December 31, 2009

வண்ணத்து பூச்சியாய் மாறலாம்


ஒரு முறைதான்
என் மீது
அமர்ந்து விட்டு போனாய் ...
என் நிறம்
மாறிப் போனது ..
இப்போதெல்லாம்
கவலைகள்
சூழும்போது
எனக்கு
வண்ண வண்ண
இறக்கைகள்
முளைத்து விடுகின்றன
எத்தனை தூரம்
வேண்டுமானாலும்
சிறகடித்து
பறக்க முடிகிறது..
விண்ணில் என் பயணத்தில்
வண்ணங்கள்
வாரி இறைத்து
திரும்புகிறேன் ..
தரைக்கு வந்ததும்
பதிவு செய்கிறேன்
புது புதுக்
கவிதைகளை..
உன்னால் தான்
அது சாத்தியமானது..
அந்த ஒரு முறை
நீ
என் மீது வந்து
அமர்ந்து விட்டுப் போனதிலிருந்து..!

December 27, 2009

கொஞ்சம் கவிதையாய் மனசு

நிறையப் பேச வேண்டும் போல்
இருக்கும்
அருகில் நீ
இல்லாத போது
எதிரில் நீ வந்தால்
நீ பேசி
நான் கேட்கத் தோன்றும்
ஒவ்வொரு சந்திப்பிலும்.


குழந்தைக்குத்
தெரிவதில்லை
வேற்று முகம்..
பெரியவர்களுக்குத்தான்
இந்த அவஸ்தை எல்லாம்.
புது முகம் பார்த்ததும்
மனத் தராசு
ஏதேனும் ஒரு பக்கம்
சரிந்து விடுகிறது தானாக.

சொட்டிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்..
மனப் பாத்திரம்
நிரம்பி வழியப் போகிறது
என்று பதறினால்..
காலியாகவே இருக்கிறது
அதன் மேல் பகுதி..
வீழ்கின்ற துளிகள் எல்லாம்
என் ஜீவனாகி
விடுவதைப் பின்பே உணர்ந்தேன்..

உன் கால்களைக்
கட்டிக் கொண்டிருக்கும்
என் மனக் குழந்தை..
உதறிச் செல்லும்
நீ உணர்வதில்லை..
விரல்கள் விலகினாலும்
விலகாத
ஈரம் படிந்த
உன் பாதங்கள்.

தலை துவட்டி விடத்
தோன்றுகிறது
ஒவ்வொரு மழைக்குப் பிறகும்
ஈரம் சொட்டச் சொட்ட
நிற்கும் மரங்களைக் கண்டால் !

உன் வீட்டைத் தாண்டி
வெளியே
எட்டிப்பார்த்த
கிளைகளை
வெட்டியபோது
நீ அறியமாட்டாய் ..
நீ கழித்து விட்டதில்
என் மனசும்
ஒட்டி இருந்ததை !

வானம் மின்னலாய் வந்து
பூமியை
முத்தமிட்டு
செல்கின்றது
பொறாமையில்
கருகிப் போகின்றன
மரங்கள் !

December 24, 2009

மீண்டும் ஒரு குழந்தையாய்..

குழந்தைகள் பற்றி பேச்சு வந்தது.

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அனுபவம் சொன்னார். பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் 'நீ என்னவாக விரும்புகிறாய்' என்று கேட்டிருக்கிறார்.

"ரெயில் ஓட்டுவேன்'

"ஏம்மா.."

"எல்லா ஊருக்கும் போலாம்ல"

"அப்படியா"

"எஞ்சின் ரெண்டு பக்கமும் கல்லு போட்டுகிட்டே போகும்.. ஜாலியா இருக்கும் "

"எஞ்சின் கல் போடுமா?"

"அய்ய.. நீங்க பார்க்கலியா.. தண்டவாளத்துல ரெண்டு பக்கமும் கல்லு கொட்டிக் கிடக்குமே.. அது எஞ்சின் போட்டதுதான்"

"ஆமா.. எதுக்கு கல்லு போடுது.."

"அப்பதான் திரும்பி வரப்ப வழி தெரியும்"

தாத்தா பாட்டியிடம் கதைகள் கேட்டு வளர்கிற குழந்தை!

அதன் கற்பனையில் ரெயில் எஞ்சின் கல் போடும்.

இன்னொரு நண்பனின் மகன் காவிரிப் பாலத்தைக் காரில் கடக்கையில் சொன்னது. நீர் ஓடாத காலம். பாலத்தின் கீழே எட்டிப் பார்த்து கேட்டானாம். 'ஏம்பா.. இங்கே இவ்வளவு மண்ணு கொட்டி வச்சிருக்காங்க'

குழந்தைகளின் உலகத்தில் நாம் பிரவேசிக்கும்போது அங்கே நம்முடன் தேவதைகள் ரொம்ப சுலபமாய் கை கோர்த்து விடுகின்றன. பிசாசுகளைத் துணிச்சலாய் விரட்ட முடியும். நிலவில் கால் பதித்து அதே வேகத்தில் உடனேயே பூமிக்கும் திரும்பிவிடலாம்.அவர்களின் உலகில் விரோதங்களுக்கு இடம் இல்லை. மனஸ்தாபங்களும் அரை நிமிடம் தான்.

விசும்பி அழுத குழந்தை சுட்டிக் காட்டிய எதிரியுடன் அரை மணிக்குப் பின் கை கோர்த்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்!

என் பால்ய கால நண்பர்கள் பலரை மறுபடி என்னால் சந்திக்க முடியவில்லை. எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

கண்ணில் படுகிற ஒரு சிலரில் ஒருவர் இளநீர் வியாபாரம். பள்ளி நண்பன். படிப்பு வரவில்லை. . கடை என்று கூட சொல்ல முடியாது. தெரு முக்கில் 10, 12 இளநீர்களைக் குவித்து தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதவன் போல ஒதுங்கி நிற்பான். என்னைப் பார்த்தால் உதட்டோரமாய் ஒரு சிரிப்பு. இப்போது அந்த இளநீர்க் கடையும் காணோம். என்ன ஆனானோ?

இன்னொருத்தன் சாம்பார் வாளியுடன் கல்யாண மண்டபத்தில் வந்தான். 'டேய்.. நீ சிவாதானே'

சிவராமகிருஷ்ணன்!

அடுத்த நிமிஷம் வாளியை வைத்து விட்டு ஓடிப் போய் விட்டான். வேறு ஒருவர் வந்து சாம்பார் ஊற்றினார். தேடியதில் அவன் கண்ணில் படவில்லை. அடுத்த முறை அந்த பக்கம் கிராஸ் செய்தபோது மண்டப வாசலில் அழுக்கு வேட்டியுடன் உட்கார்ந்திருந்தான்.

நல்ல நல்ல பதவிகளில்.. வசதியுடன் இருக்கிற நண்பர்களும் உண்டு. கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குப் போனதில்லை.

மூன்று பேர் இன்று என்னோடு வேலை பார்க்கிறார்கள். என்னோடு கல்லூரியில் படித்தவர்கள்.

என் பள்ளிப் பருவ நண்பர்களைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்.

என்னை ஒரு கல்யாண மண்டபத்தில் பார்த்த பெண்மணி 'நீ..' என்று என் பெயரை சொல்லி கேட்டதும் அவரை எனக்கு அடையாளம் புரியவில்லை.

"நீங்க?"

என்னுடன் முதல் வகுப்பு படித்தவராம். என் அப்பா தபால் துறையில் பணி. போஸ்ட்மாஸ்டராய் ஊர் ஊராய் மாற்றல் வருடத்திற்கு ஒரு முறை. ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊரில் என்று ஆறு வகுப்புகளை ஏழு ஊரில் (அந்த வருடம் இடையிலேயே மாற்றல்) படித்தவன்!

சுத்தமாய் அவர் முகம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவர் துல்லியமாய் எங்கள் இளமைப் பருவ நிகழ்ச்சிகளைச் சொன்னார்.

நான் அப்பாவிடம் அடி வாங்கியதைச் சொல்லும்போது அவர் முகத்தில் லேசான வெட்கமும், சிரிப்பும்.

என் சகோதரிகள் அருகில் நின்று என்னை அவதானித்தார்கள். நான் ஒரு வேடிக்கை பொருள் போல நின்றேன் அப்போது.

எதிரே நின்ற பெண்மணிக்குக் கண்களில் குழந்தைப் பருவம் தெரிந்தது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவும், ஒரு மகனுக்குத் தந்தையும் அந்த நிமிடம் முதல் வகுப்பிற்கு போனோம்.

அன்றிரவு தூங்குமுன் யோசித்தேன்..

பெரியவன் ஆனதில் எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று !

December 22, 2009

காதல் ஒரு வழிப் பாதை"இங்கே பாரேன்"

"பேச மாட்டியா"

"தப்புத்தான். ஆனா வேணும்னு செய்யலை"

"எம்பக்க நியாயம் கேட்க மாட்டியா"

"கடவுளே.. இப்ப நான் என்னதான் செய்யணும்"

"சரி. நீ பேச மாட்டே.. அவ்வளவுதானே. இன்னிக்கு விதிச்சது இதுதான்னு நினைச்சுக்கிறேன்"

"ஸாரி அங்கிள்.."

"பரவாயில்லம்மா.. நீ வேணும்னு பந்தை எம்மேல போடலியே.. ஹை.. காட்ச் பிடி"

"அங்கிள்.. ஏன் ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசாம ஒக்கார்ந்திருக்கீங்க"

"போச்சுரா. நீ கூட கவனிச்சுட்டியா.. விளையாட்டு ஜோர்லயும்"

"சில சமயம் எங்க அப்பா, அம்மாவும் இப்படித்தான் மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு ஒக்காந்திருப்பாங்க"

"அப்புறம் எப்படி சமாதானம் ஆவாங்க.."

"தெரியலியே அங்கிள்.. நாதான் தூங்கிப் போயிடுவேனே."

"அதோ உங்கம்மா உன்னைக் கூப்பிடறாங்க"

"ஸார்.. கடலை வேணுமா"

"ஏற்கெனவே வறுத்து வச்சிருக்கு"

"இது வெவிச்ச கடலை ஸார்"

"அடப் போய்யா"

"ஏதோ சண்டை போல இருக்கு.. நம்ம மேல காட்டறாரு.. கடல.. கடலேய்"

"உனக்கு நிஜம்மா இவ்வளவு அழுத்தம் கூடாது.."

"எத்தனை தடவை ட்ரை பண்ணேன் தெரியுமா.. நெட் வொர்க் பிஸி.."

"மெசேஜ் கொடுத்தேனே.. பார்த்தியா"

"என்னப்பா இது.. பேசவே மாட்டியா"

"ஏய்.. உம்மேல எறும்பு.. சுள்ளெறும்பு.. பொய் சொல்லலே.. நெஜம்"

"அடிப்பாவி.. எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது"

"ஸார்.. பசிக்குது.. ஏதாச்சும் தர்மம்"

"ப்ச்"

"ஸா..ர்.."

"வேற ஆளைப் பாரு"

"நான் கூட பிச்சைக்காரன் மாதிரி இருக்கேன் இப்ப..காதல் பிச்சை!"

"சிரிக்க மாட்டியா.. "

"உன்னைப் பார்த்தபின்பு என் எல்லாக் கவிதைகளும் பொய்யென்று தெரிந்ததுன்னு அப்ப எழுதினேன்.. உன் கோபம் எதையும் விட உயரம்.. எதையும் விட ஆழம்னு இப்ப எழுதத் தோணுது"

"அங்கிள்.. பை.."

"கிளம்பிட்டியா"

"ம்.. அவங்க பேசிட்டாங்களா"

"எங்கே.. உச்சில இல்ல இருக்கு.."

"ஆல் தி பெஸ்ட் அங்கிள்"

"பாரு.. வருங்காலப் பெண்ணரசி எப்படி வாழ்த்திட்டு போறா.. அட்லீஸ்ட் அவ நிச்சயமா ரூட்ல விடமாட்டா.."

"நான் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு. நாய் மாதிரி கெஞ்சறேன்.. நீ அலட்டிக்கவே இல்லை"

"ஏய்.. அப்புறம் நேரமாச்சுன்னு கிளம்பிப் போயிருவே.. பிளீஸ்ரா"

"எல்லாம் அவுட்.. என்னவெல்லாம் நினைச்சேன்.. எல்லாம் போச்சு"

"சுண்டல் வேணுமா அண்ணே."

"கூட வேணா வரட்டுமா"

"என்ன சொல்றீங்க"

"உனக்கு உதவியா டப்பாவைத் தூக்கிகிட்டு வரட்டுமா"

"என்ன அண்ணே கிண்டலா"

"இல்லப்பா.. சாமி சத்தியமா.. "

"அடப் போங்கண்ணே.. சும்மா வெளையாடிகிட்டு.. சுண்டல்.. சுண்டல்"

"அட.. இவங்கூட என்னை சேர்த்துக்க மாட்டேங்கிறான்"

"உனக்கு மட்டும்தான் அழுத்தமா.. நான் எழுந்திருச்சு போகவா"

"முடியலைடா.. என்ன யோசிச்சாலும் நிஜம்மா உன்மேல கோபம் வரலே.. ஆனா உன்னை சமாதானம் பண்ண இதுக்கு மேல என்ன செய்யிறதுன்னும் புரியலே.."

"ஓக்கே.. நான் பண்ணது தப்பு.. என்ன தண்டனை வேணா கொடு. ஆனா பேசாம மட்டும் இருக்காதே."

"ஸாரி.. ஸாரி.. "

"ஐ லவ் யூடா"

( இந்தக் கடைசி வரி மட்டும் அவள்! )

December 19, 2009

நீடூர் வாழி

(படத்தில் இருக்கும் மூதாட்டிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை)

கல்லூரி நாட்களில் அம்மாவுக்குத் தெரியாமல்.. அப்பாவுக்குத் தெரியாமல்.. தாத்தாவுக்குத் தெரியாமல்.. சித்தப்பா, அத்தை, ,மாமா இன்ன பிற உறவுகளுக்குத் தெரியாமல்.. என்று கைவசம் சில்லறை கணிசமாய்ப் புரண்ட பொற்காலம்.

அப்புறம் வேலைக்கு சேர்ந்தப்ப, பிசாத்து பணம் ஸ்டைபண்டா கொடுத்தாங்க. அதாவது இப்ப வாங்கற துட்டை கம்பேர் பண்ணா.. ஆனா அப்ப செலவழிச்சது போக மிச்சம் நிக்கும்.

கையில நாலு காசு இருந்தா நம்மளுக்கு உடனே 'கர்ணன்' வேஷந்தான் ரொம்பப் பிடிக்கும்!

அப்படி ஒருநாள் அறிமுகம் தான் அந்தப் பாட்டி.

தெருவுல எதிர்ல பார்த்து 'நீடூர் வாழி' என்று எனக்குப் புரியாத ஒரு வார்த்தைய போட்டு நின்னாங்க.

பியூட்டி என்னன்னா அவங்க எங்கிட்ட எதுவுமே வாயத் திறந்து கேட்கல. அழுக்குப் புடவை. அதிலயும் கிழிசல். கக்கத்துல ஒரு துணிப் பை மூட்டையாட்டம்.

சட்டைப் பையில கை விட்டு அஞ்சு ரூபா வந்தத எடுத்து கொடுத்துட்டு போயிட்டேன். அப்ப என்னை அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. (இப்ப வரை அதே நிலைமைதான்.. பாட்டிங்கதான் என் பேவரைட்)

இந்த டீல் நல்லா இருக்கேன்னு மறுநாளும் எங்கிருந்தோ கரெக்டா என் எதிர்ல வந்தாங்க.

'நீடூர் வாழி'

இப்ப உஷாரா ரெண்டு ரூபா போட்டேன். அடடா.. அப்பவும் அதே திருப்திதாங்க.. அவங்க முகத்துல.

இப்படி ரெண்டு வருசம்.. ஞாயித்துக் கிழமை, அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர மத்த நாள்ல.. நான் கொடை வள்ளல்.

இப்படி ஒரு அந்நிய செலாவணி வரும்னு தெரியாம வீட்டுல கொஞ்சமா ஏமாத்திகிட்டிருந்த நான், ஓவர்டைம் பண்ண வேண்டிய கட்டாயம்.

ஏண்டா.. அப்படி என்னதான் உனக்கு செலவுன்னு கணக்கு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம மூஞ்சி மாதிரி கூட இருந்தே குழி பறிக்கற மேட்டர வச்சுகிட்டு சரளமா பொய் சொல்ல முடியல.

பக்கத்து வீட்டு மாமி வந்து டைமிங்கோட பஞ்ச் டயலாக் விட்டாங்க.

"அந்தப் பாட்டிகிட்ட உனக்கு என்னடா சகவாசம்"

உடனடியா கமிஷன் வச்சு விசாரணை நடத்தி என் குற்றப் பின்னணியைக் கண்டு பிடிச்சுட்டாங்க.

"தர்மம் பண்றது நல்லதுதான்.. அதை ஏன் மறைச்ச.. போடா அசட்டுப் புள்ள" சரித்திரத்தில் இடம் பெறும் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பக்கத்து வீட்டு மாமி 'எனக்கேன் பொல்லாப்பு' என்று இடத்தைக் காலி செய்தார்.

கிளைமாக்ஸ் இதுதான்..

அந்த மூதாட்டி என்னை ஒருநாள் வழிமறித்தார்.

பைக்குள் கைவிட்டபோது "அது இருக்கட்டும் தம்பி.. நாளைக்கு எங்கூட வருவியா " என்றார்.

பாட்டியை எப்படி கூட்டிகிட்டு ஓடறது என்று குழம்பிப் போய் ஆட்டோ செலவுல்லாம் யோசிச்சப்ப.. அவர் சொன்னது.

போஸ்ட் ஆபீஸ்ல எஃப்.டி போட்டு வச்சது- ரூ 20000- மெச்சூர் ஆவுதாம். அதை எடுத்து பேங்க்ல போடணுமாம். கூட வர முடியுமா..

போனேன். என்னைத்தான் எண்ணி வாங்கச் சொன்னார்.

"நீயே வச்சுக்கப்பா பத்திரமா.. பேங்க் வரைக்கும்"

பேங்க்கில் அதை பாட்டி பேரில் எஃப்.டி போட்டோம்.

"நாமினி பேரு"

பாட்டி சொன்னார். "அழகேசன்"

வெளியே வந்தபோது எனக்குள் குறுகுறுப்பு. 'யார் அந்த அழகேசன்?'

"வீட்ட வுட்டு தொறத்திட்டாங்கப்பா.. தெருவுல நிக்கறேன்.. நான் போனா கொள்ளி போடுவான்ல.. அதான் அவம்பேர்ல போட்டேன்"

எனக்கு ஏன் பார்வை மறைத்தது..

சற்றே கூன் விழுந்த அந்த மூதாட்டி சிரமப்பட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்

"நீடூர் வாழி"

என் வாழ்க்கையில் இருந்தே போய் விட்டார். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. அவன் கொள்ளி போட்டிருப்பானா.. பத்து வருடங்களாய் என் மனதைக் குடைந்து கொண்டிருக்கிற கேள்வியை.. இதோ.. உங்கள் முன் இறக்கி வைத்து விட்டேன்.

ம்

ஒரு எழுத்தை
கவிதையாக்க
உன்னால்தான்
முடிகிறது..
"ம்"
நீ ஒவ்வொரு முறை
"ம்" கொட்டும்போதும்
எனக்குள் அடிக்கிறது
என் சின்ன இதயம்
சந்தோஷத்தால் ..
உன் ஒரு பார்வை
என்னைக்
புரட்டி போட்டது ..
உன் ஒரு "ம்"
என்னை
இறுக்கிக் கட்டியது..
நீ இனி எப்போது
"ம்" சொல்வாய் என்று
உன் உதடுகளைப்
பார்த்தேன்
நீ சொன்ன "ம்" கேட்காமல்
எனக்குள் நானே
தொலைந்து போனேன் ..

December 16, 2009

தெருவுக்கு வாங்க

என் மீது எந்தத் தவறும் இல்லை..
ஜனித்தபோது..
'அம்மா' என்கிற உறவை மட்டுமே உணர்ந்து
உலகை எட்டிப் பார்த்தேன்..
நான் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று ..
சொல்லித் தரப்பட்டதை விட
எப்படி எல்லாம் இருந்து விடக் கூடாது என்று
இடை விடாமல் என் காதுகளுக்குள் கத்தினார்கள்..
பெற்றோர்.. உறவு.. மதம்..அரசியல்வாதிகள்..
எவரும் விடவில்லை என்னை..
தப்பித்துப் போக நூல்களைப் ப(பி)டித்தேன்..
கிடைத்த எழுத்துக்களை எல்லாம்
ஆர்வமாய் உள்வாங்க முயன்றேன்..
எத்தனை முரண்கள்..
அங்கும் திணித்தல்கள்..
எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு
தெருவுக்கு வந்தேன்..
என்னைப் போலவே சங்கடப்படும் வேறு சிலரும்..
நாங்கள் இப்போது அடையாளமற்றவர்கள்..
உலகின் பார்வையில்..
எங்களுக்கான அன்பின் பார்வையில்
ஒரே இனம் மனிதனாய்..
இப்போதுதான் நன்றாகச் சிரிக்கிறோம் வாய் விட்டு ..
ரசனையாய்.. தெளிவாய்..
விரல்களை நீட்டுங்கள்
சுட்டுவதற்கு அல்ல..
அன்பால் கட்டுவதற்கு..
போன தலைமுறையை..
நேற்றைய மனிதர்களை
நையாண்டி செய்வதில்
நேரம் கழித்து விட்டு
நேசம் தொலைத்து விட்டு
நாளைய மனிதர்களுக்கு 'அவலாகி' விடாதீர்கள்..
தெரு இன்னும் காத்திருக்கிறது..
அன்பின் வருகைக்காக.

December 15, 2009

புறநகர் கடவுளர்கள்


ஆயிரம் வருடப் பழமையில் ஊர்க் கோவில்
வவ்வால் நாற்றம்
புறாக்களின் 'க்கும்'
புஷ்கரணியில் பொரி விழும் நேரம்
துள்ளும் மீன்கள்
பாசி வழுக்கும் எச்சரிக்கையில்
மனிதர் புழங்காக் குளம்
ரேஷன் அரிசியில் பிரசாதம்
முகஞ் சுளித்த பக்தர்
நிராகரித்து வைத்ததை
கோவில் பூனை கூட
முகர்ந்து முகம் சுளிக்கும்.
எத்தனை மனிதர்களின்
குணம் பார்த்த கடவுள்..
இன்று சீந்துவாரற்று.
புறநகர்ப் பகுதியில் புதிதாய்
முளைத்த கோவிலில்

கொட்டும் மின்சாரமுரசு..
வாசலில் கரும்பலகையில்
இந்த மாதம் முழுக்க உபயதாரர்கள்.
நிரம்பும் உண்டியல்..
'டூ வீலர்' அர்ச்சகர் கையில் செல்பேசி..
வெள்ளிக் கவசம் அலுத்து
தங்கக் கவசம் வருகைக்கு காத்திருக்கும்
புறநகர்க் கடவுள் அறிவாரா ..
மனிதன் தேவதைகளிடமும் பேதம் பார்ப்பவனென்று!

December 13, 2009

உனக்கு மட்டுமே சாத்தியம்

நீ இல்லாத நேரங்களில்
.உன் நினைவுகளைவிட்டுச் செல்கிறாய்..
அவை உன்னைப் போலவேமோசமடி..
என்னை ஏய்ப்பதில்.
கனவுகளில் நீ வராததால்
என் தூக்கத்திற்குவிடுமுறை
அளித்திருக்கிறேன்..
அதெப்படி சாத்தியமாகிறது
பூக்களே இல்லாமல்அதன்
வாசனை மட்டும்
என்னை சுற்றிஎப்போதும் சுழல்கிறது..
உன்னைத்தான் 'பூ' என்றேன்..
இத்தனை மெல்லிய விரல்களாஉனக்கு..
செல்லமாய் என்னை அடிக்கும்போதுதான்
அதை உணர்ந்தேன்..
அதுவே கோபத்தில் ஒற்றை விரலால்
நீ என்னைச் சுட்டுகையில்
விழாத அடி என்னமாய் வலிக்கிறது..
உன் பெயர் உச்சரிக்கும்போது
என் இதயம் எத்தனை விசாலமாகிறது..
காணாத நேரங்களில்
எனக்கான உலகம் சுருங்கிப் போகிறது..
நேரில் வாயடைத்து
நினைவுகளில் ஏங்க வைத்து
காத்திருக்கும் என்னை
கைப் பிடிக்க வா.. பெண்ணே!

December 11, 2009

காற்றோடு பேசலாம்

இன்றைய தினம் எல்லா வேலைகளையும்
ஒத்திப் போடுங்கள்.
ஆற்றங்கரைக்குப் போகலாம்.
நீர் ஓடிய மண்தான்.
மனிதக் கழிவற்ற
நடு ஆற்று மண்ணில் அமரலாம் .
வேறு கவனம் இல்லையே
அப்படியே கண் மூடி
காற்றை உணருங்கள்.
காது மடல்களினூடே
அது உரசிப் போகிறதா..
இந்த இடத்தில்
காற்றைத் தடை செய்ய ஏதுமில்லை.
அதன் சுதந்திர பூமி..வெட்ட வெளி..
காற்றின் வாசனையை நுகருங்கள்..
நகருக்குள் பிற வாசனைகளால்
கலப்படமான காற்றுதான் கிட்டும்.
கூச்சமே வேண்டாம்.
மனம் விட்டுப் பேசலாம்.
கூவும். கிள்ளும்.
முகத்தில் அடிக்கும் .
சீண்டும். தழுவும். முத்தமிடும்.
அணைத்துக் கொள்ளும்போது
இதுவரை அறியாத சுகம்..
என்ன.. நேரம் பார்த்து ஆச்சர்யமா ..
போனதே தெரியவில்லையா..
நேரம் கிட்டும்போதெல்லாம்வரலாம். பேசலாம்.
மனசுக்குள்.. அல்லது வாய் விட்டு..
எல்லாப் பிரச்னைகளுக்கும்காற்றிடம் தீர்வு உண்டு..
நிச்சயம் திரும்பிப் போவீர்கள்..
தீர்வுகளுடன்.. அல்லது
சமாதானத்துடன் ..!

December 09, 2009

குழந்தைகளைக் கவனிக்காதீர்கள்!குழந்தைகளைக் கவனிக்காதீர்கள்!
பயணத்தில்..பக்கத்து வீட்டில்..
ஏதேனும் ஒரு குழந்தைகவனம் ஈர்க்கிறது.
சின்னச் சிரிப்பால்..மழலையால்..
எதிர்பாராத ஸ்பரிசத்தால்..
தொலைத்துவிட்ட குழந்தைப் பருவம்
உள் மனசுள் உறுத்த கை நீள்கிறது
குழந்தையைப் பற்ற..
அடிமனதில் ஒரு எச்சரிக்கையும்..
'வேண்டாம்.. விட்டு விடு'
இத்தனை காலம் சேகரித்த
விஷம் பரவிய உடம்புடன்
'தொடாதே குழந்தையை'
அது அதன் போக்கில் இருக்கட்டும்.
'அழிப்பான்' போல
நாக்கும்கைகளும் இருக்கும்வரை..
எந்தக் குழந்தையையும்கவனிக்கக் கூடாது..
இப்படிக்கு -
தொலைத்துவிட்டகுழந்தைமையின் சார்பில்.

December 07, 2009

சித்தப்பா

அப்பா, அம்மா பற்றிஎல்லோரும்
கவிதைஎழுதி விட்டார்கள்.
அப்பாவின் பிரியம் கண்டிப்புடன்..
சித்தப்பாவோ எவ்விதநிபந்தனைகளுமற்ற
பிரியம் காட்டினார்..
அப்பா நிராகரித்த சினிமாக்களை
சித்தப்பாதான் அழைத்துப் போனார்.
பிடித்த பெல்பாட்டம் பேண்ட்டும்
அவர் வாங்கித் தந்ததுதான்.
சங்கரவிலாஸ் ஸ்பெஷல் ரவா
அவரால்தான் அறிமுகம்.
பைக் ஓட்டியதும் முதல் சிகரெட்டும்
அவர் கொடுத்ததுதான்.
திருடக் கற்றுக் கொண்டதும்
அவர் பர்ஸில்தான்.
காதலை அவரிடம்தான்
முதலில்சொல்ல முடிந்தது.
பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
இன்றுநானும் ஒரு தகப்பனாய் நிற்கையில்
தன் சித்தப்பனோடு நிற்கும்
என் மகனைப் பார்க்கையில்
அடி வயிற்றில் கலவரம்.
'எந்த அளவு எல்லை மீறியிருக்கிறான்?'

December 05, 2009

வாழ்வின் அர்த்தங்கள்

சந்திப்புகளைத் தவிர்க்காதீர்கள்.

பிறிதொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று.

செடியில் பூத்த மலர்மறு நாளே வீழ்கிறது..

கரைக்கு வந்த அலை அடுத்த நிமிடம் இல்லை..

மேலே உங்களைக் கடந்து போன மேகம் கூட

மறுபடி வரப் போவதில்லை..

'ஹாய்' சொன்ன எதிர் வீட்டு

குழந்தைஇன்றும் உங்கள்

புன்னகையைவரவேற்கிறது ஆர்வமாய்..

முகந்திருப்பிப் போய்விட்டால்

அதன் முகம் வாடிப் போகும்..

பசித்த முகம் எதிர்ப்பட்டால்

உணவுப் பொட்டலம் தந்து

கண்ணின் ஒளியைப் பாருங்கள்..

நாட்காட்டியைநன்றாகப் பார்த்திருக்கிறீர்களா..

நமக்காகவே வருட முழுவதும்

காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது..

எத்தனை விவரங்கள் அதன் மேல்..

எல்லாவற்றையும் நாம் கவனிப்பதில்லை என்றாலும்.

'விருட்டென்று' தேதி கிழித்துநகராதீர்கள்..

ஒரு கையால் நாட்காட்டி அட்டையைப் பற்றி

வாத்சல்யமாய் பிரியுங்கள்..

கசக்காமல் போடுங்கள்..

இவ்வளவும்,

இதற்கு மேலும் செய்தபின்

மனசார சொல்லுங்கள்..

'என்ன அழகான வாழ்க்கை' என்று..

ஏனென்றால் பிறந்ததுபுலம்பலுக்காக அல்ல !

December 04, 2009

முறை வாசல்

முறைவாசல்..
அப்படின்னா ரொம்ப நாள் வாசல்ல நின்னு முறைக்கறதுன்னு தப்பு தப்பா நினைச்சுகிட்டு இருந்தேன்.
ஒண்டு குடித்தன வீட்டுல இருந்தா, ஒவ்வொரு குடித்தனக்காரரும் டர்ன் போட்டு வாசல் தெளிச்சு கோலம் போடணும்.
பிரச்னை என்னன்னா.. முதல் நாளே சாணியைக் கொண்டு வந்து வச்சிரணும். காலங்கார்த்தால இருட்டுல சாணி தேடறது பெரிய கொடுமை. எங்க தெருவுல வாசல் தெளிக்க வேலைக்கு வச்சிருந்த அம்மா இருட்டுல 'எதையோ' கொண்டு வந்து அவங்க வாசல் தெளிக்கற பத்து வீட்டையும் 'மணக்க' வச்சுட்டு போன கதையை இப்ப நினச்சாலும் நான் ஸ்டாப் சிரிப்பு! நாங்க இதுக்கு முன்னால குடியிருந்த சித்திரை வீதில எதிர் வீட்டு ஆம்பளை, அவரே வாசல் தெளிச்சு அழகா கோலம் போடுவார்.
தெருவுல அவர் இத்தனைக்கும் பெரும்புள்ளி. கோலம் போடறதுல அப்படி ஒரு லயிப்பு. 'எட்டு புள்ளி.. பதினாறு புள்ளி.. முப்பத்திரண்டு புள்ளி' னு என்னென்னவோ கணக்கு வேற. தெருவுல ரெங்கநாதர் வலம் வரும்போது பெரிய கோலமா அவர் போடற அழகைப் பார்க்கவே லேடிஸ் நிப்பாங்க. அவருக்குக் கொஞ்சம் கூட லஜ்ஜையே கிடையாது. கோவில்ல விழா நாட்கள்ல கூட அங்கேயும் போய் கோலம் போடுவார். பளிச்சுனு ஈவ்னிங் வரை அழியாம அப்படியே இருக்கும்.
எங்க தெருவுல காலைல.. மாலைல ரெண்டு வேளையும் ரெண்டு பக்கத்து வீடுகளிலும் தண்ணி தெளிச்சு கோலம் போடுவாங்க.. அதான் எல்லா ஊர்லயும் செய்யறாங்களேங்கிறீங்களா..இப்ப குடியிருக்கற தெருவுல நான் ஆபீஸ் கிளம்பறப்ப எந்த வீட்டு வாசல்லேர்ந்து தண்ணி கொட்டுவாங்கன்னு தெரியாது.
வீட்டுக்குள்ள இருந்துகிட்டு பக்கிட் தண்ணிய வாசல்ல வீசுவாங்க. உஷாரா இந்த பக்கம் ஒதுங்கலாம்னா உடனே இவங்களுக்கு ரோஷம் வந்து 'நான் மட்டும் சளைச்சவளான்னு' அவங்க பங்குக்கு ஒரு பக்கெட் தண்ணி.. ரெண்டு பக்கமும் சதிராடி ஒரு வழியா ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் திரும்பி வரப்ப மறுபடி அதே 'வீசல்”. கையில டவல், சோப்பு எடுத்துகிட்டு கிளம்பினா குளிச்சுட்டே போயிரலாம்.
இத்தனை சுத்தமா வச்சிருக்காங்கன்னு உடனே முடிவு பண்ணிராதீங்க. தண்ணி தெளிக்கறதுக்கு முன்னால குப்பையை கூட்டி குமிப்பாங்க பாருங்க.. முட்டு முட்டா.. ரெண்டு பக்கத்து வீட்டு சமாச்சாமும் நடுத்தெருவுல.. நம்மால தைரியமா டூ வீலர் ஓட்ட முடியாது.. அதுவும் சூப்பரா ரோடு போட்ட தெருவுல பற்பல முட்டுகளைக் கடந்து போகற த்ரில் இருக்கே.. லைட் இல்லாத நேரம் இருட்டுல முட்டா தெரியறது இவங்க சேர்த்து வச்சதா.. இல்ல சோம்பலா படுத்துருக்கிற நாயான்னு தெரியாது.. நடுங்கிகிட்டே கிராஸ் பண்ணனும். 100 அடி தூரத்துக்குள்ள நாலு நாயி.. ஏழு குப்பை முட்டு.. போதும்டா சாமின்னு ஆயிரும்.
எதிர் வீட்டுல ஒரு தரம் முறை வாசல் விஷயமா சண்டை வந்து அது முடியவே எட்டு மணி ஆச்சு. அப்புறம் வாசல் தெளிச்சு கோலம் போட்டாங்க. அதுல ஒருத்தர் மறுமாசமே வீட்டைக் காலி பண்ணிட்டு போயிட்டார்.
நாங்க இருக்கற அபார்ட்மெண்ட்ல (நவீன ஒண்டு குடித்தனம்) இந்த பிரச்னையே இல்ல. எதிர் வீட்டுலகோலம் ஸ்டிக்கர் ஒட்டிட்டாங்க. தெருவுக்குக் குடி வந்த புதுசுல கொஞ்சம் ஆர்வத்தோட எதிர் வீடு, பக்கத்து வீடுகள்ல 'சுகாதாரம்.. சுத்தம்னு' டயலாக் விட்டு பார்த்ததுல மூஞ்சிக்கு நேராவே சிரிச்சு வழியனுப்பினாங்க.. 'அண்ணே.. எங்கன்னே வேலை பாக்கறீங்க.. உதவி பண்ணனும்னா கைமாத்து தரலாமே' ன்னாங்க.
வீட்டு புள்ளைய (ஏழு வயசு) வாசல்ல ஒக்கார வச்சு 'சுச்சு.. கக்கா' போக வச்சப்பதான் கொதிச்சுப் போச்சு.. 'நல்லா இல்லீங்களே' ன்னு சொல்லப் போனா.. 'ஹி..ஹி.. அது எப்படி நல்லா இருக்கும்..' னு கிண்டல்!
வச்ச பூச்செடியை ஆடு மாடு மேஞ்சுட்டு போச்சு. வருஷத்துல மூணு நாள் மட்டும் முனீஸ்வரன் கோவில் திருவிழா நேரம் தெருவே பளிச்சுனு ஆயிரும். நாங்களும் அந்த மூணு, நாலு நாள் 'அழகுக்காக' வருஷம் பூராக் காத்திருப்போம். அப்புறம் மறு நாள்லேர்ந்து 'முட்டு'.. !
நல்லாத்தான் இருக்கு.. எங்க தெருவும்..தெனம் ஒரு கதைக்கு அடித்தளமா!

December 03, 2009

மனசுக்குள் ஒரு பாடல்மனசுக்குள் ஒரு இசை
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது..
கேட்டிருக்கிறீர்களா..
அதன் வரி வடிவம் தான்
சில நேரங்களில்
கவிதையாய் .. கதையாய்
படைப்புகளாய் ..
இசை நம்முள் ஒலிக்காத
தருணங்களில்
மனிதத் தன்மை
தொலைந்து போகிறது..
"கீப் மியுசிக் ஆல்வேஸ் "
அடுத்தவர் மீது நம் நேசம்
ஒரு பெருமழையாய் வர்ஷிக்க
இடைவிடாமல் இசை
ஒலிக்கட்டும் நம் இதயத்துள்..
மனதின் பாடலை விட
இனிமை வேறெதில் உண்டு..?!
பதிவாகாத பல பாடல்களை
தன்னுள் சுமந்து என் மனம்
இசைத்துக் கொண்டிருக்கும்
காலம் வரை
என் உதடுகளில் புன்னகை மின்னும்
பிறருக்காக..
பிறரின் கைகள் நீளும்
என் கரம் பற்றிக் கொள்ள..
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள
அனைவருக்கும் தேவை
அவரவருக்கான
மனதின் இசை !