March 28, 2010

அஹோபிலம்

படத்தை பாருங்கள் .. அதன் பயங்கரம் அத்தனை தெளிவாக உணர முடியுமா தெரியவில்லை ..

இந்த படத்தில் உள்ளதை விடவும் இன்னமும் இடம் சின்னதாகி விட்டது .. இது முன்பு எப்போதோ எடுத்த படம் ..

இதுதான் உக்ர ஸ்தம்பம்!
பக்கத்தில் தெரிகிற பசுமை அதல பாதாளத்தில் உள்ள மரங்கள்.

'இந்த தூணில் இருப்பானா உன் ஹரி ? ' என்று ஹிரண்யன் கேட்டதும் தூணைப் பிளந்து கொண்டு வருகிற நரசிம்ஹர் .. இந்த இடத்தில்தான் வந்தாராம்.. மூன்று பக்கமும் அதல பாதாளம் .. விழுந்தால் சுலபமாய் மேலே போய் விடலாம்.
அடிவாரத்திலிருந்து தம் கட்டி மேலே ஏறி வந்தால்.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நரசிம்மர்.
இரணியனைக் கிழித்ததும் கை அலம்பிய இடம் சிவப்புக் கலரில் பாறை.. குழிவான இடத்தில் நீர்..
பயங்கரமாய் சறுக்குகிற மலை உச்சி ..
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மலை உச்சியை தொட்டால் உக்ர ஸ்தம்பம்..
அதை அடைய வழுக்குப் பறை மீது தவழ்ந்து .. ஒற்றை அடிப் பாதை போல கால் வைத்து நகர்ந்து .. நாலு பக்கமும் ஜிவ்வென்று அடிக்கிற காற்றில் பேலன்ஸ் செய்து ஏறி கீழே பார்க்காமல் அந்த இரும்புக் கம்பியை சுற்றி வந்தால் ' மகத்தான சாதனை' செய்து விட்ட பீலிங் !
நான் போனபோது அடித்து கொண்டிருந்த மழை.
வழிகாட்டி முதலில் மறுத்து விட்டார். வற்புறுத்தியதும் எட்ட நின்று காட்டுகிறேன் என்றார்.
சுற்றி வந்து கீழிறங்கியதும் ஒருத்தர் சொன்னார் .. யாரோ ஒரு பெண்மணி கீழே விழுந்து சிதறிப் போனதை.. அதுவும் கீழிருக்கும் ஜ்வால நரசிம்மர் பகுதியில்.
அதற்கும் மேலேதான் உக்ர ஸ்தம்பம் !
அடுத்த முறை போவேனா தெரியாது.. பர்வத மலை உச்சியில் அந்த குகைக்குள் 3 நாட்கள் இருந்த அனுபவம் ஒரு விதம் என்றால்.. அகோபிலம் உச்சி உக்ர ஸ்தம்பம் இன்னொரு விதம்..
நமக்கும் அவ்வப்போது த்ரில் வேண்டியிருக்கிறது.. இல்லையா?!

(அஹோபிலம் ஆந்திராவில் உள்ளது. கடப்பா ஸ்டேஷனில் இறங்கி காரில் அல்லது பேருந்தில் பயணிக்கலாம். அப்படித்தான் நான் போனேன். )

March 27, 2010

நுனிப்புல்


என்ன ஒரு அவசரம்

உங்களுக்கு

சொல்லி முடிப்பதற்குள்

சொல்லாத அர்த்தங்களை எல்லாம்

யூகித்து

பாராட்டோ ,

வசவோ

தந்து விடுகிறீர்கள் ..

அத்தனை வார்த்தைகளிலும்

ஊடுருவி நிற்பது

சொல்லப்பட்டும்

சொல்லப்படாமலும்

உங்கள் மீதான

பிரியமும் நேசமுமே ..

இருக்கும் ஒரு தேநீரை

பகிர்ந்து நாம்

குடிப்பதற்குள்

விலகிப் போகட்டும்

தொண்டைக்குழியில்

திணறிக் கொண்டிருக்கும்

விமர்சனங்கள்..

இழுத்து விடும் மூச்சில்

புதிதாய் பூக்கட்டும்

இன்று கண்டெடுத்த

நம் ப்ரியம்

March 21, 2010

நுகத்தடி மாடுகள்


என்ன சுலபமாய் ஆண்களுக்குக் கோபம் வருகிறது. மனைவி என்றால் இளப்பமா? சீறினால் எதிர்க்காமல் கேட்டுக் கொள்ள..

கை தன் போக்கில் அரிசி களைய.. என் எதிரே விசு முகம் சிவந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

எல்லாம் என்னால்தானாம். மாதம் பாதி ஓடுவதற்குள் முதல் தேதி சம்பளம் முழுவதுமாய்க் கரைந்து.. யாரிடம் உதவி கேட்பது என்று அலைய வேண்டியிருக்கிறதாம்.

பேசாதே.. நீ நினைத்தால் செய்யலாம்.

அத்தனை கோபத்திலும் சிரிப்பு வருகிறது. என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய் என் புருஷனே? மாதத் தேவைகள் நீ அறிவாய். கைப் பணம் அளவும் தெரியும். இடைவெளியை ஈடுகட்ட ஒரு வேளை கஞ்சி குடித்தால் மட்டுமே சாத்தியம். முடியுமா?தொட்டுக் கொள்ள புடலங்க்காய் கூட்டா.. எதுவும் பொரிக்கவில்லையா.. வறுக்கவில்லையா.. நாக்கு நீளத்தில் அடுப்பில் இலுப்பச்சட்டி ஏற்றப்பட்டுக் கடைசி சொட்டு எண்ணையும் ஊற்றப்படுகிறது. இத்தோடு ஒன்றே முக்கால் லிட்டரும் காலி.

மாத ஆரம்பத்தில் நிரப்பப்பட்ட டப்பாக்களும், சம்படங்களும், எண்ணைத் தூக்குகளும் , விஸ்தாரமாய்க் கடலை மாவுக் கனவுகளைத் தருகின்றன. சாப்பிட்ட ஜோர் மறந்து நடுவிலேயே புகைச்சல்.

'என்னால இனிமே தாக்குப் பிடிக்க முடியாது. பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்கு.'

சண்டை வேண்டாம். உக்கிரம் வேண்டாம். வா.. கை குலுக்கு. என்ன வழி ஆராயலாம். குறைந்த பட்சம் உன் மன இறுக்கம் தளர்த்துகிறேன். உன் பலம் புலப்படும். வெளியில் பணம் பல ரூபத்தில் காத்திருக்கிறது. சம்பாதித்து வரலாம்.

மாட்டார்! எப்போதும் சண்டைதான். எல்லாம் என்னால்தான்! குழந்தை வழக்கம் போல மிரண்டு பார்க்கிறது.

பின்னொரு சமயம் விமர்சனம் வெளிப்படும்.

'அப்பா ரொம்ப மோசம்'

மழலைக்கு சிரித்தால் இவருக்கு ரோஷம் வரும்.

'இல்லைடி கண்ணே. அப்ப முரடு இல்ல.. பாவம் பணம் இல்லாத கஷ்டம்தான்' என்கிற நீள வசனம் ஷாம்லியிடம் மட்டும் பேச முடியும். புஷ்பாவிடம் முடியாது.

அவள் என்னைப் போல. இரண்டு வயசில் சத்தத்துக்கு அதிர்கிறவள். எதுவானாலும் அடிக்குரல் போதும். இரைச்சல் எதற்கு என்ற விவேகம்.

சூடாகக் காபி டம்ளரை நீட்டினேன். அதற்கும் சீறிப் பாய்ந்தார்.

"என்ன.. குடிச்சுட்டு தெம்பா கத்தச் சொல்றியா"

"இல்ல.. டம்ளரைத் தரச் சொல்றேன்"

நகைச்சுவை புரியாத மனுஷன் இல்லை. நண்பர்கள் மனைவியோடு வந்தால் சட்டென்று முகம் மாறும். தோரணை மாறும். நிமிஷத்துக்கு ஒரு சிரிப்பு. ஒரு அறுவை. எப்படித்தான் சாத்தியம் ஆகுமோ.

எல்லா மனைவிகளுக்கும் இது விஷயத்தில் ஒரே மாதிரி மனக் குறைதான் போலிருக்கிறது.

நாராயணன் மனைவி ஒரு தடவை வாய் விட்டே சொல்லி விட்டாள்.

"இங்கே இப்படி ஜோக் அடிக்கிறார். வீட்டுல சிரிப்பே வராது"

ஹால் ஒரு நிமிடம் பொலிவிழந்தது. நாராயணன் கவனம் என்னை விட்டு விலகி தன் மனைவியை பரிதாபமாகப் பார்க்க வைத்தது.

"போன மாசங்கூட ஐந்நூறு ரூபாய் கடன் வாங்க வேண்டியதாப் போச்சு. ஞாபகம் இருக்கா"

கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? வேண்டுமானால் கல்யாணத்தைத் தவிர்த்திருக்கலாம். இனி எதுவும் செய்ய இயலாது. புஷ்பா பிரத்தியட்ச சாட்சி. ஐந்து வருட தாம்பத்தியத்திற்கு. அவளைக் கூட முடிந்தவரை தள்ளிப் போட்டோம்.

கல்யாணமான புதிதில் விசுவிடம் கண் பளிச்சிடும் அழகை இருட்டிலும் ரசிக்க முடியும். உதடு விரியாமல் ஓரச் சிரிப்பை 'ஒன்ஸ்மோர்' கேட்கத் தோன்றும்.

எல்லாம் குறைந்த காலத்துக்குள் காணாமல் போயின. சிடுசிடுவென்ற சுபாவம் இததனை நாட்களாக மறைத்து வைத்ததாய் இருக்க வேண்டும். எல்லாம் புது மனைவி என்ற ஜோருக்காக.

புஷ்பா வெளியில் ஓடிப் போனது. என்னால் தான் முடியவில்லை. அது இவரை நிராகரிக்கிற மாதிரி. முதுகில் குத்தின மாதிரி படும். இன்னும் அலறுவார். வேண்டாம்.ஆனால் இந்த நிமிஷம் அவருக்குத் தனிமை வேண்டும். அமைதி வேண்டும். நிதானம் வந்தால் பிரச்னை புரியும். தீர்வும் புரியும்.

என் அண்ணனைப் போல அவ்வளவு கஷ்டப்பட்டவனும் அல்ல. நான் மூன்றாவது தங்கை. மூன்று பேரைக் கரையேற்றின புண்ணியவான். என்றாவது சகோதரிகள் மூன்று பேரும் ஒன்று சேரும்போது அவன் தலைதான் விடிய விடிய உருளும்.

'இவனை யார் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணித் தரச் சொன்னது'

'நாம எவ்வளவு நிம்மதியா இருந்தோம்'

'இஷ்டப்பட்டா சமைச்சு.. இல்லேன்னா.. ஹோட்டல்ல வாங்கி..'

'ச்சே.. ஒரு மூணு முடிச்சு.. என்னமா திசை திருப்பிடுச்சு..நுகத்தடி மாடுகளா'

என் கணவனுக்கு ஒரே தங்கை. அதுவும் காதல் கல்யாணம். காதலித்த பையன் கையில் கரண்டி பிடிக்கிறவன்.அந்தத் தொழிலோடு நாம் தொடர்பு படுத்த முடியாத வசீகரம். புன்சிரிப்பு. டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டு வந்தால் 'எந்த கம்பெனி டெபுடி மேனேஜர்' என்று கேட்கலாம். ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் பின்னிருக்கும் சமையற்கட்டில் சற்றே அழுக்கு வேட்டியில் பார்த்தும் பிரமிக்கலாம்.

என்ன தொழிலானால் என்ன.. நேர்மை.. கைசுத்தம்.. பொய் இல்லை. கட்டினவளைக் கைவிடும் உத்தேசம் இல்லை. 'கடைசி வரை காப்பாற்றுவேன்' பிளாட் வாங்கியாச்சு. இப்போது காண்டிராக்ட் எடுத்து கல்யாண வேலைகளில் கணிசமாய் பணம் வருகிறது.

இவர் தங்கைக்கும் படிப்பு வரவில்லை. பள்ளி இறுதி வகுப்பு வரை ஏதோ ஒரு உந்து சக்தி உதவியது. சமையல் காதலனுக்கு இவள் படிப்பு அனாவசியம். நேசம் மட்டுமே கொட்டை எழுத்துக்களில். 'வா' என்றான் இரு கரம் நீட்டி.

யார் யாரோ சமாதானம் செய்தார்கள். பின்னால் வம்பு பேசினார்கள்.

சிக்கனமாய் எந்த உறவுக்காரனையும் கூப்பிடாமல் கல்யாணம் செய்தார்கள். 'ஓடிப் போனா நமக்குத்தான் அவமானம்'

'மாப்பிள்ளை என்ன பண்றார்'

'பிசினஸ். கை நிறைய பணம்'

சுலபமாய் பதில் சொல்ல முடிகிறது. அதிகம் பழகாத மனிதர்களிடம்.

இவருக்கு மட்டும் இன்னும் வீம்பு விடவில்லை. சொன்ன வார்த்தை.. 'உன் வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன். போடி.. இந்தக் கல்யானம் நீயா தேடிகிட்டது. நாளைக்கு கண்ணை கசக்கிகிட்டு இந்த வாசப்படி ஏறு.. அப்புறம் பார்க்கலாம்' இத்யாதி மிரட்டல்கள்.

இவர் வார்த்தை காப்பாற்றப் பட்டது. தனிக்குடித்தனம் வந்து விட்டோம் நாங்கள். தங்கை 'இவர்' வீட்டு வாசப்படி இன்னும் ஏறவில்லை.அவள் கல்யாணச் செலவு கூட இவருக்கு இல்லை.

என்ன.. சுபாவத்தில் கொஞ்சம் செலவாளி. கையில் காசிருந்தால் போதும். செலவழித்து விட்டு மறு காரியம். இருட்டில் நான் 'ரதி'யாவேன். பர்ஸ் காலி என்றால் வேதாளம் முருங்கை மரம் ஏறும்.

'பெண்டாட்டியா நீ.. உன்னாலதான் எல்லா கஷ்டமும்..'

இப்போதும் அதைத் தான் சொல்லிவிட்டு தடதடவென்று வெளியே போகிறார். இனி இரண்டு மூன்று மணி நேரத்துக்கு வீட்டில் அமைதி. அன்னிய தேசங்களுக்குக் கடன் உதவி கேட்டு வீட்டின் பிரதமர் பயணம். செய்தித்தாள் தலைப்பாய் மனசுக்குள் விரிந்தது.

வெகு நேரங்கழித்துத்தான் திரும்பினார். கையில் ஒரு பை நிறைய பழங்கள்.

லேசாக என்னுள்ளும் கோபம் வந்தது. கடன் வாங்கிய பணத்தில் இது என்ன டாம்பீகம்..

"இந்தா.. பிடி.. புஷ்பாக்குக் கொடு"

வாங்கி அனிச்சையாய் கட்டிலில் வைத்தேன்.

ஷர்ட்டைக் கழற்றி ஹேங்கரில் மாட்டினார்.

"நல்லாத்தான் இருக்கு வீடு.. எல்லா பர்னிச்சரும் இருக்கு.. ஃபிரிட்ஜ் கூட இப்போ வாங்கியாச்சு"

யாரென்று கேட்பேன் என்று நினைத்திருக்க வேண்டும்.நான் கேட்கவில்லை.

"அவதான் என் மூஞ்சியைப் பார்த்தே புரிஞ்சுண்டு பையில் திணிச்சுட்டா.. பொல பொலன்னு கண்ணுல தண்ணி.. பாசம் போகுமா"

லேசாக ஏதோ புரிந்தது.

"மாப்பிள்ளையும் ரொம்ப தங்கம். அடிக்கடி வாங்கோ.. இவ முகத்துல இப்பத்தான் சிரிப்பையே பார்க்கறேன்னார்.. நீங்கன்னா ரொம்ப உசிராமே இவளுக்கு.. தெனம் ஏதாவது ஒரு கதை சொல்லிண்டே இருப்பான்னார்"

ஏதோ பொட்டலத்தைக் கொடுத்தார்.

"பச்சைக் கற்பூரம்.. கல்யாணத்துல கிடைக்குமாம்.. என்ன வாசனை பாரு"
என்றார் குழந்தை போல உள்ளங்கை முகர்ந்து.

எனக்குள் வார்த்தைகள் மறந்தன.

"இந்தா செலவுக்கு வச்சுக்கோ"

இரண்டு நூறு ரூபாய்த் தாள்கள். பச்சைக் கற்பூர வாசனையுடன். மூன்றாவது தாளை ஞாபகமாய்த் தன் பர்சில் வைத்துக் கொண்டார்.

எனக்கு ஏனோ அழத் தோன்றியது.




March 19, 2010

தேஜஸ்


அனேகமாக எல்லோரும்

இடித்து முட்டி

தள்ளிக் கொண்டிருந்தார்கள்..

எவரிடமும் பொறுமை இல்லை..

'வரிசையில் போகலாமே' என்று

இரைச்சலுடன்

இன்னும் சிலர்

முன்னேற பார்த்தார்கள்..

சிலர் கரங்களில்

சிபார்சுக் கடிதங்கள் கூட !

உடல் உபாதைகள் சொல்லி

சிலர் வழி கேட்டார்கள்..

நெரிசலான அந்த பாதையில்

நசுக்குண்டு நின்றாலும்

யாரும் விட்டு தருவதாய் இல்லை..

பார்த்த உடன் என்ன கேட்பது என்று

மனசுக்குள் பிரார்த்தனை மூட்டைகள் ..

வியர்த்துக் கொட்டியதில்

குளிர் வசதிக்கு உள்ளூர

மனசின் ஏக்கம்..

குழந்தைகள் உள்ளே செல்ல மறுத்து

அடம் பிடித்தார்கள்..

'சனியனே .. இங்கேயே நில்லு பத்திரமா'

விட்டு செல்லும்போது

தாடி வைத்த அந்தப் பெரியவர் சொன்னார்..

'கவலைப் படாம போங்க .. நான் பார்த்துக்கறேன்..'

குழந்தைகள் கேட்ட எல்லாமும்

விரல் சொடுக்கில்

வரவழைத்துக் கொடுத்தவரின்

கண்களில் காருண்யம்..

இருட்டில் தீப ஒளியில் பார்த்துத்

திரும்பியவர்களிடம் முனகல்..

'விக்கிரகத்துல பழைய தேஜஸ் இல்லியே '






March 16, 2010

ஆபீஸ் பூனை



யார் முதலில் கவனித்தது என்று தெரியவில்லை.

இதர வேலைப் பகுதிகளுக்கும் அக்கவுண்ட்ஸிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் எந்தப் பேப்பரையும் துக்கிப் போட முடியாது.

பாப்புலரான ஜோக்.

அலுவலர் ஒருவர் ஆபீசரிடம் கேட்டாராம்.

'ஸார்.. பத்து வருஷமாச்சு. இந்த ஃபைலை டிஸ்போஸ் பண்ணிரலாமா' ஆபீசர் யோசித்துவிட்டு சொன்னாராம்.

'எல்லாத்துக்கும் ஒரு காப்பி எடுத்துகிட்டு டிஸ்போஸ் பண்ணுங்க' குவிந்திருக்கிற ஃபைல்களின் நடுவே எட்டிப் பார்த்த மாதிரி தெரிந்தது. ஏதோ அசைவை உணர்ந்து 'பாம்பு' பயத்தில் துள்ளிக் குதித்து பின் வாங்கிய சுகுணா மேடம் கீச்சென்று அலறியது கேட்டது.

கூடவே இன்னொரு அலறலும்.

"என்ன மேடம்"

"இங்கே ஏதோ அசையுது"

"நம்ம ஆபீஸ்ல ஏதோ வேலை நடக்குதுன்னு சந்தோஷப்படுவீங்களா.. அதை விட்டுட்டு"

"அய்யோ.. பாம்பு மாதிரி.."

அவ்வளவுதான். முன் எச்சரிக்கையாய் சிலர் வாசல் பக்கம் போய்விட, ஒரே ஒரு தைரியசாலி மட்டும் சீட்டில் இருந்தார்.

"கணேசன் ஸார்.. ஹியர்போனை காதுல மாட்டுங்க" என்று வாசல் பக்கமிருந்து குரல் கேட்டது.

சூழ்நிலை புரிந்ததும் அவரும் ஓடி வந்து விட்டார்.

"அட்டெண்டரைக் கூப்பிடுங்க"

"ஏன் ஸார் அவர் மட்டும் மனுஷன் இல்லியா"

இதற்குள் அந்த ஜீவனே பொறுமையிழந்து வெளியே வந்தது.

இத்தனை ஒல்லியாய் ஒரு பூனையை இதுவரை பார்த்ததே இல்லை. முழ நீளத்திற்கு ஒல்லி உடம்பு. குச்சியாய் கால்கள். கண்களில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது.

"எப்ப ஜாயின் பண்ணார்" என்று மலையாள அம்மணி கேட்க பூனையின் பூர்வோத்தர அலசல் ஆரம்பித்தது.

"நேத்து வரைக்கும் பார்க்கலியே"

டெஸ்பாட்ச் கொண்டு வந்த அட்டெண்டர் சொன்னார்.

"அட, இது இங்கே வந்திருச்சா.. மேல பர்ச்சேஸ்ல இல்ல இருந்திச்சு" "அக்கவுண்ட்ஸ்ல என்ன வேலை"

"டி ஏ கிளெய்ம் கொடுக்க வந்திருக்கும்"

"ஆன் டூட்டி போயே இளைச்சிருச்சு"

பாம்பு இல்லை, பூனை என்று தெரிந்ததும் மாமூல் லக..லக ஆரம்பித்து விட்டது. டீ நேரம் என்பதால் கொண்டு வந்து வைத்த டீயை சாசரில் ஊற்றி கீழே வைத்தார் ஒருவர்.

"ஏன் ஸார் டீ பிடிக்கலியா"

அதன் ஒல்லி உடம்பைப் பார்த்து தைராய்டு பிரச்னையில் இருந்த குமரவேலும் சந்த்ரிகாவும் பெருமூச்சு விட்டார்கள்.

"இந்தப் பூனை எலி பிடிக்காதா"

"இந்த உடம்போட அது ஓடறதுக்குள்ள எலி ரெண்டு மாடி தாண்டிரும்.. பாரு மூச்சு கூட விட முடியல"

தேநீரை முகர்ந்து விட்டு நிராகரித்து நகர ஆரம்பித்தது.

"பாரு நீ கொண்டு வர டீ அதுக்குக் கூட பிடிக்கல" என்று அட்டெண்டரைக் கலாய்த்தார்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்குள் அதன் வொர்க் அலோகேஷன் புரிந்து விட்டது. ஒன்பதரை மணி வரை எங்கே இருக்கிறது என்று முதலில் தெரியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது. பிறந்த வீடான பர்ச்சேஸில் ஒன்பதரை மணி வரை. பிறகு மெல்ல படியிறங்கி அக்கவுண்ட்ஸில் எல்லா செக் ஷனுக்கும் போய்விட்டு கடைசியில் எங்கள் பகுதி.

காலையில் கொண்டு வரும் டிபனில் ஒரு பகுதியை எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவார்கள். நான்கு வீட்டு டிபனில் அது எதை ஒதுக்குகிறதோ அதில் உப்பு உறைப்பு குறைவாய் இருப்பதை எந்த ஈகோவும் இல்லாமல் அந்தந்த மேடம் ஒத்துக் கொண்டு 'ஸாரி' கேட்பார்கள்.

"அவர் எதைப் போட்டாலும் ஒண்ணும் சொல்ல மாட்டார்"

"அவ்வளவு அனுசரிச்சுப் போவாரா"

"நீங்க வேற.. எதுவும் கண்டு பிடிக்கத் தெரியாது."

இவர்களின் பலத்த சிரிப்பு பூனையை எதுவும் செய்யாது. என்னதான் சாப்பாடு வைத்தாலும் அதன் எடை கூடவே இல்லை. உடலழகை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் வைத்திருந்தது ஒரு பக்கம் திகைப்பாகவும், குமரவேல் உள்ளிட்டோர்க்கு பொறாமையாகவும் இருந்தது.

"அதையேதான் நாம சாப்பிடறோம். நமக்கு மட்டும் எப்படி வெயிட் போடுது"
"அது எவ்வளவு ஏரியா பார்க்குது.. ஒரு எடமாவா இருக்கு.."

இந்தப் பூனை வந்தபிறகு ஃபைல்களை எலி கடிப்பது நின்று போனது. முன்பெல்லாம் பீரோவைத் திறந்தால் எலிப் புழுக்கையும் கடிபட்ட காகிதங்களும் உதிரும். கவிச்ச நாற்றம் அடிக்கும். பூனையின் வரவால் ஃபைல்களுக்கு விடிவு காலம் வந்தாலும் எங்களுக்கு பிரச்னையானது.

எந்த ஃபைலைக் கேட்டாலும் 'எலி கடிச்சிருச்சு' என்கிற நிர்வாக ரீதியான பதிலைத் தர முடியவில்லை இப்போது.

தன் ஒல்லி உடம்பை நீட்டி எம்பி லீவு போட்டிருந்த ஆபீசர் இருக்கையில் அது அமர முயற்சித்த ஐந்து, பத்து நிமிட சாகசங்கள் அந்த நேரம் எங்களிடம் வீடியோ காமிரா இல்லையே என்று ஏங்க வைத்து விட்டது.

"பூனைக்கு பேர் வைக்கலியே" என்று ஒருவர் வருத்தப்பட்டார்.

"ஆபீஸ் பூனைன்னுதானே சொல்றோம்"

"சமயத்துல அதை யாருக்கு சொல்றோம்னு குழப்பமாவுது"

"ஒல்லியா இருக்கே.. நம்ரன்னு வைக்கலாமா" என்று நம்ரன் ரசிகர் கேட்டார்.

"சேச்சே.. அவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு. வேற யோசிங்க"

எங்கள் கவலை எதனாலும் பாதிப்படையாமல் 'ஆபீஸ் பூனை' கால்களுக்கிடையே நுழைந்து அடுத்த பிரிவுக்குப் போய்க் கொண்டிருந்தது நிரந்தர அலுவலர் மாதிரி!



March 14, 2010

பத்து பெண்கள்

நிபந்தனைகள் :-உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்துநபர்கள்...சரியா..?

தொடர் பதிவிற்கு அழைத்த 'காவ்யா' விற்கு நன்றி!

காளியம்மாள் டீச்சர் : என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. வீட்டில் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பள்ளிக்குப் போயிருந்தேன். அத்தை உணவுடன் வர வகுப்பறையின் வெளியே அனுப்பி சாப்பிட வைத்து.. 'உனக்குக் கோபம் கூட வருமா' என்னை முதன் முதலில் செல்லம் கொஞ்சிய வெளி மனுஷி. 'கோபம் கூடாது ' என்று சொல்லவே இல்லை! ஆனால் என் கோபம் திசை பற்றி சொல்லாமல் புரிய வைத்தவர்.

எம். எஸ். : பிறர் சங்கீதங்கள் பற்றி புரிதல் அற்று இருந்தபோது தமது தெய்வீக குரலில் என்னையும் வசீகரித்தவர்.

கமலா செல்வராஜ் : 'அம்மா' என்கிற அழைப்புக் குரல் கேட்கத் தவிக்கும் ஜீவன்களுக்கு ஜீவன் தருபவர்.

பி.டி. உஷா : முதன் முதலில் இந்தியாவை ஒலிம்பிக்ஸில் கவனம் ஈர்த்தவர்.

டயானா : அந்த அழகு இன்னும் பல பேர் மனசில் சிதையாமல் தான் இருக்கிறது..

பி சுசீலா : இவர் குரலில் எத்தனை முறை மனசின் அமைதி மீட்கப் பட்டிருக்கிறது..

மெஸ் மாமிகள் : ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு ஊருக்கு பந்தாடப் படும்போது அடுக்களை வெப்பத்தில் உருக்குலைந்து சூடாய் சமைத்துத் தரும் 'அன்னலட்சுமி'களின் பெயர்கள் கூடத் தெரிவதில்லை. இவர்கள் சாதனைகளும் எவர்க்கும் சளைத்ததில்லை.

செல்லம்மா பாரதி : பாரதி ஒரு ஆச்சர்யம் என்றால்.. அவர் துணைவி இன்னொரு ஆச்சர்யம்! இரண்டு எக்ஸ்ட்ரீம் !

எனக்கு பிடித்த பெண்கள் பதிவில் சராசரி பெண்கள் பெயர்கள் தான் முதலில் மனசில் வந்தது. பிற பிரபலங்கள் ஏதோ ஒரு பின்புலத்தில் தானும் பிரபலம் ஆகி விட்டவர்கள். வாழ்க்கைப் போராட்டத்தில் பூமியில் கால் பதித்து ஒவ்வொரு நாளையும் சுலபமாய் கடந்து போகும் இந்தப் பெண்கள் என்னை சில நேரங்களில் கலங்கடித்து விடுகிறார்கள்.

என் பதிவில் விடுபட்டுப் போன மற்ற பெண்மணிகளுக்கும் சேர்த்து ஒரு சல்யூட் !

March 13, 2010

என்னுயிர்த்தோழி


கடவுளர்கள் எல்லோரும் நல்ல மூடில் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் சியாமளியை சந்தித்திருக்க முடியாது.

முதலில் என் சுபாவம் பற்றி சொல்லி விடுகிறேன். என் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்குவது கஷ்டம். மௌனி. மனசுக்குள் பேசிக் கொண்டிருப்பதில் சுகப்படுபவன். தவறி வெளியில் பேசிய தருணங்களில் விரோதம் சம்பாதித்தவன். அதனாலேயே மனசுக்குள் பேச்சு.

பழைய சினிமாப் பாடல்களில் (தமிழ்) ஆர்வம். நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.. என்னையும் அறியாமல் வாய் விட்டுப் பாடி இருக்க வேண்டும்.

சியாமளியின் சிரிப்பு கேட்டது.எங்களுடையது ஒண்டுக் குடித்தனம். மொத்தம் பதினைந்து குடும்பங்கள். வீட்டின் வாசல் ஒன்றுதான். நடுவில் வெட்ட வெளி. கிணறு. கிணற்றைச் சுற்றி ஒரே சமயத்தில் பத்து பேர் குளிக்கலாம்! வட்டமாய் சிமெண்ட்டில் கிணற்றைச் சுற்றி பீடம்.கழிவறை கடைக் கோடியில். வாசலில் நீர் நிரம்பிய வாளி இருந்தால் உள்ளே ஆள் என்று அடையாளம். தவிப்போடு காத்திருக்க வேண்டும். பெண்களுக்கு தனி.

'ப' வடிவத்தில் வீடுகள். முன்னால் சிமெண்ட் பிளாட்பார்ம். எல்லா வீட்டு வாசல்களிலும் சின்னப் பெண்களின் தலை சீவிக் கொண்டு அம்மாக்கள் வம்பளப்பதை என் வீட்டு வாசலிலிருந்து பார்க்கலாம்.

அம்மாவுக்கு நான் ஒரே பையன். பெண் வாடை இல்லை. அப்பா சமையல் தொழில். பட்சணங்கள் கொண்டு வருவார் சில நாட்களில். அம்மாவின் தேர்வுக்கு ஏற்ப அவ்வப்போது எந்தெந்த வீட்டுக்கு தருவது என்கிற பட்டியல் மாறும். வீடுகளுக்கு போய் பட்சணம் தருவதும் அந்தந்த வீட்டு அம்மாக்கள் என் முன் அம்மாவைப் புகழ்வதும் என் கன்னத்தை செல்லமாய் கிள்ளுவதும் வாடிக்கை. அவரவர் வீட்டுப் பெண்கள் அப்படித்தான் எனக்கு அறிமுகம்.

பத்து பதினைந்து வருடங்களாய் வீடு மாற்றாமல் இருப்பதும் உண்டு. வந்து கொஞ்ச நாட்களிலேயே காலி செய்து கொண்டு போவதும் உண்டு. பொதுவாய் அத்தனை பண வசதி இல்லாதவர்களின் புகலிடம் இந்த ஸ்டோர். (அப்படித்தான் எங்கள் குடியிருப்பு சொல்லப் பட்டது) இதுவே மாடர்ன் உலகில் பன்மாடிக் குடியிருப்பாகி விட்டது!

சியாமளி புதிதாய் வந்தவள். எங்கள் வீட்டுக்காரருக்கு தூரத்து உறவாம். 'அவங்களுக்கு வாடகையே கிடையாது' என்று கிசுகிசுக்கப்பட்டது. அடுத்த மாசமே சியாமளியின் அம்மா என் அம்மாவிடம் வந்து கைமாற்றாக ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். வாடகை தருவதற்காக. அதற்கும் இதர குடித்தனக்காரர்கள் பதில் வைத்திருந்தார்கள். 'அவ்வளவும் பொய்.. திரிசமன்' அந்த வார்த்தை இப்போதும் புழக்கத்தில் இருக்கிறதா தெரியவில்லை.

சியாமளியின் அம்மாவிடம் நல்லதாய் இருந்த இரண்டு புடவைகளும் தையல் போடப்பட்டவை. மற்றவை ஆங்காங்கே கிழிந்தவை. பிறகு சியாமளிக்கு தாவணியாகிவிடும் பாக்கியத்திற்கு உள்ளானவை.

அம்மாவின் மனசில் கடவுள் குடிபுகுந்தார்.

அப்பாவின் பலவீனமான தருணத்தில் 'பாவம்னா அந்தப் பொண்ணு.. உடுத்திக்க நல்ல டிரெஸ் இல்ல' என்று சொல்லி சின்னாளம்பட்டில் பாவாடையும் சுமாரான தாவணியும் (கலர் எடுப்பு) வாங்கிக் கொடுத்தாள். கூடவே சியாமளியின் அம்மாவும் நமஸ்காரம் செய்து வாங்கிக் கொண்டு போனார்கள்.

இதன்பின் எனக்கான அந்தஸ்து சற்று உயர்ந்தது.

சியாமளி அவளுக்குக் கிடைக்கும் தின்பண்டங்களை சேமித்து வைத்து என்னோடு பகிர்ந்தாள்.

அடுத்த குடித்தனக்காரர்கள் திணறலோடு செய்வதறியாமல் அம்மாவின் பக்கம் பாதி எதிர்த்தரப்பாக மீதி என்று பிரிந்தார்கள்.

பண்டிகை நாட்கள் தவிர துக்க தினங்களில் ஒரு நெருக்கடி வந்து விடும். தொண்ணூறு வயசுத் தாத்தா செத்துப் போனபோது எனக்கு தேர்வு. ஒரு பக்கம் விசும்பல் சத்தம். நான் சரியாகப் படிக்காத பகுதிகளை நினைத்து தேம்பிக் கொண்டே படித்ததை அம்மா பல நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

'அந்த தாத்தான்னா அவனுக்கு உசுரு. அழுதுண்டேதான் படிச்சான்'

சியாமளி படிப்பை நிறுத்தி விட்டதாய் சொன்னாள்.

எனக்குக் கஷ்டமாய் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன்.

'பாவம். படிப்பும் இல்லாம, உறவும் இல்லாம என்ன செய்வா?'

'நாம என்னடா பண்ணமுடியும்'

இதற்கு என்னிடமும் பதில் இல்லை. ஒரே இடத்தில் ஒண்டுக் குடித்தனம் இருக்கும் நாங்கள் பரஸ்பரம் உதவி செய்ய எந்த சாத்தியமும் இல்லைதான்.

சியாமளிக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. முதலில் பாடங்களை அப்படியே படித்து அவளுக்குப் புரிய வைக்க முயன்றேன். அதில் அலுப்பு வந்தபோது சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்தேன். கணக்கு சொல்லிக் கொடுத்தேன். சில பாடல்கள். சரித்திரக் கதைகள். எனக்குக் கிடைத்த கதைப் புத்தகங்கள்.

சியாமளியிடம் அவ்வப்போது ஒரு சுணக்கம் தெரிந்தது. கூட்டுக்குள் சென்று விடுகிற நத்தை போல. என்ன பேசி இழுக்க முயன்றாலும் வெளியே வராமல்..

சியாமளியின் அம்மா என் அம்மாவுடன் வந்து பேசிக் கொண்டிருந்தாள்.

'காய் நறுக்கறது.. கூடமாட ஒத்தாசை செய்யறது.. ஆள் வேணும்னா சொல்லுங்கோ.. நான் வரேன்'

அப்பாவிடம் சிபாரிசு செய்யப்பட்டது. அம்மா சொன்னபோது அப்பா முகத்தைச் சுளித்தார்.

'அதெல்லாம் கஷ்டம்டி'

'என்ன கஷ்டம்.. எப்படியும் ஆள் வேணும். இந்த மாமியைக் கூட்டிண்டு போங்கோ'

அரைமனதாகத் தலையசைத்தார்.

இரண்டு,மூன்று மாதங்கழித்து மாமியும் சியாமளியும் புதுத் துணிகள் கொண்டு வந்து காட்டினார்கள்.

'நல்லா இருக்கா சொல்லுங்கோ'

அம்மாவின் முகத்தில் தெய்வீகப் புன்னகை. நலிந்த குடும்பம் இன்று தன்னால் நல்ல நிலைமைக்கு வருகிறது என்கிற பிரகடனம் எதுவுமின்றி 'அவள் உழைப்பு.. அதன் பலன்' என்று யோசித்தமாதிரி அருள் வாக்கு.

நான் அப்பவே சொன்னேனே..உங்க கஷ்டம் எல்லாம் விடிஞ்சிரும்னு

சியாமளி என்னைப் பார்த்த பார்வையில் அபரிமிதமான பிரியம் தெரிந்தது. நானும் அவளும் பேசிக் கொண்ட போதெல்லாம் எங்கள் வருங்காலம் தனித்தனியே எப்படி இருக்கும் என்கிற விவாதம் நிச்சயம் உண்டு.

எனக்குக் கிடைத்த நல்ல தோழி என்கிற இமேஜ் என்னுள் இருந்தது. என் மனம் விட்டு என் கவலைகள், அச்சங்கள், எதிர்பார்ப்புகள், திட்டங்கள் எல்லாம் பகிர்ந்தேன். அவள் எதுவும் பதில் சொன்னதில்லை. நான் சொல்லும்போது கேட்டுக் கொண்டிருப்பாள். அதுவே எனக்கு ஆறுதலாய் இருந்தது.

எனக்குக் காலாண்டுத் தேர்வில் மார்க் குறைந்திருந்தது. அம்மாவின் முகத்தில் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது.

'என்னடா.. நீ நல்லா படிச்சு வேலைக்குப் போவேன்னு எதிர்பார்த்தேன்.. மண்ணள்ளிப் போட்டுருவியா'

'இல்லம்மா'

அதற்கு மேல் என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை.

சியாமளி என் அழுகையைப் பார்த்து பதறிப் போனாள்.'

உன் படிப்புல கவனம் சிதறிப் போனது என்னாலயா'

'இல்ல.. நான் நல்லாத்தான் எழுதினேன்'

'இனிமே என்னோட நீ பேச வேண்டாம்'

அதிர்ந்து போனேன்.

'அடுத்த பரிட்சைல நல்ல மார்க் வாங்கிட்டு வா..'

அது ஒரு அதிர்ச்சி வைத்தியம் என்று நினைத்தேன். நான்கு மணிக்கு எழுந்து படித்தேன். பலமுறை எழுதிப் பார்த்தேன். சியாமளி என் கண்ணிலேயே படவில்லை. அம்மாவுடன் உதவிக்குப் போகிறாள் என்று நினைத்தேன்.

என் கிளாஸ்மேட் குமார் இந்த சமயத்தில் உதவியாய் இருந்தான்.

'நீ ஒப்பி.. நான் கேட்கறேன்.. அப்புறம் நான் சொல்றதை நீ கேளு..'

அரையாண்டுத் தேர்வில் நானும் குமாரும் முதலிரண்டு இடங்கள்.சியாமளிக்கு பிராகிரஸ் ரிப்போர்ட் காட்ட ஓடி வந்தேன்.

வீடு பூட்டியிருந்தது.

"அம்மா.. சியாமளியைக் காணோம்.."

"அவங்க காலி பண்ணி போயாச்சே"

"எப்ப"

"பத்து நாளாச்சு.. உங்கிட்டே சொல்லச் சொன்னா.. நாதான் மறந்துட்டேன்.. நீ குமார் வீட்டுக்குப் படிக்கப் போயிருந்தே"

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

"கையில என்னடா"

அம்மாவிடம் கொடுத்தேன். முகம் மலர்ந்து போனது.

"ஹப்பா.. பகவான் கண்ணைத் திறந்துட்டார்.. நீ என்னை ஏமாத்தல"

ஆனால் அப்பா எங்களை ஏமாற்றிவிட்டார். ஒரு வாரம்.. பத்து நாட்கள்.. வீட்டுக்கு வரவே இல்லை.

கூடவே போகிற சுப்புணியைக் கேட்டோம்.

"அப்பா வரவே இல்லியே.. வெளியூர்னாக்கூட சொல்லுவாரே.."

சுப்புணி தலையைக் குனிந்து கொண்டார்.

"சொல்லுங்கோ.. அவர் எங்கே"

"வந்து.."

அவ்வளவும்நாடகம்.அப்பாஅரங்கேற்றியது.

எங்கள் சக குடித்தனக்காரர்களுக்குப் புரிந்த விஷயங்கூட எங்கள் மரமண்டைக்கு எட்டாமல் போயிருந்தது.

அப்பாவின் பெண். அந்த மாமி அப்பாவின் இன்னொரு மனைவி. நடுவில் ஒரு சிக்கல் நேர்ந்த போது அப்பாவுக்கு வேறு வழி தெரியவில்லை. பக்கத்திலேயே கொண்டு வந்து வைத்து விட்டார். பிறகு வேறு இடம் பார்த்து மாற்றி விட்டார். மாமி வாடகை வாங்கிக் கொண்டது 'அந்த' உரிமையில்தான். இல்லாமையில் அல்ல!

"யாராச்சும் ஒருத்தரோட இருங்கோ.. பொண் குழந்தையை வச்சிண்டு நான் அல்லாடறேன்"

சியாமளியின் அம்மா நியாயத்தீர்ப்பு வழங்கச் சொன்னதும் அப்பா எந்த அறிவிப்பும் இல்லாமல் போய்விட்டார்.

சுப்புணி கை கூப்பினார்.

"என்னை மன்னிச்சிருங்கோ.. சாடை மாடையா நான் முன்னால சொன்னப்போ.. நீங்க புரிஞ்சிக்கல.. எனக்கும் உடைச்சு சொல்ல முடியல.. எனக்கும் குடும்பம் இருக்கு. அவர் பார்த்து வேலை கொடுத்தாத்தான்.. என் புத்திக்கு தனியா போய் சமாளிக்க முடியாது.. அவர்கிட்டேயும் சொல்லிப் பார்த்தோம்.. நியாயமா.. எங்க வேலையான்னு தீர்மானிக்கச் சொன்னார்.. விட்டுட்டோம்.."

ஓடிப் போனார். பாவம் அவர் என்ன செய்ய முடியும்..கதவை மூடிக் கொண்டு எதுவும் சாப்பிடாமல் அன்றிரவு முழுவதும் விழித்திருந்தோம்.

அம்மா ஐந்து மணிக்கே கிணற்றடியில் குளித்து விட்டு வந்து விட்டாள்.

"நீ என் பேச்சைக் கேட்பியாடா.."

அழுகையுடன் தலையாட்டினேன்.

"முடிஞ்ச வரை படி..எனக்காக இல்ல"

அம்மா இப்போது வீட்டு வேலைக்குப் போகிறாள். சமையலும் செய்து, துணி துவைத்து உலர்த்தி..வீட்டு வேலைகள்.

அம்மாவிடம் இப்போது நல்ல புடவைகள் இல்லை. இருப்பதும் ஒட்டுப் போட்டவை. சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அழைத்து வருடத்தில் ஓரிரு புடவைகள் கிடைத்து விடுகின்றன. இல்லாத 'அப்பா'வால் அம்மாவுக்குக் கிடைத்த அந்தஸ்து!

அதன் பின் நான் சியாமளியைச் சந்திக்க முயற்சிக்கவே இல்லை.


March 07, 2010

கரைகளை உடைத்து..

என் கரைகளை

உடைத்துக் கொண்டிருக்கிறேன்

எதையும் அழிப்பதற்கல்ல ...

வறண்ட இதயங்களை

நனைப்பதே என் லட்சியமாய்..

ஆனாலும்

மீண்டும் எழும்புகின்றன

எனக்கான கரைகள்

இருபுறமும் இயல்பாகவே..


என்னதான் ஒளித்து

வைத்தாலும்

விதையை

செடியாய் கிளம்பி

இடம் காட்டி விடும்

நிஜமான நேசமும்

அப்படித்தான் !

இருட்டத் துவங்கியதும்

அம்மாக்களின் அழைப்பு

முழுதாய் இருட்டியதும்

வீடு திரும்பிய பிள்ளைகள்

எங்கே போவது

என்று புரியாமல்

நகரும் குட்டி நாய் !

ஒரு தடவையேனும்

சொல்லத்தான் வேண்டும்

கடவுளிடம் நன்றி

மனிதரிடம் நம் நேசிப்பு!

March 06, 2010

மழை வரும்


பங்களுருக்குப் போகிறேன் என்றதும் அனு வீட்டிற்குப் போகலாம் என்று உடனே தோன்றியது.

"நீயும் வரியா" என்றார்.

அவர் ஆபீஸ் வேலைதான். ஒரு வாரமாம். போக வர, ஹோட்டலில் தங்க என்று சகலமும் ஆபீஸ் செலவு.

"அனுவைப் பார்க்கணும். ரொம்ப நாளா வரச் சொல்றா"

"யாரு கவிதாயினியா" என்றார் உடனே.

என் சிநேகிதிகளில் அனு ஒருத்திதான் கவிதை எழுதுகிற, ரசிக்கிறவள். கடிதங்களின் முடிவில் ஒரு கவிதை நிச்சயம்.

போனமாதக் கடிதங்கூட 'மழை'க் கவிதையுடன்.

தகிக்கும் வெய்யிலில்

மழை வருமா என

ஒவ்வொரு நாளும் ஏக்கம்

மழை வரும் நாளில்

அதன் முகத்தில் அறைந்து

பால்கனிக் கதவை

மூடும் மனசு. “

எட்டிப் பார்த்த மழையின் முகத்தில் சுள்ளென்று கதவு அறைந்த காட்சி என்னுள் விரிந்து உடம்பு ஒரு தரம் தூக்கிப் போட்டது.

இவர் ஆபிஸிலிருந்து வந்ததும் லெட்டரைக் காட்டினேன்.

"எப்படி எழுதியிருக்கா பாருங்க"

"ம்..ம்"

தலையை மட்டும் ஆட்டினார் அன்று.

பங்களூருக்கு நானும் உண்டு என்று நிச்சயமானது. குழந்தையா, குட்டியா. அதன் படிப்பு பாழ் என்று பயணங்களை ஒத்தி வைக்க. ஆறு வருஷமாய் வெள்ளி நாகருக்குப் பால் அபிஷேகித்து ருசித்த பலன் கனவில் வருகிற பாம்பு மட்டும். வயிறு திறக்காமல் அதன் அழுத்தத்தில் ஜென்மாவின் ரகசியம் மூடியிருந்தது.

பிளாட் நம்பர் சரிதான். இரண்டு மாடி லிப்டில் போய் கதவைத் தட்டினால் திறந்தது வேறொருத்தி. அனுவை எதிர்பார்த்து சிணுங்கிய மனதை முகம் வெளிப்படுத்தி விட்டது.

"அனு" என்றேன் படபடப்பாய்.

"நீங்க"

"அவ ஃப்ரெண்ட். மதுரைலேர்ந்து வரேன்"

"தேர்ட் ஃப்ளோர்ல சி செவன்"

"இந்த அட்ரஸ்தானே.."

என் கேள்வி பாதியில் தடைப்பட்டது, என் முகத்தில் அறைந்த கதவால். என் அருகில் நின்றவர் வேறு புறம் திரும்பிப் பார்த்தார்.

'நல்ல வரவேற்பு' என்ற கேலி பார்க்காமலே புரிந்தது.

"வீடு மாறிட்டாளோ.. சொல்லவே இல்லியே" என்று முனகினேன்.

"என்ன பண்ணலாம்"

"மேலே போவோம். இவ்வளவு தூரம் வந்ததே அவளைப் பார்க்கத்தானே" என்று முன்னால் படியேறினேன்.

சி ஸெவன் கதவைத் தட்டினேன். கதவு திறந்து இம்முறை வயசான பெண்மணி.

"ஏனு பேக்கு"

"அனு இருக்காளா"

"நீங்க"

"அவ ஃப்ரெண்ட் நளினி. மதுரைலேர்ந்து வரேன்"

"உள்ளே வாங்க" என்றார் அந்தப் பெண்மணி.

ஹாலில் அமர்ந்தோம்.

"அனு. இங்கே பார்"

இன்னொரு அறையிலிருந்து அனு வந்தாள்.

"ஏய்.. என்ன சர்ப்ரைஸ்"

எனக்குள் உற்சாகம் பீறிட்டது. எழுந்து அவளருகில் போனேன்.

"நில்லு.. நில்லு" கைகாட்டி நிறுத்தினாள்.

"என்ன அனு " என்றேன் திகைப்புடன்.

"அவுட் ஆஃப் டோர்ஸ்"

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எங்கள் வீட்டில் அதையெல்லாம் பார்ப்பதில்லை. தயங்கினேன்.

"நீ எப்ப அட்ரஸ் மாறினே" என்றேன்.

"யாரு சொன்னா.. அதே அட்ரஸ்தான்"

"அப்ப.. ஏன் இங்கே இருக்கே" என்றேன் குழப்பமாய்.

"முதல்ல உட்கார். எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. நிறையப் பேசணும். எப்ப வந்தே.. எங்கே தங்கியிருக்கே.. எத்தனை நாள் இருப்பே.. ச்சு.. ஸாரை மறந்துட்டேனே.. ஹலோ.. ஹெள ஆர் யூ.." என்றாள் என் கணவர் பக்கம் திரும்பி.

அவர் புன்னகைத்தார். இதற்குள் அந்தப் பெண்மணி காப்பியுடன் வந்து விட்டார்.

"இவங்க தனலட்சுமி. இங்கே என் சிநேகிதி" என்றாள் அனு.

"நீங்க பேசுங்க. நான் ஏதாச்சும் டிபன் பண்றேன்" என்றார் தனலட்சுமி.

"அதெல்லாம் வேணாம்"

" ஏய்.. நீ சும்மா இரு. மாமி கையால ரவா உப்புமா சாப்பிட்டு பாரு. அப்புறம் நகரவே மாட்டே"

அவர் சிரித்து விட்டு சமையலறைப் பக்கம் போனார். என் கணவர் ஆங்கில தினசரியை எடுத்துப் பிரிக்க நான் அனுவின் அருகில் சற்று தள்ளி அமர்ந்தேன்.

"சொல்லு.. எப்படியிருக்கே" என்றாள்.

"ஏன்.. இங்கே இருக்கே"

"மாசத்துல மூணு நாள் இங்கே"

எனக்குப் புரியவில்லை.

"அந்த நாள்ல நான் சமையலறைப் பக்கம் வரக்கூடாது. ஆனா வீடு பெருக்கலாம். துணி துவைக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் இருக்கே. என்னோட சர்வீஸ் தேவையில்லே. ஸோ நானும் தேவையில்லே"

"என்னடி இது.. அதுக்காக.."

"இவங்க.. இவங்க ஹஸ்பண்ட் மட்டும்தான். இங்கே வா.. மூணு நாளும் இருன்னு சொல்லிட்டாங்க. சாப்பாடு கூட இவங்களே போடறாங்க. அந்த வேலையும் மிச்சம்னு எங்க வீட்டுல விட்டுட்டாங்க."

எனக்கு இன்னமும் புரியவில்லை. அனு என் குழப்பம் பார்த்துச் சிரித்தாள். "என்னோட ஓர்ப்படி அதான் என் கணவரோட அண்ணன் மனைவி. அவ கண்டிஷன். எனக்கும் சேர்த்து வேலை செய்ய மாட்டாளாம்"

"ஏன் உன் மாமியார்"

"அவங்க இப்ப பெட் ரிடன். உடம்பு முடியலே"

"என்னடி.. இது உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்லலியா"

"என் ஓர்ப்படி பத்து வருஷம் சீனியர். அவ பேச்சுக்கு மறு பேச்சில்லை எங்க வீட்டுல"

"ஏன் அவளுக்கு இந்த கண்டிஷன் கிடையாதா"

"அவ இதே ஊர்தான். அவ கல்யாணமாகி வந்த புதுசுல அந்த நாட்கள்ல அவ வீட்டுல கொண்டு போய் விட்டுருவாங்களாம்"

எனக்கு மனசு ஆறவில்லை.

"என்னடி.. இந்த கம்ப்யூட்டர் டேய்ஸ்ல இப்படி ஒரு அபத்தமா"

"ஸ்டாப்.. ஸ்டாப். கம்ப்யூட்டர் வந்தா பழக்கம் மாறணுமா என்ன. விடேன். நானே இதை பாஸிட்டிவா எடுத்துகிட்டேன். என் பிறந்த வீட்டுக்குப் போய் வர முடியாது. அந்த பிரச்னையும் இந்த மாமியால தீர்ந்தது. தாராளமா இங்கே வந்து தங்கிக்கோன்னு ரெண்டு பேரும் பர்மிஷன் கொடுத்துட்டாங்க. அசப்புல அவங்க பொண்ணு ஜாடையாம் நான். ஸ்டேட்ஸ்ல இருக்கா இப்ப. ஃபோன் பண்ணா, என்னோடயும் பேசறா. எங்க அம்மா அப்பா இப்பல்லாம் லோன்லியா ஃபீல் பண்றதில்லே உங்களால, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. அப்படீன்னு" எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கி.பி. இரண்டாயிரத்தில் இப்படி ஒரு பழக்கம். பெண்ணுக்குப் பெண்ணே தொந்திரவாய்.

"ஏய்.. நீ வேதனைப்படாதே. எனக்கு எந்த பிரச்னையும் இல்லே. என் ஓர்ப்படியால மாசத்துல மூணு நாள் வித்தியாசமான சூழல்.. மனுஷங்க.. அனுபவம் கிடைக்கிறது. ஐயாம் ஹேப்பி"

உப்புமா மணத்தது.

"எம்டிஆரே அசந்து போவாங்க. இந்த ரெஸிபி படு சீக்ரெட். யாருக்கும் சொல்லித் தரமாட்டாங்க. " என்றாள் அனு.

தனலட்சுமி அவளைப் பார்த்ததில் நிஜமான பாசம் பார்வையில். ரவா உப்புமாவே பிடிக்காத என் கணவரின் தட்டு உடனே காலி. அவர் கண்களில் மின்னியது பாராட்டு.

"தட்டை வச்சிருங்க. சர்வண்ட் மெயிட் வருவாங்க"

பேசிக் கொண்டிருந்தோம். விடை பெற்று வெளியே வந்தபோது திடீரென மழை தூறிக் கொண்டிருந்தது. சாரல் விழுகிற பக்கங்களில் ஜன்னல்கள் அடைத்திருந்தன.

ஆட்டோவில் ஏறும்போது மழைக்கு எப்படி வலிக்கும் என்று தோன்றியது என்னுள்.


(எப்போதோ எழுதிய கதை.. இப்பவும் இதற்கு அர்த்தம் இருக்கிறதா?!)

ராடானின் கிரியேடிவ் கார்னரில் SMART STORIES பகுதியில் இந்தக் கதை தேர்வு.

March 04, 2010

ஒற்றை விரல்

'ஒரு குழந்தையாகவே
உன்னை விட்டு வைக்கலாம்
காலம் ' என்றேன்..
'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் !

இரவின் நிசப்தம்
கிழித்த அழுகை
ஒரு குழந்தையின்
பசி என்று
திரும்பிப் படுத்தபோது
அவள் எழுந்து போனாள்
நீர் குடிக்க
என் அறியாமையைக்
கேலி செய்து .

இது வரை
பூக்கத் தெரியாத எனக்கும்
நீர் ஊற்றிப் போகிறது
அந்தப் பெயர் தெரியாத மேகம்..
என் பசுமை அப்படியே
உதிர்ந்த இலைகளுக்குப் பின்னும்.

சொட்டிக் கொண்டிருக்கிறது
மனசு
உன் ஒற்றை விரலுக்காக !

March 01, 2010

செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட்


கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான்.

பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள்.

டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

"ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல"

கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை.

"வேற எடம் பாரு" என்றான் முறைப்பாக.

"பஸ்ஸுல எடம் இருந்திச்சுன்னா.. நான் ஏன் ஒங்களைப் பிரிக்கப் போறேன்.. தயவு பண்னுப்பா.. ஏம்மா.. நீயாச்சும் மனசு இரங்கக்கூடாதா?"

கிழவியின் வேண்டுதல் இப்போது மனைவியின் மீது பாய்ந்தது.

பஸ்ஸில் இப்போது இன்னொரு நபரும் ஏறி முன்னால் இருந்த காலி இருக்கைக்கு இடம் போட முயன்றார்.

"இருப்பா. நாங்க நிக்கிறோம்ல" கிழவி அதட்டியது.

வந்தவர் பஸ்ஸில் இடமில்லை என்று இறங்கிப் போக, கிழவி மீண்டும் தன் குரலை உயர்த்தியது.

"அனுசரிச்சு.. உக்கார இடம் கொடுப்பா. உந் தாயா இருந்தா இப்படி யோசிப்பியா?"

கிழவியின் சுருக்கம் விழுந்த முகம், நேரடிப் பார்வை, குரலின் வயதை மீறிய கணீர், அதை விடவும் வார்த்தைகாளில் தொனித்த உறுதி.. கணவன் சலிப்புடன் எழுந்து விட்டான்.

"நல்லாயிருப்பா.. ஏ.. வடிவு.. ஒக்காரு. நான் இப்படி உக்கார்றேன்"

வடிவு அமர, ஓரத்தில் கிழவி அமர்ந்தது. சுருக்குப் பையைத் திறந்து அம்பது ரூபாய்த் தாளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு பையை மீண்டும் பத்திரப்படுத்தியது.

"பஸ்ஸுதான் ரொம்பிப் போச்சே... எப்ப எடுப்பாங்களாம்?"

யாரும் பதில் சொல்கிற மூடில் இல்லை. அதே நேரம் எல்லோரும் எதிர்பார்த்த கேள்வியும் அதுதான்.

"பஸ்ஸே வராது. வந்தா ஒரே நேரத்துல மூணு பேரு வருவாங்க" கிழவியைப் போலவே சதா பேசத் துடிக்கிற இன்னொரு நபரின் குரலும் கேட்டது.

கண்டக்டர் பஸ்ஸுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். தனக்கும் அந்த பஸ்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல.

டிரைவர் அங்கே வெளியே நின்ற கும்பலில் எந்த மூலையில் நிற்கிறார் என்றே புரிபடாத நிலை.

"ஒரு கோடி.. நாளை குலுக்கல்.. ஒரு கோடி"

கை நிறைய லாட்டரி சீட்டுகளுடன் பஸ்ஸின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை சிறுவன் வந்தான்.

"டிக்கெட் எம்புட்டு?" .

"இருவது ரூபா. பரிசு ஒரு கோடி பாட்டி. அப்புறம் நீ கவலையே பட வேணாம்"

பஸ்ஸில் சிலர் சிரித்தனர்.

கிழவி இத்தனை வயசில் ஒரு கோடி ரூபாய் பணத்தை என்ன செய்யும் என்ற யோசனையில்.

டிரைவர் இருக்கையில் வந்தமர்ந்து கண்ணாடியில் தன்னையும், பின்னால் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்துக் கொண்டார்.

"எப்ப எடுப்பீங்க?"

கிழவி டிரைவரைக் கேட்டது.

"ஏன் பாட்டி.. அவசரப்படறே.. பொண்ணு பார்க்க வாராங்களா"

"ஆமாப்பா. யோக்கியமா ஒருத்தனும் அமையாம.. இத்தனை வருஷம் கன்னியா காலத்தை ஓட்டிட்டேன். எல்லோரும் உன்னைப் போலவே இருந்தாக்க.. நம்ம நாட்டுப் பொண்ணுங்க கதி இப்படித்தான்."

கொல்லென்று பஸ்ஸில் சிரிப்பொலி கிளம்பியது. டிரைவர் முகம் கறுத்தது.

"ஏ.. கிழவி.. நான் உன்னிய பொண்ணு பார்க்க வாராங்களான்னு கேட்டேனா. பொதுவாத்தானே கேட்டேன்"

"நானும் என்னப்பா சொல்லிட்டேன்.. பொதுவாத்தானே சொன்னேன். யோக்கியமா உன்னைப் போல இருக்கற கொஞ்ச பேரும் கல்யாணம் ஆனவுங்களா இருக்கறதால மத்த பொம்பளைங்க.. புருஷன் அமையாமத் திண்டாடறாங்கன்னுதானே சொன்னேன்"

நச்சென்று பதில் சொன்னதும் கிழவிக்கு பஸ்ஸில் ஆதரவாளர் கூட்டம் அதிகமானது. இடங் கொடுத்த கணவனும் தன் மனைவியை விட்டு நகர்ந்த துக்கம் மறைந்து சூழலின் கலகலப்பில் ஒன்றிப் போனான்.

"நல்லாப் பேசறீங்க பாட்டி"

"எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்பா".

கண்டக்டர் சீட்டு கொடுத்துக் கொண்டே வந்தார். கிழவி அம்பது ரூபாய்த் தாளை நீட்டியது.

"ரெண்டு செங்கிப்பட்டி"

"அங்கே நிக்காது பாட்டி"

"ஏம்பா.. ஊரைக் காலி பண்ணிட்டாங்களா?" என்றது அப்பாவியாய்.

"இது இடை நில்லாப் பேருந்து பாட்டி.. கண்ட எடத்துல நிக்காது"

"கண்டக்டர் தம்பி.. நான் வயசானவ. படிப்பறிவு கிடையாது. தெரியாம இந்த வண்டி போவும்னு நினைச்சு ஏறிப்புட்டேன்.. பெரிய மனசு பண்ணி இறக்கி வுட்டுரு.. ரெண்டு பேரும் விரைசலாப் போவணும்"

"சொன்னாப் புரியாதா.. உனக்கு. சட்டு புட்டுனு எறங்கு. வேற டிக்கிட்டு ஏறியிருக்கும். அதையும் கெடுத்துபுட்டே. பஸ்ஸு கெளம்பற நேரத்துல ஒன்னோட ரவுசு பண்ணமுடியாது"

"போற வழிதானப்பா.. எறக்கி வுட்டுட்டுப் போயேன்"

"இது போவாது. எறங்கு"

"தயவு பண்ணுப்பா"

டிரைவர் திரும்பிப் பார்த்தார்.

"என்னப்பா கலாட்டா"

"செங்கிப்பட்டிக்கு போவணுமாம். நிறுத்தி இறக்கி வுட்டுட்டுப் போன்னு சட்டம் பேசுது"

"சொல்ல வேண்டியதுதானே.. இது பாயிண்ட் டு பாயிண்ட்னு"

"கிழவி லா பாயிண்ட்ல பேசுது"

"எறக்கி வுடு.. நேரமாவுது"

"யப்பா.. பெரிய மனசு பண்ணுங்கப்பா. தெரியாம ஏறிப்புட்டேன்.. பொட்டச்சி.. படிப்பறிவில்லே"

"ஏறினதுலேர்ந்து இந்தக் கிழவி என்னமா கலாட்டா பண்ணுது"

"பாவம்.. ஆம்பளைத் துணை இல்லே.. விவரம் புரியாம ஏறிடுச்சு. என்ன பெரிய பாயின்ட் டு பாயின்ட்.. ரெண்டு பேரை அவசரத்துக்கு நிறுத்தி எறக்கி வுட்டாத்தான் என்ன".

பஸ்ஸில் கூட்டம் கட்சி பிரிந்து இரு தரப்பும் பேசியது. கிழவி விரல்கள் நடுங்க பணத்தாளை நீட்டிக் கொண்டிருந்தது. வடிவு நடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள், கையில் ஒரு மஞ்சள் பையைப் பற்றிக் கொண்டு.

"பஸ்ஸை எடுங்கப்பா.. நேரமாவுதில்ல"

அலுப்பான சில பயணிகள் முனகினர்.

"கிழவியை எறங்கச் சொல்லுங்க. பஸ்ஸு உடனே கிளம்பிரும்" என்றார் டிரைவர்.

"இது என்னய்யா.. கூத்து. உங்க பிரச்னைக்கு எங்களை ஏன் தொல்லை பண்றீங்க"

"கண்ட எடத்துல நிறுத்தி எறக்கி வுட்டா.. நீங்களே புகார் கொடுப்பீங்க. இது என்ன ரூலு.. இன்ன தேதி.. இன்ன டிரைவரு.. பஸ்ஸைத் தகாத எடத்துல நிறுத்தினாருன்னு.. மெமோ.. சார்ஜ் ஷீட்னு நாங்க நாயா அலையணும். அப்படித்தானே" டிரைவர் சீறினார்.

"போன தரம்.. யாரோ கர்ப்பிணிப் பொண்ணு வலியால துடிச்சிதுன்னு நிறுத்தி எறக்கி விடப் போக.. என்னமா அலைய வுட்டாங்க. தப்பான எடத்துல எறக்கி பிரசவம் கஷ்டமாயிருச்சுன்னு..நிறுத்தச் சொன்னதே கூட வந்தவங்கதான்" என்றார் கண்டக்டர் தன் பங்குக்கு.

பஸ்ஸுக்குள் உஷ்ணம் எகிறிக் கொண்டிருந்தது. காற்றோட்டம் இல்லாததாலும், பிரச்னைக்குத் தீர்வு கிட்டாததாலும்.

"ஏய்.. கிழவி.. உன்னாலதான் இப்ப பிரச்னை.. பஸ்ஸு போவாதுன்னா இறங்குவியா"

தாமதமாகிற எரிச்சலில் பயணிகளில் சிலர் கிழவியை நோக்கிக் கோபத்தைத் திருப்பினார்கள். கிழவி பதில் பேசவில்லை. தனக்குச் சாதகாமாய் ஏதாவது வழி பிறக்காதா என்ற நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தது.

"லக்கேஜைக் கீழே போடுங்க. தன்னால இறங்கிப் போயிரும்" என்றார் ஒருவர் முரட்டுத்தனமாய்.

கிழவி அசையவில்லை. என்னதான் நிகழும் என்று பார்ப்பது போல.

"அந்த அண்டா.. குடம் அவங்களதுதான்"

யாரோ அடையாளம் காட்டினார்கள்.

"கண்டக்டர்.. எடுத்துக் கீழே வீசுங்க"

பாவச்சுமை கண்டக்டருக்கு என்று தீர்மானித்தது போல தீர்ப்பு வழங்கப்பட்டது.

கண்டக்டர் இதற்குள் மற்றவர்களுக்கு டிக்கட் போட்டு முடித்து விட்டார். அடுத்ததாய் நின்ற பஸ்ஸிலிருந்து கண்டக்டர் இரைந்தார்.

"உங்க டயம் என்னப்பா? ஏன் இன்னும் நிக்கறீங்க"

"இவன் வேற.. விவரம் புரியாம"

கண்டக்டர் ஜன்னல் வழியே தலையை நீட்டிப் பேசினார்.

"பஸ்ஸுக்குள்ளே பிரச்னைப்பா"

"எந்தப் பிரச்னையா இருந்தாலும் டயத்துக்கு வண்டியை எடுத்துட்டு.. வழியிலே போயி பேசிக்குங்க. அடுத்த டிரிப் நாங்க போக வேணாமா?"

"ஏய்.. கிழவி உன்னால எவ்வளவு தொல்லை பாரு.. சனியன் எறங்கித் தொலையாம.. ராவடி பண்ணிகிட்டு"

"எறக்கி வுடுங்கப்பா.. என்னவோ சமாதானப் பேச்சு பேசிகிட்டு"

"வயசான பொம்பளைன்னு பார்க்கிறேன்"

"அதுக்கேத்த மரியாதை இல்லியே அதுகிட்டே.. அழிச்சாட்டியம் பண்ணுது" "ஏதாச்சும் பண்ணுங்க"

அடுத்த பஸ்ஸிலிருந்து ஹார்ன் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.

"பஸ்ஸை எடு"

"தெரியாத்தனமா இதுல ஏறிபுட்டேன்"

"விவரங் கெட்ட ஜன்மங்க.. எப்படி வீம்பு புடிக்குது பாரேன்"

பஸ்ஸில் இரைச்சல் அதிகப்பட்டுக் கொண்டே போனது. அடுத்த பஸ் கண்டக்டர் இறங்கி வந்து கூச்சல் போட்டார்.

"இப்ப எடுக்கப் போறீங்களா.. இல்லே.. நான் புகார் கொடுக்கவா?"

டிரைவர் முகத்தில் கோபம் தகித்தது.

"என்னடா பண்றே.. கிழவியைத் தள்ளி வுடுரா கீழே"

கண்டக்டர் மெல்ல அவர் அருகில் போனார்.

"வேணாம்ணே. இப்பதான் சஸ்பென்ஷன் முடிஞ்சு டூட்டி ஜாயின் பண்றீங்க.. மறுபடி எதுக்கு என்னொரு தகராறு"
"ஸ்டாப் இல்லாத எடத்துல நிறுத்தச் சொல்றியா"

"பிரச்னை வேணாம்னு பார்த்தேன். பஸ்ஸுல ரெண்டு பேர்கிட்டே விலாசம் வாங்கிக்குவோம். வேற வழி இல்லாமத்தான் நிறுத்தினோம்னு. வளர்த்தாமப் போயிருவோம்ணே"

டிரைவர் பஸ்ஸைக் கிளப்பிய வேகத்தில் அவர் சீற்றம் தெரிந்தது. கண்டக்டர் டிக்கட்டுகளையும் மீதிச் சில்லறையையும் கிழவியிடம் வீசினார்.

"கிழவி பேசியே ஜெயிச்சிருச்சு.. பாரேன்"

யாரோ சொன்னது பஸ்ஸுக்குள் கேட்டது.

"ஒம் மாமியா.. சரியான அழுத்தம். என்னமா சாதிச்சிருச்சு"

வடிவு தோளைத் தொட்டு பின் சீட்டுப் பெண்மணியின் பாராட்டு.

"ஆ..ஆங்"

வடிவு திரும்பிப் பார்த்து முனகியது வினோதமாய் இருந்தது. பின் சீட்டுப் பெண்மணி சங்கடத்துடன் வடிவைப் பார்த்தாள்.

கிழவி திரும்பி அவளைப் பார்த்தாள்.

"அவளுக்குப் பேச வராது.. தாயி. ஊமைச்சி"

"எ..என்ன"

பஸ் இதற்குள் காம்பவுண்டை விட்டு விலகி பிரதான சாலைக்கு வந்து செங்கிப்பட்டி ரூட்டில் ஓட ஆரம்பித்திருந்தது.

"ஆமா.. தாலி கட்டறப்ப.. அவங்க வீட்டுச் சீரும்.. இந்தப் பொண்ணோட ஒடம்பும் எம் புள்ளைய மயக்கிருச்சு. மோகம் முப்பது நாளுன்னு சும்மாவா சொன்னாங்க.. இவ பேசற அழகை இழந்துட்டான்னு எம்புள்ளைக்கு சலிப்பு தட்டிப் போயி.. பேசற இன்னொரு சிறுக்கி பின்னால போவ ஆரம்பிச்சுட்டான்" கிழவி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள்.

குமுறல் குரலில் கொப்பளித்தது.

"பக்கத்துல யாரோ பாவப்பட்டவங்க தகவல் அனுப்பி வுட்டாங்க. இந்தப் பொண்ணைச் சாவடிச்சுப் போடறதுக்குள்ளே வந்து கூட்டிகிட்டு போயிருன்னு"

கிழவி முந்தானை ஈரம் பட்டு உறிஞ்சிக் கொண்டது.

"பேசி.. செயிச்சுப்புட்டேன்னு சொன்னீங்களே.. எம் பேச்சு எம் புள்ளைகிட்டேயே எடுபடலியே..என்னியும் சேர்த்து அடிச்சு விரட்டிப்புட்டான்..அந்தப் பாவிப் பய. எம் பின்னால வாடின்னு கூட்டிகிட்டு வந்தேன். எங் கடைசிக் காலம் வரை நான் பார்த்துக்கிறேன். பின்னால எஞ்சொத்து ஒனக்குன்னு"

பஸ்ஸில் அதற்குள் கிழவி சொன்னது முழுமையும் பரவிக் கொண்டிருந்தது. "பொட்டச்சிதானேன்னு பல்லுல போட்டு.. நாக்கை வெட்டற மனுஷப் பொறவி பெருத்த ஊராப் போச்சு. என்னிக்காவது நியாயம் எடுபடாமயாப் போவும் "

செங்கிபட்டியில் வழக்கத்தை மீறி அந்தப் பேருந்து நின்றபோது சில பயணிகளே லக்கேஜை இறக்கி வைக்க, டிரைவர் நிதானித்து வண்டியை எடுக்க, கிழவியையும் மருமகளையும் பார்த்தபடி பயணிகள் வீற்றிருக்க.. இடை நில்லாப் பேருந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது.

(கல்கி வைர விழா சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை)