March 05, 2015

குழல்




”கண்ணா.. நீ கட்டாயம் மதுராபுரி போக வேண்டுமா”
கோவிந்தன் சிரித்தான். மாயச் சிரிப்பு.
“அங்கே போனால் உனக்கு என்னை நினைக்க நேரம் இருக்குமா”
“ஹ்ம்ம்..”
பொய் சொல்ல வரவில்லை அப்போது அவனுக்கு.
“அப்படியானால் என்னை அந்தப்புரத்தில் தானே விட்டுப் போவாய்”
கோபாலன் தலை உச்சியில் மயிலிறகு ஆடியது சோகமாய்.
”கண்ணா.. உனக்கே இது நியாயமாய்த் தெரிகிறதா”
“இல்லைதான்..”
”உன் உதடுகள் இனி எனக்கில்லைதானே”
ஏக்கமான பார்வை நெஞ்சைப் பிசைந்தது.
“க..ண்..ணா”
ராதை அப்போது வந்து விட்டாள்.
“என்ன கண்ணா.. என்ன இது.. வழக்கத்திற்கு மாறாக உன் சிரிப்பைத் தொலைத்து விட்டு”
கையிலிருந்த குழல் அதுவரை பேசியதை ராதையிடம் எப்படிச் சொல்வது.. ஆங்.. வழி கிடைத்து விட்டது.
“ராதே.. என் ப்ரிய ராதே..உனக்கு ஒரு பரிசு தரப் போகிறேன்”
“எனக்கொன்றும் வேண்டாம்”
அவனையே அடைந்தபின் வேறு பரிசெதற்கு..
“இல்லை ராதே.. மறுக்காதே..நான் என்ன தரப் போகிறேன் என்று பார்”
கடைசி முறையாய் தன் செவ்விதழில் வைத்து குழலூதினான்.
பிரபஞ்சம் அவன் குழலோசையைக் கடைசியாய்க் கேட்பதால் பிரமித்து.. அப்படியே அசைவற்று நின்றது..
“இந்தா ராதே..”
செய்வதறியாமல் வாங்கிக் கொண்டாள்.
“நீ வாசி இப்போ”
ராதை கண்ணனின் லீலையில் சிக்கிக் கொண்டாள் அந்த வினாடி. தன்னிதழ்களில் வைத்து ஊதினாள். குழல் இடம் பெயர்ந்த அதிர்வில் தன் மூச்சுக் காற்றை முழுமையாய் வெளிக் கொணர்ந்தது. ராதை அதன் லயத்தில் கட்டுண்டு கிறங்கித்தான் போனாள்.
எத்தனை நேரம் போனதோ.. இருட்டியிருக்கக் கூடும்.
கண் விழித்துப் பார்த்தாள் ராதை.
கண்ணன் அங்கில்லை...
ராதையும் குழலும் கண்ணனைப் பார்த்த அந்த கடைசி தினம் !