October 29, 2011

லவ்வுன்னா என்னப்பா


இந்தக் கேள்வியை பாபு கேட்டபோது அவன் ஸ்கூல் வாசலில் நின்று கொண்டிருந்தோம். பின்னால் இருந்து குதித்தவனிடம் ஏய் என்று அதட்டிவிட்டு பைக்கின் முன்னால் மாட்டியிருந்த அவன் பையை எடுத்துக் கொடுத்தேன்.

வாங்கிக் கொண்டு ஓடியவன் திரும்பி வந்து கேட்ட கேள்வி..

'லவ்வுன்னா என்னப்பா?'

"எதுக்குடா"

"நீ பதில் சொல்லு முதல்லே"

"லவ்வுன்னா பிரியம்"

"ம்.. சரி ஈவ்னிங் பேசிக்கலாம்.."

மறுபடி ஓடிப் போய் விட்டான்.

எனக்கு அன்று அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. புவனாவுக்கு லஞ்ச் நேரத்தில் ஃபோன் செய்தேன்.

"என்ன உன் பிள்ளை ரொம்ப விவரமாகிட்டு இருக்கான்"

"புதிர் போடாதீங்க. விஷயத்தைச் சொல்லுங்க"

காலையில் நடந்ததைச் சொன்னேன்.

"உங்க லவ் மேட்டர் எல்லாம் எடுத்து விட்டுராதீங்க.. என்னை மாதிரி பொறுமையா கேட்டுக்க மாட்டான்."

அடிப்பாவி. கல்யாணமான புதிதில் எல்லாவற்றையும் மனசு விட்டு பகிரும் எண்ணத்தில் சொன்னதை ஞாபகம் வைத்து போட்டுக் காட்டுகிறாளே..

"இப்ப அவனுக்கு என்ன பதில் சொல்றது.."

"அதெல்லாம் அவன் நினைப்புல இருக்காது.. ஏதோ உளறிட்டு போயிருப்பான்.. நீங்க அவனுக்குப் பதில் சொல்லணும்னு உங்க பழைய ஃபிளாஷ் பேக்கை மனசுல ஓட்டி ஆபீஸ் வேலையை கோட்டை விட்டுராதீங்க"

வைத்து விட்டாள்.

ஃபிளாஷ் பேக்! அம்சவல்லி! எனக்குள்ளும் ஒரு காதல் கதை!

படித்து முடித்ததும் டைப்பிங் சேரச் சொல்லி அப்பா விரட்டிவிட அரைமனதாய் இன்ஸ்டிடியூட் போனபோது பார்த்த ரெட்டைப் பின்னல் தேவதை. வரிக்கு நாலு தப்போடு நான் அடித்தால், ஒரு தப்பும் இல்லாமல் முழுப் பக்கம் அடித்து எல்லோருக்கும் முன்னால் ஸ்பீடை முடித்து 'வெரி குட்' வாங்குவாள்.

pack my box with five dozen liquor jugs என்று அடிப்பதற்குள் விழி பிதுங்கி விடும். அனாயாசமாய் அம்சவல்லி அடிப்பதை மாஸ்டர் வருவதற்குள் ரவுண்டு கட்டி வேடிக்கை பார்ப்போம்.

"ஒரு பொண்ணு அடிக்குது.. வெட்கமா இல்ல உங்களுக்கு" என்று அவர் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்கும்போது அம்சவல்லி மீதே கோபம் வரும். ஏன் இப்படி ஒருத்தி அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறாள்..

அதையும் மீறி என் மனசுக்குள் காதல் அரும்பியதை உணர்ந்தபோது திகைத்துப் போனேன். அம்சவல்லி ஐ லவ் யூ என்று என் ஸ்பீட் பயிற்சி மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. எக்ஸாம் முடிவதற்குள் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று தவித்தபோதுதான் அம்சவல்லி ஒரு வாரமாய் இன்ஸ்டிடியூட்டே வரவில்லை. எப்படி டைப்பிங் எக்ஸாம் போவாள்.. அதுவும் கடைசி நிமிட பயிற்சி இல்லாமல்..

பிறகுதான் தெரிந்தது.. அவளுக்கு அம்மை போட்டிருந்தது.. அதுவும் தலைக்கு தண்ணீர் விட்ட உடனே மீண்டும் அம்மை திருப்பிக் கொள்ள சீரியஸாகி.. இன்ஸ்டிடியூட்டிற்கு அன்று விடுமுறை..அவள் வீட்டிற்கு எல்லோரும் போயிருந்தோம். அம்சவல்லியின் கடைசிப் பயணத்திற்கு.
என் காதலைச் சொல்லவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இதை மணமான முதல் இரவன்றே புவனாவிடம் சொல்லிவிட்டேன். அப்போது எதுவும் பேசவில்லை. பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் காதலைச் சொல்லி கேலி செய்வாள்.

மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் பாபு ஓடி வந்தான்.

"அப்பா.."

"என்னடா"

"யோசிச்சு வச்சிட்டியா.."

"எ..தை.."

"ப்ச்.. லவ்வுன்னா"

புவனாவைப் பரிதாபமாகப் பார்த்தேன். 'அது உங்க பிரச்னை' என்பது போல மையமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பார்வையைத் திருப்பினால்.. எதிரே அப்பாவின் ஃபோட்டோ. என்னுள்ளும் ஒரு ஐடியா!

"பாபு.. தாத்தாவை உனக்கு நினைவிருக்கா?"

"எப்படிப்பா மறக்க முடியும்.. எம்மேல எவ்வளவு பிரியம்.. அவர் மட்டும் இருந்திருந்தா.."

பாபுவின் கண்களில் கற்பனை மின்னியது.

"அதேதான்.. ஒருத்தர் இருந்தாலும் இல்லாட்டாலும்.. அவரைப் பத்தி நினைச்சா.. உள்ளே ஒரு ஜில்லுன்னு ஃபீலிங் வருதே.. அதான் லவ்"

"போப்பா.. என் பர்த் டேக்கு ஒரு டெடி பேர் பொம்மை கொடுத்தாங்களே.. அது மேல லவ்வுனு போட்டிருக்கே.. கரடிக்கும் லவ்வுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டா.. என்னவோ சொல்றே"

வெளியே விளையாடப் போய் விட்டான். நான் தான் கரடி போல புவனா முன் விழித்துக் கொண்டிருந்தேன்.


(எப்பவோ எழுதின கதை.. )



October 26, 2011

கடவுள் இருக்கிறாரா இல்லையா



யார் செய்த புண்ணியமோ இப்போது காவிரியில் வற்றாமல் நீர் ஓடுகிறது. அதுவும் கடந்த இரு வருடங்களாக.
அம்மா மண்டபப் படித்துறையில் தினசரி தீர்த்தமாட வரும் வயோதிகப் பெண்மணிகள் முதல் டூரிஸ்ட் பேருந்துகளில் வந்து இறங்கும் கூட்டம் வரை நீர்ப் பெருக்கைப் பார்த்து உள்ளூர மகிழ்ச்சி ததும்பி, கண்களில் பிரதிபலிப்பதை ரெங்கனும் ரசிக்கிறான்.
வாங்கோ.. பிதுரு காரியம் பண்ணலாம். பேஷா.. ஜலம் நிறைய ஓடறது. காவிரிக்கரையில் தர்ப்பணம் பண்ணா ரொம்பப் புண்ணியம். கங்கையிலும் புனிதமாய காவிரி..
ஆழ்வார் பாசுரம் பாதி சொல்லி வரவேற்பு கொடுப்பான். ஒரு சிலர் - இதில் நம்பிக்கை உடையவர்கள் - அவனை அணுகுவார்கள். அன்றைய தினம் அவனுக்கு வாழ்வின் சொர்க்க வாசல் திறந்து விட்ட மாதிரி.
இன்று கணிசமாய்ப் பணம் சேர்ந்து விட்டது. ரெங்கனும் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஐந்தோ ஐம்பதோ எது கொடுத்தாலும் யத் கிஞ்சித் ஹிரண்யம்..
க்ஷேமமா இருப்பேள்.. ஸதமானம் பவது
அம்புஜமே அவனைச் சந்தேகமாய்ப் பார்த்திருக்கிறாள்.
ஏன்னா.. நிஜமாவே உங்களுக்கு வைதீகம் தெரியுமா
என்னடி இப்படிக் கேட்டுட்டே
இல்லே கேட்கணும்னு தோணித்து..
சரியாகப் படிப்பு வராத பிள்ளைக்கு எவர் பெண் தரப் போகிறார்கள் என்கிற கவலையில் ரெங்கனின் விதவை அம்மா இருந்தபோது ஏழையாகப் பிறந்த காரணத்தால் தாலி கட்டிக் கொண்டவள் அம்புஜம்.
அவனுக்குப் படிப்பு ஏறலே.. ஆனா நல்லவன்டி
எல்லா அம்மாக்களும் சொல்கிற வசனம் என்றூ அப்போது அம்புஜம் நினைத்தாள். ஆனால் ரெங்கன் நல்லவனாகவே இருந்தான்.
உண்மையில் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அனுபவ பாடம். ஒரு சாஸ்திரிகளுடன் கூடப் போன அனுபவம். அது இன்று வரை அவனைக் காப்பாற்றி வருகிறது.
அவன் பேச்சுக்கு ஆகர்ஷண சக்தி உண்டு.
மறுத்து விட்டுப் போனவர்கள் கூட நின்று பேசிவிட்டுத்தான் போவார்கள் சிரிப்புடன்.
*****
அப்படிப்பட்டவனிடம் பிடி கொடுக்காமல் இருந்த முதல் ஆத்மா அந்தப் பெரியவர்தான். சற்று ஆகிருதியான உடம்பு. நரைத்த முடி, தாடி. ரிஷி போலிருந்தார். எப்போது வந்தாரோ.. இவன் பார்த்தபோது அம்மாமண்டபப் படித்துறையில் குளித்து விட்டு படியேறிக் கொண்டிருந்தார்.
பித்ரு காரியம் பண்ண..
ரெங்கனுக்கு பேச்சு அடைத்துப் போனது அவர் பார்த்த பார்வையில்.
உரப்பையில் தர்ப்பை பூணூல் குங்குமம் இன்ன பிற சங்கதிகள் வைத்திருப்பான். பை சட்டென்று கை நழுவிக் கீழே விழுந்தது. குனிந்து எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோது அவர் நகர்ந்து போயிருந்தார்.
அடுத்தடுத்த நாட்களிலும் அவரைப் பார்த்தான். எங்கே போகிறார், எப்போது வருகிறார் .. தெரியவில்லை. அம்மாமண்டபத்திலேயே படுத்திருந்தார், கைப்பையில் மாற்றுடை மட்டும் வைத்திருந்தார். வேறு பொக்கிஷங்கள் அவரிடம் இல்லை.
கிராமத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்திற்கு தர்ப்பணம் செய்து வைத்துக் கொண்டிருந்தபோது பெரியவர் சட்டென்று கீழே சாய்வதைப் பார்த்தான். எழுந்து ஓடிப்போய் அவரைத் தாங்கிக் கொண்டான்.
சோடா வங்கிட்டு வாங்க
முகத்தில் அடித்து வாயில் ஊற்ற கண்விழித்தார். அவன் மடியில் அவர்.
லேசான புன்னகை அவரிடம்.
ஏதாச்சும் சாப்பிடறீங்களா.. டீ.. காப்பி
வேண்டாம்” என்று மறுத்து விட்டு நடந்தார்.
அதன்பிறகு அவன் அவரைப் பார்த்தால் சிரிப்பதும் அவர் அந்தச் சிரிப்பை அங்கீகரிப்பதும் வழக்கமானது.
அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்று பின்னால் தெரிந்தது. மகன் நல்ல வேலையில் இருக்கிறான். மகளுக்குத் திருமணமாகி விட்டது.
நீங்க ஏன் தனியே வந்து சிரமப்படறீங்க
அடக்க இயலாமல் கேட்டு விட்டான்.
அவர் பதில் சொல்லவில்லை.
உங்க மனைவி கூடவா உங்களைத் தேடல
அதற்கும் பதில் இல்லை. எதிரே காவிரி காற்றில் நீர் சலசலக்க ஓடிக் கொண்டிருந்தாள் எவ்வித ஆச்சர்யமும் காட்டாமல்.
****
அன்று காவிரியில் விழுந்த ஒரு கிழவியைத் தீயணைப்புப் படையினர் போராடி மீட்டு வந்தனர். கிழவியின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
எம்புள்ளை விரட்டி விட்டான்யா.. செத்துப் போவோம்னு குதிச்சேன்
பேட்டி கொடுத்தாள் கிழவி. மறுநாள் தினசரியில் புகைப்படத்துடன் செய்தி. தீயணைப்புப்படை மீட்டு வந்ததின் புகைப்படமும் அம்மாமண்டபப் பின்னணியில்.
ரெங்கன் பெரியவரிடம் செய்தித்தாளைக் காட்டினான்.
உங்க போட்டோவும் வந்திருக்கு
பெரியவர் அப்போதுதான் பதறிப் போனார்.
அது நாள் வரை எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தவர்.
எங்கே.. எங்கே
துல்லியமாய் அவர் உருவம். புகைப்படம் எடுத்த கலைஞ்ன் செய்தியை விடவும் பெரியவரின் உருவத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். போட்டோஜெனிக் தோற்றம். பளிச்சென்ற புகைப்படம்.
பெரியவர் பரபரவென்று செய்தித்தாளைக் கிழித்தார். என்னவோ அது ஒன்றுதான் இருப்பதுபோல.
ரெங்கன் எதுவும் சொல்லவில்லை. தம்மைப் பற்றி வெளியே தெரியக்கூடாது என்று அவர் விரும்புவது அவனுக்குப் புலப்பட்டுப் போனது.
மறுநாள் அவனிடம் மூன்று ரூபாயை நீட்டினார்.
ஸாரி.. உங்க பேப்பரை நேத்து நான் கிழிச்சுட்டேன்
பரவாயில்லை.
இந்தாங்க
அதெல்லாம் வேணாம்
அவன் மறுக்கும் போதே கீழே வைத்து விட்டு நகர்ந்து விட்டார்.
*****
நேற்று விழுந்த கிழவியை ஊரிலிருந்து வந்த மகன் அழுது புலம்பி திரும்ப அழைத்துக் கொண்டு போனதாய் பேச்சு வந்தது.
அம்மா மண்டப அரட்டை சங்கம்!
என்னதான் சொல்லுங்க.. மனுசன் என்னதான் முரட்டுத்தனமா நடந்தாலும் பாசம் விட்டுருமா
அப்புறம் ஏன் பெண்டாட்டி பேச்சைக் கேட்டு அவங்களை அடிச்சு விரட்டினான்
அய்யா.. முதல்ல புத்தி கெட்டுப் போச்சு. அப்புறம் நம்மாலதானே அம்மா தற்கொலை செஞ்சுக்கப் போனாங்கன்னு தவிச்சுட்டானே
திரும்பவும் அதே தகறாறூ வராம போவுமா
வராது.. வந்தாலும் இத்தனை வேகம் இருக்காது. அடக்கி வாசிப்பான்
கட்சி கட்டிக் கொண்டு விவாதம். ரெங்கனும் பெரியவரும் பேச்சைக் கவனித்தனர். நடுவில் ரெங்கன் அவரைப் பார்த்தான். 'மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு அம்மாவை விரட்டியவன்' என்றபோது அவர் கண்களில் லேசான கலக்கம்.
அங்கு அம்மா.. இங்கு அப்பாவா..
*****
வெள்ள அபாயம் என்று ஊரே கதிகலங்கிப் போனபோது அம்மாமண்டபம் மணல் மூட்டைகளால் தடுக்கப்பட்டிருந்தது. நீர் குழம்பிப் போய் மூட்டைகளைத் தள்ளிக் கொண்டு ஊருக்குள் வரப் பார்த்தது.
பெரியவர் அப்போதுதான் தடுமாறிப் போனார்.
எங்கே தங்குவது..
ரெங்கன் தயக்கமாய் அவரிடம் போய் நின்றான்.
எங்காத்துக்கு வரேளா
மறுப்பார் என்று நினைத்தான். ஒரு நிமிடம் யோசித்தவர் வந்துவிட்டார். அந்த பத்து நாட்களும் அவனுட்ன் தங்கினார். பேசமாட்டார். சாப்பிடக் கொடுத்தாலும் ஏற்கமாட்டார். தொந்திரவு இல்லாத வகையில் திண்ணையில் (அபூர்வமாய் இப்போதும் திண்ணை இடிபடாமல் இருக்கிற பழங்கால வீடு!) தங்கிக் கொண்டார்.
கோவிலில் தேசாந்திரிகளுக்கான சாப்பாட்டைத்தான் அவர் சாப்பிட்டார் என்று ரெங்கனுக்குத் தெரிய வந்தது.
அம்மா மண்டபம் மறுடி வெள்ள அபாயம் நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பியபோது பெரியவரும் பழைய இடத்திற்குத் திரும்பிவிட்டார்.
கிளம்புவதற்கு முன் அவனிடம் வந்தார்.
ஒரு துண்டுச் சீட்டை நீட்டினார். கூடவே ஐம்பது ரூபாய்ப் பணமும்.
எ.. என்ன
எம்பேரு.. கோத்ரம்.. நட்சத்திரம்.. பின்னால எனக்கும் .. எனக்கும்
முடிக்காமலேயே புரிந்துவிட்டது அவனுக்கு.
'
பத்மநாபன்.. வாதூல கோத்ரம்.. பரணி நட்சத்திரம்'
ரெங்கன் நிமிர்ந்தபோது அவர் தெரு முனைக்குப் போய் விட்டார்.
அந்த மனுஷன் என்ன கிறுக்கா” என்றாள் அம்புஜம்.
ரெங்கன் ரூபாயையும் சீட்டையும் பத்திரமாக வைக்கச் சொன்னபோது.
இல்லே ஞானி” என்றான் அவனுக்கே நம்பிக்கையற்ற குரலில்.
ஏனோ அவரை விட்டுக் கொடுக்க மனமில்லை.
அம்புஜத்திடம் அவன் யூகத்தை முன்பே சொல்லியிருந்தான்.
கடவுள் இருக்காரா.. இல்லியா.. பாவம். இவரை இப்படி அல்லாட் விட்டுட்டாரே என்றாள்
தெரியலே
*****
காரில் வந்திருக்க வேண்டும் அந்தப் பெண்மணியும் நடுத்தர வயது மனிதனும்.
காவிரி நீரைத் தெளித்துக் கொண்டு கரையேறி வந்தவர்களிடம் வழக்கமான வசனத்தைச் சொன்னான் ரெங்கன்.
என்னம்மா.. இன்னும் நீ நம்பறியா.. அவர் உயிரோட இருப்பாருன்னு
பெண்மணியின் உடம்பு நடுங்கியது தெரிந்தது.
காவிரிக்கரையில் பண்ணால் விசேஷமாம்.. பண்ணிரலாமா
விடாப்பிடியாய் நச்சரித்த குரலில் அவன் கேட்கவும் அந்தப் பெண்மணி அழுதாள்.
எவ்வளவு.. அம்பதா,, பேரு பத்ம்நாபன்.. வாதூல கோத்ரம்.. என்ன நட்சத்திரம்.. ஆங்.. பரணி
கடகடவென அவன் பேச ரெங்கனுக்கு ஏனோ கோபம் பீரிட்டுக் கொண்டு வந்தது.
என்னால முடியாது
ஓய்.. நூறா வாங்கிக்குங்கோ.. பணம் தானே உமக்கு வேணும்..
என்னால முடியாதுன்னா முடியாது
பரபரவென விரித்து வைத்திருந்த சாமாங்களை உரப்பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு ரெங்கன் அன்றைய தின வரும்படி ஏதுமற்ற பையுடன் கிளம்பியதைப் பார்த்தனர் அரட்டை சங்கத்தினர் ஆச்சர்யத்துடன்.


(அதீதம் - பிரசுரம்)


http://www.atheetham.com/story/கடவுள்-இருக்கிறாரா-இல்லையா



October 23, 2011

தூது சென்ற தூதுவளை - 2




பரவை நாச்சியார் குரலில் வெகு நேரமாய்க் காத்திருத்தலின் பரபரப்பு தெரிந்தது.
"தயாரா சுவாமி"
"இதோ .. இன்னும் ஒரே நொடியில்.."
அறைக்குள் இருந்த சுந்தரர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு கோணங்களில் தம் அழகைப் பார்த்துக் கொண்டார். வேட்டி மடிப்புகள் சரியாக இருக்கிறதா என்று மறுபடியும் பார்த்தார். வாசனைத் திரவியத்தை மீண்டும் கழுத்தில் தடவிக் கொண்டார்.
"பெண்களைத்தான் அழகுபடுத்திக் கொள்ள தாமதிப்பதாய் குறை கூறுவார்கள். இங்கோ நீங்கள் செய்யும் ஆடம்பரம் பார்த்தால்.."
பரவை நாச்சியாரின் குரலில் உரிமையுடன் கேலி தெரிந்தது.
"என்ன செய்ய பெண்ணே.. இன்னும் ஏதோ ஒரு குறை இருப்பது போல.."
சுந்தரர் மறுபடி கண்ணாடியைப் பார்க்க பரவை நாச்சியார் கூவினார்.
"திருச்சிற்றம்பலம்.. ஈசனே என்னை ஏன் சோதிக்கிறீர்"
சுந்தரர் திரும்பி அவளைப் பார்த்தார்.
"உண்மையைச் சொல் பரவை .. நான் அழகாய் இருக்கிறேனா"
"நான் ஒருத்தி உங்களிடம் சிக்கிக் கொண்டது போதாதா.. இன்னுமொருத்திக்கு ஏற்பாடா.."
"அப்படி இல்லை பரவை.."
"உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் சுவாமி. அந்த கயிலைப் பிரான் ஒரு நாள் ஆடியில் அழகு பார்த்து வியந்து.. வா சுந்தரா.. என்று சொல்லியிருப்பார்.. அப்படி வந்தவர்தானே நீங்கள்.. நிச்சயம் அழகாய்த்தான் இருக்கிறீர்கள்.. குறையே வேண்டாம்.."
"பசிக்கிறது கண்ணே.."
"அடடா.. உம்மோடு இதென்ன கூத்து.. அலங்கரிக்க பல நாழிகை.. பிறகு பசியென்று அடம்.. என்னால் உம்மை சமாளிக்க இயலாது சுவாமி"
"தயை செய் பெண்ணே.. வாடிய வயிறுடன் ஆலயம் வந்தால் பார்ப்பவர் கண்ணுக்கு நன்றாய் இருக்குமா"
"இப்போது என்னவென்று உங்களுக்கு படைப்பது.. சமையல் பாதிதான் ஆனது.. உங்கள் வற்புறுத்தலால் சன்னிதிக்குக் கிளம்பினேன்.. சித்தம் போக்கு சிவம் போக்கானது இன்று"
"கீரை சமைத்திருப்பாயே.. அது மட்டும் கூட போதும் . "
பரவை நாச்சியார் முகம் சற்றே வாடியது. சுந்தரருக்குப் பிரியமான தூதுவளைக் கீரை இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அதுவும் அவருக்கு இருமல் தொந்திரவு ஏற்பட்டு அவதியுற்ற போது எத்தனை விதமாய் வைத்தியம் செய்தாகி விட்டது.. போகிற வருகிறவர் எல்லாம் ஆளுக்கொரு மருந்து சொல்லிப் போனார்கள். எதிலும் குணம் தெரியாமல் திண்டாடி கடைசியில் தூதுவளைக் கீரை சமைத்துக் கொடுத்தால் குணம் தெரியும் என்று ஒருவர் கொண்டு வந்து தந்தார். அவர் யார்.. என்ன என்று விசாரிக்கும் பொறுமை கூட இல்லை. சுந்தரர் குணம் பெற்றால் போதும் .. என்று வாங்கிக் கொண்டார் பரவை. ஓயாமல் இருமிக் கொண்டிருந்த சுந்தரரிடம் நல்ல மாற்றம் தெரிந்தது தொடர்ந்து சாப்பிட்டபோது.
அப்போதிருந்து அவருக்கு அந்தக் கீரை மீது ஒரு ருசி.
அயலாரிடம் கூடச் சொல்லிப் பார்த்தாகி விட்டது. வழக்கமாய் கீரை கொண்டு வரும் பெண்ணிடம் கேட்டாகி விட்டது. எங்கும் கிடைக்கவில்லை. நடுவில் ஒரு நாள் வாடிப் போய்க் கிடைத்ததை அரைமனதாய்ச் சமைத்து வைத்திருந்தாள். அதைக் கூட சுந்தரர் அவ்வளவு ஆசையாய் சாப்பிட்டார். பரவையைக் காதலாய்ப் பார்த்தார். குரல் கணீரென்று ஒலித்தது.
எந்த உணர்வானாலும் உடனே சுந்தரர் மனம் கசிந்து ஆரூரானை அழைக்க மறந்ததில்லை.

பொய்த்தன்மைத்தாய மாயப்
போர்வையை மெய்யென்றெண்ணும்
வித்தகத்தாய வாழ்வு
வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்குவார்க்கு
அத்தன்மைத்தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சினேனே



பசி என்று சொன்னவர் அடுத்த நொடி அதை மறந்தவர் போலக் கிளம்பி விட்டார். உற்சாகமாய் வீதியில் இறங்கி எதிர்ப்பட்டு வணக்கம் சொல்பவர்களுக்கு 'திருச்சிற்றம்பலம்' சொல்லி துள்ளல் நடையுடன் செல்ல, பின்னால் வாடிய முகத்துடன் பரவை வந்தார்.
'ஈசா.. எனக்கிரங்க மாட்டீரா.. கேவலம் ஒரு கீரைக்கு நான் இத்தனை அல்லல் படுவதா'
"அம்மா.. "
பிஞ்சுக் குரல் அருகில் கேட்டது. யாரது..
எதிரே இடுப்பில் அழகாய்க் கட்டிய துண்டுடன் கை உயர்த்தி அந்தச் சிறுவன். நீட்டிய கரங்களில் பசுமை மாறாமல் புத்தம்புது தூதுவளைக் கீரைக் கட்டு.
"என்னப்பா.."
"பிடியுங்கள் அம்மா. என் கை வலிக்குது.." கொஞ்சியது மழலை.
வாங்கிக் கொண்டாள். ஈசனே என் குரல் கேட்டு விட்டதா உமக்கு. கண்ணீர் ஒரு நொடி பார்வையை மறைக்க சுதாரித்து எதிரில் பார்த்தாள். எங்கே அந்தச் சிறுவன்.. வந்த சுவடு அறியாமல் மறைந்து விட்டான்.
"பரவை.. அங்கே என்ன செய்கிறாய்.." சுந்தரரின் குரல் கேட்டது தொலைவில்.
"இதோ வந்து விட்டேன் சுவாமி"
தன் வீட்டு வழியே செல்கிற பெண்ணிடம் கீரைக்கட்டைக் கொடுத்து அனுப்பினாள். வீட்டை விட்டுக் கிளம்பும் போது இருந்த வருத்தம் பரவையிடம் மறைந்து போக தானும் சுந்தரரின் உற்சாகத்தில் பங்கேற்றவளாய் கோவிலுக்கு உள்ளே போனாள்.
அன்று மட்டும் இல்லை. தொடர்ந்து யாரோ ஒருவர் பரவையிடம் தினமும் தூதுவளையைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
"கொஞ்சம் இருங்கள்.. எதுவும் வாங்காமல் போகிறீர்களே.."
"இது நான் கொண்டு வரவில்லையம்மா. உங்களிடம் கொடுக்கச் சொல்லி யாரோ தருகிறார்கள்.. அவரைக் கேட்டால் இன்னொருவரைச் சொல்கிறார். "
இது என்ன விளையாட்டு.. அலகிலா விளையாட்டுடையானின் திருவிளையாடலா.
அதிர்ஷ்டவசமாய் ஒரு நாள் கீரை கொடுத்தவர் சிக்கிக் கொண்டார்.
"திருச்சிற்றம்பலம்.. என்ன இது.. விளையாட்டு.."
அவள் எதிரே சோமாசி மாறன். சிவனடியார்களைப் பார்த்தால் நெக்குருகிப் போய் பணிவிடை செய்யும் அருட் தொண்டர். தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடுவதையே வழக்கமாய்க் கொண்டவர். சுந்தரர் மீது மாறாப் பாசம் கொண்டு அவர் தம் நட்பைப் பெற விரும்பி இருக்கிறார். அதற்கான நேரம் வருமென்று காத்திருந்தாராம். இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தூதுவளைக் கீரை கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
"என்ன யோசனை.. பரவை"
சுந்தரருக்கே அவள் முகக் குழப்பம் புரிந்து விட்டது.
"இப்போதெல்லாம் தினசரி கீரை வருகிறது.. கவனித்தீர்களா "
"அடடா.. என் மீது பிரியம் காட்டுகிற அந்த மகான் யார் "
வாசல் நடையில் இருந்து நிழலாய் ஒரு உருவம் உள்ளே ஓடி வந்தது. 'திருச்சிற்றம்பலம்..'
'அடியேன்.. அடியேன்'
"யாரது.. எழுந்திருங்கள்.."
சுந்தரர் கைலாகு கொடுத்து எழுப்பிப் பார்த்தார்.
"அடியேன் மாறன்.. "
"சோமாசிமாறனா.. தவறாமல் சோம யாகம் செய்து எம்பிரானுக்குப் பிரியமான சோமாசிமாறனா"
தம்பிரான் தோழர் சுந்தரர் கண்களில் ஆச்சர்யம்.
"தங்கள் பிரியத்துக்கு ஏங்கித் தவிக்கும் அடியவன் மாறன்.. காணாமலே நெஞ்சில் நேசம் வளர்த்து, இன்று கண்டதால் புத்துயிர் பெற்றேன்.. "
"என்ன பாக்கியம் எனக்கு.. தங்கள் நட்பு கிட்டியது.." சுந்தரர் 'அடியார்க்கும் அடியேன்' என்னும் தொனியில் முகமெல்லாம் மலர்ச்சியாய்க் கூறியதைக் கேட்ட மாறன் மெய் சிலிர்த்துப் போனார்.
"சிவ..சிவ"
"நண்பரே.. என்னால் ஆகக் கூடியது ஏதேனும் உண்டா.. சொல்லும்.. அவனருளால் கூட்டித் தருகிறேன்.."
சட்டென்று வாய் மொட்டு மலர்ந்து விட்டது!
"அடியேன் செய்யும் யாகத்திற்கு ஈசனே வந்து அவிர்ப்பாகம் பெற்றுப் போக வேண்டும்.. தாங்கள்தான் அருள் கூட்ட வேண்டும்"
ஆஹா. மாறனிடம் வசமாய் சிக்கிக் கொண்டேனே.. சுந்தரர் மனம் விட்டு சிரித்தார்.
"அப்படியே ஆகட்டும்.. உங்கள் யாகத்திற்கு அந்த கைலாய நாதனே வருவார்.. செல்லும். ஏற்பாடுகளைச் செய்யும்"
ஊரெல்லாம் செய்தி பரவி விட்டது. 'சோமாசிமாறனார் நடத்தும் யாகத்திற்கு ஈசன் வருகிறாராம். சுந்தரர் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.'
திருவம்பர் திருமாகாளம் விழாக் கோலம் பூண்டு விட்டது. எல்லா ஊரிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என பெருங்கூட்டம். யாகம் விமரிசையாக நடந்து பூர்ண ஆகுதி நேரம்.
யாகசாலை வாசலில் திடீரென ஒரு பரபரப்பு.
"ஓடுங்கள்.. இடம் அசுத்தமாகி விட்டது.. ஓடுங்கள்"
கூக்குரல் எழுந்தது. வேதியர்கள் வெளியே ஓடினார்கள்.
"என்ன குழப்பம்.."
சோமாசி மாறனார், மனைவி சுசீலா அம்மையாரைப் பார்க்க அவர் சொன்னார்.
"வாசலில் இறந்த கன்றைச் சுமந்து நாய்களுடன் ஒருவர் வந்திருக்கிறார்.. அவருடன் அவர் மனைவி, இரு பிள்ளைகளும்.. மனைவி தலையில் மதுக் குடம் வேறு.. வேதியர்கள் அஞ்சுகிறார்கள்.. சுத்தம் பறிபோனதாய்"
சோமாசிமாறனார் எழுந்து வெளியே வந்தார். எதிரே சுசீலா சொன்னது போலவே காட்சி.. இறைவா இது என்ன சோதனை.. சுந்தரர் வாக்கு பொய்யானதா.. யாகம் அரைகுறையாய் முடிந்ததா.. என் மனக் குறை தீராதா..
கண்ணீர் பெருகியது மளமளவென்று. தடுமாறி கீழே சரியப் போனார். தாங்கிப் பிடித்தான் வாசலில் வந்த இரு பிள்ளைகளில் சற்றே பருத்த பிள்ளை.
"மாறா.. கவலை வேண்டாம்.. நன்றாகப் பார்.."
அவன் தொட்டதும் நம்பிக்கை துளிர்த்தது நெஞ்சில். கை பட்ட இடம் தும்பிக்கை தெரிந்தது அவர் கண்ணில்.
"விநாயகா.. வேழ முகத்தோனே"
"எதிரே பார்.. அம்மையப்பன் தான் உனக்கருள வந்திருக்கிறார்.."
சுசீலாவுடன் தாள் பணிந்து தொழுதார் சோமாசி மாறனார். தம் கையாலேயே ஈசனுக்கு அவிர்ப்பாகமும் தந்தார்.
போட்டிருந்த வேடம் கலைத்து எம்பிரானும் பார்வதி சமேதரராய்க் காட்சி தந்தார். உடன் பிள்ளையாரும், முருகப் பெருமானும்.
தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவருமாய் ஆனார்.

துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்

(சோமாசி மாற நாயானார் - வைகாசி-ஆயில்யம்)


(கல்கி - வெளியிடும் ஆன்மிக மாதமிரு முறை இதழ் - தீபம் - 20.10.2011 ல் பிரசுரம்)

October 20, 2011

காணாமலே..

அன்பு நண்பர்களே

திடீரென என் வலைத்தளம் காணாமல் போனது..

ஒரு வாரமாய் என் வலைத்தள நண்பர்களை தொல்லைப்படுத்தி விட்டேன் என்ன செய்வது என்று.

இன்று காலை திடீரென வந்திருக்கிறது

இதுவும் நிரந்தரமா புரியவில்லை..

இப்படி காணாமல் போனால் என்ன செய்வது என்று சிம்பிளாய் ஒரு ஐடியா

சொல்லுங்க..


ரிஷபன்

October 13, 2011

பலம்












வாழ்ந்ததின்


தடயங்கள்


அனைத்தையும்


அழித்துப் போனது


கால வெள்ளம் ..


மீண்டும் துளிர்த்தது


உனக்கும் எனக்குமான


காதல்..


வானமே


நம் கூரையாய் ..


நட்சத்திர தோழமை


தரும்


ஆதரவின் பலத்தில் !








October 05, 2011

தூது சென்ற தூதுவளை





வியர்த்திருந்தது அந்த மனிதருக்கு.. அங்க வஸ்திரத்தால் விசிறிக் கொண்டு எதையோ தொலைத்ததைத் தேடி வருபவரைப் போலத் தெரிந்தார்.

"ஸ்வாமி.."

முதலில் கவனிக்கவில்லை. மறுமுறை சற்றே அழுத்திக் கூப்பிட்டதும் நின்றார். அவர் எதிரில் வயதான அந்தணர்.

"என்ன"

"தேவரீர் அரண்மனைக் கைங்கர்யம் தானே.. ராஜா யமுனைத் துறைவரிடம் தானே"

"ஆமாம்.. அதற்கென்னவாம்"

"தங்களுக்கு சித்தம் என்றால் அடியேன் ஏதும் செய்யக்கூடும்.."

"உம்மால் ஆகாது.. நகரும்"

"அப்படிச் சொல்லக் கூடாது.. கிருபை பண்ணும்"

"என்ன இது.. உங்களோடு தொந்திரவாப் போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்காமல்..ஸ்ஸ்.. ஸ்ரீமன் நாராயணா"

தடுத்தவர் சிரித்தார்.

"என்ன கீரை வேணும் ஸ்வாமி"

"தூதுவளை.. என்ன தரப் போறீரா"

"கிலேசம் விட்டு திருமாளிகைக்குப் போங்கோ.. பின்னாலேயே எடுத்துண்டு வரேன்.."

சொன்னபடியே கொண்டு வந்து விட்டார். ஹப்பா.. என்ன பச்சைப் பசேலென்று.. வாசம் வீசியது.

பரிசாரக ஸ்வாமி (சமையல்காரர்) கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.

"இனிமேல் இந்தக் கீரைக்காக தேவரீர் அலைய வேண்டாம். அடியேனே தினமும் கொண்டு வரேன்.."

அதே போல கொண்டு வந்தார். பணம் கொடுக்க வந்தபோது வாங்க மறுத்துவிட்டார்.

"வேறெதுவும் வேண்டாம். "

ஆறு மாதங்கள். தொடர்ந்து சலிக்காமல் தூதுவளைக் கீரையுடன் அந்த வயோதிக ஸ்வாமி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

"ஸ்வாமி.. ராஜா எதுவும் தெரியப்படுத்தினாரா"

பரிசாரகர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"ரசித்து சாப்பிட்டார்.."

"ஓ.."

மறுநாள் தூதுவளை வரவில்லை. எங்காவது வெளியே சென்றிருக்கலாம். நாளை வந்து விடும். ஊஹூம். நாட்கள் ஓடின. கீரை மட்டும் வரவே இல்லை. அவர் தோட்டம் எங்கே இருக்கிறதோ.. அதைக் கூட விசாரித்து வைத்துக் கொள்ளவில்லை. அதைவிடவும் சங்கடமானது ராஜாவே கேட்டது.

"இன்னிக்கும் கீரை பண்ணலியா"

குரலில் தெரிந்த சலிப்பு. அதுவும் அவருக்கு மிகவும் இஷ்டமான தூதுவளை இல்லாமல் சாப்பாடா.

"க்ஷமிக்கணும். கிடைக்கல.."

"அதெப்படி.. நாள் தவறாம பண்ணின்டு இருந்தேளே"

வேறு வழியில்லை. உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

"ஒரு பெரியவர்.. ரொம்ப வயசானவர்.. அவரா ப்ரீதியோட கொண்டு வந்து இத்தனை நாளும் தந்தார்.. இப்ப என்னமோ தெரியல.. காணோம்."

"அப்படியா"

ராஜா யமுனைத்துறைவரின் கண்களில் ஆச்சர்யம்.

"ஆமாம். அவர் கூட அடிக்கடி விசாரிப்பார்.. ராஜா எதுவும் சொன்னாரான்னு"

"ஓ.. அப்படின்னா அவரை நான் பார்க்கணுமே"

அவ்வளவுதான். இனி அது அரச கட்டளை. யமுனைத் துறைவர் ஒரு தடவை சொன்னால் சொன்னதுதான். ஏகசந்தாக்ரஹி.

பரிசாரகர் அவசரம் அவசரமாய் உணவை அள்ளிப் போட்டுக் கொண்டு அப்போதே கிளம்பி விட்டார். கீரை கொண்டு வரும் பெரியவர் இல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக் கூடாது..

வீதி வீதியாய்த் தேடி கொண்டு அலையும் போதே ராஜா யமுனாச்சார்யார் என்கிற ஆளவந்தார் பற்றிய நினைப்பேதான்.

நாத முனிகளின் திருப்பேரன். ஈஸ்வரமுனிகளின் திருக்குமாரர். ஷேத்திராடனம் போனபோது யமுனை நதிக்கரையில் அவதரித்ததால் 'யமுனைத் துறைவன்' (யாமுனாச்சார்யார்) என்று திரு நாமம்.

நாதமுனிகளால் தான் நாலாயிரத் திவ்யப்ரபந்தம் புத்துயிர் பெற்றது.
பேரன் யமுனைத் துறைவன் சின்ன வயசிலேயே பயங்கர சூட்டிகை. ஆச்சார்யன் சந்தை (வேதம் பாடம் சொல்லித் தருதல், ஒரே பகுதியை நாட்கணக்கில் உருப் போடுதல்) சொல்லித் தரும்போது, முதல் நாள் சொல்லித் தந்ததை மறு நாள் திருப்பி உருப் போடச் சொன்னால் செய்யாமல் விளையாடப் போய் விடுவான் யமுனாச்சார்யன்.

அழைத்து விசாரித்தால் 'அதையே எத்தனை முறை சொல்வது' என்று அலுத்துக் கொள்வானாம். ஒரு முறை கேட்டாலே அப்படியே மனப்பாடமாகிவிடும் அவனுக்கு.

அவனது குரு மஹா பாஷ்ய பட்டர். அப்போது சோழ ராஜாவின் அரசவைக்கு ஆக்கியாழ்வான் என்கிற பண்டிதர் வாதப் போர் செய்ய வருகிறார்.

அந்த நாட்களில் இது சகஜம். பெரும் பண்டிதர்கள் தங்கள் புலமையை பறைசாற்ற இப்படி தேசம் தேசமாய்ப் போவார்கள். அரசர்களின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. 'எம்மோடு வாதம் செய்ய எவர் உண்டு இங்கே' என்று ஆக்கியாழவான் சவால் விட சோழ அரசர் தமது நாட்டில் இருக்கும் பண்டிதர்களுக்கு அதை எதிர் கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

தனது ஆசார்யன் இல்லாத நேரம். அரச சபையில் இருந்து வந்தவர்களிடம் தானே வருவதாக யமுனாச்சார்யர் சொல்லி பல்லக்கில் ஏறிக் கொள்கிறார்.

வரும் சிறுவனைப் பார்த்து சோழ ராஜா கேலியாகச் சிரிக்க, ராணிக்கோ ஆக்கியாழ்வானின் கர்வத்தின் மேல் கோபம்.

"நிச்சயம் இந்தச் சிறுவன் தான் ஜெயிப்பான்" என்றாள் ராணி

"அப்படி அவன் ஜெயித்து ஆக்கியாழவான் தோற்றால் பகுதி ராஜ்யம் தருகிறேன்" என்றார் ராஜா சவாலை ஏற்று.

அன்று சபையில் பெருங்கூட்டம். நம் யமுனாச்சர்யன் ஆக்கியாழ்வனுடன் போட்டியாமே.

ஆக்கியாழ்வான் முகத்தில் ஏளனம். 'அடே பொடியா'

"அரசே.. வாதத்தைத் துவங்கலாமா" என்றான் யமுனாச்சார்யன்.

"உன் குரு வரவில்லையா" இது ஆக்கியாழ்வானின் கர்ஜனைக் குரல்.

"உம்மோடு போட்டி போட அடியேனே போதும்."

"ஹா.. ஹா.. உன் பெயர் என்ன"

"அடியேன் யமுனைத் துறைவன்"

"பாவம் நீ,, உனக்கு சிரமம் தர விரும்பவில்லை.. வாதத்தை சீக்கிரமாய் முடித்துக் கொள்ளலாம்.. நீ உண்டு என்று சொல்வதை நான் இல்லையென்று சொல்கிறேன்.. அதேபோல நான் உண்டு என்று சொல்வதை நீ இல்லையென்று நிரூபி.. "

"அப்படியே ஆகட்டும்.. இதோ எனது வாதம்.. உம் தாயார் மலடி இல்லை.. அரசர் சார்வபௌமன் புண்ணியம் செய்தவர்.. ராணி பத்தினி.. எங்கே இல்லையென்று நிரூபியும்"

ஆக்கியாழவான் ஆடிப் போனார். சிறுவன் என்று நினைத்தது தவறாகிப் போய் விட்டது. எப்படிச் சொல்லி இல்லையென்று நிரூபிப்பது..
"உன்னால் முடியுமா"

"நீர் தோல்வியை ஒப்புக் கொள்கிறீரா"

"ம்.. எங்கே நீ சொல்.."

"தர்ம சாத்திரங்களின் படி ஒரு பிள்ளை பெற்றவள் மலடிக்கே சமம்.. அரசரோ தனிப்பட்டு புண்ணியவானாய் இருந்தாலும் குடிமக்களின் பாவம் அவரையே சேர்வதால் புண்ணியவான் இல்லை.. ராணி கன்னிகாதானத்தின் போது இந்திரன் முதலான தேவர்களுக்கு அளிக்கப்பட்டு பிறகே ராஜாவின் மனைவி ஆகிறாள்.. மேலும் அரசனே இந்திரன், அக்னி முதலான தேவர்களின் அம்சம்.. ஆக அவளும் பத்தினி என்று கொள்ள முடியாது.. இது தர்க்க ரீதியான வாதத்திற்காக அடியேன் சொல்வது”

"ஆஹா.. ஆஹா “

சபையில் அனைவரும் சிறுவனின் வாதத் திறமையை மெச்சினார்கள்.

ராணி எழுந்து வந்து சிறுவனைக் கட்டிக் கொண்டாள்.

“எம்மை ஆளவந்தீரோ”

அன்று முதல் யமுனாச்சார்யன் 'ஆளவந்தாராகவும்” ஆனார்.
சோழ ராஜா தம் வாக்கின் படியே ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்து அரசராக்கி விட்டார்.

இவ்வளவும் மனதில் ஓடிக் கொண்டிருக்க பரிச்சாரக ஸ்வாமி வீதிகளில் கீரை கொண்டு வந்த பெரியவரைத் தேடி அலைந்தார்.

“அதோ.. அதோ''

வஸ்திரம் கீழே விழுந்ததைக் கூட கவனிக்காமல் ஓடினார்.

“எங்கே ஸ்வாமி உங்களை ரொம்ப நாளாக் காணோம்.. ராஜா வேற கேட்டுட்டார்.. அவசியம் என்னோட வரணும்.. கையோட அழைச்சுண்டு வரலைன்னா ராஜா கோபிச்சுப்பார்”

பெரியவர் கண்களில் ஆனந்த பாஷ்பம். ஆஹா.. வேளை வந்தாச்சு.

“போலாம்”

ஆளவந்தார் இவரைப் பார்த்ததும் கேட்டார்.

“நீர்தானா.. கீரை கொண்டு வந்தது”

“ஆமாம்..”

“உமக்கு என்ன வேணும்.. ப்ரியத்தைச் சொல்லும்.”

“உம்மோடு கொஞ்சம் பேசணும்.. தனியே”

குறிப்பறிந்து மற்றவர்கள் விலகிப் போக ஆளவந்தார் கேட்டார்.

“என்ன சொல்லும்”

“அடியேன் தங்கள் தாத்தாவோட சிஷ்யன்.. மணக்கால் நம்பின்னு அழைப்பா.. ராமமிஸ்ரர்னு பேரு.. உங்க பாட்டனார் சொத்து ஒண்ணு அடியேன்ட்ட இருக்கு.. அதை உங்க கிட்ட சேர்க்கணும்”

“ஓ.. அதுக்கென்ன.. வாங்கிண்டா போச்சு”

“என்னோட தனியா வரணும்..”

ஆளவந்தார் அவரைப் பின் தொடர்ந்து போனார்.

இருவருமாய் ஸ்ரீரங்கம் வந்தார்கள். ஆளவந்தாரை அரங்கன் ஸந்நிதிக்கு அழைத்து வந்தார்.

பச்சை மாமலை போல் மேனி
பவழவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறிினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே


சயனித்திருந்த அரங்கனைக் காட்டினார்.

“இதோ.. உம்ம குடும்பச் சொத்து.. அடியேன் இத்தனை நாள் உங்களுக்குக் காட்டிக் கொடுக்கவே காத்திருந்தேன்.. தேவரீரோட பாட்டனார் உங்களுக்காக விட்டுப் போனது”

அரங்கனின் திருமுகத்தில் புன்முறுவல். 'எம்மைப் பார்க்க இத்தனை நாளாச்சோ உமக்கு' என்று கேலியாகக் கேட்பது போல.

ஆளவந்தார் அக்கணமே கண்ணீர் மல்கி அரங்கனின் திருமேனி அழகில் லயித்து அரச போகத்தைத் துறந்தார்.

இவரே உடையவர் என்று அழைக்கப்படும் ஸ்ரீராமனுஜரின் மானசீகக் குருவும் ஆவார்.

'மச்சு அணியும் மதில் அரங்கம் வாழ்வித்தான் வாழியே ' என்று கொண்டாடப்படும் ஆளவந்தார் காலத்தில் தான் திருவரங்கத்தில் வைணவத் தலைமைப் பீடம் அமைந்தது.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டிக் காத்த ஆளவந்தாரை ராஜபோகத்திலிருந்து ஆன்மிகப் பாதையில் திருப்பிக் கொண்டு வந்தது தூதுவளைக் கீரை. பகவானிடம் இருந்து பக்தனுக்கு தூது போன தூதுவளை!



ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதி
ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே
அகிஞ்சானோனான்யகதி: சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே


நான் தர்மத்தை அறிந்தவனல்லன்.
அன்றி தன்னையறிந்தவனுமல்லன்.
உன்னுடைய பாத கமலங்களை சரணடைந்த பக்தனுமல்லன்.
வேறொன்றுமறியாது உன்னைச் சரணடைவதே கதியென்றெண்ணி
உன் பாதங்களில் சரணடைகிறேன்.


-ஆளவந்தார்

(ஆளவந்தார் - ஆனி மாதம் உத்திராட நட்சத்திரம்.
1017 AD - 1137 AD) சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் அவதார ஸ்தலம்.


( கல்கி நிறுவனம் வெளியிடும் ஆன்மீக மாதம் இருமுறை இதழ் - தீபம் முதல் இதழில் பிரசுரம் - அக்டோபர் 5, 2011 )



October 02, 2011

ஞாபகம்




காய்கறி சந்தையில் உள்ளே வரும்போதே பார்வை காமராஜ் எங்கே என்று தேட ஆரம்பித்தது.

வழி நெடுக வெண்டை, அவரை, பாகல், வாழைக்காய், உருளை என்று தினுசு தினுசாய் கூடைகள்.

வாங்க வந்தவர்களின் நெரிசல் வேறு. மேலே இடித்துக் கொள்ளாமல் நகர்ந்து நகர்ந்து காமராஜைக் கண்டு பிடித்தேன்.

வாழையிலைக் கட்டுகளின் நடுவே வாழைக்கறை பட்ட காவி வேட்டியுடன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். கையில் நீட்ட கத்தி.

இலைக்கட்டைப் பிரிக்கும்போதே கையும் சேர்ந்து தரம் பார்த்து விடுகிறது காமராஜுக்கு.

நுனி இலையை ஒரு பக்கம்.. ஏடு இன்னொரு பக்கம்.. டிபன் இலை அடுத்த பக்கம்.. உதவாத சிறு துண்டுகள் மறு பக்கம் என்று சரசரவென்று கத்தியால் நறுக்கித் தள்ளினான்.

“வாங்கண்ணா..”

நடுவே எனக்கும் ஒரு வரவேற்பு. கத்தியால் வெட்டிய மாதிரி.

நின்றேன். அவன் தான் வரச் சொல்லியிருந்தான். நாளைக் காலை கிராமத்துக் கோயிலுக்குப் போகவேண்டும். எங்கள் உபயம். பிரசாதம் தருவதற்கு குட்டி இலைகள் வேண்டும். வருடா வருடம் காமராஜ் அவனிடம் கழித்துக் கட்டிய இலைகளை கொடுத்து விடுவான்.

“அம்மா போய் ரெண்டு வருஷம் ஆச்சா.. “

“ம்”

அம்மா பேச்சை எடுத்தாலே தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொள்கிறது.

“என்கிட்டேதான் வாங்கிட்டு போவாங்க.. அதான் அப்பாவைப் பார்த்து சொல்லி இருந்தேன்.. மொத நாள் வந்து வாங்கிக்க சொல்லி”

இரு கை அகல இலைகளாய்ப் பொறுக்கி எடுத்து, 30 தேறும்.. சுருட்டிக் கட்டிக் கொடுத்தான்.

“எவ்வளவுப்பா”

என்னைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போல பார்த்தான்.

“அம்மாக்கு கொடுக்கறது.. எடுத்துகிட்டு போண்ணா”

நகர யத்தனித்தவனை ஒரு கத்தி வார்த்தை நிறுத்தியது.

“ஒரு நிமிஷம்”

“பங்குனி உத்திரத்திற்கு கோவிலுக்கு பணம் கொடுப்பாங்க அம்மா.. அதோ தெரியுதே அந்த திருமாளிகைல.. “

“ம்.. தெரியும்..”

“வேற யார்கிட்டேயும் தர வேணாம்.. “

அம்மா இருந்த போது கிண்டல் செய்திருக்கிறேன்.

‘உன் புரோகிராம் எல்லாம் காமராஜ் சொல்றான்.. நாளைக்கு சென்னை உன் ரெண்டாவது பிள்ளைட்ட.. அடுத்த வாரம் உன் பெண் வரா ஊர்லேர்ந்து.. உனக்கு நேத்து வயிறு சரியில்ல.. இன்னும் டாக்டர்கிட்ட போகல.. இப்படி உன் சமாச்சாரம் எல்லாம்.. நான் புள்ளையா.. இல்ல அவனான்னு தெரியல..”

கேலியில் ஆரம்பித்து முனகலில் முடிந்தது.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லடா.. அவன் வம்பிழுக்கறான் உன்னை..’

‘கடை ரமேஷும் சொல்றானே.. ‘

அம்மா பேசாமல் இருப்பாள்.

வீட்டை விட்டு கிளம்பினால் அம்மாவின் சாம்ராஜ்யம் பெருசு. வாழைக்காய் கொண்டு வருகிற பரிமளாவுக்கு கல்யாண பட்சணம்.. புடவை.. பிளவுஸ் பிட்.. கடை ரமேஷின் அம்மாவுடன் கவுன்சலிங்.. (வேறெப்படி சொல்ல.. அவர்கள் வீட்டு விவகாரம் எல்லாம் சொல்லி அம்மா அதற்கு தனக்குத் தெரிந்த உபாயங்கள் சொல்ல.. )

எப்படியும் 100 பிரசவங்களுக்கு கூட போயிருப்பாள். யார்.. எந்த வீடு எதுவும் தெரியாது.

‘அம்மா.. வலி எடுத்துருச்சு’ என்று வந்து நின்றாலே போதும்.

டாக்டரிடம் கூட்டிப் போவதில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குக் கொண்டு வந்து.. லேகியம் கிளறி ( அந்த லேகியம் சூப்பர் டேஸ்ட்.. அம்மா எனக்கு .. என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்) பத்திய சமையல் சொல்லி..

‘ரெண்டாவது கூட படிக்கல.. ஆனா டாக்டரா இருக்க.. போலி டாக்டர்னு பிடிச்சுக்க போறாங்க’ எங்கள் கிண்டல் அம்மாவைப் பாதிக்காது.

”அப்பா எப்படி இருக்கார்”

சத்தம் கேட்டுத் திரும்பினால் அப்பாவின் நண்பர் எதிரில் நின்றார்.

“ம்”

“நடமாட்டமே காணோம்”

“ரொம்ப வெய்யிலா இருக்கா.. அதான் “

“ பார்த்துக்கோ.. “

“ம்”

“மனுஷா இருக்கும்போது நாம அலட்சியமா இருந்துடறோம்.. போனபிறகுதான் ஃபீல் பண்றோம்.. அம்மாதான் போயிட்டா.. அப்பாவை அலட்சியமா விட்டுராதே”

காமராஜும் சேர்ந்து கொண்டான்.

“அப்பாவை பத்தி அம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க.. அவரை பார்த்துகிட்டாலே அம்மா ஆசிர்வாதம் உனக்குக் கிடைச்சிரும்ணா..”

தலையாட்டிவிட்டு நடந்தேன்.

வீட்டுக்குள் நுழையும் போது எதிரில் ஹாலில் அம்மா போட்டோ.

‘உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி.. என்னை வச்சிருக்க மனுஷாள நான் சேர்த்திருக்கேனாம்மா..’

அந்தக் கேள்வி பிரும்மாண்டமாய் என் எதிரில் நின்று கேலிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.