February 21, 2016

அம்மு 19
அம்மு என்னிடம் சொன்னபோது முதலில் எனக்குப் புரியவில்லை. நல்ல தூக்கத்தில் எழுப்பி முழு நினைவுக்கு வருவதற்குள் சொல்லப்பட்ட விஷயம்.
‘ நீங்க அப்பா ஆகப் போறேள்’
‘அப்பா தூங்கிண்டு இருப்பாரே’
‘ஹைய்யோ.. முழிச்சுக்குங்கோ ‘
மிரள மிரள விழித்தேன்.
‘நீங்க அப்பா ஆகப் போறேள் ‘ என்றாள் நிறுத்தி நிதானமாய்.
அம்முவின் முகம் இருட்டில் ஜொலித்தது. 45 நாள் சிசுவை வயிற்றில் தொட்டுப் பார்த்தேன்.
“அம்மு. அம்மாட்ட சொன்னியா “
“முதல்ல உங்ககிட்ட”
“அம்மாவை எழுப்பட்டுமா”
“லூசா நீங்க “
கொஞ்ச நேரம் கொஞ்சினோம். அம்மு தூங்கி விட்டாள் என்று புரிந்ததும் ஹாலுக்கு வந்தேன் . அம்மா தூக்கத்தில் புரண்டாள். எழுப்புவதா.. ச்சே..
திரும்பி விட்டேன். அம்மாவின் குரல் கேட்டது.
“என்னடா கண்ணா “
அம்மாவின் கைகள் என்ன மிருது. என் கண்ணீர் நனைத்தது. பேச அவசியமில்லாத தருணங்கள் வாழ்வில் சில.
“நிஜம்மாவாடா.. நினைச்சேன்.. அவ முகத்தைப் பார்த்து..”
“அவளே கார்த்தால சொல்வாம்மா “
அம்மா எழுந்து பெருமாள் சன்னிதிக்குப் போனாள். கோவிலாழ்வார் தூக்கத்தில் இருந்தார். உள்ளிருந்த தவழும் கிருஷ்ணன் என்ன சொன்னாரோ.. அம்மா ஜ்வலிக்கிற முகத்துடன் வந்தாள்.
“போடா.. போய்த் தூங்கு.. அவ தனியா படுத்துண்டிருக்கா “
அம்முவைத் தலையில் தாங்கிய கால கட்டம் அது. கை உசத்தினாலே போய் பறித்துக் கொண்டு வந்து நின்றோம். இது பிடிக்குமோ அதுவோ என்று தினம் செய்தவைகளை அம்மாளு சாப்பிட்டு புஷ்டி ஆகிக்கொண்டிருந்தாள்.
சீமந்தம் முடிந்ததும் அம்முவை அழைத்துக் கொண்டு போவார்கள் என்று பேச்சு எழுந்ததும் நான் சொன்னேன்.
‘இங்கேயே வச்சு பார்த்துக்கலாமே’
‘உளறாதே.. அம்மு அவாத்துக்கு போகிறதுதான் நல்லது.’
‘அம்மு நீ சொல்லு. இங்கே இருக்கியா அங்கே போறியா’
அம்மு மௌனமாய் இருந்தாள்.
‘சொல்லு அம்மு ‘
‘அவா வருத்தப்படுவாளே போகாட்டி’
‘உன் இஷ்டம் என்ன’
‘போயிட்டு வரேனே’
எனக்குள் இருந்த விஸ்வாமித்திரரும் துர்வாசரும் தங்களை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு அது.
“போய்க்கோ .. அங்கேயே இருந்துக்கோ”
அம்முவின் அம்மா பக்கத்தில் இருந்தாள். என்னை விட நிதானமாய் அழுத்தமாய் சொன்னாள்.
‘அம்முவைப் பார்த்துக்க எங்களுக்கும் தெரியும். நாங்களே வச்சுக்கிறோம்’
முறைத்துக் கொண்டு வந்து விட்டேன். அந்த வாரம் அலுவலகத்திலிருந்து அப்படியே பஸ் பிடித்துப் போனேன். நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து காலிங் பெல் அடித்தேன்.
இரவு 12 மணிக்கு தோசை வார்த்துப் போட்டார்கள். அம்முவை ஒரு வார இடைவெளிக்குப் பின் இருட்டில் அருகில் பார்த்தபோது போன வாரம் நானா கத்தினேன் என்று இருந்தது.
ஜ்வல்யா பிறந்தபோது தற்செயலாய் நான் அங்கிருந்தேன்.
‘அம்முவை வலி எடுத்ததுன்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போயிருக்கா’
ஹாஸ்பிடல் ஓடினால் .. ஜ்வல்யா பிறந்தாச்சுன்னு தகவல்.
அப்படியே குட்டி அம்மு. தலைமுடி கருகருவென்று .. அம்மாவுக்கு தகவல் சொல்லி விட்டேன் . அன்று கிளம்ப மனசே இல்லை. மறுபடி புண்ணியாகவசனத்திற்கு வரவேண்டும் .. லீவு போடணும்.
அந்த மூன்று மாசம் நான் நிலை கொள்ளாமல் இருந்தேன். 6 மாதத்தை மூன்றாக குறைத்து எனக்கு சலுகை தந்தார்கள்.
‘மாப்பிள்ளையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.. அம்முவைக் கொண்டு போய் விட்டுறலாம்’
ஜ்வல்யா வந்தபின் எங்கள் வீட்டில் களை கட்டி விட்டது.
‘என்னடா பொண்ணு தானா ‘ என்று கேட்டால் போதும் என்னை அடக்குவது சிரமம்.
‘ஏன் இப்படி கோவம் வருது உங்களுக்கு ‘ அம்முவுக்கே ஆச்சர்யம்.
எனக்கும் புரியவில்லை. பிறகு வருத்தப்படுவேன். ஆனால் மறுபடி அதே கேள்வியை எதிர் கொண்டால் துர்வாசர் தான்.
ஜ்வல்யா இரவில் விளையாடுவாள். பகலில் தூக்கம். இரவில் அவள் அழுதால் அம்முவை எழுப்புவேன்.
‘விடுங்க ‘
‘அவ அழறாம்மா’
‘கொஞ்ச நேரம் மடில போட்டு ஆட்டுங்க .. தூங்கிடுவா ‘
அது பசி அழுகையா .. தூக்க அழுகையா .. இந்த வித்தியாசங்கள் அம்முவுக்கு எப்படி புலனாச்சு.
மடியில் ரோஜா புஷ்பத்தைக் கிடத்திக் கொண்டு வலது துடை தானாக ஆடியது.
இதுவே கிண்டலாச்சு என் மீதும்.
‘கண்ணன் சும்மா இருக்கும் போதும் தானா தொடையை ஆட்டிண்டு இருக்கான்’
அம்மு தூங்கிக் கொண்டிருந்தாள். ஏன் சட்டென்று விழிப்பு வந்தது .. தெரியவில்லை. ஜ்வல்யா தானாய் கையாட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.
‘குட்டி..’
‘ப்பா’
அம்முதான் கூப்பிடுகிறாள் என்று முதலில் நினைத்தேன். இல்லை.. அவள் தூக்கத்தில். ஜ்வல்யா !
என் எச்சில் முத்தம் அழுத்தமாய் பதித்தேன்.
லைட் எரியும் கீச்சிடும் ஷூ அம்முவால்தான் எனக்குத் தெரிந்தது. ஜ்வல்யா நடக்க ஆரம்பித்ததும் அதை வாங்கினோம். வெளியே போனால் ஜ்வல்யாவை தூக்கிக் கொள்வது என் பொறுப்பில். உச்ச கர்வம் அப்போது. யாரும் சாதிக்காத ஒன்றைச் செய்த மாதிரி.
இதிலும் ஒரு நாள் ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. அன்று என்னவோ ஒரு சோர்வு. ஜ்வல்யாவை நடக்கச் சொன்னேன்.
‘தூக்கிக்கோப்பா ‘
தூக்கிக் கொண்டேன் .
‘நீ காலேஜுக்கு போனாலும் நான் தான் தூக்கிண்டு போகப் போறேன்’
சொல்லியிருக்கவேண்டாம். வாயில் சனி.
‘இறக்கி விடுப்பா ‘
விடுவதற்குள் அப்படியே சறுக்கி விட்டாள். கடைசி வரை நடந்தே வந்தாள். அம்முவிடம் பொருமித் தீர்த்து விட்டேன். பாரேன்.. எத்தனை வீம்பு.
அதன் பின் அவளை நான் எதுவும் சொன்னதில்லை. அவளாக நடக்கும் வரை என் தோளில் தான்.
அம்முவை என் மனதில் இருந்து ஓரம் கட்ட முடியும் என்று அதுவரை நான் யோசித்ததில்லை. ஜ்வல்யா வந்த பிறகு அம்மு இரண்டாமிடத்திற்கு நகர்ந்தாள். பதவிக் குறைப்பை அம்மு சுலபமாய் எடுத்துக் கொண்டாள்.
ஜ்வல்யா ஸ்கூலுக்கு போக ஆரம்பித்து .. என்னை விட்டு கொஞ்சம் விலக ஆரம்பித்து .. அவளுக்கென்று ஒரு உலகம் சிருஷ்டித்துக் கொண்டபோது .. நானும் அம்முவும் படுக்கையில் இருந்தபோது லேசான குற்ற உணர்வுடன் கேட்டேன்.
“அம்மு என் மேல ஏதாச்சும் கோவமா”
‘எதுக்கு’
‘இல்ல.. இப்பல்லாம் நான் ஜ்வல்யா கூட இருக்கேன்.. அவ கேட்டதை செய்யறேன். உன் கூட இருக்கறது குறைஞ்சு போச்சு ‘
அம்மு சிரித்தாள்.
‘அவ வேற .. நான் வேறயா ‘
அம்முவை இன்னும் அதிகமாய் நான் நேசிக்க ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான்.

February 08, 2016

அம்மு 18அம்முவிடம் எனக்குப் பிடித்ததே அவளின் திமிர்தான். இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனா.. எத்தனை தடவை சொன்னாலும் அலுக்காது. எங்கள் உறவு வட்டத்தில் இதனாலேயே அவள் பிரசித்தி. குறும்பு பிரதிபலிக்கும் அவள் கண்கள் கூடுதல் கவர்ச்சி.
கல்யாணங்களில் அவள் பங்களிப்பு மகத்தானது. வேலைக்கு சலிக்க மாட்டாள். கோலம் போடவா. அம்மு. முகூர்த்தப் பைக்கா .. அம்மு. சம்பந்தி சண்டையா .. சமாதானம் பேச அம்மு. அதென்னவோ அம்முவைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய் சாப்பிட வந்து விடுவார்கள் முறைத்துக் கொண்டு நின்றவர்களும்.
எனக்கு எட்டு மணிக்கே சுமாரான பெண்கள் வெள்ளை உடையில் வந்து பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். தூக்கம் கண்ணைச் சுழற்றும். தலையணை வேண்டாம் . படுக்கை வேண்டாம். அப்படியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஒரு மூலையாய் ஒடுங்கி தூங்கிப் போய் விடுவேன். முகூர்த்த பை போடுவதோ நள்ளிரவில். ‘நேத்து ஒரே கலாட்டா ..அம்முவோட சிரிக்க.. சிரிக்க .. ‘ என்று மறுநாள் தகவல் கேட்கும்போது வயிற்றில் அமிலம் சுரக்கும்.
இந்த முறை ஏமாறக் கூடாது என்று தீர்மானித்து விட்டேன். எட்டு மணிக்கே போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டு வந்து விட்டேன். எழுப்பி விட ஒருவனுக்கு லஞ்சம் கொடுத்திருந்தேன்.
வட்டமேஜை போல உட்காரணும். புது வாசனையுடன் பைகள் . ஆளுக்கொரு பொருள் பைக்குள் போட. நான் சுலபமாய் தேங்காயை தேர்ந்தெடுத்தேன். இன்னொரு காரணம் அது அம்முக்கு அருகில் .முதல் நாள் ஜானவாச சாப்பாடு எப்போதுமே அசத்தலாய் இருக்கும். அக்கார அடிசில் சூப்பராய் இருந்ததால் இன்னொரு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதில் இருந்த லேசான கிறக்கம் அம்முவின் பக்கத்தில் கூடுதலாயிற்று.
அம்முவுக்கு மிமிக்ரி கை.. இல்லை வாய் வந்த கலை. உறவுக்காரர்களை ஒவ்வொருவராய் பகடி செய்து காட்டினாள் . எங்கள் சிரிப்பில் உக்கிராண அறை அதிர்ந்தது. யாரோ தூக்கம் கெட்டவர் முனகியது கேட்டது.
அம்முவை இத்தனை அருகில் பார்ப்பதும் கூடவே உட்கார்ந்திருப்பதும் ஒரு சவாலாகத்தான் இருந்தது. குடிகூரா பவுடர் வாசனை மிக மெலிதாய். முன்னுச்சி மயிர் மின்விசிறிக் காற்றில் அலைபாய அம்மு மடப்பள்ளி நாச்சியார் போல இருந்தாள்.
சுந்து முதலில் வாங்கிக் கட்டிக் கொண்டான்.
“அம்மு .. நம்ம பண்ணையார் ஆத்துல உன்னைப் பெண் கேட்டாங்களாமே “
“உனக்கு யார் சொன்னது “
அம்முவின் சிரிக்கும் கண்களில் கனல்.
“உண்டா இல்லியா சொல்லு “
சுந்து விடாமல் வம்பிழுத்தான் .
“ அப்போ அவருக்குக் கொடுத்ததை உனக்கும் கொடுக்கணும் “
அதில் என்ன புரிந்ததோ சுந்து வாயடைத்துப் போனான்.
கமலிக்கு அம்முவிடம் சுதந்திரம் அதிகம்.
“அம்மு .. உன் மனசுல யாராச்சும் இருக்காளா “
வெற்றிலை. தேங்காய்.. பாக்கு.. ஸ்வீட் காராச்சேவு பொட்டலம் சாக்கு சாக்காய் .. நெடி மூக்கைத் துளைத்தது. மணி இரண்டை தாண்டியாச்சு .. எல்லோருக்கும் கை உளைச்சல் .. அம்முவின் ஜோக் சூழலை சுந்து திசை மாற்றி விட்டான். கமலிக்கு என்ன பதில் வரும்..
அம்முவை ஓரக் கண்ணால் பார்த்தோம். சம்மணமிட்டு அமர்ந்திருந்த தேவதை. ஒரு நேர்த்தி அவள் உருவில். செய்தவன் ரசனைக்காரன். கண்களில் மின்னும் குறும்பு அதன் இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. ஒரு சவடாலும் தன்னம்பிக்கையும் எப்போதும் போல ஜொலித்தன.
“ தேடிக்கிட்டு இருக்கேன் கமலி “
“அவன் எப்படி இருக்கணும் அம்மு “
“என் பேச்சைக் கேட்கிறவனா “
அம்மு கொஞ்சமும் தயங்காமல் சொன்னாள் .
கமலிக்கு லேசாய் குரல் பிசிறியது.
“அம்மு .. வேடிக்கையா பேசறது வேற .. சாத்தியமாடி “
“ அழற பிள்ளைதாண்டி பால் குடிக்கும் “
இது ஒரு சம்பவம் தான் . பின்னொரு நாளில் நான் அம்முவைக் கரம் பிடித்தது இந்த யுக்தி தெரிந்ததால்தான் .
அம்மு எங்கே போனாலும் நிழலாய் தொடர்ந்து .. அவள் தேவைகளை அவள் கேட்காமலே நிறைவேற்றி .. இத்தனை நாளாய் அவள் பின்னாலேயே சுற்றுகிறேனே.
மறுநாள் கல்யாணத்தில் கண் எரிந்தது இரவுத் தூக்கம் கெட்டதில். ஆனால் அம்முவுடன் சுற்றுகிற வேலைகளாய் இழுத்துப் போட்டுக் கொண்டதில் உற்சாக ஊற்று.
ஜாதகர்மா.. நாம கர்மா ஆச்சு.. இனி காசி யாத்திரை.. கலர் கலராய் சாத உருண்டைகள் தயார். அப்போதுதான் அந்த சத்தம்.
‘அப்பவே நினைச்சேன்.. சொன்னா இவதான் கேட்கல..’
பிள்ளை வீட்டில் ஆரம்பித்த ரகளை. பேசியதில் இரண்டரை பவுன் குறைவதாய்.
‘போட்டுருவேன்.. இப்போ முஹூர்த்த நேரத்துல தகராறு வேணாம் ‘ பெண்ணின் அப்பா கெஞ்சினார்.
‘ஆரம்பமே பொய்யில ‘
அம்முவும் நானும் அருகில் நின்றிருந்தோம். செய்வதறியாமல். அம்முவுக்கும் வாயடைத்துப் போயிருந்தது.
பட்டைக்கரை வேட்டி.. அங்கவஸ்திரம் எனக்குக் கொடுத்திருந்தார்கள். அரங்கனை ஏளப்பண்ண பந்தாவாக போகலாம் என்று. வெறும் மார்பு.. அதில் புரள்கிற மைனர் செயினுடன் நின்ற என்னை அம்மு பார்த்தாள்.
சட்டென்று முடிவு எடுத்திருக்க வேண்டும். என்னைக் கேட்கக் கூட இல்லை. பாதி அவள் கழற்ற முயல நானும் உடன்பட செயின் இப்போது அவள் கையில்.
“இந்தாங்கோப்பா.. குறையறதுக்கு இதைக் கொடுங்கோ”
கல்யாணம் அந்தப் பக்கம் நடந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கம் டைனிங் ஹாலில் நானும் அம்முவும்.
“என் மேல கோபமா”
“இல்ல அம்மு.. எனக்குத் தோணல சட்டுனு.. நீ செஞ்சதும் சந்தோஷமாயிருத்து”
“கண்ணா.. உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள் பளிச்சென்று.
அதே திமிர்.. அதே சவடால்.. அதே பார்வை.. அம்மு அம்முதான்..
சந்தோஷமாய்த் தலையாட்டினேன்.
அம்மு சொல்வதைக் கேட்பதில் என்ன குறை வரப் போகிறது எனக்கு.
--------------------------------------------------------------------------
நன்றி : ஓவியர் மாருதி அவர்கள். கூகிள் உதவி.
(தெற்குவாசலில் கடைத்தெருவில் ஒரு முறை ஓவியர் மாருதி அவர்களைப் பார்த்தேன். மூலைத் தோப்பில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துப் போனார். அவர் வரைந்த ஓவியம் ஒன்றைக் காட்டினார். குடிக்க பாலும் கொடுத்தார். என் ப்ரிய ஓவியரின் அன்பில் அன்று திளைத்தேன். )

3 கவிதைகள்

காற்றில் அளைகிற கைகளை
இறுகப் பற்றிக் கொள்வதற்காகவேனும்
எதிர்ப்படு.

எட்டிய தூரம் வரை
பார்வை
அதைத் தாண்டிய எல்லைக்கு
மனக் குதிரை
அகப்படாமல்
வித்தை காட்டும் நீ.

ஒரு வார்த்தையில்
மடங்குகிறாய்
ஒரு பார்வையில்
திமிறுகிறாய்
புலன்களின் விசாரணையில்
எப்போதும் நீ.