November 10, 2014

வெள்ளியங்கிரி



2 மலைகள் வரை கற்களை வைத்து படிகள் போல அமைத்திருக்கிறார்கள். குச்சியை ஊன்றி நடக்கும் போது அழுத்தி நடப்பதாலும்.. முதுகில் வைத்திருக்கும் பையின் கனமும் சேர ஏறுவது சிரமம் என்று தோன்றியது.. இறங்கும் போது அந்த நினைப்பை பொய்யாக்கி விட்டது ! இறங்குவதுதான் சிரமம் !
ஒன்று அல்லது இரு நபர்கள் நின்றால் எத்தனை இடைவெளி இருக்கும்.. அவ்வளவுதான் சில இடங்களில்.. இரு பக்கமும் அடர்த்தியான மரங்கள்.. செடிகள்.. காடு !
சில இடங்களில் பெரிய மரங்கள் விழுந்து பாதையை அடைத்திருக்கின்றன. ஏறிக் குதித்து போனோம்.
2 வது மலை அருகில் ஒரு விநாயகர் கோவில். இதுதான் தங்கலாம் என்று சொல்கிற அளவுக்கு ஒரு இடம். இதன் பின் வெட்டவெளி அல்லது அடர்த்தியான காடு..
நாங்கள் ஏறும்போது.. இறங்கிக் கொண்டிருந்தவர்கள் சொன்னது.. ‘பிள்ளையார் கோவில்ல தங்கிட்டு விடியல்ல போங்க’ என்றார்கள்... இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கேட்டதற்கு. எங்கள் நடை அப்படி !
மொத்தமே அன்று 12 பேர் கூட இல்லை.. இத்தனைக்கும் பௌர்ணமி நாள் ! அந்த 12லும் நாங்கள் 3 பேர் ஏறிக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் இடைவெளி விட்டு இறங்கிக் கொண்டிருந்தவர்கள்.
பாம்பாட்டி சித்தர் குகை என்று வழியில் ஒரு குகை. இருட்டில் அதற்குள் என்ன என்று கவனிக்க முடியவில்லை..
‘.. 3 பேரோ.. 4 பேரோ இப்பதான் போனாங்க.. ஒரு வேளை அவங்க நைட் தங்கினா அவங்க துணை இருக்கும் உங்களுக்கு’ என்று ஒரு தகவல்.
6 மணிக்குப் பிறகு கும்மிருட்டு. அடர்த்தியான மரங்களினூடே நடை. சுரங்கங்களில் வேலை பார்க்கிறவர்கள் போல ஹெட் லைட் வைத்திருந்தோம். அதன் வெளிச்சத்தில் நடை.
வேறு எதையும் கவனிக்கும் மனநிலையோ வெளிச்சமோ இல்லை ஏறும் போது. எப்படியாவது உச்சியை அடைந்து விடணும் .. அவ்வளவுதான்.
மன தைரியம்.. எப்படியும் ஈசனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம்.. இது இருந்தால் போதும்.. ஏறி விடலாம் !
கடைசி மலைகளில் ஒன்று (4 ஓ.. 5 ஓ) வெட்டவெளி.. பிறகு இடுக்குகளில் போய்.. மலை உச்சி.. ஒரு குகை போலத்தான் கோவில்..
என்னிடம் கேமிரா இல்லை.. மொபைல் சார்ஜ் போய் விட்டது. உடன் வந்த நண்பர் எடுத்த படங்களைப் பின்பு பகிர்கிறேன்.
மேலே போய் ஈசனைப் பார்த்ததும் அதுவரை பட்ட கஷ்டம் மறந்து போய்விடும். விடியலில் சூரிய உதயம் பார்ப்பது இன்னொரு ஆனந்த அனுபவம்.


இறங்கும் போது கால்கள் சொன்ன பேச்சு கேட்காமல் டான்ஸ் ஆடும். குச்சி ஊன்றி சமாளித்துத்தான் இறங்க வேண்டும்.
எங்களுடன் வந்த அப்போது அறிமுகமான நண்பர் தடுமாறி கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொண்டது.
அலுவலகம் வந்ததும் மேலே பிடித்துக் கொண்டு வந்த மலை நீரையும் விபூதியையும் கொடுத்து.. கதைகளைச் சொன்னதும்
ஒரு நண்பர் கேட்டார்..
‘மறுபடி வாய்ப்பு வந்தா போவீங்களா.. இப்ப உடனே இல்லை.. அடுத்த வருஷம்னு வச்சுக்குங்க.. ‘
திகில் கதைகளாய்ச் சொன்னதால் இப்படிக் கேட்டிருப்பாரோ..
என்னையே உற்றுப் பார்த்தவரிடம் நிதானமாய்ச் சொன்னேன்.
‘போவேன்.. ‘
‘நானும் வரேன்.. என்னையும் அழைச்சுகிட்டு போங்க’
அதான் வெள்ளீயங்கிரி !




November 09, 2014

வெள்ளியங்கிரி - ஆன்மீகப் பயணம்



பர்வத மலை.. சதுரகிரி.. போய் வந்தாச்சு.
வெள்ளியங்கிரியை மட்டும் விட்டு வைப்பானேன் என்று நண்பரிடம் (2 முறை போய் வந்தவர்) கேட்டோம்.. நானும் இன்னொரு நண்பரும்.
இந்த பௌர்ணமிக்கு போகலாம் என்றார். 6.. 7 தேதிகளில் என்று திட்டமிட்டோம்.
குளுகோஸ் கரைத்த தண்ணீர்.. திராட்சை.. நெல்லி என்று முன்னேற்பாடுகள்.
நடந்து செல்ல வசதியாக கம்பு வாங்க கடைக்குப் போனால் ஏற இறங்கப் பார்த்தார்.
‘இப்பவா ஏறப் போறீங்க’
மதியம் 2 மணி அப்போது.
‘ஆமா.. நைட் மலைல தங்கிரலாம்னு.. காலைல சூரிய உதயம் பார்த்துத் திரும்பலாம்னு’
’இல்ல.. இன்னிக்கு கூட்டம் அதிகமில்லை.. மலை ஏறினவங்களும் காலைலயே போயிட்டாங்க.. இப்ப திரும்பிகிட்டு இருப்பாங்க’
வாசல் விநாயகர் கோவில் பூசாரியின் பார்வையிலும் ஒரு பதற்றம்.
விபூதி கொடுத்து எங்கள் பிடிவாதம் பார்த்து ‘முன்னேற்பாடாத்தானே வந்திருக்கீங்க.. நல்ல குளிர் இப்போ’ என்றார்.
மலை ஏற ஆரம்பிக்கும் இடம் அடைக்கப் பட்டிருந்தது.
.. பனிப்பொழிவு.. மிருகங்கள் நடமாட்டம்.. ஏற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது’..
எச்சரிக்கை மணி எங்களுக்குள் ஒலித்தது அப்போதுதான்.
அங்கே அடிவாரத்தில் கோவிலில் அன்னதானம் செய்கிறார்கள் தினமும். சாப்பிட்ட இலைகள் மலை போல் குவிந்து கிடந்தன முதலில் நாங்கள் பார்த்தபோது.
மறுநாள் பார்த்தபோது அவ்வளவாக இல்லை.
சரி.. ஆடு.. மாடு தின்றிருக்கும் என்று நினைத்தோம்.
‘நேத்து ராத்திரி காட்டுப்பன்னி கூட்டம் வந்துச்சு.. அதான்’
என்றார் ஒருவர் சாதாரணமாய்.
‘காட்டுப்பன்னியா..’
‘முந்தாநேத்து ஒரு சிறுத்தையே வந்திச்சே.. நாங்கலாம் விரட்டினோம். ஒரு நாயைக் கவ்விட்டு ஓடிருச்சு மலைக்கு மேல’
முதல் நாள் கேட்டார்கள். ‘குளிருமே.. என்ன வச்சிருக்கீங்க’
‘அதெல்லாம் வச்சிருக்கோம்’
‘2 மாசம் முன்னால 6 பேர் போனாங்க.. குளிர் தாங்காம ஒருத்தர் விறைச்சு.. போயிட்டாரு’
நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்..
மலை ஏறிக் கொண்டிருந்த போது 4 பேர் கீழிறங்கினார்கள்.
‘இப்பவா போறீங்க’
‘ஆமா’
‘பார்த்துப் போங்க.. ஒத்தை ஆனை கொப்பை ஒடிச்சுகிட்டு உலாத்துது.. நாங்களே வேற வழியா ஒரு கிமீ சுத்தி பாதையைப் புடிச்சு வந்தோம்’
’போன வருஷம் ஒத்தையா ஒரு ஆளு.. செந்நாய்ட்ட மாட்டி போயிட்டாரு’
இதை எல்லாம் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. கேட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்.
பெண்கள்,. குழந்தைகள் ஏறிப் போய் வருகிறார்கள்.
பல வருடங்களாய்ப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.
எல்லோரும் சொல்கிற ஒரே வார்த்தை..
‘அவனை நம்பி போங்க.. கை விட மாட்டான்’
தென்னாடுடைய சிவனே போற்றி !

( தொடரும் )

November 01, 2014

இன்றைக்கான கவிதைகள் !




இன்றைக்கான கவிதைகள்




1. அதன் கண்களில்
ஒரு கெஞ்சல் இருந்தது..
சிறிது நேரம்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்
என்ன செய்வதென்று புலப்படாமல்..
என் தயக்கம் பார்த்து
வினாடி நேரத்தில்..
ஆம்.. வினாடி நேரத்தில்
அதன் கண்களில்
மின்னி மறைந்த கேலி..
என்னைக் குறித்த
அதன் விமர்சனமாய்..
நிராகரித்து நகர்ந்தபோது
எனக்குத்தான்
அதிகமாய் வலித்தது..
அந்த புறக்கணிப்பு !


2. ஒரு நேரத்தில்
ஒரு கவலை
என்றுதான்
வகைப்படுத்திக் கொண்டேன்..
எனக்கும் அதுவே
வசதியாய் இருந்தது..
இப்போதெல்லாம்
ஓடி வந்து
மடியில் விழுகிற
அத்தனை மகிழ்ச்சிகளையும்
அப்படித் தள்ள முடியவில்லை !


3. வாயைத் திற..
பல்லைக் கடி இறுக்கமாய்
விட்டு விடாதே..
ம்ம்..
சூழ் நிலையை வாயில் திணித்து
அடிக்க ஆரம்பித்து விடுகிறது
வாழ்க்கை விளையாட்டு..

October 25, 2014

அந்த நாள் தேவதை





சித்திரை வீதியின் தேர் நட்ட நடுவில் ஷெட்டுக்குள் இருந்தது. அதற்குள் முன்பெல்லாம் பன்றிகள் உள்ளே போய் வரும். இப்போது அவைகள் கண்ணிலேயே படுவதில்லை. தேரோட்டத்தின் முன் தகரம் விலக்கி தேரை தூசு தட்டுவார்கள். பி.எச்.ஈ.எல் அமைத்துக் கொடுத்த கிண்ணென்று இருக்கும் சக்கரங்கள்.
ஒரு ரவுண்ட் சுற்றி தேரின் இரு கைகள் போல (ராமாயண கபந்தனை நினைவு படுத்தும்) வடக் கயிறு.
தேர் இழுக்க முடியாத, பயப்படுகிற ஆத்மாக்கள் ஓடும்போது சற்றே நிற்கும் இடைவெளியில் 'கொஞ்சம் இடம் விடுப்பா' என்று வடத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு நகர்வார்கள்.
கிராமங்களில் இருந்து வருபவர்கள் மாடு ஓட்டிக் கொண்டு வந்து கோவிலுக்கு நேர்ந்து விடுவதும், தோற்பையில் நீர் நிரப்பி 'கோவிந்தா' என்று எதிரில் நிற்பவர் மேல் பீய்ச்சி விட்டுப் போவதும், கொஞ்சம் கூட்டமாய் நிற்பவர்களை விலக்கிப் பார்த்தால் நடுத்தர வயதுப் பெண்மணிக்கு ஆவேசம் வந்து குறி சொல்லிக் கொண்டிருப்பதும், ஆங்காங்கே போகும் வழியெல்லாம் கற்பூரம் பெரிய சைசில் எரியும் வாசனையும்.. தேர்த் திருநாள் எப்போது வரும் என்று காத்திருப்போம்.
முதல் நாள் வையாளி. குதிரை வாகனத்தில் பெருமாள் சாவகாசமாய் நடை போட்டு வந்து (நடை அழகு) தேர் இருக்கும் இடம் சமீபித்ததும் பரபரப்பு அப்பிக் கொள்ள கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு அப்புறம் கலைந்து தேரை ஒட்டிய 200 அடி பிரதேசத்தில் வாகனததைத் தூக்கிக் கொண்டு ஓடுவதும் கண்கொள்ளாக் காட்சி.
முதலில் நளினமாய்.. பின்னர் ஜிக்ஜாக்காய்.. (கோண வையாளி) கூட்டம் ஆர்ப்பரிக்கிற அழகே தனி. ஓடி முடித்ததும் வாகனம் நின்று குதிரையின் மூச்சிரைக்கிற காட்சி தத்ரூபம். தேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வாகனம் சுமக்க (எழுந்தருளப் பண்ணுதல்) வருவார்கள். தேரை ஒட்டிய இரு பக்க வீடுகளின் மாடியில் நின்று வையாளியை வேடிக்கை பார்க்கலாம்.
அப்படி ஒரு தருணத்தில்தான் ஜெயந்தியைப் பார்த்தேன்.
இப்போது வழக்கொழிந்த ரெட்டை ஜடை. இரண்டையும் முன்னால் விட்டுக் கொண்டு அவள் கண்கள் பட்டாம்பூச்சி போல் படபடக்க திருவிழாவின் தாத்பர்யம் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள்.
என் பங்கிற்கு நானும் கதை சொன்னேன். முந்தைய பாராக்களை.
ஒரு ஜடை என் மேல் உரசிப் போனது. மழை வெய்யில் என்று மாற்றி மாற்றி அடித்த மொட்டை மாடிப் பிரதேசம் கருப்படித்து கொஞ்சம் வழுக்குப் பகுதியாகவே மாறி விட்டிருந்தது. இதர நாட்களில் யாரும் மேலே போவதில்லை.
தெரு விளக்கின் அசட்டு வெளிச்சம் மட்டும் பட்டும் படாமலும் தெரிய அதன் உபயத்தில் இடுப்பளவு சுவரைப் பிடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தோம்.
ஜெயந்தி வந்த நாளிலிருந்தே அவரவர் மனக் குளத்தில் கல்லெறிந்து விட்டாள். எப்படியாவது அவளைக் கவர் பண்ண அரவணை, ரொட்டி, செல்வரப்பம் என்று கோவில் பிரசாதங்களுடன் ராமானுஜன் வர.. என் பங்கிற்கு சுஜாதா கதைகளை எடுத்துக் கொண்டு போனேன்.
எங்கள் இருவருக்கும் வசந்தைப் பிடித்திருந்தது. 'ச்சீய்' என்று சொல்லி வசந்த் ஜோக்கை நான் ரிபீட் செய்தபோதெல்லாம் அநியாயத்துக்கு சிரிப்பாள்.
'ஏண்டா.. நான் கேட்டா தரமாட்டே.. அவ கிழிச்சு தரா. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறே' என்று என் தங்கை திட்டியதை புறந்தள்ளி கைப்பணத்தைக் காலி செய்து புதுத்தகங்களுடன் போவேன்.
'அம்மாகிட்ட சொல்றேன்' என்று அவள் மிரட்டியதில் அத்தனை பயம் வரவில்லை. ஜெயந்தியுடன் என்னைத் தொடர்புபடுத்தியது மட்டும் மனசுக்குள் மழையடித்தது.
மூன்று மாதங்கள் இருந்தாள்.
நடுநடுவே ரகசியப் பயணம் போவார்கள் அவளை அழைத்துக் கொண்டு. அன்றைய தினங்களில் மட்டும் அவள் முகம் வாடியிருக்கும்.
'அவளுக்கு என்னவோ பிரச்னைடா.. அதான் இங்கே வச்சு பார்க்கறா.. சக்கரத்தாழ்வார் சன்னிதில ஜபம் பண்றா அவ பேருக்கு. குணசீலம் போய் உச்சி காலத்துல ஜலம் தெளிச்சுண்டு வந்தா' தங்கை சொல்லச் சொல்ல எரிச்சலானது.
'அவளுக்கு எதுவும் இல்லைன்னு' கத்தத் தோன்றியது.
சட்டென்று மனக் கதவைத் திறந்து உள்ளே சுவாதீனமாய் வந்து விடுகிற சாமர்த்தியம் சில பெண்களுக்கு மட்டுமே வாய்க்கிறது.
ஜெயந்தியின் ஆகர்ஷணத்தில் மொட்டை மாடி வெளிச்சுவற்றில் ஜே என்று பெரிதாக எழுதி அழகு பார்த்துக் கொண்டிருந்த போது அவளே வந்து விட்டாள்.
'கதை எல்லாம் எழுதறே.. கிளாஸ்ல பர்ஸ்ட்.. ஆள் பார்க்க ஜம்னு இருக்க.. அப்புறம் ஏன் இந்த கிறுக்குத்தனம்' என்றாள் ஸ்பஷ்டமாய்.
கண்ணில் மளுக்கென்று தளும்பியது.
வாசனைப்பொடியின் சுகந்தம் மணத்தது அவள் அருகில் வந்தபோது.
எதிரே வெள்ளைக் கோபுரம் மௌனமாய் எல்லாம் தெரிந்த தோரணையில் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. நாலாபக்கமும் எந்த வீட்டிலும் மொட்டை மாடிகள் காலியாக இருந்தது.
என் இரு கன்னங்களையும் தன் கைகளால் பற்றி நெற்றியில் முத்தமிட்டாள்.
"என்னை விட ஜோரா ஒருத்தி உனக்கு வருவா.. போ..உன் கையாலயே இதை அழிச்சுட்டு" திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள்.
கொஞ்ச வருடம் கழித்து தலை முடி கொட்டி வயதுக்கு மீறிய கிழடு தட்டி அந்தப் பெண்மணி என்னை அணுகி "உன் பொண்ணா" என்று கேட்டபோது பக்கத்தில் இருந்த புவனா முகம் சுளித்து "யார் இவ" என்றாள்.
எனக்கும் முதலில் புரியாமல் அப்புறம் திடுக்கிட்டு "ஜே.. நீயா" என்றேன்.
என் பெண் பூஜா அவள் பிடியிலிருந்து நகர்ந்து புவனாவிடம் ஓடினாள்.
ஜெயந்தி (சித்திரை வீதிப் பக்கம் போனபோது பார்த்தேன் அந்த வீட்டை இடித்துக் கட்டி விட்டார்கள்.. ரசனை இல்லாத எவரோ ஒரு புண்ணியவான்.) -
அந்த நாள் தேவதை -  நகர்ந்து போகுமுன்   "ராஸ்கல்,, அழிக்கச் சொன்னா அப்படியே விட்டுட்டு போயிட்ட.. மொட்டை மாடியில"  என்றாள்  எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.

(நன்றி  : அமுதம்)

(நன்றி  :  மணியம் செல்வன் - கூகிள் )

October 02, 2014

எழுத்துக்கு வணக்கம் !





அந்த நாட்கள் இனித் திரும்பி வருமோ..

வராதுதான்..

ஒவ்வொரு ஜனவரி முதல் நாளிலும்.. சரஸ்வதி பூஜை முடித்து எழுதத் தொடங்கும் போதும்..  ஒரு சிறுகதை எழுதியே தீர வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி.

இது தவிர ஒவ்வொரு திங்கட்கிழமையும் அலுவலகம் வரும் போது ஒரு கதையுடன் வர வேண்டும் என்றும்.

செய்தோம்.. சந்தோஷமாய். மதியம் உணவு இடைவேளையில் அவரவர் கொண்டு வந்த கதையைப் படிப்போம். திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றினால் சொல்வோம். எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்கிற ஆலோசனையும்.

தொடர் பிரசுரங்கள் இதனால் சாத்தியமானது !

என் சிறுகதை.. குறுநாவல்.. தொடர்ந்து மங்கையர்மலர்-ஆண்டு மலரில் பிரசுரம் பெற்றது.  பிற இதழ்களிலும் கூட.

கதை எழுதுவது என்று மட்டுமில்லை.. எந்த செயலானாலும் அது குறித்த பேச்சும்.. ஒரு செயல் திட்ட அட்டவணையும்.. கூடவே கவனிக்க.. ஊக்குவிக்க ஒரு குழுவும் இருந்தால் பெரும்பாலான நமது அபிலாஷைகள் வெற்றி பெறும் என்பதை இதில் நாங்கள் உணர்ந்தோம்.

எங்களை எங்கள் அலுவலகத்தில் கொஞ்சம் பெருமையாகவே உற்றுப் பார்ப்பார்கள்.. ‘இந்த வாரம் யார் கதை வந்திருக்கு’ என்றோ அல்லது ‘கல்கியில் உங்க கதை படிச்சேன்’ என்றோ விசாரிப்பார்கள்/சொல்வார்கள்.
நண்பர் ஹரணி மீண்டும் அந்த பொற்காலத்தை மீட்டெடுத்திருக்கிறார் இந்த வருடம்.. கல்கி.. வாரமலர் என்று.

1000 கதைகளுக்கு மேல் அச்சில் பார்த்த சாதனை என் நட்பு வட்டத்தால்.. என் எழுத்தை நேசித்த/சிலாகித்த அன்பு உள்ளங்களால் சாத்தியமானது.

இதனாலேயே 22 நட்பு-எழுத்தாள வட்டத்தின் சிறுகதைகளைத் தொகுத்து பிரியத்தின் சிறகுகள் என்கிற தலைப்பில் ஒரு தொகுப்பு கொண்டு வர முடிந்தது.

சரஸ்வதியைத் தெய்வமாகப் பார்க்கிறதை விட.. எழுத்தாய்த் தான் பார்க்க முடிகிறது என்னால்.  சஹ்ருதயர்களின் படைப்புகளைப் படிக்கும் போது மனம் உணர்கிற மகிழ்ச்சியை நேரிலோ தொலைபேசியிலோ மானசீகக் கை நீட்டி வாழ்த்த முடிந்தது.. முடிகிறது..

உங்களை.. என்னை.. எழுதத் தூண்டுகிற..  எழுத வைக்கிற..  நம் சிநேகிதிக்கு
வெறும் வாழ்த்துகள் திருப்தி தராது..  முழுமையாய் ஒப்படைத்து இன்னும் இன்னும் நவ நவ படைப்புகளை நம் மூலம் வெளிப்படுத்த அர்ப்பணிக்கிற மனதைத் தர வேண்டுவோம்..

எனக்கு அறிமுகமான / நான் வாசித்த / வாசித்துக் கொண்டிருக்கிற அத்தனை படைப்பாளிகளுக்கும் அன்பு நல்வாழ்த்துகளுடன்..

ரிஷபன்.




August 04, 2014

தஞ்சாவூர் கவிராயர் - ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி விழா

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி  அவர்களின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு  திரு . தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் நிகழ்த்திய உரை இதோ உங்கள் ரசனைக்கு !  












May 08, 2014

கவிதைகள்

சொற்களைக்
கவிதைக்காக
அளவுக்கதிகமாய்ப்
பிசைந்து விட்டேனோ..
குழைந்து கிடக்கிறது
இப்போது !



மறுபடி
நீ பேசக் கூடும்
என்பதால்
இந்த நிமிடக் கோபத்தை
இரு கை நீட்டி
ஏந்திக் கொள்கிறே
ன் !


இரவு முழுக்க
கொட்டக் கொட்ட
விழித்திருந்து
பார்த்தேன்..
அந்த மீதிக் கனவு
திரும்ப வரவேயில்லை !

March 02, 2014

பிரார்த்தனை

குறுஞ்செய்திகளுக்காய் நிறைய பேர் இதழ் நடத்துகிறார்கள்.. அவ்வப்போது எனக்கும் சான்ஸ் தருவார்க்ள். அந்த குரூப்பில் சேர்த்துக் கொண்டு மற்றவர்கள் எழுதியதும் அனுப்பி வைப்பார்கள்.
அப்படி அறிமுகமானவர் தான்.. 
‘நல்லா இருக்கு’ன்னு ஒரு மெஸெஜ் அனுப்பியபோது தெரியவில்லை.. அவரைப்பற்றி எதுவும்.
6 மாதங்கழித்து வேறேதற்கோ பழைய செய்திகளை அலசியபோது.. டிலீட் ஆகாமல் இருந்த அவரின் ரெண்டு வரிக் கவிதை கண்ணில் பட்டது.
’எப்படி இருக்கீங்க.. அப்புறம் எதுவும் எழுதலியா’ன்னு ஒரு மெசேஜ் தட்டினேன்.
’உடம்பு சரியில்ல’
‘சரி பார்த்துக்குங்க.. முடிஞ்சப்ப எழுதுங்க’
’என்னைப்பத்தி தெரியுமா’
‘தெரியாது..’
சொன்னார். வீல் சேரில்தான் வாழ்க்கை. உடல் நலம் பாதித்து எப்போதும் ஹாஸ்பிடல்.. ட்ரீட்மெண்ட்.. 
வீட்டில் இருந்தபடியே ஏதோ ஒரு வேளை செய்து நாட்களைக் கழிக்கிறார்.
‘சரிங்க’
இன்னொரு 6 மாதம் கழித்து ‘நலமான்னு’ செய்தி அனுப்பினேன்.
இல்லையாம். அவர் அடுக்கிய உடல் உபாதைகளைப் படிக்கவே பயமாக இருந்தது. 
‘பேசட்டுமா’
‘வேணாம்.. அழுதுருவேன்.. அப்புறம் ஒரு சமயம் பேசலாம்.. ‘
‘டேக் கேர்’
’ஒண்ணு சொல்லட்டுமா’
‘சொல்லுங்க’
‘என்னையும் ஒருத்தர் விரும்பறார்.. இந்த நிலையிலும்.. கல்யாணம் கட்டிகிட்டா என்னைத்தான் கட்டிப்பாராம்..’
‘வாவ்.. நல்லது.. ரொம்ப மகிழ்ச்சி’
’எங்க வீட்டுல தயங்கறாங்க’
‘பேசிப் பாருங்க’
‘ம்ம்..’
‘நல்லதே நடக்கட்டும்.. உங்க கல்யாணத்துக்கு அவசியம் வரேன்’

இதுவரை பார்த்திராத.. பேசியிராத.. வெறும் குறுஞ்செய்தி மூலமே பழகிய.. அந்த நட்பு.. நினைத்தபடி நல்ல வாழ்க்கை அமையணும்னு இப்போ என் பிரார்த்தனை !







February 24, 2014

பறவை ஸ்நேகிதம்



இரண்டு வருடங்கள் இருக்குமா.. இருக்கலாம். பறவைகளுடனான என் சிநேகிதம்.. 

‘காலை வேளைல என்ன பண்ணுற’

‘7 மணி ஆபிசுக்கு கிள்ம்புற அவ்சரத்துல இருப்பேன்..’

’மொட்டை மாடி இருக்கா’

‘ம்’

’பறவைகள் வருமா’

‘காக்கா வரும்’

‘உனக்கு அதுவே அதிகம்..’

‘கலாய்ச்சுட்ட..’

‘சரி.. கெளம்புறதுக்கு முன்னால கொஞ்சம் சாதம்.. இல்ல அரிசி.. வாயகன்ற பாத்திரத்துல தண்ணி வச்சுட்டு போயேன்..’

‘எதுக்கு’

‘சொன்னா செய்யேன்’

செய்தேன். ஓரிரு காக்கைகள் என்னை உற்றுப் பார்த்தன. என் மீதான அவநம்பிக்கை அதன் கண்களில். நான் நகர்ந்ததும் பறந்து வந்து முகர்ந்தன. கொத்தி கீழே தள்ளியது ஒன்று.

சொன்னேன் அவளிடம்.

‘நீ சொன்னேன்னு செஞ்சேன்.. எனக்கு நோஸ் கட்’

‘பரவாயில்ல.. தொடர்ந்து செய்’

இன்று.. இரு வருடங்களுக்குப் பின்.. எனக்கு எத்தனை பறவை ஸ்நேகிதங்கள்.. சிட்டுக் குருவிகள்.. புறாக்கள்.. காகங்கள்..

வெளியூருக்குப் போகும் நாட்களில் மனசு தவித்துப் போகிறது.

திரும்பி வந்ததும்.. மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது.

முகம் திருப்பி கோபமாய் அமர்ந்திருக்கும் பறவைக்கு அருகே பறந்து போய் அமர்ந்து கெஞ்சத் தோன்றுகிறது.


அவைகள் உணர்வுபூர்வமானவை..  நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்.. அந்த நேசம் அப்புறம் எந்த காரணத்தினாலும் மாறுவதேயில்லை.

இப்போதும் என்னுள் அதே கோபங்கள்.. குமுறல்கள்.. ஆனந்தம்.. எல்லா

உணர்வுகளும்தான். ஆனால் அவற்றைப் பகிர விண்வெளி சிநேகிதங்கள் உண்டு
இப்போது என்னருகே.

எனக்கு இறக்கை ஒட்டிக் கொடுத்த சிநேகிதிக்கு ...    :)







   


February 21, 2014

3 கவிதைகள் !

எப்போதோ பேசிக் கொள்கிறோம்..
மூன்று மாதமோ..
ஆறு மாதமோ..
விட்ட இடத்திலிருந்து
தொடங்க முடிகிறது
நம் பேச்சை
எந்த நாளிலும்..
நீயோ நானோ
கேட்டுக் கொண்டதில்லை
ஏன் பேசவில்லை இத்தனை நாளென்று..

எப்படி சாத்தியமாயிற்று
நமக்குள்ளே இப்படி ஒரு அந்நியோன்னியம் ?!




நீ யாரோ
தெரியாது..
உன் முகமறியேன்..
காற்றின் வழி
செவி மோதுகிற
பிடித்த பாடலாய்..
நீ எனக்குப் ப்ரியமாகிறாய்.
உன் பெயர் கேட்க
புன்னகைத்துக் கொள்கிறேன்..
அவ்வப்போது உன் சிரிப்பில்
எனக்குள் முகிழ்க்கிறது
அதே ஆனந்தம்..
நாம் சந்திப்போமோ இல்லையோ..
எனக்கென்று
நீ இருக்கிறாயெனும்
நினைப்பில்
என் திமிருக்கு
சூட்டிக் கொள்கிறேன்
நிரந்தரமாய் ஒரு மகுடம் !



பார்க்காமல்
இருந்திருக்கலாம்..
நேசிக்காமல்
இருந்திருக்கலாம்..
அல்லது
அதைச் சொல்லாமலாவது
இருந்திருக்கலாம்..

இருந்திருக்கலாம் !

January 31, 2014

பூஞ்சிறகு




"மிழ்"
"என்ன"
"தமிழ்"
"சொல்லு"
"தமிழ்"
"பிசாசே"
அடுத்த நிமிஷம் மெசேஜ் அடிப்பதை விட்டு போன் அடித்து விட்டேன்..
"ஹைய்யோ.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பா"
"என்ன பிடிச்சிருக்கு"
"எப்படி உனக்கு அந்த நேம்ல என்னை கூப்பிடணும்னு தோணிச்சு"
"அடக் கடவுளே.. "
"கூப்பிட்டியா"
"உன்னை இல்ல"
"சொல்லு.. எப்படி உனக்கு அந்த பெயர்ல அழைக்க தோணிச்சு"
"அது வசவுடா மவனே"
"இருக்கட்டுமே.. எனக்குப் பிடிச்சிருக்கே"
"இப்ப மணி என்ன தெரியுமா"
"பன்னண்டு.."
"ராத்திரி பன்னண்டு"
"அப்படியா"
"டேய்.. எனக்குத் தூக்கம் வருது.. பகல் முழுக்க கம்ப்யூட்டர்ல.. இப்போ செல்லுல.. என்னால முடியல"
"ஒரு வரி பாடு.. ஒரே வரி.. விட்டுடறேன்"
"பிசாசு" என்றாள் மறுபடியும்.
ஏதோ ஹம் செய்தாள்.
"புரியல.. ஆனா நல்லா இருக்கு"
"சரி.. தூங்கு"
"துளசி எப்படி இருக்கார்"
"துள..சி?"
"மறந்துருச்சா"
"ஓ.. அவரா.. இப்போ எதுக்கு அவர் ஞாபகம்"
"ப்ளூட் எங்கிருந்தோ கேட்டுது"
"ஹ்ம்ம்.. இன்னிக்கு நீ என்னைத் தூங்க விடப் போறதில்ல.. அது புரிஞ்சிருச்சு"
"டயர்டா இருக்கியா"
"அதைத்தானே பிசாசு அப்போ பிடிச்சு சொல்றேன்"
"சரி.. தூங்கு"
"ம்ம்"
"உன்னோட ம்ம் ரொம்ப அழகு"
"...."
"எப்படின்னு கேட்க மாட்டியா"
"..."
"ஓ.. தூங்கிட்டியா.."
"..."
"சரிப்பா.. குட் நைட்"
மொட்டை மாடியில் ஒரு காகம் துணி உலர்த்தும் கொம்பில் உட்கர்ந்திருந்தது. அதுவும் காதல் வயப்பட்ட காகமாய் இருக்கலாம். ஏதேனும் ஒரு கவிதை கூட மனசுக்குள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
இப்போதும் குழலோசை கேட்டது. பிரமையா..

துளசி... தமிழைச் சந்தித்தது அவரால்தான்.
தாம்பரத்திலிருந்து எக்மோர் செல்லும் போது 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' அடுத்த பக்கமிருந்து காற்றில் வந்தாள். அப்படியே மனசைக் கட்டிப் போடுகிற இசை. குழல் பேசியது. அவரிடம். அருகில் வர வர.. புரிந்தது.. அவருக்கு இசைக் கண் மட்டுமே என்று.
பழைய பாடல்களைக் குழலில் பிழிந்து காதுக்கு அமுதூட்டினார்.
கை நீட்டவில்லை. யாராவது அவரைத் தொட்டால் நின்று பெற்றுக் கொண்டார். ஒரு வினாடி நன்றி மின்னுகிற முகம் மீண்டும் புல்லாங்குழலுக்குள் புதைந்து கொண்டது. என் பெட்டிக்கு முன் வரிசை இருக்கைகளில் அத்தனை கூட்டமில்லை.
"உட்காருங்க தோழரே"
கணீரென்று ஒரு குரல் கேட்டது.
யாரது.. எட்டிப்பார்த்தேன். அவள் கண்கள் தான் அப்போதும் இப்போதும் நீந்தத் தெரியாத என்னைச் சுழற்றி நடுக்கடலில் விட்டு விடுகிறது.
"மன்னிக்கணும். உட்கார்ந்து பேச எனக்கு அவகாசமில்லை" என்றார் புன்முறுவலுடன்.
"ஒரே நிமிஷம்"
சீட்டின் நுனியில் அமர்ந்தார்.
"இந்தாங்க"
100 ரூபாய்த் தாள் அவர் கைகளில் வைக்கப்பட்டது.
"உங்க இசைக்கு மரியாதை செய்யத் தோணிச்சு.. அதான் உட்காரச் சொன்னேன்.. இனி உங்க விருப்பம் போல.."
அவர் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்திருந்தார். கண் கலங்கியிருக்க வேண்டும்.
பிறகு எழுந்து போய் விட்டார்.
எந்த ஸ்டேஷனில் இறங்கினாள் என்று கவனிக்கத் தவறி விட்டேன்.
இது முதல் சந்திப்பு.
அடுத்த வாரத்தில் மறுபடியும் அவளைப் பார்த்தபோது நிமிடத்தில் மனசுக்குள் மணி அடித்தது.
துளசியும் சொல்லி வைத்த மாதிரி வந்தார். அவள் அருகில் வரும் போது 'வணக்கம்' என்றாள்.
துளசி நின்று சிரித்து விட்டுப் போனார்.
ரு மாத இறுதியில்.. கவிதை நூல் வெளியீட்டு விழா ஒன்றில் மறுபடி அவளைப் பார்த்தேன். வாசலில் கடை பரப்பியிருந்த தொகுப்புகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'பிரபஞ்சத்தின் பின்னால் எனக்கொரு இடம்' தொகுப்பை எடுத்தவள் அதை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாள்.
சட்டென்று முன்னால் நகர்ந்து 'ஆட்டோகிராப் வேணுமா' என்றேன் சிரிப்புடன்.
செம ஷார்ப் ! பின் அட்டையை திருப்பிப் பார்த்தாள்.
'அவசியமில்லை.. உங்க கவிதை சொல்லாத எதையும் உங்க கையெழுத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை"
அதான் தமிழ்! மனதில் பட்டதை அப்படியே பட்டவர்த்தனமாய் போட்டு உடைப்பவள்.
"அதுல என் செல் நம்பர் இருக்கு" என்றேன் விடாமல்.
"புக்கை ரிடர்ன் எடுத்துப்பாங்களா" என்றாள்.
விலகி வழிவிட்டேன். சரியான பச்சை மிளகாய்.
இரண்டு மூன்று நாட்கள் ஓடி விட்டன. நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.
"கவிதையின் ஆத்மாவைப் பிடித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்- தமிழ்"
பேசலாமா, வேண்டாமா என்று யோசிப்பதற்குள் என் விரல் அழுத்திவிட்டது.
முழு ரிங்கும் போய் 'நீங்கள் அழைக்கும் நபர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை' என்று என்மேல் கரிசனம் உள்ள ஒரு பெண் சொன்னார்.
என்னை நானே மனசாரத் திட்டிக் கொண்டேன்.
அப்போதுதான் அவள் அழைத்தாள்.
"சொல்லுங்க"
"நன்றி.. கவிதையைப் பாராட்டியதற்கு"
"ஒரு மெசேஜ் போதுமே"
"உட்கார வச்சு நன்றி சொல்லி இருக்கணும்.. அதானே முறை"
"புரியல"
"ரயில்ல.. ப்ளூட் வாசிக்கிறவர்"
"ஓ.. "
"அதைப்பத்தி கூட ஒரு கவிதை எழுதி வச்சிருக்கேன்.. அடுத்த தொகுப்புல வரும்"
"அவருக்கு வேற ஏதாச்சும் உருப்படியா பண்ணனும்.."
" எந்த மாதிரி"
"சரி.. நன்றி.. வச்சிரவா"
வைத்து விட்டாள்.
ன்ன செய்யப் போகிறாள் என்று இன்னொரு கூட்டம் வரை புரியாமல் இருந்தது. சமூக ஆர்வலர் கூட்டம் ஒன்றில் புதிர் அவிழ்ந்து விட்டது. தற்செயலாய்த்தான் நானும் அங்கே போனேன். நிகழ்ச்சியின் நடுவில் ஒரு அறிவிப்பு.
"இதோ இசையால் நம் பார்வைகளை விசாலமாக்கப் போகிறார்.. துளசி"
துளசி மேடைக்கு வந்தார்.
'.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்..' அலைபாயுதே.'
வாசித்துக் கொண்டே போனார். எழுந்து போக இருந்த சிலர் கூட அப்படியே நின்று விட்டார்கள். ஒருவர் தன் விருப்பமாய் 'புல்லாங்குழல் கொடுத்த' வாசிக்கச் சொன்னார்.
அரை மணி நேரம் கூட்டத்தைக் கட்டிப் போட்டிருந்தார். விழா அமைப்பாளர் எங்கிருந்தோ ஓடோடி வந்தார்.
"புல்லாங்குழலிசை என்று சொன்னதும் நான் கூடப் பெரிதாய் நினைக்கவில்லை. இப்போது இசை கேட்டதும் என்னை மறந்தேன். அருமையான இசையைக் கண்டுபிடித்துக் கொடுத்த தோழருக்கும் நன்றி"
வற்புறுத்தி தமிழை மேடையேற்றினார்.
தமிழ் மௌனமாய் வணக்கம் சொன்னாள்.
துளசிக்கு சன்மானம் கொடுத்தார்கள்.
வாங்கிக் கொள்ளுமுன் அவர் மைக்கில் சொன்னார்.
"நீங்க ரசிச்சீங்களான்னு எனக்குத் தெரியாது.. அதைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.."
இடைவெளி கொடுத்து சிரிப்புடன் சொன்னார்.
"உங்க கைத்தட்டல்கள்"
பத்து நிமிடம் விடாமல் கை தட்டினார்கள். தமிழ் அழுதிருக்க வேண்டும் அதை அவள் மறைக்கவில்லை. பட்டுக் கத்தரித்தாற்போல பேசுகிற அவளுக்குள் இருந்த பூஞ்சிறகைக் கண்டு கொண்ட ஆனந்தம் எனக்கு.
துளசியை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.
"வணக்கம் துளசி.. அருமையான இசைக்கு நன்றி" என்றேன் கைப்பிடித்து குலுக்கி.
யாரோ அவரை இடித்துக் கொண்டு வேகமாய்ப் போனார்கள். தடுமாறி சுதாரித்துக் கொண்டார்.
"நீங்க எங்கே போகணும்"
இடத்தைச் சொன்னார்.
"அட.. நானும் அந்தப் பக்கம்தான்.. வாங்க ஆட்டோல போயிரலாம்.. இறக்கி விட்டு போறேன்"
தமிழ் என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.
"உங்களுக்கு ஏன் சிரமம்"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.. அவர் வாசிச்சதைக் கேட்டேன்.. அவர் பேசியும் கேட்கலாமேன்னு"
அரைமனதாய் நின்றாள்.
துளசியும் சொன்னார்.
"பரவாயில்லம்மா.. நான் அவர் கூட போயிடறேன்"
ஆட்டோவில் தமிழைப்பற்றியே நான் பேசியிருக்க வேண்டும். துளசியைப் பேச விடாமல். அவர் என்னிடம் எதுவும் சொல்ல வில்லை. மனசுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ.
இரவில் வீடு திரும்பும்போது அநியாயத்திற்கு லேட் ஆகிவிட்டது.
'நன்றி' என்று தமிழின் மெசேஜ் வந்தது.
'பேசலாமா' என்று கேட்டேன்.
'குட் நைட்' என்று பதில் வந்தது.
எல்லாத் துவாரங்களிலும் காற்று இசையாகி விடுவதில்லை என்று பதிலுக்கு அனுப்பினேன்.
கைகளைப் பின்னுக்கு வைத்துப் படுத்திருந்தேன். அழைப்பு வந்தது கேட்கவில்லை முதலில். முழுவதும் ஒலித்து அடங்கி விட்டது. கொஞ்சம் பொறுத்து அடுத்த முறை ஒலித்த போது எனக்கும் கேட்டது.
"ம்ம்" என்றேன் யாரென்று பார்க்காமல்.
"அவரைப் பேசவே விடலை போலிருக்கே"
தமிழ் !
எழுந்து அமர்ந்து விட்டேன்.
"எதுக்கு பொய்லாம்.. உங்க வீடு அங்கியா இருக்கு"
"எனக்கு மட்டும் ஈரம் இல்லியா மனசுல.. உங்க அளவு இல்லாட்டியும் சுமாராவாச்சும் இருக்கு"
பதில் பேசவில்லை.
"நன்றி அழைச்சதுக்கு" என்றேன்.
"ஒன்பதரைக்கு தாம்பரமா.. நீங்க வர நேரம்" என்றாள்.
"என்ன.." என்றென் சட்டென்று புரியாமல்.
"மக்கு"
வைத்துவிட்டாள்.
ம்மா மட்டும் அப்பா இல்லை. என்ன ஆனாரோ.. அவரைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தாள். ஒரு அண்ணன். ஆனால் வீட்டோடு இல்லை. ஆண்களைப் பற்றி ஒரே வார்த்தையில் மதிப்பீடு வைத்திருந்தாள். 'உதவாக்கரைகள்'
'என் வாழ்க்கையில் எந்த ஆணுக்கும் இடமில்லை என்றுதான் நினைச்சேன்.. ஹூம்..'
நான் பதில் சொல்லவில்லை. அவளுக்குப் பிடிக்காது.
பேசிக் கொண்டே போனோம். மாம்பலத்தில் இறங்கிப் போனாள்.
"உங்க ஆபிஸ் எக்மோர்னு தெரியும்.. என் பின்னால வராம போங்க"
மாலையில் சரியாக என் நேரத்திற்குக் காத்திருந்தாள்.
"போலாமா"
மறுபடி தாம்பரம் வரை.
இறங்கியதும் சொன்னாள்.
'இவ்வளவுதான்.. இதுக்குப் போய் உங்க மனசை அலைபாய விடாம கவிதைல செலுத்துங்க.. பை'
போய் விட்டாள்.
அழுகிற சின்னப் பிள்ளைக்கு கமர்கட் கொடுக்கிற மாதிரி !
அடுத்த கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தவளைப் பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன். முடிகிற நேரத்தில் எப்படி மறைந்தாளோ.. தெரியவில்லை. என் பார்வை அவளிருக்கும் இடத்தை அலசிக் கொண்டே வந்தது. கண்டு பிடிக்க முடியவில்லை.
துவண்டு போனது மனசு.
பின்னாலிருந்து குரல் கேட்டது.
"போலாமா"
தமிழ் !
கோபுரத்தில் கல்லிடுக்கில் விழுந்த பறவை எச்ச விதை துளிர்த்து நிற்பதைப் போல எங்கள் காதலும்.. அப்படித்தான் தமிழின் பார்வையில்..
'எப்ப வேணா யாராச்சும் பிடுங்கிப் போட்டுருவாங்க' என்றாள்.
"இது காட்டுக்குள்ள இருக்கற கவனிப்பாரற்ற கோவில்.. மரமாகி நிலைச்சிருக்கும்.." என்றேன்.

செல் சிணுங்கியது. தமிழ்.
"ம்ம்.."
"தூக்கம் வரலை"
"ஆமா"
"எனக்கும்டா பிசாசு"
"நம்ம கல்யாணத்துக்கு நிச்சயம் துளசியை அழைக்கணும்"
"அவர் மட்டும்தான்.. "
எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் ஆண்டாளின் காதல் ஒலிக்கத் தொடங்கியது

(கல்கியில் பிரசுரம் )

January 11, 2014

இப்படித்தான்...

அந்தப் பாதைக்குத்
தெரிந்தே இருக்கிறது..
உருவாகக் காரணமாய் இருந்த
முதல் காலடி!

துளிர்த்த முதல் இலைக்குப்
புரிகிறது..
நீரூற்றிப் போன கை!

வெட்டிய குளத்தில்
வந்து விழுந்த
முதல் மழைத் துளியை
இன்னமும் ஞாபகம்
வைத்திருக்கிறது ஊருணி !

பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !