March 29, 2013

பால்யம்

அம்மாவின் கனவுகளுக்கு
வண்ணம் பூச
நீ எப்போது
பெரியவன் ஆவாய்..

உன்னைக் கொடுத்ததும்
என்னை மறந்தவன் முன்


நானும் நிமிர வேண்டுமடா
ஒரு ராணியாய்.

என் அரண்மனைக் கதவுகள்
திறந்தே இருக்கட்டும்.
உன் குதிரையில்
நீ பவனி வரும் வரை.

சின்ன வயசில் சிரித்ததை
மீட்டுக் கொடுத்தவன் நீ.
என் புன்னகைக்கு அர்த்தம் நீ.
வலி தடவிசிரித்த நாட்கள்
தொலைந்து
வழி தெரிந்து சிரிக்கவேணும்

மெதுவாகவேனும் வளர்ந்து வா..
பால்யங்கள் அழகானவை !

March 15, 2013

ஒரு அனுபவம்.. ஒரு கவிதை..

’கால்.. அம்பது சிக்கரி’ 
(அதாவது கால் கிலோ ப்யூர் காபியும் 50 கி சிக்கரியும்)
பையன் துடியாய் இருந்தான்..

மெல்லிய பாடல் கேட்கிற பாவனை எனக்குள் அவன் இயங்கிய விதம்.
காப்பிக்கொட்டையை மெஷினில் போட்டு ஸ்விடசைத் தட்டினான்.
ஒரு இரும்புக் கம்பியால் மெஷின் ஓட்டும்போதெ உள்ளிருந்ததை தட்டிக் கொண்டிருந்தான். சீரான அரவை.

உய்ய்ங்.. என்று ஆம்புலன்ஸ் ஒலி அப்போது தான் கேட்டது. ரோட்டில் எங்களைக் கடந்து போன அந்த ஒலி.
எனக்கு ஏதோ ஒரு பழைய அச்சத்தில் உடம்பு தன்னிச்சையாய் சிலிர்த்து அடங்கியது.

அதே நிமிடம்..
அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. மெஷினுக்குள் வைத்திருந்த பார்வை விலகவில்லை.. விரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக !

அவ்வளவுதான்.. அரைத்ததை டின்னில் கொட்டி சிக்கரி கலந்து பாக்கட்டில் போட்டான்.

அவன் கையைப் பற்றிக் கொள்ளத் தோன்றியது அப்போது !-----------------------------------------------------------------------------------------------------

எழுந்ததும்
ஒரே ஒரு நிமிடம்
நின்று
படுத்திருந்த இடத்தைப்
பார்த்தேன்..

வழக்கமாய்
அன்றைய தின பரபரப்பில்
விலகிப் போகிறவன் தான்..

அது ஏதோ சொல்வது
போலில்லை?

இரவு முழுவதும்
என்னைக் காத்திருந்தது..
இனி
இன்னொரு இரவுக்காய்
காத்திருக்கப் போகிறது..

உறவாடுவதும்
உதறுவதும்
மனித இயல்பென
படுக்கைகளுக்குத் தெரியும்..

மடித்து கூட வைக்காமல்
விலகிப் போகிற
எனக்குத்தான் வலிக்கிறது
அதன் ஊமை பாஷை !


------------------------------------------------------------------------------------------------------

March 10, 2013

ஒற்றைக் கொம்பன்

என் ப்ரியங்களைச் சுமந்து
நிற்கிறேன்
கால நதியில்..

ஒற்றைக் கொம்பனாய்.

வழித்தடமெங்கும்
ஆளரவமற்று.

பகிர்தலற்ற நேசம்
பூபாரமாய்க் கனக்கிறது..

உருவம் கண்டு மிரண்டு
ஓடுகிறார்கள்..

உள்ளே கசிவது
ஜீவிதத் தேன்..

வனம் விடுத்து
ஓரிரு கரும்புக்கும்
ஒரு சீப்பு வாழைக்கும்
பெருங்கவளத்திற்கும்

அன்பின் முத்தங்களுடன்..

எனக்கு மதம் பிடிக்கவில்லை..
மனிதம்தான் !

March 05, 2013

செத்துப் போனவள்
அம்மா
தன் பிரசவங்கள்
பற்றி
அக்கா.. தங்கைகளுடன்
பேசிக் கொண்டிருந்தாள்..
அனுமதி மறுக்கப்பட்ட
பிரதேசம் அது.
’இவனைப் பெத்தப்பதான்
ரொம்ப கஷ்டப்பட்டேன்’
அக்கா கேட்டாள்..
எனக்கும் தங்கச்சிக்கும்
நடுவுல ஒருத்தி இருந்தாளாம்மா..
அம்மாவின் முகம்
நசுங்கியது..
பொறந்தப்ப அவ்வளோ அழகு அவ..
’என்னைய விடவா’
அக்கா.. தங்கச்சி
முகங்களில் பொறாமை..
‘ம்ம்..’
அம்மாவின் கண்களில்
இறந்த காலம் குடியேறியது..
’யாரைப் போல இருப்பா’
‘என்னாச்சு அவளுக்கு’
‘எந்த வயசுல போனா..’
அம்மா.. துவண்டு
அக்கா மடியில் படுத்தாள்..
செத்தவள்
அந்த நிமிஷம்
எதிரே வந்து நின்றாள்..
மானசீகமாய்.

March 03, 2013

கோமாளி
எந்த வேஷமும் 
அத்தனை
இயல்பாய்
பொருந்துவதில்லை
வாழ்வில்..

கோமாளித்தனங்கள்
செய்வதில்
ஒருவரை ஒருவர்
மிஞ்சிக் கொண்டு..

என்றேனும்
வேஷம் கலைத்து
ப்ரியம் காட்டினால்
சிரித்து விட்டுப் போகவே
கூட்டம்..

எதற்கும் தேவைப்படலாம் என
கைவசமே இருக்கிறது
கையுறையும்
பபூனின் முகமூடியும்