October 28, 2009

அந்தர சுந்தரன்

அந்த வினோதக் காட்சியை முதலில் என் மகள் தீபாதான் கவனித்தாள். "அய்யோ.. அப்பா கீழே இறங்கு"
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைகளில் சற்றே நிதானம். அதாவது காலை கண் விழிப்பில் தொடங்கி. எட்டு மணி கண் விழித்தபோது. சூரிய வெளிச்சம் கட்டிலுக்கே வந்து விட்டது. இன்னமும் தொக்கி நிற்கிற சோம்பல். "அப்புறம் மத்தியானம் தூங்கமுடியாது. எழுந்துக்கிறீங்களா"
புவனாவின் கிண்டல் வேறு.
'இனியும் படுப்பதில்லை, எழு, தம்பி ' என்று எழுந்தேன். நின்றேன். இந்த நிமிடம்தான் தீபாவின் அலறல்.
"அய்யோ.. அப்பா.. கீழே இறங்கு"
"என்னடி உளர்றே"
"கீழே வாப்பா"
கட்டிலை விட்டு எழுந்து நிற்பவனிடம் என்ன பேச்சு இது. நடந்து அவள் அருகில் போனேன்.
"என்ன.. தீபு"
"அம்மா"
தீபா அலறிக் கொண்டு சமையலறைக்குள் ஓடியது. புவனாவும் அவளுமாக அடுத்த நிமிடம் வெளியே வந்தார்கள்.
"என்னங்க.. உங்களுக்கு என்ன ஆச்சு"
எனக்குத் தலை சுற்றியது. ஞாயிறும் அதுவுமாய் அரைத் தூக்கத்தில் எழுந்த பிரமையில் இருப்பவனிடம் மேலும் என்ன சோதனை?
"கீழே பாருங்க"
புவனாதான் சொன்னது. கைலி கட்ட மறந்து விட்டேனா. அவசரமாய்க் குனிந்தால்.. கைலி.
"நல்லாக் குனிஞ்சு பாருங்க.. கைலியைத் தூக்குங்க"
கைலியைத் தூக்குவதா. புரியாமல் லேசாக உயர்த்தி கீழே பார்த்தேன். ஹா! மூச்சு ஒரு கணம் நின்று விட்டது. பூமிக்கு - அதாவது தரையிலிருந்து அரை அடி உயரத்தில் நின்று கொண்டிருந்தேன்.
அவ்வளவுதான். இதயம் வேகமாய்ப் படபடக்க ஹாஜ்மூலா தாத்தா போலக் குதித்துக் கீழே இறங்க முயற்சித்தேன். ம்ஹூம். என்ன குதித்தாலும் அதே அரை அடி உயரத்தில்தான்.
"புவனா, என்னடி இது"
"என்னங்க எப்படியாவது கீழே வாங்க"
"எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா? வர முடியலைடி"
லேசாய்க் கண்ணீர் தளும்பி விட்டது.
தீபாவும் புவனாவும் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு பத்துப் பதினைந்து கட்டளைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, என்னால் முடிந்த அளவு - ஊஹூம், முடியவே முடியாத அளவு - முயற்சித்து அந்தரத்திலேயே நின்றேன்.
"ஏய், வயித்தைக் கலக்குது"
பரிதாபமாய்ப் புலம்பினேன்.
"நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க?"
"எல்லாம் நீ சமைச்சுப் போட்டதுதான்"
"என்மேல எரிஞ்சு விழத்தான் தெரியும்"
"அய்யோ அம்மா. இப்பவும் ஏன் அப்பா கூட சண்டை போடறே. பாவம் அப்பா. எப்படியாவது கீழே இறக்கி விடு."
புவனா பெருமூச்சு விட்டாள். தீபா அந்தரக் கால்களின் கீழ் தன் கை விரல்களை ஓட விட்டுப் பார்த்தாள். சுலபமாய் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் தடங்கலின்றிச் சஞ்சரித்தன.
"நெஜம்மாவே சப்போர்ட் இல்லாம நிக்கிறீங்க அப்பா"
"போதும், உன் சர்டிபிகேட். நாளைக்கு ஆபீஸ் எப்படி போவீங்க"
மீண்டும் கிலியை கிளப்பினாள்.
"நம்ம டாக்டரைப் பார்ப்போமா" என்றாள் தீனமாக.
"இதுக்கு அவர் என்ன பண்ண முடியும். ஜுரமா, தலைவலியா.. மாத்திரை தந்து குணப்படுத்த?"
"இப்படியே எடக்கு மடக்காப் பேசுங்க. இப்ப என்ன செஞ்சா நீங்க கீழே வருவீங்க?"
"அதே கேள்வியை எத்தனை விதமா நீ கேட்டாலும் எனக்குப் பதில் தெரியலையே"
சிவாஜி படக் காட்சி போலப் புலம்பினேன்.
"டேய்.. சிவா. என்னடா பண்றே"
நாணுவின் குரல் கேட்டது.
"அய்யோ.. நாணு வந்துட்டான். நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு கே.கே. நகர் வரை போகிறதா பிளான்"
பதறி எழுந்து அந்தரத்தில் நின்றவனைப் பிடித்து அமர்த்தினாள்.
"பேசாமப் படுங்க. உடம்பு சரியில்லைன்னு சொல்லிடலாம்"
நாணு உள்ளே வந்து விட்டான்.
"என்ன.. கிளம்பலியா இன்னும்?"
'சொல்லேண்டி.. நீயே' என்பது போல புவனாவைப் பார்த்தேன்.
"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை" என்றாள் தீபா அவசரமாய்.
"என்ன உடம்பு.. ஜொரமா"
நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
"சுடலியே"
"இல்லே. ஸ்டமக் பிராப்ளம்"
"அப்படியா.. நேத்து நல்லாத்தானே இருந்தான்"
"இன்னிக்குக் காலையிலதான்"
நாணு என்னையே சந்தேகமாய் முறைத்துப் பார்த்தான்.
"சரி. அந்தக் கவரைக் கொண்டா. நானே கொண்டு போய்க் கொடுக்கறேன்" சட்டென்று எழுந்து கொள்ள முயன்றவனை தீபா அடக்கிப் படுக்க வைத்தாள். நாணு கவனித்து விட்டான்.
"என்ன.. தீபா"
"ஹி..ஹி.. ஒண்ணுமில்லே. சும்மா"
"எங்கே வச்சிருக்கீங்க" என்றாள் புவனா.
"மேஜை மேல பாரு"
அங்கே இல்லை. 'என் கைப்பையில் பார்' ஊஹூம். 'கிச்சன்ல வச்சேனா' இல்லை. அட. எங்கே போய்த் தொலைந்தது. ?
என்னையும் மீறி டென்ஷனில் எழுந்து அலமாரியின் உச்சியில் இருந்த கவரை எடுத்து விட்டேன்.
"இந்தா" என்று நாணுவிடம் நீட்டினேன்.
அதற்குள் புவனாவும் தீபாவும் கோவில் சன்னிதியில் திரை போடுகிற மாதிரி போர்வையின் இருபுறமும் பிடித்துக் கொண்டு ஓடி வந்து என் முன்புறம் மறைத்தார்கள்.
"என்னடா.. இது?"
"இது ஒரு மாதிரி.. தொத்திக்கிற பிராப்ளமாம். யாரும் கிட்டப் போகக் கூடாதாம்"
டீவி சீரியல் பார்க்கிற ஜோரில் தீபாவுக்குக் கற்பனை பிய்த்துக் கொண்டது. நாணு தலையைப் பிய்த்துக் கொண்டான்.
"எனக்கு ஒண்ணுமே புரியலே"
"எனக்கே புரியலே" என்றேன் அழாத குறையாய்.
திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வெளியேறினான்.
"ஸ்ஸ்.. ஹப்பா.. தப்பிச்சேன்" என்றேன்.
போர்வையை எடுத்தார்கள்.
தீபா மீண்டும் என் கால்களைப் பார்த்தாள்.
"எப்படிப்பா முடிஞ்சுது? கால் வலிக்கலே?"
"கேள்வியைப் பாரு. ஏன் வலிக்கப் போவுது? உங்கப்பா இனிமேல் செருப்பே வாங்கவேண்டாம். பேட்டாக்கு அழற பேட்டா மிச்சம்."
இப்போது என் 'பிரச்னை' எனக்கு ஒரு மாதிரி பழகிப் போய் விட்டது. குறுக்கும் நெடுக்குமாய் நடந்து பார்த்தேன்.
"ஹை. ஜாலியா இருக்கு. இப்படியே உட்கார்ந்தால் என்ன ஆகும்?"
"ஆமா.. பெரிய ஆராய்ச்சி" உட்கார்ந்தேன்.
புவனா கிடக்கிறாள். அபூர்வமாய் வாய்த்த திறனை ஏன் வீண் அடிப்பானேன். அந்தரத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்த கோலம் !
"புவனா.. புவனா"
என் அத்தையின் குரல். கூடவே அப்பாவும். ஊருக்குப் போனவர்கள் திரும்பி விட்டார்களா?
"ஓடுங்க.. கட்டிலுக்கு"
"எதுக்கு? நம்ம அப்பாதானே"
வந்து விட்டார்கள். அப்பா கேஷுவலாய் அறைக்குள் பையை வைக்கப் போக, அத்தை பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தாள்.
"என்ன பஸ்ஸோ. ஓவர்டேக் பண்ணணும்னு அந்தரத்துல பறக்கற மாதிரி ஓட்டறான். உயிரைக் கையில பிடிச்சுண்டு சீட்டுக்கு மேல வித்தைக்காரன் மாதிரி உட்கார்ந்திருந்தோம்."
அத்தை பேசிக் கொண்டே போனாள்.
"அத்தே.. இவரைப் பாருங்களேன்" புவனாதான் கேவியது.
"என்னடி.. என்னவோ போலப் பேசறே"
அப்பாவும் ஹாலுக்கு வந்து விட்டார்.
"அப்பா"
"தாத்தா"
இருவருமாய்ப் புலம்ப அப்பா பிளஸ் அத்தையின் பார்வைகள் என் பக்கம் திரும்பின.
"என்னடா?"
ஜோடி நாயனம் போலக் கத்தினார்கள்.
"தெரியலைப்பா. கார்த்தால எழுந்தா இந்த மாதிரி"
"நம்ம ஃபாமிலில இந்த மாதிரி முன்னால யாருக்காவது வந்திருக்கா?" என்றாள் அத்தை.
"இது என்ன ஆஸ்த்துமா, டி.பி மாதிரி வியாதியா"
"ஏண்டா எதையாவது மந்திரிச்சுப் போட்டதை ரோட்டுல மிதிச்சுட்டியா" "இனிமேல மிதிக்கவே முடியாதுப்பா" என்றேன் பலவீனமாக.
"இருங்கோ.. உங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வரேன்"
புவனா இந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று உள்ளே ஓடி விட்டாள்.
தீபாவுக்குப் பாடப் புத்தகத்தில் மனதே பதியவில்லை. என் மீது ஒரு பார்வை, பாடத்தின் மீது ஒரு பார்வை என்று அல்லாடினாள்.
"திருஷ்டி சுத்திப் போடட்டுமாடா?" என்றாள் அத்தை.
"அய்யோ அத்தை பேசாமல் இரு"
"ஏண்டா.. பாரதத்துல தர்மரோட தேர் அந்தரத்துல நிக்கும்னு படிச்சிருக்கேன். பொய்யே சொல்லாதவராம். அப்புறம் அஸ்வத்தாமன் செத்ததா பொய் சொல்லப் போக தேர் கீழே வந்துரும். அது மாதிரி.."
அப்பா தவறாமல் டீவி மஹாபாரதம் பார்த்தவர். கையிலே 'வியாசரை' வைத்து ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு புராணம் பேசினார்.
"அப்பா.."
சுரீலென்று உறைத்தது. பொய்யே சொல்லாதவர். நேற்றிரவு நடந்தது நினைவில் வந்தது.
"என்னங்க.. என்னை உங்களுக்கு ஏங்க ரொம்பப் பிடிக்குது?"
தீபாவுக்குப் போர்த்தி விட்டு விடிவிளக்கை ஒளிர வைத்த புவனா என்னருகில் நெருங்கிப் படுத்துக் கொண்டாள்.
"யார் சொன்னது?"
"குறும்பு.."
செல்லமாய்க் கன்னத்தில் இடிக்க கடைவாய்ப் பல் ஆடி விட்டு அமர்ந்தது. "அம்மா.. தாயே.. கொஞ்சம் மெதுவா"
"நெஜத்தைச் சொல்லுங்க. எம்மேல உசுருதானே?"
மேலே சரிந்ததும் என் 'உசுரு' ஒரு வினாடி நின்று இயங்கியது.
"சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லே"
"மனசைத் தொட்டுச் சொல்லுங்க"
தொட்டுச் சொன்னேன்.
"பிடிக்கும். அவ்வளவுதான்"
"எப்பவும் விளயாட்டு உங்களுக்கு"
"எனக்கு இப்ப தீபாவைத்தான் ரொம்பப் பிடிக்கிறது." என்றேன்.
"போங்க. ஆனாலும் மோசம்"
"இல்லம்மா. உன்மேல எனக்கு நிறைய விமர்சனம் இருக்கு. நிறைய கேள்விகள்.. பதில்கள். உன்னை உனக்காகவே பிடிக்கணும்னா இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும். நமக்குள்ளே இந்த சச்சரவுகளை மீறிய அழுத்தமான அடி மனசு நேசம் புலப்பட.. புரிஞ்சுக்க"
ஏன் இப்படி டீவி பேட்டியில் குறிப்பிட்ட நடிகர் பேசுகிற தொனியில் பேசினேன் என்று புரியவில்லை. ஆனால் சொன்னபோது எனக்கே நேர்மை என்று தொனிக்கிற பதிலைச் சொன்னேன். புவனா அதைக் கேலியாக எடுத்துக் கொண்டு தனக்கே இயல்பான இன்னொசன்ஸுடன் என் கையைப் பற்றிக் கொண்டு தூங்கிப் போனாள். கடவுளே என்னையும் மீறி மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன். முகமூடியற்று நான் !
அடக் கடவுளே !
பொய் சொன்னால் கீழிறங்கிய காலம் போய் நிஜம் சொன்னதால் மேலே ஏறி விட்டேனா. இப்படியும் நடக்குமா?
"புவனா"
மூளைக்குள் 'கிளிக்' கேட்டது.
சமையலறைக்குள் சஞ்சரித்தேன்.
"என்ன.. இது. ஹால்ல அப்பா, அத்தை இருக்காங்க"
"புவா.. புவிக்குட்டி. என் கண்ணே. என் செல்லமே"
"என்னங்க இது. ச்சே..அசிங்கம்"
"உம்மேல உசுரு. நீதான் இந்த உலகத்துலயே படு அழகு. உலக அழகிப் போட்டி எல்லாம் குப்பை. அவ உன் கால் தூசு பெற மாட்டா. எலிசபெத் டெய்லர்.. ரியாஸ் டெய்லர்.. ஜூஹி சாவ்லா.. எல்லாம் பாவ்லா"
ரிதமிக்காய்ப் பேசப் பேச.. அப்படியே கீழிறங்கித் தரையைத் தொட்டு நின்றேன் !.

October 24, 2009

இமயம் சரிந்தது

இமயம் சரிந்தது இந்த வரியை குறைந்த பட்சம் ஒரு வாரத்தில் ஒரு தடவையாவது எங்கள் ஊரில் பார்க்கலாம். அதாவது சுவரொட்டியில்! அவ்வளவாக பாபுலர் ஆகாத மனிதரின் இறப்பு என்றால் அல்லது கொஞ்சம் அடக்கி வாசிக்கிற பேர்வழிகள் என்றால் வெறும் 'கண்ணீர் அஞ்சலி' தான் சுவரொட்டியில் தலைப்பு.

மற்றபடி சகட்டு மேனிக்கு வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் இமயம் சரியும்! மாசத்தில் 15 தடவை இமயம் சரிந்தால் அதன் கதிதான் என்ன என்கிற பயம் வரும்.

பலான ஆளின் பாட்டி போனபோது 'இமயம் சரிந்தது'. இன்னொருத்தர் அப்பா காலமானதும் அதே இமயம் மறுபடி சரிந்தது. சொல்லப் போனால் நேரு, காந்தி போனால் 'இமயம் சரியலாம்'. இப்படி யார் போனாலும் அதே பாணியில் போஸ்டரா?

இன்னொரு சந்தேகமும். இது எங்கள் பகுதியில் மட்டும்தானா.. அல்லது தமிழகம் முழுவதும் இதே போஸ்டர் கலாச்சாரம்தானா?

அன்னாரின் ஏதோ ஒரு பழைய புகைப்படம் போட்டு செத்தவரின் பெயரை விட இருப்பவரின் பெயரை பெரிதாகப் போட்டு (அவரைக் காக்கா பிடிக்கும் உத்தேசத்துடன்) பஸ்ஸில் போகும்போது அவசரமாய்ப் படித்ததில் யார் செத்தது என்று பெயர்க் குழப்பத்துடன் மீண்டும் மாலை ஊர் திரும்பியதும் போஸ்டரைப் பார்த்து தெளிவு பெறும்வரை டென்ஷன் தான்.

இம்மாதிரி சுவரொட்டிகள் இப்போது அதிகமாகிப் போனதில் சுவரில் இட நெருக்கடி வேறு வந்து விட்டது. நேற்று ஒட்டியதைக் கிழித்துவிட்டு அடுத்த இமயத்தை ஒட்டும்போது முன்னாள் நபரின் உறவுகள் பார்த்து சண்டை வந்து விடக் கூடாதே என்கிற அச்சம் வருகிறது.

காலமானவர் பற்றிய இழப்பு..கவலை இதெல்லாம் விட எவ்வளவு தினுசாய் போஸ்டர் ஒட்டலாம் என்கிற போட்டா போட்டி..

தெருவெல்லாம் இறைந்து கிடக்கிற பூக்கள் கூட மரண வாசனையுடன்!

என் பள்ளி ஆசிரியர் காலமானபோது சுவரொட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். அவருக்கு ஒட்டியது பழைய மாணாக்கர்கள் மற்றும் சக ஆசிரியர்கள். எளிமையாய் மரணம் பற்றிய தகவல் மட்டுமாய் அந்த சுவரொட்டி.

இதைப் போல ஓரிரண்டு விதிவிலக்கானவை தவிர பெரும்பாலான போஸ்டர்கள் பயமுறுத்துகின்றன.

'இருந்தப்ப ஒரு வா(ய்) சோறு போடல.. வக்கத்த பய.. எப்படி காசக் கரியாக்குறான் பாரு' என்று பூம்பல்லக்கில் ஆயிரம் வாலா வெடி வெடித்து போஸ்டர் ஒட்டி பூ இறைத்துக் கொண்டு போனபோது பின்னால் சைக்கிள் தள்ளிக் கொண்டு போனவர் சொன்னது காதில் விழுந்தது.

மரணங்கள் அர்த்தமுள்ளவை. செத்துப் போனவர்களை விட பிணத்தின் பின்னால் போகிறவர்களுக்கும் வேடிக்கை பார்க்கிறவர்களுக்கும் அது சொல்லாமல் சொல்கிற சங்கதிகள் அநேகம்.

மரணம் தொடர்புடைய வேறொரு சம்பவம்..

இறப்பில் செய்யப்படுகிற செலவினங்கள் குறித்து கவலை தெரிவித்து பேசும்போது நண்பர் சொன்னது.. அவர் கேள்விப்பட்ட நிகழ்வு..

இறுதிச் சடங்கை வைதீக முறைப்படி செய்து வைக்க வைத்த டிமாண்ட் கட்டுப்படி ஆகாமல் 'போங்கப்பா..' என்று உதறி விட்டு உறவு பிளஸ் நட்பை வைத்து பிணத்தைத் தூக்கச் சொன்னாராம் வாரிசு.

'கோவிந்தா.. கோவிந்தா' என்று சுடுகாடு போகிறவரை நெருப்புச் சட்டி எடுத்துக் கொண்டு உரக்கக் கத்திக் கொண்டு போனாராம். வச்சுக் கொளுத்திவிட்டு திரும்பியவரிடம் 'என்னப்பா இப்படி பண்ணிட்டே' என்றதற்கு 'செத்தவருக்கு எதுவும் தெரியப் போவதில்லே.. எனக்கும் எதுவும் தெரியாது.. இப்ப என் மனசு பூர்வமா தெரிஞ்ச மந்திரத்தை சொல்லிட்டேன்.. போதாதா?' என்றாராம்.

முன்பு படித்த ஒரு சிறுகதை இன்னமும் பசுமையாய் நினைவில்.. அந்தச் சிறுவனுக்கு தேர்வு.. நன்றாகப் படித்து முன்னுக்கு வருவான் என்று ஆசைப்பட்ட அம்மா காலமாகிவிட்டாள். மாமா சொல்கிறார்.. 'போடா.. போய் பரிட்சை எழுதிட்டு வா.. அப்புறம் கொண்டு போவலாம்' அவனும் போய் தேர்வு எழுதிவிட்டு வருகிறான்..அதுவரை உறவுக்காரர்கள் காத்திருக்கிறார்கள். பிராக்டிகலாய் தீர்வு! அம்மா நிச்சயம் வாழ்த்தியிருப்பாள்.

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கத் தவறியவர்களால் போஸ்டரை கனப்படுத்தி விட முடியாது. ஆனாலும் நமக்கு எதற்கும் எல்லாவற்றிலும் விளம்பரம் தேவைப்படுகிறது. செத்துப் போகும்போதும்கூட!

வாழ்க சுவரொட்டி கலாச்சாரம்.

October 21, 2009

சார்.. தபால்

ப்ரியமான தபால்காரர்கள்
வழக்கொழிந்து போன சொல் போல தெரிகிறதா?
கூரியரில் நாம் இப்போது தபால்களை அனுப்ப ஆரம்பித்து விட்டோம். கூடுதல் செலவானாலும் நிம்மதி. நிச்சயம் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கை.
இதைத்தான் முன்பு தபால் நிலையங்கள் செய்தன. அதுவும் பர்சனல் டச்சுடன்! எங்கள் தெரு தபால்காரர் (முன்பெல்லாம் ஒரு நாளைக்கு இரு முறை டெலிவரி) தபால் அலுவலகம் விட்டு வெளியில் வந்ததும் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவர் போக வேண்டிய பீட்டில் வரிசைக் கிரமமாய் தபால்களை அடுக்கிக் கொள்வார்.
என்னைப் போல சற்று பரபரப்பான ஆசாமிகள் அவர் எங்கள் வீட்டுக்கு வரும்வரை காத்திருக்க பொறுமையின்றி தபால் அலுவலகம் வாசலுக்கே சென்றால் 'தம்பி.. எம் ஓ வந்திருக்கு' என்பார்.
அது எப்படி ஆளைப் பார்த்ததுமே அவரவருக்கான தபாலைப் பற்றி சொல்ல முடிகிறது என்கிற வியப்பு.
'இல்லை' என்றாலும் அதையும் சரியாகச் சொல்லுவார்!
'உனக்கு நாளைக்கு' என்று அவர் சொல்கிற அழகே தனி.இல்லையென்ற வார்த்தை அவர் வாயில் வராது.
என் கதைகள் பிரசுரமான இதழ்களைத் தரும்போது முதல் தடவை கேட்டார். "பணம் கட்டி வாங்கறீங்களா தம்பி"
கொஞ்சம் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு 'என் கதை வந்திருக்கு' என்றதும் அவர் முகத்தில் கூடுதலாய் ஒரு மகிழ்ச்சி.
என் அப்பாவை அவருக்குத் தெரியும். அப்பா சம்பாதிப்பதை வீண் செலவு செய்யவில்லை.. சொந்த முயற்சியில்தான் புத்தகங்கள் வருகின்றன என்று புரிந்ததால் வந்த மகிழ்ச்சி.
தீபாவளி மலரில் என் கதை வந்தபோது ரெஜிஸ்தர் தபாலில் மலர் வந்தது. "கையெழுத்து போடுங்க தம்பி" என்று என் கையெழுத்திற்கு ஒரு அந்தஸ்து உருவாக்கினார்.
என் விஷயம் என்றில்லை.. அவர் செல்கிற ஒவ்வொரு வீட்டு நிலவரமும் அவருக்குத் தெரிந்திருந்தது.
வம்பு பேசும் நோக்கமின்றி அக்கறையுடன் நின்று பேசிப் போகும் அவர் ஒரு ஹீரோ ரேஞ்சில் எங்கள் மனதில் பதிந்ததில் ஆச்சர்யமில்லைதான்.
இன்று கூரியர் வரும்போது அந்த பர்சனல் டச் இல்லை. விசாரிப்புகள் இல்லை. "மோர் சாப்பிடுங்க" என்கிற உபசரிப்பு இல்லை. தபால்கள் வந்து விடுகின்றன.
எல்லாமே இயந்திர மயமாகிப் போன உலகில் தபால்களும் அப்படியே ஆகிவிட்டன.
ஒரு தபால்கார்டு தந்த சந்தோஷம் இப்போது எஸ் எம் எஸ்ஸில் கிடைக்கவில்லை.
நானும் நண்பர்களும் தொடர்ச்சியாய் எழுதிக் கொண்ட தபால்களில் (சில சமயங்களில் ஒரே நாளில் 1,2,3 என்று எண்ணிக்கையிட்டு தொடர் கடிதங்கள்) அதிலும் வித்தியாசப்படுத்தி எழுதிய கடிதங்கள்..
இப்போதும் எனக்குக் கடிதம்தான் எழுதுவேன் என்றிருக்கிற சில உள்நாட்டு அயல்நாட்டு நண்பர்களின் பிடிவாதத்தால் என் மேஜை மீது விதவிதமான கையெழுத்துக்களைப் பார்க்க முடிகிறது.
ஓய்வு பெற்ற சில தெரிந்த தபால்காரர்களைப் பார்க்கும்போது 'தம்பி.. நல்லா இருக்கீங்களா.. இப்பவும் எழுதிகிட்டு இருக்கீங்களா' என்று ஞாபகப்படுத்தி கேட்கும்போது எனக்குள் லேசாக ஏதோ தளும்புகிறது.
தங்கள் சர்வீஸை ஒரு அழகியலாக செய்து விட்டுப் போன / செய்து கொண்டிருக்கிற அத்தனை தபால்காரர்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!

October 13, 2009

நம்ம ஊரு நல்ல ஊரு

திருவரங்கம் ஒரு பார்வை

முன்னாடி மதில் காவிரி சோலைகள்.. இப்ப ப்ளாட்ஸ்.. அதெல்லாம் சரி. ஊருக்குள்ள வந்தாலே ஒரு நிம்மதி ஃபீல் பண்றீங்களான்னு கேட்டா நூத்துக்கு 99 பேர் யெஸ்னு சொல்வாங்க.

என்ன பியூட்டின்னா முன்னை விட இப்பல்லாம் நிறைய தொந்திரவுகள். பர்ஸ்ட் கொசு.. கொசுப்படைன்னே சொல்லலாம்.

மருந்து அடிக்க கார்ப்பரேஷனுக்கு மறதி. ஆனா மறக்காம இனவிருத்தி பண்ற கொசு!

கதவை எல்லாம் மூடி வச்சாக்கூட ஹேங்கர்ல தொங்கற சட்டையை ஆட்டினா 100 கொசு பறக்கும்.

அப்புறம் மழையே இல்லை!

காவிரிக்கு அந்தப் பக்கம் அடிக்கற மழை கூட இந்தப் பக்கம் சொட்டு சொட்டா தெளிச்சுட்டு போவுது. வருஷத்துல 6 மாசம் வெய்யில். மீதி 6 மாசம் கடுமையான வெய்யில்.

கந்தக பூமிடா இதுன்னு எதிர் வீட்டு பாட்டி சொல்றப்ப 'ஆன்னு' வாயைத் திறந்துகிட்டு கேட்டது ஞாபகம் வருது.

அதுக்காக பன்மாடிக் குடியிருப்புகள் விற்பனை குறையுதான்னா 'நோ'

பூமி பூஜை போடறப்பவே எல்லா வீடும் புக் ஆயிருது.

லிப்ட் இருக்கா.. கார் பார்க்கிங்க் இருக்கா.. ஹாஸ்பிடல் வசதி பக்கத்துல இருக்கானு வயசான கூட்டம் ஒண்ணு வந்து செட்டில் ஆயிருக்கு.

வருஷம் முழுக்க ரெங்கா (ஸ்ரீரெங்கநாதர் தான்) ஸ்ரீரங்கம் முழுக்க கவர் பண்ணிடறார். அத்தனை பேரும் அவர் பின்னாடி மந்திரிச்சு விட்ட மாதிரி தெருவுல போகறதைப் பார்த்தா ஸம்திங்க் இருக்குன்னு தோணுது.

கடவுள் இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட நாலு தெருவையும் விடியற்காலையில சுத்தி வரதைப் பார்க்கலாம்!

ஸோ கால்டு கழகக் கண்மணிகள்!

டாக்டர் அட்வைஸ். டிராபிக் ரோட்டுல போனா அடிபட்டுக்குவோம்னு பயமோ.. இல்ல.. பொல்யூஷன் பிரச்னையோ.. சித்திரை வீதி.. உத்திரை வீதில ஜாம் ஜாம்னு நடக்கலாம்.

வாக்கிங்க் ப்ளஸ் புண்ணியம்னு ஆத்திகக் கூட்டம் கணக்கு போடற மாதிரி நாத்திகக் கூட்டமும் நாசூக்கா நடக்குது.

மழையே வராதுன்னு கார்ப்பரேஷன் முடிவு கட்டிட்ட மாதிரி தெருவுல மண்ணே இல்லாம காங்கிரீட் ரோடு போட்டாச்சு.

மழை நீர் சேகரிப்புன்னு கண்டு பிடிச்ச நல்ல விஷயத்தையும் ஊத்தி மூடியாச்சு.

திடீர்னு ஏதோ ஒரு பேர்ல கூண்டு வச்சு செடி வளர்த்து மரமாக்கி அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வெட்டிப் போடற வித்தை மனுஷங்களுக்குத்தான் சாத்தியம்.

வீதிகள்ல இந்தக் கொடுமை அரங்கேறினதைப் பார்க்கறப்ப 'வளர்ப்பானேன்.. வெட்டுவானேன்னு' தோணும்.

இவ்வளவும் மீறி எப்பவோ தீர்மானிச்ச சட்ட திட்டங்கள் ஸ்ரீரங்கத்தைக் காப்பாத்துது இன்னமும்னு நினைக்கறப்ப (அதுக்கும் அப்பப்ப சவால் வருது) ஒரு பெருமூச்சு ரிலீஸ் ஆகறதைத் தடுக்க முடியல.

அப்படின்னா ஸ்ரீரங்கம் பத்தி நல்ல விஷயமே இல்லியான்னு நினைச்சிராதீங்க. நான் சொல்ற இந்த கம்ப்ளெயிண்ட்ஸ் எல்லா ஊருக்கும் பொதுதானே!

அப்பப்ப ஸ்ரீரங்கம் பத்தி பேசுவோம்...

October 10, 2009

நாய் வளர்ப்பவர்கள்

என்ன யோசிக்கிறீங்க? டைட்டில் பார்த்து குழப்பமா? உங்க வீட்டுல வளர்க்கறீங்களா.. அப்ப மேல படிக்காதீங்க.. என்னை மாதிரியே நாய் பத்தி கொஞ்சம் பயந்த சுபாவம் இருக்கறவங்க மட்டும் கண்டின்யூ பண்ணுங்க..

என் நண்பனைப் பார்க்க பல்லாவரம் போனப்ப (ரொம்ப நாள் முன்னாடி) நான் காலிங் பெல் அடிச்சதும் உள்ளேர்ந்து ஒரு குறைப்பு சத்தம்.. அவ்வளவுதான் ஜகா வாங்கிட்டேன்..

கதவைத் திறந்து வெளியே வந்தவன் 'பயப்படாம உள்ளே வான்னான்'.. 'ஒண்ணும் பண்ணாதே'- இது நான்.

'கிட்டக்க வந்து மோந்து பார்க்கும்.. பிடிக்கலேன்னாதான் கடிக்கும்'.

'நீ கட்டிப் போடு.. உள்ளே வரேன்.. இல்லே இப்படியே திரும்பிப் போறேன்' பத்தாண்டு கால நட்பை கடாசி விட்டு கிளம்ப எத்தனித்தபோது நணபன் மனசு மாறிவிட்டது.

பால்கனியில் கட்டிப் போட்டு விட்டு உள்ளே அழைத்தார்கள். நான் பேசி விட்டு கிளம்பும் வரை அதன் கத்தல் ஓயவில்லை.

நண்பனுக்கு மணமான புதுசில் இந்த என் அனுபவம். பிறகு அவனே ஒரு கதை சொன்னான்.

அவனுக்குக் குழந்தை பிறந்ததும் அவன் மாமனார் வீட்டில் நாயை கொண்டு எங்கோ விட்டுவர முடிவெடுத்தார்களாம். வேறு யார் மீதாவது பாசம் காட்டினால் அதற்குப் பொறுக்காதாம். அததனை பொஸசிவ்!

குழந்தையைக் கொஞ்சிய மாமனாரைக் கடித்து விட்டதாம்.

அவர் குரோம்பேட்டில் விட்டுவிட்டு எலக்ட் ரிக் ரெயிலில் வீடு திரும்புவதற்குள் அது கால் நடையாய் வீடு வந்து விட்டது!

அப்புறம் மடிப்பாக்கம் கொண்டு போய் விட்டாராம்.

'அது எங்க வீட்டுல ஒரு குழந்தை மாதிரி' என்று கண்ணீர் விட்டாராம் மாமனார்.

இதே போல இன்னொரு வீட்டிலும் சொன்னார்கள். சொன்னது வயசான மாமி. அவர் கல்யாணமாகி வந்த போது அவரிடம் சொல்லப்பட்டது. புகுந்த வீட்டில் நாயை அறிமுகம் செய்து 'இதுவும் உனக்கு ஒரு மச்சினன் மாதிரிதான்..' என்றார்களாம்.

மாமி சிரிக்காமல் சொன்னாள். எனக்கு நினைத்து நினைத்து புரையேறியது. தெருவில் நிறைய பேர் நாயுடன் வாக்கிங் போவதைப் பார்த்திருக்கிறேன். நாய் எந்த ஜாடையில் இருக்கிறதோ அதே ஜாடையில் கூட்டிப் போகிறவர் முகமும் இருக்கிற பிரமை எனக்குள் எழுவதைத் தடுக்கவே முடியவில்லை! அதன் விஸ்வாசம் பற்றி நிறைய கதைகள்.

இன்னொரு நண்பன் வீட்டில் என்னை முகர்ந்து பிறகு அனுமதித்த டோனி மறுபடி ஆறு மாசம் கழித்துப் போனபோது சின்ன அசைவு கூட இல்லாமல் லேசாய் கண் திறந்து பார்த்து அனுமதித்தபோது 'நல்ல நாய்களும் ஜகத்தில் உண்டு' என்று அறிந்தேன்.

வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பைக் கடித்து உயிர் விட்ட நாய்கள் பற்றி செய்திகளில் படித்திருக்கிறேன்.

இரண்டாவது மாடியில் பாம்பு வரும் வாய்ப்பு இல்லாததாலோ என்னவோ நாய் பற்றி என் விமர்சனம் துணிச்சலாய் வெளியாகிறது.

இதைப் படிக்கிற (நாய்) அபிமானிகள் 'வள்'என்று விழாமல் என் பயம் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு, நாய் மீது தனிப்பட்ட எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாத நான்!

October 05, 2009

திருமங்கை

திருமங்கை ஆழ்வார் பற்றிய குறிப்பு என்று நினைக்க வேண்டாம் அவர் பற்றியும் ஒரு தகவல் பின்னால் வரும்.


ஸ்ரீரங்கவாசியான என்னைப் போல பலர் தினமும் காவிரிக்கு செல்வார்களா என்கிற சந்தேகம் உண்டு. நான் போவதில்லை. அதற்குக் காரணம் ஒன்று நேரமில்லை அப்புறம் சோம்பேறித்தனம்.


ஸ்ரீரங்கம் பற்றி தெரியாதவர்களுக்கு சின்ன குறிப்பு. நகரின் இரு புறமும் மாலையாக காவிரி நதி ஓடுகிறது. தெற்கே அதன் பெயர் காவிரி. வடபுறம் கொள்ளிடம். அம்மாமண்டபம் பக்கம் காவிரி நீர் குளிக்க அத்தனை சுத்தமாய் இல்லை என்று என்னைப் போல சில பலர் கொள்ளிடம் பக்கம் (வடக்கே) போவோம். அதாவது எனக்கு மூட் வரும்போது.


அம்மா காலமானதும் வேறு வழியே இல்லாமல் கொள்ளிடம் குளியல் பத்து நாட்களில். அப்புறம் தொடர்ச்சியாய்.


இப்போது திருமங்கை ஆழ்வார் பற்றி. ஆழ்வார்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் அவர். ஹீரோ. கடவுளுடனே சண்டைக்குப் போனவர். 'நகையைக் கழற்று' என்று மிரட்டியவர். அவர் ஸ்ரீரங்க நகரை ஒரு காலத்தில் நிர்மானித்தவர். மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லாட்டி மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் சின்ன வயசில் ஒரு கதை எனக்கு சொல்லப் பட்டது. அது நிஜமா என்று தெரியாது. செய்திருக்கக் கூடியவர் என்கிற தடாலடி இமேஜ் எனக்கு அப்போது இருந்தது.


கொள்ளிடம் இப்போதும் ஸ்படிகமாய் நீர். குளிக்க பரம சுகம். நீரில் அமிழ்ந்தால் எழுந்து வர மனசே இராது. ஆனால் போகும் பாதை அத்தனை சுத்தம் இல்லை. மனிதக் கழிவுகள். செத்துப் போனவர்களின் வாரிசுகளுக்கு மொட்டை போட்டதில் குவியும் முடிக் கற்றை. (அந்த 10 நாட்களும் என் தலையிலிருந்து மழித்த முடியை தினசரி பார்த்துக் கொண்டிருந்தேன்.) எலும்புத் துகள்கள். உடைந்த சட்டிகள். சோற்று பிண்டங்கள். மனசுள் லேசாய் பீதி கிளப்பும். அல்லது அசூயை. இவை எல்லாம் தாண்டி தண்ணீருக்குள் இறங்கி விட்டால் அந்த நீர் தரும் சுகம்.


ஸ்ரீ ரெங்கனாதருக்கு திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) நீர் இங்கிருந்தும் கொண்டு போவார்கள்.


கொள்ளிடம் முழுக்க புதர் மண்டி வெள்ள காலங்களில் (!) நீர் சேகரிக்க அத்தனை ஆயத்தமாய் இல்லை. நாம் நதியைக் கெடுக்கிறோம் என்பதை மனசாட்சியுடன் ஒப்புக் கொள்ள வேண்டும்.


தெற்கே அம்மாமண்டபம் போகுமுன் திருமஞ்சனக் காவிரி என்று ஒன்று உண்டு. வாய்க்கால் போல. அங்கிருந்துதான் முன்பு அபிஷேக நீர் கொண்டு வரப்படுமாம். இப்போது அது சாக்கடை!


கொள்ளிடத்திற்கு உத்தமர்கோவில், சமயபுரம், அன்பில் கடவுளர்கள் எல்லாம் வருகிறார்கள். முழங்கால் நீரில் இறங்கி நடந்து போகும் போது பிள்ளைகள் போடும் சத்தம்.. ஆற்றின் நடுவில் மணல் திட்டில் கடைகள்.. பிரசாதங்கள்..கூடாரத்தில் உள்ளே உற்சவ மூர்த்திகள்.. விளக்கு வெளிச்சத்தில் பூலோக சொர்க்கம்!


ஒவ்வொரு வருடமும் ஏதாவது திருவிழா ஆற்றங்கரையில் நடக்கும்போது நீரின் ஸ்பரிசம் படும்போது ஸ்ரீரங்கத்தில் இருப்பதின் ஜென்ம சாபல்யம் புலனாகிறது.


என் குடியிருப்பின் பெயர் 'திருமங்கை பிளாட்ஸ்'! இதுவும் தற்செயல்தான்.


108 வைணவத் திருப்பதிகளில் அதிகம் விஸிட் செய்தவர் திருமங்கை ஆழ்வார். இரண்டு முறை போனதாகவும், இரண்டாம் முறை அவரால் முழுமையாய்ப் போக முடியவில்லை என்று ஒரு தகவல் எனக்கு சொல்லப் பட்டது.


ஸ்ரீரங்கம் பற்றி ஏதேனும் ஒரு பதிவு செய்ய ஆசை. ஸ்ரீரங்கனாதர் கிருபை இருந்தால் அது சாத்தியமாகலாம்!

October 01, 2009

தகவல் தொடர்பு

தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க..

என்னைப் பார்த்து என் நண்பர் கேட்ட கேள்வி இது. வேறு ஒன்றும் இல்லை. நகராட்சிப் பூங்காதான் கதி என்று ஆகிவிட்ட விஆரெஸ் ஆத்மா நான்.

ஓய்வு பெற்ற நாளில் எனக்கு மலர்க் கிரீடம் என்ன.. மாலைகள் என்ன.. 5000 வாலா வெடிச் சத்தம் என்ன.. பாண்டு வாத்தியம் முழங்க என்னை வழி நடத்தி அழைத்துப் போனபோது ஒரு அரசியல் கட்சியே ஆரம்பித்து விடலாம் என்கிற நப்பாசை வந்தது. (வந்த கூட்டம் பிரியாணியைத் தின்றதும் கலைந்து போய் விட்டது)

பூங்காவில் என் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு (அதாவது ஜானகி-என் மருமகள்- நான் கேட்காமலே சுடச் சுட போண்டா-பொன்முறுவலாய், அல்லது பஜ்ஜி-அதற்குள் வெங்காயமா, உருளைக் கிழங்கா, கத்திரிக்காயா என்று சூடு பொறுக்காமல் கடித்துக் கண்டு பிடிக்கும் துப்பு.. ஆஹா.. அப்புறம் டிகிரி காப்பி தருவதாய்க் கற்பனை!) உட்கார்ந்திருந்தபோது இன்னொரு வயசான ஆத்மா எனக்கு அறிமுகமானார்.

அவர் 1946 நவம்பர் என்றும் நான் 1945 ஜனவரி என்றும் தெரிய வந்தபோது அவர் முகத்தில் தான் என்ன பிரகாசம். நான் அவரைவிட வயசாளியாம். பேச்சு நடுவே 'மாமா' என்றாரே பார்க்கலாம்.

திடீரென ஒரு மியூசிக் கேட்டது. 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..' பைக்குள் கைவிட்டு கைபேசியை (செல்போன் தான்) எடுத்தார். 'ஆங்.. அப்படியா.. சரி..' என்று பத்து நிமிடம் பேசிவிட்டு வைத்துக் கொண்டார். என்னைப் பார்த்தார்.

"கையில போன் இருந்தாலே வசதிதான்" தலையாட்டினேன். எத்தனை வருடப் பிராக்டிஸ்!

"நீங்க என்ன ஹச்சா.. டாடாவா"

என்னை ஏதோ டாடாவா பிர்லாவா என்று கேட்ட மாதிரி மிரண்டு போனேன். அப்புறம் என் பேத்தி சொன்னது ஞாபகம் வந்தது.

'தாத்தா.. ஏர்செல்..ஏர்டெல்..பிஎஸ்என்எல் எது வச்சிருந்தாலும் 'ஹச்'சுனு தான் தும்ம முடியும். தெரியுமா'

"ஹி..ஹி.. நான் செல் வச்சுக்கலே. லேண்ட்லைன் தான்"

என்னை தப்பாய் லேண்ட் ஆன பிளேன் போலப் பார்த்தார்.

"தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க"

"எங்க வீட்டு வேலைக்காரி இருக்காளே"

மனுஷருக்கு சிரிப்பே வரவில்லை.

"இங்கே பாருங்க.. வர வழியில.. எத்தனை பேரைப் பார்த்திருப்பீங்க. யாராச்சும் செல் இல்லாம இருக்காங்களா.. அடடா.. என்ன மனுஷன் நீங்க. கிராமத்துலயே இப்ப செல் எல்லார் கையிலயும் இருக்கு. முதல்ல ஒரு செல்லை வாங்குங்க.. நம்பரைக் கொடுங்க எனக்கு"

"நாமதான் டெய்லி நேர்லயே பார்த்துக்கிறோமே"என்றேன் அப்பாவியாய். "நடுராத்திரி எனக்கு உங்ககிட்டே பேசணும்னு தோணிச்சுன்னா.. அவ போனதுக்குப் பிறகு என் பக்கத்துல எப்பவும் செல் இருக்கும். படுத்துக்கும்போது கூட"

"சரி" என்று தலையாட்டினேன்.

வீடு திரும்பும் வரை அதே நினைப்புத்தான். என் மருமகளிடம் சொன்னேன். "நான் ஒரு செல் வாங்கிக்கவா"

"எவரெடியா.. டியூரோ செல்லா"

"ஃபோன்.. செல்போன்"

"எதுக்கு"

"சும்மா.. "

மகனுக்குத் தகவல் போய் விட்டது. என்னுடைய தகவல் தொடர்பு சாதனம் என் மருமகள்தான். ஆபிசிலிருந்தே பேசினான்.

"ஹலோ.. "

"என்னப்பா.. செல் வேணுமா"

"ம்"

"நான் வரப்ப கார்டு போட்டுக் கொண்டு வரேன். பிரீபெய்டா.. போஸ்ட்பெய்டா.. எது வேணும்"

ஹோட்டலில் சாதாவா, ஸ்பெஷலா என்று கேட்டாலே குழம்பிப் போவேன் எதைச் சொல்வதென்று.

"நீயே முடிவு பண்ணுடா. எது பெட்டர்னு"

சின்ன வயதிலிருந்து அவன் எதைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வேன். 'நீ முடிவெடு' அவனும் எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வான். 'எங்கப்பா என்னைத் தானே முடிவெடுக்கிற மாதிரி வளர்த்தார்' அவனுக்குத் தெரியாது, என் பிரச்னை. என்ன முடிவெடுப்பது என்பதில் எனக்கு எப்போதும் குழப்பம். வந்து விட்டது என் கைபேசி.

கையில் வாங்கியபோதே லேசாய் பயம். தொட்டால் ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு பிரமை. அதன் உபயோகங்களை விவரித்தான். அட்சரம் புரியவில்லை. "இந்த நம்பரைக் கூப்பிடுடா"

"ஏய்.. பானு இந்தா.. தாத்தாக்கு ஹெல்ப் பண்ணு"

பேத்தி கையில் கொடுத்து விட்டுப் போய் விட்டான்.

"தாத்தா.. என்ன நம்பர்"

நான் டைரியைத் தேடி சொல்வதற்குள் அவள் மூன்று பேரிடம் பேசிவிட்டாள்.

"ஏய்.. சனியனே.. இந்த நம்பருக்கு பேசு. என்கிட்டேதான் இருக்கும்."

"போடி நாயே.. நேத்திக்கு திரும்பிப் பார்க்காம போனியே.. நீ பேசினாத்தான் நானும் பேசுவேன்.. நம்பரைக் குறிச்சுக்க"

"லூசு.. எங்கேடி உன்னை டியூஷன்ல காணோம்.. இப்பதான்
அவங்ககிட்டே நம்பரைக் கொடுத்தேன்.. உனக்கு செல் இருக்கே.. நம்பர் அதுலயே இப்ப வந்திருக்குமே.. பண்றியா"

"சொல்லுங்க தாத்தா.." என்றாள் பதவிசாய்.

சொன்னேன்.

"இந்தாங்க.. ரிங் போவுது"

"ஹலோ.. நாதான்.. செல் வாங்கிட்டேன்"

எதிர்முனையில் என் நண்பர் பேசியது சரியாகக் கேட்கவில்லை.

"ஹலோ.. ஹலோ.. "

"தாத்தா.. வாசலுக்குப் போங்க.. டவர் கிடைக்கலை போல இருக்கு"

அப்படியே நகர்ந்து நகர்ந்து ரோட்டிற்கே போய் விட்டேன். இன்னும் கொஞ்ச தூரம் போனால் பூங்கா!செல்லை அணைத்து விட்டு பூங்காவில் நுழைந்தேன். நண்பர் உட்கார்ந்திருந்தார். 234 தொகுதிகளையும் கூட்டணி இல்லாமலேயே ஜெயித்த தலைவர் மாதிரி அவரைப் பார்த்தேன்.

"ஏன் திடீர்னு கட் பண்ணிட்டீங்க" என்றார்.

"டவர் கிடைக்கலே"

"இப்ப பேசுங்க"

'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்று கேட்டது.

அதை எங்கே வைத்துக் கொள்வது போன்ற ஆலோசனைகளையும் நண்பர் வழங்கினார். 'ஷர்ட் பாக்கட் வேணாம். ஹார்ட் பக்கத்துல. அப்புறம் பேண்ட் பாக்கட்ல வேணாம். ஆண்மை பாதிக்குமாம்.(!) வைப்ரேஷன்ல வைச்சா பிரச்னை..' இத்யாதி. அப்புறம் எதுக்கு இதை வாங்கணும் என்கிற கேள்வி என் நாக்கு நுனி வரை வந்து விட்டது.

"எல்லார்கிட்டேயும் நம்பரைக் கொடுக்காதீங்க. வீண் தொந்திரவு" என்றார்.

ரிங் கேட்டது.

"எஸ் எம் எஸ் வருது" என்றார்.

எடுத்துப் பார்த்தேன். எப்படிப் பார்ப்பது என்று புரிபடாமல். கையில் வாங்கி படபடவென்று ஏதோ செய்தார்.

"இப்ப படிங்க"

'ஏண்டி லூசு.. நாளைக்கு ஸ்கூலுக்கு வரியா.. லீவா' பேத்திக்கு வந்த மெசேஜ்! "எப்படி பதில் தரணும்னு தெரியுமா"

"வேணாம்" என்றேன் அவசரமாய்.

"உங்க போனைக் காண்பிங்க" என்றேன்.

"ப்ச்.. சார்ஜ் பண்ண மறந்துட்டேன். " என்றாரே பார்க்கலாம்!