August 29, 2011

ஈரங்கொல்லி


கோவிலில் தன் பாட்டியை தர தரவென்று இழுத்துக் கொண்டு பதின்ம வயதுக்காரன் ஓடினான். கூடவே அவன் தங்கையும், அம்மாவும்.

அந்தப் பாட்டியின் முகத்தில் நிச்சயமாய் பரவசம். எந்த கிராமத்தில் இருந்து வருகிறார்களோ.. தெரியவில்லை.

இந்த வயதில் தன்னை பேரன் கோவிலுக்கு அழைத்து வந்ததில் பெருமகிழ்ச்சியும்..

பரந்து கிடக்கும் பெரிய கோவிலின் பிராகாரங்களின் கல் தரையில் பாதம் பதிந்தும் பதியாமலும் கிழவி நடந்து ஓடியதைப் பார்த்தேன்..

நிச்சயம் ஸ்ரீரெங்கநாதன் பாட்டியைப் பார்க்க ஆர்வமாய்த் தான் காத்திருப்பார்.

முன்னொரு நாளில் இதே போல ரெங்கனும் இருப்பிடம் விட்டு எவ்வளவோ தொலைவு சுற்றி வந்தார்..

அதற்குள் ஸ்ரீரங்கமே மாறிப் போய் விட்டது.

திரும்பி வருவதற்குள்.. இடைப்பட்ட காலத்தில் இன்னொரு உற்சவர் அவரைப் போலவே வந்து விட்டார். அவருக்கு அபிஷேக ஆராதனைகள்..

‘உண்மையான ரெங்கன் இவர்தான்’

‘அப்ப இத்தனை நாளாய் நாம் ஆராதித்த பெருமாள் ?’

யார் அசல் .. யார் புதுசாய் வந்தது சொல்லத் தெரியாமல் புதிய தலைமுறை விழித்தது.

காவிரிக் கரை ஓரம்.. கண் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) தான் தீர்வு தர முடியும் என்று பேச்சு வந்தது.

‘அந்தப் பெரியவருக்கு வயசு நூறுக்கும் மேல.. அவர் சொல்லட்டும்’

காதும் மந்தமான அவரிடம் போய்ச் சொன்னார்கள் பிரச்னையை.

‘ ரெண்டு பேருக்கும் திருமஞ்சனம் செஞ்சு தீர்த்தம் கொண்டாங்க..’

இரு வட்டில்களில் அபிஷேக தீர்த்தம் கொண்டு வந்தார்கள்.

இரண்டையும் தனித்தனியே வாங்கி ருசித்தார்.

‘இதோ.. இந்த தீர்த்தம்.. கஸ்தூரி வாசனை.. இவர்தான் நம்பெருமாள்..’

அரங்கனை அடையாளம் காட்டியது ஒரு ஈரங்கொல்லிதான். நம்பெருமாள் என்று கொண்டாடியதும் அவர்தான். அவரின் தீர்ப்பில் விட்டு அதை அப்படியே ஏற்று
எந்த பேதமும் இல்லாமல் ஒன்றாய் நின்றதும் அந்த நாள் மனிதர்கள்தான்.

மனிதரைக் கொண்டாடுவோம்!August 26, 2011

குறுஞ்செய்திகள்

தினசரி கைபேசியில் பீப் ஒலி கேட்டதும் .. ஆர்வமாய் எடுத்துப் பார்ப்பேன்.

குறுஞ்செய்திகள்.. எத்தனை சுவாரசியமாய்.. புதுமையாய்..

சாம்பிளுக்கு இதோ சில..

வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயம்..

டிபன்
லஞ்ச்
டின்னர்

நமக்கு சாப்பாடுதான் முக்கியம். நீங்க சாப்டிங்களா..

கைபேசியில் வந்த குறுஞ்செய்தி!

5 வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும்.

கடவுள் ஒரு நாள் என் ஞாபக சக்தி முழுவதையும் அழித்துவிட்டார்.
அப்புறம் கேட்டார். ‘இப்ப ஏதாச்சும் நினைப்புல இருக்கா’
நான் உன் பெயரைச் சொன்னேன்.
கடவுள் சிரித்தார். ‘பார்மேட் பண்ணியும் வைரஸ் போகல போல’

நீ ஒரு பென்சிலா இருந்து யாரோட சந்தோஷத்தையாவது எழுதமுடியாட்டியும், ரப்பரா இருந்து அவங்க சோகத்தை அழிக்க முயற்சி பண்ணு..

செத்தப்புறம் சொர்க்கத்துக்கு போகறது இருக்கட்டும்.. இருக்கறப்ப அடுத்தவங்க மனசுல சொர்க்கத்தைக் காட்டு.. அதான் முக்கியம்.

நட்பைப் பத்தி ஒரு சைனீஸ் கவிஞர் சொல்லி இருக்கார்..
ழின் சுவ் சியோனா சங்
மோ யூன சங்
பினாகொ சே
ச்சே.. என்னமா சொல்லி இருக்கார்.. நான் அப்படியே கண் கலங்கிட்டேன்.. படிச்சுட்டு.
வாட் அபவுட் யூ?

இந்த உலகத்துல உண்மையான உறவு எப்படி இருக்கும் தெரியுமா..
அடுத்தவர் கையைப் பிடிச்சுகிட்டு நீ நடக்கும்போது, ‘எங்கே’ ‘எதுக்கு’ன்னு கேட்காம கூட வராங்க பாரு.. அதுதான்!

புது நட்பு கவிதையா இருக்கலாம்.. ஆனா பழைய நட்பு ‘உயிர் மெய் எழுத்துக்கள்’ மாதிரி.. அதை மறந்துராதே.. ஏன்னா கவிதையைப் படிக்க எழுத்துக்கள் அவசியம் தேவை!

குழந்தைக் கொசு அதோட முதல் பறத்தல் முடிஞ்சு திரும்பி வந்திச்சாம்.
அம்மா கேட்டாங்க.. ‘எப்படிரா செல்லம் இருந்துச்சு..’
‘சூப்பர்மா.. எல்லாரும் கை தட்டினாங்க.. நான் பறக்கறப்ப..’


ம்ம்.. நட்பு வட்டம் எப்படியாவது நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.. எப்போதும்.August 20, 2011

மழை


வானம் கருத்துக் கொண்டு
வருவது பார்த்து
உலர்த்திய துணிகளை
அள்ளி வருவதும்..
மேகங்கள்
சின்ன தூறல் கூடப் போடாமல்
அடுத்த பகுதிக்குப் போவதுமாய்..
மழை விளையாட்டு..
குறுஞ்செய்தி மின்னுகிறது..
‘எங்கள் ஊரில் மழைப்பா’
சிநேகிதியின் உற்சாகம்
என்னுள் விதைக்கிறது
ஒரு புழுக்கத்தை..
இடி.. மின்னல்.. என்று
எதற்கும் குறைவில்லை..
வந்த மழை
எங்கு போனதென்றுதான்
தெரியவில்லை..
சுற்றுப் பகுதியில்
ஏதோ ஒரு இடத்தில்
பூமி குளிர்ந்து போனது..
மறுநாள் தலைப்புச் செய்தி..
மின்னி விட்டு
ஏதும் சொல்லாமல் போன வானம்..
வரண்டு கிடக்கிறது மனசும்..
என் தெருவைப் போலவே.August 10, 2011

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கட்டி முடிக்கப்படாத 1800 ம் வருடத்தில் எப்படி இருந்தது என்று ஒரு படம் பார்த்தேன்.

இன்று அங்கே சும்மா ஒரு நிமிடம் நிற்க முடியாது..
இடித்துத் தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்..

என் நினைவடுக்குகளில் சோலைகளாய் இருந்த ஸ்ரீரங்கம் இப்போது பன்மாடிக் கட்டிடங்களாய் மாறி அதன் அழகைத் தொலைத்து விட்டது.

ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படாத அப்போது அதன் முன்பே எவ்வளவு விசாலமாய் இடம்..

டைம் மெஷின் இருந்தால் அந்த நாட்களுக்குப் போய்ப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறது..


காவிரியில் நீர் புரண்டோடிய காலம்..

மனிதர்கள் தங்கள் தேவைகளில் அடிமைப்படாமல், இருப்பதில் திருப்தியுற்று எளிமையாய் - நிம்மதியாய் - இருந்த நாட்கள்..

‘நகரு.. நகரு’ என்று யாரும் தள்ளி விடாமல் அரங்கனை ஆசை தீரப் பார்க்கும் வாய்ப்பு..

உண்மையான பசும்பால்.. மறுநாள் நீர் கோர்த்துக் கொள்ளாத, சாப்பிடப் பிடிக்கிற, கெமிக்கல் வாசனை இல்லாத - பழைய சாதம்..

மேக்கப் இல்லாமல் இயற்கையாய், அழகாய் மனிதர்கள்..

நாவினிக்கிற தமிழ்ப் பாசுரங்கள்..


வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல் மீதணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை *
அண்டர்கோன் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா *
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை * விலக்கி நாய்க்கு இடுமினீரே

தொண்டரடிப்பொடியாழ்வார் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் !

August 07, 2011

நட்பு


நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

இம்மாதிரி கொண்டாட்டங்களில் எனக்கு அவ்வளவாய் ஆர்வம் இல்லை.
அதாவது இன்று மட்டும் என்பதாய் ஒரு தினம் குறிப்பிட்டு கொண்டாடுவதில்.

ஆனாலும் நம் வாழ்வில் தினங்களுக்கு என்று சில அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன.

ஒரு கட்டத்தில் மிக அந்நியோன்யமாய் இருந்த நட்புகள் திடீரென விலகிப் போன வலி எனக்கும் நேர்ந்திருக்கிறது.

எதனால் அப்படி ஆனது என்று புரிபடாமல் ..

ஏதேனும் அலுவல்களில் பேசாமல் விட்டு.. மறுபடி பேச முற்படும்போது ஒரு இடைவெளி மனசுக்கும் உணர்வுக்குமாய்..

இன்றைய தினத்தில் என்னோடு மிக மிக அன்போடு இருந்த அத்தனை நண்பர்களுக்கும் - இன்று பேசாமல் இருந்தாலும் கூட - என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் அவ்ர்களை மானசீகமாய் கை குலுக்குகிறேன்.

என்னோடு இப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கும் ..
என்னை சகித்துக் கொள்ளும் பொறுமைக்கு வந்தனங்களுடன்..

நட்பு என்பது மிகப் பெரிய உறவாய் மாறிவிட்ட சூழல் இப்போது.

அந்தந்த நேர தேவைக்கேற்ப என் மீது மழையாகவும், வெய்யிலாகவும், காற்றாகவும் உருமாறி என்னைச் செதுக்கும் நண்பர்களுக்கு

வேறென்ன சொல்ல..

இதயபூர்வமான வணக்கங்களைத் தவிர..