May 28, 2011

இன்னொரு முகம்

சமையலறையில் இருந்த புவனேஸ்வரி ஈரக்கரங்களைப் புடவைத் தலைப்பில் துடைத்தபடி வெளியே வந்தாள்.

"யாரது?"

கதவைத் திறந்தாள். எதிரே நின்றவளைப் பார்த்ததும் திகைப்பும் மலர்ச்சியும் வந்தன.

"நீயா!" என்றாள் ஆச்சர்யமாய்.

இருக்காதா பின்னே? போனவாரம் பெண் பார்த்து... அதே இடத்திலேயே மருமகளாக ஏற்க சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்தவளுக்கு... அதே பெண் இன்று வீடு தேடி வந்தால்...?

"வா...வனிதா...என்ன இது...திடீர் விஸிட்..."

ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தவளிடம் புன்முறுவலுடன் கேட்டாள்.

"...என்ன சாப்பிடறே...?"

வனிதா பேசவில்லை. சங்கடத்துடன் சிரித்தாள்.

"முதமுதல்வே நம்ம வீட்டுக்கு வந்திருக்கே. ஏதாவது சாப்பிட்டே தீரணும். உன்னை நான் சும்மா விடமாட்டேன்" வனிதா ஏதோ சொல்ல முயன்றதைக் கவனிக்காமல் வேகமாக உள்ளே போனாள். மாலை டிபனுக்காகச் செய்திருந்த பஜ்ஜியை ஒரு தட்டிலும் ஒரு டம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்து எதிர் டீபாய் மேல் வைத்தாள்.

தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"சாப்பிடும்மா..."

புவனேஸ்வரியை நிமிர்ந்து பார்த்தாள்.

"வந்து... உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு..."

"எதைப் பத்தி?"

"எப்படி சொல்றதுன்னு புரியலே..." என்று இழுத்தவள், மெல்ல தன் கைப் பையைத் திறந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள்.

"நேத்து தபால்ல இந்தக் கவர் எனக்கு வந்தது... பிரிச்சுப் பாருங்க உங்களுக்கே புரியும்..."

புவனேஸ்வரி பதற்றத்துடன் வாங்கிப் பிரித்தாள். உள்ளே ஒரு போட்டோ. அதன் பின்புறம் சிவப்பு மையில்... 'இதற்கு மேலும் அத்தாட்சி வேண்டுமா? புத்திசாலித்தனமாக முடிவெடு..உன் நலம் விரும்பி..." என்று எழுதியிருந்தது.

புகைப்படத்தினைத் திருப்பியதும் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் மகன் சதீஷும் வேறொரு பெண்ணும்... மிக நெருக்கமாக....

வனிதா மௌனமாய் புவனேஸ்வரியைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

புவனேஸ்வரியின் முகம் மெல்ல இயல்பானது.

"...இந்த ஃபோட்டோ நேற்று தபால்ல வந்ததா..."

"ஆமா...ஆனா...அதை யார் அனுப்பினாங்கன்னு எனக்குத் தெரியலே..."

"உங்க வீட்டுல காண்பிச்சுட்டியா...?"

"இல்லே..."

"...ஏன்...?" ஆராய்கிற பார்வையுடன் கேட்டாள் புவனேஸ்வரி.

"எனக்கு முதல்லே என்ன செய்யிறதுன்னே புரியலே...நீங்க என்னைப் பெண் பார்த்து...உடனேயே சம்மதம்னு சொன்னதும்...எங்க வீட்டுல எல்லோருக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சுப் போச்சு...கணவரை இழந்த நீங்க...கைக்குழந்தையோட வாழ்க்கையில் ரொம்ப போராடி...உங்க மகனைப் பெரியவனாக்கி படிக்க வச்சு... நல்ல வேலையிலும் வச்சுருக்கீங்க... அதுவுமில்லாம... 'போய் பதில் போடறோம்'னு சொல்லிட்டு எதுவும் சொல்லாம விட்டுடற மனுஷங்களுக்கு மத்தியில... ரொம்ப வித்தியாசமான பெண்மணியா தெரிஞ்சீங்க... இந்த நிலைமையிலதான் இப்படி புதுசா ஒரு குழப்பம். உங்களிடமே சொல்லி தீர்வு காணணும்னு வந்திருக்கேன்..."

"இப்ப நான் என்ன செய்யணும்..."

வனிதா தீர்க்கமாய் அவளைப் பார்த்தாள்.

"...உங்க மகனோட இன்னொரு முகம்... இப்ப இந்த போட்டோவில் தெரிஞ்சுபோச்சு. அடுத்த வாரம் நடக்கிறதா இருக்கிற நிச்சயதார்த்தம்... நின்னு போச்சுன்னா... ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்விகள் வரும். பழியை இப்ப யார் மேலப் போடறது...? நீங்களா...வரதட்சணை...அது...இதுன்னு புதுசா பிரச்சனை பண்ணி நிறுத்திட்டிங்கன்னா... நல்லதாப் போயிரும்..."

புவனேஸ்வரியின் முகம் இறுக்கமாகியது.

"...அது மட்டும் முடியாது.....வனிதா..."

"...என்ன...ஏன்...?"

"...தப்பு என் மகன் மேல..அதை ஏன் மறைக்கணும்...? நானே நேரா உங்க வீட்டுக்கு வரேன். இந்த போட்டோவைக் காட்டி... வேற நல்ல எடத்துல... உனக்குக் கல்யாணம் பண்ணச் சொல்றேன்...வரதட்சணை கேட்கக் கூடாதுங்கிறது என்னோட கொள்கை... அதை ஏன்... பொய்யா... உங்க வீட்டு மேல திணிக்கணும்..." என்றாள் உறுதி பூர்வமாய்.

"ஆம்பளைன்னா கல்யாணத்துக்கு முன்னால கொஞ்சம் அப்படி... இப்படித்தான் இருப்பான்... நீதான் அனுசரிச்சுப் போய் அவனைத் திருத்தணும்னு... என்னை வற்புறுத்திக் கல்யாணம் செஞ்சுவச்சா...?" என்றாள் வனிதா.

"...நான் விடமாட்டேன்...! அதற்கு சம்மதிக்கவும் மாட்டேன்... நீயும் ஒரு பெண்... என்னைப் போல சக மனுஷிக்கு ஓர் அநீதி நிகழ சம்மதிக்க மாட்டேன்... முதல்லே நான் ஒரு மனுஷி... பிறகுதான் தாய்..." என்றாள் புவனேஸ்வரி.

"...நான் தோத்துட்டேன்..." என்றாள் வனிதா.. சிரிப்பும் கண்ணில் நீருமாக.

"...நீ...என்ன சொல்றே?.."

"...இந்த போட்டோ... பொய் அம்மா... எல்லா மாமியார்களும் மருமகளை அடிமைப்படுத்துகிற ரகம்தான்னு... என்னோட நினைப்பு... சதீஷைத் தற்செயலா சந்திச்சபோது என்னோட கருத்தைச் சொன்னேன். எங்கம்மா நீ நினைக்கிற மாதிரி இல்லேன்னு...சிரிச்சாரு... ரெண்டு பேருமா... ஆடின நாடகம் தான் இது... மன்னிச்சிருங்க.. நிச்சயமா... உங்களைப் போலவே... ஒரு பெருமை வாய்ந்த பெண்ணா... நானும் இருப்பேன்..."

"....முதல்லே இந்த போட்டோவை கிழிச்சுப்போடு..." என்றாள் புவனேஸ்வரி சிரிப்புடன்.


(இதுவும் எப்பவோ எழுதினது)

May 26, 2011

முதல் தரம்

திடீரென அப்பாவைப் பார்த்ததும் சுகந்தி மிகவும் பூரிப்பானாள்.

"என்னப்பா லெட்டரே இல்லை....திடீர்னு வந்து நிக்கறீங்க."

அதே நேரம் திவாகர் உள்ளே வந்தான். மாமனாரைப் பார்த்ததும் முகம் பரவசமானது.

"என்னங்க எப்ப வந்தீங்க....ஏய்...சுகந்தி....அப்பாவுக்கு டிபன், காபி கொடுத்தியா..." என்றான்.

ராமனாதனுக்கு உள்ளூர மகிழ்ச்சியாய் இருந்தது. இரண்டே பெண்கள். திவாகர் முதல் மாப்பிள்ளை.அதிர்ஷ்டவசமாய் நல்லவனாய் அமைந்து விட்டான். மாலதிக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை அமைந்து விட்டால் போதும். அதற்குத்தானே இப்போது வந்தது.

திவாகர் முகம் கழுவி வந்து அமர்ந்தான்.

"வாங்க மாமா.....டிபன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..."

டைனிங் டேபிள் முன் அமர்ந்தனர். சுகந்தி திராட்சையைக் கழுவி ஒரு தட்டில் வைத்து அப்பாவின் முன் வைத்தாள். பிறகு அவளும் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

"மாலதிக்கு ஒரு வரன் வந்திச்சு..."

"அப்படியா....என்ன வேலையாம் அவருக்கு..."

"நல்ல வேலைதான்.... ஒரு கம்பெனில ஆபீசர் போஸ்ட். ஒரே பையன்...வேறெந்த பிக்கல்...பிடுங்கலும் இல்லே... சீர்ல எந்த டிமாண்டும் இல்லே...நீங்க செய்யிறபடி செய்யுங்க... அப்படின்னு சொல்லிட்டாங்க..."

"அப்புறம் என்ன...ரொம்ப நல்லதாப் போச்சு.." என்றான்.

"எந்தக் கம்பெனிப்பா? இவரை விட்டு விசாரிக்கச் சொல்லலாம்... " என்றாள் சுகந்தி.

"அதற்குத்தானம்மா...நான் இப்ப வந்தேன். மாலதிக்குப் பார்த்த வரன்...வேறெந்த கம்பெனியும் இல்லே. நம்ம மாப்பிள்ளை கம்பெனிதான். பெயர் அரவிந்தன் " என்றார் முகமலர்ச்சியுடன்.

திவாகர் உடனே பிரகாசமானான்.

"ஓ அரவிந்தனா...எனக்கு நல்லாத் தொ¢யுமே...."

"சொல்லுங்க... மாப்பிள்ளை....பையன் எப்படி....குணத்துல எப்படி...." என்றார் ராமனாதன் பரபரப்புடன்.

திவாகர் எழுந்து கைகழுவப் போனான். மாலதி பின்னாலேயே கை துடைக்க டவலுடன் போனாள்.

"இங்கே பாருங்க...அரவிந்தனைப் பத்தி இப்ப எதுவும் சொல்ல வேணாம். வேற ஏதாவது சொல்லி சமாளிங்க. அப்புறம் சொல்றேன்.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

"ஏன்...ஏன் அப்படிச் சொல்லணும்...." என்றான் புரியாமல்.

"அது அப்படித்தான்....நான் சொல்ற மாதிரி செய்யுங்க...விவரம் எல்லாம் அப்புறம் சொல்றேன்" என்றாள் மெல்லிய குரலில்.

ராமனாதன் ஆர்வமாய்க் காத்திருந்தார்.

"என்ன மாப்பிள்ளை...சொல்லுங்க..."

"அது வந்து....அவர் வேற செக்ஷன். சும்மா...பார்த்தவரை நல்ல மாதிரின்னு தோணும்...அது ஒண்ணும் பிரச்னை இல்லே... அந்த செக்ஷன்லயும் எனக்கு வேண்டியவங்க இருக்காங்க...நீங்க ரெண்டு நாளாவது இருப்பபீங்க இல்லையா...நாளைக்கு விசாரிச்சு முழு விவரம் சொல்லிடறேன்" என்றான் தயங்கிய குரலில்.

'அப்படியா' என்றார் ஏமாற்றத்துடன்.

பேச்சு பின்னர் வேறு திசையில் போனது. எப்படியும் நாளைக்குத் தொ¢ந்து விடும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அதுதான் சொன்னாரே பார்த்தவரை நல்ல மாதிரி என்று.

மாலதி அதிர்ஷ்டம் எப்படியோ அந்த மாதிரி அமைகிறது...என்று நினைத்துக் கொண்டார்.

சுகந்தி பேச்சோடு பேச்சாகச் சொன்னாள்.

"வெளியில பார்க்கிறது வச்சு...யாரைப் பத்தியும் ஒரு முடிவுக்கு வரமுடியாது...அந்த அரவிந்தன் உள்ளூர ஆள் எப்படியோ.." என்றாள்.

திவாகர் ஏதோ சொல்ல முயன்றான். சுகந்தி கண்ஜாடை காட்டியதும் அடங்கி விட்டான்.

இரவு சாப்பாடு ஆனதும்...படுக்கையில் கேட்டான்.

"ஏன் அந்த மாதிரி பேசினே..."

"என்னங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க...அந்த அரவிந்தன் யாரு..."

"ஏன்...எதுக்குக் கேட்கிறே..."

"சொல்லுங்க....அவர் போஸ்ட் என்ன?"

"எங்க கம்பெனி ஆபீசர்..."

"நீங்க..." என்றாள் பட்டென்று.

"நான் என்ன செய்ய முடியும்...கம்பெனி எக்சாம் எழுதிக்கிட்டேதான் இருக்கேன். பாஸ்தான் பண்ணலே" என்றான் அவமானமாக.

"உங்களைக் குறை சொல்லலீங்க. உங்க போஸ்ட்...அவரைக் காட்டிலும் குறைவு தானே."

"அ..ஆமா...அதனால என்ன?"

"ஏற்கனவே மாலதி கொஞ்சம் சிவப்பு...அதுலேயே அவ அலட்டுவா...இப்ப அவ புருசன் உங்க கம்பெனியிலேயே...பெரிய ஆபீசர்னா...என்னமா அலட்டிக்குவா தெரியுமா..."

"திவாகர் 'இது என்னடா...புதுக்குழப்பம்' என்பது போல பார்த்தான்.

"அதனால ...நான் சொல்றமாதிரி செய்யுங்க. நாளைக்கு அப்பாகிட்டே, விசாரிச்சேன்...அரவிந்தன் அப்படி ஒண்ணும் நல்லவன் மாதிரி தெரியலேன்னு சொல்லிருங்க..."

"பொய் சொல்லச் சொல்றியா.."

"ஆயிரம் பொய் சொல்லலாங்க ஒரு கல்யாண விஷயத்துலே.."

"அது கல்யாணம் நடக்க...இது நிறுத்த இல்லே சொல்றே..."

"இதுவும் நன்மைக்குத்தான். நம்ம நன்மைக்கு புரிஞ்சுதா...சும்மா...வேற ஏதாவது உளறி வைக்காதீங்க. நான் சொல்றபடி பேசுங்க.."

கண்டிப்பான குரலில் சொன்னாள். திவாகர் எதுவும் பேசத் தோன்றாமல் படுத்துக் கொண்டான். அவள் சொல்வதும் ஒரு விதத்தில் நியாயம்தான். நாளைக்கு இரண்டு மாப்பிள்ளைகளும் போனால், மரியாதை ஆபீசருக்குத்தானே...முதல்
மாப்பிள்ளை சாதாரண போஸ்ட் என்றுதானே சொல்வார்கள். அவ்வளவு ஏன்...கல்யாண விஷயத்திலேயே பாரபட்சம் ஆரம்பித்துவிடுமே...பெரிய மண்டபம்...வீடியோ...எனக்கு வெறும் போட்டோ மட்டும்தான். சாயங்காலம் ரிசப்ஷன்... கச்சேரி என்று அமர்க்களம் செய்வார்கள்....மாமனாரே சொன்னாரே...நம்ம வீட்டுல இதுதான் கடைசி ஃபங்ஷன்...சிறப்பா செய்யப் போறேன்னு...

அப்படியே தூங்கிப் போனான். காலையில் கிளம்பும்போது ராமனாதன் நினைவுபடுத்தினார்.

"மறக்காம... விசாரிச்சுக்கிட்டு வாங்க...நான் நாளைக்கு ஊருக்குப் போகணும்...அப்புறம் கல்யாண விஷயமா மத்த ஏற்பாடுகள் எல்லாம் இருக்கே" என்றார் கவலை அப்பிய குரலில்.

சுகந்தி ஜாடை காட்டினாள். 'நான் சொன்னதை மறந்துராதீங்க' என்பதுபோல.

மாலையில் வீட்டு வாசலிலேயே இருவரும் பரபரப்புடன் காத்திருந்தார்கள். அவன் உள்ளே நுழைவதற்கு முன்னமே...'என்ன...என்ன' என்று விசாரித்தார்கள்.

"என்னங்க...நல்லா விசாரிச்சீங்களா..." என்றாள் சுகந்தி, 'நல்லா'வில் அழுத்தம் கொடுத்து.

"என்ன மாப்பிள்ளை, பையன் எப்படி...நல்ல ரிசல்ட்தானே" என்றார் ராமனாதன்.

"அடடா...ஏன் இப்படி அவசரப்படறீங்க...உள்ளே வராம எங்கே போகப் போறேன்...முதல்லே உள்ளே வாங்க" என்றான்.

"எப்படியோங்க...மாலதி நல்ல எடத்துல வாழ்க்கைப்படணும்...வசதி இருக்கிற வீடுன்னு கொடுத்துட்டு...பின்னால அவ கண்ணைக் கசக்கக் கூடாது...மாப்பிள்ளை நல்ல குணமா இருக்கணும்...அதுதான் முக்கியம்...பணம் வரும் போகும்...
குணம் அமையறதுதான் கஷ்டம்...அதுக்குத்தான் முதல் மரியாதை...நல்லாதானே விசாரிச்சீங்க...ஒருத்தருக்கு நாலு பேரா..." என்றாள் சுகந்தி.

"சொல்லுங்க மாப்பிள்ளை எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு..." என்றார் ராமனாதன்.

'ஓக்கே' என்றான் புன்சிரிப்புடன்.

"எ...என்ன சொல்லறீங்க" என்றார் இருவரும் கோரசாய்.

"கிளீன் ரிசல்ட்...நீங்க மத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலாம். அரவிந்தன் நம்ம மாலதிக்கு எல்லா வகையிலும் ரொம்பப் பொருத்தமானவன். ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது...குணத்துல தங்கம்...இருபத்து நாலு காரட்..." என்றான்
உற்சாகமான குரலில்.

'கடவுளே' என்று கைகூப்பினார்.

"நான் இப்பவே போய் தெருமுனை பிள்ளையாருக்கு செதறுகாய் போட்டுட்டு வரேன். நீங்க நல்ல சேதி கொண்டு வரணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன். என் பிரார்த்தனை வீண் போகலே..." என்றபடி கிளம்பிப் போனார்.

சுகந்தி முகம் 'உர்'ரென்று ஆனது.

"என்ன சுகந்தி...கோபமா...என்மேலே..."

"இல்லே...ரொம்ப சந்தோஷம்...படிச்சுப் படிச்சு சொன்னேன்ல...இப்படியா என்னை அவமானப்படுத்தறது..." என்றாள்.

"இல்லே சுகந்தி...நான் செஞ்சது சரின்னு நீயே ஒப்புத்துக்குவே...கொஞ்சம் பொறுமையாத்தான் கேளேன்..."

"ஒண்ணும் வேணாம்.." என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டவளை இழுத்து சோபாவில் அமர வைத்தான்.

அருகில் அமர்ந்து தோளை அணைத்தபடி பேசினான்.

"என்மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சு உங்கப்பா இங்கே வந்திருக்கார். ஏதோ ஒருவித சுயநல நினைப்போட... நான் அரவிந்தனைப் பத்தி அவதூறாப் பேசினா...அது நியாயமா...அதுவும் இல்லாம...மாலதி யாரு...உன் தங்கை தானே..
அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா...நமக்கும் சந்தோஷம் தானே..."

'இந்தக் கதையை யார் கேட்டார்கள்' என்கிற பாவனையில் சுகந்தி அமர்ந்திருந்தாள்.

"நீயே சொன்ன மாதிரி...பணம் வரும் போகும்...குணம் அமையறதுதான் கஷ்டம்னு...நான் நல்ல குணத்தோட இருக்கிறது அவசியம் இல்லையா...இன்னைக்கு உனக்காக ஒரு பொய் சொல்றேன்னு வச்சுக்க...அதுலயே ஒரு டேஸ்ட் வந்து...பின்னால..நம்ம வாழ்க்கையையே பாதிக்கிற மாதிரி...பொய் சொல்ல ஆரம்பிச்சா...அப்ப...அதுல உனக்கு விருப்பம்தானா...சொல்லு..."

அவன் எடுத்துக் காட்டிய விதம் அவள் மனதில் சுள்ளென்று உறைத்தது.

நியாயம்தானே...பொய் சொல்வதில் சுகம் கண்டுவிட்டால் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாமே...

தன் கணவன் குடும்பத்தின் முதல் மாப்பிள்ளை மட்டுமல்ல, முதல் தர மாப்பிள்ளையுங்கூட என்று மனதில்பட்டது அவளுக்கு.

"நியாயம்தாங்க நீங்க செஞ்சது" என்றாள் மனப்பூர்வமாய்.

திவாகர் பெரூமூச்சு விட்டான். மனதில் பாரம் இறங்கிய மாதிரி இருந்தது.

(எப்பவோ எழுதின கதை!)

May 18, 2011

திருத்தவே முடியாது

சகுந்தலாதான் வந்திருந்தாள். 'ஹோ'வென்ற இரைச்சலும், சிரிப்பும் அவள் அடையாளங்கள்தான்.
வாசல் நடையில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்ததுமே யூகித்து விட்டேன். ஜானகியும் உறுதிப்படுத்தினாள். ஆபீஸ் பேக்'கை வாங்கிக்கொண்டவள் மெல்ல முணுமுணுத்தாள்.
"சக்கு வந்திருக்கா. பத்து நாள் தங்கப் போகிறாளாம்."

அதற்குள் சக்குவின் பெண்ணே ஓடி வந்துவிட்டது. 'மாமா' என்று காலைக் கட்டிக்கொண்டது.
"என்னடி அம்மாவோட வந்தியா...?"
"ம். அப்பா வரலே... லீவு கிடைக்கலே," என்றது.
உள்ளே போனேன்.. அம்மா, முகம் எங்கும் பிரகாசமாய்ச் சக்குவின் எதிரில் அமர்ந்திருந்தாள்.
"..வாங்கம்மா பெரிய மனுஷி! எப்படி இருக்கீங்க..." என்றேன்.
"..ஏதோ இருக்கேன்.." என்றாள் தோரணையாய். " நீங்கதான் பெரிய மனுஷங்க... அங்க வரவே மாட்டீங்க.. அட.. அதான் போவட்டும்...அம்மாவையாவது அனுப்பலாம்... அதுவும் கிடையாது."
"... வந்தா கூட்டிக்கிட்டுப் போயேன். யார் வேணாம்னாங்க?"
"ஏம்மா, நீ வரமாட்டியா?"
"அவன் கிடக்கான். நீ ஏண்டி அவன் கிட்டே பேசறே" என்றாள் அம்மா பொதுவாய்.

போக மாட்டாள். ஒவ்வொரு வருகையிலும் தவறாமல் சக்கு அழைப்பாள். போன வருஷமும் அழைத்தாள். ‘பத்து நாட்களாவது இருந்துவிட்டு வருகிறேன்’ என்று போன அம்மா, மூன்றாவது நாளே திரும்பி விட்டாள்.
"ஏம்மா... என்ன ஆச்சு?" என்றேன்.
"என்னவோடா... என்னால் முடியலே.. பாவம் அவளுக்கு ஏன் சிரமம்னு வந்திட்டேன்."
பின்னால் ஜானகிதான் சொன்னாள்.
".. சாமர்த்தியக்காரிதான். அம்மாவை வச்சு பயங்கரமா வேலை வாங்கிட்டாளாம். அம்மாவால் முடியலே. திரும்பி வந்துட்டா."
"வேறே மாதிரி சொன்னாளே..." என்று இழுத்தேன்.
"பெண்ணை விட்டுக் கொடுப்பாளா?"
மறுபடியும் இப்போது சக்குவின் வருகை. இந்த விஜயத்தில் என்னென்ன நிகழப்போகிறதோ...!

சொன்னபடி நகை தயாராகிவிட்டது. போனஸாக வந்த பணம். உடன் கையிருப்பு கொஞ்சம் சேர்த்து நாலு பவுனில் சங்கிலி செய்ய ஆர்டர் கொடுத்திருந்தேன். செய்யக் கொடுப்பதற்கு முன்பே ஜானகியிடம் பேசிவிட்டேன்.
"ஜானு.. உனக்கு ஆட்சேபணை இல்லியே..."
"என்னங்க இது... அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு காலையிலேயே சொல்லிட்டேன். எதுக்குடீன்னாங்க.. உங்க பையன் ஆசையாப் போடறார்... போட்டுக்குங்கன்னேன்."
நிஜமாகவே நெகிழ்ந்தேன்.
"தேங்க்ஸ்மா... உனக்குச் செய்யலேன்னு வருத்தப்படுவியோன்னு..."
"சேச்சே ... அதான் போன தடவை எனக்குப் பிடிச்சது வாங்கிக்கிட்டேனே.." என்றாள்.
பரவசமாய் அவளை என்னுடன் இறுக்கிக் கொண்டேன்.

இப்போதுதான் குழப்பம். நகையைக் கொண்டு வந்தாகிவிட்டது. அம்மாவிடம் கொடுத்து... போட்டுக் கொள்ளச் சொல்லி... நமஸ்காரமும் செய்தாகிவிட்டது.
அம்மாவுக்குப் பெருமை கொள்ளவில்லை.
"நெஜம்மாகவே எனக்குத்தானே!" என்றாள் குழந்தை போல்.
"என்னம்மா இது. இப்படி கேட்கிறே.. உனக்குத்தான். உனக்கேதான்."
எதிர் வீடு பக்கத்துவீடுகளுக்குக் கொண்டு போய்க் காட்டியாகி விட்டது.
சக்கு கூட சொல்லிவிட்டாள்.
"இது நல்லா இருக்கும்மா... ம்.. பரவாயில்லே.. ஒம் பையன் உன்னை நல்லாத்தான் வச்சிருக்கான்."

மறு நாள் அம்மாவின் கழுத்தில் நகையைக் காணோம்.
"என்னம்மா.. எங்கே அது?"
"கழற்றி வச்சிருக்கேன்..."
அப்போதுதான் எனக்குத் தோன்றியது, ‘என்ன இருந்தாலும்... அம்மாவும் பெண்தானே... சக்கு கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்திருப்பாளோ...’
ஜானகியிடம் தனிமை கிடைத்த போது சொன்னேன்.
"அம்மாவுக்கும் ஆசைதான் போல... நகையைப் பத்திரமாய் பூட்டி வச்சுட்டா."
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"இல்லே... சக்கு கேட்பாளோன்னு பயப்படறாளா அம்மா..."
ஜானகி அழுத்தமாத் தலையசைத்தாள்.
"இல்லீங்க.. எனக்கும் அதுதான் ஆச்சர்யம், சக்கு நல்லா இருக்குன்னு சொன்னதோட சரி... அப்புறம் சங்கிலியைப் பத்தி வாயே திறக்கலே. அம்மாதான் திடீர்னு கழற்றி வைச்சுட்டாங்க."
"ஏனாம்?"
"இத்தனை நாளா எதுவும் போடாமே திடீர்னு போட்டதாலேயோ... என்னவோ தெரியலே."
"உனக்குக் கொடுத்திருவாங்களா?" என்றேன் என்னையும் மீறி
"தெரியலே," என்றாள் யதார்த்தமாய்.
"அம்மா பார்த்து என்ன செஞ்சாலும் சரி. அது அவங்களோடது."

"வரட்டுமா?" என்றாள் சக்கு.
வந்து பத்து நாட்களாகி விட்டன. இன்று ஊருக்குக் கிளம்புகிறாள்.
"பத்திரமா போயிட்டு வா," என்றேன்.
"கொஞ்சம் இருடி..." என்றாள் அம்மா.
உள்ளே போய்த் திரும்பியவள் சட்டென்று சங்கிலியைக் கழுத்தில் மாட்டி விட்டாள்.
".. ம் ..எதுவும் பேசாதே.. நீ வச்சுக்கோ." என்றாள்.
சக்கு ஒப்புக்கு ஏதோ சொல்லி... மறுக்கப்பட்டு.. முகம் முழுதும் மலர்ச்சியாய்க் கிளம்பிப் போனாள்.
“.. என்னம்மா... இப்படிப் பண்ணிட்டே, உனக்காகத்தானே ஆசையா பண்ணிப் போட்டேன்." என்றேன் ஆற்றாமையுடன்.
"உன் ஆசைக்கு ஒரு நாள் நான் போட்டுக்கிட்டேன். இப்ப என் ஆசைக்கு அவளுக்குப் போட்டுட்டேன்." என்றாள் அதே குழந்தைத்தனமாய்.

இந்த அம்மாக்களைத் திருத்தவே முடியாது.

May 16, 2011

செல்லக் குழந்தை

"சாமி நெனைச்சா என்ன கேட்டாலும் தருவாராப்பா?"
அசோகனின் கால்களைப் பற்றிக் கொண்டு கேட்டது சிந்துஜா.
இரண்டரை வயது.
"ம்..."
"நெஜம்மாவா...".
குழந்தையின் பார்வையில் கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் எதிர்பார்ப்பு.
"ஆமாம்மா....சாக்லேட்.....பிஸ்கட்....பொம்மை....யானை...எது கேட்டாலும் தருவார்."
சில வினாடிகள் யோசனைக்குப் பின் கேட்டாள் சிந்துஜா.
"அம்மாவை?"

எதிரில் அமர்ந்திருந்தாள் நந்தினி.
அசோகன் முகத்தில் கவலைக் கோடுகள். வார்த்தைகள் திணறின.
"ஒரு நிமிஷம் எதுவும் பேச முடியலே என்னாலே....குழந்தை மனசுல இவ்வுளவு ஏக்கம் இருக்குன்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுது....நல்ல வேளை.....எங்கம்மா வந்து...."அப்பா ஆபிஸ் போகணும்...லேட்டாச்சு...சாயங்காலம் பேசலாம்'னு சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க."
நந்தினி மெல்ல நிமிர்ந்தாள்.
"அசோக்....இப்பவாவது உங்க தீர்மானத்தை மறுபரிசீலனை பண்ணுங்க.. அட்லீஸ்ட்...உங்க குழந்தையோட ஆசைக்காவது..."
"இல்லே நந்து.....என்னால செத்துப் போன என் மனைவியை மறக்க முடியலே....வீட்டில ஒவ்வொரு மூலையும்....ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளைத்தான் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கு.....அவ செத்துப் போனதாகவேஎன்னால நினைக்க முடியலே....இன்னமும்.....இப்பவும் உயிரோடதான்...என்கூடவே இருக்கிற மாதிரி பிரமை..."
"அப்புறம் உங்க இஷ்டம் அசோக்" என்றாள் நந்தினி.

அம்மா வாசலில் கவலையுடன் காத்திருந்தாள்.
அசோக் உள்ளே நுழைந்ததுமே பதறினாள்.
"திடீர்னு குழந்தைக்கு ஜூரம்டா.....ஒரேயடியா உளற ஆரம்பிச்சுட்டா ... 'அம்மா....அம்மா'னு புலம்பல் வேற...."
"டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போகலையா?" என்றான் பதட்டத்துடன்.
"வந்தார்.....இன்ஜக்ஷன் போட்டுட்டு போயிருக்காரு.... மறுபடி கிளீனிக் மூடற நேரத்துக்கு வரதா சொன்னாரு..."
சிந்துஜாவின் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது, லேசான முனகலில், "அம்மா.."
அசோக் தீர்மானித்து விட்டான்.

நந்தினி அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள் பரவசமாக.
"வாழ்த்துக்கள் அசோக்....நல்ல முடிவை எடுத்திருக்கீங்க...."
"இத்தனை நாள் நீ வாதாடியதும்.....குழந்தை ஏக்கமும் என்னை மனசு மாற வச்சிருச்சு..."
"ஹூம்....நான் ...நீன்னு க்யூவுல நிப்பாங்க....யார் அந்த அதிர்ஷ்டசாலி....அசோக்?"
"நீ.....நீ தான் நந்து....உனக்கு சம்மதம் என்றால்..."
நந்தினி சட்டென்று மவுனமானாள்.
'நான்....நானா...'
மனசுக்குள் தவிப்புடன் அவள் பதிலுக்காகக் காத்திருந்தான் அசோக்.

உமா உயிருடன் இருந்தபோதே நந்தினி பழக்கம். மெல்ல மெல்ல தன் குணங்களால் அவனை ஆகர்ஷித்து மனசுக்குள் இடம்பிடித்து இருந்தாள். ஆனால், வெளியில்தான் அவன் காட்டிக் கொள்ளவில்லை.
உமா இடம் வெறுமையானதும், நந்தினியின் நினைவுகள் முழுமையாகவே பற்றிக் கொண்டன.அவள் என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது. அவள் மறுமணத்திற்கு விடாமல் வற்புறுத்திய போதும்...தன் மீதுள்ள அக்கறைதானே காரணம் என்றே நினைத்தான். அன்பில்லாமலா அக்கறை வரும்?
என்ன சொல்லப் போகிறாள்?
"ப்ளீஸ்.....நாளைக்கு சொல்றேனே...." என்றாள்.
"சரி..." என்றான் அரைமனதாக.

சிந்துஜாவிற்கு உடம்பு சயாகி விட்டிருந்தது.
"அப்பா.....இன்னைக்கு பீச்சுக்கு போகலாமா?"
"இல்லேம்மா...நாளைக்கு போகலாம்"
"போப்பா....எவரி சாட்டர்டே பீச்சுனு.... நீதானே....சொன்னே"
ஆமாம். ஆனால், இன்று நந்தினி வரப்போகிறாள். தன் பதிலைச் சொல்லப் போகிறாளே...அவள் வருகிற நேரத்தில் கிளம்பிப் போய் விட்டால்... என்ன நினைப்பாள்?
"போய் விளையாடு.." என்றான் அழுத்தமாக.
"ஊஹூம்...மாட்டேன்....பீச்சுக்குப் போகலாம், வா" என்று அலற ஆரம்பித்தாள்.
"சொன்னா கேட்கணும்....பிடிவாதம் பிடிக்கக் கூடாது...."
"முடியாது.....பீச்சுக்குப் போகணும்"
"உள்ளே போ.....பாட்டிகூட விளையாடு"
"பீச்...."
"சனியனே.....எதுக்கும் ஒரு நேரம்....காலம் கிடையாதா?"
குழந்தை முதல் முறையாக அறை வாங்கிய அதிர்ச்சியில் மிரண்டு....அவனை முறைத்துப் பார்த்தது. மெல்லப் பின்வாங்கி சமையலறைக்குள் ஓடிப் போனது.

அசோக் டென்ஷனாகி நந்தினியின் வரவுக்காகக் காத்திருந்தான். உள்ளே பாட்டியின் அணைப்பில் குழந்தையின் விசும்பல் கேட்டது. நந்தினி......வரவேயில்லை.
மறுநாள்-ஒரு கடிதம் வந்தது .நந்தினியிடமிருந்துதான்.
'மன்னிக்கவும். வீடு வரை வந்து ....சொல்லாமல்....கொள்ளாமல் திரும்பிப் போனதற்கு. எந்தக் குழந்தைக்காக...மறுமணத்தை வற்புறுத்தினேனோ....அந்தக் குழந்தையின் சந்தோஷம் பறித்து. ...எனக்கு பூவிரிப்பா? சாரி...எனக்கு இதில் விருப்பமில்லை. நீங்கள் வேறு பெண் தேடலாம். மறுபடி சந்திக்க முயற்சிக்க வேண்டாம்.'

May 12, 2011

ரசவாதம்

தன்யா அப்படிச் சொல்வாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

"ஆர் யூ ஃப்ரி நௌ..." என்றாள் இண்டர்காமில்.

"ம்..."

"ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்....அங்கே வரேன்...."

நேரே என் சீட்டுக்கு வந்தாள். புன்முறுவலித்தாள்.

"வீட்டுக்கு வந்திருந்தேன். சாரு சொன்னாளா..."

தலையசைத்தேன். எதிரில் அமர்ந்தாள்.

"படிப்பு எல்லாம் எப்படி இருக்கு."

"ப்ச்.."

"ஏதோ பெயிண்டிங் பண்றேன்....முடிஞ்சப்புறம் காண்பிக்கறேன்னீங்களே, முடிஞ்சுடுச்சா..."

"ஊஹூம்...."

என் குரலில் அலுப்பு. பதில்களில் வெறுமை. முக இறுக்கம். எதுவோ அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

"சங்கர்....உங்ககிட்டே மனசு விட்டுப் பேசணும்னு வந்திருக்கேன். என்னோட பர்சனல் விஷயம்" என்றாள் கண்களில்
கெஞ்சலுடன்.

கொஞ்சம் நிமிர்ந்தேன்.

"என்னது" என்றேன்.

"வந்து....எப்படி சொல்றது...ஓக்கே...நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்....அதனாலதான் தைரியமா பேசறேன்.....எனக்கு....எனக்கு...."

ஆர்வமாய் அவளைக் கவனித்தேன்.

போகிற இடமெல்லாம் புத்துணர்ச்சி பரப்பும் உற்சாகப் பந்து அவள். எப்போதும் புன்சிரிப்பும், 'ஏதாவது உதவி தேவையா'
என்ற உதவிக் கரமும் அவளை நேசத்துக்கு உரியவளாகச் செய்திருந்தன. மற்றவர்களின் ஆர்வம் உணர்ந்து பேசுகிற தன்மை அவளுக்கே உரியது.

அவளுக்குள்ளும் ரகசியமா....அதுவும் என்னிடம் பகிரும் விதமாய்...என்னவாக இருக்கும்?

"சங்கர்...இதை நான் சொல்லலேன்னா ஏதோ என்னைக் கண்டே பயப்படறேன்னு தோணிரும்...ஐயாம் நாட் எ ஹிபோகிரைட்..
யெஸ்....உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...ஐ அட்மிட் இட்..." என்றாள் பட்டென்று.

பார்வை விலகாமல் ....கண் சிமிட்டாமல் என்னைப் பார்த்தாள். முகத்தின் குழந்தைத்தனம் மாறவில்லை.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இயக்கங்கள் அற்றவன் போல அமர்ந்திருந்தேன்.

"ஆனா.....இப்ப கொஞ்ச நாளா....உங்களை பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு...சங்கர்.....என் மனசுல துடிப்புள்ள ஒரு உருவம்தான் சங்கரா நிக்கிது...என் கண்ணெதிரில் இருக்கிற நிஜ மனுஷன்....எதோ பிரமை பிடிச்சாப்பல...மனசுக்குள்ளே பேசி....எங்கேயோ வெறிச்சு...நோ....திஸ் ஈஸ் நாட் மை சங்கர்...ஹி இஸ் ஸம்திங் எக்ஸலெண்ட்...."

பேசிக்கொண்டே போனாள்.

என்னுள் ஏதோ உடைந்தது. என்னவென்று சொல்வேன். எனக்குள் உதயமாகும் புதுப்புது துடிப்புகள் எல்லாம் உணர்வாரும், தூண்டுவாரும் இன்றி ஜீவனற்றுப் போகிற அவலம். எனக்கும் என்னை ரசிக்கிற மனிதர்கள் தேவை என்பதை எப்படிச் சொல்வேன்?

அழலாம் போலிருந்தது. என் மனசு பார்வையில் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை கைகளில் உருட்டியபடி வேடிக்கை பார்த்தேன்.

"என்னால நம்பவே முடியலே சங்கர்...எவ்வளவு ஆக்டிவா இருக்கிறவரு நீங்க...இது ஏதோ டெம்பரரி ஸெட் பேக்...ஜஸ்ட் ஏதோ ஒரு மயக்கம்...நிச்சயமா உங்களால இதிலேர்ந்து விடுபட முடியும். என்னால அந்த பெயிண்டிங்கை மறக்கவே முடியாது சங்கர்...அந்த குட்டிப் பையன் வீட்டு வாசல்ல அவன் அம்மாவுக்காக காத்திருக்கிறது...நீங்க எனக்கு வொரி ஃபர்ஸ்ட் காண்பிச்ச ஓவியம்... ஞாபகமிருக்கா..." என்றாள் முகமெல்லாம் பரவசமாய்.

எனக்கும் அது தொற்றிக் கொள்ள பழைய நினைவுகளில் இனிமையாய் அமிழ்ந்தேன்.

"அந்த சங்கரை மறுபடி நான் பார்க்கணும்...எனக்கு ஆசையா இருக்கு!" என்றாள்.

எனக்குள் என்னென்னவோ எண்ணங்கள்.

'இல்லை....என்னால் முடியாது' என்கிற பதில் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழந்தது.

எதிரில் முழுமையாய் .....என்னை மனப்பூர்வமாய் நேசிக்கிற ஒரு ஜீவன் அமர்ந்து....என் ரசனைகளைப் பகிர்ந்து...தூண்டி விட்டு...

'ஏதாவது செய்யணும்' என்கிற வேகம்தான் வந்தது.

மெலிதாகச் சிரித்தேன்...கண்களில் பழைய தன்னம்பிக்கை சுடர்விட.

அவளுக்கும் அது புரிந்தது.

"சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எங்கே போனாலும்...எப்படி இருந்தாலும்...என்னால உங்களை மறக்கவே முடியாது...."

"தேங்க்ஸ்" என்றேன் முனகலாக.

"சாருவை மறுபடி பார்க்கணும்" என்றாள்.

"இந்த ஸண்டே வாயேன்....வேற கமிட்மெண்ட்ஸ் இல்லேன்னா...."

"ம்...ம்..." யோசித்தாள்.

"உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கும். என்னோட பெயிண்டிங்" என்றேன் குதூகலமாய்.

"ஹை.....அப்படின்னா வரேன்."

எழுந்து நின்றாள்.

"இந்த நிமிஷ சங்கர்தான் நிஜம்....இவரைத்தான் நான் அடிக்கடி பார்க்கணும்....சா¢யா..."

போய் விட்டாள்.

வீடு திரும்பும்போது கூட ஊதுபத்தி தொட்ட கைவிரலாய்...மனசுக்குள் மணம்.

சாரு என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

"என்ன...ஆபிஸ் விட்டுருச்சா...உங்களை.." என்றாள்.

"நான் விட்டுட்டேன்..." என்றேன்.

பிஸ்கட், டீ வந்தது. திடீரென்று நினைத்துக் கொண்டவளாய்ச் சொன்னாள்.

"நேத்திக்கு தன்யா வந்திருந்தா..."

"அப்படியா?"

"நான் இதுல சேரட்டுமா... எனக்கும் மாறுதலா இருக்கும்" என்றாள் ஏதோ ஒரு ஃபார்மை நீட்டி.

வாங்கிப் பார்த்தேன். லயன்ஸ் கிளப்.

"சேரேன்..."

சிரித்தாள்.

"இதுல பார்த்தீங்களா...ஒரு கேள்வி..."

'இஸ் யுவர் ஹஸ்பெண்ட் எ லயன்?' என்ற வரியைக் காட்டினாள்.

"என்ன எழுதட்டும்...'யெஸ்'னா....எப்ப பார் கர்....புர்...னு இருக்கீங்களே" என்றாள் விளையாட்டாய்.

எனக்கும் சிரிப்பு வந்தது.

மனசுக்குள் காலையிலிருந்து திமிறிக் கொண்டிருந்த உற்சாகம்....என்னை மாடிக்கு விரட்டிக் கொண்டிருந்தது.

என்னுடைய பெயிண்ட்டிங் ரூம்.

படியேறினேன். பின் தொடர்ந்தாள். இவள் எதற்கு வருகிறாள். புது வழக்கமாய்....

மாடி அறையில் இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.

அரைகுறையாக முடித்திருந்த பெயிண்டிங் ஸ்டாண்டில் பொருந்தப்பட்டு...தயார் நிலையில் .....பிரஷ்....கலர்கள்...

"உங்களுக்காகத்தான்..." என்றாள் திரும்பிப் பார்த்ததும்.

புரிந்தது. இவளிடம் தன்யா பேசியிருக்கிறாள்.

"என்ன பெண் அவள்....நினைக்க நினைக்க மனசுக்குள் நெகிழ்ந்து போனேன்.

'ஐயோ பாவம்....உங்களைப் புரிஞ்சுக்காத மனைவி' என்கிற ரிதியில் பேசியிருந்தால் என் தன்னிரக்கம் அதிகமாகியிருக்கும்.

'அவளும் மனுஷிதானே....நீங்க அவளைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்களா' என்று கேட்டிருந்தால் பதிலுக்கு வாதம் பண்ணியிருப்பேன், சீண்டப்பட்டவனாய்...

ஊஹூம்....எதுவுமில்லை.

என்னை மட்டும் தனியாளாய் அளவிட்டு...எனக்கும் உணர்த்தி...'இதுதான் நீ...இப்படி இரேன்' என்கிற பாவனையில் பேசி...ரசவாதம் நிகழ்த்தி விட்டாள்.

நிச்சயம் இதே போலத்தான் சாருவிடமும் பேசியிருப்பாள்.

மனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது. அப்படியிருந்தாலும் பாசிட்டிவாய் தூண்டுகிற நேசமும் இணைந்து விடாது. இரண்டும் சேர்ந்தவளாய் தன்யா....

என் கை பிரஷ்ஷில் வண்ணங்கள் புது ராகம் இசைக்க ஆரம்பித்தன.

(ராஜம் மாதர்மலரில் பிரசுரமானது)

May 09, 2011

மரக்கிளையில்கூடு கட்டத் துவங்கியதும்
பறவைக்கு
மரக் கிளையில்
சொர்க்கம் தெரிகிறது.
குஞ்சுகளின் அழைப்பொலி
கேட்டு
எத்தனை வேகமாய்
அதன் சிறகடிப்பு..
அதன் அணைப்பில்
அவற்றின் வளர்ச்சி..
வளர்ந்தபின்
ஏதோ ஒரு திசையில்
போய்விடும்
நாளில்
தாய்ப் பறவையும்
நினைப்பதில்லை
வளர்த்த நாட்களை..
வளர்ந்து பறந்ததும்
நினைப்பதில்லை..
அன்னையின் அணைப்பை..
நினைப்பில் நனைந்து
பிரிவில் கசிந்து
உறவில் உருகுது
மனித இனம் மட்டும்

May 07, 2011

ஜ்வாலை

எல்லா மரங்களும்
இறுதியில் 
விறகுகள்தான்..
எல்லா மனிதர்களும்
அதே நெருப்பில்தான்..
இருக்கும் போது
உள்ளிருக்கும்
சுடரின் அளவு
வித்தியாசப்படலாம்..
இல்லாமல் போவதில்லை..
ஜ்வாலை மட்டும்
சிறிதாகவோ
பெரிதாகவோ..
தீயுடனான
தொடர்பற்றுப் போகும்
சாத்தியமற்ற
ஜீவன்களுக்கு
ஒவ்வொரு நாளும்
நிமிடமும்
கனன்று விழ வேண்டாமோ..
சுற்றி நிகழும்
அநீதி கண்டால்..

May 01, 2011

உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துகள்!ನಿಮ್ಮ ಸಾಹಿತ್ಯವು ಕನ್ನಡದಲ್ಲಿ ಲಭ್ಯವಾಗಲೆಂದು, ಕೋರುವ
ನಿಮ್ಮವ,
ಕೃಷ್ಣ
ಬೆಂಗಳೂರು


ஆபீஸில் ஆடிட்வந்த யுவன் "கிருஷ்ணா" என் பதிவுகளை பார்த்துவிட்டு எழுதிய கமெண்ட்இது.


'கன்னடத்திலும் உங்கள் படைப்புகள் வந்தால் நாங்கள் படிக்க இயலுமே '


என் பதிவில் கன்னட வார்த்தைகள் இடம் பெற்று விட்ட சந்தோஷம் எனக்கு..


శ్రీనివాస కవిగారికి నమస్కరించి వ్రాయునది ఏమనగా, మీ కవితాపాండిత్యము తెలుగులో అనువాదించాలని ప్రార్ధన


ఇట్లు, సాంబ శివ రావు


"சாம்பசிவராவ் " தெலுங்கில் எழுதிய கமெண்ட் !


ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 30 ம் தேதி வரை ஒரு நாள் விடாமல் (காலை
7 மணிக்குக் கிளம்பி நள்ளிரவு வீடு திரும்பி) அலுவலகம்.
30 நள்ளிரவு பேலன்ஸ் ஷீட் கையெழுத்தானது!

உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துகள்!