January 29, 2012

பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் உள்ளே போகும்படியான ஒரு வாய்ப்பு.

ரொம்ப நாளைக்கு அப்புறம் போவதால் - நினைவடுக்குகளின் மேல் எதுவுமின்றி - முதல் முறை பார்க்கிற ஆர்வம்.

ரொம்ப ஒழுங்காய் கட்டப்பட்ட - யாரும் என்னை அடிக்காதீங்க - கோவில் மாதிரி ஒரு இடம்னு தோன்றியது.

சாந்நித்தியம் என்று சொல்வோமே.. தஞ்சை பக்கம் பல கோவில்களில் கிட்டுகிற ஒரு உணர்வு.. அது எனக்கு மிஸ் ஆச்சு.

ஒரு வேளை நான் பரபரப்பாய் போய் வந்ததாலோ என்னவோ.

அதன் அழகை ரசித்தேன். உண்மை. ரசனைக்கு உரிய இடம் என்றுதான் மனசில் பதிந்ததே தவிர, உள்ளே எனக்கு மணி ஒலிக்கவில்லை.
வரிசையா வந்து என்னை அடிங்க !January 25, 2012

அத்யயன உதஸவம்-2இன்றோடு ராப்பத்து தாயாருக்கு பூர்த்தி ஆனது.

சேர்த்தி மண்டபத்தில் தான் தரிசனம். போய் உட்கார்ந்ததும் ஆழ்வார் பாசுரங்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் அரையர் ஸ்வாமி..

வெளியூர்.. உள்ளூர் என்று ஸேவார்த்திகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் அமர்ந்து பாசுரம் கேட்டுக் கோண்டிருந்தார்கள்.

சற்று தள்ளி தான் அமர்ந்திருந்தேன். எங்கிருந்தோ ஒரு குழந்தை தன் கையில் விளையாட்டு பொருள ஒன்றை வைத்துக் கொண்டு கால் தரையில் சரியாகப் பாவாத நடையில் வந்தது.

என்னைப் பார்த்ததும் அதற்கு என்ன தோன்றியதோ.. அருகில் வந்து நின்றது.

அதன் விரல்களைப் பிடித்துக் கொண்டேன். மடியில் அமர வைத்தேன். ஏதேதோ கேட்டுப் பார்த்தேன்.

பதில் மையமாய் சிரிப்புத்தான்.

பத்து நிமிடங்கள் என் கொஞ்சலை அனுபவித்து விட்டு பின்னால் நின்ற அதன் பாட்டியிடம் போனது.

‘மாமாக்கு உன் பேரைச் சொல்லு.. தேஜஸ்ரீ.. சொல்லு “

பிராகாரம் வலம் வந்து வில்வ மரம் எதிரே (ஸ்தல விருட்சம்) அமர்ந்த போது கரெண்ட் போனது. திரும்ப ஜெனெரேட்டர் உபயத்தில் விளக்கு எரிவதற்குள் செல் கேமிராவில் பிடித்த போட்டோ..இரு அகல் விளக்குகளின் ஒளி..

****************************


உதடுகளைப் பார்த்ததும்
ஊதித் தள்ளி விடுகிறது
புல்லாங்குழல்.

*****************************


விளையாடியபின்
வீட்டுக்குத் திரும்பும் நேரம்.
பொறுக்கிய கூழாங்கற்களை
ஆற்றுக்குள்
வீசி எறிந்தாள் ஜ்வல்யா.
‘அதுவும் வீட்டுக்கு
போவட்டும்’
January 22, 2012

தாயார் அத்யயன உத்சவம்

”அப்பா” டிராயிங் மாஸ்டர். அவரிடம் நானும் ஞானப்பிரகாசமும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளப் போனோம். (இப்படி வீணை, புல்லாங்குழல் என்று சகலமும் முயற்சித்து எதுவும் வரவில்லை உருப்படியாய் என்பது வேறு விஷயம்)

ரொம்ப நாள் கழிச்சு ’அப்பா’ என் வீட்டுக்கு வந்தார். இதற்குள் நான் கீழச்சித்திரைவீதி சித்திரைத்தேர் விட்டு மேற்கே வந்தாச்சு. எப்படி அடரஸ் கண்டுபிடிச்சாரோ.. படியேறி வந்தார். பல வருஷ இடைவெளிக்குப் பின் மீட் பண்றோம்.

இளைத்திருந்தார். ஏற்கெனவே ஒல்லி தான். பையனும் இதே லைன்ல ஆர்வம்.
‘படம் வரையறான்.. இப்ப குணசீலம் பெருமாளை ஸ்கெட்ச் எடுத்துருக்கான்’ என்றார்.

அவருடன் போய்விட்டேன். கோடுகளாய் இன்னும் முழுமை பெறாமல் பிரசன்ன வெங்கடாசலபதி.

“சிருங்கேரி பெரியவா.. படம் வரைஞ்சிருக்கேன்.. “ என்றான் பையன்.
அதுதான் மேலே..

அப்பா ஜெகன்னாதன். பையன் பாலாஜி. ’அப்பா’ வரைந்த ஸ்ரீரெங்கநாதர் இப்போதும் நிறைய வீடுகளில்.

ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.


ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியார் அத்யயன உத்ஸவம் இப்போது. பெருமாளுக்கு பகல் பத்து, ராப்பத்து போல தாயாருக்கு ஐந்து, ஐந்து நாட்கள் உதசவம். இப்போது ரா-அஞ்சு.

காணக் கண்கோடி வேண்டும்.. ஸ்ரீபாதந்தாங்கிகள் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரும் நடை அழகை தரிசிக்க.


சேர்த்தி மண்டபத்தில் தாயார் .. திருவந்திகாப்பு (தீபாரத்தி) ஆனதும் திரை. கிளம்ப மனசில்லாமல் உட்கார்ந்திருந்தோம்.

பெருமாள் பிரசாதம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க ஸ்ரீபண்டாரம் (பிரசாத விற்பனை இடம்) போனேன்.

வடை சூடாக இருந்தது. வாங்கும்போது ஒருவர் -காவி சட்டை, காவி வேட்டி- கன்னட சாயல் பேச்சு - முகம் பிரகாசமாய்.. வந்தார்.

‘தோடிசி ப்ரசாதம்’ என்றார்.

‘நோ.. நோ’ என்றார் விற்பனையில் இருந்த இருவரில் ஒரு பெரியவர். அதாவது ப்ரீயா தர முடியாதென்று. (முதலில் தமிழில் தரமாட்டேன்.’ என்று சொல்லி அப்புறம் தமிழ் தெரியாது என்று புரிந்து.. நோ.. நோ..

கேட்டவரோ ‘இதுல என்ன கஷ்டம்.. ஒரு ஸ்பூன் ஜஸ்ட் பிரசாதம்’ என்கிற தொனியில் மீண்டும் வேண்டினார்.

எனக்கு மனசாகவில்லை. பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த இன்னொரு சிறு வயசுக் காரரிடம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை இரண்டும் ஒவ்வொரு கரண்டி தரச் சொல்லி ஒரு இலையில் வைத்து அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டு அதற்கும் பணம் எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.

நான் வாங்கிய வடைக்கு மட்டும் பணம் எடுத்துக் கொண்டு அந்த பிரசாதங்களுக்கு பணம் வேண்டாம் என்று ...

சைகையில் சொன்னார் அந்த இளைஞர் ! வாய் பேச முடியாதவர் என்று புரிந்தது.

இறைவன் விளையாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை!January 17, 2012

பொங்கல்மூன்றாவது காலாண்டு கணக்கு முடிப்பு.. தணிக்கை.. தாமதமாய் வீடு திரும்பல்.. நாள் குழப்பம்.. கிழமை குழப்பம்..

எல்லாம் முடிந்து ஹாய்யாய் கனுப் பண்டிகை கொண்டாட கிராமத்துக்குப் போனோம்.

அன்று கோவிலில் எங்கள் முறை.

பட்டுக்கோட்டை.. மதுக்கூர் தாண்டி அந்த கிராமம். காரப்பங்காடு!

எட்டரை மணிக்கே போயாச்சு. இன்னும் நாகரிக பாதிப்புக்கு உள்ளாகாமல்.. அமைதிப் பூங்கா.

பாதிரி மரம் ஸ்தல விருட்சம். அதில் ஓர் அதிசயம்.. வெகு நாட்களாய் இருக்கிற நெடிதுயர்ந்த மரம் அப்படியே பலகை போல மாறிப் போக.. புதிதாய் ஒன்று வைத்தார்கள்.

அது நடந்து பல ஆண்டுகள் ஆச்சு. இப்போதோ புதிதாய் வைத்ததும் பெரிய மரமாகி நிற்க.. பழசும் இன்னும் துளிர்த்துக் கொண்டு அப்படியே உயிரோடு..

பெருந்தேவித் தாயார். திருமஞ்சனம் கண்டருளி.. பல்லக்கில் புறப்பாடு.. கனு வைத்த அழகுக் காட்சி..

பிரசாதங்கள் தான் உணவு.. மிளகு தூக்கலாய் வெண்பொங்கல்.. சர்க்கரைப் பொங்கல்.. எண்ணைப்பழையது (சாதம் வடித்து நல்லெண்ணை, எலுமிச்சம் சாறு, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து வைப்பார்கள். இந்தப் பக்கம் மட்டுமே இது பேமஸ்)


ஒரு நாள் மிக உற்சாகமாய் பொழுதைக் கழித்து விட்டு திரும்பும்போது மன்னார்குடி வழியே..

கோபிநாதப் பெருமாள் கோவிலில் (அப்படிக் கேட்டால் உள்ளூர்காரர்கள் முழிப்பார்கள். இந்த தடவையும் அதே கதைதான். அப்புறம் கோணப்பெருமா கோவில் என்றதும் மலர்ச்சியாய் ‘இதா.. இப்படிப் போங்க’ என்று வழி காட்டினார்கள்)

அங்கே தன்னந்தனியே ஸ்ரீவித்யா ராஜகோபாலன்..

ஒற்றை வஸ்திரத்தை அவர் சுற்றிக் கொண்டு நிற்கும் அழகைக் கண்டாலே மனசு கொள்ளை போகும்.


உங்களுக்காக.. இதோ..


ஹப்பாடி.. மனசு எவ்வளவு லேசாச்சு..

இன்று மீண்டும் அலுவலகம் போகும்போது பழைய படபடப்பு இல்லை..