October 28, 2015

அம்மு 2

சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் எந்த நிமிஷத்திலும் அம்முவை எதிர்பார்க்கலாம்.  ஏதாவது ஒரு திசையில் இருந்து வந்து நிற்பாள்.
‘அம்மா பூ வாங்கிண்டு வரச் சொன்னா’
‘என்னிக்கு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம்னு அம்மா கேட்டுண்டு வரச் சொன்னா’
‘இன்னிக்கு மாமுனிகள் திருநட்சத்திரம்.. அம்மா இந்த பிரசாதம் கொண்டு போய் கொடுன்னா’
ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு ரெட்டை ஜடை இரு திசைகளில் அலைய அவள் வரும் போது என் கணக்கு நோட்டில் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.
‘இந்தக் கணக்கு புரியலைடா’
‘போடி என்னை டிஸ்டர்ப் பண்ணாத’
‘மாமி.. கொஞ்சம் சொல்லுங்களேன்.. பிகு பண்ணிக்கிறான்’
‘சொல்லிக் குடேண்டா’
ஏம்மா நீ லூசா..
‘என்ன புரியல..’
‘இதுதான்’
எனக்குப் புரிந்தது. அம்முவின் கவனம் கணக்கில் இல்லை. விருவிருவென்று ஸ்டெப்ஸ் எழுதி விடை வரவழைத்து நோட்டை மூடி வீசினேன்.
‘போய் பொறுமையா பாரு.. புரியும்’
கன்னத்தில் கிள்ளி விட்டு போவாள்.
ஒரே பெண். செல்லம். அப்பா கிராமக் கணக்குப் பிள்ளை. வெற்றிலை போட்டால் அவர் பேசுவது புரியாது. போடாவிட்டாலும். வாசலின் ஒரு பக்கம் நிரந்தர ஆரத்திக் கறை.
தெருவில் யாரும் போய் விட முடியாது.
‘இங்கே வா’ என்பார் அதட்டலாய். காதில் விழாதபடி போய் விட்டால் அந்த நிமிடம் தப்பிக்கலாம். தவறி கிட்டே போனால்..
‘டவுனுக்குப் போறியா’
‘ஆமா’
‘ஏய்.. அந்த ரோக்காவை எடுத்துண்டு வா’
உள்ளிருந்து ஒரு பட்டியல் வரும்
‘இதை வாங்கிண்டு வந்துரு’
’பணம்’
‘அடுத்த வாரம் வரச்ச தரேன்னு சொல்லுடா’
கடையில் திட்டு விழும்.
‘வேற வேலை இல்ல.. ஏற்கெனவே பாக்கி நிக்கிது’
‘சரி.. போய் சொல்லிடறேன்’
‘யோவ் இருய்யா.. இதுல பாதி சாமானைக் கட்டு.. மீதி சரக்கு இல்லேன்னு சொல்லிரு’
கடைக்காரருக்கும் என்ன பயமோ.
இதே சவடால் பெண்ணிடமும். என்னிடம் பயப்படு என்று சொல்லாமல் சொல்கிற அலட்டல். நானா இதற்கெல்லாம் மசிகிறவன்.. போடி சர்த்தான்.

பட்டணத்தில் மேற்படிப்பு என்று கிராமத்தை விட்டு தப்பித்தாகி விட்டது. மூன்று வருடங்கள். நடு நடுவே மண்டகப்படி.. பிரம்மோற்சவம்.. தேர் என்று ஊருக்குப் போன நாட்களில் அம்முவின் கண்ணில் படாமல்.. பட்டாலும் கைக்கு அகப்படாமல் தப்பித்தாகி விட்டது.
கிறுக்கி எழுதியிருந்த ஒரு இன்லண்ட் (யாரிடம் அட்ரஸ் வாங்கினாளோ) மஹா கசங்கலில் என் ஹாஸ்டல் ரூமுக்கு வந்து சேர்ந்தது.
ஒரே வரி.. பெயர் கூட இல்லை.
‘என்னைப் பிடிக்கலியா’
ஆங்கில ஆசிரியர் அ தமிழாசிரியர் காதல் பற்றி ஆச்சாரமாய் வகுப்பு எடுத்த நாட்கள் அவை. ரொம்ப் டீப்பாக போக மாட்டார்கள். இலக்கிய அளவோடு நிறுத்திக் கொள்வார்கள். அந்த நாள் திரைப்படம் போல. பூங்காவில் ரெண்டு பூக்கள் உரசிக் கொள்ளும் முத்தக் காட்சிகளில். அது போல.. அண்ணலும் நோக்கினாள்.. அவளும் நோக்கினாள் என்றால்.. அவ்வளவுதான். வேறு வியாக்கியானங்கள் கிடையாது. அநியாயத்துக்கு நாசுக்கு பார்க்கிற அந்த ஆசிரியர்களுக்கு நாலைந்து குழந்தைகள் !

என்னைப் பிடிக்கலியா..
ஒரு வரி.. இரு வார்த்தைகள்.. அம்மு எதிரில் நின்று ரெட்டை ஜடை காற்றில் ஆட ஒரு விரலால் சுட்டி கேட்கிற பிரமை.
என்ன பதில் சொல்ல.. எனக்கென்று வேறு சில இலக்குகள்.. இந்த நிமிடம் லவ் பண்ண பொறுமை இல்லை. கிழித்துப் போட நினைத்து.. அப்புறம் மனசு மாறி மடித்து என் தகரப் பெட்டியின் அடியில் சொருகினேன்.

முதல் வகுப்பில் தேர்ச்சி. உதவித் தொகை கிடைத்ததால் அப்பாவுக்கு சிரமம் இல்லை. அம்மா மட்டும் துரும்பா இளைச்சிட்ட என்று 9 கஜம் புடவையை கண்ணீரால் நனைத்தாள்.
கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்து நகரின் பிரதான கம்பெனியில் எனக்கு வேலை தரத் தயாராய் இருப்பதைச் சொன்னார். அதை அம்மாவிடம் சொன்னபோது ‘போடா.. போய் நமஸ்காரம் பண்ணு’ என்றாள் பெருமாள் உள்ளைத் திறந்து காட்டி. பட்டண வாசத்தில் கட் அடித்து சினிமா பார்த்த எபக்டில் படக்கென்று அம்மா காலில் விழுந்தேன்.

அம்மா இல்லாத நேரம் எப்படித்தான் தெரிந்து வந்தாளோ.. அம்மு.
‘வேலைக்கு போகப் போறியாமே’
‘ஆமா’
‘கிடைச்சிதா’
‘என்ன லட்டர்.. இ..ல்ல.. என்ன கேட்கிற’
ஒரு தாவணிப் பெண்ணின் கண்களில் எத்தனை சக்தி. அந்தராத்மாவை ஊடுருவிக் கிழித்து பொய்களை வீச வைத்து மண்டியிட வைத்து விடுகிறது.
‘அவ்வளவுதானே’ அம்மு இதைக் கேட்கவில்லை. பார்த்தாள். எதுவுமே பேசாமல்.. போய்விட்டாள்.
’என்னடா உம்முனு கிளம்பற.. வேலைக்குப் போகணும்னு நீதானே துடியாத் துடிச்சிண்டிருந்த’
எல்லோருக்குமே ஆச்சர்யம்.
‘உன்னை விட்டுட்டு போறானோல்லியோ.. அதான்’
அம்மாவை எல்லோரும் கொஞ்சினார்கள்.
ரெயிலில் புகை கண்ணில் விழுந்தது பயணம் முழுக்க. ஜன்னல் பக்கம் உட்காராமலே.
முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு அனுப்பினேன்.
‘நம்மூர் பெருமாளுக்கு எடுத்து தனியா வச்சியோ’
கார்டில் அம்மா கேட்டிருந்தாள். அம்பது ரூபாய் அம்முவுக்கு எடுத்து வைத்திருந்தேன்.
அம்முவின் கல்யாணப் பத்திரிகை வந்தது அப்போதுதான்.
போகவில்லை. லீவு கிடைக்கவில்லை என்று பொய்.
ஒரு வருடம் ஊருக்கே போகவில்லை. அம்மாவுக்கே உடம்பு சரியில்லை.. பின்னால் சரியானது எல்லாத் தகவலும் கடிதங்களில்.
அப்புறம் போனபோது..
”ஸாரிம்மா.. நீ உடம்பு சரியில்லாதப்போ நான் வரல’
‘பரவாயில்லடா’
‘மத்தபடி எல்லாரும் சௌக்கியம்தானே’
‘ம்ம்.. நீ சாப்பிடு.. வா’
கலத்துப் பருப்பில் நெய்.. சாதம் கலந்து பொரித்த வடாம்.. அம்மாவின் கை வாசனை.
இத்தனை இடை வெளிக்குப்பின் வயிறும் மனமும் நிறைந்த அந்த தருணத்தில் அம்மா சொன்னாள்.
‘அம்முவைத் தள்ளி வச்சுட்டா அவ புக்காத்துல’
சாதம் சிதறியது வாயிலிருந்து.
‘ஏம்மா’
‘ப்ச்.. என்னவோ சொல்றா.. எது நிஜம் எது பொய் தெரியல..’
‘என்னம்மா இது அநியாயம்’
‘கொழந்தை பொறக்காதாம்.. ஏதோ டெஸ்ட் அது இதுன்னு பண்ணி.. ‘

தகரப் பெட்டியின் அடியில் ஒளித்து வைத்திருந்த இன்லண்ட் அதன் அளவைப் பெரிதாக்கிக் கொண்டு.. அந்த ஒற்றை வரியை.. இரு வார்த்தைகளைப் பிரம்மாண்டமாய்க் காட்டிக் கொண்டு கூடம் முழுக்க வியாபித்து நின்ற பிரமை அப்போது.

October 26, 2015

அம்மு

பசிக்கிறது. வாசல் திண்ணையில் எத்தனை நாழி உட்கார்ந்து தெருவில் வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பது. ‘கொஞ்சம் ஒக்காருங்கோ.. சமையல் ஆனதும் கூப்பிடறேன்’
ஒரு கையில் குச்சி ஐஸை சப்பிக் கொண்டு இன்னொரு கையில் சைக்கிளோட்டிப் போகும் சிறுவன் ஏன் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்.. அம்மா பொரித்துக் கொடுத்த வத்தல் தட்டுடன் எதிர் வீட்டுத் திண்ணையில் குட்டிப் பாப்பா சமர்த்தாய் உட்கார்ந்து கடிக்கிறது.
“காப்பி குடேன்”
அடுத்த வீட்டு ரிடய்ர்ட் கூப்பிடுகிறது.
“இப்பதானே அரை மணி முன்னால குடிச்சீங்க”
“நன்னா இருந்ததுடி..”
இந்த வார்த்தை மந்திரம் செய்திருக்க வேண்டும்
“அரை டம்ளர்தான்.. சும்மா சும்மா குடிக்கக் கூடாது”
55 வயதுக்கு முகம் சிவப்பதும் அதை இருபதடி தள்ளியும் தரிசிப்பதும் பசி வேளையிலும் பாக்கியம்.
மெல்ல ரவிகிரண் சரிகிறது.. தெருவில் இருட்டுப் பிசாசு படர ஆரம்பிக்கிறது. இவன் கிரணங்களைச் சுருட்டிக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். அவளுக்கோ தலைமுடி நீளம் அடர்த்தி அநியாயத்துக்குக் கருமை.. சிரிப்பின் வெளிச்சம் தெரியாமல் வாய்க்குள் வைத்துக் கொண்டு அவனை அவள் விரட்டுவதும் அவன் அத்தனை பிரகாசத்தையும் தொலைத்து விட்டு ஓடுவதும் என்ன ஒரு ரசனையான காட்சி.
பசி மந்தித்திருக்க வேண்டும். அல்லது காட்சிகளில் வயிறு நிறைந்திருக்க வேண்டும். போச்சுரா. அதை நினைத்ததும் அடி வயிற்றில் ஒன்று கிளம்பி சப்தித்தது,
கௌளி சத்தம் போல. இந்த கௌளிக்கு எதிர் சத்தம் போல இன்னொரு டொக் டொக்.
மெதுவாய் சேர்ந்த சத்தங்கள் இரைச்சல்களாகி காதை அடைத்தன. இன்னுமா சமையல் ஆகிறது.. எந்த வாசனையும் வரவில்லையே.
உள்ளே எட்டிப் பார்த்தால் விளக்கு ஏற்றவில்லை இன்னும். தெருவில் ஓடிய இருட்டுப் பிசாசு தன் கைகளில் ஒன்றை வீட்டுக்குள்ளும் விட்டிருக்கிறாள்.
‘அம்மு..’
பதிலில்லை.
‘அம்மூ..’
ஊஹூம்.
எழுந்தால் இடுப்பு வேட்டி அவிழ்கிறது. கை பதறி பற்றி முடிச்சிட்டு கொள்கிறது கால்கள் துணைக் கால் தேடின.
திண்ணை.. வராண்டா.. படிகள்.. காலைத் தூக்கி வைத்து வீட்டுக்குள் ரேழி.. தொட்டி முத்தம்.. துளசி மாடம்.. திருமாப்படி..
‘அம்மு..’
பெருமாள் விளக்கு எரிகிறது. சற்று மங்கலாக. ஆடுகிற வெளிச்சத்தில் நடுநாயகமாய் கோவில் ஆழ்வார்.. தவழும் கிருஷ்ணன் கையில் உருட்டிய வெண்ணையுடன்.  காலையில் சாற்றிய மாலை வாடி காற்றில் ஆடுகிறது.
சாதக் குண்டான் திறந்திருக்கிறது. பக்கத்தில் டம்ளரில் நீர். தீபக்காலில் ஒரு வில்லை கற்பூரம்.
அம்மு கண் மூடி நிற்கிறாள். கண்ணருகில் ஒரு துளி தீப ஒளியில் பளபளக்கிறது. கை கூப்பி நிற்பவளிடம் அசைவில்லை. அவளை அழைத்ததை.. ஏன்.. இப்போது அருகில் வந்து நின்றதை.. எதையுமே அவள் உணரவில்லை என்று புரிந்தது.
மெல்ல சப்தமெழுப்பாமல் விலகி வாசல் திண்ணைக்கு வந்து விட்டேன்.
தெரு விளக்குகள் ஒன்றையொன்று சீண்டி பற்றவைத்துக் கொண்டு நின்றிருந்தன,

October 08, 2015

இரு கவிதைகள்1. கதவுகள் அடைக்கப்பட்டு
வெறிச்சோடிக் கிடக்கும் தெரு
என்னென்னவோ எண்ணங்களைத்
தூண்டி விடுகிறது
வாகனத்தில் விரையாது
நடந்து கடக்கும் பொழுதொன்றில்
யாரேனும் சிறு பிள்ளை
என் மேல் பந்தடிக்கலாம்
ஏன் இவ்வளவு தாமதமாய் என்று
எண்பத்தைந்து என்னை முறைக்கலாம்
கவனியாதது போல அவள்
கண்ணடிக்கலாம்
மதியமோ மாலையோ
கடந்து போன ஊர்வலப் பூக்கள்
மண்ணோடு மக்கிச்
சிதைந்து கிடக்கும் அந்தத் தெருவைக்
கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல
யாரை இனி நாளை முதல்
நான் பார்க்கப் போவதில்லை
இந்தத் தெருவில் ?
==========================================
2. மெலிதான பாடல்
காற்றில் ஒலிக்கிறது
இசையின் விரல்கள்
மனதை வருடுகின்றன
வரிகள் புரிபடாத இரைச்சலினூடே
பாடகியின் குரல் மட்டும்
மிக நெருக்கமாய்
சட்டென்று எல்லாத் துயரமும்
கொஞ்ச நேரத்திற்குத்
தள்ளி நிற்பதாய்
உறுதியளித்து விலகுகின்றன.
இந்தப் பாடலைப் போல்
அடுத்த பாடல் இராதென்று
உள்மனதின் பதைபதைப்பு
அந்த நிமிட ஆஸ்வாசத்தை
அவசரமாய்க் கையிலேந்திக் கொண்டு
பாடல் ஒலிக்கும் பிரதேசம் விட்டு
அடி பெயர்க்கிறேன்..
பாடலும் பாடகியும் கையசைக்க
நிதானமான புன்முறுவலுடன்
என்னை நெருங்குகின்றன
சற்றுமுன் விலகி நின்ற
என் செல்லக் கவலைகள்.