August 27, 2013

வித்தியாசம்”ஹலோ.. அக்கவுண்ட்ஸ்ங்களா”
“ஆமா..”
“மெடிகல் கிளைய்ம்ல ஒரு டவுட்டு”
“அது வேற செக்‌ஷன்.. நம்பர் சொல்லவா”
“அது எனக்குத் தெரியும்.. நான் டவுட் கேக்கறது உங்ககிட்டதான்”
“கேளுங்க”
“ஒரே ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி.. சிசேரியன் .. ஆச்சு.. ரெண்டு பேருக்கு.. ஆனா பில் செட்டில் பண்ணதுல பணம் கூடக் குறைய இருக்குதுங்களே”
”அப்படியா.. “
”ஒரே நாள்.. ஒரே மாதிரி சிசேரியன்.. அரை மணி இடைவெளில.. 1500 ரூபா குறைச்சு கொடுத்திருக்காங்க ஒருத்தருக்கு..”

(இதையே பத்து நிமிஷம் விடாமல் கேட்டார்)

“ரெண்டும் என்ன குழந்தைங்க”
“ரெண்டுமே ஆண் குழந்தைங்கதான்”
“ஓ.. அப்போ அதுலயும் வித்தியாசம் இல்ல.. ம்ம்”

எதிர்முனையில் வெற்றிக் களிப்பு.
“அதாங்க சொல்றென்.. எப்படி குறைக்கலாம்”
“ஆங்.. குழந்தை என்ன வெயிட்”
“ம்ம்.. என் குழந்தை 2.9 இன்னொன்னு 3.2”
“அதானே பார்த்தேன்.. வித்தியாசம் இருக்குல்ல.. அதான் குறைச்சு பாஸ் பண்ணி இருக்காங்க “
“ஓ.. அப்படியா.. அக்கவுண்ட்ஸ்ல தப்பு பண்ண மாட்டாங்கன்னு அப்பவே சொன்னேன் அவகிட்ட.. இப்ப புரிஞ்சிருச்சு.. நன்றி ஸார் “

(ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா.. கண்ணைக் கட்டுதே.. )

எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து இருக்கைக்காரர்களுக்கு சிரிப்பு.

உண்மையில் என்னவென்றால்.. ஒரு டெலிவரிக்கு கூடுதலாய் ஊசி.. மருந்து தேவைப்பட்டிருந்தது.. அதான் அந்த தொகை வித்தியாசம். விசாரித்த நபர் என்னிடமும் பதினோராவது ஆளாய்க் கேட்டார். வேறு வழியின்றி இப்படிப் பேசி அக்கவுண்ட்ஸ் மானத்தைக் காப்பாத்தினேன்.
August 25, 2013

ஜ்வல்யா

ஊசி போட
எதிரே டாக்டர்..
‘அழமாட்டா தானப்பா
ஜ்வல்யா’
அவளாகவே சொல்லிக் கொள்கிறாள்..
‘ஊசி வேண்டாமே’
அழுகிறேன் நான் !நட்சத்திரங்களை
எண்ணும்போது
என் விரலகளையும்
சேர்த்துக் கொள்கிறாள்
ஜ்வல்யா..
‘கையை நீட்டுப்பா’ என்று !என்னைத் தூங்க
வைத்ததும்
அம்மாவிடம்
போய் விடுகிறாள்
ஜ்வல்யா..
ஒவ்வொரு இரவும் !’இரு..
அப்பாகிட்ட
பேசிட்டு வரேன்’
என்கிறாள்
சினேகிதியிடம்
ஜ்வல்யா..
இரு பெரிய மனுஷிகளின்
தனிமையில்
குறுக்கிட்ட எனக்குத்தான்
நெருடல் !தவறவிட்ட
கூட்டத்தில்..
கைப்பற்றிய
குழந்தை
’நான் ஜ்வல்யா இல்லை’
என்கிறது..
சிரிப்புடன்!
ஜ்வல்யாவைத்
தேடிக் கொண்டே
இருக்கிறது
மனசு..
எதிர்ப்படும் எந்தக் 
குழந்தையைக் கண்டாலும் !
August 16, 2013

கண்ணே கணினி மானே.. (தொடர் பதிவு)
மஞ்சுபாஷிணி மேடம் என்னையும் இதில் சேர்த்து விட்டதுக்கு நன்றி முதல்ல.

என்னதான் கொசுவர்த்தி சுருள் சுத்தினாலும் முதல் முதல்ல கணினியை எப்போ தொட்டேன்னு.. ரொம்பவே யோசிச்சேன்.

ஆ.. ஞாபகம் வந்திருச்சு. அக்கவுண்ட்ஸ்ல இருக்கறதால கஸ்டமர்ட்ட இருந்து வர கலெக்ஷன் பணத்தை அக்கவுண்ட் பண்ண அப்போ ரெண்டே ரெண்டு சிஸ்டம் வச்சிருந்தாங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு டைம் ஸ்லாட்..

ஏற்கெனவே டிசைன் பண்ணி வச்ச ப்ரொக்ராம்.. அதுல லாக் இன் பண்ணி அந்தந்த பீல்ட்ல செக் நெம்பர் தேதி கஸ்டமர் பெயர் வந்த தொகை இப்படி பில் அப் பண்ணனும். அதுக்கு செக் லிஸ்ட் வரும் தப்பா அடிச்சிருந்தா கரெக்ட் பண்ணனும் இப்படி ஆரம்பிச்சது. ஆனா இது டெர்மினல் டைப்.. டேட்டா ரொப்ப மட்டும்தான்.. இதில் வேற எதுவும் நம் விருப்பத்தில் இல்லை.

அப்புறம் தான் ஒரிஜினல் கணினியின் அறிமுகம்.. ஒவ்வொருத்தருக்கும் பாஸ்வேர்ட்.. கொண்டு வந்து வச்ச புண்ணியவான் ஏகத்துக்கு பயமுறுத்திட்டு போக. அதைத் தொடவே ரொம்பவே யோசிச்சி.. ஒருத்தர் கொடுத்த தைரியத்துல எக்செல்.. வேர்ட்.. இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லை விஸ்தீரணம் ஆச்சு.. இப்போ எல்லோருக்குமே ஆளுக்கொரு கணினி.. அதைத் தவிர வீட்டுலயும்...

 என்னைப் பாதிச்ச சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி, அபூர் சன்ஸார், அபரஜிதோவை டவுன் லோட் பண்ணி பார்த்தப்பதான் கணினி மேல எனக்குப் பயங்கர காதலே வந்திச்சு..

ஒரு நணபர் இன்னமும் விடாம டிபேஸ்.. பாக்ஸ்ப்ரோ.. அடிச்சுகிட்டு இருக்காரு.. அவரை நல்லாவே கலாய்ப்போம்.. 30 வரில ப்ரோகிராம் எழுதி 28 வரிக்கு * போட்டிருக்கீங்க.. அப்பவும் அது வொர்க் பண்ணுதுன்னு.

எல்லாமே சுயம்பு தான்.. அடிபட்டு அடிபட்டு தப்பு பண்ணி சரி பண்ணி கத்துகிட்டது.. பர்ஸ்ட் கணினியைத் தொடும்போது அது ஏதோ ஷாக் அடிக்கப் போறாப்ல பயத்துல தொட்டது போக.. அப்புறம் ஒரு சவடால்த்தனம் வந்தாச்சு.

முன்பு கையால் எழுதி கதைகள் அனுப்பினது போக அப்புறம் கணினியில் டைப் பண்ணி கன்வர்ட் பண்ணி அனுப்பற அளவு வந்ததும் எனக்கே ஒரு ஆச்சர்யம்தான்.

பிலாக் ஆரம்பிக்க திரு. ரேகா ராகவன் உதவினார். அவர் மட்டும் என்னைத் தூண்டலேன்னா இவ்வளவு பதிவுகள் போட்டிருக்க மாட்டேன். அதைப் படிச்சு எனக்குப் பாராட்டும் திட்டும் சொன்ன நட்பு வட்டம் அமையலன்னா இந்த அளவு வளர்ந்திருக்க மாட்டேன்..

கணினித் துறையில் எவ்வித படிப்பும் இல்லாமல் இப்படி பிலாக், முக நூல் என்று இப்போ (சுமாராவாவது) கலக்கிகிட்டு இருக்கேன்னா.. அதுக்கு எனக்குள்ளே ஒளிஞ்சுகிட்டிருந்த ஒரு வித தன்னார்வம்தான் காரணம்..

இப்பவும் கணினி பத்தி எனக்கு முழுமையாத் தெரியாது.. ஆனா வல்லுனர்கள் இப்படி பண்ணலாம்னு சொல்றப்ப லேசாப் புரியற மாதிரி இருக்குன்னா அது என் முன்னோர்களின் அறிவுஜீவித்தன ஜீன்ஸ் தான் ..

நிறைய சொல்லிட்டே போலாம்.. ஆரம்பகால அசட்டுத்தனங்கள்.. பூட் ஆகல.. சிஸ்டம் தானா ஆஃப் ஆகி ரீபூட் ஆகுது.. ஓஎஸ் பண்ணிடலாம்.. கண்ட் ரோல் பேனல்ல பார்த்தீங்களா.. இப்படி முதல் முதலா கணினி  சம்பந்தமான வார்த்தைகளை கேட்டபோது மாடு விரட்டி மிரண்டு நிற்கிற மாதிரி நினறதும்.. பின் தெளிந்ததும்..

பாவம் ரேகா ராகவன் ஸார்.. சாட்ல வந்து அவர் சொன்னது எனக்குப் புரியாம.. காது டப்பாஸு மாதிரி 'ஆ.. ஆ' கேட்க அவர் போன்ல வந்து சொல்லிப் பார்த்து அதுவும் புரியாம முழிக்க.. உங்க பாஸ் வேர்டை சொல்லுங்க நானே சரி பண்ணிடறேன்னு அட்சதை போட்டுகிட்டதும்..

என்னதான் சொல்லுங்க.. நாமளே கண்டுபிடிச்சு.. கற்றுக் கொள்ளும் அந்த நிமிட உற்சாகத்திற்கு ஏதாச்சும் ஈடு உண்டா.. அந்த வகையில் கணினி தினமும் எனக்கு ஒரு உற்சாக ஊற்றுத்தான் இப்போதும் !

யார் வேண்டுமானாலும் தொடரலாம்,,  

வாசிக்க எங்களுக்கு கசக்குமா என்ன?


August 06, 2013

இசை 2

அப்பாவுக்கு நாங்கள் மூவரும் கொடுதத வாக்குறுதியே யாரையும் லவ் பண்ண மாட்டோம் என்றுதான். 

ஒரு பெளர்ணமி இரவு மொட்டை மாடியில் அப்பா, அம்மா, நாங்கள் (புவனா, காயத்ரி, சங்கீதா). மூவரும் நைட்டியில். அப்பாவின் சங்கீத ஆலாபனை நடுநடுவே. 'கீரவாணி' என்று முனகுவாள், கொஞ்சம் தெரிந்தவள் சங்கீதா மட்டும். பாட்டு கிளாஸ் போனவள் அவள் மட்டும்தான். நான் (புவனா) பெயிண்ட் அடித்துப் பார்த்து, பிறகு அதுவும் வராமல் விட்டுவிட்டேன். வாங்கி வைத்த வாட்டர் கலர், ஆயில் பெயிண்ட் எல்லாம் காய்ந்தே போய்விட்டன. 

மிஸ்ஸியம்மாவில் சாவித்ரி பாடும் பாட்டை அப்பாவைப் பாடச் சொன்னாள் அம்மா. 

'நல்ல லவ் ஸ்டோரி!'

"நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா" என்றார் அப்பா. 

"என்ன பேச்சு இது?" - இது அம்மா. 

"அப்படி ஏதாச்சும் ஐடியா இருந்தா சுத்தமாத் தொடைச்சிருங்க!" 

"இல்லப்பா" என்றோம் கோரஸாக. அந்த நிமிடம் நிச்சயமாய் எங்கள் மனதில் எதுவும் இல்லை.

மிஸ்ஸியம்மா பாட்டு அப்பா பாடவில்லை. அம்மா எழுந்து வெளிநடப்பு செய்தாள். அப்பாவும் சற்று நேரத்தில் கீழே போனார். நாங்கள் மட்டும் தனியே.

"எப்படிடி தைரியமா லவ் பண்ண மாட்டேன்னு சொன்ன?"

"ஏன்... நீயும்தான் சொன்ன!"

"அப்ப சினிமால காட்டறது பொய்யா?... லோ லோன்னு அலையறாங்களே!..."

"கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாதா நமக்கு?" என்றாள் சங்கீதா கிண்டலாய்.

"ஹிஸ்டரிதான் வொர்க் அவுட் ஆகும்... நம்ம குடும்ப சரித்திரம். தாத்தா... அப்பா... எல்லோருமே ஏற்பாடு செய்த கல்யாணம்தான்."

"அப்பாவோட மியூசிக் திறமைக்கு யாராச்சும் லவ் பண்ணியிருக்கணுமே?"

"இன்னிக்கு ஏன் பாடாம போயிட்டார்?"

படியேறி யாரோ வரும் சத்தம் கேட்டது. அப்பாவும், அம்மாவும்.

"மனசே இல்லைடி அவருக்கு. புலம்பிட்டார்... பாடாம வந்துட்டேன்னு..."

வட்டமாய் அமர்ந்தோம். "பிருந்தாவனமும் நந்த குமாரனும்..." அப்பாவின் குரலில் வசியம் இருந்தது.

"சுத்த சாவேரியா?" என்றேன் கிசுகிசுப்பாய் சங்கீதாவிடம்.

"ச்சே... ஆரபியா?..."

"என்னடி குழப்பறே..."

"ஏ.எம்.ராஜா இல்லாட்டி ராஜேஸ்வர்ராவ் இருந்தா கேட்டுடலாம்."

எங்கள் ராக சர்ச்சையில் குரல் உயரவும் அப்பாவிடம் சிரிப்பு. பாடிக் கொண்டே சங்கீதாவின் தலையில் செல்லமாய்த் தட்டினார்.

"மண்டு... மண்டு... நல்லாக் கவனி!"

அம்மா, அப்பாவையே கிறங்கிப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கள் கவனிப்பை உதாசீனம் செய்து. எங்கள் எதிர்காலம்... கல்யாணம்... நாளைய கவலைகள்... கடன் பாக்கி... அப்பாவின் உடல் நலம்... எல்லாம் மறந்து.


(நன்றி : கல்கி )