April 30, 2010

நடைபாதை ஜீவன்கள்


எப்போது பார்த்தாலும்

தெருவில்தான்

இருக்கிறார்கள்..

எப்படி சாப்பாடு கிடைக்கும்..

இரவுத் தூக்கம்

எங்கு வாய்க்கும்..

குளியல்.. பிற செயல்கள்

எந்த இடத்தில்..

கேள்விகளால் மனசு

நிரம்பி போகும் ..

அவர்களோடு

யாராவது

பேசுவார்களா..

அதுவும் தெரியவில்லை..

உடை கூட கிழிவது ..

மாற்றுடை பற்றி அக்கறை

ஏதுமற்று..

எதற்கென்று புரியாமல்

அவர்களின் முகத்தில்

எப்போதாவது தென்படும்

புன்னகையோ .. சிரிப்போ சொல்லாமல்

சொல்கிறது..

'என்னைப் போல

அவர்களும்

மனுஷங்கதான்.. '


April 27, 2010

உயிர்த்துடிப்பு




ஒவ்வொருவராய் வந்து


பார்த்துப் போனார்கள்..


மாதக் கணக்கு..


நாள் கணக்கு..


மணிக் கணக்கு..


எல்லாம் மறந்து


நெஞ்சுக்


கூட்டில் உயிர்த்துடிப்பை ..


செயலற்று பார்வைகள்..


யார் மனசோ .. அல்லது


எல்லோருமோ ..


'எதுக்கு இந்த அவஸ்தை..'


மூடிய கண்கள்


படித்து விட்டதோ..


மறுநாள் கேட்டது


அழுகை ...




April 25, 2010

ரகசியங்கள்


'சொல்லு .. சொல்லு '
என்று அரித்தெடுத்தார்கள்
என் தயக்கம்
அவர்களுக்கு
வேடிக்கையாய் ...
'அவ்வளவுதான்
நம்ம பழக்கமா ?'
என்று உரிமையாய் பேச்சு..
என் கூச்சம் உதறி
மனசிலிருந்ததைப்பகிர
தொடர்ந்த வற்புறுத்தல்கள் ..
'சொல்லலன்னா இனி என்னோட
பேச வேண்டாம் '
என்று முகம் திருப்பியபோது
சொல்லாமல் இருக்க முடியவில்லை..
சொல்லி முடித்ததும்
என் ரகசியங்கள்
அம்பலமாயின..
அவர்கள் பிறகு
என்னைத் தவிர்க்க
ஆரம்பித்தார்கள்..
என்னோடு எனக்குள் இருந்ததை
எனக்கு சொந்தமில்லாமல் ஆக்கி
அவர்களும் விலகிப் போனதில்
மறுபடி சேகரிக்க
வேண்டியதாயிருக்கிறது
எனக்கான ரகசியங்கள் !

April 20, 2010

ஒரு பயணம்



"உள்ளே நகருங்க சார்.. ஏறினவங்க எல்லாரும் படியிலேயே நின்னுகிட்டா மத்தவங்க எப்படி ஏர்றது"


நடத்துனரின் குரலில் தெரிந்த கோபம் யாரையும் பாதித்த மாதிரி தெரியவில்லை. அவரவர் நின்ற இடத்திலேயே லேசாக அசைந்து கொடுத்துக் கொண்டார்கள்.


"டிக்கட்.. டிக்கட்"


"சில்லறையாக் கொடுங்க.. எல்லாரும் பத்து ரூபாயை நீட்டினா?"


எனக்கு கடைசி ஸ்டாப். ஏறியதோ பஸ் ஸ்டாண்டிலேயே. வசதியாய் ஒரு சீட் பிடித்து அமர்ந்து விட்டேன். ஆறு ரூபாய் சில்லறையாய்க் கொடுத்து டிக்கட் வாங்கினேன். நடத்துனரிடம் அதற்காக சர்டிபிகேட் கிடைக்கவில்லை. ஒரு புன்முறுவல் கூட கிடையாது. பத்துரூபாய் கொடுத்தவர் டிக்கட் வாங்கிக் கொண்டு மீதிக்கு கை நீட்டினார்.


"ஒரு ரூபாய் கொடுத்துட்டு அஞ்சு ரூபாய் வாங்கிக்குங்க"


"சில்லறை இல்ல"


"அப்ப வெயிட் பண்ணுங்க.. சேஞ்ஜ் வந்தா தரேன்"


நடத்துனர் முன்னால் போய் விட்டார்.சினிமா பாட்டு அலறியது. அது ஏன் எல்லாப் பேருந்துகளிலும் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் மனதைக் கெடுக்கும் வார்த்தைகளோடு டப்பாங்குத்து இசையில் பாட்டைப் போடுகிறார்களோ.


என் அருகில் அமர்ந்திருந்தவன் கையால் தாளம் போட்டுக் கொண்டு வந்தான். முன் சீட்டுக் காரருக்கு கைபேசியில் அழைப்பு வர ஹலோ ஹலோ என்று அலறினார்.


"பஸ்ல வந்துகிட்டிருக்கேன்.. இறங்கிட்டு பேசவா"


செல்லை அணைத்துவிட்டு முனகினார்.


"பேச்சே கேட்கலே.. என்ன சொல்ல வந்தானோ.."


"டவுனுக்கு டிக்கட் கொடுங்க"


நடத்துநர் விசில் அடித்தார்.


"போர்டைப் பார்த்து ஏறமாட்டீங்களா.. இறங்குய்யா"


அடுத்த ஸ்டாப்பில் பத்து பேர் ஒரே குடும்பமாய் ஏறினார்கள்.


"ஏய் புள்ளைய புடிடி.."


"டிக்கட்.. "


"பத்து ஜங்ஷன் கொடுங்க"


"அந்தப் பையனுக்கு எடுத்தீங்களா"


"அவனுக்கும் சேர்த்துத்தான்"


முன்சீட்டு செல்காரர் இறங்கிப் போக இப்போது எனக்கு முன் சீட்டில் புதிதாய் கல்யாணம் ஆன ஜோடி.


"உன் தம்பியும் கூட வந்திருவான்னு நினைச்சேன்"


"வந்தா நல்லா இருந்திருக்கும்"


"நீங்க ரெண்டு பேரும் போங்கன்னு நான் வீட்டுல இருந்திருப்பேன்.."


"அப்பவே சொல்லியிருந்தா அவனைக் கூட்டி வந்திருப்பேன்ல"


"என்ன.. விளையாடுறியா"


"யாரு விளையாடறது..நீங்களா.. நானா"


பட்பட்டென்று வார்த்தைகள். இருவரிடமும் யார் சீண்டலில் முந்துவது என்கிற போட்டி. கைக்குழந்தையோடு ஒருத்தி வர முன் சீட்டுக்காரன் புது மனைவியை விட்டுப் பிரிய மனசில்லாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். என் அருகில் இருந்தவன் எழுந்திருக்க கைக்குழந்தைக்காரி என் அருகில் அமர்ந்தாள்.அது என் சட்டைப்பையை இழுத்தது.


"ஏய்.. தொடாதே.."


மார்க்கட் பகுதியைத் தாண்டிப் போகும் போது மிளகாய் நெடி கமறியது.மேம்பாலத்தின் மீது போகும் போது காற்று வேகமாய் முகத்தில் அறைந்தது. பேக்கரியைத் தாண்டும்போது கேக் வாசனை. கைக்குழந்தைக்காரி இறங்கிப் போக நடத்துனர் என் சீட்டுக்கு அருகில் வந்து எட்டிப் பார்த்தார்.


"சீக்கிரம் இறங்குங்க.."


"இறங்கறதுக்குள்ள என்ன அவுதி.."


யாரோ ஒரு பெண்மணி கத்திக் கொண்டே போனாள்.ஒன்றேகால் மணி நேரம் பயணம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது. சோழன் நகர் பஸ் நிறுத்தம். கடைசி ஸ்டாப். எல்லோரும் இறங்கிப் போக ஓட்டுனர் இறங்கி சிகரட் பற்ற வைத்தார். நடத்துநர் எதிர் டீக்கடைக்குள் போனார். நடத்துனர் மேலே வந்ததும் என்னைப் பார்த்தார்.


"என்ன இறங்கலியா"


நான் முன்பு ஏறிய பஸ் ஸ்டாப்பைச் சொல்லி மறுபடி டிக்கட் கேட்டேன்.இந்த முறையும் சில்லறையாகக் கொடுத்தேன்.என்னை ஒரு மாதிரி விழித்துப் பார்த்துவிட்டு டிக்கட் கிழித்து கொடுத்தார். பதினைந்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் பஸ் வந்த ரூட்டிலேயே விரைய ஆரம்பித்தது.


இப்போது வேறு மாதிரியான பயணிகள். சம்பாஷணைகள். இப்போது நடத்துனர் என்னைக் கடக்கும்போதெல்லாம் ஒரு பார்வையை வீசிவிட்டுப் போனார்.


மறுபடி மேம்பாலம்.. மிளகாய் நெடி.. கேக் வாசனை.. சில்லறை சண்டை.. ஆற்றுப்பாலம்.. ஏறிய இடத்திற்கே வந்து நின்றது.


நடத்துனர் என் அருகில் வந்தார்.


"இறங்கப் போறீங்களா.. டிக்கட் போடவா" என்றார் பாதி கேலியாக.


சிரித்தேன் மனம் விட்டு. அதே நேரம் என் தம்பி பஸ்ஸுக்குள் வந்தான்.


"போலாமா"


"ம்"


கைலாகு கொடுத்து குழந்தையைப் போல அள்ளிக் கொண்டான். கீழே வேட்டி காற்றில் ஆடியது. துவண்டு போன இரு கால்கள் நிற்கும் பலமிழந்து தொய்ந்திருந்தன.என்னை அவன் ஆட்டோவில் ஏற்றி அமர வைத்தபோது நடத்துனர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்த அதிர்ச்சி.


"வந்து.. நான்.."


அவர் தோளைத் தட்டினேன்.


"எனக்கு வீட்டுலேயே அடைஞ்சு கிடக்க முடியல.. அதனால எப்பவாச்சும் ஒரு ரவுண்டு இப்படி.. தேங்க்ஸ்.."


ஆட்டோ கிளம்பியபோது நடத்துனர் கையாட்டுவது தெரிந்தது. பதிலுக்கு நானும் புன்முறுவலுடன் கையாட்டினேன்.



April 17, 2010

இன்னொரு சான்ஸ்



அம்மாவுக்குக் கோபம் வந்து பார்த்ததே இல்லை. இன்று வாசலுக்குக் குரல் கேட்டது.


"அவளுக்கு புத்தி கெட்டு போச்சா என்ன.. யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்தாளாம்"


கையில் அலைபேசியுடன் நின்ற சரவணன் தடுமாறினான்.


"அவளாத்தான் முடிவு எடுத்திருக்கா.. இப்ப கூட நாம யாராச்சும் வரப் போறோமான்னு கேட்டுத்தான்.."


"ஏய்.. ஒங்கப்பா கேட்டா வெட்டியே போட்டுருவாரு.. பத்து வருஷமா பேச்சு வார்த்தையே இல்லைன்னு ஆயிருச்சு. இவ என்ன துணிச்சல்ல இப்படி முடிவு எடுத்தா?"


"பூரணி ஆபீஸ்ல வேலை பார்க்கற ஒருத்தருக்கு பத்திரிக்கை வைக்க வனிதா வந்திருக்கா. அப்ப பூரணியைப் பார்த்துட்டு அவளாவே வந்து பேசி.. கையிலேயே பத்திரிகையும் கொடுத்துட்டாளாம்.."


அம்மா முகம் செவ செவ என்றிருந்தது.


வனிதா சரவணனின் பெரியப்பா மகள். இரு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை நின்று பல வருடங்களாகி விட்டன. இப்போது பெரியப்பா மகள் வனிதாவிற்குக் கல்யாணம். பூரணி சரவணனின் தங்கை. என்ன தைரியம் இருந்தால் வனிதா, இரு குடும்பத்துக்கும் பிரச்னை என்று தெரிந்தும், பூரணிக்கு பத்திரிகை வைப்பாள்?


"இங்கே கொடுரா.. நானே அவகிட்டே பேசறேன்"


"கட் பண்ணிட்டாம்மா.."


"மறுபடி கூப்பிடுரா"


முயற்சித்து பார்த்து சொன்னான்.


"இல்லம்மா.. ஸ்விட்ச் ஆஃப்னு வருது"


"பாவிமக... வேணும்னிட்டே பண்ணுவா.."


அம்மாவின் தவிப்பு தெரிந்தது வெளிப்படையாக. இனி வீட்டில் இருந்தால் அம்மா நினைத்து நினைத்து ஏதாவது கேட்பார் என்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் சரவணன்.


நண்பன் வீட்டுக்குப் போனாலும் பேச்சில் மனசு லயிக்காமல் பூரணி செய்த காரியம் பற்றியே நினைப்பு.


இரு குடும்பமும் ஒற்றுமையாய்த்தான் இருந்தது. ஒரு சின்ன விவகாரத்தில் சண்டை வெடிக்க உடனே பிளவு. இதில் என்ன கொடுமை என்றால் சரவணனின் பாட்டி கூட பெரிய மகனுக்குத்தான் ஆதரவு. சின்னவனை - சரவணனின் அப்பாவை ஏசி அனுப்பிவிட்டாள்.


அப்பா சொல்லிச் சொல்லி புலம்புவார்.


'அவன் மேல தப்புன்னு தெரிஞ்சும் கிழவி என்னை என்ன பேசிட்டா'


கிழவி காலமானபோது பக்கத்து வீட்டுக்காரர்தான் ஃபோன் செய்தார்.


'துக்கம் கேட்க போனேன்.. அப்பதான் தெரிஞ்சுது.. அவங்க உங்களுக்குக் கூட சொல்லலேன்னு.. மனசு கேட்காம ஃபோன் பண்ணிட்டேன்' என்றார்.


அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் போனார்கள். அதற்குள் சுடுகாட்டுக்கே கொண்டு போய் விட்டார்கள். சரவணனின் அப்பாவும் சரவணனும் அங்கே போனபோது தீ வைத்து விட்டார்கள்.


'என்ன பெரியப்பா..இப்படி செஞ்சிட்டீங்க' என்றான் சரவணன்.


'போடா.. பெரிய மனுசன் மாதிரி பேச வந்திட்ட.. அம்மா சொல்லிட்டாங்க.. இவன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு'


'அது எப்பவோ கோவத்துல சொன்னதுதானே'


'நாங்க சொன்னா சொன்னதுதான்.. வார்த்தை மீறமாட்டோம்'


அவரிடம் பேசிப் பயனில்லை என்று ஆற்றில் முழுக்கு போட்டு திரும்பியாகி விட்டது.


இவ்வளவும் பூரணிக்குத் தெரியும். தெரிந்தும் இப்படி செய்திருக்கிறாள்.


இரவு அப்பா வந்ததும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சரவணன் விழித்தபோது பூரணியே ஃபோன் செய்து விட்டாள்.


"அப்பா.. எப்படி இருக்கீங்க.. பிரஷருக்கு மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுத்துக்கிறீங்களா?"


ஸ்பீக்கர் பட்டனை தற்செயலாக அழுத்திவிட்டார் அப்பா. பூரணி பேசியது எல்லோருக்கும் கேட்டது. அப்பாவின் முகத்தில் லேசாக சிரிப்பு.


"அதெல்லாம் இல்லம்மா. ஒழுங்கா மாத்திரை சாப்பிடறேன்"


"அப்பா.. வனிதாக்கா எங்க ஆபீஸுக்கு வந்தாங்க.. அவங்க மேரேஜாம்.. பத்திரிகை வச்சாங்க. பொது இடம்னு நான் எதுவும் பேசாம வாங்கிட்டேன்பா" சரவணனுக்கு அதிர்ச்சி. எப்படி மழுப்புகிறாள்..


"அப்படியாம்மா.. "


அப்பாகூட எந்த உணர்ச்சியும் காட்டாமல் பேசினார்.


"ஏம்பா.. அவங்க உங்களையும் வந்து பார்த்தாங்களாமே"


அடுத்த அதிர்ச்சி சரவணனுக்கும் அவன் அம்மாவிற்கும். வனிதா இவரைப் பார்த்தாளா..


"ஆமா.. நாதான் என்னால வரமுடியுமான்னு தெரியல.. என் ஆசி எப்பவும் உண்டுன்னு சொன்னேன்"


"என்னையாச்சும் வரச் சொல்லி கெஞ்சி கேட்டாப்பா.. என்ன செய்யட்டும்"


"நீ என்னம்மா முடிவு எடுத்தே"


"போய்ப் பார்க்கலாம்னு"


சரவணன் அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே பார்த்தான்.


"நல்லதும்மா.. அப்படி ஏதாச்சும் தகராறு வந்தா.. எதுவும் பேசாம திரும்பிரு.. வச்சிரவா"


சரவணன் அப்பாவையே பார்த்தான்.


"அப்பா.. என்ன சொன்னீங்க"


கையில் ஐந்தாறு மாத்திரைகள். ஷுகர்.. பிரஷர் என்று. அவற்றைக் காட்டினார்.


"மனுஷன் வாழ்க்கை மாத்திரைலதாம்பா.. இப்பல்லாம். அண்ணனுக்கும் இப்ப உடம்பு சுகமில்லைன்னு கேள்விப்பட்டேன்.. ஒருவேளை அவர் மனசுலயும் மாற்றம் வந்திருக்கலாம்..தப்பைத் திருத்திக்க நினைச்சிருக்கலாம்.. சீரியஸ்னு ஆசுபத்திரில சேர்த்தா டாக்டர் காப்பாத்தி விட்டுரலியா.. வாழ்க்கை இன்னொரு சான்ஸ் எப்பவும் கொடுத்துப் பார்க்கிற மாதிரி நாமளும் கொடுத்துப் பார்க்கலாமே.. அவங்களுக்கு.."


வாழ்க்கை ரகசியத்தை அப்பா எளிமையாகச் சொல்லி விட்ட உணர்வு சரவணனிடம்.


April 14, 2010

சிரிப்பு


கைதட்டி சிரிக்கிறது

குழந்தை

தடுக்கி

விழுவதை

நான் நடித்துக்

காட்டியபோதெல்லாம்

என் விழுந்த மனதை
அதன் சிரிப்புதான்

தூக்கி நிறுத்துகிறது

அவ்வப்போது !


மழை பெய்து

ஓய்ந்தபின்

பார்த்தேன்

நேற்று

வரையப்பட்டிருந்த

ஓவியம்

கரையாமல்

என் மனதினுள் !

April 10, 2010

கச்சேரி


மேடையில் எவருமில்லை..

கீழே நாற்காலிகளில்

நிறைய மனிதர்கள்..

இந்த நிகழ்ச்சிக்கு

வைத்த டிக்கட்

ஆயிரம் ரூபாய்

முகம் சுளிக்காமல்

வாங்கி உள்ளே வந்திருந்தார்கள்..

கச்சேரி துவங்கியதும்

ஒவ்வொரு நிரவலுக்கும்

கைதட்டல்கள் ..

சீட்டு எழுதிக் கொடுத்து

விருப்பப் பாடல்கள்

கேட்டார்கள்...

இரவு முழுவதும்

இடைவிடாத பாட்டு..

விடியலில் சுகமாய் அலுத்து

வீடு திரும்பினார்கள்..

குழந்தைகள்

தூங்கிப் போயிருந்தன..

'இப்படி ஒரு சங்கீதம்

இதுவரை கேட்டதே இல்லை ..'

அடி மனசிலிருந்து

பாராட்டு ஒவ்வொருவரும்..

ஏற்பாடு செய்தவரைக்

கட்டிக் கொண்டார் ஒருவர்..

'இந்த யோசனை எப்படித் தோன்றியது? '

'எக்ஸ் ஐம்பதாயிரம் கேட்டாரு..

அப்பத்தான் தோணிச்சு..'

வெளியே விளம்பரப் பலகை..

'உள்ளே வரலாம்..

உங்கள் விருப்பம் போல

மனசுக்குள் பாடலாம் ..

எத்தனை மணி நேரம்

வேண்டுமானாலும்..'


மேடையை சுத்தம் செய்ய

எவ்வித நிர்ப்பந்தமும்

இந்த முறை ஏற்படவில்லை

பராமரிப்பு தொழிலாளிக்கு!



April 07, 2010

ஜீவிதம்


எனக்கான சிம்மாசனம்

அப்படியேதான்..

எவராலும் ஆக்கிரமிக்கப்படாமல் ..



அந்த ஒற்றை ரோஜாவும்

அதே செடியில்

பறிக்கப் படாமல் ..



காலதேவனின் தேர்

இன்னமும் விண்ணில்

சுற்றிக் கொண்டு

என் வருகைக்காக..



பிரபஞ்சம் முழுதும்

நிறைய புன்னகைகள்

எனக்காக பரிசுகளாய்..



ஏதோ ஒரு பகுதியில்

பெய்யும் மழை கூட

என்னுள் சிலிர்ப்பாய்..


யாருக்கேனும்


சொல்லப்படாத


ரகசியங்கள்


அடிமனதில் ஆழமாய் புதைந்து ..


ஜீவிதத்தை


அர்த்தப்படுத்திக் கொண்டு..





April 04, 2010

லூசு


கண்களில் மின்னும்

அன்பைக்

காணும்போதெல்லாம் ...

எதிரில் என்னைப்

பார்த்தால்

உற்சாகக் கூவலுடன்

நீ வரும் போதெல்லாம் ...

செல்லமாய் என் தலையில் தட்டி

'லூசு' என்று சொல்லும் போதெல்லாம் ..

உச்சி முடி கலைத்து

உன் மகிழ்ச்சி பகிரும் போதெல்லாம் ..

என் வாட்டம் பார்த்து

உன் மடி காட்டி

என் துயர் நீக்கும் போதெல்லாம் ...

தோன்றுகிறது பெண்ணே ..

உனக்காகத்தான்

முன் ஜென்மங்களில் எல்லாம்

நான் தவம் இருந்திருப்பேனோ என்று..