன் மேல்.

மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தான். மனசுக்குள் வழி நெடுக பேசிக் கொண்டு. எந்த மீட்டரும் அளவெடுக்காத தொலைபேசியில், சகாவின் விசாரணைக்கு அரை மனதாய்ப் பதில். பசியற்ற அறைக்குள் முடங்கி சகா திரும்புவதற்குள் தூங்கிப் போய் நள்ளிரவில் திடுமென்று விழித்துக் கடிதம் ஒரு வார்த்தையும் எழுதப்படாமல்.

இப்போதே கிளம்பி ஊருக்குப் போய் விடலாமா? வாட்ச்மென் அறியாமல் சுவர் எறிக் குதித்தாவது. தெளிவற்ற ஆலோசனைகளை மனசு வழங்கியது. இன்னொரு தரம் ஃபோன் செய்து. இந்த நடுநிசியிலா...? அத்தனை பெரும் ஆழ்ந்த உறக்கத்தில். அமைதியைக் கலைத்து டெலிபோன் மணி வித்யாவை அனுப்பி கலாவுடன் பேசச் சொல்லலாமா? என்னவென்று சொல்வது? எப்படி புரிந்து கொள்வாள்?

கலாவின் சுபாவத்திற்கு மூன்றாம் மனிதரின் தலையீடு நிச்சயம் எதிர்மறை விளைவைத்தானே தரும். கலாவுக்குப் பிடிக்காது. பிடிக்கும் என்ற பட்டியல் கைவசம் இருந்தது. இத்தனை கால பழக்கத்தில் சேகரித்தது. கலாவுடன் பேசும், பேசாத நேரங்களில் கண் எதிரே பட்டியல் விரிந்து கிடக்கும். புதுப்புது விஷயங்களை அதில் சேர்த்தும், ஏற்கெனவே தவறாய்ச் சேர்த்த விஷயங்களை நீக்கியும், சரி செய்தும் அவனின் ஒரு பகுதி கவனம் செலவழியும்.

"பேசறப்ப முழுசா கவனிக்க மாட்டீங்களா?"

"கவனிக்கிறேன். நேத்து திடீர்னு மழை பெருசாக் கொட்டினது. வீட்டு படிக்கட்டு மேல மழை பெருசாக் கொட்டினது. வீட்டு வாசல்ல படிக்கட்டு மேல தண்ணி வந்தது. மழைன்னா உனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் பார்த்தா ஒரு செடி மழை வேகம் தாங்காம சரிஞ்சு கிடந்தது... நீ தவிச்சுப் போனது".

முந்தைய நிமிடம் வரை அவள் பேசியதை ரீப்ளே செய்ததும் அவள் மறுபடியும் தன் கருத்தை வலியுறுத்தியதும். "நீங்க என்னதான் சமாளிச்சாலும் உங்க முழு கவனம் என் பேச்சில் இல்லை. அதுதான் நிஜம்".

நிஜம்தான். பேச்சில் இல்லை. உன்மீதுதான். ஆனால் சொல்ல முடியாது. சொல்லத் தோன்றவில்லை. சில விஷயங்களை ஆழ்மனதில் பத்திரப்படுத்தத் தோன்றுகிறது. வெகு சிநேகமான மனிதரிடம் கூடப் பகிராமல். சொல்லக் கூடாது என்றில்லை. சொல்லத் தோன்றாமல் இன்னொரு பயமும். வெளிப்படுத்திய மறுநிமிடம் அது தன் சுவாரசியத்தை இழந்து விடுகிறது. மனசுக்குள் புதைந்து கிடைக்கிறவரை அதன் வீர்யம் குறைவதில்லை.சொல்வது மட்டுமில்லை. நினைப்பதில் கூட, எந்த ஒரு ஆழ்மனது விஷயத்தையும் பூரணமாய் மனசுக்குள் கூட விரித்துப் பார்க்க அனுமதி இல்லை. இலேசாய் எதேனும் ஒரு பக்கம் பார்த்துப் பிற பகுதிகளை அனுமானித்து சந்தோஷப்படலாம். மனசுக்குள் எடுத்து முழுசாய்ப் பார்த்தால் கூடப் போச்சு.

இந்த விளையாட்டை கலாவுடன் இருக்கிற, இல்லாத நேரங்களில் எல்லாம் விளையாடுகிறான். அதனால்தான் இப்படி மாட்டிக் கொள்ள நேர்கிறது. அவளுக்கு எதுவும் விளையாட்டில்லை. நூறு சதவீதத் தீவிரம். எதுவானாலும், நேசிப்பைச் சொல்வதானாலும். "பேசாதே" என்று கட்டளையிட்டாலும்...

எழுந்து விளக்கை அணைத்து விட்டான். இரவு முழுக்க விழித்திருந்தாலும் ஒரு வரி கூட எழுதப் போவதில்லை. என்ன எழுதுவது என்ற தீர்மானமற்று பேனாவை திறந்தால் இப்படித்தான். ஏற்கெனவே அச்சிட்ட பாடப்பகுதி போல எழுத அத்தனை சுலபமில்லை. துக்கமும் தடங்கல் செய்ய போகிறது. ஹாஸ்டல் எதிரே பூத் திறக்க எட்டு மணி ஆகும். அவனுக்கு முன்பே காத்திருக்கிற பிற மாணவர்கள், ஆசிரியர்கள். ஏன் சில சமயம் வார்டன் கூட!

விளக்கு அணைத்துப் படுத்த மறு நிமிடம் தடங்கலே இல்லாமல் ஓர் அற்புதமான கடிதம் மனசில் ஓட ஆரம்பித்தது. "எழுந்திருக்காதே" என்று யாரோ அன்பாய் எச்சரித்தார்கள். "கடிதம் முழுவதும் கேள்" வார்த்தைகளில் முழுவதுமாய் அவன் மனத்தைச் சொல்லி... கலாவுக்கு அவன் எழுத நினைத்த கடிதத்தைவிட உசத்தியாய்... நேர்த்தியாய்... சரளமாய்... மனத்தின் பக்கங்கள் சரசரவென விரிந்து... குண்டு குண்டாய்க் கையெழுத்தில்..... இதுநாள் வரை யாருமே எழுதியிராத கடிதம். கலாவை முன்னிறுத்திப் பேசிக் கொண்டு போன தொனியில்.

காலை பத்து மணிக்கு பூத்தின் கதவு மூடிக் கொண்டு, எதிர்முனையில் கலாவின் குரலுக்காக அவன் காத்திருந்த நேரம்... நள்ளிரவில் எழுதிய கடிதம் ஒரு வார்த்தை கூட நினைவில் இல்லை.

ஆனால் எதிர்முனையில் மணி அடிப்பது நின்று குரல் கேட்டது. பிரியமாய்... இனிமையை முறித்துப் போடாத விதமாய்... எழுதப்படாத கடிதம் அதற்கான நபரிடம் சேர்ந்து தன் விளைவை நிகழ்த்தி விட்டதைப் போல.

"என்ன ஸ்ரீ?"

சுருக்கமாய் அவன் பெயரை அவளுக்கேயான சுவாதீனத்தில் சொன்னபோது, நேற்று ஏன் அப்படிப் பேசினாள் என்று கேட்கத் தோன்றவில்லை அவனுக்கு.

(கல்கி - பிரசுரம்)