December 21, 2012

குஞ்சம்மா
"குஞ்சம்மா"


சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரெயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்..

ரொம்ப நாளாச்சு. இப்படி விஸ்ராந்தியாய் வெளியே வந்து. எப்போது ஏசி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதிப் பெட்டி.. சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்.. எப்போதாவது மகள் மதுவந்தி..

இன்று யாரும் வேணாமென்று தனியே.

'நிஜமாத்தான் போறியா..'

"ஆமா'

'ஒரு வாரத்துக்கா'

'ஆமாப்பா' கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப் பார்த்தாள்.

'ஏதாச்சும் கச்சேரி பேச வந்தா..'

"பார்த்துக்கலாம்பா.. என் நம்பரைத் தரவேணாம்..'

'ஆர் யூ ஓக்கே'

புருவம் சுழித்து அவளைப் பார்த்தவரை நேருக்கு நேர் பார்த்து சிரித்தாள்.

"ஐயாம் பைன்'

ஏசி டூ டயரில் ஏற்றிவிட்டு கடைசி நிமிடம் அவள் மனம் மாறுமா என்பது போலப் பார்த்தார்.

'ஸீ யூ பா.. டேக் கேர்'

இதை விடத் தெளிவாய் அவள் சொல்லமுடியாது. ராஜகோபாலன் திரும்பி நடந்து போனபோது லேசாய் கோபம் தெரிந்தது. இரவு பத்தரைக்கு என்றாலும் அத்தனை தூக்கக் கலக்கத்திலும் சிலர் அவளை அடையாளம் கண்டு கொண்டார்கள். சிலர் நாசூக்காய் ஒதுங்க ஓரிருவர் அருகே வந்து சிரித்தார்கள்.

'உங்க பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும் மேடம்'

'ம்..'

'இப்ப எதுவும் கச்சேரியா மேடம் திருச்சில'

'இல்லம்மா. பர்சனல்'

'ஓ..'

அவள் இசையை நேசிக்கிறவர்கள்.. ஆத்மார்த்தமான அன்பில் வழிபவர்கள்.. மெல்ல நகர்ந்து குட் நைட் சொல்லிப் போனபோது அந்த நிமிடம் அவர்களுக்காய் ஏதாவது பாடலாமா என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

இதுதான்.. இந்த குணம்தான்.. அவளை இன்னமும் ஜீவனோடு வைத்திருக்கிறது.. அதுவே சிலரிடம் அவளை கேலிக்கு ஆளாக்குகிறது..

'அன்னிக்கு ஒரு கல்யாணத்துல பார்த்தேன்.. உக்கிராண அறையில் இவ ஒரு கிழிச பாய் மேல உக்கார்ந்துண்டு நகுமோமு பாடிண்டிருக்கா.. சுத்தி சமையக்காராளும்.. எச்செல எடுக்கிற மாமிகளும்..என்ன கூத்து இது'

இவள் காது கேட்கவே விமர்சனம்.

'மைக் செட் இல்ல..எல்லாம் சேரிக் கூட்டம்..புள்ளையார் கோவிலாம்.. கும்பாபிஷேகமாம்.. வந்து பாடுவீங்களான்னு கேட்டதும் உடனே சரின்னுட்டாளாம். போக வர ஆட்டோவாம்..'

'புரட்சிக்காரின்னு நினைப்பு'லோயர் பர்த்தில் படுத்திருந்தவளுக்கு நினைவலைகளின் அதிர்வுகள். தூக்கம் வரவில்லை. எதனால் கிளம்பினாள் என்று புரியவில்லை. அதுவும் இன்றே கிளம்பணும்போல ஒரு படபடப்பு..

'குஞ்சம்மா'

குரல் மனசுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் பார்க்க விடாமல். இன்று சாதகம் செய்யும் போதும். அந்த நிமிஷம் தான் முடிவெடுத்து விட்டாள்.

'நான் ஸ்ரீரங்கம் போறேன்.. ஒரு வாரம் அங்கேதான்'

சாருமதியின் குணம் தெரியும் அவள் தீர்மானித்து விட்டால் அவ்வளவுதான். அவசரமாய் டிக்கட் ஏற்பாடு செய்து வந்து ஏற்றியும் விட்டாச்சு. ராஜகோபாலன் சும்மா இல்லை. போகும்போதே ஸ்ரீரங்கத்திற்கு போனும் செய்து விட்டார். ' அவ தனியா வரா'ரயிலடியை விட்டு வெளியே வந்தபோது ஆட்டோக்காரர் வந்தார்.

'ஆட்டோ வேணுமா'

பதில் சொல்வதற்குள் கைப்பெட்டியை யாரோ பிடுங்கிய மாதிரி இருந்தது.

'யா.. யாரு.'

உடம்பெல்லாம் தேமல். முகத்தில் சிரிப்பு வந்த சுவடே இல்லை. 'ஹ்ம்ம்' என்கிற கனைப்பு மட்டும்.

"சேது.. நீயா"

கோணலாய் சிரித்தான். நிச்சயம் அவளை விட வயசு கூடுதல்தான் அவனுக்கு. ஆனால் சாரு அவனை பெயர் சொல்லிக் கூட அழைத்ததில்லை.

"அம்மா சொன்னா.. நீ வரேன்னு"

அம்மா. எப்படித் தெரியும். சாரு விக்கித்தாள்.

"வா.. போகலாம்"

"ஆட்டோல போலாம் சேது"

உள்ளடங்கி உட்கார சேது நுனியில் பட்டும் படாமலும் அமர்ந்தான். தெருப் பெயர் சொன்னாள். ஆட்டோ கிளம்பியது.

"அம்மா சொன்னாளா.. நான் வரேன்னு.. எப்படி தெரியும்.."

இதென்ன குழந்தைத் தனமாய் ஒரு கேள்வி என்பது போல சேது அவளைப் பார்த்தான்.

"போன வாரமே சொல்லிட்டா.. நீ வரப் போறேன்னு.. இன்னிக்கு காலைல அவதான் எழுப்பினா. போடா ஸ்டேஷனுக்குன்னு"

சாருமதிக்கு அழுகை வந்தது.

"யார் வரப் போறான்னு கேட்டேன்.. நம்ம குஞ்சம்மாடான்னு சிரிச்சா.. அம்மா சிரிசசு ரொம்ப நாளாச்சு தெரியுமோ"

ஆட்டோ போன வேகம் குறைவு போலத் தோன்றியது சாருமதிக்கு. அப்போதே அந்த வினாடியே அம்மாவைப் பார்க்கணும்..

'என்னவோ பெத்த அம்மா மாதிரில்ல துள்ளறா..' குரல்கள் மறுபடி கேட்க ஆரம்பித்துவிட்டன.

'போடி வெளியே.. பாட்டு கத்துக்கணும்ன.. சரின்னு விட்டா இப்ப சொத்துக்கு ஆசை வந்துருச்சா'

'எனக்கு எதுவும் வேணாம்.. அம்மா மட்டும் போதும்'

'இந்த ஜாலக்கெல்லாம் வேணாம். இழுத்து இழுத்து ஸ்வரம் பாடறதுல்லாம் மேடையோட வச்சுக்கோ.. '

அம்மா எதுவும் பேசாமல் படுத்திருந்தாள் அன்று. சாருமதியை வலுக்கட்டாயமாய் வெளியேற்றியபோது. அன்றும் ஸ்டேஷனுக்கு சேதுதான் ஓடி வந்தான்.

'சாதகம் பண்றதை விட்டுராதேன்னு அம்மா சொல்லச் சொன்னா.. இந்த விபூதியை இட்டுக்க சொன்னா'

'நீயே இட்டு விடு சேது'

ஒரு மகானைப் போல நெற்றியில் பூசி விட்டான். கண்ணில் விழுந்து கரித்தது.

'அம்மாவைப் பார்த்துக்கோ'

தலையாட்டினான். போய் விட்டான்.

இத்தனை நாட்கள் கழித்து இதோ மீண்டும் அம்மாவைப் பார்க்க..

வீடு சூரிய வெளிச்சத்தின் வரவிற்காகக் காத்திருந்தது. ஆட்டோவை அனுப்பி விட்டு படியேறினாள். உள்ளே ஹாலில் இருட்டு. கூடத்தின் மூலையில் கட்டில் அதே இடத்தில். பழம்புடவை போர்த்திக் கொண்டு படுத்திருந்த உருவம்.

சேது பின் பக்கம் கிணற்றடிக்குப் போய் விட்டான்.

'குஞ்சம்மா'

அம்மாவின் குரல் தீனமாய்க் கேட்டது. ஒரு காலத்தில் கணீரென்று இவளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தவளா...

"அ..ம்மா" ஓடிப் போய் அவள் அருகில் நின்றாள்.

''உக்காருடி' சைகை செய்தாள்.

"எப்படி இருக்கே"

"ம்ம்.. என்னம்மா ஏன் என் கிட்ட சொல்லல"

அம்மா சிரித்ததில் நிறைய அர்த்தங்கள்.

"பாடிண்டிருக்கியா"

"ம்ம்"

"ரெண்டு நாள் என் கூட இருக்கணும்னு தோணித்தா"

"ஆமாம்மா"

"தெரியும். நீ வருவேன்னு.. போ குளிச்சுட்டு வா. பூஜை ரூம் இப்போ பொம்மனாட்டி கை படாம சோபை போயிடுத்து.. சேதுதான் இப்போ விளக்கேத்தறான்"

கிணற்றடிப் பக்கம் போனாள், சேது அம்மாவின் புடவைகளை அலசி உலர்த்திக் கொண்டிருந்தான். ஆங்காங்கே கிழிசல்.அவனும் அன்னியம் தான். அவளைப் போல. ஆனால் அவனுக்கு எந்தத் தொல்லையும் வரவில்லை. அவனை விரட்டவில்லை யாரும்.  போன வருஷம் அம்மாவைப் பற்றி கேள்விப்பட்டு அவள் இங்கே வந்தபோது சேது இருந்தான். பார்த்ததும் வெளிப்பார்வைக்கு தெரியாமல் ஒரு சிலிர்ப்பு. அழுக்கு வேட்டி. காவித் துண்டு. அவனைப் பார்க்கவே என்னவோ செய்தது. ஆனால் மிக நாசூக்காய் அதைக் காட்டிக் கொள்ளாமல் அம்மாவை நமஸ்கரித்தாள்.

"அம்மா.. உங்க கிட்ட பாட்டு கத்துக்கணும்னு வந்திருக்கேன்மா"

அம்மா அப்போது இன்னும் கொஞ்சம் தெம்பாய் இருந்தாள். கொல்லைப் பக்கம் போக நடக்க முடிந்தது. புடவையை தானே அலசி உலர்த்தினாள். துலா ஸ்னானத்திற்கு காவேரி போனாள்.

சரியென்றும் சொல்லவில்லை. போ என்றும் விரட்டவில்லை. கூடத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அம்மா முன் அமர்ந்தவளை கவனிக்காதவள் போல சேதுவிடம் ஏதோ ஜாடை செய்தாள்.

பார்த்தாலே அசூயை வழிகிற அந்த ரோக உடம்பிலிருந்து சாஸ்வதமான ராகம் பீரிட்டுக் கிளம்பியது.

தோடியை ஆலாபனை செய்தான். கொஞ்சமும் பிசிர் தட்டவில்லை. அது சேது இல்லை.. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால். யாரோ ஒரு மகா வித்வான்.

சாருமதிக்கு ஏதோ புரிந்தது. எழுந்து அம்மாவை நமஸ்கரித்தாள். திரும்பி சேதுவையும். சேதுவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. யாரையோ அவள் நமஸ்கரிக்கிறாள் என்பதுபோல அமர்ந்திருந்தான்.

"யார்னே தெரியல.. கேட்டா பேர் மட்டும் சேதுவாம்.. என்ன பிறவியோ.. கர்மாவைக் கழிச்சுட்டு போக வந்திருக்கு. போடான்னாலும் கேக்கல.. கூடவே ஒட்டிண்டு..'

அம்மா சிரித்தாள்.

சாருமதி இப்போது தன் பால்யத்திற்கு திரும்பி விட்டாள். சங்கீத பாடம் ஆரம்பித்த நாட்கள். குருவே சரணம். குருவே தெய்வம்.

அடுத்தடுத்த நாட்களில் அம்மாவுக்கு இவள் மீதும் கரிசனம் திரும்பியது. இது நாள் வரை இருந்த பாடாந்தரம் மறந்து புதிதாய் ஒரு உலகத்தில் பிரவேசித்த மாதிரி. ராஜகோபாலன் எப்போது அழைத்தாலும் 'அப்புறம் பேசலாமே' என்று தவிர்த்து அம்மாவின் அருகிலேயே இருந்தாள். ஒரு தடவை அவள் தாய் மனசு தளும்பி விட்டது. மதுவந்தியின் பிஞ்சுக் குரல் கேட்டு.

'வந்துருவேன்டா செல்லம்.. பிளீஸ்டா.. பாட்டி இருக்காளோல்லியோ.. உனக்கு.. எதுவானாலும் கேளுடா'

அப்புறம் அன்று புது சிட்சையில் மகள் மறந்து போனாள்.சேதுவின் குரல் கேட்டது. "குளிச்சாச்சா"

அட.. தன்னை மறந்து இது என்ன.. வேகமாய் வெளியே வந்தாள். தலைக்கு துண்டை சுருட்டி வைத்துக் கொண்டு.

அழகாய் ஸ்ரீசூர்ணம் நெற்றியில்.. அம்மாவுக்குப் பிடிக்கும்.. ஆண்டாள் மாதிரி இருக்கேடி.. பூஜை அறை ஒரு வித நெடி அடித்தது. துடைத்து சுத்தம் செய்ய அரை மணி ஆனது. இரு குத்து விளக்குகளையும் சேது தேய்த்து வைத்திருந்தான். ஐந்து திரிகளையும் போட்டு விளக்கேற்றினாள். ஊதுபத்தி மணம் கமழ்ந்தது. கூடம் பிரகாசமானது.

பாடினாள். இந்த நிமிஷம் யார் கைதட்டலும் தேவையில்லை. ஆராதனை போல. மனம் விட்டு. மனம் லயித்து. மனம் கசிந்து. ராகம் குழந்தையாய் மாறி கூடம் முழுக்க தவழ ஆரம்பித்தது. அது தவழ்ந்த இடமெல்லாம் பூக்களின் வாசனை..

அம்மாஎப்போது எழுந்தாள் என்று தெரியவில்லை.. எப்படி நடந்து வந்தாள் என்று புரியவில்லை.. ஏதோ ஒரு உணர்வில் கண் விழித்துப் பார்த்தபோது அம்மா அவள் மடியின் அருகில் வந்து.. சாருமதி உடனே பற்றிக் கொண்டு விட்டாள்.

"அம்மா"

சேதுவுக்குக் கூட கண்களில் ஆச்சர்யம். உணர்ச்சியே காட்டாத பரப்பிரும்மம்.

"நன்னா இருப்பேடி குழந்தே.. ஷேமமா இருடி"

அம்மாவின் எச்சில் தெறித்தது அவள் மேல். தன் புடவையால் துடைத்து விட்டாள். இருவருமாய் அம்மாவை மெல்லப் பற்றிக் கொண்டு போய் கட்டிலில் விட்டார்கள். கஞ்சியை மெல்ல புகட்டி விட்டாள். தன் எலும்புக் கையால் அம்மா சாருவைப் பிடித்துக் கொண்டு விட்டாள். விடவே இல்லை.. கடைசி மூச்சு பிரிகிறவரை.

அக்கம்பக்கம் வந்தார்கள். சொந்தங்களும்.

பரபரவென்று இறுதிக் காரியங்கள். திருமங்கை மன்னன் படித்துறையில் கொழுந்து விட்டெறிகிற நேரம் வரை சாரு மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டிருந்தாள். கொள்ளிடத்தில் குளித்து வீடு திரும்பி அம்மாவின் கட்டில் முன் அமர்ந்து மறுபடியும் வாய் விட்டு.. சேதுவும் கூடவே.

அம்மா வந்தாள். 'போதும்டி குழந்தே.. எனக்கு திருப்தியாச்சு.. கிளம்புடி.. '

ரெயிலுக்கு சேது வந்தான். அவன் கையிலும் ஒரு துணிப்பை.

எதுவும் பேசவில்லை. இவளை பெட்டியில் ஏற்றி விட்டான். திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான்.

சென்னை எக்மோரில் ராஜகோபாலனுடன் மதுவந்தியும் வந்திருந்தாள்.

"அ..ம்மா" அந்தக் குழந்தை அழுதபோது இந்த வளர்ந்த குழந்தையும் அழுததை எல்லோரும் தான் பார்த்தார்கள்.

    (நன்றி :  கல்கி சீஸன் ஸ்பெஷல் )    

December 17, 2012

ஜ்வல்யா

சிலசமயம்
என்னை ரொம்பவே 
குழப்பி விடுகிறாள் ஜ்வல்யா..
‘நான் பிறக்கலேன்னா
என்ன பண்ணியிருப்ப ப்பா’
என்ன பதில் சொலவதென்று

புரியாமல் விழிக்க..
‘நீ மக்குப்பா..
அதான் பொறந்துட்டேனே
அப்புறம் என்ன’December 07, 2012

வனதேவதை

வன தேவதையின்

வருகைக்குக் காத்திருக்கிறது

அந்த வனம்..

பசுமை அழிந்த காட்டின்

துளிர்கள்..

பனித்துளிகளினூடே

உயிர்த்திருக்கிறது..

பறவைகள் அறியக் கூடும்


தேவதை வந்தால்..

பட்டாம்பூச்சிகளும்..

தவறிப்போய் ஓரிரு

மானிடர் அறியலாம்..

உன்னைப் போல்..

என்னைப் போல்..

இமை கொட்டாமல்

காத்திருப்போம்

இவ்விருட்டில் விடியும் வரை. 


November 26, 2012

வலைச்சரம்

இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு எனக்கு..

உங்களை எல்லாம் அங்கே சந்திக்க விரும்புகிறேன்...

அன்புடன்

ரிஷபன்..

November 17, 2012

வேறென்ன கேட்பேன் - நிறைவுப் பகுதி


 மோகன் ஜி  முடித்து வைக்கிறார்...


சரிடா! நான் மதியம் கிளம்பறேன்.. கலியபெருமாள் கோயிலுக்கு  போயிட்டு அப்படியே ஊருக்குத் திரும்பணும்... சாவகாசமா இன்னொரு முறை வறேன்.. சரிதானே?” என்றார் ஆராமுது.

சிவபாதம் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டார். துருத்தியின் உறுமலாய் பெருமூச்சு வாங்கியது.. ஆராவமுதன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்... கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது..

‘”ஆராமுது.. என்னை நாலு அறை அறைய மாட்டியா? தோளில் போட்டிருக்கும் சவுக்கத்தால் என் கழுத்தை இறுக்கி கொன்னு போடுடா.. இங்கே நீ வந்தது முதல் எதுவுமே கேட்டுக்காம எதுக்கு வதைக்கிறே?”

ஆராமுது எழுந்து வந்து சிவபாதத்தின் கைகளைப் பற்றிக் கொண்டார். 

வேண்டாம்டா. எதுவுமே நீ சொல்ல வேண்டாம். சொல்லி என்ன ஆகப் போகிறது.. எதை மாற்ற முடியும்.?. வேறென்னடா கேட்பேன்? நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம் இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள் இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு.. உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு போறேன்.. கலங்காம இருடா.

பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில் அவர்களின்   சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,வேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..

நீ.. ரொம்ப பெரியவண்டா.. உனக்கு நல்லது செய்வதாய்த்தான் அதையெல்லாம் செய்ய சட்டென்று சிவபாதத்தின் வாயைப் பொத்தினார் ஆராமுது..
போறும்.. இப்பத்தானே சொன்னேன்.. விடுன்னா விட்டுடணும்.. பொழச்சிக் கிடந்தா இன்னொரு சமயம் பேசிக்கலாம்.. எல்லாத்தையும் மறந்துட்டு பழைய சிவபாதமா மீசைய முறுக்கிக்கிட்டு முண்டாவைத் தட்டிக்கிட்டு நில்லுடா.. நீ நிப்பே.. உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ எட்டூருக்கு நிப்பே.. ஒரு வார்த்தை பேசாதே

அம்மாடி.! சமயல்கட்டைப் பார்த்து கூவினார் ஆராமுது.உன் சம்சாரம் பேரு என்ன.?”

கற்பகம்

அம்மாடி கற்பகம்! சமையல் ஆயிடுச்சுன்னா இலைய போடு தாயி.. எனக்கு கிளம்ப நாழி ஆச்சு.

கற்பகத்துக்கு தூக்கிவாரிப் போட்டது.. தன் பெயரை சொல்லி கூப்பிட்ட ஆராமுதன் குரலில் இருந்த வாத்ஸல்யம் அவளை உருக்கியது.. அவள் ஏதோ ஒரு பழைய கணக்கு நண்பர்கள் இடையில் சரிசெய்யப் படுவதாய் உணர்ந்தாள். என்ன கணக்கானால் என்ன? இந்த சந்திப்பில் தன் புருஷனுக்கு பல சுமைகள் இறங்கிப் போகும் என உணர்ந்தாள்.தன்னை பேர் சொல்லி அழைப்பவன் எனக்கு பந்தப் பட்டவன்..அவயாம்பிகை அனுப்பின தேவதூதன்

இதோ.. பத்து நிமிஷத்துல ஆயிடும் அண்ணா!

என்னை.. என்னை அண்ணாங்குறாடா! ஆராமுது நெகிழ்ந்தார்.

உன்னை குலசாமின்னு சொல்லணும்டா வெறும் அண்ணாங்குறா போக்கத்தவ!

மேலே ஏதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

ஆராமுது ரசித்து சாப்பிட்டார். கற்பகம் ! தெளிவா ரெண்டு கரண்டி ரசத்தை கையில விடும்மா

இரண்டுகை ரசம் ஆறு ஏழு என நீண்டது.

கற்பகத்துக்கு கண்ணீர் தளும்பியது. மெல்ல குடிங்கண்ணா. புரையேறப் போகுது..

என்னை யாரும்மா நினைச்சுப்பா? புரையேறுறதுக்கு?”

இனி நான் நினைப்பேனண்ணா கற்பகத்தின் மனசு அலறியது..பிள்ளை சுமக்காமல் பாழாய்க் கிடந்த அவள் வயிற்றில் தாய்மை சுருண்டது.

சரிடா.. கிளம்பறேன். இன்னைக்கு ரொம்ப உடம்பை அலட்டிக்கிட்டே.. படுத்துக்கோ 

எப்படா திரும்ப வருவே?

எப்ப வேணும்னாலும்

அண்ணா! இது உங்க வீடு.

ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார் ஆராமுது..எனக்கொரு நமஸ்காரம் பண்ணேன் கற்பகம்

ஓடிவந்து ஆராமுதன் காலில் விழுந்தாள்..சட்டைப் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவள் கையில் திணித்தார்.

தீர்க்காயுசா இரும்மா. இந்த கிருக்கனை நல்லா பார்த்துக்கோ

சரிண்ணா. சீக்கிரமா திரும்பி வாங்க.

உன் ரசத்துக்காகவாவது திரும்ப வருவேன். வாசலை நோக்கி நடந்தார் ஆராமுது. விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு கையில் ஒரு ரெக்ஸின் பையுடன் சிவபாதத்தின் கண்முன்னே போனபடி......

நீ ரொம்ப பெரியவண்டா... அவர் கைகள் தானாய்க் குவிந்தன.  போவது தன் பழைய அப்பாவி ஆராமுது இல்லை.  புத்தனிவன்.. ஏசுப்பிரபு..

மெல்ல கட்டிலில் சரிந்தார். கற்பகம் தலையணைகளை சரி செய்தபடி  சிவபாதத்திடம் சொன்னாள், மனசுக்கு ஆறுதலா இருக்குங்க.. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. இவர் நம்மகூட நாலு நாள் இருந்தா நீங்க எழுந்து ஒடுவீங்க.” என்று எழுந்தாள்.

எழுந்து ஓடுவேனா?”

அவனை ஊரைவிட்டு ஓட வைடா.. இல்ல உலகத்தை விட்டே ஓட வைப்பேன்.. அப்பாவின் இரைச்சல் சிவபாதம் காதில் ஒலித்தது. சிவபாதத்தின் ஒரே தங்கை ஜமுனா ஆராமுதுக்கு தன் காதலைத் தெரிவித்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி எழுதின கடிதம் அவன் அப்பாவின் கையில் சிக்க ருத்ர தாண்டவம் ஆடினார்.

ஜாதி கெட்டநாயி! உன் சினேகிதன்னு வீட்டுக்குள்ள வளைய வரவிட்டது எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியாடா?’

இல்லப்பா. அவன் அப்படி இல்லை. இந்த சிறுக்கிய வெட்டுங்க,, ஆராமுதுவை ஏதும் சொல்லாதீங்க..  இப்பத்தான் அடுத்தடுத்து அப்பாவும் அம்மாவும் செத்துப் போயி ஆளில்லாத அனாதையா நிக்கிறான்பா

அவன் இல்லேன்னா செத்துபொய்யிடுவேங்கிறாளே கடுதாசில.. அவனை இருக்க விட்டாத்தானே?’

அப்பாவும் பிள்ளையும் ஆலோசித்தார்கள். அப்பாவின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த அந்த அலுவலகத்தில் ஆராமுதன் பொறுப்பிலிருந்த பணம் இருபதாயிரம் மாயமானது. பொறுப்பாளர் போலீசுக்கு போவதாயும், எழட்டு வருடம் சிறைவாசம் உறுதியென்றும் மிரட்டவைக்கப் பட்டார். கலங்கி நின்ற ஆராமுதனை ஊரைவிட்டே கண்காணாமல் போய்விடும்படி தன் பங்கு வசனத்தை சிவபாதம் சொல்லி கொஞ்சம் பணமும் கொடுத்தனுப்பினான்

.மறந்தும் இந்தப் பக்கம் வந்து விடாதே. எந்தக் கடிதமும் போட்டுவிடாதே. வடக்கே எங்காவது போய் பொழச்சிக்கோ. இங்க உனக்கும்தான் யாரிருக்கா? கொஞ்ச வருஷம் போனபிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதும் வண்டி பிடிச்சி மதராஸ் போய் வடக்கே போற ரயிலைப் பிடிச்சியானா
தப்பிச்சிக்கலாம். இங்கே மேற்கொண்டு நான் ஏதும் சமாளித்துக் கொள்கிறேன்.”

ஆராவமுதன் விலகியவுடன் ஆபீஸ்கணக்கு சரி செய்யப்பட்டது. ஆராவமுதனின் இந்த கதிக்கு காரணமான ஜமுனாவுக்கு நடந்த நாடகம் அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொண்டபோது தெரியவந்தது. வீட்டின் கிணற்றின் ஆழத்தில் நியாயம்தேடி தஞ்சம் புகுந்தாள். எதற்குமே அர்த்தமில்லாமல் போய்விட்டது.

அப்பா! என்ன சாதித்தீர்கள்.? உனக்கேன் பாழும்காதல் வந்தது ஜமுனா? உயிரான சினேகிதத்திற்கு துரோகம் செய்தேன்.. அது உன்னைக் காக்கவென என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன் ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும். தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று  ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன். அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.. மாடிவிட்டு கீழே இறங்கினார்..

மெல்ல மெல்ல கற்பகம் கைலாகு கொடுத்தபடி உடன்வந்தாள்

என்ன அண்ணனையே நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?”

அண்ணன்!முனகிக் கொண்டே தோட்டத்தில் தரையைப் பார்த்தார் சிவபாதம்.

தரையோடு ஒட்ட வெட்டபட்ட முருங்கை மரத்தின் வேர்த்தட்டில் பொன்பசுமையில் சிறிதாய் துளிர்விட்டிருந்தது.  

                                                 (முற்றும்)


வித்தியாசமாய் முயற்சிப்போம் என்று பேசிக் கொண்டோம். அதன் விளைவாய் இந்த சுழல் தொடர்.

பின்னூட்டங்கள் மூலம் உற்சாகப் படுத்திய உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.


November 10, 2012

வேறென்ன கேட்பேன் - 3

இதன் முதல் பகுதியைப் படிக்க  மோஹன்ஜி

இதன் இரண்டாம் பகுதியைப் படிக்க ரிஷபன்

இதோ மூன்றாம் பகுதி திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி கைவண்ணத்தில்..ஒடினார்.. ஓடிக் கொண்டே  இருந்தார்..காலில் வலு இருக்கும் வரை ஓடினார்.
        ஒடுகாலி என்று பெயர் கிடைத்தது..அது மட்டுமா? அத்துடன் பண்டாபீஸ் பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடினான் என்றல்லவா பேர்?
        அந்த பணம் பத்திரமாய் சிவபாதம் வீட்டு மஞ்சள் பையில்!
        அவன் தான் எடுத்திருக்கிறான்..
        பாழும் விதி பழியை ஆராமுதன் மேல் போட்டது!
        என்னவோ தெரியவில்லை..ஓட வேண்டும் என்று ஒரு உந்தல்…பிடிபட்டால் இவனிடம் ஒன்றுமில்லை..இவன் நிரபராதி என்று தெரிந்திருக்குமோ..அப்படியானால் சிவபாதம் மாட்டி இருப்பானோ..அவனைக் காப்பாற்றத் தான் நாம் இப்படி ஓடினோமோ?
        முப்பது வருடம் அது ரணமாய்… முள்கிரீடமாய் இவரை அழுத்த..ஆராமுது என்றாலே……….
         திருடன்…பொய்யன் என்றாகி விட்டது இந்த சமூகத்திற்கு!.      
       ..எல்லாமே போச்சு…யாரிடம் போய் என்ன கேட்பது?
அதுவும் இத்தனை நாட்கள் கழித்து!
        அப்படிக் கேட்டாலும் அந்த ஞானஸ்னானம் இவர் மீது
முப்பது வருடங்களாகப் படிந்த அந்த கறையை போக்கி விடுமா?
இங்கு வரவேண்டும் என்ற ஆவல் மனிதனை சுனாமியாக அலைக் கழித்தது..வந்தார்…இப்போது அதே மனமே ஏன் வந்தாய் என்று அவரைக் கேட்கிறது..
         மேலும் பழைய புண்ணைக் கிளறிப் பார்ப்பதால் என்ன பயன் வந்து விடப் போகிறது? காலம் தான் காயத்தை ஆற்றும் என்று சொல்வது பொய் தானா?..
          இல்லாவிட்டால் சீழ் பிடித்தது ரணமாகி இப்படி ஆகியிருக்குமா என்ன?
          “ என்னப்பா....  கனவா ?”          
          “ஒன்றுமில்லை” – இயலாமை ஒரு வெற்று சிரிப்பாய் வெளிப்பட்டது.
          யார் பண்ணின தப்புக்கோ  யாரோ ஒருவர் சிலுவை சுமப்பது இன்று நேற்றா நடக்கிறது?
          எதற்காக இங்கு வந்தோம்?
          ஏன் வந்தோம்?
          ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும் என்கிற ஆவலுடன் வந்தவருக்கு, வாய் ஏன் இப்படி மெளடீகம் பூண்டது?
ஒரு குற்றம் தெரிந்தோ தெரியாமலோ நடந்து விட்டது..
     
     குற்றம் நடந்தது முப்பது வருடங்கள் முன்பு…குற்றம் செய்தவரும், செய்யாத குற்றத்தை சூழ்நிலையால் ஏற்றுக் கொண்டவருமே இந்த முப்பது வருட முடிவின் எச்சம்!
      தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட நீதி யன்றோ?
      நான் தான் குற்றம் செய்தேன் என்று யாரிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வீண் பழியாய் என் மீது குற்றம் சுமத்தப் பட்டது என்று யாரிடம் நிரூபிக்க வேண்டும்?
      இந்த முப்பது வருடங்கள் எல்லாவற்றையுமே முழுங்கி விட்டது..
       எல்லாவற்றையுமே! 
       சிவபாதத்துடன் பேச வேண்டும் போல இருந்தது.
       ஒன்றை கவனித்தார் ஆராமுதன்..சிவபாதத்திடம் பேசும் போது அவர் கண்கள் கொஞ்சம் குறுகிப் போய் தாழ்ந்திருந்தன.. இவர் கண்களை நேருக்கு நேராய் பார்க்க ஒரு கூச்சம்! அச்சம்!!
       கட்டிலிலிருந்து எழுந்தார்.
       “என்னப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்..”
       “அதுக்கா அவ்ளவ் தூரத்திலிருந்து வந்தேன்..”
       “அப்ப பேசு..” – சிவபாதம் எழுந்து உட்கார்ந்தார்..
       “ பால்ய சினேகிதரைப் பார்த்ததும் இப்ப தாங்க எழுந்து உட்கார ஆரம்பித்திருக்கார்..” – சிவபாதம் மனைவி.
       “அப்படியா “ – புன்னகைத்தார் ஆராமுதன்.
       அந்த அம்மையார் முகத்திலும் முதலில் இருந்த கடுமை மறைந்து இதழ்க்கடையோரம் லேசாக புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.
      .” அந்த காலத்துல தமிழ் சொல்லித் தந்தாங்களே அந்த  டீச்சர் பேர் என்ன?”
       ”துளசி டீச்சர்”
       ” இருக்காங்களா இன்னும்?”
       “ உனக்கு ரொம்பவும் பேராசைப்பா..அவங்க நம்ம ஒண்ணாப்பு டீச்சர்..இன்னமும் உசிரோட இருப்பாங்களா என்ன?
நாமளே எப்படா போவோம்னு இருக்கோம்..அவங்க நம்மள விட இருபது வயசு ஜாஸ்தி..”
       “ அந்த இங்க்லீஷ் வாத்தியார்..”
       “ அடேங்கப்பா இன்னமும் ஞாபகம் இருக்கா உனக்கு?”
       ”இருக்காதா..அவரு சொன்னது இன்னமும் பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சிகிட்டு இல்ல இருக்கு..க்ளாஸ் ரூம்ல பசங்கள க்ரூப்பா பிரிச்சி..”
       “பிரிச்சி?”
       “ஒருத்தன் சொல்லணும் RAMU IS A GOOD BOY னு. உடனே அடுத்தவன் ராமு NOUN ங்கணும்..உடனே டீச்சர் நெக்ஸ்ட் என்று சொல்ல அடுத்தவன் IS VERB என்று சொல்லணும்.அவன் முழிச்சா உடனே அடுத்தவன் அதை சொல்லணும்..அப்புறம் முழிச்சவன் சுவற்றோட சுவரா நாற்காலி மாதிரி நிற்க, சரியா சொன்னவன் அவன் தொடையில உட்காரணும்..ஒரு தடவை நீ தப்பா சொல்ல, நான் கூட உன் தொடைல உட்கார்ந்திருக்கேன்”
       “அப்பவுமா?” – தன்னை மீறி வந்து விட்டது வார்த்தை  ஆராமுதனுக்கு.
        கனத்த மெளனம்.
        வார்த்தைகள் வீச்சரிவாளாகக் கிளம்பி இதயத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும்.
        சிவபாதத்திற்கு முகம் செத்து விட்டது ஒரு கணம்.
        ஒரு கணம் தான்..
        அடுத்த கணம் ஆராமுதன் சூழ் நிலையை மாற்றி விட்டார்..
        “ அத்த வுடுப்பா…அந்த ஜோக் ஞாபகம் இருக்கா..பாத்ரூம் போன ஹெச்.எம் ஐ ரூமைப் பூட்டி நாம ’கேரா’ பண்ணினோமே .
அன்னிக்கு கூடஸ்கூல் லீவ் விட்டாங்களே…”
       சின்னஞ்சிறு குழந்தை போல விழுந்து,விழுந்து சிரிக்க ஆரம்பித்தார், சிவபாதம்.
       சிரிப்பலைகள் பெருகி, சூழ் நிலை மிகமிக லேசாக, இப்போது ஆராமுதனும் விழுந்து, விழுந்து சிரிக்க…
       ”….இப்ப தாங்க இவரு முகத்துல முப்பது வருஷத்துக்குப்பறமா இப்படி ஒரு சிரிப்பு பார்க்கறேன்.. ”
       கண்களில் நன்றியுடன் சிவபாதம் மனைவி..
       அதற்கும் சிரித்தார் ஆராமுதன்…
       தொடர்ந்து சிரித்தார் சிவபாதம்..
       அந்த சிரிப்பு, கடந்த  முப்பது வருடங்களாக அரித்துக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சியையும், அதற்கு பரிகாரம் தேட வந்தவரின் குற்றமற்ற உணர்ச்சியையும் ஒரு கணம் அந்த  ஒரே கணத்தில் கரைத்து விட,
       “ ஐயா, அடிக்கடி வாங்க… நீங்க வந்தா இவரு இன்னும் கொஞ்ச நா உயிரோட இருப்பாரு..’
       கையெடுத்துக் கும்பிட்டார், சிவபாதம் மனைவி..
       “ அட நீங்க வேற.. நாங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் இருப்போமாக்கும்…அதுவும் ஆரோக்யமா…”
       சொல்லும் போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது ஆராமுதனுக்கு…அதன் தொடர்ச்சியாய் சிவபாதத்திற்கும் ஒட்டிக் கொள்ள…இப்போது சிரிப்பு என்ற ஒன்றை இத்தனை நாளும் மறந்திருந்த அவர் மனைவியும் லேசாய் சிரிக்க ஆரம்பிக்க..
       நெடுங்காலமாய் நெஞ்சிலே கர்ப்பத்தை சுமந்தவர்களின்
அவஸ்தை நீங்கி, ஒரே நேர்க் கோட்டுப் பாதையில் இருவர் கண்களும்  நேருக்கு நேராய் பாசத்துடன் பார்க்க ஆரம்பித்தன, அப்போது!
       இனி பெண்டாட்டி,பிள்ளை, மருமகள் என்று யார் யார்  அவரைப் பற்றி ஏளனமாய் பேசினாலும் அதனையும் ரசிக்கும் மன பக்குவம் ஆராமுதனுக்கு வந்து விட்டது, அந்த கணம் முதல் !!
                
 (தொடரும்)
        
மோகன்ஜி  தொடர்கிறார் .....       
        .
           

November 07, 2012

வேறென்ன கேட்பேன் ? - பகுதி 2


இதன் முதல் பகுதியைப் படிக்க


இனி இரண்டாம் பகுதி இதோ..


ஆராமுதின் பக்கம் வந்து சிவபாதம் உட்கார்ந்ததை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
'எழுந்துப்பாரான்னு கிடந்த மனுசனா இவுரு..'

அப்படி ஒன்றும் உடம்பு சொல் பேச்சு கேட்கவில்லைதான். கால் ஒரு பக்கம் இழுக்க கை ஒரு பக்கம் இழுத்தது. பிடிவாதம் ஜெயித்தது. பால்ய நண்பனைப் பார்த்த வேகமோ.. அல்லது மனதின் குதியாட்டமோ. பதறிப் போய் பற்றிக் கொள்ள வந்தால் உதறியதில் வீம்பு தெரிந்தது. ஆராமுது பிடித்துக் கொண்ட போது உடன்பட்டதில் லேசாய் பொறாமையும் கோபமும் வந்தது.

"தட்டு போதும்டா"

ஆராமுது சொன்னதைக் கேட்காமல் வாழை இலை. புது எவர்சில்வர் டம்ளர். சுடச் சுட இட்லி. சட்னி.

ஆராமுதுக்கு உள்ளே ஏதோ தளும்பியது. அவமானம் பின்னுக்குப் போய் ஆதி நாட்களின் பிரியம் மேலோங்கியது. எது கிடைத்தாலும் பகிர்ந்து கொண்ட நட்பு.

"ரொம்ப காரமா.. எண்ணை ஊத்துடி.. " சிவபாதம் இரைந்ததில் குரலில் கணீர்.
"அதெல்லாம் இல்லை.."
"இன்னும் ரெண்டு வைக்கட்டுமா"

அம்மா.. அம்மாவின் ஞாபகம் வந்தது. கேட்கக் கூட மாட்டாள். போட்டு விட்டு போவாள். வயிற்றைப் பார்க்காமல் மனசைப் பார்த்து ஊட்டிய காலம்.

சுடச் சுட காப்பி. சிவபாதம் மீண்டும் கட்டிலுக்கு வர.. பக்கத்தில் ஆராமுது. வயிறு நிறைந்து, மனம் மட்டும் குமுறிக் கொண்டு. எங்கிருந்து ஆரம்பிப்பது.. சுவர் காலண்டர் பின்னோக்கி போன பிரமை.

மகன், மருமகள், மனைவி பற்றிய விசாரிப்புகளுக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மனம் ஒட்டவில்லை. அதை சிவபாதமும் புரிந்து கொண்டதாலோ என்னவோ டக்கென்று பேச்சை நிறுத்தி ஏதோ கேட்டார்.

"ஆராமுது.. டேய் ஆராமுது"
"ஆங்க்.. என்ன"
"உன் கவனம் இங்கே இல்லைதானே"

ஆராமுது அவனையே வெறிக்கப் பார்த்தார். மனசுக்குள் ஒரு உக்கிரம் கிளம்பிவிட்டது. உன்னால் தானே.. உன்னால் தானே..

"என்னடா.. ஏதாச்சும் பண்ணுதா.. கொஞ்சம் படுக்கறியா.. பிரயாணம் ஒத்துக்கலியா"
சிவபாதம் குரலில் அக்கறை பீரிட்டது.

ஆராமுது தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். உன் பேச்சைத் தானே இத்தனை நாள் கேட்டேன்.
"வெளியே போயிட்டு வரேன்.."
"ஏண்டா.. இப்பதானே வந்த.. இரு.. அப்புறமா போகலாம்.." சிவபாதம் கெஞ்சிய குரலில் சொன்னார்.

ஆராமுது அதற்குள் எழுந்து விட்டார். சிவபாதம் முகத்தைப் பார்க்கவில்லை. கோபம் தெரிந்து விடும்.
"பத்து நிமிஷம்.. வந்துருவேன்"

படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டார்.
"அவன் போறான்டி.. கூப்பிடேன்"
சிவபாதம் மனைவியிடம் சொல்லியது கேட்டது.

"பச்சைப்புள்ளையா அவரு.. போயிட்டு வந்துருவாரு.."
ஆராமுது சிவபாதம் அருகில் அந்த நிமிஷம் இருக்கப் பிடிக்காமல் இறங்கி வந்து விட்டாரே ஒழிய.. தெருவுக்கு வந்ததும் எங்கே போவதென்று புரியவில்லை. தன்னிச்சையாய் கால்கள் நடந்தன. பண்டாபீஸ் இங்கேதானே.. எங்கே காணோம்.. முப்பது வருஷத்துக்குப் பிறகு தேடுவதில் ஒரு அபத்தம் புரிந்தது மனசுக்கு. தெருவின் முகம் மாறிப் போயிருந்தது. யாரோ கூப்பிடுவது போல.. இல்லை.. விரட்டுவது போல.. காலகள் வேகமாய் நடக்க பின்னாலேயே வந்து கையைப் பிடித்து இழுத்தார் ஒருத்தர்.

"அது நான் இல்லை.. நான் இல்லை" அலறினார் ஆராமுது.
"ஸார்.. பர்ஸை கீழே போட்டு போறீங்க.."
பர்ஸ். முகத்துக்கு எதிரே காட்டினார். ஆமாம். என் பர்ஸ். என் பணம்.

"தொலைச்சவுங்களுக்குத் தான் அந்த அருமை தெரியும் ஸார்..பிடிங்க.. பத்திரமா வைங்க"
தொலைச்சவங்க.. எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் வார்த்தைகள் உயிரோடு நின்று மிரட்டுகின்றன.

 'பாவி.. வெளங்குவியாடா நீ.. நல்லா இருப்பியா..'
'நான் இல்ல.. நான் இல்ல'
ஆராமுது வாய் விட்டு அலறி இருக்க வேண்டும். எதிரே இரண்டு மூன்று பேர் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

'புத்தி சரியில்லையா'

ஆராமுது திரும்பி நடக்க ஆரம்பித்தார். வேணாம், சிவபாதம்கிட்ட போயிரலாம்.. படியேறியபோது மீண்டும் நாயின் குரைப்பு.

"வந்துட்டாரு உங்க நண்பர்"
சிவபாதம் உடம்பு நடுங்கியது இவரைப் பார்த்து.

"நீ திரும்பப் போயிடுவியோன்னு பயந்துட்டேன்.."
"இல்ல" முனகினார் ஆராமுது.

"உன் கிட்ட பேசணும்டா"
"ம்ம்.."
"அவர் கொஞ்சம் படுக்கட்டுமே.."
"ஓய்வு எடுக்கறியாடா"
"ம்ம்"

பூக்குழி மிதித்த மாதிரி உடம்பு எங்கும் அனலடித்தது. தலைக்கு உசர கட்டை வைத்து மின் விசிறியின் அடியில் படுத்தார்.
இறந்த காலம் உயிர் பெற்று எழுந்து இரைச்சல்கள் கேட்டன.

"டேய்.. ஆராமுது.. நல்லா இருப்பியாடா.. '

'அவனை என்ன கேள்வி.. பிடிங்கடா'

'இரு கொஞ்சம் விசர்ரிக்கலாம்..'

'விசாரிக்க என்ன இருக்கு.. கையும் களவுமா பிடிச்சாச்சு'

'சிவபாதம் நீ இதுல தலையிடாதே..'

சிவபாதம் சட்டென்று ஒதுங்கியதைப் பார்த்து ஆராமுது அரண்டு போனார்.

டேய் சிவபாதம்..”
கூட்டம் மெல்ல மெல்ல முன்னேறியது. சிவபாதம் நகர்ந்து கொண்டே பின்னுக்கு போவது தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த மிரட்சி.. கெஞ்சல்.. பயம்..

ஆராமுதுவுக்கு இன்னது செய்வதென்ற நிதானம் தொலைந்தது.                                                                                                       (தொடரும்)

 இதன் 3ம் பகுதியை ஆரண்யநிவாஸ் - மூவார் முத்து தொடர்கிறார்...November 03, 2012

வேறென்ன கேட்பேன்?

தமிழ்ப் பதிவர் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தொடர் 3 வலைத்தளங்களில் பிரசுரமாகிறது...


நண்பர் மோகன் ஜி எடுத்துக் கொடுக்க.. நானும் மூவார் முத்துவும் (ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி) பின் தொடரப் போகிறோம் ..

முதல் பகுதி இதோ.. (மோகன் ஜி அவர்களின் வலைத்தளத்தில்  காணலாம்.)  http://vanavilmanithan.blogspot.in/2012/11/blog-post.html
=================================================================

உத்திஉத்தி கம்மங்கட்டு வூட்டப் பிரிச்சி கட்டு


காசுக்கு ரெண்டுகட்டு கருணைக் கிழங்குடா

தோல உரியடா தொண்டையில வையடா

வையடா வையடா வையடா....

சிவபாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு உத்திஉத்தின்னு இறங்கினாப் போதும்..

நாலு பேரையாவது ஏறக் கட்டிட்டுத் தான் லைனையே தாண்டுவான். சடுகுடு ஆட்டந்தான்னு இல்லை, வாலிபால், கோக்கோ எதுவானாலும் அதில் அவன் சூரன் தான் சந்தேகமேயில்லை.

ஆனாலும் அவன் சகவாசம் கூடாது என ரொம்பவே ஆராமுது வீட்டில் கண்டிப்பு காண்பிப்பார்கள் .அவனும் அவன் மூஞ்சியும்..

மேலக் கவரைத் தெருவில் இன்று ஆராமுதுக்கு தெரிந்தவன் அவன் ஒருவன் தான். தெரிந்த மீதி பேரெல்லாம் எங்கெங்கோ.. அந்த விவரமெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தெரியத்தானே போகிறது? சிவபாதத்தையே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

முப்பது வருஷம் தெரிஞ்சுக்காம இருந்தது ரெண்டு மணி நேரத்திலயா குடிமுழுகிப் போகும்.? ஏதோ கண்ணை மூடுமுன் தான் திரிந்த மண்ணை ஒரு தரம் பார்த்துடணும்னு ஒரு வெறி. அதுக்காக அதைப் பார்த்தப்பபின்னே ஆராமுது கண்ணை மூடிடுவான்னு நினைக்க வேண்டாம். ‘கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறு’ன்னு பங்கஜமே சர்டிபிகேட் இல்லே குடுத்திருக்கா? நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும்.

ஆச்சு அணைக்கரை வந்தாச்சு.. பல்லாங்குழியாய் ரோடு எல்லாபுறமுமாய் பஸ்ஸோ ஆட்டி எடுத்தது.. செய்யறதையெல்லாம் செஞ்சி போட்டு தெகிரியமாய் இந்த ஊருக்கே வரையா படவான்னு உலுக்கிஉலுக்கிப் போட்டது ஆராமுதை..

என்னைப் பார்த்தா யாருக்கும் அடையாளம் தெரியுமா? ஆராமுதுக்கு வழியெங்கும் இந்தக் கேள்வி மாளாத யோசனையாய் நீண்டபடி வந்தது. இருபத்தினாலு வயசிருக்குமா அப்போ? தன் வயசுக்காரர்கள் ஆறேழு பேர் இருப்பமா? மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா. அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!

அப்படி யாரும் தன்னை தெரிஞ்சிண்டா தான் என்ன? அவமானப் படும்படி ஏதும் சொன்னாத்தான் என்ன? ஆம்படையாளும்,பிள்ளையும்,சொச்சத்துக்கு மருமகளும் செய்யாத அவமானமா? செத்திருக்கணும் அப்பவே செத்திருக்கணும்.. உசிரில்லே வெல்லக் கட்டி?

பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. புழுதி பறக்க இருந்த பழைய பொட்டவெளியா? கட்டடமும், கடைகளும்,ஏ.டி.எம்முமா எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இல்லையின்னா அந்த இடம் பஸ் ஸ்டாண்டுன்னு தெரியாம போயிருக்கும். ஆராமுது ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்.

“மேலக் கவரைத் தெருவுக்கு விடப்பா”.

ஏற இறங்க பார்த்த ஆட்டோக்காரன். ~அது என்னாதுங்க எனக்கு தெரியாத தெருவு. இந்த வெளங்காத ஊருல?

“பண்டாபீஸ் பக்கத்துல”.

“பண்டாபீஸா. அப்படின்னா?”

அங்கே போய்க் கொண்டிருந்த இன்னொரு பாம்புக் காதுக்கு இந்த சம்பாஷணம் விழுந்தது. “நம்ப மந்திரி தெருவத்தான் அப்போ மேலக் கவரைத் தெருன்னு சொல்லுவாங்க. சாரு அங்க யாரைப் பார்க்கணும்?” அருகில் வந்து நெற்றியில் உள்ளங்கையை சார்பாக்கி ஆட்டோவினுள் பார்த்தார்.

இவரண்டை சொல்லலாமா?..”சிவபாதம் சிவபாதம்னு’

அவருக்கு நீங்க என்னவாகனும்..

“கிட்டின சொந்தம்”

“நீங்க பார்த்தா பிராம்மணா போலிருக்கேளே?”

“அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”

“அது சரி! நீ போப்பா” என்றவர் முனகிக்கொண்டே போனார்..’நல்ல கொண்டான் கொடுத்தான்’

தெருமுக்கிலேயே ஆராமுது இறங்கிக் கொண்டார். எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒண்ணைத் தவிர

ஓட்டு வீடுகள், தாயம்மாவின் குடிசை, தெருவின் ரெண்டு பக்கமும் இருந்த முனிகிபாலிட்டி தண்ணீர் குழாய்கள், வீடுகளை ஒட்டிக் கறுத்து தேங்கி நின்ற சாக்கடைகள் எதையும் காணோம். பிளாட்டுகள் வந்திருந்தன. சோடா பவுண்டன்.. நிலா பியூட்டி பார்லர்...

வந்தாச்சு . ரெண்டு மாடி வீடு . இதுவாய்த்தான் இருக்கணும். “சிவபாதம்!”

“யாருங்க அது.?” அவன் மனைவியாகத்தான் இருக்க வேணும்..

உள்ளே பேச்சுக் குரல்.. மீண்டும் பால்கனிக்கு அவள் வந்தாள். “மேல வாங்க. தைரியமா வாங்க.. இது கடிக்காது” என்றாள் நாயை வாஞ்சையோடு பார்த்தபடி.

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே என்று நினைத்துக் கொண்டார் ஆராமுது.

படுக்கையில் சாய்ந்திருந்த சிவபாதம் கண்களை சுருக்கிக் கொண்டார்.

“தெரியுதா?”

“வா ஆராமுது..” குரல் கம்மி கண்கள் கலங்கின சிவபாதத்துக்கு.

“எப்படி இவ்வளவு தூரம்?”

“அடடா! இவ்வளவு வருஷத்துக்கப்புறமும் என்னை அடையாளம் தெரிஞ்சுதா?”

“தெரியாம பின்னே? ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.. அதுல நீ ஒண்ணு.. நீ வருவே நீ வருவேன்னு தாண்டா அந்தராத்மா அலறிக்கிட்டு கிடந்தது..” இருமலும் இரைப்புமாய் திணறியது சிவபாதத்தின் குரல். “இனிமே கவலை இல்லே. இன்னொருவன் தன்னால வந்துடுவான்”

“இன்னொருத்தானா? யாரது?” இளைத்த அவர் கரம்தொட நீண்டது ஆராமுதின் வலக்கை.

“தர்மராஜன்.. யம தர்மராஜன்..”


 (தொடரும்)

  இதன் அடுத்த பகுதியை நான் தொடர்கிறேன்..  கூட வரிங்களா..??