November 28, 2009

ஸ்பரிசம்

விளக்குகளை அணைத்த பின்னும்
ஒரு வெளிச்சம் போல
அவள் பார்வைமின்னிக் கொண்டிருந்தது.
உதடுகள் அசைவின்றி
மௌன மொழியில் எங்கள் உரையாடல்.
அவ்வப்போது தொட்டுக் கொண்டதில்
மனசுக்குள் சின்ன அதிர்வு.
'ஓடாதே.. விழுந்துருவே..'
குழந்தையைத் துரத்திக் கொண்டு வந்தவள்
விளக்கொளிர விட்டு சொன்னாள்..
'இருட்டுல யாரு.. நடு வழில'
குழந்தை வந்துசுவாதீனமாய் மடியில் அமர்ந்தது..
'ஹை.. ஆண்ட்டி'
அம்மாக்காரி நகர்ந்து போனாள் பெருமூச்சுடன்..
'கொஞ்ச நேரமாச்சும்நான் நிம்மதியா இருக்கேன்'
பிஞ்சு விரல்களின்மெத்தென்ற ஸ்பரிசத்தில்
எங்கள் மௌனம் இனிமையாய்
மொட்டவிழ்த்துக் கொண்டது அப்போது..
ஒரே நேரத்தில் சொன்னோம்..
'ஹாய்.. செல்லம்..'
எட்டு வருஷ ஏக்கம் அந்த நிமிஷம்
எங்களை விட்டுசற்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தது அப்போது.

November 26, 2009

பிரியத்தின் காற்று

கூட்டம் நெருக்கித் தள்ளியது. இடிபடாமல தேர் பார்க்க செய்த முயற்சிகள் வீணாகிப் போனது. எவ்வளவு தூரம்தான் பின்னால் நகர்வது?
"இந்த வருசம் கூட்டம் அதிகந்தான்" என்றார் சண்முகம்.
என் ஆமோதிப்பை அவர் கவனிக்குமுன் இன்னொரு தரம் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.தெருமுனை திரும்பிய தேர் ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது. பாதித் தெரு வரை ஜனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள்.கடை வீதிப் பக்கம் நின்றிருந்தோம். தேர் பார்த்து விட்டு அப்படியே கூட்டத்தில் நெருக்கப்படாமல் பக்கத்துத் தெருவிற்கு நகரும் உத்தேசத்துடன்.
"சித்திரைத் தேர்க்குத்தானே சுத்துப்புற கிராமத்திலேர்ந்து பேயாக் கூட்டம் வருது" என்றேன்.
நேர்த்திக் கடன் செலுத்த கால் நடை வரிசை வேறு. நெரிசலில் அதற்கும் அவதி.
"என்ன ஒத்துமையா நிக்கிறாங்க" என்றார் சிலாகிப்புடன்.
என் பதில் வேறாக இருக்கும்போது 'ம்' கொட்டிப் பழகியவன்.சண்முகம் என்னை நெருங்கி நின்றார். அலங்கரிக்கப்பட்ட தேர் தடதடவென வருகிற அழகை கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தோம்.
"சாமி தெரியல.. படுதா இறங்கி மறைக்குது" என்றார்.
"ஆமா.. நல்லா இழுத்துக் கட்டலை போல"
தேர் நெருங்கி வரவர தள்ளுமுள்ளு அதிக்மானது. கடை ஓரம் ஒதுங்கி நின்றதால் எங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டோம்.
"ஆச்சு.. இந்தக் கூட்டத்துக்கு.. ஒம்பது மணிக்கே நிலைக்குப் போயிரும்"
"ஒரு நாக் கூத்து"
தேர் ஓடிவரும்போது இனம் புரியாத கவர்ச்சி இருக்கிறது. யாரோ நம்மைத் தேடி வருகிற மாதிரி.. அத்தனை பெருசாய் அணைத்துக் கொள்ள வருகிற மாதிரி.. மனச்சுமை களைந்து.. மயிலிறகாய் மாற்றி.. ஆலிங்கனத்தில் சுகம் தரப்போவது போல..சண்முகத்திடம் சொன்னேன்.
"என்னமோ ஒரு நிலை கொள்ளாத பரவசம்.."
"நாம சின்னப் புள்ளைங்களா மாறிடறோம்ல.."
தேர் கிட்டே வந்ததில் தேர்த்தட்டு புலனானது. குருக்கள் நின்று துண்டை வீசிக் கொண்டிருந்தார். துண்டின் அசைவில் தேரின் இயக்கம் நிர்ணயிக்கப் படுகிறமாதிரி அவரிடம் ஒரு அலட்டல் பெருமை.சண்முகம் 'ஹர.. ஹர' என்றார்.நான் மெளனமாய் மேலே பார்த்தேன். பிரார்த்தனை அற்ற மனசு என்னவென்று வேண்டிக் கொள்ள?சட்டென்று கலகலப்பு தொலைந்து மனசுக்குள் கனம் அப்பியது.
"அம்மையப்பா" என்ற அலறல் கேட்டது.கன்னத்தில் படபடவென போட்டுக் கொண்ட கிழவி கைகளை உயரே தூக்கி இன்னொரு தரம் கூவினாள்."அம்மையப்பா.."பேரன், பேத்தி பார்த்த கிழவிக்கு இன்னமும் அம்மையப்பன் ஆசை போகவில்லை.
அம்மா.. அப்பா.. மனசு கேவியது. என் கண்களை சண்முகம் படித்திருக்க வேண்டும். என் கையைப் பற்றி அழுத்தினார். சிரித்தேன். ஒட்டாத சிரிப்பு.தேர் விடுவிடுவென நகர பின்னால் தேர்க் கட்டைகளுடன் ஆட்கள் ஓடினார்கள்.
"கூட்டம் குறையறாப்ல தெரியலே" என்றார் பாதி அலுப்பாக.
"கொஞ்சம் பொறுத்துப் போவோம்"
"ராஜகோபுரம் பக்கம் போயிட்டா.. இவ்வளவு நெரிசல் இருக்காது"
தேர் வேகமாய் தெருவின் இன்னொரு மூலைக்கு ஓடித் திரும்ப இயலாமல் தயங்கியது.கூட்டம் சற்று கலைந்து இடைவெளி கிடைத்ததில் நானும் அவரும் நகர்ந்தோம்.
"நல்ல கூட்டம்" என்றார் மீண்டும்.
"வெக்கை தாங்க முடியலே" என்றேன் நனைந்த சட்டையுடன்.
அந்த நிமிஷம் மேலே ஜிவ்வென்று காற்று பட்டு நகர்ந்தது. மறுபடி விட்டு விட்டு வீசியது.
"என்ன இது யாரோ வீசறாப்ல" என்றார் சண்முகம்.
இருவருமே நிமிர்ந்து பார்த்தோம்.பத்தடி முன்னால் அந்தப் பெரியவர். சவுக்குக் கட்டையில் பெரிய மயில் விசிறி கட்டி மேலே உயர்த்தி விசிறிக் கொண்டிருந்தார்.அடர்த்தியாய் மயிற்தோகைகளால் ஆன விசிறி. பெரியவர் வாகாக கடை வீதியின் மையத்தில் நின்று இரு கைகளாலும் இறுகப் பிடித்து முக மலர்ச்சியாய் விசிறிக் கொண்டிருந்தார்.
"என்ன மனசு" என்றார் சண்முகம்.
அதே போல நானும் உணர்ந்தேன். நியாயம்தான். தண்ணீர்ப்பந்தல் ஒருவித சேவை என்றால் விசிறியது இன்னொரு விதத்தில்.எப்படித் தோன்றியது.. கை விசிறி நன்கொடை தருவது வழக்கம். தானே பெரியதாய் விசிறி செய்து சலிக்காமல் வீச யார் சொல்லித் தந்தது?பெரியவர் வேட்டியை இழுத்து இடைஞ்சலின்றி சொருகிக் கொண்டு வீசியதில் ஒரு அழகு இருந்தது.பத்து வினாடியாவது அவர் வீசும் காற்று பட்டுத்தான் ஜனக்கூட்டம் அந்த இடத்தைக் கடக்க முடியும்.திறந்த மார்பு.. வியர்த்துக் கொட்டியது வீசியவருக்கு. கண்களில் கருணை வரம் வாங்கிக் கொண்டு வந்த மாதிரி மயில் விசிறியைச் சுழற்றினார்.சண்முகம் என் கையைப் பற்றினார்.
"கொஞ்சம் இரு"
சட்டைப் பையைத் துழாவி ஐந்து ரூபாய்த் தாளை எடுத்தார்.
"இதை அவருக்குக் கொடுப்பமா?"
"ம்"
அருகில் போய் பணத்தை நீட்டவும் பெரியவர் விசிறுவதை நிறுத்தியது தெரிந்தது. நோட்டை வாங்கவில்லை. என்ன சொன்னாரென்றும் புரியவில்லை.தலையைச் சரித்துக் கொண்டு சண்முகம் தளர்ந்து திரும்பினார்.
"என்ன சொன்னார்"
"பணம் வேணாமாம்"
"ஓ.."
"உதவணும்னு நினைச்சேன்" என்றார் பெருமூச்சுடன்.
நான் எதுவும் சொல்லவில்லை.விசிறியவர் யாரோ பணம் தரப் போகிறார்கள் என்பதற்காகச் செய்யவில்லை. தனி ரகம். மனசைத் திருப்திப்படுத்த செய்கிற ரகம் ஜனம் வேறு, தான் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், 'தன் கடமை' என்கிற மாதிரி, தன்னால் முடிந்ததைச் செய்கிற தோரணையில் வந்து நின்று வீசுகிறார்.
'நல்ல மனுசங்க கொஞ்சம் பிடிவாதமாத்தான் இருப்பாங்க போல'
மனசுக்குள் வந்த விமர்சனம் உடனே அம்மா, அப்பா ஞாபகத்தை மீண்டும் கொணர்ந்தது.
"உன்னோட இருக்கக்கூடாதுன்னு இல்ல.. இங்கே என்ன வசதிக் குறைவு சொல்லு"
"இல்லம்மா.. எனக்கு சங்கடமா இருக்கு. நீங்க கிராமத்திலேயும் நான் டவுன்லயும் பிரிஞ்சு.."
"இதுல என்னடா.. உன் வேலை.. நீ அங்கே இருக்கே.. இங்கேர்ந்து போவலாம்னா.. தெனம் ரெண்டு மணி நேரம் பிரயாணம் பண்ணனும்.. உனக்கு சிரமம்"
அம்மாவின் குரலில் யதார்த்தம்.
"உங்க கூட சேர்ந்து இருக்க.."
"அட அசட்டுப் புள்ளை.. லீவுல வா.. பண்டிகைக்கு வா.. உடம்புதாண்டா பிரிஞ்சு இருக்கு. எங்க மனசுல எப்பவும் நீதான். உங்குடும்பந்தான்"
வார்த்தைகள். தப்பு கண்டு பிடிக்காத அம்மா. குற்ற உணர்வில் கரைந்து போக விடாத பாசம்.போக முடியவில்லை. நினைத்தபடி செய்ய முடியாதவந்தான் மனுசன். லீவில் வீட்டோடு கிடக்க நேரிட்டது. பண்டிகைக்கு வீட்டைப் பூட்ட வேண்டாம் என்று தடுக்கப் பட்டது. மாசம் ஒரு தடவையாவது என்று தீர்மானித்து, கடைசியில் வருசம் ஒருதடவை நிறைவேற்றுவதே சிரமமானது.மனிதன் சுயநலமானவன். தன் தீர்மானங்களை நியாயாப்படுத்திக் கொள்வதில் சமர்த்தன். அம்மாவின் பாஷையில் நானும் சமர்த்து.அழுதிருக்க வேண்டும் நான். சண்முகம் திகைப்புடன் என்னை உலுக்கினார்
என்ன ஆச்சு"
"ஒண்ணுமில்லே"
"போவோமா.. அப்படியே திகைச்சாப்ல நிக்கவும் தடுமாறிட்டேன். திடீர்னு நினைவு தப்பிப் போனவன் மாதிரி"
அவர் பேச்சு பாதி கேட்டது. என் கவனம் முழுக்க மயில் விசிறிப் பெரியவரிடம். எதுவும் எதிர்பாராத மனிதர். என் அம்மா, அப்பாவைப் போல.'செய்யிறதுக்குத்தானே பொறவி..திருப்பி எதிர்பார்க்கறதுக்கு இல்லே.. செய்யறதுல வர்ற சந்தோஷம்.. நெறைவு.. அது போதும் என்று சொல்லாமல் சொல்கிற ஜீவன்கள்.அவருக்கு ஏதாச்சும் பண்ணனும் அவர் குளிர்ந்து போகிற மாதிரி.. என் மனசு நிறைகிற மாதிரி.படபடப்பு அப்பிக் கொண்டது.கோபுர வாசலைத் தாண்டும்போது இடப்புறம் பார்வை தற்செயலாகத் திரும்பியது. சட்டென்று நின்றேன்.
"கொஞ்சம் பொறுங்க"
கூட்டத்தைப் பிளந்து ஓடினேன்.
"தண்ணியா சீவுங்க"
இளநீர்க் காய்களில் தேடியெடுத்து பதமாய்ச் சீவி ஸ்ட்ரா சொருகிக் கொடுத்தான். அவனிடம் பேரம் பேசக்கூடத் தோன்றாமல் கேட்ட தொகையைக் கொடுத்தேன்.சண்முகம் அப்படியே நின்றார்.சீவிய இளநீருடன் திரும்பி ஓடினேன்.பெரியவரை நெருங்க நெருங்க மீண்டும் காற்று உடம்பில் பட்டது.
"இந்தாங்க" என்றேன் மூச்சிரைப்பாய்.
விசிறுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். என்ன செய்யப் போகிறார்..தவித்துப் போனேன் அந்த நிமிடத்தில்.
"அட.. எளநியா.. எனக்கா"
குரலில் குதூகலம்.விசிறிக் கட்டையை தோளில் சார்த்திக் கொண்டு இரு கைகளாலும் இளநீர்க் காயைப் பற்றி உறிஞ்சினார்.காலியானதும் திருப்பி வாங்கிக் கொண்டேன்.மறுபடி விசிறல். திரும்பி நடந்தவன் முதுகில் பட்டு நகர்ந்த குளிர்ச்சிக் காற்று!
ஏனோ தெரியவில்லை.. அந்த நிமிஷம் மனசும் குளிர்ந்து போனது எனக்கு.
(தேவி வார இதழில் பிரசுரமான கதை )

November 18, 2009

மழையில் நடக்கப் பிடிக்கும் எனக்கும்

மழையை எனக்கும் மிகவும் பிடிக்கும்.
சும்மா தூறிவிட்டுப் போகிற
சின்ன மழையிலிருந்து
வானம் பொத்துக் கொண்டு
ஊற்றும் பெரிய மழை வரை..
வரப் போவதை
வாசனையால் அறிவிக்கும்
சாமர்த்தியம் ..
மழை பெய்யும்போது
குடைக்குள் மறைந்து
நடக்கப் பிடிக்காது ..
சடசடவென தூறல் விழுந்ததும்
ஓடி ஒளிந்து கொள்ளாமல்
ஒரு சிங்கம் போல
வானத்திற்கு முகம் காட்டி
நடப்பது பரம சுகம்.
கால்கள் நனைய
மழை நீர் ஓட வேண்டும்.
எல்லா மழைகளுமே
வானத்தில் இருந்துதான்
என்கிற நினைப்பை
படிப்பு மாற்றியது..
பூமி நீர்
ஆவியாகிப் போனால்தான்
மழையாம் ..
நாம கொடுத்தாதான்
எதுவும் திரும்பக் கிடைக்கும்னு
வானம் சொல்லுது..
பூமி சொல்லுது ..
மழை சொல்லுது..
இப்ப உங்க மனசும் சொல்லுதா?!

November 16, 2009

என் உடல் மீது உன் தேடல்கள்


முகம் மட்டுமே என்
அடையாளம்உன்னிடம் என்று
பல நாட்களாய் நினைத்திருந்தேன்.
என் கண்களை மட்டுமே
நீ பார்க்கிறாய் பேசும்போது
என்று நம்பினேன்.
உன்னருகில் நான் இருக்கையில்
இரு கை குவிப்பில்
பாதுகாப்பு கவசம்
எப்போதும் இருப்பதாய் உணர்ந்தேன்.
புலனாகாத எதிரிகள்
உன் அருகாமையில் நான் என்பதால்
விலகி ஓடிப் போவதாய்
என்னுள் கர்வம்.
என்னை ஏசிய அண்ணன்,
தம்பிகளிடம் குரல் உயர்த்திச் சொன்னேன்.
'ஒரு உண்மையானஆண்மகனைஎன்னுலகம் கண்டு விட்டது'
அப்பாவின் கோபம் பாதித்த அம்மா கூட
என்னை அதிசயமாய்ப் பார்த்தாள்.
தனக்குக் கிட்டாத ஒன்று
எனக்கு வாய்த்து விட்டதான பொறாமையுடன்.
ஆனால் என் நண்பா..
எப்போதிலிருந்து உன் முகமூடியைக் கழற்றி வைத்தாய்..
இப்போதெல்லாம் தெரிகிறதே, உன் பார்வையில்..
என் உடல் மீது உன் தேடல்கள்!

November 14, 2009

சிநேகிதன்

எனக்கு இந்த சவாரி
மிகவும் பிடித்திருக்கிறது
பின்னால் ஒரு மனிதனை
நம்பி
ஏற்றிக் கொள்ளும் நாள் வரும் வரை
பெயரில் மிருகமாய்
நிஜத்தில் நேசமாய்
இத்தனை உரிமையுடன்
என்னோடு ஒட்டிக் கொள்ளும்
ஜீவனுடன்
எத்தனை தொலைவு
வேண்டுமென்றாலும்
பயணிக்க ஆசை ..

November 12, 2009

உள்ளேன் அம்மாஅம்மா ..

நான் வெளியே வராமல்

இருக்க இயலாதா ?

எதையும் பார்க்கும் / ஏற்கும் மனசு

எனக்கில்லை அம்மா..

உன்னுடன் கர்ப்பவாசம்

உகப்பாய் இருக்கிறது எனக்கு ..

மனிதர்கள் எத்தனையோ

கண்டு பிடிக்கிறார்களாமே..

நான் வெளியே வராமல்

உள்ளிருக்க உபாயம்

சொல்லக்கூடுமோ அவர்களால்..

இல்லாவிட்டால்

ஓர் உறுதிமொழியாவது

தரட்டும் எனக்கு..

என்னைப் போல ஜனனம்

எத்தனை சிரமம் என்று அறிந்தும்

உயிர்களை வெட்டிச் சாய்ப்பதில்

சூரர்களாய்

பவனி வருவதை

நிறுத்தி விடுவோம் என்று!

November 10, 2009

சலனம்

எனக்குள் ஒரு அமைதியை
எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன் ..
சலசலத்தோடும் ஆற்றின் கரையில்
மரங்கள் வீசும் பலத்த காற்றில்
உள் மனம் ஆடிக் கொண்டிருக்கிறது ..
ஒரு குழந்தையின் புன்னகை கூட
என்னை ஈர்ப்பதில்லை அப்போது ..
எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்
எனக்கான நிச்சலனத்தை ..
கற்றுக் கொண்ட ஆசனங்கள் வழியே
உடல் மடங்கிக் கிடந்தாலும்
பார்வை ஜன்னல்கள் கதவடைத்துக்
கொண்ட போதும்
மனசின் சாளரம் திறந்து கிடக்கிறது ..
ஒரு பூகம்பம் வருமென
எதிர்பார்த்து
அனலடிக்கும் புத்திக்குத் தெரியாது ..
கைக்கெட்டும் தூரத்தில் தான்
இருந்து கொண்டே இருக்கிறது
எனக்கான அமைதி என்று !

November 08, 2009

பயணங்கள்

ஏதேனும் ஒரு அவசியம்
எப்போதும் நேர்ந்து விடுகிறது..
அல்லது..
வயிற்றுப்

பிழைப்பிற்க்காகவாவது..
மனசுக்குள் இடம்
கிட்டாதபோது தான்
வெளியேறுதல்கள்
நடக்கின்றன ..
வண்டிக்குள்ளும் இடம் மறுக்கப்பட்டால்
என்ன..
ஒண்டிக்கொள்ள
இந்த இடம் போதாதா ?
உயிர் பணயம் வைத்து
ஒரு உயிர் பயணம் !
யார் காலடியிலாவது
எப்போதும் இருக்க
தலையெழுத்தா என்ன ?
இவள் சாதிப்பாள் என்று
சரித்திரம் பின்பு சொல்லுமோ என்னவோ ..
இவள் தரித்திரம் ஒழிந்து
வாழ்க்கையில் நல்ல இடம் கிடைத்து
அமர்ந்தால் போதும்!
இதைப் பார்த்து அதிர்ந்த இதயம்
இன்பமாகி வாழ்த்தும் அப்போது !
போய் வா பெண்ணே பத்திரமாய் !

November 03, 2009

ஒரு 'தலை' ராகம்


"இந்த வீட்டுல எதை வச்சாலும் மறுபடி அதைத் தேடணும். வச்ச இடத்துல இருக்காது" என்று அலறினேன்.

சுந்தரி கொஞ்சங்கூட அசையவில்லை.

"மனுஷன் கத்தறது காதுல விழுதா?"

"என்ன வேணும் இப்ப" என்றாள் நிதானமாக.

"என்னோட ஃபோட்டோ"

"எதுக்குப்பா" என்றாள் அமுதா. என் புத்திரி சிகாமணி.

"என்னோட சிறுகதையோட என்னோட புகைப்படமும் வெளியாகப் போவுதாம்" என்றேன் அவ்வளவு டென்ஷனிலும் பிரகாசமாய்.

"அது ரொம்ப பழைய புகைப்படமாச்சே"

"உங்கப்பா எப்பவும் அதே ஃபோட்டோவைத்தான் அனுப்புவாரு. இளமை மாறாத அதே தோற்றம்" என்றாள் சுந்தரி கிண்டலாய்.

எனக்கு சுரீரென்றது. சனியன் பிடித்த எதிர்க் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. முன்புறம் ரோடு போட்ட தலை. ரோம சாம்ராஜ்யம் பாதி தகர்ந்து செட்டப்பாய் பின்னால் இருக்கிற முடியை முன்னுக்கு கொண்டு வந்து சீவியதில் சுமாராய் இருக்கிற மாதிரி ஒரு நினைப்பு. இவள் கேலி செய்ததில் ரோஷம் பொங்கியது.

"உன்னைக் கட்டிக்கிடறதுக்கு முன்னால மாசத்துக்கு ரெண்டு போகம்.. சலூன்ல அறுவடை.. உன்னைக் கட்டிகிட்ட நாள்லேர்ந்துதான் இப்படி பாலைவனம். நீ புடுங்கிற புடுங்கல் தாங்காம" என்றேன் அரை முனகலாக.

"ஆமாமா. அப்படியே தங்கமும் வைரமுமா செஞ்சு களைச்சிட்டீங்க. தீபாவளிக்கே காட்டன் புடவை எடுத்த மகராசனாச்சே"

"பாவம்மா அப்பா" என்றாள் அமுதா.

"இப்ப என்னோட ஃபோட்டோ எங்கே. அதுக்கு வழியைச் சொல்லுங்க"

"பேசாம கடைக்குப் போய் புதுசா ஒரு ஃபோட்டோ எடுத்துருங்க"

திடுக்கிட்டேன். இந்த தோற்றத்திலா. என் இமேஜ் என்னாவது?

"அப்பா.. கவலைப்படாம போங்க. ஃபோட்டோவை டச்சப் பண்ணி இளமையாக் காட்டிருவாங்க"

ஓ. அப்படி ஒரு வழி இருக்கா.

தைரியமாகக் கிளம்பிப் போனேன்.

சந்துருவை அப்போதுதான் வழியில் சந்தித்தேன்.

"என்னடா நீயா.. இப்படி ஆளே மாறிப் போயிட்டே. " என்றான் அனாவசியத் திடுக்கிடலுடன்.

அவன் தலை மட்டும் எப்படி அன்று கண்ட கருப்பு மாறாமல்.. மனசுக்குள் பொறாமை பொங்கிற்று.

"ஹி.. ஹி.. ஏதோ அலர்ஜி. முடி கொட்டிருச்சு"

"கவலைப்படாதே. உன் பிரச்னை தீர்ந்துருச்சுன்னே வச்சுக்க"

"எ..ன்னடா சொல்றே"

"இந்த மாதிரி இள வயசுல முடி கொட்டற பிரச்னையை தீர்க்கத்தான் இப்ப புதுசா ஒரு ஹேர் டானிக் கண்டு பிடிச்சிருக்கோம். இந்த ஏரியாவுக்கே நான்தான் சேல்ஸ் ரெப்"

"நெஜம்மாவா. மறுபடி முடி வளருமா"

"என் தலையைப் பாரு. அவ்வளவும் எங்க பிராடக்டோட மகிமை. முழுசா கொட்டி மறுபடி வளர்ந்திருச்சு"

என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"டேய். அந்த இலை இந்த இலைன்னு அரைச்சு.. எண்ணையில காய்ச்சி.. தலைக்குத் தடவிப் பாருன்னு ஒரு பத்திரிகையில படிச்சுட்டு.. அதே மாதிரி செஞ்சேன். கருமம், அந்த நாத்தமே சகிக்கலை. இன்னொரு பக்க முடியும் கொட்டிருச்சு. இப்ப நீ வேற" என்று இழுத்தேன்.

பளாரென்று வெறுந்தலையில் ஒரு அறை வைத்தான். சத்தியம் செய்கிறானாம். மூளைக்குள் ஏதோ பளிச் பளிச்சென்று மின்னியது, வாங்கிய அடி தாங்காமல்.

"இந்த பாட்டிலை எடுத்துகிட்டு போடா. ஒரு மாசம் யூஸ் பண்ணு. நீ பணமே தர வேண்டாம். என் கமிஷன்ல கழிச்சுக்கிறேன். 150 ரூபா. நண்பனுக்காக தியாகம் பண்றேன்" என்றான் ஆவேசமாய்.

பழுப்பா.. இன்ன கலரென்று சொல்ல முடியாத அசட்டுக் கலரில் ஒரு திரவம் பாட்டிலுக்குள் ஆடியது.

பயபக்தியாய் கையில் வாங்கினேன்.

"டேய். அப்புறம் என் மேல வருத்தப்படாதே. இந்த டானிக் முழுப்பலனும் தரணும்னா ஒரே வழி.. மொட்டை அடிச்சுக்கணும். அப்புறம் தினசரி தலையில அழுத்தி தேய்ச்சுகிட்டு வரணும். அப்புறம் பாரு என்னைத் தேடிகிட்டு வருவே.. இன்னொரு பாட்டிலுக்கு"

முழங்கால் வரை வளர்ந்த கூந்தலுடன் ஒரு பெண்ணின் படம். பொடிப் பொடி எழுத்துக்களில் அதன் பெருமை எழுதப்பட்டிருந்தது.

"நம்பிக்கையா போ. நீயே புரிஞ்சுப்பே"

நான் மெய் மறந்து நின்றதைப் பயன்படுத்திக் கொண்டு என் பர்சை வெளியில் எடுத்தான். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை உருவிக் கொண்டான்.

"உன்கிட்டேர்ந்து கடனா இருநூறு ரூபாய் எடுத்துக்கிறேன். தப்பா புரிஞ்சுக்காதே. அந்த பாட்டிலுக்கு எனக்கு பைசா வேணாம்"

போய் விட்டான்.ச்சே.. எவ்வளவு உத்தமமான நண்பன்!

இப்போதே போய் மொட்டை அடித்துக் கொண்டு இன்றே ஆவி பறக்க தலையில் தைலத்தைத் தடவிக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரே மாதத்தில் அடர்த்தியான முடியுடன்.. ஹா.. எல்லோரும் ஆச்சர்யப்பட வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும்போதே சுந்தரியின் குரல் விரட்டியது.

"யாருப்பா.. அது. தொறந்த வீட்டுல சட்டுனு நுழைஞ்சுகிட்டு"

"ஹி..ஹி.. நாதான்." என்றேன் மொட்டைத் தலையும் பேய் முழியுமாய்.

"என்ன ஆச்சுங்க உங்களுக்கு"

"அப்பா.. நீங்களா" என்றாள் அமுதா பயங்கர அதிர்ச்சியுடன்.

"எல்லாம் ஒரு காரணத்தோடதான். விலகுங்க" என்றேன் கிணற்றடி நோக்கி நடந்தவனாய்.

பிறகு விளக்கமாய் நடந்ததைச் சொன்னேன்.

"பிளீஸ்மா. உன்னோட ராசியான கையால இந்த தைலத்தை தேய்ச்சு விடேன்"

அரைமனதாய் ஒப்புக் கொண்டாள். தேய்த்து விட்டதில் பொறி கலங்கி போன ஜன்ம நினைவுகளே வந்து விட்டது. அந்த ஜென்மத்திலும் சுந்தரிதான் என் மனைவி என்று ஏதோ அசட்டு பிசட்டென்று தோன்றியது.

"நாளைக்கெல்லாம் என்னால முடியாது. கை அசந்து போவுது."

எப்படியோ தினசரி ஒருவர் மூலமாக தலையைக் கவனித்துக் கொண்டேன்.

விளைவுதான் எதிர்பாராதது.

அடப்பாவி. சந்துரு என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே. வெளியிலே தலை காட்ட முடியாமல் 'சிக்' லீவு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியதாயிற்று.

நண்பர்கள் வந்தால் கூட தலையைச் சுற்றி பெரிய போர்வையை போர்த்திக் கொண்டு கட்டிலிலேயே கிடந்தேன்.

ஒரு வழியாய் சந்துரு வீட்டைத் தேடிக் கொண்டு வந்து விட்டான்.

"ஏண்டா ராஸ்கல். என்னை இப்படி பண்ணிட்டியே"

"ஏன் என்ன ஆச்சு. முடி வளரலையா" என்றான் குழப்பத்துடன்.

விருட்டென்று எழுந்ததில் போர்வை விலகிக் கீழே விழ.. சந்துரு திகைப்புடன் அதிர்ந்து நின்றான். அமுதா கிரீச்சிட்டாள். சுந்தரி அவசரமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

ஆறடிக் கூந்தலுடன் விசித்திரப் பிறவி போல நின்றேன்.

"ஏ..ஏதோ தப்பு நடந்து போச்சு.தைலத்துல கலவை மிஸ்டேக்.. எ..எப்படி ஆச்சு.."

ஒரேயடியாய் திக்கினான்.கால் மடங்கி ஓவென அலறினேன்.

"டேய்.. என்னைக் காப்பாத்துரா. என்ன வெட்டினாலும் உடனே வளர்ந்துருதுடா. எனக்கு மொட்டைத் தலையே போதும். முடி வேணாம்.. என்னைக் காப்பாத்துரா"

November 01, 2009

கவிதைகள்
நான் இப்போது

புன்னகைகளை சேகரிக்கிறேன்

எத்தனை விதமாய் புன்னகைகள் !

சில கனிவாய் ..

சில எள்ளலாய் ..

சில ஆராய்ச்சியுடன் ..

சில பிரத்தியேகமாய் எனக்கே எனக்காக ..

இதுவரை கணக்கிலடங்கா

புன்னகைகள் பார்த்தும்

அமையவில்லை

எனக்கே எனக்கான

ஒரு ஸ்பெஷல் புன்னகை

என் உதட்டின் மீது !

*****************************************

பல வருடங்களாய்

பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆனாலும் முடியவில்லை

எத்தனையோ பேர்

முட்டி மோதி முயற்சித்தும்

அசல் போல வரவில்லை

ஒப்பிடுதலில் பிழை

கண்டு பிடிக்கப்பட்டு விடுகிறது.

சலிக்காமல் இன்னும் முயற்சிகள்

என்றாவது ஒரு நாள்

கிடைத்து விடக் கூடும்

அசலாய் ஒரு நகல்
நிஜமாய் ஒரு பிரியம் !