June 24, 2011

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

ஹோய்..ஹோய்' என்று மெலிதான சத்தம் கேட்டது.

பல்லக்கு தூக்கிகள் முகத்தில் ஆஸ்வாசம். சில்லென்ற காற்று முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது.
"நாம் அரங்கனை நெருங்கி விட்டோம்" என்ற குரல் கேட்டது.
"எப்படி சொல்கிறீர்கள்"
"தென் திருக் காவிரியின் சமீபம் வந்து விட்டோம்.. சோலைகள் அதோ தெரிகின்றன.. என்ன ஒரு சுகந்தம்.. குளிர்ச்சி ..காற்றில்.பரிமள வாசனை.. "
"தேவி உறங்குகிறாரா"
மெல்லிய நகைப்புடன் ஒருவன் சொன்னான்.
"அவருக்கு உறக்கமா.. அரங்கனைப் பார்க்கும்வரை அவருக்கு வேறேது நினைப்பு" "மானுடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே"
பல்லக்கு உள்ளே ஆண்டாள் இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டுதானிருந்தாள். திரைச் சீலையை விலக்கி எட்டிப் பார்த்ததில் விஷ்ணுசித்தர் தம் தளர்ந்த நடையில் முன்னால் சென்று கொண்டிருந்தது தெரிந்தது.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து எத்தனை கல் தூரம்.. ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லவில்லை.
என்றைக்குத்தான் சொல்லியிருக்கிறார்..

'அப்பா..'
'என்ன குழந்தாய்'
'எனக்கு நேரம் வந்து விட்டதப்பா'
பெரியாழ்வார் தாம் பெறாத மகளை உற்றுப் பார்த்தார்.
என்ன ஒரு தீட்சண்யம்.. கண்களில்.
இவள் மானிடப் பிறவியல்ல. இத்தனை நாட்கள் அப்பா, பெண்ணாய் ஆடிய நாடகம் அதன் திரையைப் போடும் காலம் வந்து விட்டது.
மளுக்கென்று உள்ளே ஏதோ தளும்பியது. பிரியப் போகிறோம் என்பதே இவ்வளவு வேதனை தருமா.. கேசவா..
'போகலாம்மா'
வேறு பேச்சே இல்லை. மளமளவென்று வேலைகள் நடந்தன.
ஸ்ரீவில்லிப்புத்தூரே அமர்க்களப்பட்டது.
'பட்டர்பிரான் கோதை ஸ்ரீரங்கம் போகிறாளாம்'
'அரங்கனைத்தான் மணக்கப் போகிறாளாம்'
'என்னடி இது அதிசயமா இருக்கு'
'கோதை விஷயத்துல எல்லாமே ஆச்சர்யம் தான்'
ஆண்டாளின் காதுகளில் இந்தப் பேச்சு விழாமலில்லை. ஆனால் அவள் அதற்காக பதில் பேசுவதும் இல்லை.

திரு நந்தவனத்தில் திருத்துழாய் மண்டிக் கிடந்தது. அதன் வாசம் காற்றில் மணத்துக் கொண்டிருந்தது. அதன் மண்ணில் போய் அமரும் போதெல்லாம் தாய் மடி உணர்கிற மனசு.
அங்கே தான் விஷ்ணுசித்தர் ஆண்டாளைக் கண்டார் முதன் முதலில்.
அழாத அழகான குழந்தை.. துளசிச் செடியின் கீழ். அவரைப் பார்த்ததும் சிரித்தது.
'யார் இங்கே விட்டது.. '
நந்தவனம் முழுக்க பார்வை அலசியது. ஒரு வாரமாகவே ஏதோ ஒரு நினைப்பு. விடியலில் தூக்கம் கலைந்து பிரம்ம முஹூர்த்தத்திற்கு முன்பே விழிப்பு.
'உங்க கூட வந்து இருக்கட்டுமா'
பிஞ்சுக்குரலின் கொஞ்சல் த்வனி. ஆனால் எதிரே யாரும் இல்லை.
'ப்ரபோ.. என்ன இது உன் விளையாட்டு.. ஏதோ என் போக்கில் உனக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து காலத்தைக் கழிக்கிறேன்.. அடியேனுக்கு அதுவே போதும்'
'அப்பா..'
இந்த முறை ஸ்பஷ்டமாய் குழந்தைக் குரல். என்ன அழகான மழலை..
ஒரு பக்கம் அந்தக் குரலின் மீது மனசுக்குள் ஈர்ப்பு.. இன்னொரு பக்கம் சம்சாரக் கடலில் பிணைக்க விதியின் விளையாட்டா என்ற அச்சம்..
இதோ கனவு பலித்து எதிரே துளசி மண்ணில் பிஞ்சுக் குழந்தை.
அதன் பாதங்கள் சிவந்த மலர் போல..
'முகுந்தா.. கேசவா.. '

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர்! வந்து காணீரே


'கோதை.. கோதை..'
யசோதையாகிப் போன பெரியாழ்வார் இப்போது தந்தையாகவும் ஆகிவிட்டார்.
அவள் வளர்ந்ததில் அவர் பங்கு ஏதுமில்லை. என்ன ஆச்சர்யம்.. தவழ்ந்தது.. பிடித்து நடந்தது.. அவர் பாசுரங்களைக் கூடவே பாடியது.. எதுவுமே மானுடக்குழந்தையின் செயல்கள் இல்லை.. என்ன ஒரு அவசரம். ஒரு வயதுக்குள் ஸ்பஷ்டமாய் பேச்சு.
'கோதை.. நீ யாரம்மா'
வாய் விட்டு கேட்டிருக்க வேண்டும்.
“என்னப்பா..”
“ஒண்ணுமில்லை”
தேவ ரகசியங்கள் அப்படியே இருப்பதுதான் சுவாரஸ்யம்.

வடபத்ர சாயிக்கு கோதை சூடிக் கொடுத்த மாலைகளை சூடிக் கொள்வதில் தான் எத்தனை ஆனந்தம். அதை முதலில் பார்த்த ஆழ்வார் ஆடிப் போனார்.
'என்ன காரியம் பண்ணி விட்டாய் அம்மா'
குழந்தை மலங்க விழித்தது. அதில் என்ன தப்பு..
'அபச்சாரம் மகளே'
'அப்பா..'
வேறு மாலை கட்டி எடுத்துபோனார் அன்று. திரும்பி வந்தால் கோதை அன்று சாப்பிடவே இல்லையாம். தேஜஸ் குறையாமல் படுத்திருந்த கோதையைப் பார்த்தார்.
'எழுப்பலாமா'
வேண்டாம். அவள் தப்பு புரியட்டும். மனசு வைராக்கியம் போதித்தது. தாமும் உணவருந்தாமல் படுத்தார். கனவில் கண்ணன் வந்தான். வடபத்ர சாயியின் சித்தம் வேறு விதமாய் இருந்ததைப் புரிய வைத்தான்.
'விஷ்ணுசித்தரே.. உமது மாலை இன்று பரிமளிக்கவில்லை எமக்கு.. கோதை சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகப்பு'
தூக்கிவாரிப் போட்டது ஆழ்வாருக்கு.
'எம்பெருமானே.. என்ன சொல்கிறீர்'
'அவள் என்னுடையவள்..'
வேறு வார்த்தைகளே இல்லை. இதை விட அழகாய் எப்படிச் சொல்ல முடியும்..
மறுநாள். ஆழ்வார் மாலையைத் தொடுத்து கோதையிடம் கொடுத்தார்.
'சூடிக் கொள் கோதை..'
அவள் அதை எதிர்பார்த்த மாதிரி ஆட்சேபம் தெரிவிக்காமல் வாங்கி சுவாதீனமாய் அணிந்து கொண்டு ஆடியில் அழகு பார்த்து மீண்டும் களைந்து குடலையில் வைத்துக் கொடுத்தாள்.
பட்டர் வாங்கும்போதே சொல்லி விட்டார்.
“ஸ்வாமி.. இன்று நேற்றை விட அழகு ஜொலிக்கிறது மாலையில்..”
எம்பெருமானின் முகத்தில் முறுவல். ஆழ்வாரை கடாக்ஷித்தான்.

'கோதை பாவை நோன்பு நோற்கப் போகிறாளாம்..'
எல்லோர் வீட்டிலும் பெண்குழந்தைகள் அடம் பிடித்தன.
'கண்ணனுக்காகவாம்.. ஆய்ப்பாடி பெண்களைப் போல..'
'நாங்களும் போவோம்'
'என்னடி இது அதிசயம்'
'எம் பொண்ணு இத்தனை சமத்தா'
'கோதை பண்ண சாமர்த்தியம்'
வில்லிப்புத்தூர் இன்னொரு ஆய்ப்பாடி ஆனது. மார்கழிக் குளிர் மறைந்து போனது. பாவை நோன்பு நோற்று பாடிப் பரவசம் ஆனார்கள்.
“ஏண்டி பெண்ணே.. கண்ணன் வருவானா.. உன் பாட்டுக்கு'
சீறிய சிங்கம் அறிவுற்று தீ விழித்தது அப்போது கோதையின் பார்வையில்.
'அதில் என்ன சந்தேகம் மாமி..'
'இல்ல.. நாமெல்லாம் வெறும் மனுஷ ஜென்மம்டி.. பகவானைப் பார்க்கறதே கஷ்டம்.. இதுல அவனே புருஷனா..'
'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமேயாவேம் உனக்கே யாமாட்செய்வோம்'
'கோவிலுக்கே வரதில்ல.. ஆனா பாரேன் அவளுக்கு.. என்ன நெஞ்சழுத்தம்.. பகவானைத்தான் கல்யாணம் பண்ணிப்பாளாம்'
'ஆழ்வார்ட்ட எல்லா திவ்ய தேச எம்பெருமான்களைப் பத்தி கேட்டாளாம்.. ஸ்ரீரங்கம் நம்பெருமாளைப் பத்தி கேட்டதும் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாளாம்'
'என்னடி இது அதிசயம்.. தக்குணூண்டு பொண்ணா இருந்துண்டு.. இப்படி ஒரு பிடிவாதமா'

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து
என்னைக் கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழீ! நான்


'நிஜமாவே அவ மனசுல பகவான் தாண்டி இருக்கான்'
'ஆழ்வார் படற வேதனையைப் பார்த்தா பாவமா இருக்குடி'
'சீச்சீ.. அவருக்கு கோதை என்ன செஞ்சாலும் ஆட்சேபணை இல்லைடி'
ஊர் மக்கள் ஆழ்வாரையும் புரிந்து வைத்திருந்தார்கள். கோதையையும் புரிந்து வைத்திருந்தார்கள்.

விஷ்ணுசித்தருக்கு முதலில் கொஞ்சம் மனக்குறைதான்.
'ஏம்மா.. இவ்வளவோ ஈடுபாட்டோட இருக்க.. ஸந்நிதிக்கு வரமாட்டேங்கிறியே'
'இல்லப்பா'
'அதான் ஏம்மா'
கோதையின் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். 'போனால் என்னால் திரும்பி வர முடியாதே'
'ம்ம்..'
மேலே வற்புறுத்தாமல் விட்டு விட்டார். கோதை எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை.
'அரங்கனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்' என்று சொன்னபோதும் அவரால் மறுப்பு சொல்ல முடியவில்லை. 'சாத்தியமாடி குழந்தே' என்று மனசுக்குள் எழுந்த கேள்வி கோதையின் தீர்க்கமான பார்வையின் முன் அடிபட்டுப் போனது.
ஸந்நிதிக்கு போனார். 'என்னப்பனே.. அடியேன் என்ன செய்யட்டும்'
விடியலில் மீண்டும் கனவு. 'அழைச்சுண்டு வா எம்மிடம்' அரங்கனின் குளிர் முறுவல் தெரிந்தது.
இதோ கிளம்பியும் வந்தாச்சு.

வடதிருக்காவிரியின் கரையில் மண்டபம். தீர்த்தமாடி புது மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டும் ஆகிவிட்டது. அரங்கன் கோவில் முரசின் ஒலி கேட்டது. கைங்கர்யபரர்கள் மாலை மரியாதைகளுடன் வந்தார்கள்.
“ஸ்வாமி.. ஸந்நிதிக்கு அழைச்சுண்டு வர எங்களுக்கு உத்திரவு”
திருவீதி ஜனங்கள் ஆச்சர்யமாய் சூழ்ந்து பின்னாலேயே வந்தார்கள்.
யானை பிளிறிற்று.. நடக்கப்போகும் அதிசயம் உணர்ந்த மாதிரி. 'ரெங்கா.. ரெங்கா'
நாழிகேட்டான் வாசல் நுழைந்து பிரதட்சிணமாய் வந்து இதோ மூலஸ்தானம். இரு திருமணத்தூண்கள் நடுவில் காயத்ரி மண்டபத்தில் கஸ்தூரிரெங்கன். சயனத்திருக் கோலம்.
தேவியை மீண்டும் பார்த்ததில் உல்லாசம் திருமுக மண்டலத்தில்.
'தீபாரத்தி ஆகட்டும்'
பட்டர் கை நடுங்க தீபம் உயர்த்திக் காட்டினார்.
திருவடி.. அயனைப் படைத்த நாபிக்கமலம்.. ஸ்ரீவத்ஸம்..திருவார மார்பு.. கண்டம்.. திருமுகம்.. பவளச் செவ்வாய்..
'வா.. பூதேவி.. உன் ஆசை தீர என்னைத் தமிழால் ஆண்டாய்.. ஆண்டாளுமானாய்.. அத்தனை ஆழ்வார்களையும் விஞ்சியது நின் தமிழ்.. இனியொருவர் உன்னைப் போல வரப் போவதுமில்லை.. மனதுக்கினியானைப் பாடப் போவதுமில்லை..'
ஆழ்வார்.. பட்டர்.. ஸ்ரீபாதந்தாங்கிகள்.. ஜனங்கள்.. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க.. தடுக்கவோ.. தவிர்க்கவோ இயலாத படி.. ஆண்டாள் தனக்கான இடம் என்கிற ஸ்வாதீனமாய் மெல்லடி பெயர்த்து கர்ப்பக் கிரஹத்தினுள் போய்..

ஆழ்வார் தம் பெருமையெல்லாம் மறந்து தேம்பியதை அத்தனை பேரும் பார்த்தார்கள்.


ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான்
(கல்கி - 26.06.2011)

என் படைப்புத் திறமையை வெகுவாய் ஊக்குவிக்கும் ”கல்கி” க்கு மனப்பூர்வமான நன்றி !


June 21, 2011

முன்னுரை

திருமதி வித்யா சுப்ரமணியத்திற்கு நன்றி.. என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு.

நண்பர் ஆர். ஆர். ஆர். சொன்னது போல முன்னுரை என்றாலே ஞாபகத்திற்கு உடனே வருவது ஜேகே. தான். அவரது முன்னுரைகள் மட்டுமே ஒரு புத்தகமாய் வெளி வந்திருக்கின்றன.

அவரது கதைகள் எவ்வளவு பேசப்படுகிறதோ அதைப் போலவே அவரது முன்னுரைகளும் பரபரப்பாய்ப் பேசப்பட்டன. ஒரு சிங்கத்தின் கர்ஜனையை ஒத்தது அவரது எழுத்துப் பிரகடனம்.

‘சொல்லுகிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயங்களைக் கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லி விட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம் நான் கண்டு கொண்டு விட்டேன்..’
என்கிறார் சில நேரங்களில் சில மனிதர்கள் முன்னுரையில்.

நாவலின் முடிவு குறித்து வருத்தப்பட்டவர்கள் பற்றி சொல்கிறார்.

’நீங்கள் வருத்தப்படுகிறீர்களா.. ரொம்ப நல்லது. அதற்காகத்தான் அந்த முடிவு. அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்து கொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்.’

’ஒவ்வொருவரும் தத்தம் மனசுக்குச் சரி என்று படும் காரியத்தைச் செய்ய ‘ஜனநாயக தர்மம்’ மறுக்கிறது. எது எல்லோருக்கும் சரியோ- எது எல்லோருக்கும் ஓரளவு சரியோ- எது பெரும்பான்மையோருக்கு சரியோ அது ‘தவறே’ எனினும் அதனை அனுமதித்து அடிபணிவது ஜனநாயக தர்மம்!

இந்த மாதிரிச் சமூக விதிகளை மறுப்பதும் மாற்றுவதும் அதன் அநியாயமான தீர்ப்புகளைக் காலத்தின் முன்னே மறுபரிசீலனைக்கு வைப்பதும் இலக்கியத்தின் பணியாகிறது.

எனவேதான் இலக்கியத்தில் ‘ஜனநாயக தர்மம்’ அனுமதிக்கப்படுவதில்லை. முரண்படுவதற்குச் சம்மதமளிக்கிற பண்புதான் இலக்கியப் பண்பாகும்.’

ஜேகே வை ஏற்கிறோமோ, மறுக்கிறோமோ.. அவரது முன்னுரைகளின் முழக்கம் நம்மை யோசிக்க வைத்து.. அறிவின் தீட்சண்யத்தில் கட்டுண்டு நிற்போம்.

நெய்வேலி பாரதிக் குமார் அவர்களின் ‘முற்றுப் பெறாத மனு’ தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரை எத்தனை இயல்பாய் எழுத்தின் ரகசியத்தை உண்ர்த்திப் போகிறது.. பாருங்கள்.

‘ஒரு பானை வனையப்படுவதை விட மிகச் சிறந்த இலக்கியத்தை யாரும் படைத்து விட முடியாது. ஒரு குழந்தையின் முத்தத்தை விட இனிப்பான அனுபவத்தை எந்த சிறுகதையும் தந்து விட முடியாது. ஒரு பூ மலர்வதை விட மென்மையை எந்த கவிதையும் உணர்த்தி விட முடியாது.

இருந்தாலும் மனித முயற்சியானது எல்லாவற்றிலும் உச்சத்தை தொடுவதற்காக தவ்விக் கொண்டே இருக்கிறது. கடல் வழி பிரயாணத்தில் கண்டுணர்ந்த தேசங்கள் பலவும் ஒன்றை தேடப்போய் தென்பட்ட வேறொன்றுதான். அதுதான் இயற்கையின் அற்புதம்.’

இடைசெவல் கிராமத்துக்காரர் என்ன சொல்கிறார் பார்க்கலாமா..

’என்னுடைய எழுத்துக்களைச் சத்தமிட்டு வாசிக்கக் கூடாது. மனசுக்குள்ளேயே - உதடுகள் அசையாமல் கண்களால் வாசிக்க வேண்டும் மௌனத்தில் பிறந்த எழுத்துக்களை மௌனமாகவே படித்து அறிந்தாலே அதன் ஜீவனை உணர முடியும். மௌன வாச்சிப்புக்கென்றே என் நடை உண்டாக்கப்பட்டது. உரத்து வாசிப்பதற்கு அல்ல..’ என்று சொல்கிறார் கி. ராஜநாராயணன்.

படைப்பில் யாவும் சொல்லி விடு.
வான் படைப்பாளி. அதன் பிறகும் சொல்ல
என்ன இருக்கிறது? அதையும் மீறி தனது
படைப்புகள் பற்றி ஏதாவது சொன்னால்
படித்துப் பார்க்க சோம்புகிறவர்களுக்கும்
படிக்காமலே மதிப்புரை செய்கிறவர்களுக்கும்
‘அவல்’ கிடைத்தது போல. (கி. ராஜநாராயணன் கதைகள் முன்னுரை)

அமிர்தம் சூர்யா சொல்கிறார்.. ‘கடவுளைக் கண்டு பிடிப்பவன்’ தொகுப்பில்.

என் புரிதல், திறன், ஆழம். குணம், வெளிப்பாடு இவ்வளவுதான். நான் இவ்வளவுதான் என்று இந்தக் கதைகளின் மூலம் உங்கள் முன் வைக்கிறேன். மற்றவையெல்லாம் உங்களுடையவை. சிலவற்றைச் சொல்லிவிட்டு நான் உங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

புனைவுக்கும் வாழ்வுக்குமான இடைவெளி அழிந்து வாழ்வே ஒரு புனைவாகியிருப்பதை, புனைவு மெல்ல மெல்ல வாழ்வாக உருமாற்றம் அடைவதைத் தரிசிக்கும் சாத்யத்தை சில கணங்களேனும் நான் உணர்ந்திருப்பதால் அவற்றை எழுதிப் பார்க்கிறேன்.

புதுமைப்பித்தன் சொல்கிறார்..

இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும் அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒரு விதமான சீலைப் பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படி சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப் போகிறது?

எனக்கும் கி.ரா. பேச்சில் இணக்கம்தான். வாசகனுக்கும் படைப்புக்கும் நடுவே யாரும் குறுக்கே வரக் கூடாத சூழல் தான் பொருத்தம். ஆனால் சில படைப்பாளிகள் (ஜேகே., லா.ச.ரா., போல) அவர்களின் முன்னுரைகள் மூலம் அடைபட்டுக் கிடக்கும் நம் இதயக் கதவைத் திறந்து, ஒரு விசாலமான பிரதேசம் உருவாக்கி, வாசிக்கப் புகவிருக்கும் படைப்பினை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியத்தை உண்டாக்கி விடுகின்றன.

எழுத்து, கலை, இலக்கியம், இப்படி என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி.. வாசிப்பின் சுகானுபவம் உணர்ந்த தலைமுறையில் என்னைப் பிறப்பித்த மகா சக்திக்கு தரை படிந்து என் நமஸ்காரம் எப்போதும்.

அதைத் தொலைத்து விட்ட வருத்தச் சுவடு கூட அறியாமல் இப்போது அடுத்த தலைமுறை வந்து விட்டது. நல்ல நல்ல பதிவர்கள் நாவிலே விளையாடும் எழுத்துத் தெய்வம் கணினியிலும் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

யாதேவி ஸர்வ பூதேஷு வித்யா ரூபேண ஸம்ஸ்திதா..
நமஸ்தஸ்யை.. நமஸ்தஸ்யை.. நமஸ்தஸ்யை.. நமோ நமஹ..
June 19, 2011

பார்வை


’என் கிட்ட உனக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு’

வித்யா கேட்டதும் எனக்கு உடனே என்ன சொல்வதென்று புரியவில்லை.

‘எல்லாம்தான்’

‘லூசு.. குறிப்பா என்ன பிடிச்சிருக்கு’

‘இந்த மாதிரி உரிமையா திட்டறது’

’எதுக்குமே நேரடியா புரிஞ்சுகிட்டு பதில் சொல்ற புத்தியே உனக்குக் கிடையாதா’

‘சரி.. நீ சொல்லு.. என் கிட்ட உனக்கு என்ன பிடிச்சிருக்கு’

மடக்கப் பார்த்தேன்.

‘ஒண்ணே ஒண்ணுதான்.. நீ என் மேல வச்சிருக்கிறதா நான் நினைச்சுகிட்டு

இருக்கேனே.. அந்தப் பிரியம்’

‘ஏய்..’

’இப்ப நீ சொல்லு’

எதிரில் சாயம் போன சுடிதாரில் எந்த மேக்கப்புக்கும் முயற்சிக்காத

பெண்ணைப் பார்த்தேன்.

‘எவ்வளவோ சொல்லலாம்பா’

‘அதுல நெம்பர் ஒன் சொல்லு போதும்’

ம்ம்.. வேண்டுமென்றே யோசித்தேன். அவளை ஏற இறங்கப் பார்த்தேன்.

விரல்கள் நீளம். தலைமுடி குட்டையும் இல்லை.. ரொம்ப நீளமும் இல்லை.

கழுத்தில் ஒரு வசீகரம்.

‘சொல்லித் தொலை’ என்பது போல பொறுமையிழந்து பார்த்தாள்.

அந்தக் கண்கள்.

‘வித்யா.. சொல்லட்டுமா’

‘ம்ம்’

‘அப்புறம் கோவிச்சிக்கக் கூடாது..’

‘ஏன் எடக்கு மடக்கா ஏதாச்சும் சொல்லப் போறியா’

‘சேச்சே’

‘அப்புறம் என்ன.. சொல்லேன்.. ‘

‘முத முதல்ல உன்னைப் பார்த்தப்பவும் சரி.. இப்பவும் சரி.. உன்கிட்ட எனக்குப்

பிடிச்சது .. ‘

வித்யா இப்போது என்னையே உற்றுப் பார்த்தாள்.

‘உன்னையே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ஆனா உன் கிட்டன்னு குறிப்பா

சொன்னதால.. ‘

‘.....’

‘ உன் கண்கள் தான் வித்யா.. ‘

‘நிஜம்மா’

‘ம்.. ‘

சட்டென்று அவள் கண்களுக்குள் என் உருவம் குதித்து விழி நீரில் மிதந்து

நீச்சலடித்து எங்கோ தொலைந்து போனது.June 14, 2011

கடிதம்


கடிதங்கள் அற்றவாழ்க்கை
முகவரியற்றுப் போகும்
எண்களால் அறியப்பட்டு
கைபேசிகளில் பதிந்து
தொடர்பு எல்லைக்கு அப்பால்
நம் உறவுகள்
பின்னப் பட்டிருக்கிறது
எலக்ட் ரானிக் இழைகளால்..
மாயக் குரல் வலையில்
அமிழ்ந்து கிடக்கும்
மனிதர்களைக்
கரை சேர்க்கும்
காகிதக் கப்பல்..
வார்த்தைத் துடுப்புகளால்
இயக்கப் பெற்று
மசியாத மனசையும்
'மசி'ய வைக்கும் வண்ணங்கள்..
காகிதங்களைச் சேமிப்போம்..
நட்பின் எண்ணங்களைச்
சுமந்து வரும்
கடிதங்களாய்!


June 12, 2011

சாக்லேட் காதல்
"நான் உன்னோட இனிமே பேசப் போறதில்லை.."
சொல்லி விட்டு அனு போக யத்தனித்தாள்.
"ஏன்" சரவணக்குமாரிடம் திகைப்பு.
"அதைச் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல"
"சொல்லணும். கட்டாயம்தான்."
"உங்கிட்ட பேச ஆரம்பிச்சப்ப காரணம் கேட்டியா"
"கேட்கல.. ஆனா நீயே சொன்ன.. இத்தனை பேர் மத்தில என்னைப் பார்த்தா மட்டும் உனக்குள்ர ஒரு புறாவின் சிறகடிப்பு தெரிஞ்சிதுன்னு சொன்னியே.. இப்ப அந்தப் புறாவை வறுத்து தின்னுட்டியா"
"ஏய்.. என்ன பேசற"
குரல் சற்று உயர்த்தியதில் ஒருத்தன் திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் கண் சிமிட்டியது. இன்று சனிக்கிழமை. அவசர வேலைக்கு வந்தவர்கள் மட்டுமே. இன்றும் நாளையும் அலுவலகம் வரத் தேவை இல்லை. 'வா இளநி குடிக்கலாம்' என்று வெளியில் அழைத்து வந்த போதுதான் ஒப்பந்த முறிவுப் பத்திர வாசிப்பு.
எந்த நிமிடமும் தொலை தூர அழைப்பு வரக் கூடும். தஸ் புஸ்ஸென்று அன்னிய மொழியில் திட்டக் கூடும். மனசு பிராஜக்டில் இல்லை.எதிரில் அடம் பிடிக்கிற பெண்ணிடம் முடங்கிக் கிடக்கிறது. அலுவலக எல்லைக்கு வெளியில் என்றால் 'அடங்க மாட்டியா' என்று மிரட்டலாம். அல்லது கால் மடக்கி பூங்கொத்து நீட்டலாம்.
பெண்கள் ரட்சகிகள் என்று கை கோர்க்கப் போனால் ராட்சசிகளாய் மாறி மிரட்டத் துவங்கி விடுகிறார்கள். ஆரம்ப நாட்களில் சிரிப்பும் கண் சிமிட்டலும் ஏதோ ஒரு வாசனையின் தாக்கமும் மட்டுமே தெரிகிறது. சகல ஆயுதங்களையும் பட்டியலிட்டு காட்டி விட்டால் 'நீ இவ்வளவுதானா' என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. ஒன்றிரண்டை ஒளித்து வைக்கும் சாமர்த்தியசாலிகள் மட்டுமே கடைசி வரை தாக்குப் பிடிக்கிறார்கள்.

இளநீர்க்காரி கூட அவளுக்குத்தான் சப்போர்ட். சர்சரென்று வீச்சரிவாளால் இளநீரின் தலையை சீவும் போது இளநீர்க்காரியை பிரமிப்புடன் பார்த்தான்.
"கையை சீவிராது?"
"சீவாது" என்று அனு தான் சொன்னாள்.
இளநீர்க்காரி இவளைப் பார்த்தாலே சிரிக்கிறாள். இத்தனைக்கும் அனு அவளிடம் பேரம் பேசித்தான் வாங்குகிறாள். இவன் எப்போதும் அவள் சொன்ன தொகையைக் கொடுத்து விடுவான்.
"என்ன.. லலிதா.. இந்த ஆம்பளைங்கள இளநி சீவற மாதிரி சீவணும்."
ஓ.. இளநீர்க்காரியின் பேர் கூடத் தெரியுமா..
"அப்படி என்ன பண்ணிட்டோம்.."
"என்ன பண்ணல"
"நான் என்ன பண்ணேன்"
"லலிதாக்கு ரெண்டு பசங்க.. ரெண்டும் பொண்ணு.. அவ புருஷன் குடிச்சிட்டு அலையறான்.. இவ ஆம்பள மாதிரி வேலை பார்க்கறா"
"ஐ பிட்டி ஹர்.. "
"உன் அனுதாபம் தேவை இல்லை"
" இங்க பாரு .. உலகத்துல கஷ்டப்படாதவங்க யாருமே இல்ல.. எல்லாருக்கும் கஷ்டம்தான்.. ஊழல் பண்ற அரசியல்வாதி கூட மாட்டிகிட்டு அவஸ்தைப்படறான்"
"அவனும் உழைச்சுப் புழைக்கறவங்களும் ஒண்ணா"
"அப்படி நான் சொல்லல.. கஷ்டம் பொது.."
ஸ்ட் ரா வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தவளை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான்.
"என்ன பார்க்கற"
"ஆக்சுவலா இளநிய அப்படியே தூக்கிக் குடிக்கணும்.. அதான் டேஸ்ட்.. ஸ்ட் ரா உதவாது"
"உன் டேஸ்ட் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது"
அவள் குரலில் தெரிந்த அதிருப்தி இப்போதுதான் புரிய ஆரம்பித்தது அவனுக்கு.
"ஏய்.. என்ன பிரச்னை உனக்கு"
"என்னைப் பத்தி என்ன சொல்லிகிட்டு இருந்த அஷோக் கிட்ட"
அவள் குரலில் தெரிந்த கடுமை விஷயம் சீரியஸ் என்று உணர்த்தியது.
"என்னப்பா சொல்ற"
"இந்த பில்டப் லாம் வேணாம்.. கம் அவுட் வித் த ட்ரூத்"
"நான் எதுவும் சொல்லல"
"பொய் சொல்லாத"
"நீயே சொல்லு... நான் என்ன சொன்னேனாம்?"
அவனை முறைத்து விட்டு முன்னால் நகர்ந்தாள். சற்று வேகமாய் நகர்ந்து வழி மறித்தான்.
"நான் பிராமிஸா எதுவும் சொல்லல.. நீ சொல்றத வச்சுதான் அடுத்த ஸ்டெப் என்ன பண்ணணும்னு யோசிக்கணும்"
"உங்கிட்ட பேசினா என்னை பத்தி என்ன வேணா கமெண்ட் அடிப்பியா"
"அனு.. ஒண்ணு முழுசா சொல்லு.. இல்ல.. நான் சொல்றத நம்பு"
"மிஸ்டர் சரவணக்குமார்.. நீங்க இனிமே எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசற, யார் கூப்பிட்டாலும் வரத் தயாரா இருக்கற அனுவோட பேச வேணாம்.. ஓக்கேவா"
அடப்பாவி.. அஷோக்.. இது உன் வேலையா.. அதான் சவால் விட்டானா.. உன்னையும் அவளையும் பிரிச்சுக் காட்டறேன்னு..
"இதை நீ நம்பிட்டியா"
அனு பதில் சொல்லாமல் நகர்ந்து போனாள்.

இவ்வளவுதானா.. நான் உன் மேல் வைத்திருந்த அபரிமிதமான பிரியம் உனக்குப் புரியவில்லையா..
மற்றவர்களுடன் பேசும்போது அனு வந்துவிட்டால் உடனே அப்படியே அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு அவள் பின்னே போனது.
.'அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா'
'எனக்கு நீ முக்கியம் பா.. ரெண்டாவது இப்ப அவங்க கூட நான் அரட்டை தான் அடிச்சுகிட்டிருந்தேன்.. அது முக்கியமான மேட்டரா இருந்தா உங்கிட்ட அப்புறம் பேசலாம்னு சொல்லியிருப்பேன்'
அவன் வீட்டு சமாச்சாரங்களைக் கூட அவளிடம் தான் சொல்வான்..
'தங்கை கேட்டுகிட்டே இருக்கா.. உன்னை எப்ப அவ கண்ணுல காட்டப் போறேன்னு'


நேரம் போனதே தெரியவில்லை. எல்லோரும் போயிருக்க வேண்டும். எல்லாம் மறந்து வேலையில் மூழ்கி.. மணி ஒன்பதரை. முடித்து விட்டான்.
செக்யூரிட்டிக்கு இரவு வணக்கம் சொல்லி பைக்கை உதைத்தபோது பசித்தது. சைட் பாக்சில் அனுவுக்காகக் கொண்டு வந்திருந்த அவளுக்குப் பிடித்த சாக்லேட் பட்டை நிச்சயம் உருகியிருக்கும்.
செக்யூரிட்டி பின்னால் ஓடிவந்தார்.
"ஒரு நிமிஷம்"
"என்ன"
"அனு மேடம் மட்டும் இருக்காங்க.."
"ஓ"
"அவங்களும் கிளம்பிட்டாங்க"
பைக்கை நிறுத்தினான். அலுவலகம் விட்டு மெயின் ரோட்டிற்கு மூன்று கிமீ. ஆளரவமற்ற சாலை. அவளும் டூ வீலரில்தான் வருகிறாள்.
அனு இவனைப் பார்த்ததும் நின்று விட்டாள். 'நீயா'
"மேடம்.. நான் தான் அவரை நிக்க சொன்னேன்"
அனுவின் வண்டி கிளம்ப மறுத்தது.
"அவர் கூடவே போயிருங்க"
செக்யூரிட்டி யதார்த்தமாய்ச் சொன்னார்.
என்ன நினைத்தாளோ.. பின்னால் ஏறிக் கொண்டாள்.
3 கிமீ தூரமும் அவள் எதுவும் பேசவில்லை. மெயின் ரோடு வந்ததும் நிறுத்தினான்.
"வீட்டுல கொண்டு வந்து விட்டுரவாப்பா"
அவனையும் மீறி வழக்கமான குரலில்.. கேட்டுவிட்டான்.
அனு இறங்கி நின்றாள். ஆனால் நகரவில்லை.
சரவணக்குமார் சைட் பாக்ஸைத் திறந்து சாக்லேட் பட்டையை எடுத்தான். உள்ளே உருகி இருந்தது.
அவளிடம் நீட்டினான்.
சர்ரென்று நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் விரைந்தது. அவர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சி ஹார்ன் சத்தம் எழுப்பி அது போனதும் அவர்கள் மட்டும் மீண்டும் தனியே.
வாங்கிக் கொண்டாள். பிரித்து விளம்பரத்தில் வருவது போல சப்பி விட்டு அவனிடம் நீட்டினாள்.
"ஏய்.. என் மேல கோபம் இல்லியா"
"அசோக் மெசேஜ் பண்ணான்.. ஏதோ விளையாட்டுக்கு அப்படி பண்ணிட்டானாம்.. 100 டைம்ஸ் ஸாரி அப்படின்னு.. "
ஓ.. அதனால் தான் எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடன் பைக்கில் வந்தாளா..
"வீட்டுக்கு போலாம்டா"

உருகிப் போன சாக்லேட் கூட இவ்வளவு தித்திக்குமா..

(கல்கி - 12.06.2011)

June 08, 2011

தம்பி

”சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்”

தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான் பதறினான்.

”நான் போறேன்”

சண்முகம் விடவில்லை.

“நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.”

கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது.

‘கூட வரீங்களா’

சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அம்மா.. அப்பா’ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க’. தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை.

மணிவேல் தணிந்த குரலில் சொன்னான்.

“உடனே ஃபோன் பண்ணிருங்க.. “

சண்முகம் தலையாட்டினான். பைக் உறுமிக் கொண்டு போனது.

”தம்பி.. அரிசி 25 கிலோ வேணும். அனுப்பிடறீங்களா”

வாடிக்கையாளர் வந்ததும் புத்தியில் வியாபாரம் புகுந்தது.

“அண்ணே.. கவர் பால் இருக்கா”

ப்ரிட்ஜைத் திறந்து அரை லிட்டர் பாலை எடுத்துக் கொடுத்து பணத்தை வாங்கிப் போட்டான். மளிகைக் கடை என்று பெயரே தவிர ஆத்திர அவசரத்திற்கு எல்லாம் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ‘தலைவலி’ மணடையை பொளக்குது என்று ஒருத்தர் வருவார். ’கிப்ட் ஐட்டம் இருக்கா’ என்று கூட ஒருவர் கேட்டார். இல்லையென்று அனுப்பியதும் மணிவேல்தான் அதற்கும் அவசரப் பட்டான்.

‘அண்ணே ஏதாச்சும் வாங்கி வைக்கணும்’

இதெல்லாம் ரெகுலர் விற்பனை இல்லை. பணத்தை முடக்க வேண்டாம் என்று சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.

பெட்டிக்கடை ரேஞ்சில் எதிரில் கடை வைத்திருந்தவன் இவர்களுக்கு முன் போட்டி போட முடியாமல் வியாபாரம் படுத்துப் போய் காலி செய்து கொண்டு போய் விட்டான்.

’அண்ணன், தம்பியா’ என்றூ ஒருத்தர் கேட்டாராம்.

’ஏனாம்’

‘இல்ல.. ஒத்துமையா யாபாரம் பண்றாங்களே.. அது எப்படின்னு’

அண்ணனுக்குப் பெண் பார்க்கப் போனபோது பெண் வீட்டில் தரகர் முதலில் இவனைத்தான் அறிமுகம் செய்தார்.

‘மணிவேலுன்னு சொன்னேனே.. அது இவருதான்’

வரப் போற அண்ணி எட்டிப் பார்த்தாங்களாம்.

‘கட்டிக்கப்போறவன் என்னைக் கூட இவ சரியா பார்த்தாளோ.. என்னவோ.. முத முதல்ல உன்னைத்தான் பார்த்தாளாம்’ என்று சண்முகமே கேலி செய்வான்.

கல்யாணப் பேச்சு ஆரம்பித்த உடனேயே மணீவேலை அழைத்துக் கொண்டு வங்கிக்குப் போனான்.

’இவன் பேர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்’

மணிவேல் பதறிப் போனான்.

‘எதுக்குண்ணே’

’எல்லாம் நல்லதுக்குத்தான்’

கணிசமான தொகையுடன் ஆரம்பித்த கணக்கில் பணம் மாதாமாதம் ஏறிக் கொண்டிருக்கிறதே தவிர மணிவேல் எடுக்க வேண்டிய அவசியமே வரவில்லை.

அதுவுமில்லாமல் இப்போது இன்னொரு வேலையும் சண்முகம் செய்துவிட்டான். தரகர் வந்துவிட்டுப் போனதாக கடைப்பையன் சொன்னதும் முதலில் மணிவேல் நம்பவில்லை.

‘வீட்டுல வச்சுப் பேசாம கடையில வச்சு ஏன் பேசணும்’

மணிவேலுக்கு அண்ணனிடம் கேட்கத் தயக்கம். ‘அவரே சொல்லுவாரு’ என்று விட்டு விட்டான். பிறகுதான் புரிந்தது. மணிவேலுக்குப் பெண் பார்த்திருக்கிறான்.

’அண்ணி உங்களுக்குத் தெரியுமா’

சண்முகம் குறுக்கிட்டு சொன்னான்.

’அவதாண்டா பார்க்கச் சொன்னது.. உனக்கும் வயசாச்சில்ல’

அண்ணி சிரித்தாள்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் தனியா இருக்கேனாம்.. சண்டை போட ஆள் வேணுமான்னு கேட்டாரு.. கூட்டியாங்கன்னு சொன்னதும் உனக்கு பொண்ணு பார்க்கறாரு’

அண்ணி உறவில் ஒரு சம்பந்தம் இருப்பதாகத் தகவல்.

’புடிச்சிருந்தா மட்டும் பேசலாம்.. எங்க வீட்டு மனுஷங்கன்னு ஒப்புத்துக்க வேணாம்’

கார் வைத்துக் கொண்டு போனார்கள். பெண் அப்படியொன்றும் அசத்தல் இல்லை. ஆனாலும் அவர்கள் வீட்டில் திரும்பத் திரும்ப ‘ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு’ என்று சொன்னது மூளைச் சலவை செய்த மாதிரி ஆகிவிட்டது.

மறுபடி அந்தப் பெண்ணைப் பார்க்க ’ஆமா.. நான் அப்படித்தான்’ என்று சொல்கிற மாதிரி முகபாவம்.

’என்னடா சொல்றே’

‘உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரிண்ணே’

’வாழப் போறவன் நீதாண்டா’

சண்முகம் சிரித்ததும் பெண்வீட்டார் விசாரித்தார்கள்.

அண்ணி ஏதோ சொல்ல முயற்சி செய்ய சண்முகம் தடுத்து விட்டான்.

’தகவல் சொல்லி விடறேன்.. அப்ப வரட்டுங்களா’

வீட்டுக்கு வந்ததும் அண்ணிதான் கேட்டாள்.

’ஏன் அப்படி சொல்லிட்டு வந்தீங்க’

சண்முகம் மௌனமாக இருக்கவும் அண்ணி மீண்டும் பதட்டமாய் கேட்டாள்.
மணிவேல் ஹாலை விட்டு வாசற்புறம் வந்து விட்டான். இருந்தாலும் சண்முகத்தின் குரல் தெளிவாகக் கேட்டது.

'உடனே சம்மதம்னு சொல்லி மணியை அவங்க குறைவா எடை போட்டிரக் கூடாதில்ல.. ஒரு வாரம் பொறுத்து சொல்லுவோம். நீ பேசாம இரு.. முந்திரிக் கொட்டையாட்டம் போய் உளறி வைக்காதே’ என்றான் கொஞ்சம் இறுக்கமாகவே.

ஒரு வாரம் என்பது அப்படி இப்படியென்று பத்துப் பதினைந்து நாள் ஆகிவிட்டது.
அதற்குள்தான் இந்தத் தகவல்.

’நம்ம மணிவேலுக்குப் பார்த்தோமே.. அந்தப் பொண்ணு மருந்து குடிச்சிருச்சாம். ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க’

என்ன நடந்தது.. ஏன் மருந்து குடித்தாள்.. என்னைப் பிடிக்கவில்லையா.. காதல் தோல்வியா.. வீட்டார் வற்புறுத்தி எனக்குப் பேசியதால் இந்த முடிவா.. தறிகெட்டு ஓடிய மனசைக் கடிவாளம் போட முடியாமல் மணிவேல் தடுமாறித்தான் போனான்.

போன் மணி ஒலித்தது. அவனையும் அறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. அவசரமாய் எடுக்க சண்முகத்தின் குரல்.

’ஒண்ணுமில்ல.. புழைச்சிருச்சு’

ஹப்பாடா..

’அண்ணே.. வந்து..’

’அண்ணியும் நானுந்தான் வந்தோம்.. அவ இங்கே தங்கிட்டு வரேன்னா.. நான் அரை மணில கடைக்கு வந்திருவேன்.. வச்சிரட்டுமா’

பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான். மணிவேல் ‘அண்ணே.. அண்ணே’ என்று கத்தியதுதான் மிச்சம்.

இனி அவன் வரும் வரை நிலை கொள்ளாது. பதில் தெரியாத கேள்விகள் தலையைக் குடைந்து கொண்டிருக்கும். இன்னும் முப்பது நிமிஷம்.. இருபத்தொம்பது.. இருபத்தெட்டு.. ஏன் இத்தனை மெதுவாக நகர்கிறது..

’எங்கே பெரியவரைக் காணோம்..’

வாடிக்கையாளர்தான். ஒரு வகையில் உறவுகூட.

’வெளியே போனாரு.. வந்திருவாரு’

’நம்ம பொண்ணு கல்யாணம் ஞாபகம் இருக்கில்ல.. சாமான் முழுக்க நம்ம கடையிலதான்.. எப்ப லிஸ்ட் கொடுக்கட்டும்’

’ஒன் அவர் டைம் கொடுங்க.. கொண்டு வந்து இறக்கிர மாட்டோம்..’ என்று வழக்கமாய் உற்சாகமாய் பதில் வரும். இன்று மெதுவாகத் தலையாட்டினான். வந்தவருக்கே அவன் சுணக்கம் புரிந்து போனது.

’என்ன தம்பி.. மேலுக்கு சுகமில்லியா’

சுதாரித்துக் கொண்டு தலையாட்டினான்.

'நல்லாத்தான் இருக்கேன்’

பெரிதாய் ஒரு சிரிப்பும் சிரித்து வைத்தான்.

’அதானே பார்த்தேன்.. வெக்கை அதிகமா.. அதான் தம்பி முகம் வாடியிருக்கு’ என்று அவராகவே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு போய்விட்டார்.

சண்முகத்தின் பைக் சத்தம் கேட்டது. அவசரப்படக்கூடாது. அவனாகவே சொல்லட்டும். மணிவேல் ஏதோ ஒரு வேலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் பார்வை சண்முகத்தைத்தான் தேடியது.

உள்ளே வந்து கல்லாவின் அருகில் உட்கார்ந்து பெரிதாய் ஒரு மூச்சு விட்டான். சொம்புத் தண்ணீர் கடகடவென இறங்கியது. தொண்டைக்குழி மேலும் கீழும் ஏறி இறங்கியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிவேலுக்கு பொறுமை இறங்கிக் கொண்டிருந்தது.

‘அண்ணே நல்லா இருக்கில்ல’

’ம்ம்’

‘எ.. என்னவாம்’

’மருந்து குடிச்சிருச்சு’

‘தெரியாமலா’

’தெரிஞ்சுதான்’

‘ஏனாம்’

மணிவேலின் குரல் அடைத்துக் கொண்டது.

’நாம பதில் சொல்ல லேட்டாயிருச்சுல்ல.. ஒரு வேளை புடிக்கலியோன்னு தப்பா யூகம் பண்ணிகிட்டு’


சண்முகத்திற்கு இப்போது குரல் பிசிறியது. ஒருவேளை தன்னால்தானோ..

‘அப்புறம்’

’நல்ல பொண்ணும்மா.. நாள் நட்சத்திரம் பார்க்கவேணாமா.. டப்புன்னு எதையாச்சும் சொல்லிர முடியுமான்னு சமாதானம் சொல்லி.. இப்படி பொசுக்குன்னு மருந்து குடிச்சா.. எந்த நம்பிக்கையில உனக்கு சம்மதம் சொல்றது.. எங்க வீட்டுக்கு வந்தப்புறம் இப்படித்தான் இருப்பியான்னேன்.. பாதியை அதுவே துப்பிருச்சாம்.. முழுசாக் குடிக்கல.. ஒரு வாய் கூட உள்ளே போவல.. அதுக்குள்ர இவங்க பதறிப் போய் ஆசுபத்திரிக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க.. உங்க அண்ணி கேட்டா.. ருசி பார்த்து குடிக்கிற மனுஷியா.. உடனே துப்பிட்டியேன்னு.. பொண்ணுக்கு எதுவும் ஆபத்தில்லேன்னு தெரிஞ்சப்புறம்தான் இந்த பேச்சு எல்லாம்’

மணிவேல் மௌனமாக இருந்தான். நிதானம் வந்திருந்தது. தன்மீது பெண்ணுக்கு மனக்குறை இல்லை.

’ரெண்டு கிலோ ரவை.. ஒரு கிலோ மைதா.. மூணு கிலோ சக்கரை’

கடைக்கு வந்தவர் கையில் வைத்திருந்த லிஸ்ட்டை படிக்க ஆரம்பிக்க மணிவேல் கைப்பேடில் குறிக்க ஆரம்பித்தான்.

’இங்கே கொடுரா.. நான் பார்த்துக்கறேன்’ என்றான் சண்முகம் கையை நீட்டி.

’நான் சும்மாதானே இருக்கேன்’

‘இந்தா சாவி.. போய் பார்த்திட்டு வா.. உன் வாயால சம்மதம்னு சொல்லிட்டு வந்திரு.. யாவாரம் ஆவுதுன்னாலும் சும்மா சும்மா பூச்சி மருந்தெல்லாம் கடையில வாங்கி வைக்க முடியாதில்ல..’

கை நீட்டி சாவியை வாங்கிக் கொண்ட மணிவேலுக்குத் தோன்றியது.

’அண்ணனின் சிரிப்பு கூட அழகுதான்’


(கல்கி பிரசுரம்)


June 05, 2011

தேன்மொழி அக்கா

தேன்மொழி அக்கா ஊருக்கு வருகிறார் என்றால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.. அவரவர் வீட்டில்தேட மாட்டார்கள். இரவு வீடு திரும்பினால்தான். சாப்பாடு கூட தேன்மொழி அக்கா வீட்டிலேயே கிடைத்துவிடும்.

’பாரேன்.. வருசம் முச்சூடும் நாம இருக்கமான்னு கூட பார்க்க மாட்டேங்குது. இவ வந்துட்டா சோறு.. தண்ணி.. பீ.. மூத்திரம்.. எல்லாம் இங்கேயேதான். ஊர்க் கோழியெல்லாம் நம்ம கூட்டுல’

அக்காவின் அம்மாவுக்கு வார்த்தைகள் பளிச்சென்று வரும். எங்களுக்கோ எதுவும் காதில் விழாது. அக்காவின் ஏவல்களில் ‘நான் முந்தி.. நீ முந்தி’ என்று ஓடுவோம்.

”ஏய்.. விழப் போறிங்க. மெல்லமாப் போனாத்தான் என்னவாம்”

அடுத்த வேலைக்கு யார் முதலில் வருவது என்கிற போட்டியில் இருக்கும் எங்களுக்கு எதுவும் காதில் விழாது.

கனகுவும் நானும் பெரும்பாலும் சணடை போட மாட்டோம். ஆனால் செல்வம் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும். அக்காவின் கட்டளைகளைக் கேட்டு அதை ரகவாரியாகப் பிரித்து, முக்கியமில்லாத, உடம்பு நோகிற வேலைகளை மட்டும் எங்களுக்குக் கொடுத்து விடுவான்.

அதையும் சலித்துக் கொள்ளாமல் செய்வோம். முனகினால் அக்காவிடம் போட்டுக் கொடுத்துவிடுவான் என்கிற பயம்.

காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு படுக்கப் போகிறவரை எல்லாம் அக்கா இஷ்டப்படிதான்.

’என் வேலையை எப்படிச் செய்யணும் என்று எனக்குத் தெரியும்’

அக்கா கொஞ்சம் வாயாடி. கண்களில் எப்போதும் குறும்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும். விளக்கேற்றி வைத்த மாதிரி முகத்தில் ஒரு பளபளப்பு.

‘நீங்க ரொம்ப அழகு’ என்றால் சிரிப்பார்.

ஆற்றில் குளிக்க துணிமூட்டையை எடுத்துக் கொண்டு போவோம். துணி மூட்டை அப்படியே தரையில் கிடக்கும். பெயர்தான் ஆறு. மழைக் காலங்களில் நீரைப் பார்க்கலாம்.

அக்கா பாவாடையை உயர்த்திக் கட்டி ஆற்றில் ஒற்றைக் கோடாய் ஓடுகிற நீரில் இறங்குவார். அதற்குள் போட்டி போட்டுக் கொண்டு பள்ளம் பறித்து வைத்திருப்போம். அதுதான் எங்கள் நீச்சல் குளம். மறுபடியும் மணல் அரித்து வந்து பறித்து வைத்திருந்த குழியை மூடி விடும். ஒரு மணி நேரமாவது நீரில் அலைவோம். கனகு குளிரில் நடுங்குவது போல் ஆடுவாள். உடம்பு ஜில்லிட்டுப் போய் விடும்.

’ஐஸ் பொட்டிலேர்ந்து வர மாதிரி இல்ல.. இவ ஒடம்பு விரைச்சுக் கிடக்கு’

வெய்யிலில் நின்று கொண்டிருப்பாள். நாங்கள் துணி துவைத்து மணல் மேட்டில் உலர்த்துவோம். தலை முடி நுனியில் முடிச்சு போட்டுக் கொண்டு அக்கா ஒவ்வொரு துணியாய் நீரில் அலசித் தருவார்.

அக்காவிற்கு சுருள் முடி. முகத்தில் வழிந்து அழகாய்ப் பரவியிருக்கும். தலைமுடி நுனியில் சொட்டு சொட்டாய் நீர் கசியும். புடவையை நாலாய் மடித்து மேலேபோட்டுக் கொண்டு தெருவில் நடந்து வருவார். பின்னாலாயே நாங்கள் ஓடி வருவோம்.

கனகு எப்போதும் ஏதாவது ஒரு துணியை கீழே போட்டு விடுவாள்.

’பாரேன்.. இதைக் கூட தூக்க முடியலே.. மணல்ல போட்டு புரட்டிக் கொண்டு வந்திருக்கா’ என்று அவள் அம்மா திட்டும் போது அக்காதான் சமாளிப்பார்.

’எதிர்ல வண்டி வந்திருச்சா.. தடுமாறீக் கீழே போட்டிருச்சு’

அக்காவை அந்த நிமிஷம் எங்களுக்கு அதிகமாய்ப் பிடித்து விடும். ஈர உடை என்று பாராமல் மேலே ஒட்டிக் கொள்வோம். துணி மாற்றிக் கோள்கிற அவகாசம்தான். மீண்டும் அக்காவைத் தேடிப் போய் விடுவோம். செல்வம் ஒரு வாரமாய் வராதிருந்தவன் நேற்று வந்தானாம். நாங்கள் வரும் போது அவன் இல்லை. கிளம்பிப் போய்விட்டானாம்.

’செல்வம் வந்தானாக்கா’

அக்கா முகத்தில் இருளடித்திருந்தது. பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு கடிதம் போல படித்துக் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் மறைத்து விட்டார். நான் செல்வத்தை பற்றி மறுபடியும் கேட்டேன்.

’அவனைப் பத்தி பேசாதே’

அக்கா சிரிக்காமல் பேசியது அப்போதுதான்.

’கொடுத்தவந்தான் புத்தி இல்லாம கொடுத்தா, இவனுக்கு அறிவு எங்கே போச்சு.. கையை நீட்டி வாங்கிகிட்டு வந்திருக்கான்.. புத்தி கெட்ட பய..’ என்று முனகியதும் செல்வத்தைத்தான் சொல்கிறார் என்று எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது.

அன்று மாலை செல்வம் வந்தான்.

‘அக்கா.. அவன் வரான்’

காதைத் தீட்டிக் கொண்டு நின்றோம்.

’உம்மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க’

அக்கா சீறியதும் செல்வம் எங்களைப் பார்த்தான்.

”வெளியே போங்க”

நாங்கள் அக்காவைப் பார்த்தோம். அக்கா பேசவில்லை. செல்வம் மறுபடி அதட்டியதும் எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. வாசலில் போய் நின்றோம். செல்வம் திரும்பி வரும் போது அழுவாச்சியா வருவான்.. கேலி செய்து சிரிக்கலாம் என்று காத்திருந்தோம்.

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு செல்வம் வந்தான். விசில் அடித்தான். கனகுவின் தலைமுடியைப் பிடித்து இழுத்தான். போய் விட்டான்.

உள்ளே எட்டிப் பார்த்தோம். அக்கா அதே கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தார். இந்த முறை அவர் முகத்தில் மலர்ச்சி. அக்கா எழுதிய பதிலை செல்வம் கொண்டு போனான்.

எங்களுக்குக் கையொடிந்த மாதிரி ஒரு பிரமை. அக்கா முன்பு போல இல்லை. நாங்கள் வந்தாலும் கவனிப்பதில்லை. செல்வத்திற்கு செலவிற்கு பணம் கொடுப்பதைப் பார்த்து எங்களுக்கு அழுகையே வந்து விட்டது.

அக்காவின் அம்மாவிடம் ஒரு நாள் மாட்டிக் கொண்டோம்.

’யாருடி கடுதாசி கொண்டு வர்றது’

முன்னால் நின்ற என் ஜடையைப் பிடித்து இழுத்தார்.

கனகு பயந்து ஓடிப் போய் விட்டாள்.

”நான் இல்ல” என்றேன்.

”வேற யாரு”

“தெரியாது”

“தெரியாது?”

”ஆணை வுட்டேன்.. தெரியாது..” என்றேன் அழுதபடி.

அக்கா பாவம் . நான் மாட்டிவிடக் கூடாது.

“அவளுக்கு ஒரு வழி பண்றேன்.. பாவி மக.. எம்மானத்தை வாங்கிருவா.. இப்படியே வுட்டா”

தேன்மொழி அக்காவிற்கு அவசரம் அவசரமாய் வரன் பார்த்தார்கள். வந்தவன் லேசான தொப்பையுடன் இருந்தான். பெரிய மீசை. கண்களில் சிவப்பு. அக்காவைப் பிடிச்சிருக்கு என்று அப்போதே சொல்லி விட்டார்கள். பாக்கு, வெத்தலை மாற்றிக் கொண்டார்கள். மெகானிக் ஷாப் வைத்திருக்கிறாராம். பெரிய பைக் வச்சிருக்காராம். அக்காவும் சம்மதமென்று தலையாட்டியது. கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள்.

செல்வம் ஒரு நாள் வந்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். அக்கா அலட்சியமாய் நின்றார். செல்வம் தலையைத் தொங்க போட்டுக் கொண்டு போனதும் எங்களுக்கு மகிழ்ச்சி வரவில்லை.

கல்யாணத்தில் எங்களையும் ஒரு பக்கம் உட்கார வைத்து சோறு போட்டார்கள். கனகு கூச்சப்படாமல் இன்னொரு தரம் பாயசம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்.

அக்கா ஒரு மாசம் கழிச்சு வந்தபோது அவர் வீட்டிற்கு போனோம்.

”யாரு இவுங்க” என்றார் அக்காவின் வீட்டுக்காரர்.

”தெருப் புள்ளைங்க..அக்கா.. அக்கான்னு சுத்தி வரும்”

”எனக்கு சத்தமே பிடிக்காது.. எப்ப பாரு கூட்டம் போட்டாப்ல இருந்தா.. இது வீடா.. இல்ல சந்தையா”

எங்கள் பிரியமான அக்கா உடனே எங்களைப் பார்த்துச் சொன்னார்.

”போங்கடி.. இனிமேல இங்கே வந்தா”

’தமாஷுக்கு’ என்று கண் சிமிட்டுவார் என்று பார்த்தோம். இல்லை.

கண்களில் குறும்பு கொப்பளிக்கிற அக்காவிற்குப் பதிலாக வேறு யாரோ நின்று எங்களை வாசலுக்கு விரட்டினார்.
June 01, 2011

பெருசு

"யோவ்... இன்னுமா போவலே" காலி டீ கிளாஸ் தம்ளர்களுடன் வந்தவன் கேட்டான்.
பெரியவர் அரைத் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல அவனைப் பார்த்தார்.

"முதலாளி வரச் சொன்னாரா"

முருகையன் கேலியாகச் சிரித்தான். "ஆமா.."

பெரியவர் வேகமாக எழுந்தார். மெல்ல நடந்து அறைக்கதவைத் திறக்கப் போனார். முருகையன் ஓடி வந்து தடுத்தான்.

"கதையைக் கெடுத்தே போ. உன்னை உள்ளே விட்டா, நா இப்படியே வெளிய போக வேண்டியது தான்.."

பெரியவர் நகரவில்லை. "போ... போய்ச் சொல்லு..: என்றார்.

"நீ வெளியே போ.. உன்னைப் பார்க்க முடியாதுன்னு அப்பவே சொல்லிட்டாரு"

பெரியவர் அவனைச் சந்தேகமாய்ப் பார்த்தார். "நெசமாத்தான் சொல்றேன்.."என்றான் கண்களில் ஏமாற்று இருக்குமோ என்ற பார்ப்பவர் போல அவனையே பார்த்தார்.

"பெரியவரே.. உங்கிட்ட பொய் சொல்வேனா, அந்தாளுக்கு வேற வேல இல்ல.. போவச் சொல்லுன்னாரு"

பெரியவர் சற்று நேரம் மெளனமாய் நின்றார். இதே ஆபீசில் போன வருடம் அவர் வைத்ததுதான் சட்டம். காக்கி உடுப்பை மாட்டி டுட்டிக்கு வந்துவிட்டால் எதோ ராணுவ அதிகாரி போல அலட்டல். வாட்ச்மேன்தானே" என்று இளக்காரமாகக் கேட்டுவிடக் கூடாது. வாபஸ் வாங்குகிற வரை விடமாட்டார்.

அதெல்லாம் அந்தக் காலம்.

கம்பெனி பொறுப்பு பெரிய முதலாளி கையில் இருந்தது. பெரியவரை வேலைக்கு வைத்ததே பெரிய முதலாளி தானே. இன்று நிர்வாகப் பொறுப்பு சின்ன முதலாளி கையில். வயசானவங்க வேண்டாம்.என்னாவோ இளரத்தந்தான் வேணுமின்று சொல்றாராம்.

வீட்டில் போய்ச் சொன்னால் பேத்தி சிரிக்கிறாள். "நம்மூரு முனீஸ்வரங் கோவில்ல கேட்கிறாப்ல இல்லே சொல்றாங்க" போகட்டும். மகனுக்கு இப்படி ஒரு விபத்து நேர வேணாம். வலது கைக்கு பெரிய மாவுக்கட்டு. இடது காலில் லேசான பிராக்சர்.

"ஆறு மாசம்.. மூச்.. நவுரக் கூடாது. அப்புறம் நா பொருப்பில்லேன்னு" டாக்டர் அய்யா சொல்லிட்டாராம். படுத்துக் கிடக்கிறான். மருமகள் வீட்டு வேலைக்குப் போகிறாள்.

"எங்கிழவி உசுரோட இருந்தா நடக்கிற கதையே வேற..." பெரியவருக்கு இத்தனை வேதனையிலும் உள்ளூர பெருமிதம்.

"இப்படியா குடும்பம் கெடக்கும்.. அவ புத்தியிலே எதுனாச்சும் யோசனை வந்துருமே"

எத்தனை நாள்தான் இந்த போராட்டத்தில் இருப்பது. வாட்ச்மேன் வேலைக்கு முயற்சித்தால் என்ன என்று தோன்றியது.நான்கு நாட்களாய் அலைந்ததில் இன்று முதலாளியைப் பார்க்காமலேயே ஏமாற்றம்.
வெறுங்கையோடவா வீட்டுக்குப் போவறது... பேத்தியிடம் பெருமை அடித்து வைத்திருந்தார்.

"என்னைய பார்த்தா போதும். என்ன பெரிய சாமி... நல்லாருக்கியான்னு நின்று விசாரிப்பாரு.."
"அப்ப வேலை கெடச்சிருமா"

பேத்தி கண்களில் எதிர்பார்ப்பும் தாத்தாவின் மீதான நம்பிக்கையும்.
"பின்னே.."

இப்போது என்ன சொல்வது. இந்த நான்கு நாட்களில் விதவிதமாய் மழுப்பியாகி விட்டது.

பேத்தி சும்மாயிராமல் அம்மாவிடம் போய்க் கேட்டுவிட்டது.

"போவியா.. உனக்கு வேற வேலை இல்லே" என்ற எரிந்து விழுந்திருக்கிறாள்.

"நெசமாத்தானே வேலை கிடைக்கும்.." என்று வந்து கேட்டதும் பெரியவருக்கு சங்கடமாகிப் போய் விட்டது.

விஸ்தாரமாய் தாம் வேலை பார்த்த அழகைப் பற்றிக் கதைகள் சொன்னதும் தப்பாகிப் போய்விட்டது.

"ஒருநா நடுராத்திரி எவனோ களவானிப்பய உள்ளே பூந்து, சத்தம் கேட்டவுடனே பாஞ்சுட்டேன் என்னாமா திமிர்றாங்கிற.. நா வுடலியே. மடக்கிப் போட்டு அப்பறம் பெரிய முதலாளி வந்து பார்த்து..ஏயப்பா பாராட்டி பணமில்லாம் கொடுத்தாரு..."

பேத்தி ஆவென்று அவரையே பார்ப்பதில் ஒரு பெருமை.

"ஆங்... அப்புறம்..."

"சொல்றேன்.. சொல்றேன்" என்று பிகு பண்ணிக் கொள்வதில் பெரியவருக்கு ஒரு சந்தோஷம்.

என்ன பதில் சொல்வது! வேலை இல்லை என்று பேத்தியிடம் சொல்வது கிடக்கட்டும். ஒண்டியாய் அவதிப்படுகிற மருமகளுக்கு உதவ முடியாமல் போகிறதே என்கிற வருத்தம்.

தெருவில் இறங்கி நடக்கிற போதும் அதே யோசனை.

"கிழவி இருந்தா என்ன சொல்லும்.."

அடிமனசில் கெழவி ஞாபகம் அலையடித்துக் கொண்டிருந்தது. பார்க்க அப்பாவி போல இருப்பாளே தவிர புத்தியெல்லாம் பெரிய வீட்டுக்காராங்க மாதிரிதான்.

நீ நம்ம சாதியிலே தப்பி பொறந்துட்டேன்னு சொன்னா மட்டும் ஏத்துக்க மாட்டா. "நம்மா சாதிக்கு என்ன குறையக் கண்டீங்கன்னு சண்டைக்கு வந்துருவா. போய் நின்னா போதுமே. அந்த எடத்தையே கலகலப் பாக்கிருவாளே. யோசனைக் கேற்ப நடை மட்டுப் பட்டது.

மெல்ல நடந்த படி கடைவீதிக்கும் வந்து விட்டார். கடை வீதியின் அமைப்பே மாறிப்போய் விட்டிருந்தது. பழைய கடைகள். கண்ணாடிப் பொருட்கள், வியாபாரப் பொருட்கள். வியாபாரிகள் கூட புது ஆட்களாய். தகப்பன் இடத்தில் மகள்.
தகப்பன்! மனசுக்குள் பளீரென்று ஒரு யோசனை.

"பெரிய முதலாலியைப் போய்ப் பார்த்தால் என்ன?"

கெழவி நிச்சயம் கூடவேதான் இருக்கா. இல்லாட்டி இந்த யோசனை வந்திருக்குமா. கூடவே சிலாகிப்பும்.

பெரிய முதலாளியை வீட்டுல போய் பார்த்திர வேண்டியதுதான்..

பெரியவருக்கு நடையில் வேகம் கூடியது. வீட்டு வாசலில் வரவேற்ற நபரும் புதுசு.
"யாரு..?" என்றான் அதட்டலாய்.

"பெரியசாமி.."
"என்னா?"
"பெரிய முதலாளியை பார்க்கணும்.."
"பெரிய முதலாளிய..."
"போ.. ஆசுபத்திரில போய்ப் பாரு"

என்ன சொல்கிறான்.. புரியாமல் விழித்தார்.

"அட.. நெசமாத்தான் சொல்றேன்.. அய்யா உடம்பு சொகமில்லாம ஆசுபத்திரில கெடக்கிறாரு.. போ.. அங்கெ போய்ப் பாரு"

"எந்த ஆசுபத்திரி"

டவுனில் பெரிய கிளினிக் பெயரைச் சொன்னான்.

கடவுளே.. அந்த நல்ல மனுசனையா படுக்கப் போட்டே. பெரியவர் மனசுக்குள் விம்மல்கள். போய்ப் பார்த்திர வேண்டியதுதான். சாப்பிடாத நினைவு கூட இல்லை. பெரிய முதலாளியை உடனே பார்க்கிற பரபரப்பு.

கால்களில் வேகம் கூடிக்கொண்டது. ரிசப்ஷனில் இருந்த நர்ஸ் இவரைப் பார்த்ததும் அதட்டுகிற குரலில் கேட்டாள். "என்ன...?"

முதலாளி அய்யாவ பார்க்கணும்" பெரியசாமிக்கு குரல் கம்மியது.
"யாரு"
"அதாங்க... மாணிக்கம் கம்பெனி முதலாளி"
"ரும் நம்பர் 113,. மாடியிலே. ஆனா இப்ப பார்க்க முடியாது. விசிட்டிங் அவர்ல வாங்க"
"என்னங்க " பெரியவருக்குப் புரியவில்லை.
"இப்ப பார்க்க முடியாது. சாயங்காலம் ஆறு மணிக்கு வாங்க"

பெரியவருக்குத் திணறிப் போனது.

"அம்மா... தாயி. கொஞ்சம் தயவு பண்ணும்மா. வயசானவன்.. தொலைவுலேர்ந்து வரேன்..ரெண்டே நிமிஷம்.. பார்த்துட்டு ஓடியாந்துடறேன்.." கெஞ்சினார்.

"இங்கே பாருங்க. உங்களுக்காக எங்க ஹாஸ்பிடல் ரூல்ஸை மாத்த முடியாது. அப்புறம் வாங்க" கறாராய் சொல்லிவிட்டாள்.

பெரியவர் தெம்பிழந்து போய்விட்டார். கால்கள் நடுங்க ஒரு நிமிஷம் வருகிற மனிதர்களை உற்றுப் பார்த்தார். எத்தனை அலட்சியமாய் போய் வருகிறார்கள். இவர்களுக்கு இருக்கிற சுதந்திரம் எனக்கு இல்லையா.

பொருமித் தீர்த்த மனசுக்கு கண்ணெதிரில் நின்ற மனிதர் தெரியவில்லை. இடித்துக் கொண்டதும் புரிந்தது.

"அம்மா... நீங்களா"
மகராசி. பெரிய முதலாளி வீட்டம்மா. கும்பிடப் போன தெய்வம் போல.

"என்ன... பெரியசாமி"
குரல் தான் எத்தனை அனுசரணை.

"அய்யா உடம்பு சொகமில்லேன்னு கேட்டு பதறிப்போய் ஓடி யாந் தேன்.."

"வா.. எங் கூட"

அவள் கையில் பிடித்திருந்த சாப்பாட்டுக் கூடையை பெரியசாமி வாங்கிக் கொண்டார். என்னைப் போக வேணாம்னு எப்படித் தடுக்க முடியும். உடம்பு குறுகி நடந்தாலும் நெஞ்சு நிமிர்ந்து இருந்தது.

அறைக்குள் போனதும் கட்டிலில் படுத்திருந்தவரைப் பார்த்தார். "அய்யா.. நீங்களா"
என்ன கம்பீரமாய் பார்த்த உருவம். எலும்பு கூடு மட்டும். கெளரவமாய் தோல் போர்த்திய தினுசில் இருந்தார்.

"வா... எப்படி இருக்கே"

பெரியசாமிக்கு வார்த்தை வரவில்லை.
முதலாளியம்மாதான் சொன்னாள்.
கீழே நின்னுகிட்டிருந்தார்.. நாந்தான் பார்த்துட்டு கூட்டிக்கிட்டு வந்தேன்."
"உனக்கு ஒரு பேத்தி இருக்குதானே"

எவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறார். சிலிர்த்துப் போனது பெரியசாமிக்கு.
"எனக்குத்தான் ஆளே இல்லே. எப்படி கெடக்கேன் பாரு"

முதலாளியம்மா அதட்டினாள். "என்னது... என்ன பேசறோம்னு புரியாமே"

“அட.. இவன் யாரு.. எங்கம்பெனில எத்தனை வருஷம் வேலை பார்த்தவன்.. அவனுக்குத் தெரியாத விஷயமா"

பெரியசாமி கைகளைக் கட்டிக் கொண்டார். "அய்யா.. நான் என்ன செய்யணும்.. சொல்லுங்க"

"இவ ஒருத்தி தான் அலையறா. வீட்டுக்கும்.. ஆசுபத்திரிக்குமா, என்னை வேற தனியா விட்டுட்டு போறாளா . நர்ஸ் இருக்காங்க.. ஆனாலும் ஒரு பயம்.."

முதலாளி சொல்லச் சொல்ல பெரியசாமிக்கு ஜுரம் போலத் தகித்தது. "நா இருக்கேன்யா ஒங்க கூட"

"அது போதும். ஏய் அப்புறம் என்ன. புள்ளைங்க கைவிட்டாலும் நான் செஞ்ச தர்மம் கைவிடலே"
பெரிய முதலாளியின் எலும்புக்கூடு ஒரு தரம் நடுங்கியது.

"உன்னால முழு நேரமும் இருக்க முடியுமா.."

"அட .. இருப்பான்னு சொல்றேன்.. போவியா.. சும்மா வளவன்னு கிட்டு" அதட்டினார் முதலாளி.

"அய்யா... ஒரே ஒரு வார்த்தை வீட்டுல சொல்லிட்டு வந்திடறேன். அதுக்கு அனுமதி கொடுங்கய்யா "

"போ.. சீக்கிரம் வந்துரு"

ஹாஸ்பிடல் வாசலை விட்டு வெளியே வரும்போது பெரியசாமிக்கு ஒருவித கர்வம் அப்பியிருந்தது மனசுக்குள்.

இனி தைரியமாகக் சொல்லலாம்." அய்யாவ பார்த்துக்கிற வேலை கிடைச்சிருக்குன்னு"
ஒரு வாரம் ஓடிப்போனது.

முதல் ரெண்டு நாட்கள் முதலாளியம்மாவே சாப்பாடு கொண்டுவந்தாள். அப்புறம் டிரைவர் கொண்டுவந்தான். முதலாளி முகம் இருண்டு போனதைப் பார்த்து விட்டார் பெரியசாமி.
ஒவ்வொருத்தரா வேணாம்னு உதறித் தள்ளறாங்க போல இருக்கு..."

முதலாளி முனகியது புரிந்தது. “பெரியசாமி.. எப்பவும் அடுத்தவங்க தயவுல நிக்கிராப்ல நம்மள வச்சிக்கக் கூடாது.. வயசாச்சுன்னா பட்டுன்னு போயிரணும்.. புரியுதா"

பழைய கதைகளை நினைவு கூர்வதில் பெரிய முதலாளிக்கு ஒரு சந்தோஷம் அறை மூலையில் கீழே அமர்ந்திருந்தவரைக் கூப்பிட்டார். "இங்கே வா.."

அருகில் வந்ததும் தலையணை அடியிலிருந்து ஒரு பர்ஸை எடுக்கச் சொன்னார். "இந்தா.. வச்சுக்க" நாலைந்து நூறு ருபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.

"எதுக்குய்யா.."

"அட.. புடி.. நாளைக்கு நா உசுரோட இருக்கேனோ, இல்லியோ.. எங்கையால கொடுத்துட்டா ஒரு திருப்தி"

கைகள் நடுங்க வாங்கிக் கொண்டார் பெரியசாமி.

"நல்லா இரு.."

முதலாளிக்கு அதற்கு மேல் பேச்சு ஓடவில்லை. கண் மூடிப் படுத்துக் கொண்டார். நர்ஸ் வந்து பார்த்த போது முதலாளியின் உடம்பில் அசைவில்லை.

"எதாச்சும் கேட்டாரா"

"இல்லீங்களே.. நா இப்படி ஓரமா படுத்திரு ந்தேன்..."பெரியசாமிக்குக் குழறியது.

"தூக்கத்திலே போயிட்டாரு.."

நர்ஸ் முனகலாய் சொல்லிவிட்டு வெளியே போனாள். எலும்புக் கூடு அசை வற்றுப் படுத்திருந்தது.

“முதலாளி.."

வீட்டுக்குள் வந்த தாத்தாவை பேத்தி திகைப்புடன் பார்த்தது.

"என்ன... வேலை போச்சா"

"ஆமாம்மா.. பெரிய முதலாளியே போய்ட்டாரு.."

"சின்ன மொதலாளி இருக்காரில்லே.."

"அவருக்கு நா இப்ப தேவையில்லெம்மா"

பெரியவரின் பதில் பேத்திக்குப் புரியவில்லை.

(பயணம் - சிற்றிதழில் பிரசுரம்)